Friday, November 17, 2017

கற்றல் கற்பித்தலில் மாற்றங்களும் வழிமுறைகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீ காடர்ன்ஸ்
  சுண்டப்பாளையம் (அ)
  கோயம்புத்தூர் - 641 007.
பேச: 98438 74545.
தமிழ் மொழி கற்பதற்கு  எளிமையானது. இம்மொழியினை ஆர்வம்  உண்டாக்கும் முறையில் கற்பித்தல் ஆசிரியரின் கடமையாகிறது. தமிழ்மொழி கற்பித்தலில் விளையாட்டுமுறை, நடிப்புமுறை, மேற்பார்வைப்படிப்புமுறை, செயல்திட்டமுறை, ஒப்பந்தமுறை, கண்டறி முறை, உரையாடல் சொற்பொழிவுமுறை, திட்டமிட்டதைக் கற்றல்முறை, மொழிப் பயிற்றாய்வுக்கூடமுறை, கட்டுரை படித்தல், பலர் கருத்துகளைத் திரட்டல், செயல்முறைக்கருத்தரங்கு, சொற்போர் போன்றவை பின்பற்றப்படுகின்றன.
இம்முறையில் கற்றல் என்பது தனிநபரின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இணையாக நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. எனவே ஒரு ஆசிரியரின் பங்கு அவற்றை நெறிபடுத்துவதே ஆகும். 
அவைகளில் சில :
கல்வி கற்க ஏற்ற சூழலை உருவாக்குதல்,
கற்றலின் நோக்கத்தைப் புரியவைத்தல்,
கல்வி உபகரணங்கள் மற்றும் பிற எழுதுபொருட்களை கிடைக்கும்படி செய்தல்
அறிவுசார் மற்றும் உணர்வு சார் கல்விக்கூறுகளை சமமாக வழங்குதல்
மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
கீழ்க்கண்ட நிலைகளில் கல்வி கற்றலிற்கு ஏற்ற சூழல் அமையும்
மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்கிறார்கள் மற்றும் அதன் போக்கிலும்
   அமைப்பிலும் அவர்களின் பங்களிப்பு உண்டு.
செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு
இடையே நேரடி முரண்பாட்டின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது.
சுய-மதிப்பீடு தான் இங்கு பிரதான மதிப்பிட்டு முறை. கற்றலின்
முக்கியத்துவத்தையும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டியதன்டி அவசியத்தையும் ரோஜெர் குறிப்பிடுகிறார்.
அமலாக்கம்
செய்முறைக் கற்றல் முறை மாணவனின் தேவைகளையும் ஆர்வத்தையும் இனங்கண்டு அவனை அதிக ஈடுபாட்டுடன் கற்கச் செய்கிறது. இங்கு தன்னார்வம் மற்றும் சுயமதிப்பீட்டுத் திறன் அவசியம். இம்முறை சிறப்பாக செயல்பட செயல்திட்டம், குறிக்கோள் நிர்ணயித்தல் முதல் சோதனைகள் மூலம் இலக்கினை அடைந்துவிட்டோமா என்பதை அறியும் வரை அனைத்து பாகங்களும் செம்மையாக செய்யப்பட வேண்டும். இவ்வகை செயல்முறைகள் புதியவற்றை அறியவும், புதிய கோணங்களில் சிந்திக்கவும் உதவும்.
நாம் குழந்தையாக இருக்கும்போது விளையாடிய விளையாட்டுகள் நினைவிருக்கிறதா? இந்த எளிய விளையாட்டுகள் குழு நிர்வாகம், தலைமைப்பண்பு உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகத் திறன்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன. செய்முறை வழிக் கற்றல் முறையைப் போலவே இவை பிரபலமடையக் காரணம் இவற்றில் உள்ள வேடிக்கை சமாச்சாரங்கள்தான். வேடிக்கையான முறையில் கல்வி கற்றால் அவை அதிக நாட்களுக்கு நம் நினைவில் நிற்கும். பெரும்பாலான கல்வியாளர்கள் செய்முறைக் கற்றலின் மகத்துவத்தை உணர்ந்துள்ளனர். நகைச்சுவை கலந்த வேடிக்கையான கல்விச் சூழல் கற்றலை அதிகம் மேம்படுத்துகிறது.
ஒவ்வொரு தனி நபரும் நேரடியாக ஈடுபடுவதால் செம்மையான புரிதலுக்கும் அதிக நாள் தக்கவைத்தலுக்கும் உதவும்.
கொள்கைகள்
மாணவருக்கு பாடத்தில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தால் மட்டுமே கல்வி பயிலுதல் நிகழும்.
வெளிப்புற தாக்கம் குறைவாக இருக்கும்போது தனி மனிதன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.
தனி மனிதன் மீது அதிக தாக்கம் இருக்கும் போது  கல்வி கற்றல் விரைவாக நிகழும்.
தானாக கற்கும் கல்வி அறிவு நீண்ட நாள் நிலைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
பகுத்துணர்ந்து கற்றல்
கவனித்தல், குறிப்பெடுத்தல் மற்றும் பிறர் போலச் செய்வது மூலமாக மனிதர்கள் சிறப்பாக கல்வி பெற இயலும். பகுத்துணர்ந்து கற்றல் என்பது கேட்டல், கவனித்தல், தொடுதல் அல்லது சோதனை வழி அறிதல் மூலம் நிகழ்கிறது. இம்முறையில் பிறர் செய்வது போல தானும் செய்வது மட்டுமல்லாமல் பல வழிகளில் அறிவு பெற வாய்ப்புள்ளது. இதைப்பற்றி இணையதளங்களில் படிப்பதால் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியாது. பகுத்துணர்ந்து கற்றல் என்பது மூளை அல்லது புலன் உறுப்புகள் வாயிலாக கல்வி அறிவு பெறுவதைக் குறிக்கிறது. ஒருபொருளைப் பற்றிய மனக் கண்ணோட்டமும் தகவல் பரிமாற்றமும் பகுத்துணர்ந்து கற்றல் முறையின் அங்கங்களாகும்.
கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது கல்வி வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவார்களின் கல்வி கற்கும் முறை
கொள்கை கட்டுக்கோப்புத்திறன் கொள்கையில் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறை அமைகிறது. தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு  புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல்களை உருவாக்குகிறார்கள்.
இந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை கவனித்து தக்க ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் தூண்டுகிறார். எளிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும் இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்க்கும் இம்முறை ஏற்றதாகும்.
கண்ணோட்டம்
ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.
பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்
இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.
பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
கற்றல் முறை பற்றிய பார்வை.
பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.,
எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்
பாராட்டுதல்கள் ரூ தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி.
எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல் முதலியவை மூலம் கல்வியறிவை வழங்குதலில் புதிய வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
கற்றல் முறைகளில் சமூக மற்றும் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி தன் சமீபத்திய நூல்களில் (1986,1990,1996) ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
பயன்பாடு
ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது. ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார். ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின் (1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.
கொள்கைகள்
1. மாணவன் ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பாடக்குறிப்புகள்    
அமைக்கப்பட வேண்டும்.
2. குறிப்புகள் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.
3. மேலும் பல தகவல்களை அறிய செய்யும் வண்ணம் விடுபட்ட செய்திகளை 
  அறியும்படி அமைக்கவேண்டும்.
ஈடுபடுதல்
“ஈடுபடும்” செயல் முன்பு கற்றவைக்கும் இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர். ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
ஆராய்ந்து அறிதல்
இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
விளக்கமளித்தல்
இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது. இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.
விவரித்தல்
இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.
மதிப்பிடுதல்
மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடு, குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விரிவாக்குதல்
இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது. எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.
காட்சி வழி கற்போர்
இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.
கேட்டல் வழி கற்போர்
இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர். சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும்  டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.
அசைவுகள், தொடுதல் வழி கற்றல்
இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

பொகுப்புரை
குழந்தைகள் அவரவர் வழியிலே பயில்கிறார்கள் தானே கற்றலில் அவர்களுக்குக் கால அவகாசம் அதிகமாகச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழி கற்றல் குறைக்கப்பட்டுள்ளது.     இது குழுவின் மூலம் கற்றல், ஒருவருக்கொருவர் புரிந்து கற்றல் மற்றும் தானே கற்றலை மேம்படுத்துகிறது. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தை மாணவர்களுக்குள்ளேயே நேரத்தியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைபட்டால் மட்டும் குழுந்தைகளின் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.
இம்முறை கற்றலின் வழியில் குழந்தைகள் பங்கேற்பை ஒவ்வொரு படிக்கட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இம்முறையில் குழந்தைகளே அறிய முடியாத அளவில் மதிப்பீடு அமைக்கப்பட்டிருக்கிறது.
மனப்பாடம் அல்லது உருப்போட்டு படித்தலுக்கான வழியே இதில் இல்லை இம்முறையில் பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவார்கள்.
வகுப்பறை நடைமுறைகள் குழந்தைகளின் தேவைகள் மற்றும் ஆர்வத்தையொட்டி இருக்கும்.
குழந்தை பயிலுவதிலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும். இம்முறை கற்றலில் பலகிரேட் மற்றும் பலமட்டங்கள் சிறந்து பயன்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு குழந்தையும் நேரடியாக, மேலே செல்ல முடியாது மைல்கல்லில் உள்ள ஒவ்வொரு படிகட்டையும் ஏறித்தான் செல்ல முடியும். தான் மைல்கல்லை அடைந்து விட்டோம் என்ற உணர்வு குழந்தைக்கு நம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்துகிறது.
கண்கவர் அட்டைகளும், செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
குழந்தையின் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் தகவல் பறிமாற்றத் திறன்கள் வளர்ச்சி அடைய வழிவகுக்கிறது. குழந்தைகள் குழுவில் இருக்கும் பொழுது ஒருவித பாதுகாப்பை உணர்வார்கள்.
குழந்தைகள் ஒரே இடத்தில் இல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே நகர்ந்து செயல்பாட்டை முடிக்கலாம்.

சக்திஜோதி கவிதைகளில் நவீனமும் பெண் புனைவும்

பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-641 035.
பேச : 098438 74545. 
பெண்ணை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தே பெண் எழுத்து என்று தொடக்க காலத்தில் கருதப்பட்டது.  ஆனால் பெண்ணை மையமாக வைத்து ஆண் எழுதும் எழுத்தும் பெண் எழுத்து என்ற வகையில் அடக்கிவிடும் அபாயம் இருப்பதால் ‘பெண் பற்றிப் பெண் எழுதுவதே பெண் எழுத்து’ என்ற ஆழமான பொருள் பின்பு கொள்ளப்பட்டது.  மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள்’’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை, பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள். அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.
பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது. 
‘’ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது. வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது. ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும், அதை நிறைவேற்றலும் அரிது’’ என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார். 
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள்  - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும். 
தொடக்க நிலையில் ‘பெண்ணுரிமை‘ என்றும், ‘பெண் விடுதலை’ என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண் நிலை வாதம்’ என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ’இதுதான் அது’ என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது. 
“அனைத்துப் பெண்களுக்கும் எக்காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது’’ என்கிறார் மொலீனா தேன்மொழி. 
“...............உனக்கு உள்ளது போல

உரிமைகள் எனக்கும் உண்டு

ஏனெனில்

நான்

மானிடப் பெண்ணாகப்

பிறந்திருக்கிறேன்

எனக்கும் உனக்குமிடையிலுள்ளது

ஓர் ஒப்பந்தம் மட்டுமே!"

“இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு, இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்” என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச்சிதம்பரம் 
இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. 
தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ, ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை. சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும், பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.
“இப்பவும் கூட 
    உந்தன் துணை இல்லாமல்
    எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
    உத்தேசமில்லை !.......... 
  அதற்கு முன்
  என் கரங்களின் மீது 
  உன் கால்கள் இருந்தால்-
  கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்’’
என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ்விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் ஒரு பெண் கவிஞர்.
இந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும், சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.
“சுயத்தையெல்லாம்

ஒப்படைத்து விட்டு

வைக்கோல் பொம்மையாகி

உன் இழுப்புக்கு

ஆட வேண்டுமென்றே

நீ நினைக்கிறாய்

நீ சொல்வது தான் வேதம்

நீ காட்டுவது தான் உலகமெனில்

எனக்கென்று

இதயமும் கண்களும் எதற்கு?"

இவ்வாறாக, பெண்களுக்கெதிரான வன்முறைகளையும், அதற்கான தமது எதிர்வினைகளையும் பல பெண்கள் பதிவுசெய்துள்ளனர்.
பொதுவான மக்கள் வழக்கில் ’அந்தஸ்து’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு ,
கீழ்க்காணும் இரண்டு காரணங்களை அடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு ( hரஅயn ளவயவரள )
2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு (அயவநசயைட ளவயவரள)
இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும், நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.
இன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்த போதும், அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.
இவை தவிர குடும்பத்திலும் சமூகத்திலும் நிலவும் பெண்ணுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் என்பவற்றையும் நம் பெண்களின் கவிதைகள் பல்வேறு கோணங்களில் பேசுகின்றன.   
“அக்காவின் கணவரின்

அந்த ரகசியத்தொடுகைகள்...

அடுத்த வீட்டுக் கிழட்டு மாமாவின்

அர்த்தமுள்ள பார்வைகள்...

இளவட்டங்களின் சின்னச் சின்ன

கண் சிமிட்டல்கள்...

எதற்குமே அலட்டிக் கொள்ளாத

என் குடிகார அப்பாவோடு

நானும், இளையதுகளும்...

நீ வரத்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

எனக்கு 'அக்கினிப் பரீட்சை தான்."

பெண் என்பதால் அவள் அனுபவிக்கும் அன்றாட இடர்ப்பாடுகளை அடையாளப்படுத்துகின்றது. பழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும், குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன. 
கல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது. அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை. 
வெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக... மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்ந்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன. 
“நிறைவேறாத கனவுகளோடு
நான்
மரணத்தைத் தழுவ விரும்புவது குறித்து 
துக்கமில்லை
ஆசைகள் 
லட்சியங்கள்
கனவுகள்
உன் முன் அணிவகுக்கின்றன
மரணத் தருவாயில்” 
என்ற கவிதையில் பெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது. 
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர் 
“பொருளாதார வசதியுள்ள பெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு” என்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார். இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும், அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி ,உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில் கொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும், பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது. இந்தியஆட்சிப்பணி(ஐயுளு)போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கும் பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக் கீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி, காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு. பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில்முறைப்படுத்தப்படாத பணிகளில்... கட்டிடக்கூலிகளாகவும், விவசாயக்கூலிகளாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்ற பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி. 
இந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில் ( ஐகுளு ) இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில் “திருமணமான ஆணுக்குள்ள உரிமை, திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது” என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 
கலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும், மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள், பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன. குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் குறைவானவர் களாகவே இருக்கிறார்கள். “ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது” என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.
பெண்களும் காதலும்  
காதல் என்ற மெல்லுணர்வு மனித உயிரி என்ற வகையில் பெண்ணுக்கும் உரியதுதான் என்றாலும் அதனைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதில் 'பெண்' காலங்காலமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தே வந்துள்ளாள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் காதல் கவிதைகளைப் பொறுத்தவரையில், அவை பெரும்பாலும் ஆண்களால் பாடப்படுபவை, ஆண்கள் தம்மைப் பெண்களாகப் பாவனை செய்து பாடியவை என்ற இரு போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. தமது அகவயப்பட்ட காதலுணர்வைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவது பெண்களின் இயல்புக்கு மாற்றமானது என்ற கருத்துநிலையே அக்காலத்தில் மேலோங்கி இருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்குரியன என்பன போன்ற கருத்தியல்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்தன. அந்த வகையில், ஆங்காங்கே பெண்களின் காதல் பற்றிய ஒரு சில வெளிப்பாடுகள் இருப்பினும் அவற்றுக்குக்கூட வௌ;வேறு முலாம்களும் முகமூடிகளும் போடப்படும் நிலையே வழக்கில் இருந்தது எனலாம் (உதாரணம்: 'ஒளவைப்பாட்டி' என்ற விம்பம்). அல்லது அவை முதன்மைப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன அல்லது ஓரங்கட்டப்பட்டன. சங்க காலப் புலவர்களில் அகநானூறு, குறுந்தொகை ஆகிய தொகைநூல்களில் சுமார் 26 காதல் பாடல்களைப் பாடியுள்ள ஒளவையார், நன்னாகையார், வெள்ளிவீதியார், பல்லவர் காலத்தில் நாச்சியார் திருமொழி, திருப்பாவை போன்றவற்றைத் தந்த ஆண்டாள் போன்றோர் காதல் உணர்வை வெளிப்படுத்திப் பாடிய தமிழ்ப் பெண்களில் முக்கியமானவர்கள். 
இலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் ‘பெண் எழுத்தாளர்’ எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்படுவதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.
இலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது. அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை, பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.
சமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் ‘சிவப்பு’ என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.
தந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.
ஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.
பெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு, நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.
ஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும், அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.
‘’ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது’’ என்றார் பெரியார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும், வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,
பால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும்,
பாலின சமத்துவம் மறுக்கப்படுவதையும்
விழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.

குறிஞ்சி நில மகளிரின் பொருளீட்டலும்,பொறுப்புணர்வும்

பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர் -641 035
பேச:098438 74545.

மானுடத் தோற்றத்திற்கு அடிப்படையாய் விளங்குவது பெண்மையே. பொறுமை, ஆற்றல் ஆகியவற்றின் உருவகமாகவும் சக்தியின் பிரதிபலிப்பாகவும் போற்றப்பட்டு வருவதும் பெண்மையே. இத்தகைய மகளிரின் பண்பு நலன்கள்  குறித்துப் பல்வேறு அறிஞர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். “வினையே ஆடவர்க்கு உயிரென” வினைமேற்கொள்ளல் ஆடவரின் தலையாய கடமையாகக் கூறப்பட்டாலும், மகளிர் கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழ்ந்து, இல்லத்தில் கணவரையும் குழந்தைகளையும் பேணிக்காத்து, வரவுக்குத் தக்கபடி குடும்பம் நடத்தி, விருந்தினரைப் போற்றியும் வாழ்ந்ததால் “மனைக்கு விளக்கம் மடவார்” என சிறப்பிக்கப் பெற்றனர். தன் வாழ்க்கைக்கு தன் குடும்பத்திற்கு ஏற்றவகையில் கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் வகையில், அட்டில்தொழில், மாலை தொடுத்தல், ஒவியம் வரைதல் போன்றவற்றையும் கற்று அதன் மூலம் பொருளீட்டலில் ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
குறிஞ்சி நிலமக்கள்
இல்லறம் நல்லறமாக, மங்கல விளக்காக திகழ்பவள் பெண்ணே. ஒரு  இல்லறம் சிறப்பான முறையில் இயங்குவதற்கு பெண்மையின் பேரறிவு பெரிதும் துணை புரிகின்றது. அதனால்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருக்கின்றாள் என்ற தொடர் உருவானது. எனவே, இல்லற வாழ்க்கையில் நடைபெறுகின்ற நன்மைகளுக்கும், தீமைகளின் அழிவிற்கும் பெண்ணே காரணமாகின்றாள் என்பதை உணர்ந்தே, “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்ற முதுமொழியை முன்னோர் உருவாக்கியுள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தின் முக்கிய விளைபொருள் தினையாகும். தினைக்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகும் சமயத்தில் பறவைகள் உண்ணவரும் நேரத்தில் அவற்றை காக்கும் பணியில் மகளிர் ஈடுபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றனர். 
“சிறுதினைச் செவ்வாய்ப் பாசினங் கடீய்யர் கொடிக்கி அவ்வாய்த் தட்டையொடவனை யாகெ” (நற்:134) என்பதில் மலையிடத்தில் உள்ள சிறிய தினைப்புனத்தை நாடிவரும் சிவந்த வாயையுடைய பசுங்கிளிகளின் கூட்டத்தை ஓட்டும் பொருட்டு, தலைவியின் அன்னையை தலைவியே கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துச் செல்க என்று கூறுகிறாள்.
முல்லை நிலமகள்
முல்லைநில மகள் விடியற்காலையில் நன்றாக உறைந்திருந்த தயிரைக் காந்தள் மென்விரலால் கரைத்துக் கடைந்து வெண்ணெய்யைத் திரட்டி வேறு பாத்திரத்தில் வைத்து விட்டு, மோர்பானையை சும்மாட்டின் மீது வைத்து தலையில் சுமந்து சென்று அருகிலுள்ள ஊர்களில் அன்றாடம் விற்கிறாள் என்பதை,
“நள்ளிருள் விடியல் புள் எழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி” (பெரும் : 155:60)
நெய் விற்கும் மற்றொரு பெண் நெய்க்கு ஈடாகப் பொன் பெறாமல், நன்கு பால் கொடுக்கும் பசுக்களையும், எருமைகளையும் வாங்கி தனது பால் பண்ணையைப் பெருக்கினால் என்பதை,
“நெல்விலைக் கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்” (பெரும்:169:70)
என்ற அடிகள் சுட்டும். முல்லை நிலமகள் பொருளீட்டல் மட்டுமன்றி, பண்டமாற்று வணிகத்திலும் சிறந்து விளங்கினாள்.
மருதநில மகள்
பருவத்திற்கேற்ப கிடைக்கும் மலர்களை வட்டிகளில் ஏந்தி தெருக்கள் தோறும் திரிந்து இளமகளிர் விற்றதால் அவர்கள் பூவிலை மடந்தை என்றழைக்கப்பட்டனர்.
“வாவிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதும லாட்டிக்கு” (நற் -118 9-11)
என்கிறது. மற்றொரு பெண் கார் காலத்தில் குறுக்கத்தி, சிறுசண்பகம் முதலிய மலர்களைக் கடகப்பெட்டியில் வைத்து கையிலெடுத்துக் கொண்டு விலைக்குக் கொள்ளீரோ எனக்கூறிச் செல்கிறாள்.
நெய்தல் நிலமகள்
கடலும் கடல் சார்ந்த நிலத்தைச் சார்ந்த நிலமக்கள் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். கடலினுள் சென்று பரதவர் பிடித்து வரும் மீன்களை பரதவக்குலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச்சென்று விற்றுவிட்டு தமக்கு தேவையான பிற பொருளைப் பெற்றனர்.
“ஒங்குதிரைப் பரப்பின் வாங்குவிசை கொளீ,
திமிலோன தந்த கடுங்கண் வயமீன்” (அகம் - 320:1-4) என்கிறது.
அது மட்டுமல்லாது மிதமுள்ள மீன்களைத் துண்டங்களாகச் செய்து உப்பிட்டு, வெண்மணலில் பரப்பி வெயிலில் உலர்த்தும் பணியையும் செய்தாள் என்பதை,
“உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்” (நற் 63-1- 2) என்கிறது.
நெய்தல் நிலமகளிரின் மற்றொரு தொழில் உப்பு விற்றல், உப்பினை வண்டியில் ஏற்றிச் சென்று விற்பர் என்பதை,
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும்” (அகம் 390:810)
என்னும் அடிகள் சுட்டுகிறது.

பாலைநில மகள்
பாலை நிலமகள் எயிற்றியர் எனப்பட்டாள். நிலத்தில் குத்தி எடுத்த புல்லரிசியை, விளைமரங்களின் நிழலையுடைய தம் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட நிலவுரலில் இட்டு சிறிய உலக்கையால் குத்தி எடுத்தனர் என்பதை,
“இருநிலக் கரம்பை படுநீறாடி
நுண்புல் அடங்கிய வெண்பல் எயிற்றியர்” ( பெரும் 90:9-10)
என்பதில் அறியலாம்.

அரசியல் பெண்டிர்
கள்ளை காய்ச்சி விற்கும் பெண்டிர் அரியல் பெண்டிர் எனப்பட்டனர் கள் விற்கும் பெண் தன் இடையில் கள்பானையைச் சுமந்து வந்து போர்ப்படைவீரர்களுக்கு கொடுத்தாள் என்பதை,
“அரியல் பெண்டிர் அல்குற் கொண்ட
பருவாய்ப் பானைச் குவிமுனை சுரந்த
வரி நிறக் கலுழி ஆர மாந்திச்” (அகம் 157:1-4)
புலைத்தி
சங்க கால மக்கள் தூய்மையான ஆடை உடுத்த காரணமாக இருந்தவள் புலைத்தி, இப்புலைத்திப் பெண்கள் தினமும் களர் நிலத்தில் அமைந்த கிணற்றைத் தோண்டி அங்கு கிடைக்கும் நீரால் ஆடைகளை வெளுப்பர்.
“களர்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீ இய தூவெள் ளறுவை” ( புறம் 311)
ஏவன் மகளிர்
அரசரிடம் வரும் விருந்தினரை உபசரிக்கும் பணி செய்பவர் ஏவன் மகளிர் என்றழைப்பட்டனர். வரும் விருந்தினருக்கு குற்றமற்ற பொன்னாற் செய்த வட்டில் நிறையும்படி கள்ளினைப் பலமுறை வார்த்துத் தருவர்.
“இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர” (பொருந 84-87)
அடுமகள்
சங்க மகளிர் விருந்தோம்பும் பண்பு மிக்கவராய் இருந்தனர். சமையல் கலையைச் செய்தொழிலாகச் செய்த மகளிர் அடுமகள் என்றழைக்கப்பட்டாள். இதனைப் பின்வரும் புறநானூற்றுப்பாடல் வழி அறியலாம்.
“அடுமகள் முகந்த வளவா வெண்நெல்” (புறம் 399:1-9)
இதில் வெண்ணெல்லைக் குற்றி எடுத்த அரிசியை உலையில் இட்டு சோறாக்கினாள் என்று உள்ளது.
விரிச்சிப் பெண்டிர்
விரிச்சி கேட்டல் என்பது நற்சொல் கேட்டல் என்பதாகும். முல்லைப்பாட்டில் பெருமுது பெண்டிர்,
“அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை” (முல்லை7-10)
அரிய காவலை உடைய ஊர்ப்பக்கத்தே போய் யாழினது ஒசையையுடைய இனமான வண்டுகள்
ஆரவாரிக்கும்படி நெல்லினோடே நாழியினிடத்தே கொண்ட நறிய பூக்களையுடைய முல்லையின் அரும்புகளில் அப்பொழுது மலர்வனவாகிய புதிய பூக்களைச் சிதறித் தெய்வத்தைக் கையாலே தொழுது, பெரிதும் முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்பர் என்பதாகும்.
முடிவுரை
சங்க மகளிர் மனையறத்தில் சிறந்தவர்களாக மட்டுமல்லாமல், குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது திண்ணம்.

தமிழ் இலக்கியங்களில் ஏறு தழுவுதல்

பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
ஏறுதழுவுதல்,  ஏறுகோள்,  மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு,  மஞ்சுவிரட்டு,  பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல  பெயர்களில்  தமிழர்களின்  வீர விளையாட்டாம்  ஏறுதழுவுதல்  அழைக்கப் பெறுகிறது. மானுட சமுதாயம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. தொடக்க காலம் முதல் இன்று வரையிலுமான மனித வரலாற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடரிணைப்பு இருப்பதனைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் அறிகின்றோம். அவ்வகையில் சங்ககாலச் சமூகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்வு இடம் பெற்றமையை கலித்தொகையிலும், இன்னுபிற சங்க இலக்கியங்களின் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இந்நிகழ்வு இன்றும் ‘சல்லிக்கட்டு’, ‘மஞ்சுவிரட்டு’ என்று அழைக்கப்பட்டு வழக்கில் உள்ளது. இந்நிகழ்வானது, ஆண்மகனின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. ஆனால் இன்றைய சூழலில் ஏறுதழுவுதல் நிகழ்வானது தன் அடையாளத்தினை இழக்கும் தருவாயில் உள்ளது. காரணம், அதனைச் செயல்படுத்தும் விதம். இந்நிகழ்வின் மைய நோக்கம் மறக்கப்பட்டு, இவ்வீர விளையாட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. பண்பாட்டுத்  திருவிழாவாகவும்,  மக்களின் சமயம்  சார்ந்த  திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. 

கலித்தொகையில் ஏறுதழுவுதல்
அனைத்து சமூக மக்களும் கூடி நிற்க, வலு மிகுந்த காளை பாய்ந்து வருகையில் ஆண்மகன் ஒருவன் தன் பலத்தால் அக்காளையின் திமிலைப் பற்றி அதன் வேகத்தை அடக்குதலாகிய இந்நிகழ்வே ‘ஏறுதழுவுதல்’ எனச்சுட்டப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்தே இந்நிகழ்வு நிகழ்த்தப்பட்டுவருகின்றது. சங்க இலக்கியமான ~கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகை’ எனும் சங்க இலக்கியமே இதற்குச்சான்றாகும். 
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும்தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்தஎருதுகளை  ஒன்றுடன்  ஒன்றுபொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின்  வெற்றியைத்  தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

“இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு  பொரூஉம்  கல்லென்  கம்பலை”’(மலைபடு.330-335)
என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
பொதுவாகக் காளை என்றால் நம் நினைவில் வருவது வீரம், இளமை இவை இரண்டுமேயாகும். அதனால்தான் ஓர் ஆண்மகனைச் சுட்டுகையில் ‘கட்டிளங்காளை’ என்று ஒப்புமைப் படுத்துகின்றோம். உலகளவில் காளை வீரத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றது. கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்திற்குப் பெயர் பெற்றவர்களான எகிப்தியர்கள் மத்தியில் காளைச்சண்டை இடம்பெற்றிருப்பதனை நாம் அறிய முடிகின்றது. “எகிப்தில் உள்ள பெனி-ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில் காளைப்போர் இடம் பெற்றுள்ளது". (அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், ப-62) 
தமிழ்ப் பெண் மறுபிறப்பு
சங்க காலத்திலேயே ‘ஏறு தழுவல்’ இருந்திருக்கிறது என்பதற்கான சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
எனும் அந்த வரியின் பொருள், “கொல்ல வரும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனைத் தமிழ்ப் பெண் மறுபிறப்பில் கூட மணக்க விரும்ப மாட்டாள்” என்பது. சிந்துவெளி நாகரிகம் மட்டுமில்லை, சங்க காலம் என்பதும் கிறித்து பிறப்பதற்கு முன்புதான் என்பது இங்கு நாம் உணர வேண்டியது.
சிந்துசமவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப்பங்கு வகிக்கின்றது. ஆகவேதான் இம்மக்கள் காளையினைத் தெய்வமாக வழிபட்டதனை அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிமுடிகின்றன. இந்தியப் பண்பாட்டின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் வாகனமாகக் காளை இடம்பெறுகின்றது. இப்படிப்பட்ட சிறப்பினைக் கொண்ட காளையினைக் கொண்டு ஏறு தழுவுதல் சங்ககாலத்தில் நிகழ்த்தப்பட்டிருப்பது என்பது உண்மையாகிறது. 

ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்
இலக்கியத் தொன்மையும், பண்பாட்டுத் தொன்மையும் கொண்டதே தமிழர் வரலாறாகும். இயற்கையுடனும் பிற உயிர்களிடமும் இணைந்தே சங்ககாலத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்றே ஏறுதழுவதல் நிகழ்வு. உலகின் பல பகுதிகளில் எருதுகளை மையமிட்ட நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளான ஸ்பெயின், மெக்ஸிகோ, போர்ஸிகோ, தெற்குப் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெறும் காளைப்போட்டிகள் நம் தமிழக ஏறுதழுவுதலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விநோதமானவையாகும்.
“ஏறுதழுவுவோன் சிலரின் உதவியோடு காளையினை அடக்கிக் கொன்றுவிடுவான்" (அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், ப-67). அதாவது ஒரு மைதானத்தில் கையில் சிவப்பு நிறத்துணியுடன் வீரனும், வலிமையான காளையும் களமிறங்குவர். காளையிடம் வீரன் தோற்க நேர்ந்தால் அவன் இறக்க நேரிடும். வீரன் வெற்றிபெற்றால் காளையினைக் களத்திலேயே கொன்றுவிடுவது இங்கு வாடிக்கையாகும். இதனால் உயிச்சேதம் ஏற்படுகின்றது. ஆனால் இதனை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. இங்குதான் நம் தமிழரின் உயர்ந்த அறம் பொற்றப்படுகின்றது. சங்காலத்தமிழர்கள் தோற்றாலும், வென்றாலும் காளைகளைக் கொன்றதாக வரலாறில்லை. இதுவே தமிழரின் அறம் போற்றப்படுகிறது. 
சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டுமே முதன்முதலாக ஏறுதழுவுதல் நிகழ்வு காணமுடிகிறது. முல்லை நில ஆயர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர். ஏறுதழுவல் குறித்து முன்னரே பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஏறுதழுவல் நடைபெறுகின்றது. முல்லை நில ஆடவர்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டு தன் வலுவினை வெளிப்படுத்தி காளையினை அடக்கி, அவளை அடைய முயற்சிப்பர். ஆதலின் முல்லை நில ஆடவர் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். முல்லை நில ஆண்கள் தம் ஆண்மையினைப் (வீரத்தினை) பரிசோதிக்கும் நிகழ்வாதலின் இது ஓர் கவுரவப்பிரச்சனையாகவும் அமைந்த ஒன்றாகும்.
“கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
புலலாளே,ஆயமகள்
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து
நைவாரே ஆயமகள்” (அ.விஸ்வநாதன், கலித்தொகை,ப-453)
முல்லை நில மகளிர் தம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்தினர் என்பதனை மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியலாம். ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். இதனை ‘ஏறுதழுவுதல்’ என இலக்கியங்கள் கூறுகின்றன. எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி ஓடும் வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாள். ஏனென்றால் வீரம் ஒன்றே ஆணுக்கு அழகு என்று எண்ணிய காலம் அதுவாகும். 
ஏறு  தழுவதற்கு  முன்பாக  அத்தொழிலில் ஈடுபடும்  இளைஞர்கள்  நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை  வணங்கி  முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். “முல்லை நில மகளிர் தம் குடிப்பெண் பருவம் எய்தியதும், தங்களிடமுள்ள ஒரு காளையை அவள்பொருட்டு ஊட்டச்சத்தான உணவுகளைக் கொடுத்து வளர்ப்பார்கள். பெண்ணிற்கு திருமண வயது வந்தவுடன், காளையும் திமிலுடன் தயாராக இருக்கும். அக்காளையை அடக்கும் வீரனுக்கே ஆயர் மகள் மணம் செய்விக்கப்படுவாள்” (எயசயடயசர.உழஅ) காளையையும், குழந்தையையும் ஒன்றாகக் கருதிய தமிழரின் மாண்பினை இதன் மூலம் அறியலாம்.
“கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்;
அவருள்,மலர்மலிபுகழ் எழ,
அலர்மலி மணிபுரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருந்தினான் மன்ற அவ் ஏறு” (அ.விஸ்வநாதன், கலித்தொகை,ப-446) 
கொலைவெறியுடன் ஓடிவரும் காளையின் முன்னே தம் மார்பினைக்காட்டி அதனைத் தழுவி அடக்க ஆர்வமுடன் முன்வரும் முல்லை நில ஆடவரின் வீரம் இங்கே புலப்படுகின்றது. அத்துடன் வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் ஏறுதழுவுதல் நடத்தப்பட்டிருக்கலாம்.
“மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்,
மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்பு போல
வான்பொறி பறந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்
வளையுபு மழிந்த கோடு அணி சேயும்,
பொருமுரண் முன்பின் புகல்ஏறு பலபெய்து-
அரிமாவும்,பரிமாவும்,களிறும்,கராமும்,
பெருமலை விடாரகத்து,ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரையகம் போலும்-
கொடிநறை சூழ்ந்த தொழூஉ” 
(அ.விஸ்வநாதன், கலித்தொகை,ப--451) 
பலவகையான காளைகள் கூரிய கொம்புகளுடன் தொழுவத்தினில் இருந்ததாகவும், அவை காண்பதற்கு சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் ஒருங்கே கூடி நிற்பது போல் காட்சியளிப்பதாகவும் மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியப்படுகின்றது. சங்ககாலத் தமிழர்கள் விலங்குகளைத் தங்களது உடைமையாகக் கருதி வளர்த்து வந்ததனை இதன் மூலம் அறியலாம். முல்லைக்கலி தவிர பட்டினப்பாலையில் ஓரிடத்திலும், மலைபடுகடாமில் (330-335) சற்று விரிவாகவும் ஏறுதழுவுதல் குறித்துச் சுட்டபட்டுள்ளது. இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலையில் ஒழிபியல் பிரிவில் ‘ஏறுகோள்’ குறித்துக் கூறப்பட்டுள்ளது. இதற்கான கல்வெட்டுச்சான்றுகளும் கிடைகின்றன. “சேலம் மாவட்டம் பெத்தனாயக்கன் பாளையத்தில் எருதுவிளையாடி மரணம் அடைந்த ஒருவன் பற்றி அங்கு கிடைக்கப்பெற்ற நடுகல்ச் செய்தி எடுத்துரைக்கின்றது. மேலும், வாசகமின்றி உருவம் மட்டுமே உள்ள அர்த்த சித்திர வடிவக் கல்வெட்டுக்கள் தருமபுரி மாவட்டத்தில் ஏராளமாகக்கிடைக்கின்றன” 
(அ.விஸ்வநாதன், கலித்தொகை,ப- ப-65).
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் கொள்ளப்படும்”( புலவர்.அரசுமணி, திருக்குறள்,ப-24)
நமது ஒவ்வொரு செயலும் நமது பின்புலத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகும். சங்க காலத்தில் ஏறுதழுவி வெற்றி பெறுபவற்கு பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று அவ்வழக்கம் இல்லை. மாறாக பணமும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் ஏறுதழுவுதலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 2000 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இவ்வீரதீரச்செயல் நம் அலட்சியத்தாலும், குறுக்குப்புத்தியாலும் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று நாம் செய்யும் சிறு தவறுகளால் நம் முன்னோர்களின் பண்பாடுகள் பொய்யுற்றுப்போக நேரிடும். சங்க காலத் தமிழர்கள் ஏறுதழுவும் போது காளையினைத் துன்புறுத்தியோ, வதைசெய்தோ இன்புறவில்லை. ஆனால் இன்று ஏறுதழுவும் முன் காளைக்கு மதுவினை கட்டயப்படுத்தி அளித்தும், நிகழ்வின் போது காளையினை துன்புறுத்தியும் வருகின்றனர். இதுதவிர இந்நிகழ்வின் போது சாதிச்சண்டைகள் நிகழ்வது அண்மைக் காலங்களில் வழக்கமாகிவிட்டது. எனவேதான் இந்நிகழ்விற்குத் தடை விதிக்க வேண்டி மிருகவதைத்தடுப்பு ஆர்வலர்கள் முறையிடுகின்றனர். தமிழர்களிடம்  எஞ்சியிருக்கும்  பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும்  கொண்டு  சேர்க்கப்பட வேண்டும்.எனவே நம் முன்னோரின் பழக்கவழக்கங்களையும், அறங்களையும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கவிஞர் மனுஷியின் கவிதைகள் நிலத்தில் புரளும் நினைவுக்குறிப்புகள்

பேரா. முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-641 035.
பேச : 098438 74545. 

1985–ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி. இவரது இயற்பெயர். ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ (2013) இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘முத்தங்களின் கடவுள்’ (2014) இரண்டாவது தொகுப்பு. “ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்” (2015) மூன்றாவது தொகுபப்பு. இவரது சில கவிதைகள் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளன. எளிமை, சுய சிந்தனை வழிப்புதுப் படிமங்கள், புனைவு, காதல், வாழ்க்கை பற்றிய துயரங்கள் என விரிகின்றன. 
வரலாற்று நோக்கில் பெண்களின் சமுக நிலையை நோக்கும் பொழுது சமுதாயத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருத முடிகிறது. தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும், பெண்களுக்கு என்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன.
கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாறுதல்களான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டாயிரத்திற்கு பிறகாக நம் வாழ்முறையில் பெரும் மாறுதலை விளைவித்திருக்கின்றன. கிராமம் தன் சாயலை இழப்பதை சிறு உச்சுக்கொட்டுதலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இயற்கை குரூரமாக வேட்டையாடப்படுவதை ரசிக்கப் பழகியிருக்கிறோம், மண்ணோடு வாழ்ந்தவர்களின் வாழ்வாரம் சிதைக்கப்படுவதற்கு மௌனசாட்சிகளாகியிருக்கிறோம். மண்ணும் மலையும் மலடாக்கப்படுவதின் சூட்சுமத்தை இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம் இரண்டாயிரத்திற்கு பிறகான வாழ்முறை மாறுதல்களுக்கு இணையான வேகத்தில் தமிழ்க்கவிதையின் போக்கு பாய்ச்சலை சந்தித்திருக்கிறதா என்று வினாவை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளலாம். அதற்கான பதில் இல்லை என்றே இருக்கும். சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளில் கவிதை தன்னளவில் மாறுதலைச் சந்தித்திருக்கிறது, தான் ஆனால் அது மெதுவான அதே சமயம் சீரான மாறுதல், வாழ்முறை மாறுதலின் வேகத்திலும் பரிமாணத்திலும் ஒப்பிடும் போது கவிதையில் நிகழ்ந்திருக்கும் மாறுதல் மிக மிகக் குறைவு.
கவிதையின் மொழியில், கட்டமைப்பில், பாடுபொருளில் தனித்துவத்தோடு இயங்கும் கவிதைகளை சமகாலக் கவிஞர்கள் கண்டடைந்திருக்கிறார்கள் என்றபோதிலும் இந்தக் காலகட்டத்தில் கவிதை ‘புதிய இயக்கமாக’ உருப்பெற்றிருக்கவில்லை. பெரும்பாலும் யதார்த்தம், மாய யதார்த்தம், கவிதையினுள் புனைவு போன்றதான ஏற்கனவே கண்டறியப்பட்ட கவிதையியல் சார்ந்த தளங்களில் மட்டுமே தன்னை நகர்த்தி பரிசோதனை செய்து கொண்டிருக்கும் கவிதை மெதுவாகவே தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கவிதை கடந்து வந்திருக்கும் சீரான மாறுதல்களில் குறிப்பிடத் தகுந்த அம்சமாக அவ்வப்பொழுது கவிதை தன் நிலம் நோக்கித் திரும்புதலைக் குறிப்பிடலாம். கவிதை சொல்லியின் நிலம் என்பதில் பால்யம் குறித்தான அவனது மனச்சித்திரம், இழந்துவிட்ட அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து வாழ்க்கை முறைகள், மண் சார்ந்த வாழ்வியல் போன்றவற்றின் பதிவுகளை குறிக்கலாம். கவனமாக குறிப்பிட வேண்டுமானால் கிராமம் குறித்தான கவிதைகள் மட்டுமே நிலம் நோக்கி திரும்புதல் இல்லை- மாறாக மாயவெளிகளிலும் அந்தரதளங்களிலும் அலையும் கவிதை தன் கால்களை அசல் வாழ்க்கை முறையின் நிலத்தில் ஊன்றுவது. அது மிக அரிதாகவே தமிழ்க்கவிதைகளில் நிகழ்கிறது.
‘உயிhமை’ வெளியீடாக வெளிவந்திருக்கும் மனுஷியின் “ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்” கவிதைத் தொகுப்பு நம் நிலம் நோக்கி திரும்பும் கவிதைகளின் பிரதியாக இருக்கிறது.  
கவிதைக்கென நம் மனம் பழகியிருக்கும் மொழியிலிருந்து விலகி வேறொரு மொழியமைப்பில் இயங்குகின்றன இக்கவிதைகள். கவிதை மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை வரையறைகளும் உடைத்தெறியப்படுதலை ஏற்றுக்கொள்ளும் வாசக மனதினால் இந்தக் கவிதைகளை நெருங்க முடிகிறது. இதுவே தொகுப்பின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. பலம் என்பது மனுஷியின் மொழியின் தனித்துவத்தை முன்னிறுத்தி குறிப்பிடப்படுவது. பலவீனம் என்பது இதுவரை கண்டடையப்பட்ட கவிதைக்கான மொழியோடுதான் கவிதை இருக்க வேண்டும் என்பதில் இல்லை - மொழியில் தவறவிட்டுவிட்ட கவித்துவம். அது இந்தத் தொகுப்பில் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. 
கிராமம் சார்ந்த வாழ்க்கை முறையில் எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அம்மனிதர்களின் வெக்கைகளும் இக்கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. உப்பங்காற்று சுழித்துசுழித்தடிக்க கோடையுழவால் பெருங்கடன்களை சுமக்கத்துவங்கும் விவசாயி, மூத்திரத்தின் கவிச்சவாடை நுகர்ந்தே இளமரியை தேடும் கிடாரிகள், இலந்த பழ முள்ளின் ஊக்கி தொக்கி நின்ற சதை ஆகியனவற்றை கவிதைகளில் வாசிக்கும் போது நாம் இழந்துவிட்ட அல்லது இழந்து கொண்டிருக்கும் இன்னொரு உலகம் நமக்கு மௌனமாக கண்ணாமூச்சி ஆடத்துவங்குகிறது.
‘சந்திப்பின் கணங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை...
“உன் வருகைக்காக 
அவ்வளவு ஆவலோடு காத்திருந்தேன் 
பகலையும் இரவையும் 
எண்ணி எண்ணி 
கனவுகளுக்குள் பதுக்கி வைத்தேன்.
நட்சத்திரங்கள் மினுக்கித் திரிவதைப் போன்ற 
உன் சிரிப்பொலியை 
உன் கண்கள் பார்த்தபடியே 
கேட்க எண்ணியிருந்தேன்.
பேசிப் பேசித் தீராத 
உரையாடலைச் சுமந்தபடி
விடைபெற்றுச் செல்கையில் 
கட்டியணைத்து 
வழியனுப்பி வைக்க நிணைத்தேன்.
மணல் வீட்டைப் போல் 
சிதைந்து கிடக்கிறது 
நம் சந்திப்பிற்கான கணங்கள்      
இந்த மாமழைக்காலத்தில்.
மிக இயல்பாய் கடந்து விட்டாய் 
அதன் சுவடுகளை.
காகிதக் கப்பலோடு 
என் வாசலருகே நிற்கிறேன் 
நான்” -பக்:16

என்ற கவிதை மனதின் அதிதக் காதலின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.  இத்தகைய பலவீனங்கள் மனுஷியின் கவிதைகளில் தென்படுகின்றன.  
கவிதையின் வரிகளில் சொற்களுக்கு கவிஞன் தேர்ந்தெடுக்கக்கூடிய இடம் கவிதை வாசிப்பை எளிமையாக்குவதோடு, கவிதையின் தெளிவையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சொல் முந்தைய வரியில் இருக்க வேண்டுமா அல்லது அடுத்த வரியில் இருக்க வேண்டுமா என்பது கவிஞனின் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கவிதையியலில் சொற்களின் இடஅமைவுக்கான முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல்களை பட்டியலிட்டவர் கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.
“மூன்றோ ஐந்தோ என இம்சைப்படும்
தினங்களில்
நடந்து விடாதே
உன் தனியிடம் தவிர
இன்னொரு மூலைக்குச் கூட.
இந்த நாட்களில்
நீ கிடைத்த நேரமெல்லாம்
தூங்குகிறாய்
அல்லது துன்பப்படுகிறாய்.
குறைந்தபட்சம் ஒரு குட்டிப்பிச்சைக்காரி
ஆகி விடுகிறாய்
நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்.
கால் குடைச்சல் என்றாலும்
மரியாதைக்கு பயந்து
மாமியாருக்கு எழுந்து நிற்க வேண்டும்.
நடக்கப்பழகும் குழந்தைக்கு
கை கொடுத்து கால் ஆகணும்.
ஆனால்
உதவி செய்ய ஆளில்லாமல்
மாதாந்திர தொல்லைகளில்
சமைக்கும் சமையல்
தேவையானது எல்லோருக்கும்.
இன்னொரு முறை தள்ளிப்போவது தெரிந்தால்
சந்தோஷம் கொள்ள முகமிருக்குமா?
முகம் கறுத்து
‘போதும் கலைத்து விடு’
என்று சொல்லப் பக்கத்து வீட்டில் கூட
ஆட்கள் இருக்கக் கூடும்
நானோ சமைத்த பின்
தனியிடம் செல்வேன்.
அவர்களெதிரே டி.வி.யில்
விளம்பரத்திற்காய் ளுவுயுலு குசுநுநு யுடன்
நடக்கும் சிரிக்கும்
இளம்பெண்”  
என பெண்களின் தொடர் உபாதைகளை, எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாய் கவிஞர் எடுத்துரைத்துள்ளார். பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளே இவைகள். இது பெண்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பாகவே சமூகம் பின்பற்றி வருகிறது. கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் குரல் மென்மையானது. எதிர்ப்பிலும் தீவரமில்லை. ஆனால் ஓர் உறுதி வெளிப்படுகிறது.   
கவிதையும் கவிதைக்கான தேடலும் ஒரு கணத்தில் நின்று விடுவதில்லை என்பதை அறிய முடிகிறது. சாதியத்தை உடைத்தெறியும் கவிதைகளை மனுஷியின் கவிதைகளில் காண முடிகிறது. ‘மதிப்பீடுகளுக்கு அப்பால்’ என்ற தலைப்பிலான கவிதையில் மனுஷி கூறுவதைக் காணும் போது மனம் பதைக்கிறது...
“ஒருவேளை நீங்கள் 
கருதுவது போல் 
நான் கவுண்டச்சி அல்ல என்று தெரிந்தால் 
நீங்கள் முகம் சுளிக்கலாம்
என்னுடனான உரையாடலைத் 
தண்டித்துக் கொள்ளலாம் 
உங்கள் சிறுவயது மகனிடமோ 
மகளிடமோ 
சொல்லி 
அவர்களை என்னிலிறுந்து 
விலகியிருக்கச் செய்யலாம்
என் கையால் கொடுக்கும் 
தின்பண்டங்களை வாங்க மறுக்கலாம் 
அவள் ஒரு சேரிப் பெண் 
அவளோடு எதையும் புழங்காதே என 
எனக்கு அறிவுறுத்துவதை 
நிறுத்திக் கொள்ளலாம் 
வீட்டுக்குள் அழைத்தது பாவம் 
என 
குற்றவுணர்ச்சியில் தத்தளிக்காலம் 
என்மீதான காதலையோ 
நட்பையோ
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் 
என் கவிதைகள் கூட 
தீட்டுக்கு உரியதாகலாம் 
இனி.
வருத்தத்துடன் சொல்கிறேன் 
கவுண்டச்சியாய் தான் இருப்பேன் 
என்ற 
உங்களின் எதிர்பார்ப்பை 
என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை 
என் நிறத்தை வைத்து 
என் தலைமுடியை வைத்து 
என் பேச்சை வைத்து 
என் நடையுடை பாவனைகளை வைத்து 
ஒரு சாதிக்குள் 
அடைத்து விடாதீர்கள் 
சாதிக்கும் மதத்துக்கும் அப்பால் 
நான் பெண்ணாக இருக்கிறேன் 
ஆம்
உங்கள் மதிப்பீடுகளுக்கு அப்பால்” -பக்.57

என பெண்களின் தொடர் உபாதைகளை, எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாய் கவிஞர் மனுஷி எடுத்துரைத்துள்ளார்.

பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை. இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் சாத்தியமாகியுள்ளது. 
ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம். பெண் உரிமையே கோரிக்கை. பெண் சமத்துவமே தேவை. 
பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட கவிதைகள் பிரச்சனைகளை, சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை. எதிர்க்கவும் அஞ்சவில்லை. 
பெண்ணுக்கான விடுதலை, உரிமை, சுதந்திரம், சமத்துவம் வெகு தூரத்தில் இல்லை என்பதையே பெண் கவிஞர்களில் கவிதைப்படைப்புகள் கட்டியங்கூறுகின்றன. ஆயிணும் அவைகைளை பெண் சமூகம் விரைவில் பெற பெண்ணியப் படைப்புகள் அவசியம் ஆகிறது. அத்தகைய பெண்ணியப் படைப்புகளுக்கு நவீன இலக்கியமே களமாக உள்ளது.






குடும்பவிளக்கு சித்தரிக்கும் எண்ண ஓட்டங்கள்

பேரா. முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-641 035.
பேச : 098438 74545.

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பாவேந்தரின் படைப்புகளில் தனிச்சிறப்புடையது குடும்பவிளக்கு. இக்காப்பியத் தலைவி தங்கம். தலைவர் மணவழகர். இவர்கள் வாயிலாகப் பாவேந்தர் புலப்படுத்தும் மகளிர் எண்ணங்களை  இக்கட்டுரையில் தொகுத்துக் கூறப்படுகின்றன.   
வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப்பகுதி எடுத்துரைக்கின்றது என்றும், குடும்பவிளக்கில் வரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள். வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும்;. மாக்கடலிடையே கலம் (கப்பல்) ஓட்ட வேண்டும்; ஒரு கையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் என்று போற்றுவார்கள். மணவழகரின் பெற்றோர், மணவழகர், தங்கம், இவர்தம் மக்கள் வேடப்பன், வெற்றிவேல், வேடப்பன் மனைவி நகைமுத்து, இவர்தம் மக்கள் அமிழ்து, சேரன் என நான்கு தலைமுறை இலக்கியமாகத் திகழ்வது குடும்பவிளக்கு. 
“பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சாரல். தொ.1)
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!” (பாரதிதாசன் கவிதைகள்)
என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன்.
ஆனால் அது என்னவோ தெரியவில்லை, பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு இதோ இதை எழுதும் இந்த நிமிடம் வரை நேற்றைய என் மறுவாசிப்பு வரை அப்படியே மாறாமல் இருப்பது மட்டுமல்ல, சில நெருடல்களையும் ஏற்படுத்தவே செய்கின்றன. 
பாரதிதாசனின் இலட்சியப் பெண், குடும்பவிளக்கு எப்படி சித்தரிக்கப்படுகிறாள் என்பதைக் காண்போம்.
“யாழின் உரையினை எடுத்தாள்
இசையில் ‘வாழிய வையம் வாழிய’ என்று
பாவலர் தமிழில் பழச்சுவை சேர்த்தாள்;.
தீங்கிலாத் தமிழில் தேனினைக் கலவை போய்த்
தூங்கிய பிள்ளைகள் தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்”
கமழக் கமழத் தமிழிசை பாடினார் பாரதிதாசன்
அதிகாலையில் எழுந்திருக்கிறாள்
பாரதிதாசன் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை எதிர் நோக்கினார். முதலில் பெண் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சிறுபருவத்திலேயே பெண்ணுக்குக் கல்வி அறிவு தரப்பட வேண்டும்.
“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன்அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?” (இசையமுது)
என்று தந்தை கேட்பதாகக் கவிஞர் பாடுகின்றார்.
பெண் ஓவியம் கற்க வேண்டும்;, காவியம் கற்க வேண்டும்;, கவிதை எழுதி உலக அமைதியை அதன் வழி உருவாக்க வேண்டும். பாவேந்தர் இவற்றோடு நிற்கவில்லை. மங்கைப்பருவம் அவள் எய்தும்போது தனக்குரிய மணமகனைக் காட்டித் ‘தேவை இவன்’ எனக் கூற வேண்டுமாம்! கல்வி கற்றவளாக, காதல் தலைவியாக மட்டும் இருந்தால் போதுமா? வீரத்தாயாக விளங்குதல் வேண்டும்; குடும்ப விளக்காக ஒளிவிட வேண்டும்.
“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!” (இசையமுது)

என்று பாரதிதாசன் பெண்ணுக்கு இன்றியமையாத பண்புகள் என்று கூறப்பெற்ற அச்சம், மடமை ஆகியவற்றை உதறித் தள்ள வேண்டுகிறார். பெண் அச்சம் மடம் கொண்டவளாக இருந்தால், நாடாளவும், விண்வெளியில் பறக்கவும் இயலுமா? கவிஞர் கண்ட மகளிர் வாழ்வியலில் மூன்று நிலைகளை வரும் பகுதிகளில் காண்போமா?
வீரத்தாய்காட்சி
தாய்மார்கள் வீரமுடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் வீரமிக்க பிள்ளைகள் நாட்டில் தோன்றுவர். பண்டைக்கால மகளிரிடையே தந்தையையும், கணவனையும் போரிலே பறிகொடுத்த (தையல்) பெண் ஒருத்தி தன் இளம் மகனைத் தலைவாரி வெள்ளை உடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் என அறிகிறோம். மற்றொருத்தி தன்மகன் போரில் புறமுதுகு காட்டினான் என்று கேட்டு அவ்வாறாயின் அவனுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுத்து எறிவேன் எனச் சூளுரைத்துப் போர்க்களத்தில் பிணமெல்லாம் புரட்டித் தன்மகன் மார்பிலே புண்பட்டு வீரச்சாவு கொண்டதறிந்து அவனைப் பெற்ற பொழுதை விட அப்பொழுது மகிழ்கிறாள் எனப் படிக்கிறோம். பாரதிதாசன் இந்தப் பரம்பரையை மறுபடியும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். கவிஞர் படைப்புகளில் ‘வீரத்தாய்’ என்ற ஒரு சிறிய காவியம் உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இராணி விஜயா பொய்த்தாடி அணிந்து முதியவராய் மாறுவேடம் பூண்டு மகன் சுதர்சனுக்குப் போர்த்தொழில் கற்பிக்கிறாள். வஞ்சக நெஞ்சம் கொண்ட சேனைத்தலைவன் இளவரசனைக் கொல்வதற்கு ஓங்கிய வாளைத் தன் வாளால் பந்தாடுகின்றாள். தக்க சமயத்தில் தன் மாறுவேடம் களைந்து தான் யாரென்று காட்டுகின்றாள்.
“தாடியும் பொய்! என்றன் தலைப்பாகையும் பொய்யே!
கூடியுள்ள அங்கியும் பொய்! கொண்ட முதுமையும் பொய்!
நான் விஜயராணி!” (வீரத்தாய் தொகுதி : 1)

என்று அரசி தன் முன்னே கூடியுள்ள மன்னர்களின் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ காவியத்திலும் அரசி வாளேந்தி வருபவளாகச் சித்தரிக்கப்படுகின்றாள்! கதிர்நாட்டின் அரசியான அவள் வஞ்சகம் புரிந்த தன் உடன்பிறந்தான் நரிக்கண்ணனை வாள் கொண்டு மாய்க்க வருகின்றாள். நரிக்கண்ணன் தன் உடன்பிறந்தாளின் கணவனை மறைந்து நின்று வேலெறிந்து கொன்று விடுகின்றான். அரசி களத்துக்கு வருகின்றாள். மன்னன் இறந்து கிடப்பது அறிந்து துயரப்படுகின்றாள். இறந்த கணவனின் உடம்பைத் தடவிப் பார்க்கிறாள்.
“தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்
தலைகுனிந்தாள்! அப்பிணத்தை நிலத்திற்போட்டாள்”
அதோடு மட்டுமா? ஐயகோ! முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழா நின் தமிழ் நெஞ்சம் என்கின்றாள். தாய்மாரைச் சித்தரிப்பதில் பாரதிதாசன் இவ்வாறு தனித்தன்மை காட்டுகிறார். பாரதிதாசனின் வீரத்தாய்மார்கள்
போரிடுவார்கள்.
புகழுக்காக உயிர் கொடுப்பார்கள்.
முதுகிற் புண்பட்டுச் சாவதைப் பொறுக்க மாட்டார்கள்.
ஆண்களைவிட அறிவுக் கூர்மையும், வீர உணர்வும் மிக்கவர்களாகத் திகழ்வார்கள்.
காதல் தலைவி
பாரதிதாசனின் படைப்பில் இளம்பெண்கள் உரிமை மிக்கவர்கள். சமுதாயக் கட்டுகளை, ஆடவர்களைத் தாண்டிவந்து உடைப்பவர்கள். குறத்தி ஒருத்தி தன் காதலனிடம் பேசுகிறாள் பாருங்கள்!
மோதவரும் ஆணழகே வாவா வாவா
முத்தம்வை இன்னொன்று வை இன்னொன்ற (காதல் நினைவுகள்)
இப்படிப்பட்ட காதல் தலைவியை எந்தக் கவிஞனும் காட்டவில்லை. பெண்களை ஊமையாகவும், செயலற்றவளாகவும், அழகுப் பதுமையாகவும், அச்சம், நாணம் என்ற பண்புகளின் இருப்பிடங்களாகவும் உருவாக்கும் மரபைக் கவிஞர் உடைத்தெறிந்தார். உன் காதலன் என்ன சாதி என்று கேட்டனராம் பெற்றோர். அதற்கு அவள் தன் தோழியிடம் கூறும் விடையைக் கேளுங்கள்!
“இந்தாடி அன்புள்ள தோழி - எனக்கு
எப்போது அடங்கும் சிரிப்பு
வந்தவன் ஆண்சாதி என்றால் - அவனை
மணந்தவள் பெண்சாதி தானே!” (தொகுதி : 4 காதல் கவிதைகள்)

என்கின்றாள். சாதிப் பாகுபாட்டைப் பாரதிதாசன் தலைவியர் பொருட்படுத்துவதே இல்லை. ‘எதிர்பாராத முத்தம்’ என்ற காதல் காவியம் கவிஞரால் இயற்றப்பட்டது. அதில் தலைவன் பொன்முடித் தலைவி பூங்கோதை. தலைவி பூங்கோதை தன் காதலனுக்கு எழுதும் 
“பழத்தோட்டம் அங்கேத் தீராப்
பசிகாரி இவ்வி டத்தில்!” (எதிர்பாராத முத்தம்)
கடிதத்தில் என்று எழுதுகிறாள். பெண் தன் மனத்தில் உள்ள காதலை இப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று காட்டியவர் பாரதிதாசன். ‘புரட்சிக்கவி’ என்ற குறுங்காவியத்தில் இளவரசி அமுதவல்லி கவிஞன் உதாரனிடம் காதல் கொள்கிறாள். அவன் தயங்குகிறான்;. நாடாளும் வேந்தன் மகளை நாம் காதலிக்கவில்லை என்று தயங்குகிறான். அமுதவல்லி அவனுக்குத் துணிவூட்டுகிறாள்;, காதலிக்கத் தூண்டுகிறாள். வருணம், சாதி, செல்வம் என்றெல்லாம் பாராமல் பாரதிதாசன் தலைவியர் காதல் பயிர் வளர்க்கின்றார்கள்.
குடும்பவிளக்கு
பெண்ணே குடும்பவிளக்கு எனக் கூறத்தக்கவள். ஏனெனில் அவளே கல்வியும் அறிவும் சிந்தனையும், திட்டமிட்டுச் செயலாற்றும் திறமும் படைத்தவள் என்று பாரதிதாசன் கருதினார். ‘குடும்பவிளக்கு’ படித்தவர் யாரையும் விடாது பிணிக்கும் தேன்தமிழ் ஏடு. குடும்பவிளக்கான தலைவி தங்கத்திற்கு என்ன பணிதான் தெரியவில்லை! அவள்
பாத்திரம் துலக்குகிறாள்
பால் கறக்கிறாள்
வீட்டைத் தூய்மை செய்கிறாள்
வீணையில் தமிழ் இசைக்கிறாள்
குழந்தை வளர்க்கிறாள்
கணவனைப் பேணுகிறாள்
கடையில் வணிகம் செய்கிறாள்
துணி தைக்கிறாள்
தமிழ்ப்பணி செய்கிறாள்
கல்வி கற்பிக்கிறாள்
தச்சு வேலைகள் புரிகிறாள்
பற்பல பணிகளைப் புரியும் அவள் பல கலைகளும் அறிந்தவளாக இருக்கிறாள். தங்கத்தின் மகன் வேடப்பன்;, மருமகள் நகைமுத்து. இருவரும் இனிய இல்லறம் நடத்துகின்றனர். ஓர் இரவில் நகைமுத்து தன் குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தூங்குகிறாள். வலக்கை அவளுக்குத் தலையணை ஆயிற்று. இடக்கை குழந்தையின் மேலே வில்லைப்போல் வளைந்து பாதுகாப்பாக இருக்க அவள் தூங்குகின்றாள். வேடப்பன் நள்ளிரவில் எழுந்தான். நகைமுத்து அருகே குழந்தை தூங்கக் காண்கிறான். அவள் இடக்கை கூடாரமாகக் குழந்தையை வளைத்திருப்பதைப் பார்க்கிறான். “என்ன இது! ஒருநூல் புரண்டால் கூடப் போதுமே! குழந்தை நசுங்கிவிடுமே!” என்று கருதி அவளை எழுப்ப நினைக்கின்றான். நகைமுத்து தன் கூந்தலிலிருந்து அகற்றிய ஒரு மலர்ச்சரத்தை எடுத்து வேடப்பன் அவளுடைய முகத்தில் போடுகிறான். அவள் கண் விழிக்கவில்லை. மலர்ச்சரத்திலிருந்து ஒரே ஒரு மலர் இதழை எடுத்துக் குழந்தையின் மீது போடுகின்றான். தூங்கிக் கொண்டிருக்கும் நகைமுத்தின் கை மலர் இதழை நீக்கி விட்டு மறுபடியும் கூடாரமாய் வளைகிறது. குழந்தையைப் பாதுகாக்கும் தாய்மை ஆற்றலைக் கண்டு தாய்மையை வணங்குகின்றான். இவ்வாறு குடும்பவிளக்குப் பெண்ணின் பெருமையைப் போற்றுகின்றார் பாரதிதாசனார்.
தமிழ்மொழியில் கற்க வேண்டும். தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழ்ச் சமூகம் வாழும் என்றெல்லாம் அவள் பேசுவதாகக் காட்டிவிட்டு, அவளுக்கான வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் பட்டியலிடும் போது இயல்பாகவே வாசகன் “தங்கம் போல ஒரு பெண் இருந்தால் தான் குடும்பவிளக்கு” என்று எண்ணத் தொடங்கிவிடுகிறான். இந்த எண்ணத்தின் வளர்ச்சிதான் இன்று பெண் எந்த நிலைக்கு கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் வீட்டுப் பொறுப்புகள் எதையும் அவள் விலக்கி வைக்க இயலாத அவல நிலையைப் பார்க்கிறோம். வீட்டுப் பொறுப்பு என்பது எப்போதுமே பெண்ணுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. ஆணுக்கு நிகராகவோ, பல வீடுகளில் அதிகமாகவோ பெண் சம்பாதித்தாலும் கூட வீட்டுப் பொறுப்புகளையும் அவளே முழுமையாகச் சுமந்தாக வேண்டி இருக்கிறது. வீட்டு பொறுப்புகளைச் சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்படும் போது அதுவே ஒரு குற்ற உணர்வாகி பெண்களை அலைக்கழிக்கிறது. 

சிந்தனைக்கவிஞர் கவிதாசன் கவிதைகளில் சுய முன்னேற்றச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா 
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-641 035.
பேச : 098438 74545. 
“லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல
லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம்” 
சமூகம் குறித்த அக்கறை கொண்ட கவிஞர்களின் கவிதைகள் காலங்காலமாய் மனிதனுக்கு நீதி புகட்டிக் கொண்டே இருக்கின்றன. மனிதனுக்கு எளிதில் விரைவில் கருத்துக்களைக் கூற கவிதை வடிவம் மிகச் சிறந்த ஊடகமாய் உதவுகிறது. “கவிதைக்கு உடலும் உயிரும் உண்டு. உடல் கவிதையின் வடிவம். உயிர் அதன் உள்ளடக்கம். இவை இரண்டும் பொருத்தமுற அமையும் போது தரமான கவிதை என்று பெயர் பெறுகிறது” அவற்றில் சுயமுன்னேற்றம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் காணலாகும் சுய முன்னேற்றச் சிந்தனைகளை இக்கட்டுரை காணலாம். 
முருகேசன் என்கிற கவிதாசன்
கோயம்புத்தூர் கந்தேகவுண்டன் சாவடியில் 1962 ஆம் ஆண்டு சுப்பண்ணன்,மயிலாத்தாள் இவர்களுக்கு பிறந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளிகளில் படித்து தன்னுடைய கல்லூரி பயணத்தை 1982 ஆம் ஆண்டு கோவைஅரசு கல்லூரியில் துவங்கினார். பெற்றோர்கள் பெரிய படிப்பாளிகள் இல்லை ஆதலால் இவர் தலைமுறைகளில் இவர்தான் முதல் பட்டதாரி.  
மாநில அளவில் இவரது கவிதை முதல் பரிசைப் பெற்றது, அப்போது அந்த நிகழ்சியின் தொகுப்பாளர் பேசுகையில்: 
“பாரதிக்கு தாசன் ஆனான் கனகு சுப்புரத்தினம்
கண்ணனுக்கு தாசன் ஆனான் முத்தையா
கவிதைக்கு தாசன் ஆனான் முருகேசன்”
என்று கூறினார். ஆம் அந்த முருகேசன் தான் நம் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். பின்னாளில் இவரது சிந்தனை மிக்க கவிதை வரிகளும் கம்பீரப் பேச்சும், நாடெங்கிலும் பரவி மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கொடுத்தது. பெரும்பாலான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இவர் எண்ணற்ற சாதனைகளையும் படைத்துள்ளார் மற்றும் இவர் எழுதிய சுய முன்னேற்ற கட்டுரை நூல்களும், எண்ணற்ற கவிதை நூல்களும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. எண்ணற்ற புகழுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான இவர்
“வெற்றி என்பது முடிவல்ல அது ஒரு பயணம்”
“லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல
லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம்”
என்று சொல்வது இவரது தனிச்சிறப்பு.
சுய முன்னேற்றக் கூறுகள்
“திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும்
திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும்.”

ஒரு மனிதன் போராட்டம் நிறைந்த இவ்வுலகில் வெற்றி பெற்று முன்னேறப் பல படிநிலைகள் உள்ளன. மனித வளம் உள்ள தனிமனிதனோ, சமூகமோ தான் முன்னேற இயலும். “மனிதன் தனியாக அல்லது குழுவாக இணைந்து செயல்பட்டு, தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னை சேர்ந்தவர்களும் முன்னேற உதவுதலாகிய செயல்பாடே மனித வளம் எனப்படும்” மனிதவள மேம்பாடைந்து முன்னேறுவதற்குப் பல கூறுகள் காரணிகளாக உள்ளன. அவற்றில் கவிதாசன் கவிதைகளில் காணலாகும் முயற்சி, பயிற்சி, திட்டமிடல், உழைப்பு, தன்னம்பிக்கை, தோல்வியை எதிர்கொள்ளல் என்ற கூறுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
முயற்சியும் முன்னேற்றமும் 
முயற்சியே முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆகும். முயன்று கொண்டே இருக்கும் மனிதன் கட்டாயம் ஒரு நாள் முன்னேறுவான்.
“முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் 
உன்னைச் சிறைப் பிடிக்கும்!
எழுந்து நடந்தால் எரிமலையும் 
உனக்கு வழி  கொடுக்கும்!”

சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் எனத் தினந்தோறும் முயற்சி செய்யச் சொல்கிறார் கவிஞர். தானாகவே வெற்றி வந்து சேரும் என்று எண்ணிச் சோம்பி இருக்கும் மனிதர்களை நோக்கி,
“கடவுள் உனக்கு
முகவரிகளைத் தான் தருவார்
நீதான் போய்
கதவுகளைத் தட்;ட வேண்டும்” 
என முயற்சியின் இன்றியமையாமையைக் கவிஞர் கூறுகிறார்.
முயலாமையால் தோல்வி தான் வரும். முயற்சியினால் பெருவெற்றி பெறலாம் என்பதனை,
“முயல் ஆமையிடம் தோற்றதற்கு
என்ன காரணம்
முயலாமை
முயற்சித்துக் கொண்டே இரு!
ஒரு நாள் உன் உச்சந்தலையில்
மேற்குவானம் இடிக்கும்” 
என எடுத்துரைக்கிறார்.

நட்பு
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் இன்று  உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க  முடியாது அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !
“உப்பில்லாமல்  கூட உயிர் வாழலாம் - ஆனால் 
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது!”
முற்றிலும் உண்மை! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் இதுதான் படைப்பாளியின் வெற்றி. சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார்? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய  வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது பாராட்டுக்கள் சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது நம்மை புரட்டும் புத்தகம். 
பயிற்சி
எந்த ஒரு செயலையும் பயிற்சியின் மூலம் எளிதாகச் சாத்தியமாக்க இயலும். பயிற்சி இருந்தால் எந்தவொரு துறையிலும் வெற்றிக் கனியைப் பறிக்கலாம்.
“முடியாது என்று முடங்கிவிட்டால்
மூச்சுக் காற்றும் நின்றுவிடும்
முடியும் என்று துணிந்து விட்டால்
மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்”

“அவமானப்படுகிறபோது ஒரு அவதாரம் எடு
வீழுகிறபோது விஸ்வரூபம் எடு
புண்படுகிற போது புன்னகை செய்
யாரேனும் உன்னை ஏதேனும் சொன்னால்
அவர்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாதே
வாழ்ந்து காட்டு”
என்ற வரிகளின் மூலம் பயிற்சியே ஒரு சிறந்த சாதனையாளரை உருவாக்கும் என்று எடுத்துரைக்கிறார். தேர்வோ, போட்டியோ, பயிற்சி பெற்று சென்றால் தான் வெற்றி நிச்சயம். பயிற்சி இல்லாத ஆர்வம் செயல்களில் வெற்றியை ஈட்டித்தராது என்பதனை,
“போட்டிகளில் இறங்கினால்
பயிற்சியோடு இறங்கு
வெறும் ஆர்வம்
கோளாறாகும்”
என எடுத்துரைக்கிறார்.

திட்டமிடல்
முன்னேறுவதற்கான செயலை மேற்கொள்ளத் திட்டமிடல் என்பது அவசியமானதாகும். அரசாங்கமோ, தனிமனிதனோ, தனக்கான திட்டங்களைத் தீட்டி அதற்கான செயல்முறைகளை வகுத்த பின்னர் தான் வெற்றியை ஈட்ட முடியும்.
“அதிகாலையில் விழித்தலும்
அன்று செய்யும் கடமைகளைப்
பட்டியலிடு...” 
என அன்றைக்குரிய வழக்கமான செயல்களுக்கும் திட்டமிடல் அவசியம் என்கிறார் கவிஞர். 
திட்டமிடலின் இன்றியமையாமையை,
“நேரம் கிடைக்கிறதா
திட்டமிடு!
பல செயல்கள் தோற்க
திட்டமிடாதே
காரணம்” 
என்ற கவிதையின் வழி கூறுகிறார். திட்டமிட்டு ஈடுபடும் செயல் வெற்றியைக் கொணர்ந்து வரும்.
உழைப்பு
உயிரினங்கள் அனைத்தும் உழைப்பின் மூலமாகவே உயிர் வாழ முடியும். சிறு எறும்புகூடத் தனக்குத் தேவையான சிறிதளவு உணவையும் தேடல் என்னும் உழைப்பின் மூலமாகத் தான் பெற முடியும். உழைப்பின்றி ஒரே இடத்தில் சோம்பியிருந்தால் உண்ண உணவு கூட கிடைக்காது. எனில், எப்படி முன்னேற்றம் கிடைக்கும்.
“உழைக்கத் தயங்காதே
கிளைக்கத் தயங்கும் மரம்
தழைக்காது
உயர முளைக்காது”
எனக் கவிஞர் உழைப்பின் மேன்மையை கவிஞர் எடுத்துகக் கூறுகிறார்.
நேரத்தை வீணடிக்காமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களே வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர்.
“உலகம் ஓர் உண்டியல்
உழைப்பைச் செலவு செய்தவன்
வெற்றிகளைச் சேமிக்கின்றான்” 
என உழைப்பின் மூலமாகவே வெற்றி சாத்தியம் என எடுத்துரைக்கிறார் கவிஞர்.
தன்னம்பிக்கையும் விட முயற்சியும் 
யானைக்குத் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை என்பர். யானையை அடையாளப்படுத்துவது தும்பிக்கை. அதுபோல மனிதனை மனிதனாக அடையாளப்படுத்துவது நம்பிக்கையே ஆகும். தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு எந்த தடையும் தூசே ஆகும். எளிதில் ஊதித் தள்ளி விடுவான்.
“பழகத் தெரியாதவனுக்கு
வீடே உலகம்
பழகத் தெரிந்தவனுக்கு
உலகமே வீடு!”
“விடியல்கள் வர வேண்டும்
முதலில் மனதிற்குள்!
உள்ளே இருட்டானவன் யாரும்
வெளியே ஒளிர முடியாது” 
என மனதில் உள்ள அவ நம்பிக்கை என்னும் இருட்டை விரட்டி நம்பிக்கை என்னும் வெளிச்சத்தை ஏற்றுபவனே முன்னேற முடியும் என்ற கருத்தை கவிஞர் முன்வைக்கிறார்.
கவிஞரின் கவிதைகள் பலவும் நம்பிக்கையை முன்னிறுத்தியே எழுதப்பட்டன. நம்பிக்கை தான் கவிஞர் இளைஞர்களுக்கு, முன்னேறத் துடிப்பவர்களுக்குக் கொடுக்கும் ஊக்க மருந்தாகும்.
“நம்பு
உன் ஆற்றலை
உன் வலிமைகளை
உன் திறமையை
உன் முயற்சியை
உன்னை நீயே நம்பாவிட்டால்
யார் உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது
நமக்கு நாமே குடிக்கும்
தாய்ப் பால்
அதைத் துப்பி விடாதே” 
என்று தாய்ப்பாலுக்கு நிகராக நம்பிக்கையை முன்னிறுத்துகிறார் கவிஞர்.
தோல்விகளை எதிர் கொள்ளல் எத்தகைய முயற்சிகள், பயிற்சிகள் இருப்பினும், தொடக்கத்திலேயே வெற்றி கிடைப்பது கடினம்.
அந்நேரத்தில் சோர்நது துவண்டு விடாமல் முன்னேறி நடக்க வேண்டியது  அவசியமாகும். அதற்குத் தேவையான ஊக்கத்தைக் கவிஞரின் கவிதைகள் அளிக்கின்றன. வெற்றி என்பதே தோல்வியின் மூலம் பெறப்படுவது தான் என்பதனை,
“வெற்றிக்கான அடையாள அட்டை
தோல்வி என்ற அச்சு இயந்திரத்தில்
அச்சிடப்படுவது தான்” 
என்பதன் வழி என்று கவிஞர் கூறுகிறார். 
தோல்வி அடைந்தால் அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதனை,
“தோல்வி என்பதனால்
வீழ்ந்து கிடப்பவன்
தோற்றவனாகிறான்
தோல்வி வந்தபின்
தெளிந்து நிற்பவன்
கற்றவனாகிறான்
தோல்வி அடைந்ததும்
எழுந்து நிற்பவன்
வென்றவனாகி விடுகிறான்”
என்ற கவிதை வரிகளின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்.
தோல்வியைக் கண்டு துவளாhத மனமே வெற்றியை ருசிக்கத் தகுந்தது என்பது கவிஞரின் கருத்தாகும். 
தொகுப்புரை
காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கவிதைகளில் கொள்பவர் சிறந்த கவிஞராகிறார். மனிதர்கள் விரக்தியுடனும், தோல்வி மனப்பான்மையிலும், அவநம்பிக்கையிலும் உழன்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் உளவியல் சிகிச்சை போன்று சிறந்த கருத்துக்களைக் கூறி அவர்களது மனதைச் செப்பம் செய்வதாக கவிஞர் கவிதாசன்  அவர்களின் கவிதைகள் அமைகின்றன.
முயற்சியின் முக்கியத்துவம், பயிற்சியினால் விளையும் பலன்கள், உழைப்பினால் ஏற்படும் உயர்வு, திட்டமிடலின் சீர்மை, தன்னம்பிக்கையின் தனித்துவம், தோல்விகளை வெற்றிகளாக்கும் மனநிலை என்பன குறித்து அமைந்திருக்கும் அவரது கவிதைகள் மனித மனத்தை மேம்படுத்தி உயரச் செய்வதாய் அமைகின்றன.
மேலும் இவர் எழுதிய நூல்கள் பள்ளி, கல்லூரிகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைப் பயணங்கள் தொடரட்டும். 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...