Monday, December 28, 2015

கொங்குநாட்டு வேளாண்மையில் மரபும் மாற்றமும்


முனைவர்  பூ.மு. அன்புசிவா


மக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பன. இம்மூன்றினுள் முதன்மையானது உணவு. அத்தகைய உணவைத் தருவது வேளாண்மைத் தொழிலாகும். இவ்வேளாண்மை உழவு செய்வதிலிருந்து அறுவடை செய்து பாதுகாத்தல் வரை பல செயல்களைச் செய்ய வேண்டும். அவற்றில் மரபு வழியாகச் செய்யப்பட்டு வந்த செயல்களையும் அதிலிருந்து மாற்றமடைந்த செயல்களைப் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.

மரபுவழி வேளாண்மை
    ‘மரபு’ என்ற சொல் பழமையான முறை என்னும் பொருளை உடையது. ஒரு தலைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் தொன்றுதொட்டுச் செய்யப்படும் வேளாண்மை மரபுவழி வேளாண்மை ஆகும்.

நிலம்
    பண்டைத்தமிழர் நிலத்தினை இயற்கை அமைப்பிற்கு ஏற்ப நான்கு வகைகளாக முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பிரித்தனர். முல்லையும், குறிஞ்சியும் தன் இயல்பிலிருந்து திரிந்து பாலைநிலம் உண்டாகும் என்பர்.
    மண்வளமும், நீர்வளமும் குறைந்த பகுதியை வன்புலம் என்பர். முல்லையும் குறிஞ்சியும் வன்புலம் என்ற பிரிவில் அடங்குவன. இதற்கு மாறாக மண்வளமும் நீர்வளமும் நிறைந்த இடத்தை மென்புலம் என்பர். மருத நிலம் இப்பிரிவில் அடங்கும்.
        “வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
         மென்புல வைப்பின் நன்நாட்டுப் பொருந”    (புறம். 42: 17-18)
தினை, வரகு முதலிய புன்செய் பயிர் விளையும் நிலங்களையும், விதைத்துவிட்டு வான்நோக்கும் வறட்சியான நிலங்களையும் புன்புலம் என்றனர்.
        “வித்தி வான்நோக்கும் புன்புலம்” (புறம். 18:24)
    இவ்வாறாக பயிர்த்தொழிலுக்கு ஏற்ற நிலப்பகுதிகள் நீங்க விளைவின்றி விடப்பட்ட நிலம் விடுநிலம். இது கால்நடை மேய்ச்சலுக்கு பயன்பட்டது.  மரபு வழியாக மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யும் நிலம் புன்செய் எனவும், நீர்பாய்ந்து பயன்தரும் நிலங்களை நன்செய் நிலம் எனவும் பிரிப்பர்.

உழவு செய்தல்
    வேளாண்மையின் முதல்  அடிப்படைச் செயலாய் அமைவது உழவு.
        “குடிநிறை வல்சி செஞ்சால் உழவர்
         நடைநவில் பெரும்பகடு புதவிற்பூட்டிப்
        பிடிவாயன்ன மடிவாய் நாஞ்சில்
         உடுப்புமுக முகக்கொளு மூழ்க ஊன்றித்
         தொகுப்பெறிந்து உழுத துணர்படு துடவை” (பெரும். 196-200)
    இப்பாடல் மூலம் பண்டைத் தமிழரின் உழவு முறை தெளிவாகப் புலனாகிறது. உழவிற்கு எருதுகளைப் பயன்படுத்தியதையும், பலமுறை உழும் வழக்கத்தினையும் அறியமுடிகிறது. மேலும் உழவர்கள் நிலத்தை ஆழமாக உழுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததையும் இப்பாடல் கூறுகிறது.
    மேற்கண்ட கருத்துக்களை நிறுவும் வகையில் நாட்டுப்புற வழக்காறுகளில் சில சான்றுகள்.
        “அகல உழுவதைவிட ஆழ உழு”
        “சித்திரை மாதத்து உழவு பத்தரை மாதத்து தங்கம்”
மேலும்,
        “எள்ளுக்கு ஈருழவு”
        “கொள்ளுக்கு ஓருழவு”
எனும் இப்பழமொழி மூலம் ஒவ்வொரு பயிருக்கும் எத்தகைய உழவு உழவேண்டும் என்ற கணக்குமுறை மக்களிடம் இருந்ததை அறியமுடிகிறது.
    தற்காலத்தில் இத்தகைய பழைய முறைகள் பின்பற்றப்பட்டாலும்கூட, டிராக்டர் போன்ற இயந்திரங்களின் உதவியோடு விரைவாக உழவை செய்து விடுகின்றனர். எனவே நவீனக் கருவிகள் விரைவாக பணிகளைச் செய்வதால் நேரம் மிச்சப் படுத்தப்படுகிறது.



நீர்பாய்ச்சுதல்
    நிலத்திற்கு அடுத்த நிலையில் வேளாண்மைக்கு மிகவும் அவசியமானது நீர். வேளாண்மையின் நீர் ஆதாரங்களாக கிணறு, ஆறு, குளம் இவை போன்றன உள்ளன.
        “நீர்த்தெவ்வு நிரைத் தொழுவர்
         பாடுசிலம்பு மிசை யேற்றத்
          தோடு வழங்கும் அகலாம்பியிற்
        கயன் அகைய வயல் நிறைக்கும்”     (மதுரை.89-90)
இப்பாடல் வயல்களுக்குக் குளத்திலிருந்தும், கிணற்றிலிருந்தும் நீரிறைத்துப் பாய்ச்சப்பெற்றது. நீரிறைப்போர் பாடிக்கொண்டே இறைப்பர். இதுவே மரபுவழியாக கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்ததையும், ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டியும் நீர் பாய்ச்சியதையும் அறியமுடிகிறது.
        “நீரளந்தா நெல் உசரும்”       
        “நீரு வத்துனா நெல்லு வத்தும்”   
எனும் பழமொழிகள் நீரை முறையாகப் பயன்படுத்துதலை தெளிவாகச் சுட்டுகிறது.
    தற்காலத்தில் மின்விசை நீரேற்றும் கருவிகள் மூலம் நீரேற்றப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. மேலும் சொட்டுநீர்ப்பாசனம், ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் ஆகிய முறைகளில் எளிமையாகவும், விரைவாகவும், நீர் சிக்கனமாகவும் பாய்ச்சப்படுகிறது.

விதையைத் தேர்வு செய்தல்

    பண்டைக்காலத்தில் விதைகள் விற்பனைப் பொருளாகக் கருதப்படவில்லை. எனவே விதைகளுக்கென்று வேண்டும் நெல் மற்றும் பிற பயிர்களை கதிர் விடுகையிலேயே நன்கு கூர்ந்து நோக்கி கவனத்தில் கொள்வர். பண்டைத் தமிழ் மக்கள் முதன்முதலில் விளைகின்ற மணிகளையே விதைகளாகத் தேர்ந்தெடுப்பர். ஏனெனில் அம்முதல் விதைகளிலேயே சத்துப் பொருட்களும் அதிகம் உள்ளடங்கியிருப்பதால் அம்மணிகளை விதைக்காகத் தேர்வு செய்கின்றனர். இத்தகைய வீரியம் மிக்க விதைகளே நல்ல மகசூலைத் தரும் பயிர்களை உற்பத்தி செய்யும் என்பதனை நம் முன்னோர்கள் அனுபவத்தால் கண்டறிந்தனர்.
    மரபு வழியாகவும் இம்முறையிலேயே விதைத் தேர்வு செய்து பாதுகாத்து பயிரிட்டனர்.
    தற்காலத்தில் புதிய ஒட்டுரக விதைகளே அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. எனவே மரபுவழியாக பின்பற்றப்பட்ட விதைகள் மறைந்து வருகின்றன. ஆனால் மரபுவழியாக பயன்படுத்தப்பட்ட விதைகளில் விளைந்த பயிர்களும், காய்கறிகளும் நல்ல சுவையும், பலனும் தந்தன. ஒட்டுரக விதைகளால் உருவான பயிர்களும், காய்கறிகளும் சுவையும் நற்தன்மையும் இல்லாமல் உள்ளன.

பயிரிடும் முறை
        “ஆடிப்பட்டம் தேடி விதை”
        “பருவத்தே பயிர் செய்”
எனும் பழமொழிகள் மூலம் பருவத்தே தக்க காலத்தில் பயிர் செய்ததை அறிய முடிகிறது. முற்காலத்தில் நீர் தேவைக்கேற்ப கிடைத்தது. எனவே பருவகாலத்தில் விரும்பிய பயிரை பயிர் செய்தனர். ஆனால் தற்காலத்தில் நீர் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. எனவே நீரின் அளவுக்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டியுள்ளது.
    பண்டைக்காலத்தில் பயிரிடும் முறை பற்றிய அறிவும், தெளிவும் உழவர்களுக்கு முறையாக இருந்தன. இதனைக் கீழ்க்கண்ட பாடலடிகள் உணர்த்துகின்றன.
        “முடிநா நழுத்திய நெடுநீர்ச் செறுவில்”     (பெரும். 212)
என்ற பெரும்பாணாற்றுப்டை வரியானது பலமுறை நன்றாக உழப்பட்டு, எருவிட்டு, நீர்பாய்ச்சப்பெற்ற வயல்களில் நாற்றுக்களை நன்றாக அழுந்த நடுவர் என்பதைக் கூறுகிறது.
        “பால்வார்பு கெரீஇப் பல்கவர் வளிபோழ்வு
         வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெய்”     (மலை. 414-415)
எனும் மலைபடுகடாம் பாடல் வரிகளால் நாற்று நடும்போதே நான்கு பக்கமும் காற்று ஊடே செல்லுமாறு இடைவெளி விட்டு நட்டனர் என்பதும், அதனால் பயிர்கள் கிளைத்துச் செழித்துப் பால்கட்டி வளர்ந்தன என்பதும் அறியப்படுகிறது. இது மரபுவழியாக தற்காலம் வரை பின்பற்றப்பட்டு வருவதை அறியலாம். மேற்கூறிய கருத்தை ஒத்து நாட்டுப்புறப்பாடல் ஒன்று பயிர்களுக்கு விடவேண்டிய இடைவெளியைப் பற்றிக் கூறுகின்றது.
        “நண்டு சுத்த நெல்லு
         நரி சுத்த கரும்பு
         வண்டி சுத்த வாழை
         தேரு சுத்த தென்னை”
மேற்கண்ட ஆதாரங்களின்வழி பயிரிடும் முறைகள் பற்றிய முறையான அறிவை அக்கால உழவர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறிது. பயிரிடும் முறைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும் காலம், நீர் ஆதாரம் ஆகிய நிலைகளில் சில மாற்றங்களை பெற்று உள்ளது. மரபு வழியாக ஊடபயிர் பயிரிடப்பட்டது.

களையெடுத்தல்
    பயிர் சாகுபடியில் களை நீக்கம் மிகவும் இன்றியமையாதது. களைகள் முளைக்கும் நிலையிலேயே முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
    வயலில் முளைத்த களைகளைத் தொடுப்பு என்னும் கருவியால் (களைவெட்டி) களை பறித்தலை,
        “தொடுப்பு எறிந்து உழுக துளர்படு துடவை”     (பெரும். 202)
எனும் பெரும்பாணாற்றுப்படை வரி உணர்த்துகிறது. இதுபோன்றே மரபுவழியாக களையெடுத்தல் என்பது செய்யப்பட்டு வருகிறது. இதனை,
        “களையெடுக்காப் பயிரு கால் பயிரு”
எனும் பழமொழி உணர்த்தும்.

எருவிடுதல்
    விளைநிலங்களில் நல்ல உரமிட்டால் நல்ல விளைவைப் பெறலாம் என்பதை உழவர்கள் அறிந்திருந்தலை அக்காலத்தில் எருவாகப் பயன்படுத்தப்பட்டவை கால்நடைகளின் சாணமும், உலர்ந்து விழுந்த இலைத்தழைகளும் ஆகும். கால்நடைகளின் சாணத்தைத் தாதெரு என்றனர். எருக்களைக் கொட்டி வைப்பதற்கென்றே விடப்பட்ட மன்றங்களில் அவற்றைச் சேர்த்து வைப்பர். இதனைத் தாதெரு மன்றம் (கலி. 108) எனக் கலித்தொகை கூறுகிறது.
    மரபுவழியாக பசுந்தழை மட்கச் செய்தல் கால்நடைக் கழிவுகளைப் பயன்படுத்துதல், பசுந்தழைகளை நிலத்தில் இடுதல்,பட்டி போடுதல், குளத்துமண் இடுதல் எனப் பல்வேறு முறைகளைக் கையாண்டுள்ளனர்.
    தற்கால நிலையில் இயற்கை உரங்களின் பங்கு மிகவும் குறைந்து விட்டது. செயற்கை உரங்கள் அதிகமாக உள்ளன. ஏனெனில் செயற்கை உரங்கள் கையாளுவதற்கு எளிமையாக உள்ளன. பயிர்களுக்கு அவ்வப்போது இடப்படுவதால் பயிர் நன்றாக வளர்கிறது. எனவே பயிர் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உழவர்கள் செயற்கை உரங்களை இடுகின்றனர். மேலும் தற்காலத்தில் பல்வேறு பூச்சி நோய்கள் பயிர்களைத் தாக்குவதால் அவ்வப்போது செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    கால்நடைகளின் அளவு குறைந்து வருகிறது. பயிரிடப்படும் பரப்பு அதிகமாக உள்ளது. எனவே இன்றைய நிலையிலும் எரு உரம் பயன்படுத்தப்பட்டாலும் முழுமையாக இயற்கை எருவைக் கொண்டு பயிர் செய்ய இயலவில்லை.
        “எருப்போட்டா விளையுமா? இனங்காஞ்சா விளையுமா?”
        “குமாட்டெரு புஞ்சக்கி, தழ எரு நஞ்சக்கி”
எனும் பழமொழிகள் எருவிடுதலின் அவசியத்தையும், நன்செய் நிலத்திற்கு தழை எருவும், புன்செய் நிலத்திற்கு மாட்டெருவும் இடப்படுவதையும் எடுத்துக் கூறுகின்றன.

பயிர் பாதுகாப்பு
        “ஏரினும் நன்றாம் எருஇடுதல் இட்டபின்
         நீரினும் நன்றதன் காப்பு”     (1038)
என்ற குறளின்மூலம் உழுவதைவிட எருவிடுதல் சிறப்பு. பயிர் நட்டபின்பு நீர் பாய்ச்சுதலினும் பயிரைக் காத்தலே சிறப்பு எனக் கூறுகிறார். எனவே பயிர் பாதுகாப்பு என்பதும் அவசியமாகிறது.
    விளைந்த தானியக் கதிர்களை பறவைகளிடம் இருந்து பகலில் ஒலி எழுப்பியும், நீண்ட குச்சிகளைக் கொண்டு விரட்டியும் காத்தனர். இரவில் பன்றிகளுக்கு காவல் இருந்தனர். தீப்பந்தம் போன்றவற்றைப் பிடித்துக் கொண்டு, ஒலி எழுப்பி பன்றி, யானை போன்றவற்றை விரட்டினர். மற்ற கால்நடைகளிடம் இருந்து காக்க வேலிகள் அமைத்தனர்.
        “களிற்றுத் துப்பு புலியதன் இதனத்து
         சிறுதிணை வியன்புலம் காப்பின”    (நற். 351: 8-9)
எனும் நற்றிணைப் பாடலடியில் பரணில் நின்று கொண்டு இளம்மகளிர் கவண், குளிர், தட்டை ஆகிய கருவிகளின் துணையால் பயிர்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுவர் எனும் செய்தி கூறப்படுகிறது.
    மரபுவழி வேளாண்மையிலும் இத்தகைய பயிர் பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றன.
        “மாடு மேய்க்காம கெட்டுச்சு”
         பயிரு பாக்காம கெட்டுச்சு”
எனும் பழமொழி கால்நடையைப் பாதுகாத்தலும், பயிரைப் பாதுகாத்தலும் அவசியம் எனக் கூறுகிறது.
    மரபுவழி வேளாண்மையில் முன்பு நோய்கள் பெரும்பாலும் பயிர்களைத் தாக்கவில்லை. சாதாரண ரக பயிர்களாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி உடையவையாய் இருந்தன. அப்படியே நோய்கள் தாக்கினாலும் பயிர் மேல் சாம்பலையும், வேப்பெண்ணெயில் நீர் கலந்தும் தெளித்துள்ளனர்.
    ஆனால் தற்கால வேளாண்மையில் பலப்பல புதிய நோய்கள் பயிர்களைத் தாக்குகின்றன. எனவே அந்நோய்களைத் தடுக்க வேண்டியுள்ளது. அதனால் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தனர். இதனால் தற்காலத்தில் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி எனப் பலவகைப்பட்ட மருந்துகள் வந்துவிட்டன.

அறுவடை செய்தல்
    பண்டைக்காலத்தில் அறுவடை செய்வதில் பெண்கள் முக்கியப் பங்கு ஆற்றினர்.
        “கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து”    (பொரு. 242)
        “நெல்லரி தொழுவர் கூர்வாள்”        (நற். 26.2)
எனும் பாடல் வரிகளால் கதிர்களை அறுக்கப் பயன்படும் வளைந்த அரிவாளானது குயம், வாள் போன்ற சொற்களால் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
    அறுவடைக்குத் தேவையான கருக்கரிவாள் பயன்பாடு பற்றி,
        “வெள்ளிப்புடி அருவா, வெடளப்புள்ள கையருவா
          சொல்லி அடிச்ச அருவா, சொலட்டுதம்மா நெல்கதிர”
எனும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
    மேலும்,
        “அறுப்பறுத்து திரிதிரித்து
             அன்னம் போல கட்டுக்கட்டி
         தூக்கிவிடு சின்ன மச்சான்
             தூரத்திலே போற கட்டு
        ஏலேலோ குயிலேலோ அன்னமே”
எனும் அறுவடைப்பாடலில் அறுவடை செய்த நெற்பயிர்களை களத்துமேட்டுக்கு கொண்டு சென்று நெல் பிரித்தெடுக்கப்படும் நிலை விளக்கப்படுகிறது. மேலும் ஆண்களும், பெண்களும் இணைந்து வேளாண்மையில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் அறியப்படுகிறது.
    தற்காலத்தில் அறுவடை செய்யும் இயந்திரங்கள் வந்துவிட்டன. எனவே அவை அறுத்து பயிரையும் நெல்லையும் பிரித்து, சுத்தப்படுத்திக் கொடுத்து விடுகிறது. எனவே இதனால் நேரம் மிச்சப்படுகிறது. மனித உழைப்பு குறைகிறது. காய்கறிப் பயிர்கள் பறிப்பதில் பெண்களும், ஆண்களும் ஈடுபடுகின்றனர்.

விதை சேமிப்பு
    முன் காலத்தில் விதைப்பதற்குத் தேவையான விதைகளை அவரவரே சேமித்து வைப்பர். உலர்த்தப்பட்ட விதைகளை சணல் சாக்குகளிலும், குதிர்களிலும், சோளக்குழி எனப்படும் சேமிப்புக் கலன்களில் சேமித்து வைப்பர்.
        “குரலுணங்கு விதைத்திணை”        (புற. 133)
எனும் புறநானூற்று அடி கதிரிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்காமல் விதைகளை கதிரோடே உலர்த்தி சேமித்து வைத்திருந்ததைக் கூறுகிறது.
    மரபுவழியாக பின்பற்றப்பட்டு வந்த விதைகள்,புதிய ஒட்டுரக விதைகளால் மதிப்பிழந்து போயின. இதனால் விதை சேமிப்பும் குறைந்து விட்டது. அவ்வப்போது புதிய ரக விதைகளை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் பெருகிவிட்டது.

வேளாண் சடங்குகள்
    பண்டைச் சமுதாயங்கள் தொட்டு இன்றைய சமுதாயம் வரையில் தமிழர் வாழ்வில் சடங்குகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. இந்தச் சடங்குகளில் வேளாண்மை தொடர்பான சடங்குகளும் அடங்கும்.
        “மலைவான் கொள்கென வயர்பலி தூஉய்”    (143-1)
எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் மழை வேண்டி வழிபட்ட சூழலில் மழை பெய்ததையும், வேண்டாம் எனக் குறுகிய சூழலில் மழை நின்று போனதையும் அதனைக் கண்டு குறவர் மகிழ்ந்ததையும் இப்பாடல் உணர்த்துகிறது.
    மரபுவழி வேளாண்மையிலும் பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. மழைச்சடங்கு மட்டுமல்லாது, இறைவழிபாடு, பலிஇடுதல் போன்ற சடங்குகளையும் செய்தனர். இதனால் வளமாக வேளாண்மை விளையும் நல்ல பலனைத்தரும் என்ற வளமான நம்பிக்கையின் அடிப்படையில் வளமைச் சடங்குகளாகச் செய்யப்பட்டன.

மரபும் மாற்றமும் நன்மை தீமைகள்
    பண்டைக்கால வேளாண்மையிலும், மரபுவழியாக பின்பற்றப்பட்டு வந்த வேளாண்மையிலும் இயற்கை முக்கிய பங்கு வகித்தது. இவ்வேளாண்மைகளில் நோய்த்தாக்குதல் குறைவு. பொருளாதாரச் சிக்கனம் இருந்தது. மரபு வழி வேளாண்மையில் வேலைச்சுமை தெரியாதிருக்க பாடல்கள் பாடியதால் அவர்களது எண்ண உணர்வுகளும், பண்பாடும் வெளிப்பட்டது. மேலும் பாமரர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. சாதாரண நாட்டுரக விதைகளை பயிரிட்டாலும், அவை நல்ல விளைவினையும் தரமான உணவையும் தரும் வகையில் இருந்தன.
    மனித உழைப்பு அதிகமாக தேவைப்பட்டது. விரைவாகப் பணிகளைச் செய்து முடிக்க இயலவில்லை. எருவிடுதல், பயிர்பாதுகாப்பு, விதை சேமிப்பு போன்றவை இயற்கையான முறையில் அமைந்ததால் அதில் விளைந்த உணவுப் பொருள்களை உண்ணும்போது மக்கள் நலமாக வாழ்ந்தனர்.
    தற்கால வேளாண்மையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாக இருப்பதால் மனித உழைப்பு குறைகிறது. இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு குறைகிறது. ஆனால் நேரம் சிக்கனமாகிறது. விரைவில் பணிகள் செய்து முடிக்கப்படுகிறது.
    விதைத்தேர்வு, எருவிடுதல், பயிர்ப்பாதுகாப்பு போன்றவை செயற்கையான முறையில் அமைந்துள்ளன. எனவே புதிய குறுகிய கால ஒட்டுரக விதைகளைக் கொண்டு பயிர் செய்வதாலும், செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதாலும், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும் விளைச்சல் பெருகினாலும் அதனால் பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களும், நிலமும், பாதிக்கப் படுவதோடு அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

முடிவுரை
    மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவுப் பொருளை உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் எனவே பொருள் உற்பத்தியையும், பொருளாதார உயர்வையும் கொண்டு நோக்கும்போது தற்கால செயற்கை வேளாண்மை சிறப்பாகத் தெரிகிறது.
    ஆனால் உணவு என்பது மனித நயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மனித நலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மரபுவழி வேளாண்மையே சிறந்ததாக விளங்குகிறது.
    எனவே மரபு வழியாகவும், தற்கால நவீன முறைகளையும் பயன் படுத்தினாலும், மனித சமுதாயத்திற்கு எதிராக விளங்கும் செயற்கை உரங்கள் பூச்சிக் கொல்லிகளையும், தவிர்த்து இயற்கையான முறையில் வேளாண்மை செய்யும் வழிகளைப் பெருக்கி வேளாண்மை செய்தால் மக்கள் நலவாழ்வு வாழ வழிகிடைக்கும். எனவே இயற்கையைப் பயன்படுத்தி நலமாய் வாழ்வோம்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...