சுப்பிரமணிய பாரதியார் இறுதி உரை நிகழ்த்திய கருங்கல் பாளையம் படிப்பகத்தில் ஒரு உலா! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் ஈரோடு இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள 12.2.2022 அன்று ஈரோடு கருங்கல் பாளையம் சென்றிருந்தேன். திருமண மண்டபத்திற்கு செல்லும் வழியில் பழமை மாறாத கட்டிடம் ஒன்று கண்ணில் பட்டது. "மகாகவி பாரதியார் இறுதி உரையாற்றிய வாசக சாலை 1921" என்று அந்தக் கட்டிடத்தின் உச்சியில் பொறிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி நெஞ்சில் பொங்கியது.
பாரதியார் தம்வாழ்நாளின் இறுதி உரையாக
வழக்கறிஞர் கே.எம்.தங்கப்பெருமாள் பிள்ளை நடத்தி வந்த படிப்பகத்தில் ( வாசக சாலை) பேசியதையும்,
பாரதியாரை அழைத்துப் பேசிய வழக்கறிஞர் கே.எம்.தங்கப் பெருமாள் பிள்ளை பெரியாரோடு சேர்ந்து குடியரசு இதழ் நடத்திய வந்ததையும் நான் ஏற்கெனவே படித்துள்ளதால் படிப்பகத்தைக்
காண ஆவல் கொண்டேன்.
அதற்கு முன்பாக இனி பாரதியார் குறித்தும்,
கே.எம்.தங்கப் பெருமாள் பிள்ளை குறித்தும் சில தகவல்கள்.
பாரதியார் தமது இறுதிக்காலத்தில் யானையிடம்
சிக்கி உடல் நலிவுற்று மீண்ட நிலையில்,
31.7.1921இல் வழக்கறிஞர் கே.எம். தங்கப் பெருமாள் பிள்ளை அழைப்பின் பேரில், சென்னையிலிருந்து
தொடர்வண்டியில் புறப்பட்டு ஈரோடு கருங்கல் பாளையம் கூட்டத்திற்கு
வந்துள்ளார்.
இது குறித்து பாரதியார் சுதேசிமித்திரன்
ஏட்டில் சக்திதாசனின் ஈரோடு யாத்திரை தலைப்பில் கட்டுரையே தீட்டியுள்ளார். அதில், "ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தன்னை வரவேற்கச்
சென்றவர்களுக்கு நான் தான் பாரதியார் என அடையாளம் தெரியவில்லை.
‘நானும் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை.
நானே மாட்டு வண்டி பிடித்து, மூன்று மைல் துாரம் உள்ள கருங்கல்பாளையம் கிராமத்துக்குச்
சென்றேன். என்னையும், வண்டிக்கார சிறுவனையும், 2 பெரிய பருவதமாக நினைத்து, பூனைக்குட்டி
போன்ற மாட்டுக்கன்று அழைத்துக் கொண்டு சென்றது,’" என்று தமது ஈரோடு பயணத்தை
பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
படிப்பக ஆண்டு விழாவில், அவர் பேசிய தலைப்பு ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்பதாகும். மரணத்தை வெல்லும்
வழியாக "நாணத்தைக் கவலையினைச் சினத்தைப்
பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்'
என்று சித்தரெல்லாம் உரைத்ததாக எடுத்துரைத்தார். அதன் பிறகு கே.எம்.தங்கப் பெருமாள் பிள்ளை வீட்டில்
பாரதியார் தங்கி இருந்த போது வழக்கறிஞர் ஆடையை எடுத்து, அவரது மனைவிக்கு அணிவித்து ‘பெண்கள் முன்னேற வேண்டும்’ என்று கூறவும் தயங்க
வில்லை.
கே.எம்.தங்கப் பெருமாள் பிள்ளையும் பாரதியைப்
போலவே சிறந்த தமிழ் மொழி உணர்வாளர். திருமால் நெறியாளர். இவர் இயல்பிலேயே தமிழர் வரலாற்றுப்
பெருமிதம் கொண்டவர். தமிழர் வரலாற்றை தமிழர் அறியும் வகையில் கருங்கல் பாளையத்தில்
படிப்பகத்தை ஏற்படுத்தி தொடர் கூட்டங்கள்
நடத்தியவர். அதில் பாரதியார் மட்டுமல்ல: வரதராஜுலு
நாயுடு, வ. வே.சு. ஐயர், திரு.வி.க. , மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோர் பேசியுள்ளனர்.
ஈரோட்டில் கே.எம். தங்கப் பெருமாள் பிள்ளை சிறந்த
வழக்கறிஞராகப் பணியாற்றி அதிக வருவாய் ஈட்டி வந்த நிலையில் காந்தியாரின் ஒத்துழையாமை
இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலையே
நிறுத்திக் கொள்கிறார். காந்தியக் கொள்கைகளை கிராமம் தோறும் சென்று பரப்பியவர்.
பெரியார் தான் 1925இல் குடியரசு ஏட்டைத் தொடங்கி நடத்தி வந்ததாக திராவிட
இயக்கங்கள் கூறி வருகின்றன. இது உண்மையல்ல.
குடியரசு ஏட்டைத் தொடங்கியவர் கே.எம். தங்கப் பெருமாள் பிள்ளை தான். அவர் குடியரசு
தொடங்கிய சில மாதங்களில் உடல் நலிவுற்றதால் பெரியாரிடம் குடியரசு பொறுப்பை ஒப்படைக்கிறார்.
தங்கப் பெருமாள் பிள்ளை மறைந்த போது பெரியார்
குடியரசு இதழில், (7.3.1926) தங்கப் பெருமாள் மறைவு "பாரதத்தாயின் துர்பாக்கியம்
" என்ற தலைப்பில், "தன்னலத் தியாகத்தில் ஈடற்ற ஒரு தேசபக்தர் - உண்மைத் தொண்டர்-
அஞ்சா நெஞ்சர் - ஆருயிர்த் தோழர்-தமிழ்நாட்டின் ஒரு முக்கிய உருபு- கோவை ஜில்லாவின்
வலக்கண்- ஈரோட்டின் முடி மறைந்ததென்றுதான் சொல்ல வேண்டும்" என்று எழுதினார்.
பாரதியும், தங்கப் பெருமாள் பிள்ளையும்
உலவிய ஈரோட்டு கருங்கல் பாளையம் படிப்பகத்தை திருமண மண்டபத்திலிருந்து மீண்டும் நடந்து வந்து திருச்சிப் பாவலர் மூ.த.கவித்துவன் அவர்களும் நேரில் சென்று உணர்ச்சிப் பெருக்கோடு
பார்வையிட்டோம்.
பாரதியார் உரை நிகழ்த்திய படிப்பகத்தில்
பாரதியாரின் படங்கள் , அவரோடு பணியாற்றிய நண்பர்கள், விடுதலை வீரர்கள், தங்கப் பெருமாள்
பிள்ளை படம் என்று வரிசையாகவும், சிறப்பாகவும் கறுப்பு வெள்ளையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இன்னொரு பகுதியில் அரசு
நூலகம் செயல் படுகிறது.
1921ஆம் ஆண்டில் கருங்கல் பாளையத்தில் மனிதனுக்கு மரணமில்லை என்று இறுதியாகச் சொல்லி விட்டு
பாரதி மரணமடைந்து இருக்கலாம்.
அது உண்மையோ, பொய்யோ ஆனால் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பாரதி மறைந்து நூற்றாண்டு
கடந்தும்கூட பாரதியின் பாடல்கள் இன்றும்
ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆம்! பாரதியின் பாடல்களுக்கு என்றும் மரணமில்லை
என்பதே உண்மையிலும் உண்மை.