- சி.மகேந்திரன்
தமிழக திரையுலகில் கமலஹாசன் பங்களிப்பை
யாராலும் மறுக்க முடியாதது. கடின உழைப்பு, திரையுலகின் தலைவாயிலில் நின்று
கொண்டு, புதிதாகப் பிறப்பெடுக்கும் அனைத்தையும் தானே பரிசோதனை செய்து
பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், என்று இவருடைய தனித்த ஆளுமையை, பட்டியலிட்டு
சொல்ல முடியும். இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளாமல், படைப்பின் புதிய
பரிமாணங்களை உருவாக்கிக் காட்டியவர் என்ற வகையில், எளிதில் மறந்துவிடக்
கூடியவர் அல்லர் கமல். விஸ்வரூபம் இவரது அண்மைகால திரைப்படைப்பு. அது
பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட போது, வருத்தமுற்ற மனம் இப்பொழுது தடை
நீங்கித் திரைக்கு வந்த போது, பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது.
கமலஹாசன்
ஒரு மாபெரும் கலைஞன் என்பதைப் போலவே, அவருடைய திரைப் படைப்புகளும்
மாபெரும் விவாதத்தை உருவாக்கிவிடுகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை
புரிந்து, உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. இதற்கான காரணங்களை
இன்னமும் நம்மால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. ஹேராம்,
விருமாண்டி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன் என்று எல்லாத் திரைப்படங்களும்,
ஏதாவது ஒருவிதத்தில் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டன. இதற்கு கலைஞனுக்கே
உரிய இவருடைய அப்பாவித்தனமான எதார்த்த இயல்புகள் காரணமா?
படைப்பாளிகளுக்குரிய, தான் என்ற ஞானச்செருக்கு காரணமா? இந்திய தேசியத்தைப்
பற்றியும், இந்திய ஒற்றுமையின் இலக்குகள் பற்றியும் இவர் உணர்ந்து கொண்ட
புரிந்துணர்வு காரணமா? என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு
விடுகிறது.
திரைப்படைப்பாளிகள் இந்திய
அளவிலும், தமிழக அளவிலும், விவாதங்களில் சிக்கியிருப்பது புதிதானது அல்ல.
கௌதம் கோஷ் வங்கத் திரைப்பட இயக்கத்தின் புகழ்மிக்கவர். இவர் அந்தர் ஜாலி
யாத்ரா என்னும் படத்தை இயக்கினார். உள்முகப் பயணம் என்பது இந்த
திரைப்படத்தின் பெயர். உடன் கட்டை ஏறுதலில், பார்ப்பன சனாதன தர்மங்களில்
வளர்க்கப்பட்ட பெண்ணொருத்தி, பிணம் எரிக்கும் ஆடவன் ஒருவனுடன்
சேர்ந்துவிடும் எதார்த்தையும், வாழ்க்கையின் அழகையும்
காட்சிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கருவும், காட்சி அமைவும் நம்மை
பெரிதும் பாதித்துவிடுகின்றன.
இது
எத்தகைய எதிர்ப்பையும், விவாதத்தையும் படம் வெளிவந்த காலத்தில்
உருவாக்கியிருக்கும். சத்யஜித்ரே, சியாம் பனகல், ரித்விக் கட்டாக் போன்ற
மாபெரும் படைப்பாளிகள் இத்தகையப் பிரச்சனைகள் எத்தனையோ எதிர்
கொண்டிருக்கிறார்கள். எல்லாமும் சமூக ஏற்றதாழ்வுகளை தீவிரமாக
கவனப்படுத்தும் கருத்து ரீதியானப் போராட்டத்தை உள்ளடக்கியவை. காலங்காலமாக
நிகழ்ந்து வரும் இந்தக் சமூக கொடுமைகளை காட்சி அமைப்பின் மூலம்
வீரியப்படுத்திக் காட்டினார்கள். சமூக மனிதனின் மனசாட்சி உறுத்தலால்,
ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமூக அசைவுகள் தோன்றின.
தமிழ்
திரையுலகில் முதன் முதலில் மிகவும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர்
இயக்குநர் சுப்ரமணியம் அவர்கள். இவர் 1939 ஆண்டில் இயக்கிய திரைப்படம் தான்
தியாக பூமி. இப்பொழுது யோசித்துப் பார்த்தாலும், அந்த கதை அமைப்பு நம்மை
மிகவும் அதிர்ச்சியுற வைத்துவிடுகிறது. பார்ப்பன சமூகத்தின் பின்னணியில்
அமைந்த திரைப்படம் அது. ஒரு இளம் விதவைப் பெண், தலித் இளைஞன் ஒருவனை
மணமுடித்துக் கொள்கிறாள். தீவிரம் மிகுந்த பல்வேறு திருப்பங்களை திரைக்கதை
கொண்டிருந்தது. இயக்குநர் சுப்பரமணியம் அவர்கள் பிறந்தது கும்பகோணத்தில்.
அங்குள்ள பார்ப்பன சங்கத்தினர் ஒன்று கூடி, சாதியிலிருந்து, இவரை ஒதுக்கி
வைப்பதாக அறிவித்தார்கள். அன்றைய காலத்தில் இது இயக்குநருக்கு ஏற்பட்ட சமூக
ரீதியான நெருக்கடியாகும். இதற்காக இவர் அஞ்சவில்லை. எதிர்த்துப் போராடுவது
என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
பத்திரிக்கையாளர்
சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். 'நான் சமரசம் செய்து கொள்ளப்
போவதில்லை. என் கருத்தில் உறுதியுடன் இருக்கிறேன். இதற்காக எந்த இழப்பையும்
சந்திக்கவும் தயாராகவும் இருக்கிறேன்' என்று பகிரங்கமாக அறித்தார். இதைப்
போலவே 'என்னை சாதியிலிருந்து நீங்கள் ஒதுக்கி வைத்தால் உங்களை
சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. உங்களை
ஒதுக்கி வைக்கிறேன்' என்று அறிவித்தார். இவ்வாறான எத்தனையோ கருத்து
ரீதியானப் போராட்டங்களை கடந்த காலத்தில் தமிழகம் சந்தித்துள்ளது.
எப்படி
பார்த்தாலும், தமிழக, இந்திய அடிப்படை பிரச்சனைகளில் முக்கியமானதாகக்
கருதப்படுபவை மதமோதல்களும், சாதிய மோதல்களும் தான். இன்றைய நெருக்கடி
மிகுந்த சூழலில் மதப்பிரச்சனையை பற்றி கமல் யோசித்திருப்பதில் தவறு இல்லை.
இதற்கான கமலின் துணிச்சலை நாம் பாராட்டலாம். இந்திய நாடு சுதந்திரத்தை
நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது, எத்தனை படுகொலைகளை நாடு சந்தித்தது!
கொலையுண்ட மனிதர்களின் உயிர்மூச்சு தேசத்தின் சமவெளி முழுவதும் ஆக்ரமித்து
நின்றன அன்று. ஹேராம் படத்திலும் இதனை ஓரளவிற்கு
காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். இதிலும் விமர்சனங்கள் இருக்கலாம், அது
வேறு பிரச்சனை.
இந்திய பாக்கிஸ்தான்
பிரிவினை காலத்தில் பிறந்த படைப்பிலக்கியங்கள் பலவற்றை தமிழக படைப்புலகம்
வாசிப்பது இப்பொழுது அவசியமானதாகும். மாண்ட்டோ என்னும் புகழ் மிக்க
படைப்பாளி ஒருவரின் பிரிவினை காலத்தின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு
அண்மையில் எனக்குக் கிடைத்தது. தேசம் பிரிந்த போது இத்தகைய பிரச்சனைகளை
நாடு சந்தித்ததா? இலக்கியத்தை இவ்வாறு கூட படைக்க முடியுமா, என்ற உணர்வை
இந்த நூல் எனக்கு உருவாக்கியது. காலத்தின் குரூரத்தைப் புரிந்து கொள்ள,
மண்ட்டேயின் எழுத்துகளில் ஒரு பகுதியை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன். இதனை ராமனுஜம் தெளிந்த தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
புலம் என்னும் பதிப்பகம், நூலை பதிப்பித்துள்ளது.
பிழை
சரி செய்யபட்டது என்னும் தலைப்பில் இதனை இவர் எழுதியிருக்கிறார். சொற்
சித்திரம் என்னும் வடிவத்தில் மறைபொருளில் கூறும் யுத்தியில் இது
அமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கம் கொண்ட கும்பலில் சிக்கிக் கொண்ட
ஒருவனுக்கும், கும்பலுக்குமான உரையாடலாக இது அமைக்கிறது.
யார் நீ?
நீ யாரு?
ஹர் ஹர் மகாதேவ்
என்ன அத்தாட்சி இருக்கிறது.
அத்தாட்சி இருக்கிறது. என்னுடைய பெயர் தரம் சந்த்.
இது அத்தாட்சியே இல்லை.
சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள்.
எங்களுக்கு வேதங்களில் எதுமே தெரியாது. ஆனாலும் எங்களுக்கு அத்தாட்சி வேண்டும்.
என்ன அத்தாட்சி வேண்டும்?
நீ அணிந்திருக்கும் பைஜாமா நாடாவை அவிழ்த்திவிடு
அவன் பைஜமா நாடாவை அவிழ்ப்பதற்குப் பதில், இறுக்கி கட்டுகிறான். இதனால் கும்பலில் பெரும் கோபக்குரல் எழுகிறது.
அவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!! என்னும் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
கொஞ்சம்
பொறுங்கள். தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள். நான் உங்களில் ஒருவன் உங்கள்
சகோதரன். பகவான் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் உஙகள் சகோதரன்.
அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்.
நான்
வந்து கொண்டிருந்த பகுதி, விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால்
வேறு வழியில்லாமல் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, இது ஒன்று தான் நான் செய்த பிழை. மற்ற
அத்தாட்சிகளை வைத்துப் பாருங்கள், நான் உங்கள் சகோதரன் தான்.
அந்தப் பிழையை வெட்டி எறியுங்கள். கும்பல் வெறி கொண்டு கத்துகிறது.
அந்தப் பிழை வெட்டி எறியப்படுகிறது.
அன்றைய சமூகப் பதட்டத்தையும், அதனால் எழுப்பட்ட மத அரசியலின் முதுகுப்புறத்தையும் இந்தக் கதை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
ஈஸ்வர
அல்லா தேரே நாம் என்ற காந்தியடிகளின் முழக்கத்தில் இந்த ஒற்றுமைக்கான பாதை
உருவாக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் வழிகாட்டும் நெறி கூட
இதன் காரணம் கருதியே உருவாக்கப்பட்டன. காந்தி காலத்தில் பிறந்த காங்கிரஸ்
கொடியிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த தேசியக் கொடியிலும்,
கொடியின் நிறங்கள் மதஒற்றுமைக்கான குறியீடாக்கப்பட்டன. காவி, வெள்ளை, பச்சை
ஆகிய மூன்று நிறங்களுக்கான மத அடையாளத்தையும், அதன் ஒற்றுமையையையும் நாம்
புறக்கணித்துவிட இயலாது. இந்த மத ஒற்றுமைக்காகத்தான் காந்தியடிகளும்
தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தார்.
சென்ற
நூற்றாண்டின், எண்பதுகளுக்குப் பின்னர் மதஒற்றுமை, ஆட்சி அதிகாரத்தின்
சுயநலத்திற்காக பெரும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பாபர் மசூதி
தகர்க்கப்பட்டது. பம்பாயில் மதக்கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. குஜராத்
படுகொலைகள் நிகழ்ந்தன. இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், இந்திய
தாய், இரண்டாம் முறையாக தமது மக்கள் ஒற்றமையை இழந்து, மோதிக்கொள்வதைப்
பார்த்து, தவிக்கத் தொடங்கிவிட்டாள். மரண ஓலங்கள், புலபெயர்வுகள்,
இடப்பெயர்வுகள் என்று, இந்தியா இரண்டாவது முறையாக மக்களில் ஒரு பகுதியை
மீண்டும் அனாதையாக்கிக் கொண்டது.
முஸ்லீம்
மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம்
வகிக்கிறது. இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்திய ஒற்றுமையை யாராலும்
கட்டி எழுப்ப முடியாது. இந்திய முஸ்லீம் மக்கள் தாங்கள்
தனித்துவிடப்பட்டதாக உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் முழுசமூகத்தின்
மீதும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டதாக கருதுகிறார்கள். சொந்த
குடிமக்களின் மீதே குடியரசு சந்தேகக் கண்கொண்டு பார்த்தால் தாங்கள் என்ன
செய்வது என்ற வேதனை அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. கோவை குண்டு
வெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் இன்னமும் விசாரணையின்றி
சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இந்திய சிறைகள் அனைத்திலும் முஸ்லீம்
இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரில் அடைப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில்
எங்கு குண்டு வெடித்தாலும், முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்படுகிறார்கள்.
பாக்கிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த
உண்மை தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராகப்
பயன்படுத்துகிறது. இதிலும் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால்
பாக்கிஸ்தான் பயங்கரவாத செயல்பாட்டிற்காக இந்திய முஸ்லீம் மக்களுக்கு
தண்டனை வழங்கலாமா? காவல்துறையாலும், ராணுவ உளவுத்துறைகளாலும் பயங்கரவாத
நடவடிக்கையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலுவதில்லை.
அவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இதற்கு இவர்களுக்கு
மிகவும் சுலபமாகக் கிடைப்பவர்கள் அப்பாவி, ஏழை முஸ்லீம் இளைஞர்கள் தான்.
ஒருகாலத்தில்
கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக அறிவித்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இன்றும் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதில் ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்திகள் மிகுந்த
கவனத்துடன் தான் செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளைப் போலவே, இன்று அவர்கள்
மிகுந்த வெறுப்பைக் கொண்டிருப்பது முஸ்லீம் மக்களின் மீது தான்.
அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டது மட்டும் காரணம் இல்லை.
உலகமயப் பொருளாதாரத்தில் பெட்ரோலிய எண்ணெய் ஆதிக்கத்தை தன் கையில் வைத்துக்
கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றான
டைகிரிஸ் யூப்ரட்டிஸ் நதிக் கரையில் அமைந்தது தான் ஈராக். இது
அமெரிக்காவால், எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிட
முடியாது.
இவை எல்லாவற்றையும் மீறி ஒரு
உண்மை நாம் அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இது யாரும்
அறிந்து விடாதவாறு மூடிமறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூடுதிரை
உருவாக்கி உண்மையை முற்றாக மறைப்பதற்கு இன்றைய ஆதிக்க ஊடகங்கங்கள் வெகுவாக
பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்தது
பின்லேடனும், அதன் பின்னணியில் அமைந்த இயக்கமும் என்பது எத்தனை உண்மையானதோ
அதைப்போலவோ பின்லேடனையும் அதன் பின்னணியில் அமைந்த இயக்கத்தையும் பெரும் பண
உதவி செய்து வளர்த்தெடுத்தது அமெரிக்காவும், அதன் சிஐஏ உளவு நிறுவனமும்
தான் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
அமெரிக்கா
உலகில் பரப்பி வரும் பயங்கரவாத சுமையையையும் இந்திய முஸ்லீம்கள்
சுமக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கலையும் இலக்கியமும், 'சகோதரர்களே
நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்' என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க
வேண்டும். இவ்வாறான சூழல் இங்கு இல்லை. திரைப்படங்கள் மனிதாபிமானம் கொண்டு
மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க வேண்டும். மாற்றாக, படைப்புலகின்
எதிர்மறைப் பார்வையில் இவர்கள் அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
இதனால் முஸ்லீம்கள் அமைதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
தமிழ்
திரையுலகில் 1960 முதல் 1985 வரை முஸ்லீம் பாத்திரங்கள் பிறருக்கு உதவி
செய்பவர்களாக, சமூக இணக்கம் கொண்டவர்களாக காட்டப்பட்டனர். இதன் பின்னர்
இவர்கள், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டப்படுகிறார்கள்.
இந்தப் போக்கு தமிழுக்கு எப்படி வந்தது? வடஇந்தியாவிலிருந்து வந்ததா? உலக
ஆதிக்க அரசியலிலிருந்து வந்ததா? இவை எல்லாவற்றையும் நாம் யோசித்துப்
பார்க்க வேண்டும்.
இந்தப் பின்னணியில்
தான் கமலின் விஸ்வரூபம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. இதனை கமலுக்கும்
தமிழக முஸ்லீம்களுக்கும் இடையில் அமைந்த பிரச்சனையாகப் பார்க்காமல், இன்றைய
தமிழ் சினிமாவின் மீது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, மாறுபட்ட
கருத்தின் அடையாளமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய
திரையுலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், படைப்பாளிகளின் இன்றைய
நெருக்கடியையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். படைப்பு பல்வேறு
நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால், இது உலகமயத்தின்
விளைவு என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. கலைஞன் மானுடத்தின் பொதுவுடமை.
அவனது வாழ்வு தாழ்வு அனைத்தும் சமூகம் சார்ந்தது. முஸ்லீம் கூட்டமைப்பு
மாறுபாடுகளை தெரிவித்ததும், மீண்டும் இணக்கம் கண்டதும் வரவேற்கக் கூடிய
ஒன்றாகும்.
கமல் மீது எனக்கு தனிப்பட்ட
மதிப்பு இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி
நிற்கிறது. அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல், வெளிப்படையாகவே வெளியிட
விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின்
நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் மக்கள்
மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள்
சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும்
வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின்
மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான், ஐரோப்பாவின் புகழ்மிகுந்த
இலக்கியங்கள், திரைப்படங்கள், உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான்
பிரச்சனை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை
பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment