Monday, July 03, 2017

ஆழ்வார்களின் மொழி அமைப்பும் கருத்தியல் கோட்பாடும்

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர் -641 035
பேச:098438 74545.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இயக்கக் காலமாகும். வைதிக மதத்தை மன்னர்கள் போற்றத் தலைப்பட்டனர். வைதிக மதம் என்பது சைவ வைணவ மதங்களாகும். சோழன் இராசராசன், நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளைத் தொகுத்துத் தந்தான். அது போலவே வைணவப் பாசுரங்களை 10-ஆம் நூற்றாண்டில் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்து அருளினார். புறச் சமயத் தாக்குதல்களில் இருந்து விடுபட்ட சைவ வைணவம் சார்ந்த வைதிக சமயத்தார் தத்தம் கடவுளர்கள் தாம் முழுமுதல் கடவுள் என நிறுவத் தலைப்பட்டனர். இதன் விளைவு பயன் உரைக்கும் பாசுரங்கள் முகிழ்த்தன. ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் - அன்பில் - அருளில் - தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். ஆழ்வார்கள் என்பது காரணப் பெயராகவும் அவர்கள் தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
இலக்கியம் என்பது மக்களின் வாழ்வியலைக எடுத்துகாட்டும் கண்ணாடியாகும்.  தமிழ் மொழி என்றாலே பக்தி மொழி என்று அறிஞர்கள் கூறுவதைக் காணமுடிகிறது.  ஒரே இறைவனைப் பற்றி பலர் பாடியிருந்தாலும், அவர்கள் கையாளும் மொழி நடையில் வேறுபாடுகள் காணப்படுவதுண்டு என்பதை அறியமுடிகிறது.  இறைவன் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி இறைவனின் அருளிச் செயல்களின் மீது அவர் கொண்ட ஈடுபாடு அவர் அறிந்த திருத்தலங்கள், மொழி ஆளுமை, எடுத்தாளும் திறன், புலப்படுத்தும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக வேறுபாடு தோன்றுவதுண்டு. ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படும் கருத்துப் புலப்பாட்டினையும் அதனை வெளிப்படுத்த அவர்கள் கையாண்ட மொழிப்பயன்பாட்டையும், வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். 
     எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராமல், இறைவன் மீது கொண்ட அன்பே பக்தி என்று கூறுவர்.  திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டதால் ஆழ்வார்கள் என அழைக்கப் பட்டனர்.  பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார்.  நாயக, நாயகி பாவம், குழந்தையாகப் பாவித்தல், சரணாகதி அடைதல், பரதத்துவம், இறைவன் நாமத்தின் மகிமை, இறைவனின் அருளிச்செயல்களில் கொண்ட ஈடுபாடுகாரணமாக கருத்தும் மொழியும் வேறுபட்டிருப்பதைக் காணமுடிகின்றது. 
இறைவனை வருணித்தல்
     பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும் கண்ணனைக் குழந்தையாகவும் பாவித்து, பல்லாண்டும், பிள்ளைத் தமிழும் பாடியுள்ளார்.   பிற்காலப் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்றுவதற்கு இவரது பாடல்கள் அடிப்படையாக அமைந்தன என்பதில் ஐயமில்லை.  அதனால் ஒரு தாய் தன் குழந்தையை வாழ்த்துவது போல,
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் திண்டோள் மணிவண்ணா”

என்று வாழ்த்துகிறார் பெரியாழ்வார்.  மேலும் கண்ணனின் திருவுருவின் அழகினைப் பாதாதி கேசமாக வருணிக்கிறார்.  தேவகியைச் சீதக் கடலின் அமுதம் என்றும், யசோதையைக் கோதைக் குழலாள் என்றும் போற்றுகிறார்.  இருவருக்கும் மகனாக வளர்ந்த கண்ணன் ஆலிலைமேல் சிறுகுழந்தையாகப் படுத்திருக்கும் காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். 
“பேதைக் குழலி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே”
(பெரி. ஆழ் 3ஆம் திருமொழி : பா -1)

என்ற வரிகளில் உலகையெலாம் தன் வயிற்றினுள் அடக்கி கால் விரலைப் பிடித்துச் சுவைத்து உண்ணும் ஆலிலைக் கண்ணனைக் காட்டுகின்றார்.  காத்தல், அழித்தல், படைத்தல் என்ற மூன்று கடமைகளையும், திருமால் ஒருவரே செய்கிறார் என்பதனை இதன் மூலம் உணர்த்துகிறார்.  பாதங்கள், பத்து விரல்கள், கணைக்கால், முழந்தாள், தொடை, உந்தி, உதரவிதானம், மார்பு,தோள், கைகள், கண்டம், தொண்டை, மூக்கு, கண்கள், புருவம், காது, நெற்றி, முடி என ஒவ்வொன்றையும் அழகுபெற வருணிக்கிறார்.  அவ்வாறு வருணிக்கும் போது, இறைவனின் அருளிச்செயல்கள், அவதாரச் செயல்கள் ஆகியவறறைச் சரியான இடத்தில் பயன்படுத்தி, திருமாலைப் புகழ்கிறார்.
“பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலவே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலையீர்! வந்து காணீரே!”
(பெரி.ஆழ்;. 3 ஆம.; திருமொழி. பாடல். 3:5)

    இப்பாடலில்; இறைவனின் தொடையின் அழகினை வருணிக்க வந்த பெரியாழ்வார் இரு அவதார நோக்கங்களப் புலப்படுத்துகிறார்.  கொடுமை செய்பவர்களைத் தண்டித்தல், நல்லவர்களைக் காத்தல் என்ற நோக்கத்தில் பெண் வேடமிட்டு வந்த பூதகி என்னும் அரக்கியைக் கொல்லுதல், தன் பக்தனான பிரகலாதனைக் காக்க அவன் தந்தையான இரணியனைக் கொல்லுதல் என்னும் இரு செயல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  குழந்தையை மடிமீது வைத்து, பாலுண்ணக் கொடுத்தல், இரணியனைத் தன்மீது கிடத்திக் கூரிய நகத்தினால் மார்பைப் பிளந்து உயிரை எடுத்தல், என்னும் இரு செயல்கள் இப்பாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குழந்தையாக இருக்கும் போதும் நரசிம்மமாக வந்து இரணியனை வதைத்தல் ஆகிய இரு செயல்களிலும் தொடை முக்கியப் பங்காற்றுகின்றது.  அதனை இப்பாடல் வாயிலாகப் புலப்படுத்துகின்றார். 
    இதே பாதாதி கேச வருணனையாக திருப்பாணாழ்வார் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைப் புகழ்ந்து பாடுகிறார்.  பாதங்கள், உதரபந்தனம், அவர் அணிந்துள்ள ஆடை, மார்பு, தொண்டை, கண்டம், வாய், கண், நெற்றி, முடி என வருணிக்கிறார்.      
“அமல னாதிபி ரானடி யார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரை யார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்
திருகமலப் பாதம்வந் தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே”

என்ற பாடலில் அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர்க்கோன், நிமலன், நின்மலன், நீதிவாணன் என்று திருமாலின் நாமங்கள் விதந்தோதப்பட்டன.  அத்தகைய இறைவன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ளான்.  அவனது பாதங்கள் என் கண்களில் முதலில் தென்படுகின்றன என விவரிக்கின்றார்.   இப்பாடலில் திருமாலின் மீது பக்திகொண்ட அடியாரின் மனநிலை வெளிப்படுகின்றது. இறைவனின் அருங்குணங்களும், மற்றும் அவ்விறைவன்  தேவர்களுக்குத் தலைவனாகவும், அவர்களின் துயர் துடைக்கும் அரசனாகவும் திகழ்வதைக் காண்கிறார் திருப்பாணாழ்வார் மேலும்,
“பரிய னாகிவந்  தவவு னுடல்கீண்டு அமரர்க்
கரிய வாதிபி ரானரங் கத்தம லன்கத்துக்
கரிய வாகிப் புடைப் பரந்து மிளிர்ந்து செவவரியோடி நீண்டவப்
பெரிய வாயகண் களென்னைப் பேதைமை செய்தனவே”
(திருபா. ஆழ.; பாடல்: 8)

என்ற பாடலில் நரசிம்ம அவதாரத்தின்  நோக்கத்தினை எடுத்துக்காட்டி அவரது கண்களின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றார்.  திருப்பாணாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடல்களில் பாதாதிகேச வருணனை காணப்பட்டாலும் மொழிநடையிலும், கருத்திலும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுவதை உணர முடிகின்றது.  பெரியாழ்வார் தன்னைத் தாயாக நினைத்ததால் குழந்தைக் கண்ணனின்  திருவிளையாடல் நிகழ்விலும் கண்ணனின் அழகினைப் புகழ்ந்து பாடுவதைக் காணமுடிகின்றது.  பாணர் குலத்தில் பிறந்த பாணாழ்வார் இறைவனை நேரடியாகக் காணும் வாய்ப்புக் கிட்டியபோது திருமாலின் அழகு அவரைக் கவர்கின்றது.  அதனால் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் வர்ணிக்கும் போது அதற்கேற்ற அவதார நிகழ்வினை விவரிக்கிறார்.  பெரியாழ்வார் இரணியன் என்று பெயரைச் சுட்டுகிறார்.  ஆனால் திருப்பாணாழ்வார் அவுணன் என்று விளக்குகிறார்.  இருவரும் நரசிம்ம அவதாரத்தை விளக்கினாலும், சொற்பயன்பாட்டிலும் கருத்திலும் வேறுபாட்டைக் காணமுடிகின்றது. 
குழந்தையாகப் பாவித்தல் 
    பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும் திருமாலைக் குழந்தையாகவும் பாவித்ததால் தாலாட்டு, வருகை, சப்பாணி, அம்புலி காட்டல், நீராட அழைத்தல், காக்கையினை அழைத்தல் சோறுண்ண அழைத்தல், என்று பல நிலைகளில் மகிழ்வாகப் பாடுகின்றார்.
“மாணிக்கங் கட்டி வயிர மிடைக் கட்டி
ஆணிப்பொன் னாற்செய்த – வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ”                               (பெரியாழ். 4:1)

என்ற பாடலில் கண்ணனைத் தாலாட்டுகிறார்.  கண்ணன் உறங்கும் தொட்டில் மாணிக்கமும் வைரமும் இழைத்த தங்கத் தொட்டில்.  அதனைப் பிரமன் செய்து தந்தான் என்று விளக்கி வாமன அவதாரச் சிறப்பினை இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.  வாமனனாக வந்து மூன்றடிமண் கேட்டு திரிவிக்கிரம வடிவத்தை எடுத்து இவ்வுலகையளந்தவன் என்று விவரிக்கின்றார்.  வானளாவ வளர்ந்த திருமால் இங்குக் குழந்தையாகத் தங்கத் தொட்டிலில் படுத்துள்ளான் என்ற பாடல் மூலம் உண்மையான பக்தி உடையவர் நெஞ்சில் குழந்தையாக வந்து இடம்பெறுவான் என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றார்.
“அப்பம் கல்தசிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்கட்டு வத்தேன் தின்ன லுறுதியேல் நம்பி
செப்பின மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும் சோத்தம் பிரானிங்கே வாராய்”
(பெரி. ஆழ்;.தி.மொழி.பா. 5)

என்ற பாடலில் கண்ணன் விரும்பி உண்பதற்காக அப்பமும், அக்கார அடிசிலும், செய்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்.  குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் உணவாகவும், வயிற்றிற்குத் தீங்கு விளைவிக்காத உணவாகவும் இதனைக் கூறுகின்றார்.  குழந்தைக் கண்ணனை நீராட அழைப்பதாக இப்பாடல் கூறுகின்றது.
     இதைப்போல குலசேகர ஆழ்வார், தன்னைத் தேவகியாகவும், தயரதனாகவும் பாவி;த்து, திருமாலின் கண்ணன், இராமன் குறும்புகளைக் காணாத நிகழ்வினை நொந்து பாடும் தாயாகவும், தந்தையாகவும் பாவித்துப் பாடுகின்றார். 
“முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டப்பதற்க கௌ;கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுக யும்மஞ்சி நோக்குமந் நோக்கு மணிகொள்
செஞ்சிறு வாய்நெளிப்பதுவும்
தொழுகை யும்மிவைகண்ட யசோதை தொல்லை
யின்பத் திறுதிகண் டாளே”     (குல. ஆழ.; பா. 8)

என்ற பாடலின் வாயிலாகக் கண்ணனின் பாலக விளையாட்டான தன் தாமரைக்கையில் வெண்ணெய் அளைந்து கொடுத்தலையும், செவ்வாயில் வெண் தயிர் தோய்ந்தமையும், கண்ணனை மிரட்டும்போது அவனது அழுகையும் பயந்தது போல் செய்யும் பாவனையையும்;, கைகூப்பித்  தொழும் செய்கையையும், காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று தன்னைத் தேவகியாகப் பாவித்துப் புலம்புவதாகக் குலசேகராழ்வார் பாடுகிறார். ஆனால் பெரியாழ்வார் தன்னை யசோதையாகப் பாவித்து, கண்ணனைத் தூங்கவைக்கும் தாலாட்டையும், தளர் நடை நடந்து வரும் வருகையையும், கைகள் தட்டி சப்பாணிக் கொட்டுவதையும், அம்புலி காட்டி சோறு ஊட்டுவதையும், மிகவும் மகிழ்ச்சியாகத் தாயாக வெளிப்படுத்துகிறார்.
     சோகம் ஒ மகிழ்ச்சி என்ற வகையில் இருவரின் கருத்துக்கள் இருந்தபோதும், கிருஷ்ணாவதாரம், இராமாவதாரம் என்னும் இரு அவதாரங்களில் கண்ணனைப் பிரிந்த தேவகி மற்றும் தயரதனின் சோக நிகழ்வினை வெளிப்படுத்துகிறார் குலசேகராழ்வார்.  ஆனால் பெரியாழ்வார் யசோதையாகப் பாவித்து கண்ணனின் பால லீலைகளையும், பிற அவதாரச் சிறப்புகளையும், அதன் வாயிலாகக் கொடுமையினை எதிர்த்துப்  போராடும் நிகழ்வுகளைச் சரியான இடத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.
நாயக நாயகி பாவம்
     இறைவனைத் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும் பாவித்து அகப்பாடலாகப் பாடுவதே நாயக நாயகி பாவம் எனப்படும்.  அவ்வகையில் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளனர். ஆண்டாள் பெண்ணாக இருப்பதால் தன் மனவுணர்வினை, ஆழ்ந்த பக்தியினை, இறைவன் மீது கொண்ட காதலை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.  அதனை,
“வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கணாக் கண்டேன் தோழீ நான்”
(ஆண்டாள் நாச்சியார் திருமொழி -6)

என்ற பாடலில் திருமால் ஆயிரம் யானைகள் சூழ வந்து பூரண பொற்குடமும் தோரணம் கட்டிய மணப்பந்தலில் ஆண்டாளைத் திருமணம் செய்வதாகச் சுட்டப்பட்டுள்ளது. 
சரணாகதி அடைதலும் இறைவனை வேண்டுதலும்
     இறைவனைத் தவிர வேறு கதியில்லை என்று அவனைச் சரணடைதலே சரணாகதி என்பர்.  இதனை,
“தருதுயரந் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில் சூழ்விற்றுவக்கொட் டம்மானே
அரிசினத்தா லீன்றதா யகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழுங்குழவி யதுபே போன்றிருந்தேனே”

என்ற பாடலில் உன்னைத் தவிர யாருமில்லை.  உன்னையே சரணடைந்தேன் என்று கூறி அதிகோபத்தினால் குழந்தையை அகற்றும் தாயின் அன்பை நினைந்து அழும் குழவி போன்று உன் அருள் நினைந்து சரணாகதியடைகிறேன் என்று விளக்குகிறார்.
“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்  பெருந்துய ரிடும்பையிற் பிறந்து
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ டவர்தரு கலலியே கருதி
ஓடினேன் ஓடி யுய்வதோர் பொருளா லுணர் வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்”

என்ற பாடலில் இவ்வுலக வாழ்க்கையே இன்பம் என்று கருதி வீணே நாட்களைக் கழித்துவிட்டேன்.  இறுதியில் நாராயணா எனும் நாமத்தைக் கைக் கொண்டேன் என்று சரணடையும் நிலையைச் சுட்டிக் காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.  குலசேகராழ்வார் உவமையினை விளக்கிக் கூறி சரணடையும் நிலையைச் சுட்டுகிறார்.  உலக இன்ப வாழ்க்கையிலிருந்து மீள இறைவனின் நாமம் உதவியது என விவரிக்கினறார் திருமங்கையாழ்வார். 
தொகுப்புரை
    ஆழ்வார்கள் அனைவரும் திருமாலை முழு முதற் தெய்வமாகக் கொண்டு அந்த பக்தியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் பாடலின் பொருளுக்கேற்ப  மொழிப்பயன்பாடு வேறுபடுவதைக் காணமுடிகின்றது.  
    மகிழ்வான தாயின் மனநிலைக்கும், குழந்தையைப் பிரிந்த தாயின் மனவேதனைக்கும்  இடையே, உள்ள வேறுபாட்டை பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் புலப்படுத்துகின்றார். 
    ஒரு பெண்ணின் கடவுள் காதலுக்கும், ஆணின் கடவுள் காதலுக்கும் வேறுபாடுண்டு என்பதையும், சரணாகதி தத்துவத்தையும,; பரதத்துவத்தையும் விளக்குவதில் ஏற்படும் வேறுபாடுகளையும் இப்பாடல்கள் நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.

கவிஞர் புவியரசு கவிதைகளில் சமூகமும் இயற்கையும்

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர் -641 035
பேச:098438 74545.

வாழ்க்கை என்பது இயற்கையோடு இயைந்தது. உலக உயிர்கள் அனைத்தும் இயற்கையின் இயல்பான வெளிப்பாடுகளாகும். அறிவாலும், அன்பாலும் அமைத்துக்கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பே மானுட வாழ்க்கையாகும். வாழ்க்கையின் இயக்க வெளிப்பாடே இலக்கியம் ஆகும், படிப்போர்க்கு இன்பம் தரும் வகையில் நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் தம் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் முறைப்படுத்தி எழுதுவது இலக்கியம் ஆகும். படைப்பாளி தன்னை உணர்ச்சி வயப்படுத்திய பொருளை, நிகழ்வை அதே உணர்வோடு நமக்குக் காட்டும் வடிவமே இலக்கியம் ஆகும். காலத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் இலக்கியம் காலந்தோறும் புதிய கருத்துக்களைப் பெற்று, புதிய வடிவங்களை ஏற்று  காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. இலக்கிய வடிவமும், பாடுபொருளும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. தமிழ் தன் நிலைப் பேற்றினை புதுப்புது வடிவங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறது. அவ்விலக்கிய வகைகளில் புதுக்கவிதையும் ஒன்று. தொல்காப்பியர் இதனை,
“விருந்தேதானும் புதுவது புனைந்த
யாப்பின் மேற்றே” (தொல் - செய். நூற்பா- 231)
என்கிறார் தொல்காப்பியர்.
கவிதை என்பது கவிஞரின் உணர்ச்சி வெளிப்பாடு. இக்கவிதை மனித வாழ்க்கையின் வெளிப்பாட்டினை, சமூகத்தின் சிக்கல்களை ஆழமாகக் காட்டும் கண்ணாடியாகவும் விளங்கி வருகிறது. கவிஞர் புவியரசு தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த நன்முத்தாக காட்சியளிப்பவர். தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்துவதிலும், நெறிபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவர் எழுதிய கையொப்பம் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலமாக புலப்படும் சமூகவியல் சிக்கல்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காலநிலை மாற்றங்கள் அன்றாடம் புதுப்புது விளைவுகளை ஏற்படுத்தும் இம்மாற்றங்களால் மக்கள்படும் இன்னல்கள் நாம் அறிந்ததே. புது கவிதையின் வாயிலாக சமூக மாற்றங்களை எடுத்துக் கூறுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். நேர்மையும் சத்தியமும் மிக்க கவிஞனுக்கு அவனுடைய ஒவ்வொரு கவிதையும் தானே உண்மையான கையொப்பம்.
    “கவிஞர் புவியரசுவின் கையொப்பங்களை இந்தத்தொகுப்பிலும் இடையுறாத சத்தியத் தேடலின் தொடர்ச்சியாக காண முடிகிறது” என்கிறார் சிற்பி. (கையொப்பம். முன்னுரை ப -15)

இயற்கை என்பது இம்மண்ணின் கொடை. மனிதன் கூடிவாழ இயற்கையே துணை செய்கிறது. அத்தகைய இயற்கையை இன்று பலரும் பல விதங்களில் சுரண்டி வருகின்றனர். இதன் காரணமாக இயற்கையின் பல மாற்றங்களுக்குக் காரணம், இயற்கை வளங்கள் கொள்ளை போவதே என்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.
“இது மண்சாலை அன்று
ஒரு காலத்தில்
நிரோடிக் கொண்டருந்த
உனது நதி
நீ
அமெரிக்காவுக்கு
சம்பாதிக்கப் போயிருந்தபோது
விற்றுவிட்டார்கள்” (ப-41)
நாட்டின் இயற்கைச் செல்வங்கள் யாவும் கொள்ளை போவதால் இருக்கிறவற்றையேனும் ஒரு வரலாற்றுப் பதிவுக்காகப் படம் பிடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார் கவிஞர். நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. விவசாய விளை நிலங்கள் அனைத்தும் பெரியவீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவருகின்றன. அடியோடு அழிந்து வருகின்றது. இந்திய அறிஞர்கள் உலகமயமாதல் குறித்து குமுறுகிறார்கள். இந்தக் குமறலே கவிதையின் பாடுபொருளாகிறது. எனவே நம் நாட்டின் இயற்கை மண் வளங்களைக் காப்பதே நமது நாட்டிற்கும் வீட்டிற்கும் மனித குலத்துக்கும் மண் மீது உள்ள உயிர்களுக்கும் நலம் பயப்பதாக அமையும். 
    சமுதாயத்தில் அமைதி என்ற ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆங்காங்கே கொலை, கொள்ளை போன்றவை நடந்து வருகின்றன. இதைத்தான் கவிஞர்
“இந்தியாவின்
மொத்தகடுகையும்
பெரியண்ணன் வாங்கிச் சென்றுவிட்டான.;
வரப்போகும்
ஈரான் போரில்
தாளிப்பதற்காக” (ப-48)
என்றவாறு குறிப்பிடுகிறார். நாட்டில் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேலையில் கார்கில் போர் மற்றும் காஷ்மீரில் படுகொலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தவறுகள் மற்றும் தீவிரவாதம் குறையும் என்பது இக்கவிதையின் உட்கருத்தாகும். இதனை புறநானூறு,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தரவாரா” (புறம்-192) என்கிறது.
எல்லோர்க்கும் எல்லா ஊரும் சொந்த ஊரெ என்னும் போக்கு சமுதாயத்தில் சாதி, மத, இனம், மொழி என்னும் வகையால் நம் நாடு ஒன்றுபட்டு வாழவேண்டும், என்பதை வலியுறுத்துகிறது. அப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் அமைதி தானாக வந்துவிடும். அமைதி இருந்தால் தான் மகிழ்ச்சி தோன்றும்.

    நம் நாட்டில் கேள்வி கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால் பதில் கூறுவதற்குத் தான் ஆள் இல்லை. இதனை,
“கையில்
அரிவாளைத் தூக்கிக் கொண்டு
ஆட்டம் போட்டது கேள்வி”
“நெடுநேரம் கழித்து
மெல்லமேலே எழுந்தது
பதில்
கையில் ஓர் அரிவாளுடன்!” (ப-57)
சமுதாயத்தில் ஒவ்வொரு வரும் கேள்வி கேட்க வேண்டும். சமூகத்தில் அநீதி அவலங்கள் சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை போன்றவற்றை எதிர்த்து நீதிக்குரல் கொடுத்து கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாடும் வீடும் செழிப்படையும். தண்ணீர்
அடுத்த உலகப்போரே தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என்கிறார் வைரமுத்து. சமுதாயத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுவருவதை கீழ்வரும் கவிதைவரிகள் உணர்த்துகின்றன.
“வானம் பார்த்து
வறண்டு கிடந்தது அந்தக்குளம்
பாளம் பாளமாய்
வெடித்தது பிளந்த நெஞ்சுடன்” (ப-146)
மழை இல்லாமல் பூமியில் உள்ள குளம், குட்டை எல்லாம் வறண்டு கிடக்கிறது. இக்காட்சியை காணும் போது மழை எப்போ வரும் என்று பூமி ஏங்கு விதமாக உள்ளது. மேலும் நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்கிறார். மக்கள் அன்றாடம் தோன்றும் காட்சிகளாய் அன்று தோன்றும் பிரச்சனைகளை அன்றே முடிக்க பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு நிரந்தறத் தீர்வுகளுக்கு பதில் இல்லை என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.

    மறதி என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது. மறதி இருந்தால் தான் அடுத்ததை பற்றி சிந்திக்க முடியும். எனவே மறதி மனிதனுக்கு இறைவன் அளித்த வரமாகக் கொள்ளலாம். இதனை,
“ஒருவகையில்
மறதி வசதியானதுதான்
வாங்கிய கடனையும்
மறக்கநேர்ந்தால்” (ப-154)
சமுகத்தில் அனைவரும் ஏதாவது ஒரு கடனில் மூழ்கியுள்ளனர். அதிலிருந்து வெளிப்படும் வழி தெரியாமல் அல்லல் பட்டுவருகின்றனர். இத்தன்மையை ஆசிரியர் அழகாக புலப்படுத்தியுள்ளதன் மூலம் ஒவ்வொருவரும் தன் வருமானத்தைப் பெருக்கி அளவோடும் வளத்தோடும் வாழவேண்டும் என்பதே ஆசிரியரின் ஆவலாக உள்ளது.

    மனிதம் இன்றைய நிலையில் இயந்திரத்தனமாக மாறிவிட்டான். எதையும் நின்று நிதானித்து செயல்படும் முறை இல்லை. மதங்கள் போதித்ததையும் மேதைகள் போதித்ததையும் மறந்து திரிகிறான். இதன் காரணமாக சமூக கட்டமைப்பு இன்று கேள்விக்குள்ளாகிறது. சகமனிதனை மதிக்கும் தன்மை இல்லை. சுயம் பெருகி சுயமிழந்து நிற்கும் நிலை உருவாகிவிட்டது. இதன் எதிர்காலம் மிகப்பெரிய அச்சத்தைத் தரவல்லது. இதனை கவிஞர்,
“நான் அவரைச் சாப்பிட்டேன்
நன்றாக மென்று தின்றுதான்” (ப-54)
என்று விளக்குகிறார்.
மனிதன் சகமனிதனிடத்துக் காட்டும் அன்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாகரிக வளர்ச்சி என்பது இயந்திரத்தனமானது அன்றும் என்றும் எத்தகையச் சூழலிலும் தன் குண இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் சகமனிதர்களிடமும் அன்பு கொண்டவர்களாகவும் உறுதிக் கொண்டவனாகவும் திகழும் போது அவன் மனிதன் ஆகிறான். அதனால் அவன் புனிதம் அடைகின்றான்

    மனிதனது வாழ்க்கை ஒரு சக்கரம். அவனது வாழ்க்கை காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிறது. கடிகாரமும் ஓடுகிறது அவனும் ஓடுகிறான். ஏதற்காக ஓடுகிறான்? ஒருசான் வயிற்று பிழைப்புக்காகதான். அவன் கடைசியில் ஓய்வு எடுப்பது அவன் மரணத்தில் தான் என்பதை உணர்த்துகிறது. இக்கவிதை,
“கடிகாரத்தில்
காலம் இருப்பதாகத்தான்
நினைக்கிறார்கள்
எல்லாரும்
பாவம்,அது
நேரம் காலம் இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது” (ப -58)
மனிதன் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். “காலத்தே பயிர்செய்” என்பார்கள் காலமும் நேரமும் ஒரு மனிதனுக்கு மிகமுக்கியமான ஒன்றாகும். இதனை திருக்குறள்,
“காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்” (குறள்-485)
இலக்கை அடைய வேண்டி விரும்புபவர் அதை நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். அத்தகைய இலக்கை அடையத் தக்ககாலத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பார்கள். உழைப்பு என்பது காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்க மனிதன் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சமுதாயத்தில் உழைக்கும் மனிதர்கள் நம் நாட்டில் இருந்தால் நம் நாடு ஒரு வல்லரசாக
மாறும், என்பதுஎன் கருத்து.   

    நீ எதை புதைத்தாலும் நான் மீண்டும் மீண்டும் முளைத்து வெளியே வருவேன். என் சமுதாயத்தில் குப்பைகளை புதைக்க வேண்டும். நல்ல எண்ணங்களை ஊக்குவிக்க வேண்டும். வெளிக்கொனற வேண்டும்.
“நீ புதை
நான் தோன்றுகி;றேன்
எவ்வளவுகாலம் தான்
புதைத்துக் கொண்டே இருப்பாய்?
நீ இருப்பதைப் புதைக்கிறாய்
எனக் கானாததைப் புதைக்கிறாய்
நீதான் களைத்துப் போவாய்” (ப-109)
    என் அறிவை, என் சிந்தனையை, என் எண்ணங்களை புதைத்தாலும் நான் விஸ்வரூபமாக வெளியே கொண்டு வருவேன். கடைசியில் நீதான் கலைத்து போவாய் சமுதாயத்தில் நல்ல மனிதத்தன்மை உடைய (குணமுடைய) மனிதர்களை காண்பது அரிதாக உள்ளது. இவ்வாறு புதைப்பவர் தான் அதிகமாக இருக்கிறார்கள். இதனை வள்ளுவர்.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொருத்தல் தலை” (குறள் -151)
    தன்னை தோண்டுபவரைக் கூட கீழே தள்ளாமல் தாங்கிக் கொண்டிருக்கிற நிலம் போலத் தம்மைப் பழிப்பாரையும் மன்னித்தலே நல்லது. சமுதாயத்தில் தீய எண்ணங்களை புதைத்தல் வேண்டும். நல்ல சிந்தனைகள் புதிது புதிதாகத் தோன்ற வேண்டும்.

    மெழுகுவர்த்தி எவ்வாறு தன்னை உருக்கி உலகிற்கு வெளிச்சத்தை தருகிறதோ அதுபோல் சமுதாயத்தில் வாழும் மனிதன் தன்னை உருக்கி உலகத்திற்கு வெளிச்சத்தைக் காட்ட வேண்டும்.
“மெழுகுவர்த்தி வாங்கி வை!
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
விளக்கணையும்” (ப- 145)
வாழ்க்கையில் எதிர்பாராதது எந்தநேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். மனிதன் எப்பொழுதும் எதற்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை இழந்தும் ஒளிதரும் மெழுகை போல, மனிதன் மற்றவர்களுக்குப் பயன்படும் போதுதான் முழுமையாகிறான,; என மனிதனின் முழுமைக்குச் சான்று தந்திருக்கிறார்.
நாடு செழிக்க வேண்டுமானால் நல்லெண்ணம் வளர வேண்டும். உதவும் மனப்பான்மை இருக்கவேண்டும். நற்சிந்தனைகள் தோன்ற வேண்டும். எல்லோரும் மெழுகுவர்த்திகளாய் திகழ வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக சாதி, குலம், இனம். மொழி, நாடு என்ற பேதம் இல்லாமல் வாழ வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது புலனாகிறது.

தொகுப்புரை
    இக்கட்டுரையின் வாயிலாக கவிஞர் புவியரசுவின் கவிதைகளில் இயற்கை, விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை எடுத்துக் கூறியுள்ளார். மற்றும் தீவிரவாதத்தைப் பற்றியும் சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை பற்றியும் அதை கலைந்து தீர்வுகாணும் நோக்கில் எடுத்துக் கூறியுள்ளார்.ஒருமனிதன் இந்த சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கும் மனிதனாக இருக்க வேண்டும்.
    ஒரு மெழுகுவர்த்தி போன்று செயல்பட வேண்டும், என்ற கருத்தினை நூல் முழுவதும் ஆங்காங்கே கூறிச் செல்கிறார். தான் வாழ்ந்த காலத்தன் சமூக சூழல்களை, எடுத்துக் காட்டி இனி வாழப்போகும் சமுகத்திற்கான அடுத்தக்கட்ட தேடல் எது என்பதையும் ஆசிரியர் சுட்டிச் செல்வது அவரது இலக்கை வலியுறுத்துவதாக அமைகிறது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...