Saturday, April 09, 2016

ஒரு பெண் தனிமையிலிருக்கிறாள்...



எனது பால்யத்தில், வீட்டிற்கு அருகே லாடக்காரர்தங்கராசு வைத்திருந்த பட்டறையின் செந்தழல் என் நினைவுகளில் இன்றும் கனன்றுக்கொண்டே இருக்கிறது. என்னுடைய பால்யத்தின் ஆகப்பெரிய வேடிக்கையாக இருந்தது அவரது பட்டறையில் இருந்த உலைதுருத்தி. ஏழு, எட்டு வயது இருக்கும்பொழுது அடிக்கடி அங்கே போய் வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். உலைத்துருத்தி வழியாக அழுத்தமாக செலுத்தும் காற்று, பள்ளத்தில் குவித்து வைத்திருக்கும் விறகுக்கரியைத் தனலேற்றும். சிவந்து கனிந்திருக்கும் அந்த கனலுக்குள் புதைந்திருக்கும் அரிவாளுக்கான இரும்பும்  கனன்று சிவந்தவுடன் உலைக்கல்லின் மீது வைத்து, கனத்த சம்மட்டியால் அடித்து வளைக்கப்படும். அந்த கனலிலிருந்து அரிவாள், கடப்பாரை, மாட்டின் கால்களுக்கு கட்டுகிற லாடம் என உருவாவதைப் பார்க்க பார்க்க அத்தனை ஆச்சர்யமாக இருக்கும். லாடக்காரர் பழுத்த இரும்பை சம்மட்டியால் அடிக்க அவருடைய மனைவியோ மகளோ துருத்தியை மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இரும்பை வணக்கிச் செய்யப்படுகிற இந்தக்கருவிகளைத் தயாரிக்கும் மனித உழைப்புக்குத் துணையாக இருப்பது மாட்டுத்தோல் அல்லது ஆட்டுத் தோலினால் ஆன துருத்தி. காற்று எப்போது உள்ளே செல்கிறது என்று அறியும் முன்பாக நெருப்புக்கு நேராக இருக்கும் ஒற்றைத்துளையின்  வழியாக வெளியேறும் காற்றின் ஓசை எனக்கு மிகப்பிடித்ததாக இருந்தது. காற்று நுழைந்து அடிபட்டு வெளியேறும் துருத்தியின் ‘‘தட் தட்’’ ஓசை இப்போதும் கூட சில நேரங்களில் இதயத்துடிப்பு போலவே கேட்கிறது.
பொருளீட்டுதல் பொருட்டு வெவ்வேறு இடங்களில் வசித்தாலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சொந்த ஊரைப் பற்றிய நினைவுகள் படர்ந்து கிடக்கிறது. பூர்விகத்தைப் பற்றி நினைத்தவுடனே ஆறு, குளத்துக்கரை, கம்மாக்கரை, கோவில் ஆலமரம், ஓடித்திரிந்த வீதிகள் என புற்றீசல் போல நினைவுகள் வரிசைகட்டி வந்துக் கொண்டே இருக்கும். அப்படியான நினைவுகளில், வாசனைக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. ஒருவகையில் எல்லா ஊர்களும் தங்களுக்கென தனித்த வாசனையைக் கொண்டிருக்கின்றன. அம்மாவின் நினைவோடு அம்மாவின் வாசம் உணரமுடிவதுபோல ஊரைப்பற்றி நினைவு வரும் பொழுது அந்த ஊரின் வாசமும் உணர்ந்துவிட முடியும்.  அவை, தெருப்புழுதியின் வாசம், எண்ணெய் செக்கு ஆட்டுகிற வாசம், கரும்புப்பால் காய்ச்சுகிற வாசம், மஞ்சள் வாசம், வேர்கடலையின் பச்சை வாசம், நெல் அவிக்கிற வாசம், வீட்டுச் சுவற்றுக்குப் பூசுகிற நீலம் கலந்த சுண்ணாம்பு வாசம் என ஏதாவது ஒன்று நிச்சயம் நினைவில் இடறி, நாசியில் நுழையும். எனக்கு, எங்கள் ஊரைப்பற்றிய நினைவுகளில் முதலிடத்தில் இருப்பது, தேங்காயை அதன் பச்சைமட்டையிலிருந்து உரிக்கும் சமயத்தில் பரவுகிற பச்சை வாசனை. நினைக்கும் போதே நாசியில் ஏறி குறுகுறுக்கும்.
எங்கள் பகுதி முழுக்க தென்னை சார்ந்த தொழில் நடைபெறுகிறது. தென்னைமரம் ஏறும் மரமேறிகளுக்கான பிரத்யேக அரிவாளும், தேங்காய் உரிப்பவர்களுக்கான பிரத்யேக கடப்பாரையும் முக்கியமானவை. நிலத்தில் புதைக்க மழுங்கலாகவும், தேங்காய் உரிக்க பளபளக்கும் கூரிய மறுமுனையுடைய கடப்பாரையைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கும். நிலத்தில் பதிந்திருக்கும் கடப்பாரையில் நீர்வழிய பரவுகிற பச்சை வாசனைக்காவே தேங்காய் உரித்துப் பழகினேன். 
எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள ஏழெட்டு கிராமங்களுக்கும் கடப்பாரை, கொழு, கூந்தாலம், கோடரி, அரிவாள், லாடம், லாடம் கட்டப் பயன்படும் ஆணி ஆகியவை இன்றுவரை எங்கள் கிராமத்தில்தான் தயாராகின்றன. மாட்டுக்குப் பயன்படுத்துகிற லாடம் குழிக்காடி, நெட்டுக்காடி என இரண்டு வகையில் செய்யப்படுகிறது. நவீனமயத்தின் பயனாக, இயந்திரங்களைப் பயன்படுத்தியும் லாடங்கள் செய்யப்படுகின்றன. நவீனவகை லாடங்கள் பொருத்திய மாடுகள், பத்து கிலோமீட்டர் கூட தொடர்ந்து நடக்க இயலாது என்கிறார்கள் எங்கள் ஊர் சம்சாரிகள். ஒரு ஊருக்கான விவசாயக்கருவிகள் தயாரிக்கப் பயன்படும் கொல்லன்பட்டறையை விட பல ஊருக்காக இயங்கும் பட்டறைகளில் எப்போதும் வெப்பம் கனன்றபடியே இருக்கும். வெப்பம் கனிந்த இரும்பை நீரில் அமிழ்த்தும் வாசனையும் கொல்லனின் வியர்வையும் இந்த கிராமத்திற்கான வாசனைகளில் மற்றும் ஒன்றாக இருக்கிறது. தொன்று தொட்டு நடந்து வரும், ஜல்லிக்கட்டும், ரேக்ளா பந்தயமும் இந்த ஊரின் மரபுவழியின் தொழில் பற்றிய குறிப்புணர்த்தும்.  
முனைவர் ப.சரவணன் தன்னுடைய சங்ககாலம்என்ற நூலில், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட உலை, துருத்தி ,இரும்புக்கருவிகள்  பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்து வளைத்து கருவிகள், பொருட்கள் செய்யத் சங்கத்தமிழர்களுக்கு நான்கு கருவிகள் பயன்பட்டன. உலைக்கல்,சம்மட்டி, கொறடு, பனைமடல் ஆகிய பொருட்களின் பயன்பாட்டினை சங்கப்பாடல்களில் மூலம் அறியமுடிகிறது. சங்ககாலத்தில் இரும்பை பொன்என்று கூறினர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், ஐயவித்தூலம், கதை, கவை, கல்லிடுகூடை, கணையம், கவசம், குத்துவாள், கொடுவாள், கைவாள், கழுகுப்பொறி, மழுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிப்பாலம், ஞாயில், அறிதூற்பொறி, இருப்புமுள், எரிசிறல், கழு, கழுவிலூகம், கல்லமிழ் சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் போன்ற இரும்புக்கருவிகள் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய போர்ச்சமுதாயத்தின் நீட்சியாகத்தான் இன்றைக்கும் கிராமத்துக்கோவில்களில் வேல், திரிசூலம், அரிவாள் போன்றவை நேர்த்திக்கடனாக படைக்கப்படுகின்றன. போருக்காகவும் விவசாயத்திற்காகவும் இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கும் சங்க காலத்தில், இவை அத்தனையையும் செய்யத் தெரிந்தவர் இருப்பதும் அதனைச் சிறப்பாக செய்வதும் முக்கியமானது என்பதனாலேயே வேல் வடித்துக் கொடுப்பது கொல்லருக்குக் கடனேஎன்கிறது புறநானூறு.
ஒரு ஊரில் வாழும் மக்களுக்கு, இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கின்றன. இவற்றை சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் சேர்த்து ஒரு கொல்லன் பட்டறையில் செய்தால் அந்த ஊரும் கொல்லன்பட்டறையும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். அந்தக் கொல்லன்பட்டறையில் பயன்படுகிற துருத்தி மிதிபட்டுக்கொண்டே இருக்கும். உலையில் வெப்பம் கனன்றுகொண்டே இருக்கும். கொல்லன், சம்மட்டியால் அடித்தபடி இருக்கிற ஓசை குறிப்பிட்ட இடைவெளியில் கேட்டபடி இருக்கும். இப்படி சதாப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் உலைக்கலத்தின் துருத்திபற்றி குறிப்பிடுகிற கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று,
தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல் 
பழுமரம் படரும் பையுள் மாலை 
எமிய மாக ஈங்குத் துறந்தோர் 
தமிய ராக இனியர் கொல்லோ 
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 
உலைவாங்கு மிதிதோல் போலத் 
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.
மாலை வந்ததன் அறிகுறியாக இரவுப்பறவைகளான வௌவால்கள் பழுத்த மரம் தேடிச் செல்லத் தொடங்குகின்றன. தனியாக இருப்பவருக்குத் துன்பம் தருகிற மாலைப்பொழுது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனுக்கு மட்டும் இன்பம் தருவதாக இருப்பது சாத்தியமா என தோழியிடம் கேட்கிறாள் தலைவி. ஒரு ஊருக்கு மட்டுமல்லாமல் ஏழு ஊர்களுக்கும் உரிய ஆயுதங்களையும் உழவுக்கருவிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் கொல்லன் பட்டறையைப் பார்த்து வளர்ந்த தலைவி அவள். அல்லது அவளே கூட கொல்லன் மகளாக துருத்தி மிதித்ருக்கலாம். அதனால்தான் ஏழு ஊருக்கும் சேர்த்து மிதிவாங்கும் துருத்தியைப்போல தன்னுடைய நெஞ்சம் தலைவரம்பு அறியாத ஆற்றாமை மிகுந்து வருந்துகிறது என்கிறாள் தலைவி.
தோல்துருத்தி ஓயாமல் ஏழூர் மக்களின் பார்வையில் பட்டு மிதி வாங்கிக் கொண்டே இருப்பதைப் போலத் தலைவனின் பிரிவால் ஏற்படும் பசலையினால்  மட்டுமன்றி, வீட்டிலிருப்பவர்களின் சந்தேகப் பார்வைகள்  ,ஊராரின் வம்புப் பேச்சுக்கள், ஒருவேளை தலைவன் திரும்பாமலே இருந்து விட்டால் தன் நிலை என்னவாகுமோ என்ற தன் நெஞ்சின் தவிப்பு ஆகிய பல்வேறுபட்ட  துயரத்தினால் தான் அனுபவித்து வரும் அலைக்கழிவுகளை மறைமுகமாக உணர்த்துகிறாள் தலைவி.
பிற பறவைகளைப் போலன்றித் தாவித் தாவி உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் இயல்பு கொண்டவை வௌவால்கள். சன்னமான துணியால் நெய்யப்பட்டது போன்ற இறகுகளைக் கொண்டு மென்மையாக பறந்து செல்பவை. பகலெல்லாம் தலைக்கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்கள் கூட பழுத்த மரங்களைத் தேடிச் சென்றுவிட்டன என்று தலைவி குறிப்பிடுவது மெலிதான சோகத்தைக் கிளர்த்துகிறது. இரவுப்பறவையான வௌவால் தனக்கான உணவென கனிமரத்தை நாடுவது போல தலைவனும் தன்னை நாடிவரவேண்டாமா என நினைக்கிறாள். அதனால் தான் தலைவனைப் பிரிந்ததால் தான் வருந்துவதாக அவள் சொல்லவில்லை, தன்னைப் பிரிந்ததால் தனித்திருக்கும் தலைவன் வருத்துவான்எனத் தான் வருந்துவதாகச் சொல்கிறாள்.
காதல் வயப்பட்ட பெண் ஒருத்தியின் தனிமை என்பது தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலசமயம் தலைவன்கூட அவளின் தனிமையை போக்க முடிவதில்லை. ஏனெனில் அவனிடமே கூட அவளின் மனத்தைச் சொல்லிவிடுவதற்கான வார்த்தைகள் அவளுக்கு உதவுவதில்லை. அப்பொழுது, தலைவன் மீதான காதலும் அது சார்ந்த நினைவுகளுமாக அவள் தனித்திருப்பாள். ஏழு ஊர்களுக்கு தளவாடங்களைச் செய்கிற பட்டறையின் பரபரப்பு அவள் மனத்தில் பதிய மறுக்கிறது.  மாறாக மிதிபடுதலில் துவலுகிற உலைத்துருத்தியின் தவிப்பை, காதல் கொண்ட அவள் மனத்துக்கு இணையாக்குகிறாள். இந்தத் தவிப்பு சங்க காலத்துக்கு மட்டுமே உரியது அல்ல. நவீனப்பெண் மனமும் அத்தகைய தனிமையை உணர்கிறதாகவே இருக்கிறது.  காதல் எப்பொழுதும் தனிமையை விரும்புவதாகவே இருக்கிறது. காதலில் தவித்திருக்கும் பெண்ணின் தனிமைக்கு அவளின் காதல் மட்டுமே துணையாக இருக்கமுடியும்.
புத்தகமாக வெளிவராத மதுமிதாவின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 150 கவிதைகளைப் புத்தகமாக்காமல் தனக்குள் பத்திரப்படுத்தியிருக்கிறார் இவர். இந்தக் கவிதைகள் அன்பையும் காதலையும் காமத்தையும் பிரிவையும் தனக்குள் ஏந்தியிருக்கின்றன. பெண்ணின் அகஉணர்வுகளைப் பேசுபவையாக மட்டுமல்லாமல் அவளின் புறவாழ்வுக்கான சூழலில் நிகழ்கிற அங்கீகாரமின்மையையும் இழப்புக்களையும் சில இடங்களில் மென்மையாகவும் சில இடங்களில் வன்மையாகவும் சொல்லிச்செல்கிறார். காதலில் தன்னை இழக்கிற மனம் என்பது காலத்தின் எந்த வரையறைக்கும் உட்பட்டதல்ல என்பதை இவரின் கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உலைக்கலத்தின் மிதித்தோல் போலஎன்கிற மரபுவழி மனத்தைக் கொண்டவளாகவே இப்பொழும் பெண் இருக்கிறாள். மதுமிதாவின் நினைவுக் கடத்தல் என்று தலைப்பிட்ட கவிதை,
சந்திரன் முகம் காட்ட விரும்பும்
சந்தியா வேளை
பூங்காவின் மரங்கள் முழுக்க
தொங்கிக் கிடந்தும் பறந்தும்
கூட்டம் கூட்டமாய் வௌவால்கள்
கனி நிறைந்திருக்கும் மரம் நாடி
கழுகுகளைப் போலப் பறக்கின்றன
நீ இருக்கும் திசை நோக்கியே
என் நினைவுகளையும் கடத்திக்கொண்டு
காற்று மென்மையாக வருட
காற்றை ஊடுருவி மேலேபார்க்கிறேன்
நிலவில் ஒளிர்ந்து ஏதோ சேதி தருகிறாய்
வலசை செல்லும் பறவைகளைக் கண்டு
நீயும் அங்கே தவிக்கிறாயோ என் நினைவில்
பாலையின் வெக்கையுடன்
என் நினைவின் வெம்மை மட்டும்
உன்னைத் தீண்டிவிடக்கூடாது
உன் நினைவாலேயே உன் நினைவினை
அணைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வேன் எனினும்
உன் நினைவில் எழும் பெருமூச்சு
கொல்லனின் உலை துருத்தி போல்
தீயை வளர்த்து சுட்டெனைச் சாய்க்கிறது
*************************************************************************************************************
கச்சிப்பேட்டு நன்னாகையார்:
நன்னாகை என்பது இவர் பெயர். கச்சிப்பேடு யாவருடைய ஊர். காஞ்சிபுரத்திற்கு கச்சிஎன்று ஒரு பெயர் இருந்தது. இவரின் பாடல்கள் ஆறு குறுந்தொகையில் உள்ளன. ( 30,172,180,192,197,287 )
*************************************************************************************************************
சங்கச் செய்தி:
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
காலால் மிதித்து காற்றை செழுத்துகிற மிதித்தோல் துருத்தி, சிறிய சக்கரத்தைப் பயன்படுத்தி காற்றைச் செழுத்துகிற விசைவாங்கு துருத்தி, கைத்துருத்தி மூன்று வகையான துருத்திகள் சங்ககாலத்திலிருந்தே பயன்பாட்டில் இருக்கின்றன.
உலைக்கல்லில் வைத்து சம்மட்டியால் அடித்து தேவையான பொருட்கள் செய்ததையும் யானையின் பெரிய தந்தத்திற்கு பூண் மாட்டியதையும் புறநானூறு(170 ) குறிப்பிடுகிறது. கொறடு பற்றி பெரும்பாணாற்றுப்படையும் (206,207 ) உருக்கி வார்க்கப்பட்ட இரும்பின் அதிவெப்பம் தணிக்க பனைமடலில் நீரைத் தெளித்தது பற்றி நற்றிணையும் (133) தீப்பொறியின் காட்சியை அகநானூறும்(72) குறிப்பிடுகின்றன. தவிர, கொல்லன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் 13 இடங்களில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.  கொல்லன் அழிசி, மதுரைக் கொல்லன் புலவன், மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், முடக்கொற்றனார், தங்கால் முடக்கொல்லனார், மதுரை பொன்செய் கொல்லன் ஆகிய பெயர்களில் புலவர்கள் இருந்திருக்கின்றனர்.

ஒரு பெண் காத்திருக்கிறாள்..

தமிழர் வாழ்வில் இன்று நாம் காண்கின்ற பலவகையான வாழ்வியல்  சார்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட பாடல்களை சங்க இலக்கியங்களில் காணலாம் . அகம் புறம் என்ற இருவகையான வாழ்வை காதல் வீரம் என்கிற அழியாத் தன்மை கொண்ட அடையாளங்களாக தமிழர்கள் தங்கள்மேல் தரித்துக் கொண்டுள்ளனர் . நமது சங்க இலக்கியம் நோக்கிய பயணம் நனவிலி மனதில் நம் மேல் ஆதிக்கம் கொள்ளும் மரபின் தொடர்ச்சியை உணர ஏதுவான களத்தை வெளிப்படுத்துகிறது . பல நூறு புலவர்கள் பாடிய சங்க இலக்கியப் பாடல்களில் காலத்தை விஞ்சிய பெண்பாற்புலவர்களின் பாடல்களும் அடங்கும் . புலமையை ஆள்வது ஆண் என்கிற மேட்டிமைவாதத் தன்மையிலிருந்து ஒரு தகர்ப்பைச் செய்தவர்கள் பெண்பாற்புலவர்கள் . அகப்பாடல்களும் புறப்பாடல்களும் என பெண்களின் பங்களிப்பு சிலவாக இருந்த போதிலும் பெண்களின் பாடல்களில் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நம்முன் விரிகிறது .
நவீனச்சமூகமாக மாறிவிட்டபோதிலும் தீவிர இலக்கியப் பங்களிப்பைப் பெண்கள் செய்வது என்பதில் இருக்கும் இடர்பாடுகளை எண்ணும் பொழுது அக்காலத்தில் பெண்களின் இலக்கியச்செயல்பாடு என்பது மலைப்பைத் தரக்கூடியது . புலமை மரபு பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் படைப்பின் தன்மையானது சமூகத்தின் மனசாட்சியாக வெளிப்படும் . ஆண்களின் படைப்புக்களில் கூட பெண்களை எழுதிப்பார்க்க முனைவது வெளிப்படையாகத் தெரியும். பெண்களை அவர்களே எழுதும்பொழுது இருக்கும் வாழ்வின் ஊடுபாவு தோற்றம் என்பது தனிவகையானது. 
சங்க இலக்கியத்தில் பங்களிப்பைச் செய்த பெண்பாற் புலவர்களை அறிமுகம் செய்யும் விதமாக இத்தொடர் அமைகிறது என்றபோதிலும் ஆண்பாற் புலவர்களின் மனதையும் நவீன வாழ்வியலையும் பற்றிப் பேசவேண்டியது  அவசியமாகிறது .
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகச் செயல்பாடுகளில் பெருமளவு வேறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை . ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை” நூலைப்  படிக்கும் பொழுது மனித சமூகத்தின் தொடக்க காலம் பற்றி யூகமாவும் புனைவாகவும் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது . வேட்டைச் சமூகப் பெண்களின் உடல் பற்றிய புரிதலும் மனம் பற்றிய உணர்தலும் ஏற்படுகிறது . நாடோடியாக வாழ்ந்த மக்கள் தங்களுக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து இனக்குழுச் சமூகமாக வேளாண் மக்களாக மாறியபொழுது பெண்ணின் உடலமைப்பு , இனவிருத்தி , வாரிசுகளைக் காப்பது போன்ற நிலைகளில் பெண் என்பவள் இல்லத்திற்கு இன்றியமையாதவளாக மாறிவிட்டாள் . நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற இந்தக் காலத்திலேயே பெண் உடல் மீது ஆணுக்கு ஆதிக்கம் செய்ய எண்ணம் வந்தது . பொருளாதாரத் தேவைக்காக வேறு பலத் தொழில்களைச் செய்யவும் அதற்காகக் குடும்பத்தை விட்டு ஒரு ஆண் பிரிந்து செல்லவும் அவசியம் ஏற்பட்டது போலவே அவனுடைய வாரிசுகளைக் காத்து குடும்பத்தை நிலைபடுத்தும் செயலை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய கணவனுக்காக காத்திருக்கும் நிலை  ஏற்படுகிறது .
காத்திருப்பு என்று சொல்லும் பொழுதே பிரிவு என்கிற ஒரு செயலை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது . ஒரு ஆணுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதே ஆணின் இருப்பைக் காட்டும் விதமாக இருக்கிறது . தகப்பனுக்காகவோ கணவனுக்காகவோ மகனுக்காகவோ ஒரு பெண் தன்னை அர்ப்பணித்துக் காத்திருக்கிறாள் என்பதே இன்றைக்கும் நாம் காண்கிற உண்மையான நிகழ்வு . பொதுவாக மணமுறிவு ஏற்படுகிற எத்தனையோ குடும்பங்களில் சட்டரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்ணிடமே அந்தக் குழந்தை வளர்கிறது . அல்லது பெண்ணே அந்தக் குழந்தைக்கான பொறுப்பை ஏற்றுகொள்கிறாள் .
மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராக நான் இருந்தபொழுது விவாகரத்து பெற வந்த ஒரு பெண்ணுடன் தனித்துப் பேசினேன் . அந்த ஆண் அவளை சந்தேகித்து பிறப்புறுப்பில் அடித்ததாகக் காட்டி அழுதாள். .  அதனால் கணவனுடன் வாழ விரும்பவில்லை என்றும் அவரைப் பிரிந்துவிட  விரும்புவதாகவும்  சொன்னார் . ஆனால் குழந்தையை என்னிடமே விட்டு விடுங்கள் , இவன் தான் இனி என்னுடைய எல்லாமும் என்று சொன்னார் . இதே போல சமீபத்தில் நான் பார்த்த “குயின் “ என்கிற ஹிந்தி படத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆண் துணை அற்ற ஒரு பெண் தன்னுடைய மகனைக்  காட்டி இவன் தான் தன் உலகம் என்பார் . பொதுவாகவே  குடும்ப அமைப்பில் கணவன் மனைவிக்குள்  பிரிவு ஏற்படுகிற பொழுது ஆண் என்பவன் அந்தப் பிரிவை எளிதில் கடந்துவிடுகிறான் . பெண் என்பவள் அந்த பிரிவிற்குப் பிறகும் கணவனுக்கு முந்தைய தன்னுடைய பழைய வாழ்விற்குத் திரும்பவே முடியாத நிலையை அடைகிறாள் . தன் குழந்தை வளர்ந்து தன் இயல்பில் தானே இயங்கும் வரை  இந்த நிலையிலிருக்கும்  பெண்கள் அவர்களுக்குத் துணையாக காத்திருக்கவேண்டும் . ஆக பெண்கள் உலகமானது தங்களை ஆண்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒப்புகொடுத்து காத்திருக்கிறது .
இது போன்ற சூழல்களில் இன்றைக்கு பத்திரிக்கைகளும் , ஊடகங்களும், சட்டமும் பெண்களுக்குத் துணையாக வருவது போலக் காட்சியளிக்கிறது. உண்மையில் ஒரு ஆண் இன்றைக்கு ஒரு பெண்ணைப் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் பல்வேறு வகையினதாக இருந்தாலும் அதனுடைய எல்லைகள் விரிவடைந்திருந்தாலும் நிகழ்வுகளின் முடிவில் அந்தப் பெண் காத்திருப்பவளாக மாறுகிறாள் என்பதே மறுக்கமுடியாத உண்மை .
இதனடிப்படையில் சங்கப் பெண்பாற் புலவர் வெள்ளிவீதியாரின் ஒரு பாடலை அறிமுகம் செய்ய நினைக்கிறேன் .
தலைவன் பிரிந்து சென்றபின்பு வருந்தியிருக்கும் தலைவிக்கு தோழி ஆற்றுப்படுத்திச் சொல்வதாக அமைந்திருக்கும் பாடல் இது . .
“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.”
தலைவன் நிலத்தைத் தோண்டி அதில் புகுந்துகொள்ளவில்லை. வானத்தில் ஏறி பறந்து எட்டாத நிலையில் சென்றுவிடவில்லை. . கடலின் ஆழத்தில் சென்று விடவும்  இல்லை. ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். வீடு வீடாகத் தேடினால் கண்டுபிடித்துவிடலாம் என்கிறாள் தோழி .அப்படிக் கண்டுபிடித்த அவன் இருப்பிடத்துக்கே தூது அனுப்பித் தலைவனைக் கொண்டுவருகிறேன். கவலைப்படாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள். நேரிடியாக இப்படிப் பொருள் எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலகட்டத்தை மனதில் கொண்டு இந்தப் பாடலின் வழியாக உணர்கிற பிரிவு நிலையைப் பார்த்தால் இந்தத் தலைவன் பொருள் தேடியோ , போருக்காகவோ தலைவியைப் பிரிந்து செல்லவில்லை என்பதை உணர முடிகிறது . நிலத்தின் ஆழத்தில் நாக கன்னியர் இருப்பதாக ஒரு நம்பிக்கை , அவர்களைத் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது .வானலோகத்தில் தேவகன்னியர் இருப்பார்கள் , அவர்களையும் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது . ஆற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் சேரக்கூடிய கடலின் மேல் காலால் நடந்து சென்றிருக்க மாட்டான் . நிலத்தில் புகுதலும் வானத்தின் மேலே பறந்து செல்லுதலும் நீரின் மேல் நடப்பதுமான சித்திகள்  கைவரபெற்ற சாரணர் போல அல்ல நம் காதலர் , சாதாரண மானுடர் தான். அப்படியான சாதாரணனுக்கே உரிய குறைவுபட்ட இயல்புடையவர். வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வீட்டில் வேறு ஒரு பெண்ணிடம் தன் காமத்தைத் தீர்த்துக் கொள்ள சென்றிருப்பான் . காதலை பெரும்பாலும் உடலாக உணர்கிற ஆண்களைத் தான் காலம் காலமாக அறிந்துகொண்டிருக்கிறோம் . ஆண் பரத்தையர் பிரிவில் விட்டுச் சென்றான் என்றாலும் பெண் பொறுமையுடன் இருக்க ஆண்பாற் கவிஞர்களின் பாடல்களில்  வலியுறுத்தப் படுகிறாள். மாறாக வெள்ளிவீதியின் பாடல்களில், “எங்கே போய்விடுவான் தலைவன் , வந்துவிடுவான்” என்கிற தன்னிலை சார்ந்த உணர்வு மேலோங்கி இருக்கும் .
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள் . எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள் . எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள் .

அக நானூற்றுப் பாடல்களில் கற்பிக்கும்முறை...

மனிதன் தன் கருத்துக்களை வெளிப்படுத்த மொழியினைப் பயன்படுத்துகின்றான். மொழியின் உருவாக்கம் என்பது மனித பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். மொழியின் ஒழுங்கான வடிவை அடைவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து வந்திருக்க வேண்டும். ஓசையெழுப்புதலே வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மக்களின் மொழியாக இருந்திருக்கிறது. ஓசையின் வேறுபாடுகள் பல்வேறு அர்த்தங்களைத் தருவதாக இருந்திருக்க வேண்டும். அதன் பின் ஓசைகள் ஓர் ஒழுங்கில் தரப்பட்டு ஒவ்வொரு ஓசையும் ஒரு பொருள் குறித்து அமைந்திருக்கும். இவ்வோசைகள் பொருளைச் சுட்டுவதாகவோ, செயலைச் சுட்டுவதாகவோ இருந்தன. பின் ஓசையுடன் சைகையும் பொருள் பொதிந்து வெளிப்படுத்தப்பட்டன. பின்பு தன் கருத்தை சித்திரங்கள் வழி வெளிப்படு்த்தினர். சித்திரங்கள் ஒழுங்கைப் பெறுவதற்கு முன்னால் அவற்றிற்கு ஓர் அர்த்தத் தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஓசையும் சைகையும் சித்திரமும் ஒழுங்குப்படுத்தப்பட்டு மொழியும் எழுத்தும் உருப்பெற்றிருக்க வேண்டும். மனித வரலாற்றில் மொழியின் உருவாக்கம் என்பது ஏடறியா காலத்திற்கு முந்தையதாக இருந்தது.
ஓசை எழுப்புதல் மூலம் கருத்துகளைத் தெரியப்படுத்தியது போல கடின உழைப்பின் போது வேலையின் பளு தெரியாமல் இருப்பதற்காக சத்தமிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி சப்தமிடுதல் என்பது ஒருவகையான இசைமையோடு வெளிப்படத் தொடங்கியது . இன்றைய காலத்திலும் கடுமையான உழைப்பின் போது சத்தம் எழுப்பி ஒன்றுபட்டு கத்துவதையும் இசைமையாக சப்தமெழுப்புவதையும் காணமுடியும். .இவ்வாறு ஓசையின் தாளலயம் ஒழுங்குபடுத்தப்பட்டு இசையாக பரிணமிக்கிறது. பின்பு பாடலாக வெளிப்படுகிறது. பாடல் மூலம் கருத்துக்களைத் தெரியப்படுத்தும் வழக்கம் படிப்படியாக அறிவுருவாக்கச் செயலாக மாற்றம் பெற்றது. இவ்வறிவுருவாக்கம் அடுத்தகட்டத்திற்கு அல்லது அடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட வேண்டுமெனில் அறிவு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டு்ம்.
காலந்தோறுமான மனித எத்தனங்கள் வழிவழியாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை தன்னிச்சையான செயலாகக் கொள்வது இயலாது. கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் மனித வாழ்வின் பகுதியாக இருந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கிறது எனலாம். ஒரு  விவசாயி தன் விவசாயம் சார்ந்த  அறிவை தன்னுடைய மூதாதையினரிடமிருந்து பெற்று விவசாயம் என்கிற செயலைச் செய்கிறார். கற்றுக் கொடுத்தல் என்பது குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இடையில் நிகழக் கூடியதாக இருக்கிறது. தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற உறவுகளுக்கு இடையில் பரஸ்பரம் கற்றுக்கொடுத்தலும் கற்றலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கியங்கள் இதனை வெளிப்படுத்தி அமைகின்றன. குடும்பத்தில் பிள்ளைகள் கற்றுக் கொள்வது முதலில் பெற்றோரிடமிருந்துதான். அவர்களது செயல்களை உற்றுக் கவனித்துத்தான் மொழியையும் கலாச்சாரத்தையும் இன்ன பிற அறிவை பெற்றுக் கொள்கின்றன. வளர்ச்சிப் போக்கில் தாம் கற்றதை தன் வாழ்வில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் செயலாகும். அறிவைப் பெறுவது கற்றலின் முதல் நிலையாகும். ஒழுங்கையும், நடைமுறை உண்மைகளையும் வாழ்வின் உன்னதங்களையும் கற்றுக் கொள்வது அடுத்தடுத்த படிநிலைகளில் அமையும். தாய் தந்தையர் கற்றுத் தருவது வாழ்வி்ன் முழுமையை எய்த போதாத நிலையில்தான் கல்வியை ஆசிரியரைக் கொண்டு பெறும் நிலை ஏற்படுகிறது.
கல்வி தமிழ்ச்சூழலில் பரவலாக்கப்பட புத்தம், சமண மதங்கள் காரணமாக இருந்தன. சங்க காலத்தில் கல்வி கற்கும் பண்பு ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருந்ததை சங்கப் பாடல்கள் தருகின்றன. தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் அவரது ஆசானின் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என பனம்பாரனார் குறிப்பிடுகிறார். முந்நு நூல்கண்டு முறைப்பட எண்ணிஎன்ற பாயிரத்தின் வரி தொல்காப்பியர் முறைப்படி கல்வி பயின்று நூல்களைக் கற்றத் திறத்தை வெளிப்படுத்துகிறது.
அக்காலத்துச் சமூக மக்களிடம் ஐம்பெருங்குழுக்கள் தத்தம் தொழிலைச் சிறப்புறச் செய்தன என்பதை கனகசபைபிள்ளை எடுத்துக்காட்டுகிறார் அவர்களில் குருமார் என்போரும் இருந்தனர். அந்தணர்கள் கல்வியைக் கற்போராகவும் கற்றுக் கொள்வோராகவும் இருந்ததை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஓதல் அந்தணர் வேதம் பாட (மது.655) என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கேள்வி முற்றிய வேள்வி அந்தணர் (புறம்.361) என்றும், கேள்வி அந்தணர் அருங்கடல் இறுத்த வேள்வி (பெரும்.315) என்றும் அவர்கள் கல்வி கேள்விகளிலும் வேதம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டு வேள்வி முதலியவற்றைச் செய்தனர் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் ஆசிரியர் என்போர் கல்வி கற்றுக் கொடுக்கும் அளப்பரிய பணியைச் செய்தனர் என்றும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் “(மது.761) என்று மெய்யுணர்ந்த ஆசிரியர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் பல நூற்களைக் கற்றுணர்ந்து அதன்படி பிறருடன் உண்மை கண்டுணர்தல் பொருட்டு வாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும் ,
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உருகெழ கொடியும்” (பட்.169)
எனவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
ஆசிரியருக்குத் தம் கைப்பொருளைக் கொடுத்து கல்வி கற்றதனைப் பற்றி
கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணும் விச்சைக்கண்” (கலி.149) என்ற கலித்தொகைப் பாடல் வரி குறிப்பிடுகிறது. வறிய நிலையிலும் கல்வி கற்பதை மேன்மையாகக் கருதியதை,
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெரும்செம் மலனே“ (குறு.33)
என்ற பாடல் இரந்து உண்ணும் வறிய நிலையில் இருந்த போதிலும் வேற்றூர் சென்று கல்வி கற்க முனைந்த இளம் மாணவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்று ஔவையார் குறிப்பதை இங்கு நினைவு கொள்ளலாம். இவ்வாறு சங்க இலக்கிய காலமானது கல்விக்கு மேன்மையான இடத்தை அளித்திருந்தது. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேஎன்று சங்க இலக்கியத்தில் பொன்முடியார் கூறுவதும் கல்வியில் உயர்ந்தவனாக்குதல் என்ற பொருளில்தான். எனவே சங்கச்சமூகம் கற்பித்தலுக்கு தேவையான இடம் தந்துள்ளது என்பதை அறியலாம் .
இவ்வடிப்படையிலேயே அகநானூற்றுப் பாடல்களில் கற்பித்தல் என்ற பண்பு அமைந்துள்ள  பாங்கை விளக்கலாம். அகநானூறு சங்க அகக்கவிதையின் நெடுவெண்பாட்டு என்றும் கூறலாம் . நெடுந்தொகை என்று கூறுவதற்கு ஒப்பான நூலாகும். கற்பித்தல் என்பதை அறிய வைத்தல் என்ற பொருளிலே கொள்வது மரபாகும். அறியாமையிலிருக்கும் மாந்தருக்கு உரிய அறிவைத் தருதல் என்பதாகக் கொள்ளலாம். அகநானூற்றுப் பாடல்களைக் கற்கத் தொடங்கும் பொழுதே கற்பித்தல் என்பது தானே நிகழ்கிறது அதாவது பாடல்களின் கூற்றுக்கள் வாயிலாக உணர்வு வெளிப்பாட்டினை உணரத் தொடங்கியவுடன் அந்த உணர்வுகளைப் பயிற்றுவிக்கும் கற்பித்தல் தானே நிகழ்கிறது
பிரிதல்என்ற உரிப்பொருளில் கல்விக்காகப் பிரிதல் என்பதும் காணப்படுகிறது. கற்பித்தல் என்ற செயல்பாடு ஓர் பண்பாட்டு நிகழ்வாக அகநாநூற்றில் காணப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. கிளி விளி பயிற்றும்“ (அகம்.12) என்ற வரியில் பயிற்றும் என்ற சொல் அக்காலத்து பயிற்றுப் பண்பினை வெளிப்படுத்துவதாகும். கிளிகள் தினை கொய்வதற்குத் தன் இனத்தை அழைக்கும் எனப் பொருளாகிறது. கிளி பிறிதொரு கிளியை தினை கொய்ய அழைத்தலை பயிற்றுதல் எனக் கொள்கின்றனர். அது அறிவித்தல் என்பதாகவும் காணப்படுகிறது. பயில்தல் என்ற பண்பும் பயிற்றுதல் என்ற பண்பும் புலமை மரபில் இருந்து வந்ததால்தான் இவ்வாறு கூறுவது இயல்பாயிற்று எனலாம். இது போல் இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி” (அகம்.32) என்ற பாடல் வரியிலும் பணியாளைப் போல மொழிந்த தன்மை கூறப்படுகிறது. பயிற்றல் என்பது பலமுறை கூறி வற்புறுத்தல் என்றும் கொள்ளலாம் .
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை ” (அகம்.13) என்ற பாடல் வரியில் காட்டில் பள்ளங்களில் வீழ்த்திப் பிடித்த யானையைப் பயிற்றுவிக்கும் பாகன் அதற்கான உரிய மொழியில் தொழிலைப் பயிற்றுவிப்பான் எனப் பாடல்வரி அமைகிறது. யானைக்கு அதற்கான  மொழியின் மூலம் உணர்த்தும் பண்பில்  கற்பித்தல் என்பது வெளிப்படுகிறது. அது போலவே குதிரையைப் பற்றி அறிந்த தேர்ப்பாகனை ”“நூல்அறி வலவ”“ (அகம்.114) என்று குறிக்கிறது குதிரை பற்றிய நுணுக்கங்களை அறிதல் என்பது அனுபவத்தில் கிடைக்கும் அறிவாகும். நூல் அறி வலவ எனக் குறிப்பதால் அது கற்பித்தல் என்ற செயல்பாட்டினை குறித்து அதனோடு தொடர்புடைய அறிதல் என்று கொள்ளலாம். குதிரையின் மனதை முறையாக அறிந்து அதனை தன்னுடைய குறிப்பின்படி  இயக்க அறிந்துள்ள தேர்ப்பாகனின் அறிவை ஒப்பிடுகின்றன பான்மை இதில் வெளிப்படுகிறது.
பயில வேண்டிய மறைகளைப் பயிலாத ஊர்ப்பார்ப்பானின் நிலையை வேளாப் பார்ப்பான் வாளரத் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன” (அகம்.24) எனக் குறிப்பிடப்படுகிறான். மறைகளை ஓதி யாகம் செய்ய கற்காத பார்ப்பனர்கள் தாழ் நிலையடைந்து சங்கு அறுக்கும் தொழிலை மேற்கொள்வர் என்று கூறுவதன் மூலம்  பயிலாதவன் தாழ்ந்த நிலையடைவான் எனக் குறிப்பதன் மூலம் கல்வி கற்பதே அக்காலத்துச் சூழலில் மேல்நிலை எய்துவதற்கு வழியாக இருந்தது புலப்படுத்தப்படுகிறது.
களிறு சுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்“ (அகம்.257) என்ற பாடல் வரி, களிறானது யாமரத்தின் கிளைகளை முறித்து நீர் வருமாறு நாரினைச் சுவைத்துப் போட்ட சக்கையான சிதைந்த மரப்பட்டைகளை கல்வி அறிவு இல்லாத உப்பு விற்கும் உமணர்கள் தீமூட்டும் சுள்ளிகளாக பயன்படுத்துவர் என்கிறது . இங்கே கல்வி அறிவு இல்லாதவர்கள் என்ற குறிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் தொழில் சார்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள் என்ற போதிலும் அவர்கள் உரிய நூல் கல்வியைப் பெறாதவர்கள் என்ற பொருள்பட குறிக்கப்படுகின்றனர். ஊர்ப்பார்ப்பனர் கல்லாத போது அவர்கள் இழிநிலை அடைவர் என்று கூறப்படும் அதே வேளையில் உமணர்கள் போன்ற தாழ்நிலையில் உள்ள மக்கள் கல்வி கல்லாத நிலை ஒரு பொருட்டாகக் கொள்ளப்படவில்லை என்றும் அறியமுடிகிறது . எனினும் எல்லா நிலையினரும் அக்காலத்தில் கல்வி கற்கும் நிலை இருந்தது என்பதும்  இதில் புலப்படுகிறது.
விழையா உள்ளம் விழையும் ஆயினும் ,
என்றும் , கேட்டவை தோட்டிஅக மீட்டு , ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் , இன்ன
பொய்யோடு மிடைந்தவை தோன்நின்
மெய்யாண்டு உளதோ , இவ்வுலகத் தானே ?” (அகம்.286)
என்ற பாடல் கல்வி கற்றார் தம் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வலிமையுடையோர் வெளிப்படுத்துகிறது . இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத உள்ளமானது சிலநேரங்களில் அவற்றை விரும்பினாலும் கற்றரிந்தார் கூறக் கேட்ட நூற்பொருள்களை அங்குசமாகக் கொண்டு தங்கள் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வர்.  அறத்தையும் பொருளையும் கற்றுணர்ந்த பெரியோர் தீநெறி விளக்கி நன்னெறிச் செலுத்தும் தனமையுடையவர் .அறியன செய்யும் நும் போன்ற பெரியோர் எம்மிடம் பொய்யுடன் கூடிய புகழ்மொழி கூறினால் மெய் என்பது இவ்வுலகத்தில் எங்குளதோ , நான் அறியேன் என தோழி தலைவனிடம் கூறுகிறாள் . கல்வியில் சிறந்த பெரியோர் பிறர் யாவரையும் விட மிகப் பெரியோர் ஆவர் என்று கூறுகின்றது. இதிலிருந்து கல்வி கற்றோர் உயர்வாக மதிக்கப் பெற்ற திறம் உணர்த்தப்படுகிறது. அத்தைகைய பெரியோரை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதே உணர்த்தப்படக் கூடிய செய்தியாகும். இதுபோலவே பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் ” (அகம் 66 )இந்த வரி சான்றோர் கூறுகிற  பழமொழி உண்மையாகிறது என்பதே மெய்யாகிறது என்று கூறுகிறது .
இன்னா இசைய பூசல் பயிற்றலின்” (அகம்.52) என்ற வரியில் பயிற்றல் என்ற சொல் அடுத்தடுத்து கூறுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. குறமகளிர் வேங்கை மரத்தின் பூவைப் பறிக்க புலிபுலி ஓசையிட வேங்கை மரம் தானே தாழ்ந்து பூக் கொய்ய கொடுக்கும் என்பது மழைவாழ் மக்களின் நம்பிக்கை . அதாவது தொடர்ந்தும் அடுத்தடுத்தும் சொல்வதன் வழியாக ஊரறியச் சொல்கிற செயலை வெளிப்படுத்துகிறது . தலைவன் தலைவியைக் களவில் தொடர்ந்து சந்திப்பதை தவிர்க்க அலர் ஏற்பட்டதை தலைவனுக்குத் தெரிவிக்க தோழி புலிபுலி என ஓசையிடுவதாகவும் கொள்ளலாம் . இது   ஒருவருக்கு ஒரு கருத்தை தெளிவிப்பதற்கு தொடர்ந்து கூறுதல் என்கிற வகையில் பயிற்றல் என்கிற சொல் இடம்பெற்றுள்ளது . அதேபோல உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை” (அகம்  19 )இடைவிடாது என்கிற பொருளில் வருகிறது . உயர்ந்த யா மரங்களில் தங்கியிருக்கும் பருந்து இடைவிடாது துன்பக் குரல் எழுப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .
.                
      பெண்களும் இளமையில் அறியவேண்டியவைகளை கற்றறிந்து  அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தலைவி சிறிய பிராயத்தில் கற்றுத் தேர்ந்தவளாகப் பொருள் கொள்ளும் படியான நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி” (அகம்  17 )சிறிய வயதிலேயே புகழ்மிக்க பெரிய அறிவினைப் பெற்ற தன் மகளின் சிலம்பொலிக்கும் சிறிய பாதங்கள் சுரவழியைக் கடக்க ஏதுமோ என செவிலித் தாய் கூறுகிறாள் என்பதிலிருந்தும் தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் அவளைப் பற்றி மழலை இன் சொல் பயிற்றும் “ (அகம் 34 ) மழலை போன்ற இனிய சொற்களினால் பலகாலும் பயிற்றுவிக்கும் தலைவி என்கிறான் என்பதிலிருந்தும் அறியலாம்.
பரதவர் பாய் விரித்து மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லாது சேரியில் தங்கியிருந்தபோதும் , சேரிப் பக்கத்துக் கழிகளில் சுறா முதலிய கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தபோதும் பெண்கள் பழி தூற்றியபோதும் எதற்கும் அஞ்சாது தலைவன் தலைவியைக் காண அடுத்தடுத்து வருகிறான். தொடர் செய்கையில் ஈடுபடும் தலைவனை பயின்று வரும் மன்னே” (அகம்.50) என்றும் குறிப்பிடுகிறது. அது போல் இன்சொல் நன் பல பயிற்றும்“ (அகம்.74) என்ற வரி தலைவன் வந்துவிடுவான் , ஆற்றியிரு என சொல்கிற பொருளில் இடம்பெறுகிறது . அதாவது இனிய சொல்லை கேட்டு அதை கடைபிடித்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயிற்றல், பயின்று என்பன தொடர்ச்சியாக எடுத்துரைத்தல் எனக் கொள்ளலாம். இவ்வாறு பயிற்றுவித்தல் என்பது வாழ்வியல் கூறாக இருந்ததை பாடல் வரிகள் தெளிவிக்கின்றன.
ஓதுதல் என்னும் பண்பும் அக்காலத்து மக்களிடம் வெகு இயல்பாக இருந்திருக்கிறது
அருஞ்சுரம் அறிய அல்ல ; வார்கோல்
திருந்துஇழைப் பணைத்தோள், தேன்நாறு கதுப்பின்
குவளை உண்கண்; இவளோடு செலற்கு ‘ என
நெஞ்சுவாய் அவிழ்த்தனர் காதலர்
அம்சில் ஓதி ஆயிழை- நமக்கே ” (அகம்.129) என்ற வரிகளில் கடத்தற்கரிய பாலைநிலத்தில் பொருள்வயின் பிரிந்து  செல்கிற தலைவன் தன்னுடைய தலைவிக்குக் தன் கருத்தை கூறி விளங்க வைத்தலைக் குறிக்கிறது. ஓதி என்று கூறுவதால் இது விளங்க வைத்தல் என்பதோடு கற்பித்தல் என்ற செயலை பொருள்படுத்தி அமைகிறது. "அம்சில் ஓதி "என்பது கூந்தலை நீவி காதோடு ஓதிச் சொல்லுதல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 
அக நானூற்றுப் பாடல்களில் வருகிற பயிற்றல் , ஓதல் , மொழி என்கிற சொல்லாடல்களைக் கொண்டு அதன் பயன்பாட்டு வகைமைகளை ஆராயும்பொழுது சமூகத்தின் செயல்பாடுகளில் அந்தகாலத்தில் புழக்கத்தில் இருந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தப்பட்டிருப்பது அறியமுடியும் . இவ்வாறு சொற்களைக் கொண்டு அகநானூறை அணுகும் பொழுது கற்பித்தல் என்பது பரவலாக்கப் பட்டிருப்பது அறியலாம் .
இவை தவிர , அக இலக்கியங்கள் தோன்றிய காரணங்களை அறியவும் பின்வருகிற தலைமுறைக்கு  அக இலக்கியத்தின் பங்கு என்னவாக இருக்கமுடியும் என்பதையும்  ஆய்வதாகவும் கருத்தில் கொண்டு அகநானூற்றுப் பாடல்களை கற்கத் தொடங்கினால் அகநானூற்றுப் பாடல்கள் தன்னளவில் நின்று ஐந்து நிலங்களின் இயல்புகள் , ஒழுக்கங்கள் போன்றவற்றை சிறந்த உவமைகளுடன் தெளிவுறுத்துகிறது .அக உணர்வுகளை கொண்ட பாடல்களாக இருந்தபோதிலும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளையும் சங்க அரசமரபினர் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது . பாணர்கள், அவர்கள் ஆண்ட நாடுகள் ,  சங்ககால ஊராட்சி முறை , சமயம் , தமிழரின் திருமண முறைகள் , சங்ககால மக்களிடம் புழக்கத்தில் இருந்த புராணக் கதைகள் பற்றியும் பாடல்களே சான்றாக நின்று நமக்குக் கற்பிக்கிறது .
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,” (அகம் 349 ) நடுவுநிலை தவறாத துலாக்கோல் போன்ற குற்றமற்ற சொல்லை  உடைய நன்னன் என்கிற மன்னனைப் பற்றி குறிப்பு வருகிறது . போலவே இத்தொகுப்பு நூலுள் அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, ஆதிமந்தி, , கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அண்டர் மகளிர், அத்தி (சேரன் சேனாதிபதி), அதிகன், ஆட்டன் அத்தி, ஆதன் எழினி, ஆரியப் பொருநன், ஆரியர், ஆஅய் அண்டிரன், இருங்கோ வேண்மான், இளங்கோசர், இளம் பெருஞ் சென்னி, உதியஞ் சேரல் ஆகியோரும் இன்னும் பலரும்  குறிப்பிடப்பெற்றுள்ளனர்.
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு” (அகம் 281 ) என்ற பாடல் வரிகளின் மூலமாக சந்திரகுப்த மோரியரின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் அறியமுடிகின்றது.
இவ்வாறு மன்னர்கள் பற்றிய குறிப்புகளும் வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புக்களையும் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது.
       சங்க காலத்தில் கடவுள் வழிபாடு மதம் என்கிற பெயரால் குறிப்பிடப்படவில்லை . முருகு , முருகன் என்கிற சொற்கள் சங்கப்பாடல்களில் பயின்று வந்துள்ளன . அக இலக்கியங்கள் முருகனை காதல் கடவுளாகவும்  புற இலக்கியங்கள் போர்க்கடவுளாகவும் வைத்துப் பார்த்தன . முருகனைக் குறித்து ஆடிப்பாடுகிற வெறியாட்டமும் குரவையாட்டமும் இருந்தன
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி “ (அகம் 1: 3)
என்றும்,
சூர் மருங்கறுத்த சடவை நெடுவேள் சினமிகு முருகன் “ (அகம் 59:10)
என்பது போன்ற பாடல் வரிகள் உள்ளன . அக இலக்கிய தலைவனை பாடும் இடங்களில் முருகனை வைத்து பேசும் இடங்கள் இருக்கின்றன.
நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன என்பனவற்றையும் குறிப்புக்களாக அறியமுடிகிறது .
 சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
வளம் கெழு முசிறி 149
என யவனர்களின் கடல் வாணிபம் பற்றியும் குறிப்புகள் உள்ளன .
கட்டிடக்கலையில் சிறப்புப் பெற்றிருந்தமையும் வீடுகள் கோட்டைகள் நேர்த்தியாக வடிவமைகக்ப்பட்டிருந்தமையும் அகநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது . இதன் மூலம் சங்க கால மக்களின் கட்டிடக்கலை சார்ந்த அறிவு நமக்கு புலப்படுகிறது .
மகர நெற்றி வான்தோய்ப் புரிசைச்
சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்
புகாஅர் நன்னாட் டதுவே “ (அகம் 181 : 20-22)
சமூகச் செயல்பாட்டின் மையமான குடும்ப அமைப்பின் தொடக்கமான ஒரு திருமணக்காட்சி அகநாற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
 பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை  (அகம் 86)
மணம் செய்து வைக்கும் முதிய மங்கள மகளிர் நிறைநீரோடு குடத்தைத்  தங்கள் தலையில் வைத்து மண்டை எனப்படுகிற புதிய மண்பானையை கைகளில் ஏந்தி ஒன்று கூடுவர் . மங்கலச் சடங்கு நிகழ்வுக்கு முன்னே தரவேண்டியது பின்னே தரவேண்டியது அனைத்தையும் முறையாக எடுத்துத் தந்தனர் . அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இருஎன்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. உளுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவான வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது என்பது திருமண வீட்டின் வழக்கமாக இருந்தது . வரிசையாக கால்களை நட்டு குளிர்ந்த பெரிய பந்தல் அமைப்பதும் பந்தலில் மணல் கொட்டி பரப்பி மனையில் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரித்த மரபு இருந்தது அறிய முடிகிறது .
சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் முதலிரவுநிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறுஎன்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.
முருங்காக் கலிங்கம், முழுவதும் வளைஇ;
பெரும் புழுக்குற்ற  நின் பிறைநுதல்;பொறி வியர்
உறு வளி ஆற்றச், சிறு வரை திறஎன” (அகம் 136 )
இசையையும் கூத்தையும் வகைப்படுத்தி வாழ்ந்த சங்க மரபையும்  அறியமுடிகிறது. சங்ககால மக்கள் இசையோடு இணைந்து வாழ்ந்துள்ளனர். இசையின் இனிமையில் மயங்கி கேட்கும் ஒலியெல்லாம் பண்போன்று இருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தனர் தேரில் கட்டப்பட்ட மணி ஒலிக்கும் ஓசை கூட அவர்களுக்கு இளி என்னும் சுரம் போலத் தோன்றியதாகப் புலவர் குறிப்பிடுகிறார். இளி தேர் தீம்குரல் இசைக்கும் அத்தம் “ (அகம்:33 ) என்ற அடிகள் அதை புலப்படுத்துகிறது. சங்க காலத்தில் நடனம் கூத்து எனப்பட்டது. கூத்தரும், விறலியரும் கூத்தாடினர். கூத்து மன்னர்களாலும் பொது மக்களாலும் மிகவும் விரும்பப்பட்டு வந்தது, மன்னர்களும், வள்ளல்களும் கூத்தாடுபவரை ஆதரித்துக் கூத்துக் கலையை வளர்த்தனர்.
      சங்ககாலத்துச் சூழலில் தொகுக்கப்படாத வாழ்வியல் சார்ந்த கல்விமுறையை கற்றுத் தேர்ந்தவர்களாக விவசாயம் , வாணிபம் , அழகியல், இசை , கூத்து ,தொழில்கள் என பலதுறையிலும் அறிவுடையோராகவும் வழி வழியாக அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கிறவராகவும் இருந்தனர் என்பதற்கு அவர்தம் வாழ்வைப் பேசும் பாடல்கள் தரும் சான்றுகளாக அமைகின்றன. வேத பாடம் படித்தல் அந்தணர்க்கு கடமையாக இருந்தது. ஓதல் வேட்டல் ஆகிய தொழில்களை அவர்கள் செய்தனர் என்பதை அறியும் போதே பிற மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர் என்பதும் பெறப்படுகிறது. அகஇலக்கியமான அகநானூறில் மக்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு சூழல்களில் தாம் கற்ற கல்வியை வரலாற்று புராண அறிவை பதிய வைத்துள்ளனர்.
       சங்க காலத்து சமூகத்தினருக்கு  இலக்கியம், கலை ,சமூக, வாணிபம் ,  வரலாறு , பண்பாடு ஆகிய பல துறைகளில். இருந்த அறிவை தொடர்ந்து பயிற்றுதல் மூலம் நிகழ்த்தும் சமூக அறிவை அகநானூற்றின் நானூறு பாடல்களும் தன்னளவில் நின்று கற்பித்தலை நிகழ்த்துகிறது என்பதை இக்கட்டுரை சிறியஅளவு விளக்க முயன்றுள்ளது .

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...