Sunday, October 08, 2023

பாரதியின் பார்வையில் கல்விச் சிந்தனைகள்

 முனைவர் பூ.மு. அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்,

ஜேப்பியார் பல்கலைக்கழகம்,

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.

பேச:98424 95241.

 

 ஆய்வுச்சுருக்கம்

இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். கல்வியின் சிறப்பினைத் திருவள்ளுவர்கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்என வலியுறுத்துகின்றார். இன்றைய காலகட்டத்தில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகின்றது. மனிதனாகப் பிறப்பது அரிது அரிதான அப்புறப்பினைப் பெற்றுவிட்டால் கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்வது சிறப்பு.கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை. கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது.

 

முன்னுரை

         பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழை மீட்டு  பாமரத் தமிழனிடம் கொண்டு சேர்த்தவன் பாரதி ஒரு இனத்தை சமூகத்தை அடக்கி ஒடுக்கி அறியாமையிலேயே வைத்திருக்க அவர்களுக்கு கல்வியை முழுமையாக மறுக்க வேண்டும் அதன் வாசனை கூட அவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் மிகக்  கவனமாக இருந்தனர் ஆதிக்க சாதியினர். மகாகவி வாழ்ந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமையாக  இருந்த இந்தியாவில்  மக்கள் அறியாமையிலும் வறுமையிலும் உழன்றனர். ஜாதிய வெறியும் ஒடுக்குமுறையும் பேயாட்டம் போட்ட காலம். கல்வி மூலமே அடிமைப்பட்ட மக்களும் , பெண்களும்    உயர்நிலை எய்துவர் என்று நினைத்தவன் பாரதி.

 வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு

வாழும் மனிதருக்கு எல்லாம்;

பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்

 

என்கிறான் மகாகவி, கல்வி மூலமே உயர்வு காணமுடியும் என்பதை அழுத்த மாக சொல்கிறான் அவன்

 ஆயுதம்செய்வோம் நல்லகாகிதம் செய்வோம்;

ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்;

ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்

 இந்தியா முழுதும் கல்விச்சாலைகள் வைப்போம் என் கனவு காண்கிறான். அதன் மூலம் அறியாமையிருந்து அவர்களின் விடுதலையை  உறுதி செய்யலாம் என ஏங்குகிறான் பாரதி.

 வீடுதோறும் கலையின் விளக்கம்,

வீதிதோறும் இரண்டொரு பள்ளி;

நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்

நகர்களெங்கும் பலபலபள்ளி;

தேடு கல்வியிலாத தொரூரைத்

தீயினுக்கு இரையாக மடுத்தல்

 

கல்வியின் முக்கியத்துவம்

 தனது புதிய ஆத்திசூடியில்ரௌத்திரம் பழகு" என்று நமக்கு சொன்னவன் அல்லவா  பாரதி, எனவே மக்களுக்கு கல்வி வழங்கும்  பள்ளிக்கூடங்கள் இல்லாத ஊரை தீயிட்டு கொளுத்துவோம் என பொங்கி எழுகிறான். வீதிக்கு இரண்டு பள்ளிகள் வேண்டும் என  பேராசை படுகிறான்.

 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

 பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

 என்கிறான் பாரதி, கோவில் கட்டித்தருதல்; அன்ன  தானம் செய்தல் உள்ளிட்ட  எல்லா  தர்ம செயல்களை விட  புண்ணியம் தருவது எது தெரியுமா ? என கேள்வி கேட்டு அதற்கு விடையையும் சொல்கிறான் பாரதி. ஒரு ஏழைக்கு கல்விக் கண் திறப்பதே எல்லா தர்மங்களிலும் சிறந்தது என ஓங்கி ஒலிக்கிறான். நாடு விடுதலை பெற்றபின் எப்படியெல்லாம் வாழ்வோம்  என்கிற கற்பனையில்

 திறமை கொண்ட தீமையற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே

 என்கிறான் பாரதி. சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெற்று நாங்கள் வாழ்வோம் இந்த நாட்டினில் என கற்பனை செய்கிறான் பாரதி

மேலும் அவனது கற்பனை விரிகிறது.

 வாழி கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே

 

கல்வியால் அனைவரும் சமம் 

 செல்வத்தை தருகிற மன மகிழ்ச்சி தருகிற, பிணக்கமின்றி ஒருவரை ஒருவர் கூடி வாழவைக்கிற  கல்வி மூலம் மக்கள் அனைவரும் சமம் என்ற சிந்தனை மேலோங்கி நாங்கள் வாழ்வோம் என்கிறான் பாரதி.

 சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி உயர்ந்தமதி, கல்வி- அன்பு

நிறை உடையவர்கள் மேலோர்

 என் பாப்பா பாட்டில் நீதியை உயர்த்திப் பிடிக்கும் அறிவும், கல்வியும் அன்பும் நிறைய உடையவர்களே பெரியவர்கள் . ஏற்றத்தாழ்வை  கற்பிக்கும் சாதிகள் இல்லை என குழந்தைகளுக்கு சொல்லும் பாரதி யார் பெரியவர்கள் என்பதையும் அழுத்தமாக சொல்கிறான்.

 

பெண் கல்வி

பெண்களுக்கு கல்வி கற்பித்தால் விதவை ஆகிடுவார்கள் என்ற மூட சிந்தனை அடி மூளையில்  ஆழமாக பதித்து விடப்பட்டிருந்தது அப்போது. பெண் ஆணுக்கு சேவை செய்ய மட்டுமே பிறந்தவள்; அவள் பிள்ளை பெறும் இயந்திரம் என்றே கருதப்பட்டனர். பெண் படிக்க விரும்பினால் அடுப்பூதும்  பெண்ணுக்கு படிப்பு எதற்கு என்ற எதிர்கேள்வி கேட்டனர்.

 ஏட்டையும் பெண்கள் தொடுவது  தீமை

என்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்;

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

  என பெண்ணுக்கு கல்வி மறுப்பவர்களை கடுமையாக சாடுகிறான்.

 பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை கணென்று கும்மியடி

              ஆணுக்கு பெண் அறிவிலும் திறமையிலும்  கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை எனச்  சொல்லி பெண்களை ஊக்குவிக்கிறான்.

 அவரது தந்தை பாரதியை ஆங்கிலக் கல்வி கற்க திருநெல்வேலிக்கு அனுப்புகிறார். ஆங்கிலக் கல்வி பாரதிக்கு மகிழ்ச்சி தரவில்லை. “அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோஎன்கிறான் பாரதிஅதைஅல்லல் மிக்கதொரு மண்படு கல்விஎன்று வெறுக்கிறான்.

 கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,

காளி தாசன் கவிதை புனைந்ததும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

 இவை யாவும் அறியாமால்  ஆங்கிலக் கல்வி பயின்ற மற்றவர்களைபேடிக் கல்வி பயின்று  உழல் பித்தர்கள்," என்று அழைக்கிறான் பாரதி.

 மாந்தர் பாற் பொருள் போக்கி பயின்றதாம்

மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை

 கல்வி என்பது மடமை நீக்கத்தான், ஆனால் ஆங்கிலக் கல்வி முறையை மடமைக் கல்வி என்கிறான் பாரதி.

ஆங்கிலக் கல்வியால் என்  தந்தைக்கு செலவு ஆயிரம், எனக்கு ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை, பல்லாயிரம் தீமைகள் எனக்கு வந்தன என்பதை இந்தக் கோவிலிலும் சத்தியம் செய்து சொல்வேன் என்கிறான் பாரதி. துயரம் தந்த ஆங்கிலக் கல்வி  தந்தைக்கும், தனயனுக்கும் என்ன செய்தது என்பதை பாரதியின் வரிகளில் படியுங்கள்,

செலவு  தந்தைக்கோர்   ஆயிரஞ் சென்றது

 தீது  எனக்குப் பல்லாயிரம்  சேர்ந்தன்

நலமோர்  எட்டுணையும்  கண்டிலேன் - இதை

நாற்பதாயிரம்  கோயிலிற் சொல்லுவேன்

 கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும்அதன் மூலமே நம் தமிழ் மொழியின் கலாச்சாரம், இலக்கியம் பண்பாடு போன்றவற்றின்  அருமை பெருமைகளை நாம்  அறிய முடியும் என்பதை பாரதி தௌ; தெளிவாக சொல்கிறான்.

 

கல்வியின் சிறப்பு

 பாரதியின் பார்வையில் கல்வி என்பது மனிதனை செழுமைப் படுத்தக்  கூடியதாக  இருக்க வேண்டும். அது  ஒழுக்கத்தையும் சமூக அக்கறையையம் ஊட்ட வேண்டும். பயனுள்ள மனிதனாய் இந்தப் பாரில் வாழ  அது துணை செய்ய வேண்டும். எனவே தான்  புதிய கோணங்கி என்ற பாட்டில்,

 படிப்பு வளருது பாவம் தொலையுது

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான் போவான் ஐயோவென்று போவான்

 என்கிறான். கல்வி கற்றுத்  தேறியவன் சூது  செய்தால் நாசமாகப் போவான் என சபிக்கிறான். ஆனால் இப்போது படித்தவன் தான் எல்லா தவறுகளுக்கும் ஸ்கெட்ச் போட்டுத்  தருகிறான்.

 

                கல்வியால் தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவிற்கு எவருமில்லை. கல்வியால் பல்வேறுபட்ட நபர்கள் உயர்வடைந்துள்ளனர். அப்துல் கலாம், அம்பேத்கர், சுந்தர் பிச்சை, கல்பனா சாவ்லா போன்ற பலர் கல்வியால் உயர்வு அடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் எமக்கு ஒர் முன்னுதாரணமானவர்கள்.

                இவர்கள் சிறுவயதிலிருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வமே இவர்களை உலகம் கொண்டாடும் மனிதர்கள் ஆக்கியுள்ளது. சிறந்த கல்வி மனிதனை உயர் இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதனை இவர்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது.

               

சுதந்திர இந்தியாவில்  கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை  பாரதியின் பார்வையில் கண்டோம். ஆனால் இப்போது  நம் நாட்டில், தமிழகத்தில் உள்ள  கல்வி முறை எப்படி இருக்கிறது ? என்ற கேள்விக்கு வேதனையே பதிலாக கிடைக்கிறது. தமிழ் வழிக்கல்வி என்பதற்கான முக்கியத்துவம்  இங்கு குறைந்து கொண்டே வருகிறது, காசு பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி; ஒழுக்கம், பண்பு, சமூக அக்கறை போன்றவற்றை போதிப்பது அதன் வேலை இல்லை என்ற நிலையை இப்போதைய கல்விமுறை எட்டிவிட்டது.

 முடிவுரை 

v  கற்றவருக்கச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள எந்த செல்வங்களையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தினை எக்காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது.

v  கல்விச் செல்வம் நெருப்பினால் வேகாது, வெள்ளத்தால் அழியாது, கள்வர்களால் திருட முடியாது. கல்வியானது மனிதனை சிறந்த ஒழுக்கம் உள்ளவனாக மாற்றுகின்றது. மிருகக் குணங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது.

v  ஒருவர் கற்ற கல்வியானது பலருக்கும் பயன் தரும். கல்விதான் ஒருவனை அறிவாளியாக்குகின்றது. கற்றவர்கள் தமது நாடு ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அது அவர்களது நாடாகும்.

v  மகாகவி பாரதி சுதந்திர இந்தியாவில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தானோ  அது மாதிரியான கல்வி முறை வராத வரை நமக்கு விடிவு காலமில்லை. கல்வி குறித்த பாரதியின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். அவனது சிந்தனை  விதைகளை தூவுவோம்.

 பார்வை நூல்கள்

 1.       செல்லம்மாபாரதி. பாரதியார் சரித்திரம், சென்னை: சக்தி

காரியாலயம், மூன்றாம் பதிப்பு,1946.

2.       ஜீவானந்தம்,.பாரதியைப் பற்றி ஜீவா, சென்னை: நியூ

செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், நான்காம் பதிப்பு,1989.

3.       .ரா.மகாகவி பாரதியார், சென்னை: பழனியப்பா

பிரதர்ஸ், ஒன்பதாம் பதிப்பு, 1978.

4.       கோதண்டராமன், . பாரதி யுகம். நாகப்பட்டினம்:

இமயப்பதிப்பகம், 1961.

 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...