Friday, September 20, 2024

பாரதியும் வாழ்வியலும்

 

முனைவர் பூ.மு. அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்,

ஜேப்பியார் பல்கலைக்கழகம்,

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.

பேச:98424 95241.

 

மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுக்கொரு தலைமகன் என பட்டம் பெற மட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையானஅடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுச்சூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓட ஓட விரட்டி, செத்த பின்னால் சிலை வைத்து வணங்கும் உயர்ந்த அறிவு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது?

6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில் தான் தமிழைக் கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், வங்கம் என பல மொழிகளை படித்ததனால் தான் திமிராகச் சொன்னார்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை எங்கும் காணோம்", உண்மைதான். பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும்,  அது அவருக்கு தெரிந்தது.

தமிழைக் கற்றார் தமிழ்க் கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார். உண்மை உணர்ந்து பெண் விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் எழுதிக் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடப்பட்டிருப்பார்

ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலப்புலமை அப்படி. ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டு கொண்டிருக்கும். அவ்வளவு ஏன்? ஆசிரியப்பணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான், அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைக்காட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது.

முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.

வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குத்தான் பொருந்தும், பிரிட்டிஷார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூகக் கொடுமைகள் விரட்டியது ஓடினார், ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.

ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் "நல்லதோர் வீணை செய்தே" என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, "சக்தி கொடு" என கெஞ்சத்தான் முடிந்தது,  அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசக்கூட யாருமில்லை, ஒதுக்கினார்கள், விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக் கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.

அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை. உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழ விடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும், வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதப்போரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று, கனவு வேறு, கடமை வேறு, வாழ்க்கை வேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான..சியின் சிறைக்கொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிக்காலமும்.

விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார், விறகு பொறுக்க யானை,  எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.

இறுதிக்காலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழத்தெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்திப்பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை. ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911இல் ஜார்ஜ் மன்னருக்காகதாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கியஅதே பாடல், "ஜன கண மன" எனும் அந்த பெரியப்பாடல், அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 2 நிமிடமாக சுருக்கி "இந்திய தேசிய கீதம்" என அறிவித்து விட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்.

இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும், வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுப் கொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.

ஆனால் "தாயின் மணிக்கொடி பாரீர்" அல்லது "வந்தே மாதரம் என்போம்" போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய "நோபல் பரிசு", பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என பாடிக்கொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது "தேசத்துரோகி" பட்டமும் சிறைத்தண்டனையும்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் "கணல்" அல்லது "உணர்ச்சி" அவர் பாடலில் இல்லை.

இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்துக் கொண்டிருக்கின்றது. அவரது கனவுப்படியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை என்றால் 1947இல் இறந்திருப்பார். பெண் விடுதலைக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும், சாதிக்கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.

அவர் பாஷையில் சொல்வதென்றால் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு". அவர் வைத்த அந்ததீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவது அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிப்பட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மி குலவி தூக்க வைக்கும்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாகவாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதை பாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிப்படும் இந்தியருக்காக‌.

உலகின் கஷ்டத்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி.

இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும் பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.

கோயிலின் தெய்வம் கோபப்படவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம் போல பழம்கொடுக்க "அப்பனே கணேசா" என அருகில் சென்ற பாரதியை லேசாக தாக்கிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11இல் காலமானார்.

பாரதியின் கடைசி காலங்களை அருகிருந்து பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள். அனுதினமும் கோவிலுக்கு சென்று "அப்பனே கணேசா உன்னை வணங்குகின்றேன்" என யானைக்கு பழம் கொடுப்பது பாரதி வழக்கம். அன்றும் அப்படித்தான் பழம் கொடுத்திருகின்றார், யானை தள்ளிவிட்டிருக்கின்றது. அதற்கு மதம் பிடித்த காலமுமல்ல, அது அவரை வேண்டுமென்றே தாக்கவுமில்லை மாறாக எல்லா நாளும் விளையாடுவது போல விளையாடியிருக்கின்றது, ஆனால் அடிபட்டு பாரதி விழுந்துவிட்டார்.

பாரதி விழுந்து அவரை எல்லோரும் சூழ்ந்திருக்கும் பொழுது அந்த யானை மிகுந்த வருத்தத்துடன் அவர் அருகே நின்றதாக குறிப்புகள் சொல்கின்றன‌. அதற்கு அவன் மகா கவிஞன் எனத் தெரியுமா? தேசாபிமானி தெரியுமா?. பழம் கொடுத்து கொஞ்சுபவன் என்ற ஒன்றைத் தவிர அதற்கு என்ன தெரியும்?

யானை தாக்கியதில் இருந்தே அவருக்கு சுகக்கேடு தொடங்கி கொஞ்சநாளில் மரித்தும் போனார் அந்த அறிவுச் சுடர் முதலில் அவனை தாக்கியது அவனின் பார்ப்பனசமூகம், அடுத்து தாக்கியது ஆங்கிலேயன், அடுத்தடுத்து தாக்கியது அவனின் அறிவை புரிந்து கொள்ளாத சமூகம்.

கடைசியாக அதுவும் விளையாட்டாக தாக்கியதுதான் யானை, ஏற்கனவே மனதால் செத்திருந்த பாரதி அதன்பின் உடலால் செத்துவிட்டான். பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை, இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்தப்பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தக்காரன். 100 வருடங்கள் கழித்து போடப்படும் இசைக்கும் கட்டுப்படும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு. ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேசக் கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தப்பட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன். ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக தமிழக மக்களான நாமும் பெருமை அடையலாம்.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய், இந்தியனாய் அஞ்சலி செலுத்துவோம். வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டப்பட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதற்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கப்பட்டான்.

மத்திய அரசு அவனுக்கு மரியாதை செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன பாடலுக்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது. தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லிச்சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது. தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசியக்கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?

அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், அனைத்து இந்தியர்களும் அதனை படிக்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக கடந்த சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் மோடி.

பாரதிக்கான மிகப்பெரும் அங்கீகாரம் அது, அது இன்னும் தொடரவேண்டும், பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும். நலங்கெட அந்த வீணை புழுதியில் எறியப்பட்டாலும் அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீணை அது.

தமிழ்ச்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசபற்றாளனுக்கு "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அவரின் வரிகளுடன் வீர வணக்கம் செலுத்துவோம்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...