Saturday, January 02, 2016

திருமாவளவன் கவிதைகள் - ‘இருள்-யாழி’ தொகுப்பை முன்வைத்து…

புலம் பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் ஈழத்துக்கவிஞர் திருமாவளவனின் (1955) மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘இருள்-யாழி’! இதில் 33 கவிதைகள் உள்ளன. போர் தந்த அழிவுகள் பேசப்படுகின்றன. படிமம் சார்ந்த அழகியல் பாங்கு ரசிக்கத்தக்கது. மொழிநடை முதிர்ச்சியுடன் காணப்படுகிறது. புதிய படிமங்களும் உள்ளன. பேசத்தக்க பல கவிதைகள் இதில் இருக்கின்றன.
 ‘கால் முளைத்த மரம்’ இயற்கை நேசத்தின் உச்சத்தைக் கூறுகிறது. இது ஒரு புனைவுக் கவிதை. மரத்தை அதிகம் நேசிக்கும் ஒருவன் தன்னையே இறுதியில் மரமாக உணர்கிறான் என்பதே கவிதைக்கரு. கவிதையை நகர்த்திச் செல்வது எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.
 தன் தோள்களை உயர்த்தியும்
 கிளைகளை அசைத்தும்
 இலைகளால் நகைத்தும்
 உடல் மொழியால்
 தன் பேச்சுக்கு மெருகூட்டியது
 மரம்
என்பது நல்ல அறிமுகம். பின் மரங்களின் மொழி, வசப்பட்டதாகச் சொல்லப்படுவது நல்லதொரு ஈடுபாடு.
 நாட்கள் கழிய
 கிளைகளும் நுனிகளில் முகையும்
 அரும்பும் துளிரும் விரியத் தொடங்கின
 என்னுள்
என்பது மரம் முழுமையாக உள்வாங்கப்பட்டதை உணர்த்துகிறது. காலையில் எழுந்தவுடன் பூக்கள், பூக்களில் தேன்சிட்டுக்கள் காணப்படுகின்றன. பறவைகளின் பாடலைத் தொடர்ந்து என்று கவிதை அழகாக முடிகிறது.
 ‘கோடை’யில் இராணுவத் தேடுதல் பற்றிய மனப்புழுக்கம் பேசப்படுகிறது.
 அனல் கொட்டுகிறது
 அகவெளியெங்கும் நெருப்பு
எனக் கவிதை தொடங்குகிறது. இப்போதைக்கு மழை வேண்டும் என முடிகிறது. ‘மழை’ குறியீடாகப் பெயன்படுத்தப்பட்டுள்ளது.
 மனிதனை
 இன்னொரு மனிதன் குதறி
 வீழ்த்துகிற உலகிலிருந்து நழுவ விரும்புகிறேன்
என, வரிகள் பலருக்குமான பிரதிநிதித்துவம் கொண்டு நிற்கிறது.
 ‘கடற்கோள்-2’ போரின் கொடுமையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
 கடலோடி வந்து மீன் குவித்த கரையெல்லாம்
மனிதக் குஞ்சுகளின் பிணம்
குவிந்து கிடக்கிறது.
இந்தக் காட்சியை நினைத்தால் மனம் பதைபதைக்கிறது.
 ‘ஊழி’ குறியீட்டுக் கவிதை. போரால் அழிப்பதில் மனிதத்தின் அலறலைக் கேட்க முடிகிறது.
 விழிகளில் கொடுந் தீ
 மூச்சில்
 அழுகிய சதையின் முடைநாற்றம்
என்பது அழுத்தமான பதிவு!
 பஞ்ச பூதங்களின் வல்லபம் அனைத்தும்
 ஆயுதமாகக்
 கைகள் பதினாறிலும் மிளிர
 விசிறி எறிகிறான்
 நாலாபுறமும்
என்பதில் படிமம் உக்கிரம் காட்டுகிறது. போர் அரசனின் வல்லமையைக் கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன.
 காலடித்தடங்கள் ஒவ்வொன்றுள்ளும்
 மூடுண்டு போகின்றன
 பெரு நகரங்கள்
கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடியாமல் இதுபோன்ற காட்சிகள் நிழலாட்டம் காட்டுகின்றன.
 ‘காலம் சப்பிய கனவுகள்’ விரக்தியை கருப்பொருளாகக் கொண்டது. மனத்தில் ரணங்கள் நம்மை வருத்துகின்றன.
 தோளில் கைபோட்டபடி
 இனிய நண்பன் போல் குந்தியிருக்கிறது.
 என் கனவுகளைச்
 சப்பிச் சப்பிச் சுவைக்கிறது
 காலப் பெரு விலங்கு
என்பது கவிதையின் தொடக்கம்.
 “பெருந்துயர் - கடுங்கோபம் இவையே என் கவிதைகளுக்குள் விரவியிருக்கும் உணர்வு நிலை” என்கிறார் திருமாவளவன்.
 ‘குளிர் பாலையில் அலையும் வழிப்போக்கன்’ ஒரு நீள் கவிதை, கலைச்செல்வனின் நினைவாகப் பேசப்படுகிறது, சோகம் ததும்புகிறது.
 பூமி
 நெடுஞ்சியும் சப்பாத்திக் கள்ளியுமாய்
 காண்டாவனம்
 பின்
 இருண்ட பெருமழைக் காடுகள்
போன்றவரிகள் வாழ்க்கைப் பாதையாய் குறியீட்டியல் சார்ந்து நின்று உறுத்துகிறது.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...