தமிழகத்து
வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது.
மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து
கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச்
செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று
வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க காலத்தின் அரசியலில் மக்களின்
பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது
மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.
சங்க காலத்தில்
நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும்
தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த இடத்தை
முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயலைச்
சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து
அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு நிலத்தை
ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய
வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர்.
இல்லறம்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்
ஆகிய நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருள் ஈட்டுவர், காதலிப்பர், மணமுடிப்பர்,
இல்லற வாழ்வில் இருந்து இன்பமுறுவர். அக்காலத்தில் இல்லற வாழ்க்கையைப் பெரிதும் போற்றினர்.
இல்லறம் அல்லது
நல்லறம் அன்று என்று கொன்றைவேந்தனில் ஔவையார் குறிப்பிடுவது போல் இல்லறத்தில் சிறந்து
இருந்தனர்.
இல்லறத்தைச்
சங்க காலத்தில் அகம் எனக் கொண்டிருந்தனர். இதற்குச் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய அகப்பொருளைப் பாடும் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.
களவு, கற்பு
எனத் தம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள்
ஆவர். தாமாகக் கூடுவது களவு வாழ்க்கை என்றும், பெரியோர்களால் கூட்டப்பட்ட வாழ்க்கை
கற்பு வாழ்க்கை என்றும் கொண்டிருந்தனர். மேலும் மடல் ஏறுதல் என்ற ஒன்றினையும் பின்பற்றினர்.
ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காதபோது மடல் ஏறுவது வழக்கமாகும். பனங்கருக்கினால்
குதிரை ஒன்று செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி
ஒன்றைத் தன் கையில் ஏந்தித் தெருத்தெருவாகச் செல்வான். அக்குதிரையை ஊர்ச் சிறுவர்கள்
இழுத்துச் செல்வர். இதனையே மடல் ஏறுதல் என்பர்.
உணவு
அரிசிச் சோற்றையே
பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர்.
இருங்காழ் உலக்கை
இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண்
அரிசி அமலை வெண் சோறு (சிறுபாணாற்றுப்படை :193-194)
வரகு, சாமை
ஆகியவற்றைச் சமைத்து உண்டார்கள். நெல்லில் பலவகை தமிழகத்தில் விளைந்தது. சங்க கால மக்கள்
உணவில் மிளகு, கடுகு, உப்பு, புளி, வெண்ணெய், கருவேப்பிலை போன்றவைகளைச் சேர்த்துக்
கொண்டார்கள். நுங்கு, இளநீர், பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம் போன்றவைகளையும் உண்டார்கள்.
கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்புகளையும் உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.
பண்டைத் தமிழகத்தில்
ஊன் உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. ஊனுக்காக ஆடு, மான், முயல், மீன், நண்டு, கோழி,
உடும்பு முதலியவைகளை உண்டார்கள்.
கள்ளுண்ணும்
வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டது. குறிப்பாக, மன்னர், பாணர்,
புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளினை உண்டு களித்தனர். இயற்கையாகக்
கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், யவனர்களால் கப்பலில் கொண்டு
வரப்பட்ட தேறலையும் (தேறல் - தெளிந்த மது), காய்ச்சி இறக்கிய மதுவையும் உண்டனர். யவனர்
இரட்டைப்பிடிச் சாடிகளில் மரக்கலம் வழியே கொண்டு வந்த மதுவை உண்டதற்கான சான்றுகள் அரிக்கமேட்டுப்
புதைகுழிகளில் காணப்பட்டன.
குலம்
தமிழகத்தில்
சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன.
இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர்,
வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்
தடை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது என்பர். ஒவ்வொரு குலமும் தமிழகத்தில் விலக்க முடியாத
ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.
கல்வி
சங்க காலத்
தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக
இருந்தது. கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும்
இருக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் காணப்படவில்லை. எக்குலத்தவரும் கல்வி
பயிலலாம். ஒவ்வோர் ஊரிலும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் என்பவர்கள் இருந்தனர். ஊர்தோறும்
கல்வி கற்பிக்கும் கணக்காயர் இருக்க வேண்டிய இன்றியமையாமையைத் திரிகடுகம்பின்வருமாறு
குறிப்பிடுகிறது.
கணக்காயர் இல்லாத
ஊரும்
நன்மை பயத்தல்
இல் (திரிகடுகம், 10)
(கல்வி கற்பிக்கும்
ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தல் ஒருவனுக்கு எவ்வித நன்மையும் தருவது இல்லை. கணக்காயர்-ஆசிரியர்;
பயத்தல்-தருதல்; இல்-இல்லை).
கல்வி பயிற்றுவிக்கப்படும் இடம் பள்ளி
எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வி பயிலும்போது
மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
மாணவர்கள் கல்வி
பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என அறிகின்றோம்.
இரந்தூண் நிரம்பா மேனியொடு (குறுந்தொகை,33:3)
(இரந்து பெறும் உணவினால் நன்கு வளராத
மேனியோடு. மேனி-உடம்பு.)
மாணவர்கள் ஆசிரியர்களுக்குப்
பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் பயின்றனர். அக்காலத்தில் கபிலர், பரணர், நக்கீரர்
போன்ற பெரும்புலவர் பலர் வாழ்ந்து வந்தனர். மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம்
ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றதாகத் தெரிகிறது. ஏரம்பம் என்ற ஒரு கணித நூல் பழந்தமிழகத்தில்
வழங்கி வந்தது. அதனை மாணாக்கர் பயின்றனர். இவ்வாறாகக் கல்வி நல்ல நிலையில் இருந்து
வந்தது.
கலை
பண்டைய காலத்தில்
கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத்
தெரிகிறது. ஓவியத்திற்கு என்று ஒரு நூல் வழக்கில் இருந்ததாகவும் கூறுவர். சுவர்களின்
மேல் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர். எளிதில் அழிந்து போகக் கூடிய வண்ணங்களை ஓவியர்கள்
பயன்படுத்தியிருந்தனர்.
இசை, நாடகம்,
நாட்டியம், கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை சிலப்பதிகார அரங்கேற்று
காதையில் விரிவாகக் காணலாம். ஆண்களும், பெண்களும் கூத்திலும், இசையிலும் மேம்பட்டிருந்தனர்.
மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும் பரிசில்களைப் பெற்று வந்தனர் பழந்தமிழ்
மக்கள். கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான் நடனத்தில் ஈடு
இணையற்று விளங்கினான்.
நாட்டியம்,
கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன. அவை
அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.
அரங்கின் முன்பு மூன்று வகையான திரைகள்
தொங்கவிடப்பட்டன. திரையை எழினி என்று குறிப்பிட்டனர்.
கூத்தில் பதினொரு
வகை இருந்ததாகத் தெரிகிறது. அவையாவன: கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல்,
குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன.
இவ்வாறாகச் சங்க காலத்தில் கலை நன்கு
வளர்ச்சியுற்றிருந்தது.
விளையாட்டு
குழந்தைகள்
தெருக்களில் மணல் வீடு கட்டி விளையாடினர். தேர் உருட்டி விளையாடினர். இளைஞர்கள் ஏறு
தழுவி விளையாடினர். பெண்கள் மணற்பாவை வனைந்து விளையாடினர்; கழங்குகளைக் கொண்டு அம்மானை
ஆடி வந்தனர்; ஊஞ்சல் கட்டி ஆடியும் வந்தனர்.
சங்க
காலப் பொருளாதாரம்
நாடு வளம் பெற்று
இருக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருத்தல் அவசியம் ஆகிறது.
நாடு வளம் பெறுவதற்குப் பல விதமான தொழில்கள் சிறப்புடன் நடைபெறுதல் அவசியம். சங்க காலத்தில்
விவசாயம் மிக முக்கியத் தொழிலாக விளங்கியது. இதனுடன் நெசவுத்தொழில், கால்நடை வளர்த்தல்,
மட்பாண்டத் தொழில், மீன் பிடித்தல், தோல் வேலை, முத்துக் குளித்தல், உள்நாட்டு வாணிபம்,
அயல்நாட்டு வாணிபம் போன்ற தொழில்களும் சிறப்புற்று விளங்கின.
விவசாயம்
சங்க காலத்தில்
விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது.இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு
முதுகெலும்பாக இருந்தது. இதனைக் கண்ட புலவர்கள் விவசாயத்தின் பெருமையினை எடுத்துக்
கூறியுள்ளனர். அக்காலத்தில் பசிப்பிணியைப் போக்குவதற்குக் காரணமான விவசாயம் பெருமைக்குரிய
தொழிலாகவும் எண்ணப்பட்டது. விவசாயம் செய்யப்பட்ட தானியங்களில் நெல் முக்கிய இடத்தை
வகித்தது. காலம் செல்லச் செல்ல நெற்பயிர் விளைவித்தோருக்குச் சமுதாயத்தில் மதிப்புக்
கூடியது. வரகு, தினை ஆகியவை நெல்லுக்கு அடுத்த இடத்தை வகித்தன. கானம், உளுந்து, சாமை,
அவரை, மொச்சை, பயறு, கரும்பு ஆகியவைகளும் பயிரிடப்பட்டன. இவைகளோடு பருத்தியும், பலவகைப்பட்ட
மூலிகைகளும் விவசாயம் செய்யப்பட்டன. இஞ்சி, மிளகு, தென்னை, கமுகு, புளி, மா, பலா, வாழை
போன்றவைகளும் பயிரிடப்பட்டன.
மருத நிலம் நீர் வளம் பெற்றிருந்ததால்
அங்கு விவசாயம் மிகுதியாக நடைபெற்றது. ஏனெனில் ஆறுகள் ஓடுவதாலும், நீர் நிலைகள், குளம்,
ஏரி போன்றவைகள் இருப்பதாலும் இப்பகுதியை மருத நிலம் என்றனர்.
காவிரி ஆறு
வளப்படுத்திய பகுதியில் நடைபெற்ற விவசாயத்தைப் பற்றிப் பல சங்க பாடல்கள் கூறுகின்றன.
கரிகால் சோழன் காடுகளை அழித்து அவற்றை விளை நிலமாக மாற்றினான். விவசாயம் செழிப்பாக
நடைபெற்று வந்ததால் நாட்டின் பொருளாதாரம் சற்று ஓங்கியே காணப்பட்டது.
கால்நடை
வளர்த்தல்
விவசாய நிலங்களை
உழுது சமன் செய்வதற்குக் காளைகளும் எருதுகளும் தேவைப்பட்டன. பாலையும் பாலால் செய்யப்பட்ட
உணவுப் பண்டங்களையும் சங்க கால மக்கள் அன்றாட உணவாக உட்கொண்டனர். ஆடு மாடுகளை மேய்த்துப்
பின்பு அவற்றை விற்பனை செய்தனர். தயிர், மோர், நெய் போன்றவற்றைத் தயாரித்தனர். இடையர்கள்
இத்தொழிலை மேற்கொண்டனர். கிராமப்புறங்களில் பொருளாதார நிலை இடையர்களால் வளர்ச்சியடைந்திருந்தது
என்று கூறலாம்.
நெசவுத்
தொழில்
சங்க காலத்தில்
பருத்தி, பட்டு ஆகியவற்றால் ஆடைகள் நெய்தனர்.உயர்ந்த துணிகளைச் சங்க காலத்தில் தயாரித்ததாகச்
சங்க நூல்கள் கூறுகின்றன. பெரிபுளூஸ் என்ற நூல் ஆசிரியர் தமிழகத்தின் துணிகளைப் பற்றிக்
குறிப்பிட்டு இருக்கிறார். பட்டாடையின் மேன்மை பற்றிப் பொருநராற்றுப்படை கூறுகின்றது.
பருத்தி நூல் நூற்பதில் மக்கள் திறமை பெற்றிருந்தனர். நூல் நூற்ற பெண்கள் பருத்திப்
பெண்டிர் என அழைக்கப்பட்டனர். ஆடைகளைத் தைப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர். கலிங்கம்
என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சங்க காலத்தில் துணிகளின்
மூலம் பொருளாதாரமும் உயர்ந்தது.
மட்பாண்டத்
தொழில்
மட்பாண்டத்
தொழில் வளர்ச்சியடைந்திருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் தனிப்பட்ட இடங்களில் குயவர்
குடியிருப்புகள் இருந்தன. குயவர்கள் குடம், பானை, குவளை ஆகியவற்றைத் தயாரித்து, காளவாய்களில்
சுட்டு எடுத்தனர்.
மீன்
பிடித்தல்
பரதவர் என்னும்
குலத்தார் மீன் பிடிக்கும் தொழிலை மேற் கொண்டனர். கட்டு மரங்களிலும், படகுகளிலும் அவர்கள்
கடலுக்குள் சென்று மீன் பிடித்தனர். பரதவப் பெண்கள் ஆண்கள் பிடித்து வந்த மீன்களைத்
தலையில் சுமந்து கடைவீதிக்குக் கொண்டு சென்று அவைகளைப் பண்டமாற்று முறைப்படி விற்றனர்.
இதனால் மீன்பிடிக்கும் தொழிலாலும் பொருளாதாரம் மேன்மை அடைந்தது எனலாம்.
தோல்
வேலை
தோல் பொருட்கள்
செய்யும் தொழிலும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது. தோலாலும், மரத்தாலும்
கால் அணிகள் செய்து கொண்டனர்.
முத்துக்
குளித்தல்
முத்துக் குளிக்கும் தொழில் மூலமாகத்
தமிழ் நாட்டின் வாணிபமும் பொருளாதாரமும் வளர்ந்தன. தமிழ் நாட்டு முத்துக்கள் ரோமப்
பேரரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
உள்நாட்டு
வாணிபம்
உள்நாட்டு வாணிபத்திற்குப்
பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது. நெல்லுக்குப் பதில் உப்பு விற்கப்பட்டது. மோரும்,
நெய்யும் நெல்லுக்கு மாற்றப்பட்டன. தேனும், கிழங்கும் விற்று மீனும், கள்ளும் பெற்றுக்
கொண்டனர். நெய்தல் நிலத்துப் பரதவர் உப்புடன் மருத நிலத்திற்குச் சென்று நெல் பெற்றுக்
கொள்வர். குறிஞ்சி நிலத்துத் தேனும் கிழங்கும், நெய்தல் நிலத்து மீனுக்கும் கள்ளுக்கும்
விற்கப்பட்டன. இவ்வாறான பண்டமாற்று முறையால் உள்நாட்டுப் பொருளாதாரம் தாராளமாக இருந்தது.
அயல்
நாட்டு வாணிபம்
அயல் நாட்டு
வாணிபத்திற்குத் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக
இருந்ததால் தமிழகத்திற்குச் சாதகமான வாணிபம் நிலவியது. புகார் முக்கியத் துறைமுகப்பட்டினமாகச்
சங்க காலத்தில் விளங்கியது. ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால்
தமிழகத்திற்குப் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றது. இதன் காரணமாகச் சங்க காலத்தில்
பொருளாதாரம் வளம் பெற்றது. ரோமாபுரி வாணிகர்கள் அரேபியாவின் தென் பகுதியிலுள்ள துறைமுகங்களைப்
பயன்படுத்தித் தமிழகத்துடன் நீண்ட நாள் வாணிபத்தில் ஈடுபட்டனர். இதற்குச் சான்று ரோமாபுரி
நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றதேயாகும்.
எகிப்தியர், பினீசியர், கிரேக்கர் ஆகியோரும்
வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். மேலும் சீனா, மலேயா, சுமத்திரா போன்ற நாடுகளும்
தமிழகத்துடன் வாணிபத் தொடர்பில் இருந்தன. மிளகு, இலவங்கம் போன்ற பொருள்கள் தமிழகத்தின்
ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்தன என்பதனை முந்தைய பாடங்களில் படித்து அறிந்தோம்.
ஆடை வகைகள், வாசனைத் திரவியங்கள், தந்தம், அரிய வகை மரங்கள், உயர்வகைக் கற்கள், மருந்து
முதலியனவும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களாகும். கண்ணாடி, உலோகப் பாத்திரங்கள், துணி
வகைகள், மதுபானங்கள் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பொதுவாக அயல்நாட்டு வாணிபத்தால்
பொருளாதாரம் நிறைவு பெற்று இருந்தது.
சங்க
கால ஆட்சி முறை
பொதுவாகச் சங்க
காலத்தில் நற்குணங்கள் நிறைந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஒரு சிலர் கொடுங்கோலாட்சியும்
செய்து வந்தனர். மன்னர்கள் மக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டனர் என்பதும் புரிகிறது.
ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.
சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன.
ஊராட்சி
ஊராட்சி
பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சோழப் பேரரசு காலத்தில் ஊராட்சி ஓங்கி வளர்ந்து
இருந்தது. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் எனப் பலவகை ஊர்கள் இருந்தன. இவ்வூர்களில்
ஆட்சி எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைக் காண்போம்.
ஊரின் நடுவில் மக்கள் கூடிப் பேசுவது
வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம்,
அவைஎன்னும் பெயர்கள் இருந்ததாகப் பழங்காலத்து இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும்
இரண்டும் சிறுமாளிகையைக் குறிப்பிடுகின்றன என்றும் அதன் நடுவில் ஒரு பீடம் இருந்ததாகவும்
கருதுகின்றனர்.
பொதியில் சாணத்தால்
மெழுகப்பட்டிருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகிறது.
அந்தி மாட்டிய
நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம்
ஏறிப் பலர் தொழ
வம்பலர் சேக்கும்
கந்துடைப் பொதியில் (பட்டினப்பாலை: 247-249)
(அந்தி-இருள்
சூழும் மாலை நேரம்; மாட்டிய- கொளுத்திய; நந்தா விளக்கு-அணையாத விளக்கு; வம்பலர்-புதியவர்கள்;
கந்து-தூண்).
சில ஊர்களில்
பெரிய மரத்தடியில் மன்றம் கூடியது. குறிப்பாக, வேப்ப மரத்தடியில் இது அமைந்திருந்தது
எனப் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.
மன்ற
வேம்பின் ஒண் பூ உறைப்ப (புறநானூறு, 371:7)
இம்மன்றத்தில்
முதியோர்கள் கூடினர். அக்கூட்டத்தில் மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி
நடைபெற்று வந்தது. சில சமயங்களில் ஊர்ப் பொதுக்காரியங்களையும், சமூக நலத் திட்டங்களையும்
மன்றத்தார் பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.
நகராட்சி
சங்க காலத்
தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமை
போல் நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச் சில இருந்தன. இவற்றில் பட்டினம் என்பது கடலோரத்தில்
இருந்த நகரத்தைக் குறித்தது. பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதியானது எனலாம்.
சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த
நகரங்களுள் சிறந்தவை புகார்(காவிரிப்பூம்பட்டினம்) கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர்,
முசிறி, காஞ்சி முதலியவை.
நகரங்கள் வணிகத்தினாலும்,
தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிப்பூம்பட்டினமும்
சிறப்புற்று வளர்ந்திருந்தன.
இரவு நேரங்களில்
நகரங்கள் பாதுகாக்கப்பட்டன. ஊர்க்காவலர் என்பவர்கள் பாதுகாவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
வருவாய்
நிதியின்றி
நிருவாகத்தை நடத்த முடியாது. ஆதலால் நாட்டிற்கான வருமானம் பல வழிகளில் திரட்டப்பட்டது.
நிலவரி அரசின் முக்கிய வருவாய் ஆகும். விளைச்சலில் ஆறில் ஒரு பாகம் அரசுக்கு வரியாக
வசூலிக்கப்பட்டது. இவ்வருவாய்களுடன் சிற்றரசர்கள் செலுத்திய திறையும் அரசாங்கத்தின்
வருவாயில் முக்கிய இடம் வகித்தது. மன்னன் போர் புரிந்து ஒரு நாட்டை வென்றால் பெரும்பாலும்
அந்நாட்டிலிருந்து செல்வங்களைக் கைப்பற்றுவது வழக்கம். இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்வங்களும்
அரசிற்கு வருவாய் ஆகும். குற்றம் புரிந்தோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. பொருள்களை
ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வரி வசூலிக்கப்பட்டது.
இது போன்ற வரிகளை மக்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்குச் செலுத்தலாம்.
வரி வசூலிப்பதற்கு
என்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாரியத்தில் வரி வசூலித்த அதிகாரி வாரியர்
என்று அழைக்கப்பட்டார். வரி பற்றிய கணக்குகளைப் பராமரித்தவர் ஆயக் கணக்கர் எனப்பட்டார்.
வரிவசூலிப்பது போல் வரிவிலக்கும் சங்க கால அரசியலில் இருந்ததாகத் தெரிகிறது. கோயில்
கட்டுதல், நீர்ப்பாசனத்திற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்கள் வெட்டுதல், பிற பொதுப்பணிகள்
வழங்குதல் போன்ற செலவுகளுக்கு அரசின் வருவாயிலிருந்து செலவு செய்தனர்.
நாணயங்கள்
அரசாங்கத்தால்
நாணயங்கள் அச்சிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. நாணயங்கள் தயாரிப்பதற்கு என்று பொற்கொல்லர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு அரசரும் ஒரு அடையாளத்தை அவர்கள் நாட்டு நாணயத்தில்
பொறித்துக் கொண்டனர். இதற்குச் சான்றாகச் சேர நாட்டு நாணயத்தில் வில்லும், சோழ நாட்டு
நாணயத்தில் புலியும், பாண்டிய நாட்டு நாணயத்தில் மீனும் பொறிக்கப்பட்டிருந்தன.
பொன் என்பது
தங்க நாணயமாகும். தாமரை மொட்டுப் போன்ற நாணயம் காசு என்று கூறப்பட்டது.
சங்க
கால அரசியல்
சங்க காலத்
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பேரரசர்கள் இருந்தனர். இம்மூவருக்குள்ளே
ஆதிக்கப் போட்டிகளும், போர்களும் அடிக்கடி நடைபெற்று வந்தன. மூவேந்தர்களுள் வலிமை பெற்றவன்
அவ்வப்போது பிற வேந்தர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தினான். கரிகால் சோழன் ஆட்சிக் காலத்தில்
தமிழகம் முழுவதும் அவனது ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சேரன் செங்குட்டுவன் காலத்தில்
தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் அம்மன்னனிடம் இருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் பிற தமிழ்
வேந்தர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தினான். மூவேந்தர்களே மட்டுமின்றிச் சில குறுநில
மன்னர்களும் மலைகள் போன்ற இடத்தைப் பெற்று ஆட்சி செலுத்தி வந்தனர்.
மன்னன்
சங்க காலத்
தமிழகத்தில் மன்னனின் முடியாட்சி நிலவியது. மன்னனைக் கோ, வேந்தன், கோன், இறைவன் எனப்
பல பெயர்கள் இட்டு அழைப்பது உண்டு. அரியணை உரிமை பொதுவாக மன்னனின் மூத்த மகனுக்குக்
கிடைத்தது. வாரிசு உரிமை என்பது சொத்து உரிமை போன்றே காணப்பட்டது. பெண்களுக்கு வாரிசு
உரிமை இல்லை. மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது வாரிசு இன்றி இறந்தால் மக்கள்
யானையின் உதவியுடன் மன்னனைத் தேர்ந்தெடுத்தனர்.
மன்னனுக்கு
அவை (அரசவை) இருந்தது. அவ்வவையில் அரசுப் பணிகள் செய்யப்பட்டன. மன்னனே அவைக்குத் தலைவனாக
இருந்தான். அவையில் அரசனோடு அரசியும் வீற்றிருக்கும் வழக்கம் இருந்தது. இவர்களோடு அமைச்சர்களும்,
அரசு அலுவலர்களும், புலவர்களும், மன்னனின் நண்பர்களும் கலந்து உரையாடினர். வேந்தர்களுக்கு
அவையிருப்பது போலக் குறுநில மன்னர்களுக்கும் அவை இருந்தது. பாரியின் அவையில் கபிலரும்,
அதிகமான் அவையில் ஔவையாரும், செங்குட்டுவன் அவையில் பரணரும் அமர்ந்திருந்தனர். அவையில்
இலக்கியங்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. அரசனுக்கு ஆலோசனை வழங்கி நல்லாட்சியை ஏற்படுத்துவதே
அவை உறுப்பினர்களின் முக்கியப் பணியாகும். அவையோர் மன்னன் அறம் தவறிச் செயல்பட்டபோது
அவனுக்கு அறவுரை கூறி அவனை நல்வழிப்படுத்தினர்.
அறன் அறிந்து
ஆன்றுஅமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான்
தேர்ச்சித் துணை (திருக்குறள்,635)
இக்குறள், அரசன்
அமைச்சர்களைத் தேர்ச்சித் துணையாகக் கொண்டான் என்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் அளித்த
மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதி வழங்குவதே அவையில் நடைபெற்ற முக்கியப்
பணியாகும். அவ்வப்போது மன்னன் ஆணைகளைப் பிறப்பித்தான். அவ்வாணைகள் முரசு கொட்டி மக்களுக்கு
அறிவிக்கப்பட்டன.
பொதுவாக அரசவை
காலையில் கூடுவது வழக்கம். அதற்குநாளவை என்றும் நாளிருக்கை என்றும் பெயர்கள் வழங்கி
வந்தன. நாளவை என்பதற்கு நாளோலக்கம் (the durbar of a king) என்று பொருள்.
செம்மல் நாளவை
அண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை
இரவலர்க்கு எளிதே (புறநானூறு, 54:4-3)
(சேரனது தலைமை உடைய அவைக்களத்தின்கண்
செம்மாந்து சென்று புகுதல் எம்மைப் போன்ற வாழ்க்கையை உடைய இரவலர்க்கு எளிது.எம்மன-எம்
அன்ன, எம்மைப் போன்ற.)
அரசவையில் இசை முழங்கிக் கொண்டிருக்கும்.
இதற்குச் சான்று மலைபடுகடாமில் காணப்படுகிறது.
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறை பல முற்றிய
பைதீர் பாணரொட (மலைபடுகடாம்: 39-40)
(இசையை எக்காலமும்
கேட்கின்ற செல்வத்தினை உடைய அரசனுடைய அவை)
ஆட்சியை மேற்கொண்டிருக்கும்
மன்னனை அரச பதவியிலிருந்து நீக்க இயலாது. இருப்பினும் மன்னனே தானாக முன்வந்து மனம்
நொந்து அரச பதவியை விட்டு விலகலாம். இதற்கான சான்றுகள் சங்க காலத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
கரிகால் சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்போரில் சேரன் பெருஞ்சேரலாதன் முதுகில் காயமுற்றான்.
இந்த இகழ்ச்சியினைத் தாங்க முடியாமல் அச்சேர மன்னன் தன்னை மாய்த்துக் கொண்டான் என்பதனை
இலக்கியம் வாயிலாக அறிய முடிகிறது. சேரன் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னுமிடத்தில்
சோழன் செங்கணான் தோற்கடித்தான். பின்பு சேரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
சிறையில் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது சிறைக்காவலன் இரும்பொறையை மதிக்காததால், அவன்
நீரும் உணவும் உண்ணாமல் இருந்து உயிர் துறந்தான். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மன்னர்கள்
தாங்களாகவே அரச பதவியை விட்டுப் போகின்றனர் என்பது தெரிகிறது.
அரண்மனையில் பல பெண்களைக் கொண்ட அந்தப்புரம்
இருந்தது. இளவரசர்கள் அரசுப் பிரதிநிதிகளாகச் செயலாற்றினர். அரசருக்கான செலவுகள் பொதுநிதியிலிருந்து
எடுத்துப் பயன்படுத்தப்பட்டன. அரசு வருவாய் பணமாகவும், பொருளாகவும் பெறப்பட்டது.vமன்னர்
அரச முடியையும், அடையாளங்களையும் கொண்டிருந்தனர். குறுநில மன்னர்களுக்கு அத்தகைய அரச
முடியும் அடையாளங்களும் இல்லை.
முரசு
போர் முரசு
அரசரின் அதிகாரத்திற்கு அடையாளமாக விளங்கியது.அம்முரசு அரண்மனையில் உள்ள கட்டிலில்
வைக்கப்பட்டு நன்கு பாதுகாக்கப்பட்டது. அமைதிக் காலத்தில் திருவிழாவை அறிவிப்பதற்காக
முரசு கொட்டப்பட்டது. முரசு கொட்டுவதற்கு என்று பரம்பரை ஒன்று இருந்து வந்தது. போர்
ஏற்படும்போது அது முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது. போரில் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படும்
வகையில் முரசு கொட்டப்பட்டது. இம்முரசு போரில் வெற்றி பெற்றதையும் அறிவித்தது. பகைவர்
நாட்டை வென்று அந்நாட்டின் காவல் மரத்தை வெட்டி அதை யானையின் மீது ஏற்றித் தம் நாட்டிற்கு
கொண்டு வந்து அம்மரத்திலிருந்து போர் முரசு செய்தனர்.
வாள்
சங்ககால மன்னர்கள்
வாளையும் பெற்றிருந்தனர். போர் முரசு போல் மன்னர் வாளையும் போற்றி வணங்கி வந்தனர்.
அதனை நீரில் நீராட்டி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.
கொடி
சங்க காலத்தில்
மன்னர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளச் சின்னமாகக் கொடியைக் கொண்டிருந்தனர். சேரர்
வில்கொடியையும், சோழர் புலிக்கொடியையும், பாண்டியர் மீன்கொடியையும் கொண்டிருந்தனர்.
போரின்போது பகைவரின் கொடியை அழிப்பது வீரர்களின் நோக்கமாக இருந்து வந்தது. கோட்டையில்
கொடி பறக்கவிடப்பட்டது. பேரரசுகளின் தலைநகரிலும், அகன்ற தெருக்களிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
குறுநில மன்னர்கள் தனிக் கொடியைப் பெற்றிருந்தனர். அவர்கள் பேரரசருக்குக் கப்பம் கட்டி
ஆட்சி செலுத்துபவர் என அறியலாம். கைப்பற்றப்பட்ட நாடு, வெற்றி பெற்ற நாட்டின் அடையாளச்
சின்னத்தையும் கொடியில் பதித்துப் பறக்க விட வேண்டுமென்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது.
மாலை
சங்க கால மன்னர்கள்
பல்வேறுபட்ட மாலைகளைப் பெற்றிருந்தனர். போர்க்களத்தில் பல்வேறு மன்னர்களின் படையைப்
பிரித்து அறியும் பொருட்டு வேறுபட்ட மாலைகள் அணியப்பட்டன. சிற்றரசர்களும் மாலை அணிந்து
கொண்டனர். சான்றாக ஆய் அண்டிரன் சுரபுன்னை மாலையையும், சேரர் பனம்பூ மாலையையும், சோழர்
ஆத்திப்பூ மாலையையும் பாண்டியர் வேப்பம்பூ மாலையையும் அணிந்திருந்தனர்.
காவல்
மரம்
சங்க காலத்தில்
தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் மரம் இருந்தது. அம்மரம் தெய்வத்
தன்மை பெற்றிருந்ததாக எண்ணப்பட்டது. காவல் மரம் வெட்டப்பட்டால் அந்நகரம் அழிந்துவிடும்
என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.
அமைச்சர்
அரசருக்கு ஆலோசனை
கூறுவதற்கு அமைச்சர்கள் இருந்தனர். தவறான ஆலோசனை கூறி அதனால் தீமை விளையுமாயின் ஆலோசனை
வழங்கிய அமைச்சர்கள் ஏளனம் செய்யப்பட்டனர்.
அரசுப் பதவியில் இருப்பவர்கள் சிறப்பாகச்
செயல்பட்டால் அவர்களுக்கு மன்னன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தான். சான்றாகஎட்டி,
காவிதி, ஏனாதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
தூதுவர்
சங்க கால மன்னர்கள்
தூதுவர்களை நியமித்திருந்தனர். தூது செல்லுதல் அவர்களது பணியாகும். பொதுவாகத் தூதுவர்கள்
நடுவராக இருந்து வந்தனர். ஔவையார் அதிகமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகத் தொண்டைமான்
அவைக்குச் சென்றார். பெரும்புலவரானகோவூர்கிழார் தூதுவராகச் செயல்பட்டு, நலங்கிள்ளி
நெடுங்கிள்ளி ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைத் தவிர்த்து அவர்கள் இருவருக்கும்
இடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டார்.
ஒற்றர்
சங்க கால மன்னர்கள்
தூதுவர்களைப் போல் ஒற்றர்களையும் நியமனம் செய்தனர். ஒற்றர் முறை நிரந்தரமான அமைப்பாக
இருந்து வந்தது. இவ்வொற்றர்கள் பல்வேறு வகைப்பட்ட சத்தங்களை எழுப்பித் தங்கள் செய்திகளைப்
பரிமாறிக் கொண்டனர். ஒற்றர்கள் உள்நாட்டு மக்களையும், அயல் நாட்டினரையும் உளவு பார்த்து
வந்தனர். மேலும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தினர், பகைவர்கள் ஆகியோர்களை
உளவு பார்த்து வந்தனர். இவர்கள் மாறுவேடங்களில் இருந்து வந்தனர். ஒற்றர்கள் கூறுவது
மற்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. ஓர் ஒற்றர் கூறுவதை உண்மையானது என்று
முடிவு செய்யாமல், ஒற்றர்களுக்கு ஒற்றராகச் செயல்படும் மற்றோர் ஒற்றரின் கருத்தைக்
கேட்டு உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது ஒற்றரையும் கேட்டுச் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
ஒற்றர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் தனியாகச் செயல்பட்டனர். ஒற்றர் தவறாகச்
செயல்பட்டால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.