Tuesday, May 23, 2023

குறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு

முன்னுரை

பழந்தமிழரின் வானிலை அறிவுநுட்பத்தை எடுத்துரைக்கும்நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இயற்கையோடு இயைந்த வாழ்வியல் இன்பத்தை அகப்பாடல்கள் வழி எடுத்துரைக்கும் குறுந்தொகைப் புலவர்கள் அவற்றில் தம் அறிவியல் நுண்ணறிவையும் பதிவுசெய்தனர்.  தாம் வாழும் உலகத்தின் சூழல்களையும் இயற்கை நிகழ்வுகளையும் எந்தவிதத் தொழில் நுட்பக் கருவிகளும் இன்றித் தம் கண்களாலும் அனுபவத்தாலும் உணர்ந்து அவற்றைத் தகுந்த தமிழ்ச்சொற்களால் வெளிப்படுத்தியிருக்கும் அவர்தம்அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது. இக்கட்டுரை பழந்தமிழரின் வானிலை அறிவியல் அறிவைக் குறுந்தொகைப் பாடல்கள் வழி ஆராய முற்படுகிறது.


வானிலைஅறிவியல்


இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறைகளுள் ஒன்று Meterology எனப்படும் வானிலை அறிவியல் ஆகும். வானிலையும் காலநிலையும் இன்று மனிதர்கள் அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத் தேவையாக மாறியுள்ள சூழலில் வானிலை அறிவியல் முக்கியமான துறையாகக் கருதப்படுகிறது. இன்றைய வானிலை அறிவியல் குறித்த செய்திகளோடு குறுந்தொகைச் செய்திகளும் ஒப்பிட்டு நோக்கப்பட்டு இங்கே விவரிக்கப்படுகின்றன.


குறுந்தொகையில் மேகம், இடி, மின்னல், மழை போன்ற வானிலை தொடர்பான பல குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.


மேகங்கள்


தற்கால வானிலை அறிவியல் மேகங்களைப் பலவகைகளாகப் பிரிக்கிறது. அவை,1. கீற்றுமுகில் (Cirrus), 2. கார்முகில் (Nimbo stratus), 3. படர்முகில் (Alto stratus), 4. திரள்முகில் (Cumulus) என்பனவாகும். குறுந்தொகைப் பாடல் வருணனைகளில் இத்தகைய மேகங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.


வெண்மையான தோற்றத்தைக் கொண்டவையும் மிக உயரமான மலைப்பகுதிகளில் உருவாகி ʻஉயர்மேகங்கள்’ (high clouds)  என்று கூறப்படுபவையும் ஆகிய கீற்றுமுகில்கள்  ʻஉறையறு மை’ (339) என்று மழைத்துளிகளற்ற வெண்மையான  மேகங்களாகக் குறுந்தொகையில் கூறப்படுகின்றன.அதிக அடர்த்தியோடும் கறுத்த சாம்பல் நிறத்தோடும் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் கார்முகில்களைப் பற்றி,



ʻகறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய

மங்குல் மாமழை வீழ்ந்தென’    (90)            


என்று கூறுகிறது குறுந்தொகை. இலேசான மழைத் துளிகளைப் பெய்து கொண்டிருக்கும் நீர்த் திவலைகளால் ஆன படர்முகில்கள் ʻதளி தரு தண்கார்’  (65) என்றும், புயல், இடி, பெருமழையை உருவாக்கும் திரள்முகில்கள்,


ʻசேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்

தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலை’   (314)


என்றும் குறுந்தொகைப் புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். தமிழகம் வெப்ப மண்டல நாடாகும். எனவே, பிற பருவங்களில் காணப்படும் மேகங்களை விட மிகுந்த மழையைத் தரும் கார்காலத்தின் திரள்முகில் இனங்களே குறுந்தொகைப் புலவர்களால் பெரிதும் விரும்பி அதிகமாகப் பாடப்பட்டுள்ளன.



ʻகழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்

புதுநீர் கொளீஇய உகுத்தரும்

நொதுமல் வானத்து முழங்கு குரல்  கேட்டே’  (251)           என்னும் இடைக்காடனாரின் பாடல் நீர்மேலாண்மைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ʻநீர் சுமந்த மேகங்கள் மழையாகப் பொழிந்தால் மட்டுமே மீண்டும் கடல்நீரை முகந்து நீர் சுமந்து மழையாகப் பொழிய முடியும்’ என்னும் செய்தி அறிவியல் நுட்பத்தோடும் வாழ்வியல் சிறப்போடும் கூறப்பட்டிருப்பது ஆய்ந்து உணரத்தக்கது.


இடி


ʻவெடி ஒலி உரும் கோ விண்ணேறு அசனி

செல் இகுளி இடியேறு மடங்கலும் ஆகும்’


என்று இடியின் பல்வேறு பெயர்களைப் பிங்கல நிகண்டு பட்டியலிடுகிறது. குறுந்தொகைப் பாடல்களில் இடியின் தன்மை குறித்துப் பாடும் செய்திகள் நுட்பமானவை. இடியின் வேகத்தைக் கணக்கிட்டு வருணிக்கும் திறம் இன்றைய வானிலை ஆய்வுக்கு இடம் தருவதாகும்.



குறுந்தொகைப் பாடல்கள் வழி இடியின் தன்மைகளை 1. ஆரவாரத்தை உடைய இடி, 2.முரசு போல் முழங்கும் இடி, 3. பாம்பைத் துணிக்கும் இடி என மூன்றாகப் பிரிக்கலாம்.


ஆரவாரத்தை உடைய இடியைக் குறுந்தொகை ʻஇடியேறு’ என்றும் ʻஆர்கலி ஏறு’ என்றும் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய மின்னலுக்குப் பிறகோ, மேகங்களிலும் மலைத்தொடர்களிலும் பட்டு எதிரொலிப்பதாலோ தொடர்ந்து நெடுநேரம்ʻகிடுகிடு’வெனக் கேட்கும் இடியோசையைக் குறுந்தொகை ஆரவாரிக்கும் இடியோசையாகக் குறிப்பிடுகிறது. 


ʻகருவி மாமழைச் சிலை தரும் குரலே’         (94)


ʻஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த’     (186)                      


என்று குறிப்பிடும் குறுந்தொகை, முரசு போல் முழங்கும் இடியை,


ʻவென்று எறி முரசின் நன் பல முழங்கி

பெயல் ஆனாதே  வானம்’     (380)



எனக் கூறுகிறது. இவ்விரு இடிகளின் தன்மையுடன் மேலும் கடுமையாக முழங்கும் இடியைப் ʻபாம்பைத் துணிக்கும் இடி’ என்று குறுந்தொகை கூறுவது சிறப்பிற்குரியது. இத்தகைய இடி பற்றி நான்கு பாடல்கள் நூலில் உள்ளன.


ʻநெடு விசை மருங்கின் பாம்புபட இடிக்கும்

கடுவிசை உரும்’                                                                 (158)


ʻவெஞ்சின அரவின் பைந்தலை துமிய

நரை உரும் உரரும்’                                                                          (190)


ʻ……………………………பாம்பின்

பையுடை இருந்தலை துமிக்கும் ஏறு’                          (268)


என்று கூறுவது நோக்கத்தக்கது. சங்கப் புலவர்கள் வானிலைச் செயல்பாடுகளை உற்று நோக்கி அவற்றின் தன்மையைத் தம்மால் இயன்றவரையில் பாடல்களில் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.


மின்னல்


மின்னலுடனும் இடியுடனும் பெய்யும் மழையைக் குறுந்தொகை ʻகருவி மாமழை’ என்று  குறிப்பிடுகிறது.


……………………..மாமழை

இன்னும் பெய்யும் முழங்கி

மின்னும் தோழி’                     (216)


என்னும் காஞ்சிக் கொற்றனின் குறுந்தொகைப் பாடல் ‘தோழி! கரிய பெரிய மேகங்கள் இன்னும் மழையைப் பெய்ய மேலும் முழங்கி மின்னுகின்றன’ என்னும் வானிலை முன்னறிவிப்பை எடுத்துரைக்கின்றது எனலாம்.


மழை


பழங்காலத்தில் மழை பற்றிய அறிவியல் உணர்வு தமிழர்களிடம் இருந்ததைப் போல பிற நாட்டாரிடம் இல்லை எனலாம். பிற நாட்டினர் மழையைக் கண்டு அஞ்சி அதனைக் கடவுள் தந்த தண்டனையாகக் கருதிய காலகட்டத்திற்கு முன்னரே பழந்தமிழர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை உணர்ந்திருந்தனர்.


குறுந்தொகைப் பாடல்கள் வழி பழந்தமிழர் மழையை,1.தூறல் மழை, 2.விடாமழை, 3.புயல்மழை, 4.பெருமழை என்று பகுத்துணர்ந்த அறிவு நுட்பத்தை அறியலாம். இவற்றுடன் ‘வம்பமாரி’ என்ற ஒன்றையும் பதிவு செய்தனர்.



வானம் மங்கலாக இருக்கும் போதும், மூடுபனி இருக்கும் போதும் பூமியில் மிகச் சிறு திவலைகளாக விழும் தூறல் மழையை,


ʻஊதை தூற்றும் கூதிர் யாமத்து’                                         (86)

ʻவந்த வாடைச் சில் பெயல் கடைநாள்’                      (332)                      


என்னும் குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன.


ʻபெரும்பெயல்’, ʻமாமழை’,ʻபடுமழை’,ʻகலிமழை’ என்னும் அடைமொழிகளால் பெருமழையைக் குறுந்தொகைப் புலவர்கள் குறிப்பிட்டு மகிழ்ந்தனர். பழந்தமிழர் நீர்வளம் நிரம்பப் பெற்று வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். அதனால் பெருமழை பொழியும் கார்காலத்தைப் புனைந்து பாடுவதில் புலவர்கள் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர்.  


ʻபெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்’   (13)

ʻபடுமழை பொழிந்த சாரல்’                         (249)

ʻகலிமழை கெழீஇய கான்யாற்று இடுகரை’     (264)    


என்பன போன்ற பாடல் வரிகள் குறுந்தொகையுள் மிகுதி.


பெருங்காற்றோடு பெய்த பெருமழையைப் புயல்மழை என்று குறுந்தொகையில் பதிவு செய்கிறார் பெண்பாற் புலவரான ஔவையார்.


ʻநெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்

கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்

காலொடு வந்த கமஞ்சூல் மாமழை!

ஆர் அளி இலையோ நீயே? பேரிசை

இமயமும் துளக்கும் பண்பினை!’                      (158)



என்ற பாடல் இமயமலையையும் அசைக்கும் ஆற்றலுடைய காற்றோடு வரும் பெருமழை குறித்த செய்தியைக் கூறுகிறது. வானிலை ஆய்வாளர்களின் கருத்தோடு ஒப்பிட்டால் இதனைப் புயல் மழையாகக் கருதலாம்.


இடைவிடாது பெய்யும் அடைமழையைக் குறுந்தொகை,


ʻபொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது

கழுது கண்பனிப்ப வீசும்’              (161)

ʻபெயல் ஆனாதே வானம்’           (380)                           


என்று குறிப்பிடுகிறது. குறுந்தொகையுள் காணப்படும் பாடல் ஒன்று கோடைமழை பற்றிக் கூறுகிறது.


ʻஉவரி ஒருத்தல் உழாஅது மடியப்

புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய

இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே’   (391)


ʻபசுக்களும் மான்களும் வெம்மையால் புழுங்கி துன்புறும்படியாக, மேகம் மழைபெய்தலை நீங்கிய காட்டில் கடுமையாக இடிக்கும் இடியினால் பாம்புகள் படம் அடங்கிக் கிடந்தன. கரிய மேகங்கள், பெய்யும் பருவமறியாது இடியோடு கலந்து இனிதாகத் தாழ்ந்தன’ என்னும் செய்தி கோடை மழையைக் குறிப்பதாகும்.


பழந்தமிழரின் வானிலை அறிவு நுட்பத்துக்கு,  அவர்கள் காலமழைக்குச் சூட்டிய பெயர்களே சான்றாகும். உரிய பருவத்தில் பெய்யும் மழையைக் ʻகாலமாரி’ என்னும் பெயராலும் காலமல்லாத காலத்தில் பெய்த மழையை ʻவம்பமாரி’ என்னும் பெயராலும் அழைத்த அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது.


ʻகாலமாரி மாலை மாமழை’                                                  (200)

ʻகாலமாரி பெய்தென’                                                                     (251)


 


எனப் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழையைக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.


ʻவம்பமாரி’ என்னும் சொற்றொடர் பழந்தமிழரின் அறிவுக்கூர்மைக்கும் அறிவியல் நுட்பத்துக்கும் சொல்லாட்சித் திறனுக்கும் தக்க சான்றாகும்.


ʻ வம்பு நிலையின்மை’                 (தொல்.உரி.31)


என்று வம்பு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுகிறது தொல்காப்பியம். பருவமல்லாத காலத்தில் பெய்து பின் மாறி விடுகின்ற நிலையில்லாத மழையே வம்பமாரியாகும்.


ʻபருவம் வாரா அளவை நெரிதரக்

கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த

வம்பமாரியைக் காரென மதித்தே’                                              (66)

ʻவம்பு பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாராரே நம் காதலரே!’ 



கார்காலம் வந்தும் தலைவன் வராததால் வருந்தியிருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி ʻஇது காலமாரி அன்று, வம்பமாரி’  என்று கூறுவதாக அமைந்த சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதி. இச்செய்திகள் காலம் தவறிப் பெய்யும் மழை குறித்தும் அம்மழையைப் பொருள் மாறாது அழகிய சொல்லால் குறித்த தமிழர்களின் வானிலை நுட்பத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.


முடிவுரை


தற்கால வானிலை ஆய்வாளர்களால் பகுத்துரைக்கப்படும் பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் அன்றே பதிவு செய்து வைத்துள்ளமைக்குக் குறுந்தொகை மிகச் சிறந்த சான்று நூலாகும். குறுந்தொகையுள் கூறப்படும் திரள்முகில் இனங்களும் பாம்பையும் துண்டிக்கும் இடிகளும் பெருமழையும் வம்பமாரியும் தமிழர் தம் கூர்த்த நுண்ணறிவைப் புலப்படுத்துவன. இதனால் தொழில்நுட்பக் கருவிகள் ஏதுமில்லாமலேயே பழந்தமிழர் வானிலை அறிவியலில் சிறந்து விளங்கியமையை அறியலாம்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.

இயற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது,

அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி

குறுகத் தெறித்த குறள்.

என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.

இடையின்றி அணுக்களெல்லாம் சுற்றுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்

என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார்.

உலகத்தின் தோற்றம்

ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகமெனில் அது எவ்விதம் என்ற கேள்வி அறிவியலுக்கு சவாலாக அமைந்தது ஒரு காலத்தில். ஆனால் பரிபாடலில் ஒரு பாடலில்,

கருவளர் வானத்திசை யிற் தோன்றி

உருவறிவாரா ஒன்றன் ஊழியும்

உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்

சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு

தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்

நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு

உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)

என்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது. அறிவியல் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தமிழரின் அண்டம் குறித்த அறிவு எண்ண எண்ண வியப்பிலாழ்த்துகிறது.

மழை பெய்யும் முறை

மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆனால் இதனை விளக்கும்முகமாக,

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்

பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 - 2)

என்று பாரிபாடலில் முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.

மருத்துவ அறிவியல்

இன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. குளோனிங் முறையென்று உயிரின் மாதிரிகளாக புதிய உயிர்களை உருவாக்கும் அளவு வளர்ந்துவிட்டது. ஆனால் மருத்துவ படிப்புகளோ, செயல்முறை பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்

மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே (திருமந்திரம்)

என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

மாற்றுருப்பு பொருத்துதல்

பழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை, இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்

ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பு)

கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான். என்கிறது அச்செய்தி, உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தியதை இப்பாடலில் உணரலாம்.

பெரியபுராணத்திலும் இதைப் போன்றே ஒரு நிகழ்வினைக் காண முடிகிறது. சிவன் மீது மிகுந்த பற்று கொண்ட கண்ணப்பர் ஒரு நாள் இறைவன் கண்ணிலிருந்து குருதி வழிவதைக் கண்டார். பதறினார் உடனே மூலிகைகளை பறித்துக் கொண்டு வந்து பிழிந்து அதைக் அக்கண்ணில் விடுகிறார். குருதி நிற்கவில்லை. எனவே சற்றும் தாமதிக்காது தனது கண்ணைத் தோண்டி அவ்விடத்தில் அப்புகின்றார். அங்கு குருதி வழிவது நிற்கிறது. இதனை,

இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தையார்கண்

அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்

முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)

என்ற அடிகளில் கூறுகின்றார். இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும்,

அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,

மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி

நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்

அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 - 6)

என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. மேலும், இத்தகைய நிகழ்வு ஒன்று புறப்பாடலிலும் காணப்படுகிறது.

செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்

கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு

பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறம். 353)

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரின் பாடல் வரிகளில் வெட்டுண்டு கிழிந்த உடல் தசையினைத் தைத்து மருந்தூட்டி அப்புண்ணின் மேல் பஞ்சினை வைத்து சிகிச்சை அளித்தமையை உணர்த்துகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும் போது இன்றைய மருத்துவ முறையின் நவீனமான சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.

இயற்பியல் அறிவு

தமிழரின் மருத்துவம் குறித்த அறிவு மட்டுமன்றி அவர்களின் இயற்பியல் அறிவும் நம்மை வியக்க வைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

மகரக் குழைகளும் ஊசலாட

பங்கய மடமாதர் நோக்கி இருவேம்

ஆட்ட - அவ்வூசலில் பாய்ந்திலது

இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும்

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்

திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)

என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும், பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டதை உணரலாம்.

அன்றைய மனிதன் கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியது. தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி கிடைக்கிறது. பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான். இவ்விமானங்கள் பற்றிய பல குறிப்புகள் சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது.

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)

எனும் பாடல் அடியில் வானவூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோ,

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு

அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்

கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு

வானவூர்தி ஏறினள் மாதோ

கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 - 200 )

என்ற வரிகளில் வாடாத பெரிய மலர்களை மழையாகப் சொரிந்து அமரர்களின் அரசனான இந்திரனும் வானோரும் வந்து வாழ்த்த தன் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி, கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி. கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்

அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப

எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)

என்றும்,

பல் பொறி நெற்றிக்

குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)

போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. மேலும் இதன் தொழில் நுட்பம் குறித்து கூறும்போதும், அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும் என்ற கற்பனை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது. இதனை,

பண்தவழ் விரலில் பாவை

பொறிவலந் திரிப்பப் பொங்கி

விண்தவழ் மேகம் போழ்ந்து

விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய

புண்தவழ் வேல்கண் பாவை

பொறி இடந் திரிப்பத் தோகை

கண்டவர் மருள் வீழ்ந்து

கால் குவித் திருக்கும் அன்றே (நா.பா.239)

இவை மட்டும் அல்லாமல் பல இலக்கியங்களில் இத்தகைய வானவூர்திகளைப் பற்றிப் பல பாடல்கள் காணப்படுகின்றன. பெருங்கதையிலும் இருப்பாலான விமானம் பறக்க பயன்படுத்தப்பட்டமை குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதனின் பறக்க வேண்டும் என்ற ஆசை கற்பனையாக, இலக்கியமாக, தேடலாக தொடர்ந்து இன்று நிறைவேறியது.

இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் மனித இனத்திற்குத் தேவையான பல மகத்தான அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

Sunday, May 21, 2023

வளர் தமிழ் ஆய்வு மன்றம்-பன்னாட்டுக் கருத்தரங்கம்

திண்டுக்கல் வளர் தமிழ் ஆய்வு மன்றமும், சென்னைப் பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம்(20.05.2023) இணைந்து நடத்திய 19வது ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் "திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய போது எடுத்த படம்.









சிறந்த மாமனிதர்விருது வழங்கியபோது எடுத்த படம்.

கோவை,தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் நடத்திய (19.05.2023) விருது வழங்கும் விழாவில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு "சிறந்த மாமனிதர்விருது" வழங்கியபோது எடுத்த படம். இனிய தமிழகம் ஆசிரியர் டாக்டர் ராஜேந்திரன், சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அன்புசிவா ஆகியோர் வழங்கினார்கள்.





 

திருக்குறளில் தமிழரின் வாழ்வியல் கூறுகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்

ஜேப்பியார் பல்கலைக்ழகம்

ராஜுவ்காந்தி சாலை

சென்னை-600 119.

பேச:9842495241

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று கடைசியாய் காலத்தையே நிலைத்து நிற்கிறதுஇ என்றாலும்இ காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும் உன்னதத்திலிலும்இ நன்மையிலும் தீமையிலும்இ சரி என்பதிலும் தவறு என்பதிலும்இ உண்மையிலும் பொய்யிலும் தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே சுட்டு மிளிரும் தங்கமென பூத்து நாளைய கேள்விக்கான பதில்களையெல்லாம் இன்றே நமக்காய் சேகரித்த யாரோ ஒருவரின் கைகளில் கொடுத்துவைக்காமல் காலம் நகர்வதில்லை.

அப்படி நமது இன்றைய தேவைகள் அத்தனையும் அன்றே இரண்டாயிரமாண்டுக்கு  முன்னரே திருவள்ளுவர் என்னும் காலத் தச்சனின் கையில் காலத்தால் நமக்கென கொடுத்து வைக்கப் பட்ட பொக்கிஷம் தான் திருக்குறள்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 

நன்னயஞ் செய்து விடல்”

என்று மனப்பாடம் செய்து அன்று தேர்வில் எழுதியது தவிர எத்தனை பேர் நம்மில் ஒரே ஒரு குறளை வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்த்து வாழப் பழகியிருப்போம்?

என்னைக் கேட்டால் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை என்று மனசாட்சியை ஒரு புனித புத்தகத்தின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுப்பவர்கள் திருக்குறளை முழுமையாய் உணர்ந்து படித்திருப்பார்களெனில்இ படித்து வாழ்ந்திருப்பார்களெனில் அவர்களுக்கு அங்கனம் ஒரு நிலைக்குச் செல்ல வாய்ப்பே அமைந்திருக்காது. அதோடு மட்டுமில்லாமல் அங்ஙனம் சத்தியப்பிரமாணம் எடுக்கக் தமிழருக்கென்று புனித நூலாய் திருக்குறள் எனும் மாபெரும் படைப்பு ஒன்றே போதுமானதாகவும் இருந்திருக்கும் காரணம் வாழ்வியலின் உலக மனிதர்களுக்கிடையே நடத்தையின் ஒவ்வொரு அசைவையும் தமிழன் எனும் பதத்தில் தமிழனின் வாழ்வு முறையின் உத்தியில் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் வாழ்தலை சொல்லித் தரும் உலகப் பொதுமறை நமக்குக் கிடைத்த பொக்கிஷம் திருக்குறள்.

ஒரு மனிதன் பிறக்கும்போதே அவன் பிறகு எப்படி வளர்க்கப்படவேண்டும் எப்படி இவ்வுலகில் வாழவேண்டும். எந்த கண்கொண்டு இவ்வுலகை காணவேண்டும். எந்த தருணத்தில் தன்னை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்பது முதல்இ வாழ்வின் கடைசித் தருணத்தில் நாம் கரைந்துப் போவது வரை திருக்குறளின் மூலம் திருவள்ளுவரேச் சொல்லுகிறார்

“நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு”

இப்படி ஒரு குரல் முடிகிறது. இக்குறளில் இயற்கை என்பது இப்படித் தான் நீ நல்லது செய்தாலும் அது தீமையாகலாம். நீ செய்யும் தீயதும் சிலவேளை நன்மையாக முடியலாம் எனவே காலத்தின் எந்த ஒரு கடவிற்கும் நீ மட்டுமே காரணமென்றெண்ணி நீ உடைந்து விடாதே என்கிறார் மேலும் இந்த இயற்கையின் படைப்பே இப்படித் தான் இருக்கிறதென்று நமக்கு ஆறுதல் வார்த்தையை தருவதோடு நில்லாமல்இ இன்று நீ செய்யும் நன்மை தீயவை ஆவதும்இ தீயவை நன்மையாவதும் கூட என்றோ நீ செய்த உன் ஊழ்வினையால் தான் எனவே நாளைய வாழ்விற்கு இன்றே உன்னைச் சரிபடுத்தி வைத்திரு எனும் ஞானப் பாடத்தையும் இந்த இரண்டு வரிகளில் தருகிறார் திருவள்ளுவர்.

இன்று நாம் வெளி உலகில் நிறைய பேரை பார்க்கிறோம் உண்பதற்கு உணவிருக்காது. ஆனால் உணவு மேல் ஆசை பொங்கும். சிலருக்கு உணவு கொட்டிக் கிடக்கும் ஆனால் உண்பதற்கு காலமோ சூழலோ உடல்நிலையோ இடம் தருவதில்லைஇ காரணம் அதை கூட நாம் வாழும் நெறியே தீர்மானிக்கிறது என்கிறார். நாம் வாழும் பக்குவம் மட்டுமே நமக்கு எதையும் ஈட்டுத் தருகிறது அன்றி வேறில்லை என்கிறார் திருவள்ளுவர்

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது”

எனும் குறளில் என்னதான் கோடி பொருள் சேர்த்திருத்தாலும் அதிலும் நமக்கென இத்தனைதான் விதிக்கப்பட்டுள்ளது. அந்த எத்தனை விதிக்கப் படடுள்ளதோ அத்தனையை மட்டுமே நம்மால் அனுபவிக்க இயலும் அல்லாதுஇ எது நமக்கு இருந்தும் அவைகள் இல்லாத பொருளுக்கே சமம் என்கிறார்.

ஆனால் அந்த விதிக்கப்பட்டது என்பது யாரோ வந்து நம் தலையில் எழுதி விட்டு சென்றது என்று அர்த்தம் கொள்வதைக் காட்டிலும் நாம் நேற்று வாழ்ந்த வாழ்க்கை எப்படி இன்றினை முடிவு செய்கிறதோ அப்படி நாளைக்கான நம் நன்மை தீமைகளையும் நாமே இன்று இன்று நம் ஒவ்வொரு அசைவுகளினால்இ வாழ்தலினால் தீர்மானிக்கிறோம். எனவே என்னதான் கோடி கோடியை பணமாகவோஇ சொத்தாகவோ சேர்த்தாலும் சேர்ப்பது என்பதும் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகிறது என்கிறார்.

அப்படி நெறி படி வாழ்தலில்இ அந்தவாழ்தலின்படி நமக்கான நன்மைகளும் தீமைகளும் வந்தடைகின்றன. எனவே சம்பாதிப்பது மட்டும் நம் கடமையில்லை வாழ்தலை கண்ணியப் படுத்திக் கொள்ளலும் நம் பொறுப்பாகிறது என்கிறது. இக்குறள்

எல்லாருக்குமே பெரிய ஆளாக வேண்டும்; நான்கு பேர் மதிக்கக் கண்ணியமாக வாழ வேண்டும் தன்னை மெச்சிடும் வகையில் தன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை அடைவது எப்படி. அங்ஙனம் சரியானவராக ஒருவர் புகழ் நிலைத்து வாழ அந்த வாழ்தல் எப்படி இருந்திடல் வேண்டும் என்றும் திருக்குறள் சொல்லுகிறது.

அந்த ஆசையினை போல் அப்படி உயர்ந்துவிட்ட மனிதன் தான் உயர்ந்த இடத்தை அடைந்த பிறகு அவன் கடந்து வந்த பாதையை மறக்காத பட்சத்தில் மட்டுமே தனக்கு கீழுள்ளோரை மதிக்கும் பண்பு கொள்கிறான்இ என்றெண்ணி இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே செய்தது சிறிதாயினும் அந்த சிறு நன்றியுணர்தல் குறித்து திருவள்ளுவர் எத்தனை அழகாக சொல்கிறார் பாருங்கள்.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.”

எனில் அருவர் மிகச் சிறு உதவியயே செய்திருப்பினும் கூட அந்த உதவியின் பயனை அறிந்தவருக்கு அது மாபெரும் செயலாக கருதப் படுகிறதென்கிறார்.

ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். ஒரு ரூபாய்க்கு பயண சீட்டு வாங்க வேண்டும் கையில் ஏகப்பட்ட வங்கிகள் வழங்கிய பணம் எடுக்கப் பயன்படும் அட்டைகள் இருக்கின்றது. அந்த அட்டையை எந்திரத்தில் தட்டினால் கோடி கோடியாய் பணம் கொட்டும். எல்லாம் சரி தான் ஆனால் எத்தனை வைத்திருந்தாலும் சில்லறை பணம் எடுக்க மறந்தீர்கள் என்று வையுங்கள் நம் பாடு திண்டாட்டம் தான் உதாரணத்திற்கு இன்று இத்தனை மணிக்கு சென்று ஒரு பெரிய வேலைக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வைத்துகொள்ளுங்கள் இன்று பார்த்து ஓட்டுநர் வராமலோ அல்லது மகிழுந்து பழுதபட்டாலோ வேறு வழியின்றி அவசர அவசரமாக ஒரு அரசு பேருந்து பிடித்து செல்லக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அவசரத்தில் பணப்பை எடுக்க மறந்து பேருந்தில் ஏறிவிடுகிறீர்கள் பேருந்து கூட்டத்தில் அலைமோதும் நிறைய பேரை ஏற்றிக் கொண்டு பாதி தூரம் வந்து விடுகிறது நடத்துனர் கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டு உங்களை நோக்கி வருகிறார். இப்போது பயணச்சீட்டு வாங்க ஒரு ரூபாய் நாணயம் வேண்டும்.

நடத்துனர் சீட்டு வாங்கச் சொல்லி கைநீட்டி உங்கள் எதிரே வந்து நிற்கிறார் சட்டை பையில் கைவிட்டுத் துழாவி பார்த்ததில் வங்கியின் பணம் எடுக்க உதவும் அட்டைகளே கையில் தட்டுப் படுகின்றன. துழாவி தேடி எடுத்ததில் அந்த வங்கி அட்டைகள் போக தொன்னூற்றி ஐந்து பைசா இல்லவே இல்லை. நடத்துனர் முகம் பார்த்தால் மென்று தின்று விடுவார்போல அப்படி உர்ரென்று இருந்தார்.

     நாங்க மட்டும் ஐந்து காசு குறைவா கொடுத்தா எவ்வளவு அழுத்தமா சட்டம் பேசி கேட்கிறீங்க அதுபோல நீங்களும் வர வேண்டாமா? என்று யாரையோ கடிந்து பேசிக்கொண்டே வருகிறார் நிங்கள் மீண்டும் சட்டைப் பையில் மாறி மாறி துழாவிப் பார்த்து வேறு பணம் இல்லாமையால் பதற்றம் கொள்கிறீர்கள்.

உங்களையே பார்க்கிறார் நடத்துனர். சுற்றி இருக்கும் மக்கள் எல்லாம் உங்களையே பார்க்கிறார்கள். அவசரத்தில் துரிதப் பட்டு தேடியதில் நெற்றி உடம்பெல்லாம் உங்களுக்கு வியர்த்து விடுகிறது. நடத்துனர் என்னாச்சு எவ்வளோ இருக்கோ கொடுங்க என்கிறார். அவமானமாக இருக்கிறது உங்களுக்கு.

இல்லை சில்லறை கோதவில்லை இறங்கி விடுகிறேன் வண்டியை நிறுத்துங்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அந்நேரம் பார்த்து நடத்துனர் உங்கள் அருகில் நெருங்கி கையிலிருந்த சில்லறையை வாங்கி கொண்டு சிரித்தவாறே என்ன சார் சரியாதான் சில்லறை வைத்திருக்கிறீர்கள். ஒரு ரூபாய் நீங்க கொடுக்காமல் போனால் ஓடும் பேருந்து சற்று நிற்காது என்றாலும் இப்படித் தேடித் தேடி சரியா சில்லறையை தர உங்களைப் போன்ற வாலிபர்களால் இருந்தால் போதும் நாடு செழிக்கும் என்று சொல்லிவிட்டு உங்களைப் பார்த்து லேசாக கண்ணடித்துவிட்டு போகிறார்.

அடுத்த ஓரிரு வினாடிகளில் மக்கள் தங்களை அத்தணை நாணயத்தோடும் மதிப்போடும் பார்க்கிறார்கள். உள்ளே ஒரு பெருமூச்சு எழுகிறது உங்களுக்கு. நடத்துனரின் நன்னடத்தையை எண்ணி மகிழ்கிறது உங்கள் மனசு.

     யோசித்து பாருங்கள் அவர் உங்களுக்கென கொடுத்தது வெறும் ஐந்து காசு மட்டும் தான் ஆனால் அந்த ஐந்து காசு இல்லாத காரணம் காட்டி இன்று எல்லோருக்கும் மத்தியில் உங்களைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுக் கூட உங்களை அவமானப்படுத்தி இருக்கலாம். நீங்கள் சரியான நேரத்திற்கு போகமுடியாமல் ஒப்பந்தமே உங்கள் கையைவிட்டு போயிருக்கலாம். ஆனால் அங்கனம் செய்யாது அவர் செய்த இந்த சிறு உதவி எத்தனை பெரிதென்று அதன் பயன் அறிந்தவரே அறிவரென்கிறார் திருவள்ளுவர்.

ஒரு சின்ன உதவி தான் நம்மை பேராபத்திலிருந்து காக்கிறது என்றாலும் உதாசீனப் படுத்தாது அதையும் பெரிதாக எண்ணி நன்றியுணர்வு கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

இதுபோன்றே ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளை எழுதி நாம் நகரும் இடமெல்லாம் நம்மோடு வந்து நமக்கு வாழ்வியலை சொல்லித் தரும் பெரும் பயனுள்ள ஒரு நூலாக திருக்குறள் அமைகிறது. அதை வெறும் நூல் என்று சொல்வது கூட அத்தனை மிகையில்லை. அது ஒரு நன்னடத்தையின் ஞானப்பலன்; தமிழராகப் பிறந்ததன் பிறவிப் பயன்; இன்றைய நம் வாழ்வியலை என்றோ சொல்லிச் சென்ற ஒரு மகானின் மாமனிதரின் வாழ்வியல் சொல்லும் மாமறை.

அது வெறுமனே காக்கப் பட மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் படித்து வாழ்க்கையினை சீர்செய்துக் கொள்ளவும்இ நம்மை நடுநிலைப் படுத்திக் கொள்ளவும் பிற்காலத்தின் மாற்றங்களை இப்பொழுதிலிருந்து நிகழ்த்திக் கொள்ளவும் நாளைக்கு வேண்டியதை இன்றே ஏற்படுத்திக் கொள்ளவும் உலகச் சமன்பாடுகளில் எல்லாம்இ உயிர்க்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் நாம் வாழத் தக்க நம்மை நெறி படுத்தும் நூலாகவும் திருக்குறள் அமைகிறது.

எனவே திருக்குறளில் இருக்கும் தமிழர் பண்பிணை நம் வாழ்வியலை ஒவ்வொருவரும் படித்து தமிழரின் பண்பு மாறாது வாழ்ந்து நாளைய நல்லதொரு சமுதாயத்தை இன்றிலிருந்து உருவாக்குவோம். ஒவ்வொரு தமிழனும் மற்றொரு மனிதருக்கேனும் நல்ல பாடமாய் வாழ்வோம். அதற்குத் துணை நிற்கும் திருக்குறளைஇ தினம் ஒரு குறள்  வாசிக்கும் முறையிலேனும்இ வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் வாசித்து  மனனம் செய்து அர்த்தம் அறிவோம். அறிந்ததை பிறருக்கும் படிக்கத் தருவோம். இயன்றவரை விழா நடத்தும் இடங்களில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளில் பரிசு கொடுக்கும் பட்சத்தில் திருக்குறளை மொத்த தமிழரும் படிக்க வழிவகை செய்வோம்.

தமிழர் பண்பினை முழுமையாக மூலமும் கற்று அதன்படி மேன்மையாக வாழ்ந்து தமிழரை மீண்டும் உலக அரங்கில் முன்னிலை படுத்துவோம். ஆங்காங்கே அடிமைப் பட்டுக் கிடக்கும் நம் இனத்து மக்கள் அப்படி யொன்றும் சோடைப் போனவர்கள் அல்ல. அவர்கள் இவ்வுலக வாழ்வு முறைகளின் பண்பின் நாகரிகத்தின் முன்னோடிகள் என்று திருக்குறளின் வழி நின்று வாழ்ந்து; வென்று; முழங்குவோம்.  தெளிவும்இ பண்பும் உண்மையோடு வாழ்தலும்இ பிறருக்கு உதவும் மனமும்இ எல்லோரையும் மதித்துப் போற்றும் குணமும்இ எல்லாருக்கும் இயல்பாக வரப் பெறட்டும். அனைத்துயிரும் நலம் பெற்று ஓங்கட்டும். 


கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...