முனைவர் பூ.மு. அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்,
ஜேப்பியார் பல்கலைக்கழகம்,
ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.
பேச:98424 95241.
கற்றுக்கொள்கிற மாணவர் குலமும்
இருப்பதால் தான் இந்த மனித குலம்
இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது”
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பர். நாளைய தலைவர்களாக மாணவர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆசிரியர்களுடையதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆசிரியர்கள் என்பவர்கள் பாடம் நடத்துபவர்கள் என்னுமளவிலேயே நின்று விடுகின்றனர் என்னும் குற்றச் சாட்டு உண்டு. பாடம் நடத்துவதைத் தாண்டி ஆசிரியர்கள் வாசிப்பதில்லை, படைப்பதில்லை என்ற விமர்சனமும் உண்டு. ஆசிரியர்களாக இருந்து படைப்பாளர்களாகவும் பலர் இயங்கி வருகின்றனர். பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்து எழுத்தாளர்களாக சிற்பி பாலசுப்ரமணியம், பெருமாள்முருகன், இரா. காமராசு, தெ. வெற்றிச்செல்வன், இளம்பிறை, தமிழரசி சற்குணம், க.அம்சப்ரியா, சோலை மாயவன், அண்டனூர் சுரா, சோமனூர் செந்திரு, ஹரணி, அன்புசிவா, தேவதா தமிழ், அகவி என பலர் உண்டு.
பறவைகள் மரத்தில் கூடு கட்டி வாழ்கின்றன. பறவைகளுக்கு மரங்கள் பழங்களை அளிக்கின்றன. பறவைகளும் மரங்களுக்கு உதவி செய்கின்றன. பழத்தைத் தின்று எச்சம் வழியாக விதையைப் பரப்பி மரங்களை வளர்க்கின்றன. இது இயற்கை. இது குறித்து ஆசிரியர் மா. அன்னலட்சுமி ' பறவைகள்' என்னும் தலைப்பில் எழுதிய கவிதை
"நானும் ஒரு
விவசாயி
பறந்து
பறந்து
பாரெங்கும்
விதைகளை
விதைக்கிறேன்"
ஒரு பறவை பேசுவதாக எழுதியுள்ளார். பறவைகளே விதைகளை பரப்புகின்றன என்கிறார். இது குறித்து பலர் கவிதை எழுதியுள்ளனர். அதிலொன்று
"பழம் விழுங்கிய
பறவை
பறக்கிறது
ஒரு
மரத்தை
சுமந்து
கொண்டு"
இக்கவிதையை எழுதியவர் கவிஞர் குகை. மா. புகழேந்தி.
சமூக ஊடகங்கள் பொது மக்களுக்கு பொழுது போக்க வழிவகைச் செய்ய வேண்டும். அல்லது அறிவுரை வழங்க வேண்டும். ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று இருக்கும் சமூக ஊடகங்கள் எல்லாம் மக்களின் மூளையை மழுங்கடிக்கின்றன. சலவைச் செய்கின்றன. நேரத்தை வீணடிக்கின்றன. இதைக் கண்ட ஆசிரியர் ஜா. ஜாஸ்மின் ஷர்மிளா ' சமூக ஊடகம்' என்னும் தலைப்பில் எழுதிய கவிதை
"பொன்னான நேரத்தை
கொள்ளையடித்த
திருடன்
சமூக
ஊடகம்"
சமூக ஊடகத்தை கொள்ளையடித்த திருடன் என்கிறார். கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சத்தியம் என்பது எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழி. உலகில் சத்தியபடி வாழ்ந்ததாலேயே காந்தி சத்திய சோதனை என்னும் ஒரு சுயசரிதை நூலை எழுதினார். சத்தியமே வெற்றிப்பெறும் என்பர். ஆசிரியர் சி. கனகலெட்சுமி
"யாருக்கும் பயப்படத்
தேவையில்லாத
பண்பட்ட
பாதை"
என்கிறார். இதன் தலைப்பு ' சத்தியம்'. சத்திய வழியில் வாழ்பவர்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்கிறார். நேர்மையாக வாழ் நெஞ்சு நிமிர்ந்து நட என்பதைக் குறிக்கிறது.
பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு உரிமை வேண்டும். பெண்ணுக்கு கல்வி வேண்டும். பெண்ணுக்கு பொருளாதாரம் வேண்டும். பெண்ணுக்குக் கல்வியும் கிடைத்து விடுகிறது. பொருளாதாரத்திலும் உயர்வும் கிடைத்து விடுகிறது. ஆயினும் பெண்ணின் கனவுகள் நிறைவேறவில்லை. பெண்ணின் கனவு என்பது தனியானதாக இருப்பதில்லை. இருக்க முடியாது. பொதுவாக குடும்பத்திற்காக தன் கனவுகளைக் காணுவதுமில்லை. வெளியில் சொல்வதுமில்லை. ' பெண்ணின் கனவு' என்னும் தலைப்பில்
“எட்டாக்கனியாகவே
உள்ளது
பெரும்பாலும்
பெண்ணின்
கனவுகள்”
என்கிறார் ஆசிரியர் சி. இந்துமதி. ஒரு பெண்ணாகவே எழுதியுள்ளார்.
விவசாயம் செய்து வந்த மனிதனை நிலங்களை விற்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம். விற்ற நிலங்களை வீட்டு மனையாக்கினர். வீடு கட்டியவர் மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயம் அடிப்படை என்று தெரிந்தும் இந்நிலை. காரணம் விவசாயத்தை அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதே காரணம். ஆசிரியர் எஸ். ராஜேஸ்வரி
"விளைநிலங்களை
விற்று
வீடாக்கி
விட்டு
வீட்டு
பால்கனியில்
விவசாயம்"
என ' விவசாயம்' தலைப்பில் எழுதியுள்ளார். விவசாயத்தைக் காக்க வேண்டும் என்கிறார்.
ஒரு மனிதன் எவ்வளவு சொத்துகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம். அவை அழிந்து விடவும் வாய்ப்புண்டு. ஒரு மனிதனால் அழிக்க முடியாதவை நினைவுகளே. மனிதன் சேர்க்க முடியாவிட்டாலும் தானாக சேர்ந்து விடும். சேமிப்பு கிடங்கில் இருக்கும்.
"தள்ளாத வயதில்
மனதுடன்
அசைபோட
சேர்த்த
சொத்து"
‘ நினைவுகள்' என்கிறார் ஆசிரியர் சு. கவிதா. நினைவுகளை மனத்தில் இருந்து அந்திம காலத்தில் அசைபோட உதவுகிறது என்கிறார்.
"சிலரால் விரும்பப்படுவது
சிலரால்
பின்பற்றப்படுவது
பலரால்
தவிர்க்கப்படுவது
உண்மை"
என்றொரு ' உண்மை' யினை எழுதியவர் ஆசிரியர் த. நிர்மலாதேவி. ஒரே உண்மைதான். உண்மைதான் எல்லோரும் பேச வேண்டும் என்கிறோம். ஆனால் மனிதர்களை எவ்வாறு வேறுபடுகிறது என்று உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் இந்த உண்மையை எவரும் மறப்பதற்கில்லை.
"ஒரே நேரத்தில்
பலர்
வீடிழந்தனர்
வெட்டப்பட்டது
மரம்"
என்பது ஆசிரியர் க. சாந்தி எழுதிய கவிதை. இவர் ஓய்வு பெற்றிருந்தாலும் சிந்திப்பதை நிறுத்தவில்லை எனத் தொடர்கிறது. ஒரு மரத்தை வெட்டினால் எப்படி பலர் வீடிழப்பர்? அவர் சொல்வது பறத்தில் கூடு கட்டி வாழும் பறவைகள். மரத்தை வெட்டுதல் கூடாது என்றாலும் பறவைகளுக்காகவும் மனம் இரங்கியுள்ளார்.
கடிதம் எழுதுவது ஒரு கலை. இன்று இல்லாமல் போய்விட்டது. தொலைபேசியில் கொஞ்சம் தொலைந்தது. அலைபேசியில் அழிந்தே போனது. கடிதம் எழுதுவதிலும் கடிதம் வாசிப்பதிலும் இருக்கும் மகிழ்ச்சி பேசியில் இருப்பதில்லை.
"நீ எப்போது
வருவாய்
என
ஏங்கிய
நாட்கள்
மாறி
டிரிங்
டிரிங்
அழைப்பு
மணி
கேட்டதும்
பதறுகிறது
நெஞ்சம்"
என ' கடிதம்' தலைப்பில் எழுதியுள்ளார் ஆசிரியர் ந. சித்ரா. கடிதம் எழுதும் கலையை கவிதை மூலம் எழுதி நினைவுக்கூர்ந்துள்ளார்.
மக்களுக்குக் கல்வி அவசியம். கல்வியே மக்களுக்கு முன்னேற்றத்தைத் தருகிறது. வெளிச்சத்தை ஏற்படுகிறது.
"கல்வி எனும்
தீபத்தை
நாம்
கையில்
ஏந்தி
சென்றால்
நம் வாழ்க்கை எனும்
பாதை
வெளிச்சமாகவே
தொடரும்"
என கல்வியின் தேவையைக் குறித்து, அவசியத்தைக் குறித்து எழுதியுள்ளார் ஆசிரியர் பா. சுகுணா. இக்கவிதையின் தலைப்பு ' வெளிச்சம்'. கல்வியே வெளிச்சம் கொடுக்கும் என்கிறார். கவிதையைப் பற்றிய கவிதை ' கவிதை'.
"சில நேரம்
மனதைத்
தைக்கும்
வார்த்தை
ஊசி
சில
நேரம்
உடலை வருடும் பூங்காற்று"
எழுதியவர் ஆசிரியர் தமிழ்நிலா வே. சண்முகதேவி. இத்தொகுப்பிலும் சில கவிதைகள் ஊசிகளாகவும் சில கவிதைகள் காற்றாகவும் உள்ளன.
பெற்றோர் என்றாலும் தாய்க்கும் தந்தைக்கும் அன்பைக் காட்டுவதிலும் பாசத்தை வெளிப்படுத்துவதிலும் வேறுபாடு உள்ளது. தாயின் அன்பு வெளிப்படையானது. தந்தையின் அன்பு மறைமுகமானது. தந்தை மிரட்டினாலும் அதட்டினாலும் அது பிள்ளைகளின் நலனை முன்னிட்டே இருக்கும்.
"உயர உயரப்
பறந்தாலும்
தாறுமாறாய்
தடம்
பிறழாமல்
தாங்கியிழுக்கும்
நூல்
கயிறு"
' தந்தையின் கண்டிப்பு ' என்னும் இக்கவிதையின் படைப்பாளி ஆசிரியர் கு. திலகவதி. தந்தையின் கண்டிப்பே தந்தையின் அன்பு என்கிறார். இவரே இத்தொகுப்பின் தொகுப்பாளர். ' துளிப்(ர்) பாக்கள்' என்னும் இத்தொகுப்பு கூட்டுத்தொகுப்புகளிலேயே வித்தியாசமானது. முதன்முறையாக பள்ளி பெண் ஆசிரியர்களால் இணைந்து தொகுக்கப்பட்டதாகும். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கவிதைகள் வடிவில் கற்றுத் தந்த பாடங்கள். ஆசிரியர்கள் கவிஞர்களாக தேர்ச்சி பெற்றுள்ளன. கவிஞர்களின் பெயர்களை நீக்கிவிட்டு வாசித்தால் அனைத்து கவிதைகளும் ஒரேமாதிரி சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளன. மாணவர்களுக்கு மனத்தில் வகையில் கருத்துகள் நிறைந்தவையாக கவிதைகள் உள்ளன. வாசித்துணரும்படி எளிமையாகவும் உள்ளன.