மனிதன் தன் கருத்துக்களை வெளிப்படுத்த மொழியினைப் பயன்படுத்துகின்றான். மொழியின் உருவாக்கம் என்பது மனித பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். மொழியின் ஒழுங்கான வடிவை அடைவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து வந்திருக்க வேண்டும். ஓசையெழுப்புதலே வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மக்களின் மொழியாக இருந்திருக்கிறது. ஓசையின் வேறுபாடுகள் பல்வேறு அர்த்தங்களைத் தருவதாக இருந்திருக்க வேண்டும். அதன் பின் ஓசைகள் ஓர் ஒழுங்கில் தரப்பட்டு ஒவ்வொரு ஓசையும் ஒரு பொருள் குறித்து அமைந்திருக்கும். இவ்வோசைகள் பொருளைச் சுட்டுவதாகவோ, செயலைச் சுட்டுவதாகவோ இருந்தன. பின் ஓசையுடன் சைகையும் பொருள் பொதிந்து வெளிப்படுத்தப்பட்டன. பின்பு தன் கருத்தை சித்திரங்கள் வழி வெளிப்படு்த்தினர். சித்திரங்கள் ஒழுங்கைப் பெறுவதற்கு முன்னால் அவற்றிற்கு ஓர் அர்த்தத் தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஓசையும் சைகையும் சித்திரமும் ஒழுங்குப்படுத்தப்பட்டு மொழியும் எழுத்தும் உருப்பெற்றிருக்க வேண்டும். மனித வரலாற்றில் மொழியின் உருவாக்கம் என்பது ஏடறியா காலத்திற்கு முந்தையதாக இருந்தது.
ஓசை எழுப்புதல் மூலம் கருத்துகளைத் தெரியப்படுத்தியது போல கடின உழைப்பின் போது வேலையின் பளு தெரியாமல் இருப்பதற்காக சத்தமிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி சப்தமிடுதல் என்பது ஒருவகையான இசைமையோடு வெளிப்படத் தொடங்கியது . இன்றைய காலத்திலும் கடுமையான உழைப்பின் போது சத்தம் எழுப்பி ஒன்றுபட்டு கத்துவதையும் இசைமையாக சப்தமெழுப்புவதையும் காணமுடியும். .இவ்வாறு ஓசையின் தாளலயம் ஒழுங்குபடுத்தப்பட்டு இசையாக பரிணமிக்கிறது. பின்பு பாடலாக வெளிப்படுகிறது. பாடல் மூலம் கருத்துக்களைத் தெரியப்படுத்தும் வழக்கம் படிப்படியாக அறிவுருவாக்கச் செயலாக மாற்றம் பெற்றது. இவ்வறிவுருவாக்கம் அடுத்தகட்டத்திற்கு அல்லது அடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட வேண்டுமெனில் அறிவு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டு்ம்.
காலந்தோறுமான மனித எத்தனங்கள் வழிவழியாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை தன்னிச்சையான செயலாகக் கொள்வது இயலாது. கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் மனித வாழ்வின் பகுதியாக இருந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கிறது எனலாம். ஒரு விவசாயி தன் விவசாயம் சார்ந்த அறிவை தன்னுடைய மூதாதையினரிடமிருந்து பெற்று விவசாயம் என்கிற செயலைச் செய்கிறார். கற்றுக் கொடுத்தல் என்பது குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இடையில் நிகழக் கூடியதாக இருக்கிறது. தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற உறவுகளுக்கு இடையில் பரஸ்பரம் கற்றுக்கொடுத்தலும் கற்றலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கியங்கள் இதனை வெளிப்படுத்தி அமைகின்றன. குடும்பத்தில் பிள்ளைகள் கற்றுக் கொள்வது முதலில் பெற்றோரிடமிருந்துதான். அவர்களது செயல்களை உற்றுக் கவனித்துத்தான் மொழியையும் கலாச்சாரத்தையும் இன்ன பிற அறிவை பெற்றுக் கொள்கின்றன. வளர்ச்சிப் போக்கில் தாம் கற்றதை தன் வாழ்வில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் செயலாகும். அறிவைப் பெறுவது கற்றலின் முதல் நிலையாகும். ஒழுங்கையும், நடைமுறை உண்மைகளையும் வாழ்வின் உன்னதங்களையும் கற்றுக் கொள்வது அடுத்தடுத்த படிநிலைகளில் அமையும். தாய் தந்தையர் கற்றுத் தருவது வாழ்வி்ன் முழுமையை எய்த போதாத நிலையில்தான் கல்வியை ஆசிரியரைக் கொண்டு பெறும் நிலை ஏற்படுகிறது.
கல்வி தமிழ்ச்சூழலில் பரவலாக்கப்பட புத்தம், சமண மதங்கள் காரணமாக இருந்தன. சங்க காலத்தில் கல்வி கற்கும் பண்பு ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருந்ததை சங்கப் பாடல்கள் தருகின்றன. தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் அவரது ஆசானின் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என பனம்பாரனார் குறிப்பிடுகிறார். “முந்நு நூல்கண்டு முறைப்பட எண்ணி” என்ற பாயிரத்தின் வரி தொல்காப்பியர் முறைப்படி கல்வி பயின்று நூல்களைக் கற்றத் திறத்தை வெளிப்படுத்துகிறது.
அக்காலத்துச் சமூக மக்களிடம் ஐம்பெருங்குழுக்கள் தத்தம் தொழிலைச் சிறப்புறச் செய்தன என்பதை கனகசபைபிள்ளை எடுத்துக்காட்டுகிறார் அவர்களில் குருமார் என்போரும் இருந்தனர். அந்தணர்கள் கல்வியைக் கற்போராகவும் கற்றுக் கொள்வோராகவும் இருந்ததை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஓதல் அந்தணர் வேதம் பாட (மது.655) என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கேள்வி முற்றிய வேள்வி அந்தணர் (புறம்.361) என்றும், கேள்வி அந்தணர் அருங்கடல் இறுத்த வேள்வி (பெரும்.315) என்றும் அவர்கள் கல்வி கேள்விகளிலும் வேதம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டு வேள்வி முதலியவற்றைச் செய்தனர் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் ஆசிரியர் என்போர் கல்வி கற்றுக் கொடுக்கும் அளப்பரிய பணியைச் செய்தனர் என்றும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் “(மது.761) என்று மெய்யுணர்ந்த ஆசிரியர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் பல நூற்களைக் கற்றுணர்ந்து அதன்படி பிறருடன் உண்மை கண்டுணர்தல் பொருட்டு வாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும் ,
“பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உருகெழ கொடியும்” (பட்.169)
எனவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
ஆசிரியருக்குத் தம் கைப்பொருளைக் கொடுத்து கல்வி கற்றதனைப் பற்றி
”கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணும் விச்சைக்கண்” (கலி.149) என்ற கலித்தொகைப் பாடல் வரி குறிப்பிடுகிறது. வறிய நிலையிலும் கல்வி கற்பதை மேன்மையாகக் கருதியதை,
”அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ’ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெரும்செம் மலனே“ (குறு.33)
என்ற பாடல் இரந்து உண்ணும் வறிய நிலையில் இருந்த போதிலும் வேற்றூர் சென்று கல்வி கற்க முனைந்த இளம் மாணவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று ஒளவையார் குறிப்பதை இங்கு நினைவு கொள்ளலாம். இவ்வாறு சங்க இலக்கிய காலமானது கல்விக்கு மேன்மையான இடத்தை அளித்திருந்தது. “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று சங்க இலக்கியத்தில் பொன்முடியார் கூறுவதும் கல்வியில் உயர்ந்தவனாக்குதல் என்ற பொருளில்தான். எனவே சங்கச்சமூகம் கற்பித்தலுக்கு தேவையான இடம் தந்துள்ளது என்பதை அறியலாம் .
இவ்வடிப்படையிலேயே அகநானூற்றுப் பாடல்களில் கற்பித்தல் என்ற பண்பு அமைந்துள்ள பாங்கை விளக்கலாம். அகநானூறு சங்க அகக்கவிதையின் நெடுவெண்பாட்டு என்றும் கூறலாம் . நெடுந்தொகை என்று கூறுவதற்கு ஒப்பான நூலாகும். கற்பித்தல் என்பதை அறிய வைத்தல் என்ற பொருளிலே கொள்வது மரபாகும். அறியாமையிலிருக்கும் மாந்தருக்கு உரிய அறிவைத் தருதல் என்பதாகக் கொள்ளலாம். அகநானூற்றுப் பாடல்களைக் கற்கத் தொடங்கும் பொழுதே கற்பித்தல் என்பது தானே நிகழ்கிறது அதாவது பாடல்களின் கூற்றுக்கள் வாயிலாக உணர்வு வெளிப்பாட்டினை உணரத் தொடங்கியவுடன் அந்த உணர்வுகளைப் பயிற்றுவிக்கும் கற்பித்தல் தானே நிகழ்கிறது
“பிரிதல்” என்ற உரிப்பொருளில் கல்விக்காகப் பிரிதல் என்பதும் காணப்படுகிறது. கற்பித்தல் என்ற செயல்பாடு ஓர் பண்பாட்டு நிகழ்வாக அகநாநூற்றில் காணப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. “கிளி விளி பயிற்றும்“ (அகம்.12) என்ற வரியில் பயிற்றும் என்ற சொல் அக்காலத்து பயிற்றுப் பண்பினை வெளிப்படுத்துவதாகும். கிளிகள் தினை கொய்வதற்குத் தன் இனத்தை அழைக்கும் எனப் பொருளாகிறது. கிளி பிறிதொரு கிளியை தினை கொய்ய அழைத்தலை பயிற்றுதல் எனக் கொள்கின்றனர். அது அறிவித்தல் என்பதாகவும் காணப்படுகிறது. பயில்தல் என்ற பண்பும் பயிற்றுதல் என்ற பண்பும் புலமை மரபில் இருந்து வந்ததால்தான் இவ்வாறு கூறுவது இயல்பாயிற்று எனலாம். இது போல் ”இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி” (அகம்.32) என்ற பாடல் வரியிலும் பணியாளைப் போல மொழிந்த தன்மை கூறப்படுகிறது. பயிற்றல் என்பது பலமுறை கூறி வற்புறுத்தல் என்றும் கொள்ளலாம் .
”குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை ” (அகம்.13) என்ற பாடல் வரியில் காட்டில் பள்ளங்களில் வீழ்த்திப் பிடித்த யானையைப் பயிற்றுவிக்கும் பாகன் அதற்கான உரிய மொழியில் தொழிலைப் பயிற்றுவிப்பான் எனப் பாடல்வரி அமைகிறது. யானைக்கு அதற்கான மொழியின் மூலம் உணர்த்தும் பண்பில் கற்பித்தல் என்பது வெளிப்படுகிறது. அது போலவே குதிரையைப் பற்றி அறிந்த தேர்ப்பாகனை ”“நூல்அறி வலவ”“ (அகம்.114) என்று குறிக்கிறது குதிரை பற்றிய நுணுக்கங்களை அறிதல் என்பது அனுபவத்தில் கிடைக்கும் அறிவாகும். நூல் அறி வலவ எனக் குறிப்பதால் அது கற்பித்தல் என்ற செயல்பாட்டினை குறித்து அதனோடு தொடர்புடைய அறிதல் என்று கொள்ளலாம். குதிரையின் மனதை முறையாக அறிந்து அதனை தன்னுடைய குறிப்பின்படி இயக்க அறிந்துள்ள தேர்ப்பாகனின் அறிவை ஒப்பிடுகின்றன பான்மை இதில் வெளிப்படுகிறது.
பயில வேண்டிய மறைகளைப் பயிலாத ஊர்ப்பார்ப்பானின் நிலையை ”வேளாப் பார்ப்பான் வாளரத் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன” (அகம்.24) எனக் குறிப்பிடப்படுகிறான். மறைகளை ஓதி யாகம் செய்ய கற்காத பார்ப்பனர்கள் தாழ் நிலையடைந்து சங்கு அறுக்கும் தொழிலை மேற்கொள்வர் என்று கூறுவதன் மூலம் பயிலாதவன் தாழ்ந்த நிலையடைவான் எனக் குறிப்பதன் மூலம் கல்வி கற்பதே அக்காலத்துச் சூழலில் மேல்நிலை எய்துவதற்கு வழியாக இருந்தது புலப்படுத்தப்படுகிறது.
“களிறு சுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்“ (அகம்.257) என்ற பாடல் வரி, களிறானது யாமரத்தின் கிளைகளை முறித்து நீர் வருமாறு நாரினைச் சுவைத்துப் போட்ட சக்கையான சிதைந்த மரப்பட்டைகளை கல்வி அறிவு இல்லாத உப்பு விற்கும் உமணர்கள் தீமூட்டும் சுள்ளிகளாக பயன்படுத்துவர் என்கிறது . இங்கே கல்வி அறிவு இல்லாதவர்கள் என்ற குறிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் தொழில் சார்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள் என்ற போதிலும் அவர்கள் உரிய நூல் கல்வியைப் பெறாதவர்கள் என்ற பொருள்பட குறிக்கப்படுகின்றனர். ஊர்ப்பார்ப்பனர் கல்லாத போது அவர்கள் இழிநிலை அடைவர் என்று கூறப்படும் அதே வேளையில் உமணர்கள் போன்ற தாழ்நிலையில் உள்ள மக்கள் கல்வி கல்லாத நிலை ஒரு பொருட்டாகக் கொள்ளப்படவில்லை என்றும் அறியமுடிகிறது . எனினும் எல்லா நிலையினரும் அக்காலத்தில் கல்வி கற்கும் நிலை இருந்தது என்பதும் இதில் புலப்படுகிறது.
”விழையா உள்ளம் விழையும் ஆயினும் ,
என்றும் , கேட்டவை தோட்டிஅக மீட்டு , ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் , இன்ன
பொய்யோடு மிடைந்தவை தோன்நின்
மெய்யாண்டு உளதோ , இவ்வுலகத் தானே ?” (அகம்.286)
என்ற பாடல் கல்வி கற்றார் தம் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வலிமையுடையோர் வெளிப்படுத்துகிறது . இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத உள்ளமானது சிலநேரங்களில் அவற்றை விரும்பினாலும் கற்றரிந்தார் கூறக் கேட்ட நூற்பொருள்களை அங்குசமாகக் கொண்டு தங்கள் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வர். அறத்தையும் பொருளையும் கற்றுணர்ந்த பெரியோர் தீநெறி விளக்கி நன்னெறிச் செலுத்தும் தனமையுடையவர் .அறியன செய்யும் நும் போன்ற பெரியோர் எம்மிடம் பொய்யுடன் கூடிய புகழ்மொழி கூறினால் மெய் என்பது இவ்வுலகத்தில் எங்குளதோ , நான் அறியேன் என தோழி தலைவனிடம் கூறுகிறாள் . கல்வியில் சிறந்த பெரியோர் பிறர் யாவரையும் விட மிகப் பெரியோர் ஆவர் என்று கூறுகின்றது. இதிலிருந்து கல்வி கற்றோர் உயர்வாக மதிக்கப் பெற்ற திறம் உணர்த்தப்படுகிறது. அத்தைகைய பெரியோரை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதே உணர்த்தப்படக் கூடிய செய்தியாகும். இதுபோலவே “பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் ” (அகம் 66 )இந்த வரி சான்றோர் கூறுகிற பழமொழி உண்மையாகிறது என்பதே மெய்யாகிறது என்று கூறுகிறது .
“இன்னா இசைய பூசல் பயிற்றலின்” (அகம்.52) என்ற வரியில் பயிற்றல் என்ற சொல் அடுத்தடுத்து கூறுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. குறமகளிர் வேங்கை மரத்தின் பூவைப் பறிக்க புலிபுலி ஓசையிட வேங்கை மரம் தானே தாழ்ந்து பூக் கொய்ய கொடுக்கும் என்பது மழைவாழ் மக்களின் நம்பிக்கை . அதாவது தொடர்ந்தும் அடுத்தடுத்தும் சொல்வதன் வழியாக ஊரறியச் சொல்கிற செயலை வெளிப்படுத்துகிறது . தலைவன் தலைவியைக் களவில் தொடர்ந்து சந்திப்பதை தவிர்க்க அலர் ஏற்பட்டதை தலைவனுக்குத் தெரிவிக்க தோழி புலிபுலி என ஓசையிடுவதாகவும் கொள்ளலாம் . இது ஒருவருக்கு ஒரு கருத்தை தெளிவிப்பதற்கு தொடர்ந்து கூறுதல் என்கிற வகையில் பயிற்றல் என்கிற சொல் இடம்பெற்றுள்ளது . அதேபோல ”உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை” (அகம் 19 )இடைவிடாது என்கிற பொருளில் வருகிறது . உயர்ந்த யா மரங்களில் தங்கியிருக்கும் பருந்து இடைவிடாது துன்பக் குரல் எழுப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .
.
பெண்களும் இளமையில் அறியவேண்டியவைகளை கற்றறிந்து அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தலைவி சிறிய பிராயத்தில் கற்றுத் தேர்ந்தவளாகப் பொருள் கொள்ளும் படியான “நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி” (அகம் 17 )சிறிய வயதிலேயே புகழ்மிக்க பெரிய அறிவினைப் பெற்ற தன் மகளின் சிலம்பொலிக்கும் சிறிய பாதங்கள் சுரவழியைக் கடக்க ஏதுமோ என செவிலித் தாய் கூறுகிறாள் என்பதிலிருந்தும் தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் அவளைப் பற்றி “மழலை இன் சொல் பயிற்றும் “ (அகம் 34 ) மழலை போன்ற இனிய சொற்களினால் பலகாலும் பயிற்றுவிக்கும் தலைவி என்கிறான் என்பதிலிருந்தும் அறியலாம்.
பரதவர் பாய் விரித்து மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லாது சேரியில் தங்கியிருந்தபோதும் , சேரிப் பக்கத்துக் கழிகளில் சுறா முதலிய கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தபோதும் பெண்கள் பழி தூற்றியபோதும் எதற்கும் அஞ்சாது தலைவன் தலைவியைக் காண அடுத்தடுத்து வருகிறான். தொடர் செய்கையில் ஈடுபடும் தலைவனை “பயின்று வரும் மன்னே” (அகம்.50) என்றும் குறிப்பிடுகிறது. அது போல் “இன்சொல் நன் பல பயிற்றும்“ (அகம்.74) என்ற வரி தலைவன் வந்துவிடுவான் , ஆற்றியிரு என சொல்கிற பொருளில் இடம்பெறுகிறது . அதாவது இனிய சொல்லை கேட்டு அதை கடைபிடித்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயிற்றல், பயின்று என்பன தொடர்ச்சியாக எடுத்துரைத்தல் எனக் கொள்ளலாம். இவ்வாறு பயிற்றுவித்தல் என்பது வாழ்வியல் கூறாக இருந்ததை பாடல் வரிகள் தெளிவிக்கின்றன.
ஓதுதல் என்னும் பண்பும் அக்காலத்து மக்களிடம் வெகு இயல்பாக இருந்திருக்கிறது
”அருஞ்சுரம் அறிய அல்ல ; வார்கோல்
திருந்துஇழைப் பணைத்தோள், தேன்நாறு கதுப்பின்
குவளை உண்கண்; இவளோடு செலற்கு ‘ என
நெஞ்சுவாய் அவிழ்த்தனர் காதலர்
அம்சில் ஓதி ஆயிழை- நமக்கே ” (அகம்.129) என்ற வரிகளில் கடத்தற்கரிய பாலைநிலத்தில் பொருள்வயின் பிரிந்து செல்கிற தலைவன் தன்னுடைய தலைவிக்குக் தன் கருத்தை கூறி விளங்க வைத்தலைக் குறிக்கிறது. ஓதி என்று கூறுவதால் இது விளங்க வைத்தல் என்பதோடு கற்பித்தல் என்ற செயலை பொருள்படுத்தி அமைகிறது.
அக நானூற்றுப் பாடல்களில் வருகிற பயிற்றல் , ஓதல் , மொழி என்கிற சொல்லாடல்களைக் கொண்டு அதன் பயன்பாட்டு வகைமைகளை ஆராயும்பொழுது சமூகத்தின் செயல்பாடுகளில் அந்தகாலத்தில் புழக்கத்தில் இருந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தப்பட்டிருப்பது அறியமுடியும் . இவ்வாறு சொற்களைக் கொண்டு அகநானூறை அணுகும் பொழுது கற்பித்தல் என்பது பரவலாக்கப் பட்டிருப்பது அறியலாம் .
இவை தவிர , அக இலக்கியங்கள் தோன்றிய காரணங்களை அறியவும் பின்வருகிற தலைமுறைக்கு அக இலக்கியத்தின் பங்கு என்னவாக இருக்கமுடியும் என்பதையும் ஆய்வதாகவும் கருத்தில் கொண்டு அகநானூற்றுப் பாடல்களை கற்கத் தொடங்கினால் அகநானூற்றுப் பாடல்கள் தன்னளவில் நின்று ஐந்து நிலங்களின் இயல்புகள் , ஒழுக்கங்கள் போன்றவற்றை சிறந்த உவமைகளுடன் தெளிவுறுத்துகிறது .அக உணர்வுகளை கொண்ட பாடல்களாக இருந்தபோதிலும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளையும் சங்க அரசமரபினர் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது . பாணர்கள், அவர்கள் ஆண்ட நாடுகள் , சங்ககால ஊராட்சி முறை , சமயம் , தமிழரின் திருமண முறைகள் , சங்ககால மக்களிடம் புழக்கத்தில் இருந்த புராணக் கதைகள் பற்றியும் பாடல்களே சான்றாக நின்று நமக்குக் கற்பிக்கிறது .
“தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,” (அகம் 349 ) நடுவுநிலை தவறாத துலாக்கோல் போன்ற குற்றமற்ற சொல்லை உடைய நன்னன் என்கிற மன்னனைப் பற்றி குறிப்பு வருகிறது . போலவே இத்தொகுப்பு நூலுள் அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, ஆதிமந்தி, , கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அண்டர் மகளிர், அத்தி (சேரன் சேனாதிபதி), அதிகன், ஆட்டன் அத்தி, ஆதன் எழினி, ஆரியப் பொருநன், ஆரியர், ஆஅய் அண்டிரன், இருங்கோ வேண்மான், இளங்கோசர், இளம் பெருஞ் சென்னி, உதியஞ் சேரல் ஆகியோரும் இன்னும் பலரும் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.
“முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு” (அகம் 281 ) என்ற பாடல் வரிகளின் மூலமாக சந்திரகுப்த மோரியரின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் அறியமுடிகின்றது.
இவ்வாறு மன்னர்கள் பற்றிய குறிப்புகளும் வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புக்களையும் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது.
சங்க காலத்தில் கடவுள் வழிபாடு மதம் என்கிற பெயரால் குறிப்பிடப்படவில்லை . முருகு , முருகன் என்கிற சொற்கள் சங்கப்பாடல்களில் பயின்று வந்துள்ளன . அக இலக்கியங்கள் முருகனை காதல் கடவுளாகவும் புற இலக்கியங்கள் போர்க்கடவுளாகவும் வைத்துப் பார்த்தன . முருகனைக் குறித்து ஆடிப்பாடுகிற வெறியாட்டமும் குரவையாட்டமும் இருந்தன
“முருகன் நற்போர் நெடுவேள் ஆவி “ (அகம் 1: 3)
என்றும்,
“ சூர் மருங்கறுத்த சடவை நெடுவேள் சினமிகு முருகன் “ (அகம் 59:10)
என்பது போன்ற பாடல் வரிகள் உள்ளன . அக இலக்கிய தலைவனை பாடும் இடங்களில் முருகனை வைத்து பேசும் இடங்கள் இருக்கின்றன.
நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன என்பனவற்றையும் குறிப்புக்களாக அறியமுடிகிறது .
‘சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
வளம் கெழு முசிறி “ 149
என யவனர்களின் கடல் வாணிபம் பற்றியும் குறிப்புகள் உள்ளன .
கட்டிடக்கலையில் சிறப்புப் பெற்றிருந்தமையும் வீடுகள் கோட்டைகள் நேர்த்தியாக வடிவமைகக்ப்பட்டிருந்தமையும் அகநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது . இதன் மூலம் சங்க கால மக்களின் கட்டிடக்கலை சார்ந்த அறிவு நமக்கு புலப்படுகிறது .
“ மகர நெற்றி வான்தோய்ப் புரிசைச்
சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்
புகாஅர் நன்னாட் டதுவே “ (அகம் 181 : 20-22)
சமூகச் செயல்பாட்டின் மையமான குடும்ப அமைப்பின் தொடக்கமான ஒரு திருமணக்காட்சி அகநாற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
“ உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை” (அகம் 86)
மணம் செய்து வைக்கும் முதிய மங்கள மகளிர் நிறைநீரோடு குடத்தைத் தங்கள் தலையில் வைத்து மண்டை எனப்படுகிற புதிய மண்பானையை கைகளில் ஏந்தி ஒன்று கூடுவர் . மங்கலச் சடங்கு நிகழ்வுக்கு முன்னே தரவேண்டியது பின்னே தரவேண்டியது அனைத்தையும் முறையாக எடுத்துத் தந்தனர் . “அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு”என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. உளுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவான வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது என்பது திருமண வீட்டின் வழக்கமாக இருந்தது . வரிசையாக கால்களை நட்டு குளிர்ந்த பெரிய பந்தல் அமைப்பதும் பந்தலில் மணல் கொட்டி பரப்பி மனையில் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரித்த மரபு இருந்தது அறிய முடிகிறது .
சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் “முதலிரவு“ நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.
“முருங்காக் கலிங்கம், முழுவதும் வளைஇ;
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதல்;பொறி வியர்
உறு வளி ஆற்றச், சிறு வரை திற’ என” (அகம் 136 )
இசையையும் கூத்தையும் வகைப்படுத்தி வாழ்ந்த சங்க மரபையும் அறியமுடிகிறது. சங்ககால மக்கள் இசையோடு இணைந்து வாழ்ந்துள்ளனர். இசையின் இனிமையில் மயங்கி கேட்கும் ஒலியெல்லாம் ‘பண்’ போன்று இருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தனர் தேரில் கட்டப்பட்ட மணி ஒலிக்கும் ஓசை கூட அவர்களுக்கு இளி என்னும் சுரம் போலத் தோன்றியதாகப் புலவர் குறிப்பிடுகிறார். “இளி தேர் தீம்குரல் இசைக்கும் அத்தம் “ (அகம்:33 ) என்ற அடிகள் அதை புலப்படுத்துகிறது. சங்க காலத்தில் நடனம் கூத்து எனப்பட்டது. கூத்தரும், விறலியரும் கூத்தாடினர். கூத்து மன்னர்களாலும் பொது மக்களாலும் மிகவும் விரும்பப்பட்டு வந்தது, மன்னர்களும், வள்ளல்களும் கூத்தாடுபவரை ஆதரித்துக் கூத்துக் கலையை வளர்த்தனர்.
சங்ககாலத்துச் சூழலில் தொகுக்கப்படாத வாழ்வியல் சார்ந்த கல்விமுறையை கற்றுத் தேர்ந்தவர்களாக விவசாயம் , வாணிபம் , அழகியல், இசை , கூத்து ,தொழில்கள் என பலதுறையிலும் அறிவுடையோராகவும் வழி வழியாக அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கிறவராகவும் இருந்தனர் என்பதற்கு அவர்தம் வாழ்வைப் பேசும் பாடல்கள் தரும் சான்றுகளாக அமைகின்றன. வேத பாடம் படித்தல் அந்தணர்க்கு கடமையாக இருந்தது. ஓதல் வேட்டல் ஆகிய தொழில்களை அவர்கள் செய்தனர் என்பதை அறியும் போதே பிற மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர் என்பதும் பெறப்படுகிறது. அகஇலக்கியமான அகநானூறில் மக்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு சூழல்களில் தாம் கற்ற கல்வியை வரலாற்று புராண அறிவை பதிய வைத்துள்ளனர்.
சங்க காலத்து சமூகத்தினருக்கு இலக்கியம், கலை ,சமூக, வாணிபம் , வரலாறு , பண்பாடு ஆகிய பல துறைகளில். இருந்த அறிவை தொடர்ந்து பயிற்றுதல் மூலம் நிகழ்த்தும் சமூக அறிவை அகநானூற்றின் நானூறு பாடல்களும் தன்னளவில் நின்று கற்பித்தலை நிகழ்த்துகிறது என்பதை இக்கட்டுரை சிறியஅளவு விளக்க முயன்றுள்ளது .
No comments:
Post a Comment