Saturday, February 04, 2017

சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை



            சு வேணுகோபால் எழுத்துக்களுடனான அறிமுகம் எனக்கு  ஜெயமோகனின்  கட்டுரைகளின் வழியாகவே அமைந்தது. அதைத் தொடர்ந்து பூமிக்குள் ஓடுகிறது நதி(2000)மற்றும்  வெண்ணிலை(2006) சிறுகதை  தொகுப்புகளை  வாசிக்கும்  வாய்ப்பும் கிடைத்தது. இந்த கதைகளை மொத்தமாக படித்து முடிக்கும் போது ஒரு பெரிய மனச்சோர்வில் தள்ளப்பட்ட ஒரு உணர்வு. எளிதில் கடந்து விட முடியாத கதைகள் இவை. பெரும் துயர்களின் தருணங்கள். எல்லா கதைகளையும் கோர்க்கும் நூலாக துயர் மட்டுமே இருக்கிறது. மிக கொந்தளிப்பான வாழ்க்கையில் வெளிச்சத்திற்கான எந்த வழியும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் கதைகள். அவர்களை மிக அருகில் சென்று காண்பதை போல தொந்தரவு செய்யும் வேறொன்று  இல்லை.  இவர்களுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? எதை நம்பித்தான் இவர்கள் வாழ்க்\கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளே இந்த கதைகளின் மனிதர்களைப் பற்றி வாசிக்கும் போது திரும்ப திரும்ப எழுகின்றது. ஒரு விதத்தில் அது தான் இந்த கதைகளின் வெற்றியும் கூட.
            ஜெயமோகனால்   ‘பிரியத்திற்குரிய இளவல்என்று  அழைக்கப்படும் சு.வேணுகோபால்  தான் எழுத வந்து இருபது வருடங்களில் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று நாவல்கள் மற்றும் சில குறுநாவல்கள் பதிப்பித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்களில் முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார். கல்லூரியில் விரிவுரையாளராக பணி, முனைவர் ஆய்வேடு, விவசாயம் என்ற பல பணிகளிடையே இலக்கியத்திலும் மிக வலுவான தடத்தை பதித்துள்ளார். இவரை விஷ்ணுபுரம் விருது விழாவின் போது காணும் ஒரு வாய்ப்பு அமைந்தது. உரத்த குரலில் மிக சுவாரசியமான தகவல்களுடன்  உரையாடும் தன்மை உடையவர். விவசாய வாழ்க்கையைப் பற்றி பேசும் போது மிக உணர்ச்சி வசப்படுபவராக இருந்தார். தன சிறு வயதில் விவசாயத்தின் ஏறுமுகத்தை கண்டபின் தற்போது அது இறங்கு முகமாக ஆகி பின் முற்றிலும் சீரழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருப்பதைப் பற்றி பேசும் போது உடைந்து போய் விட்டார். தன் கதைகளைப் போலவே நேரிலும் ஒரு உணர்ச்சிகரமான கதைசொல்லி என்று தோன்றியது.
            இவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘பூமிக்குள் ஓடுகிறது நதிவெளிவந்த வருடம் ௨௦௦௦. அப்பொழுதே அவர் கதைகளின் பேசு பொருட்கள் உருவாகிவிட்டன. வெண்ணிலை தொகுப்பு வரை அந்த கருக்களையே அவர் கதைகளில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகைகளில்  தீண்டிப் பார்க்கிறார். விவசாயத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் கதைகள். அதன் காரணமாக நேரும் உறவுச் சிக்கல்கள். அவமானங்கள். பின்  விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள். செங்கற் சூளையின் அனலிலும் நெல் அறுப்பின் கடின உழைப்பிலும் கிடந்து அல்லாடும் பெண்கள். தோல் தொழிற்சாலையில் வேலை செய்து சீரழியும் சிறுவர்கள். உடலால் ஊனப்பட்டவர்கள். சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்கள். இவை எல்லாவற்றையுமே ஒரு விதத்தில் ‘உதிரிகளின் கதைகள்என்று வகைப்படுத்தலாம்.
            வேணுகோபாலின் கரிசனம் இயல்பாகவே பெண்களின் துயர்களில் சென்று படிகிறது. இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களை மையம் கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்த பெண் இவரை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு கருவாக இருக்கிறாள். அவரது எல்லா தொகுப்புகளிலும் இதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.  மனநிலை பிறழ்ந்த ஆணை விட ஒரு பெண் ஏன் இத்தனை தொந்தரவு செய்கிறாள்? உடல் சார்ந்த கவனம் ஒரு பெண்ணில் மிகச்சிறிய வயதிலேயே  ஏற்றப்படுகிறது. மனநிலை தவறிய பெண்ணில் அது இல்லாமல் போவது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. மேலும் அந்த பெண்ணையும் உடல் உறவிற்கு உட்படுத்தி கருவுறச் செய்யும் கீழ்மை என்று சமுதாயத்தின் இருண்ட பக்கங்கள்மேலும் மேலும்  திறந்து கொள்கின்றன.. இந்த பெண்கள் இறுதியில், ஒன்று முற்றிலுமாக கைவிடப்படுகின்றனர்(விழுதுகளும் பாதுகாப்பு வளையங்களும்) அல்லது உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர் (தொப்புள் கொடி).
            ஆனால் இவர் கதைகளில் வரும் குழந்தைகளின் சித்திரம் துயர் மிகுந்ததாக இல்லை. அவை எப்போதும் மகிழ்ச்சியும் துள்ளலுமாகவே உள்ளன. ‘பதனிட்ட பிஞ்சு கரங்கள்கதையில் தோல் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்களைத் தவிர மற்ற கதைகளில் குழந்தைகள் மிக குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் காட்சிகளே காணக்கிடைக்கின்றன.   ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்க நடையாய் நடக்கின்றனர்(புற்று). ஊருக்கு வரும் குதிரை மசால் தாத்தாவை சுற்றி கும்மாளமிடுகின்றனர். அவருக்காக  அம்மாவுக்கு தெரியாமல் உணவை எடுத்துக் கொண்டு செல்கின்றனர் (குதிரை மசால் தாத்தா). துர்நாற்றம் வீசும் பிச்சைக்காரனுக்காக தன்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தை வைத்து  மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி அளிக்கின்றனர்(நிரூபணம்).  “அங்கிள் உங்க நாயி பயங்கரமா காவக் காக்குமில்ல அங்கிள். திருடன் வந்தா லவக்குனு பிடிச்சிருமில்ல! என்ன அங்கிள்என்று பேசும் சிறுமிகளாகட்டும்,”அக்கா நாக்குத்தி இப்பிதி இப்பிதி ஓதுதுஎன்று பேசும் மழலைகளாகட்டும்,  இவர் கதைகளில் எங்காவது ஒளி மிகுந்த இடங்கள் வருகின்றன என்றால் அது குழந்தைகள் உலகில் மட்டும் தான். அந்த களங்கமின்மையும் அப்பாவித்தனமும் மிக்க உலகில் இருந்து அவர்கள் காணும் பெரியவர்களின் உலகம் அவர்களுக்கு பொருள்படாததாக இருக்கிறது. ஆனால் படிப்பவருக்கு அந்த இரண்டு உலகங்களுக்கு இடையே ஆன முரண் முகத்தில் அறைகிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து சென்று சேரப்போகும் நரகமல்லவா இந்த பெரியவர்களின் உலகம்?
            புற்றுகதையில் ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்று சிறுமி பூமிகா தன தம்பி நிலவரசனை இடுப்பில் சுமந்து கொண்டு இரு நண்பிகளுடன்  நடையாய் நடக்கின்றாள். பெரிய கேட் போடப்பட்ட ஒரு வீட்டின் வாசலில் சென்று அங்கு இருக்கும் ‘அங்கிளிடம்அவர் நாய்க்குட்டியை தரச்  சொல்லி கேட்கின்றனர். நாயின் விலை  ஐந்து ருபாய் என்று அவர் சொன்னதை ஐயாயிரம் ருபாய் என்று புரியாமல் வெறும் ஐந்து ரூபாயை திரட்டிக் கொண்டு சென்று பேரம் பேசுகின்றனர். இறுதியில் பள்ளி அருகே ஒரு பெண் நாய்க் குட்டியை கண்டெடுத்து வீட்டிற்கு கொண்டு செல்கிறாள். ஆனால் பூமிகாவின் மாமாவோ “தங்கம், பொட்டக்குட்டியை யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு..” என்று அந்த நாய்க்குட்டியை தூக்கிசென்று எங்கோ கடாசிவிடுகிறான்.  பூமிகாவின் அம்மா, பூமிகாவிற்கு அடுத்து பிறக்கவிருந்த பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்த செய்தியும் கதையில் பூடகமாக வருகிறது. இது அத்தனையும் சேர்ந்து நாய்க்குட்டியைப் பற்றிய அந்த கதையை சட்டென்று சமூகத்தில் பெண்ணிற்கு அளிக்கப்படும் இடம் என்ன என்ற இடத்திற்கு  எடுத்துச் செல்கிறது.
            நுண்தக வல்கள் சு.வேணுகோபால் கதைகளின் மிகப்பெரிய பலம். அதன் மூலம் ஒரு சூழலை அவர் எளிதாக கட்டமைத்து விடுகிறார். அதிலும் விவசாய சூழலை விவரிக்கும் போது அவருக்கு தகவல்கள் வந்து கொட்டுகின்றன. யதார்த்தவாத அழகியலை சேர்ந்த இவர் கதைகளுக்கு இது பெரும் பலத்தையும் சொல்லப்படும் சூழலைக் குறித்த நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டிட வேலையின் சூழலை சொல்வதாக இருந்தாலும் சரி,  தோல் தொழிற்சாலையின் வேலைகளை சொல்வதாக இருந்தாலும் சரி, இவரிடம் தகவல்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை. ஒரு மாட்டிற்கு மசால் உருண்டை போடுவதை விவரிக்கும் போதும் கூட அதை அதிகபட்ச விவரங்களோடு தான் சொல்கிறார்..

போல் மரத்திற்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு செம்பூத்துக் காளையின் நாக்கை இடது கையால் பற்றி இழுத்தான். மாடு கீழ்த்தாடையை இருபுறமும் ஆட்டியது. நுனி நாக்கை மடக்கி இழுத்து உப்பைப் பெட்டியிலிருந்து அள்ளி நாக்கில் வைத்து கரகரவென தேய்த்தான். மறுபடி உப்பை அள்ளி அடி நாக்கு வரை கையை உள்ளேவிட்டு அரைக்கித் தேய்த்தான். சிறுவர்கள், வாய்க் குகைக்குள் சென்ற அவன் கையை பதற்றத்துடன் பார்த்தனர். மூக்கணாங்கயிறு பிடி தளர்ந்து அப்படியே பற்களால் மாடி மென்றால் கை நைந்து போகும்.
            எச்சில் வடியும் கையை வெளியே எடுத்தான். பெட்டி மேல் வைத்திருந்த சொறி பிடித்த கடற்கல்லை எடுத்து வரட்டு வரட்டு என நாக்கில் வைத்துப் பறிக்க மாடு முன்னங்கால்களை மாற்றி மாற்றி வைத்தது. அந்தக்கல் உள்ளங்கையில் கச்சிதமாக அடைப்பட்டது. உல் நாக்கில் நத்தைக் கொம்புகள் போல் கருநிரத்தில் நீண்டிருப்பதை அருகில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கவனித்தான்.
            நாக்கை இடம் வலமாக திருப்பினான். உதட்டில் கவ்வியிருந்த கூர்மையான ஊசியால் கீழிறங்கி ஓடும் பச்சை நரம்பைக் குத்தித் துண்டித்தான். கேட்ட ரத்தம் குபுகுபுவென பொக்களித்து வடிந்தது. இடது கையால் நாக்கைப் பிடித்துக் கொண்டு வலக்கையை வாய்க்குள்ளே விட்டு பிசுறுகளை வசித்து வசித்து தள்ளினான் கிழவன். மாடு நான்கு கால்களையும் மாற்றி மாற்றி வைத்து வாளால் சுருட்டியடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தது. பாம்பு விரலிலிருந்து மணிக்கட்டுவரை நான்கு மருந்துருண்டைகளை வைத்து அங்களம் வரை நீட்டித் திணித்து திணித்து உள்ளே செலுத்தினான்.
            வெளி உலகத்தை விவரிப்பது போலவே அவர் அக உலகத்தையும் அதன் நுண்தகவல்களோடு எளிதாக விவரித்து விடுகிறார்.  ‘தருணம்கதையில் கஞ்சா புகை புலனனுபவங்களில் ஏற்படுத்தும் மாற்றத்தை விவரிக்கும் போது
            ராவான இரண்டாம் சிகரெட்டின் பின்பாதி புகைத்து கடைசி தம்மிற்காக உதட்டில் ஒட்டுகிறது துண்டு சிகரெட். பிடியற்று ஆடும் பூமியில் நான். சட்டென கவிழும் பூமி செங்குத்தாக நிற்கிறது. வரப்பைப் பிடித்து தொங்குகிறேன். ஐயையோ விரல் கவ்வும் வரப்பை விட்டால் நிற்கும் பூமியின் பாதாள அடியில் விழுந்து நொறுங்கிப் போவேன்.  விரல் அழுந்தப் பிடிக்கிறது வரப்பை. தட்டையான பூமி பிரமாண்ட மலையாய் எப்படி எழுந்து நின்றது? இதய ஒளி ஏன் உடலிலிருந்து வராமல் எங்கிருந்தோ வருகிறதே. உடலைவிட்டு கழன்று தூரே தனித்து பருத்திச் செடியில் இருந்து டிக்டிக்கிடுகிறது. வரப்பை பிடிவிட்டால் சிதையும் உடல். தனித்து உட்கார்ந்துகொண்டே டிக்டிக் துடிப்பை கால் நீட்டி விரலிடுக்கில் கவ்வ முடியாது மிரள்கிறேன். …கண்ணை மூடினால் நிமிர்ந்த பூமி கவிழ்கிறது. சுவர்ப்பல்லியாய் ஒட்டிக் கிடக்கிறேன். கண் தவிர்த்து ஏன் உடலில் எதுவும் ஒட்டியிருப்பதாக தெரியவில்லை. உடல் பதரா? மனசு பதரா? மனசு செண்டாக பருத்திச் செடியில் தொத்திக் கொண்டிருக்கிறது. லேசாக எழ முயற்சிக்க நிமிர்ந்த பூமி சாய்கிறது. வரப்பை மீண்டும் பற்றுகின்றன விரல்கள்...
            மன நிலைகளை உரையாடல்களில்  கொண்டு வரும் வேணுகோபாலின் திறன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அக்குபாரி கிழவியின் வீம்பும் சுயநலமும் கலந்த உரையாடல்களாகட்டும்(அக்குபாரி கிழவியின் அட்டகாசங்கள்), காமம் நிறைவேறாத பெண் தன் கணவனை நோக்கி கொள்ளும் ஆக்ரோஷமாகட்டும்(கொடிகொம்பு), கைவிடப்பட்ட கிழவியின் புலம்பல்களாகட்டும், அந்த கதாபாத்திரங்களின் தனித்தன்மையான குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன.  வெண்ணிலை தொகுப்பின் ‘பாரம் சுமக்கிறவள்  கதையில் பதின்ம வயதுச் சிறுமியின் காதல் குற்ற உணர்வு ஆகியவை  அந்த சிறுமியின் கூற்றாகவே அவள் மொழியிலேயே சொல்லப்படுகிறது.

சியாமளா என்னும் பதின்ம வயதுச் சிறுமியின் மீது காதல் கொள்கிறான் கிறிஸ்டோபர் என்னும் வெள்ளையடிக்கும் பையன். அதைப் பற்றி ஒரு சர்ச் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்பதாக இந்த கதை சொல்லப்படுகிறது. கிறிஸ்தோபர்  அவளை பார்க்க தினமும் காத்திருப்பது தொடங்கி, அவளுக்கு  ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்புவது என்று விடாமல் துரத்துகிறான். சிறுமிக்கே உரிய இயல்பினால் அவன் மேல் அவள் மனம் இரக்கம் கொண்டு அது ஒரு ஈடுபாடாக மாறுகிறது. ஆனால் இவள் வலுக்கட்டாயமாக அந்த உணர்ச்சியை விரட்டுகிறாள்.  அவனை பார்ப்பதை தவிர்க்கிறாள். கேபிடேஷன் பீஸ் கொடுக்க முடியாத தன் தந்தையின் வசதியின்மையினால் அவளுக்கு படித்து மார்க் எடுப்பது ஒன்றே வழி.அப்போது வேறு ஒரு காரணத்தால் அவன் இறந்துவிட அது இவளுக்குள் காரணமே இல்லாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ஒரு புயலில் சிக்கிய சின்னஞ்சிறு பூவை போல் அவள் பிஞ்சு மனம் அலைக்கழிக்கப்படுவதின் சித்திரம் வெறும் உரையாடல் மூலமாகவே இந்த கதையில் நிகழ்த்தியிருக்கிறார்..
            வேணுகோபாலின் கதைகளில் உன்னதங்களுக்கும் மன எழுச்சிகளுக்கும் இடமே இல்லையா?  யதார்த்தத்தின் இருளை சொல்வது மட்டும் தானா அவர் கதைகள்? பெரும்பாலும் அப்படித்தான். ஒரு சில கதைகளில் மட்டுமே யதார்த்தத்தின் அத்தனை அழுத்தங்களையும் தாண்டிய ஒரு நெகிழ்வின்   தருணம் காணக் கிடைக்கிறது. ‘நிகரற்ற ஒளிமற்றும் ‘ஒரு துளி துயரம்ஆகியவை இந்த வகையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகள்.
            ஒரு துளி துயரம்கதையில் வரும் விமலா இளமையிலேயே கால் ஊனமுற்றவள். கல்யாண மேடையில்  நிமிர்ந்து நிற்க முயற்சி செய்து தோற்பது, லவக் லவக் என்று குறுகி நிமிர்ந்து நடப்பது என்று சிறு சிறு தகவல்களில் அவள் ஊனத்தின் வலியை சு வேணுகோபால் உணர வைத்துவிடுகிறார். பலரால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் ராஜேந்திரன் அவளை மணக்க சம்மதிக்கிறான். அவனுடைய பால்ய கால நண்பனும் பைனான்சியருமாகிய கிருஷ்ணனுக்கு அவன் மொய் வசூலிக்கும் பொறுப்பை அளிக்கிறான். ஆனால் முதலிரவு முடிந்து மறுநாள் கிருஷ்ணனிடம் மொய் பணத்தை கேட்கும் போது அவன் கடனுக்கும் வட்டிக்கும்  கழித்துக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறான். ஏற்கனவே வெள்ளாமையில் நஷ்டங்களை சந்தித்து வரும் ராஜேந்திரனுக்கு இது இடியாக விழுகிறது. மொய் பணத்தை வைத்து தீர்க்கலாம் என்று இருந்த மற்ற கடன்களின் அழுத்தமும் நண்பனின் துரோகமும் வதைக்க  அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
            அதன் பின் விமலா சில காலத்திற்குப் பின் பைனான்சியர் கிருஷ்ணனுக்கு திரும்ப தர வேண்டிய மீதி பணத் தொகையுடன் அவனை சந்திக்கச் செல்கிறாள். “செத்து போஎன்றும் “எந்தப் பைத்தியமாவது இப்படி செய்யுமாஎன்றும் வசவிக் கொண்டே வரும் அப்பாவுடன் சேர்ந்து சென்று கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தையும் வட்டியுடன் திரும்ப கொடுக்கிறாள். “நீங்க உலகத்தில் அந்த மனுஷன் கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னு கொண்டு வந்தேன்.  ஏன் அத கேட்காம எடுத்துக்கிறீங்க..எத்தனை பேருடைய அன்பளிப்பு . என்கிறாள். அவளின் இந்த செயலுக்கு யதார்த்த உலகில் பொருளேதும் இல்லை. “உண்மையா என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று இவள் முதலிரவில் கேட்க  “உன்னை மட்டுமில்ல; உன் குழந்தைக் காலும்  பிடிச்சிருக்குஎன்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் ராஜேந்திரன் இட்ட ஒரு முத்தம்;  அந்த கணம்..ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி உராய்ந்து அவளுள் உருகிய அபூர்வகணம். அந்த கணத்தில் அவள் உணர்ந்த அன்பிற்கு செய்யும் கைம்மாறா இது ?

இது போன்ற மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து  சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு  நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும் கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.

Friday, February 03, 2017

சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடமும் பதிவுகளும்



தமிழகத்தின்  நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல், சமூகவியல்,  மானுடவியல், சூழலியல்,  ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும்  உள்ளடக்கினவாகச்  சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர் வாழ்வியலையும்,  விலங்குகள் அவர்தம் மனவெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக் கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின் அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல்  விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான். அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன்,  உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
சங்க  இலக்கியத்தில்  முயல் பற்றிய  பதிவுகள்
            சங்க இலக்கியத்தில்  முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. அதில் முயல் பற்றிய பதிவு சங்க இலக்கியத்தில் பதினெழு பாடல்களில் காணப்படுகின்றன.
சங்க  இலக்கியத்தில் ஐந்நிலப்பாகுபாடுகளில் ஒன்றான முல்லை நிலத்தில் காடும் காடு சார்ந்த சூழலில் இயற்கையான தாவர உணவுப்பொருட்களை உண்டு வாழ்ந்த முயலினை மனிதன் தன் உணவுத் தேவைக்காக வேட்டையாடி உண்டு மகிழ்ந்து வந்தான் என்ற செய்தி பல்வேறு பாடல்களில் புலப்படுகிறது.
முயல் வளர்ப்பு நவீனவாக்கச் சூழல்
            இன்றைய நவீனக்காலச் சூழலில் இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும், அழகுக்காகவும் முயல்களை வளர்ப்பது  உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நம் தமிழகத்தில் பல்வேறு  ஊர்களில் முயல் வளர்ப்பு பல்கிப் பெருகி வருகின்றது. அதில் குறிப்பாக தருமபுரி மாவட்டம் முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கிறது. இம்முயல் வளர்ப்பில் பல்வேறு வகையான இனங்கள் காணப்படுகின்றன. அவை சிறியவை,  நடுத்தரமானவை, பெரியவை. உலகெங்கும் உலவித் திரிகிற முயல்களில் இதுவரை 38 தனி இனங்களும், 87 வகைகளும் காணப்படுகின்றன.
            மக்கள் தொகைப்பெருக்கம், வியாபார நோக்கம், மருத்துவத் தேவைகள் போன்றவைகளுக்காக முயல்களை விரைவில் சினையுறச் செய்து அதிகமான குட்டிகளை ஈட்டி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் முயல்கள் பல்வேறு விதமான நோய்க்கு ஆளாகின்றன.
தமிழரின் விலங்கியல் அறிவு
            பண்டைத் தமிழன் விலங்கியல்  அறிவுடையவனாகக் காணப்படுகின்றான். எந்தச் சூழ்நிலையில் எந்த விலங்கு வாழும் என்பதை நன்கு ஆராய்ந்து ஐவ்வகை  நிலப்பாகுபாடுகளை வகைப்படுத்தி அதற்கு ஏற்ப கருப்பொருட்களை வடிவமைந்துள்ள பாங்கு போற்றுதலுக்குரியதாகும். அவன் உயிரினங்களின் வகைப்பாடுகளை ஆண்மரபு  பெண்மரபு என்று பிரித்து அவற்றின் அறிவியல் உண்மைகளையும்,  செயல்பாடுகளையும்,  தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்து நம் சங்க இலக்கியங்களில் பதிவுசெய்துள்ளான். இதே போன்று தொல்காப்பியர் முயலிற்கு குட்டி, குருளை, பறழ் என்ற பெயர்கள் சுட்டியுள்ளார்.
நாயே பன்றி புலிமுயல் நான்கும்
 ஆயுங் காலைக் குருளை என்ப1
குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்2
            மேலே கூறப்பட்ட நூற்பாக்களில்  நான்கு வகை உயிரினங்களுக்கு குட்டி, குருளை, பறழ் என்ற இளமைப்பெயர்களைத் தொல்காப்பியர் சுட்டியுள்ள பாங்கால் அவரின் விலங்கியல் அறிவு தெளிவுபடுவதை அறியமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடம்
            சங்க இலக்கியம் முதல், கரு, உரி என்ற முப்பொருளின் பின்புலத்தில் குறிஞ்சி, முல்லை,  மருதம்,  நெய்தல், பாலை எனும் ஐவ்வகை நில அமைப்பு அமைந்துள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் முதற்பொருளைத் தீர்மானித்த பின்பு அந்நிலச் சூழலிற்கு ஏற்ப மக்கள், பறவை,  விலங்கு, ஊர், நீர், பூ, மரம்,  உணவு, பறை,  யாழ்,  பண் போன்ற கருப்பொருட்களை வகுத்துக் கொண்டான். அந்த வகையில் முல்லைநிலக் காட்டுப் பகுதியில் வாழும் முயலின் வாழ்விடங்கள் பற்றி செய்திகள் சங்கக் கவிதைகளில் இடம் பெற்றுள்ளன. முல்லைநிலக் காட்டுப்பகுதிகளில் ஓடித்திரிந்த முயல் மனிதனின் வருகையை அரிந்து அங்கும் இங்குமாக ஓடித்திரிந்ததாக அகநானூறு பதிவு செய்துள்ளது.
காடுஉறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
 மடிவிடு வீளை கவரீஇ குறுமுயல்
 மன்ற இரும்புதல் ஒளிக்கும்3
            இப்பாடல் காட்டில் வசிக்கும் இடையன், தன் ஆடுகளை ஒரே இடத்தில் கூட்டுவதற்காக நாக்கை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியைக் கேட்டு அஞ்சி, குறுமுயலானது மரத்தடிப் பொதுவிடத்தில் உள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும் செய்தியை அறியமுடிகிறது. மேலும், புறத்தைக் காக்கும் காவலர்களின் குறுந்தடியின் ஓசையைக் கேட்டு பூக்கள் நிறைந்த முல்லைக் காட்டில் ஒடுங்கி இருந்த முயல்கள் அஞ்சி அகன்றோடின.
மாலை வெண்காழ் காவலர் வீச
 நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்4
இப்பாடல் வரிகளின் மூலம் முயலின் வாழ்விடம் முல்லை நிலம் என்பதை அறியமுடிகிறது. அழகிய முல்லைக் காட்டில் தாவிக் குதித்து ஓடி விளையாடும் காட்சி அகநானூறு 384 ஆம் பாடலில், இயற்கை எழில்மிகுந்த முல்லைக் காட்டில் முயல் வாழ்த்தை அறியமுடிகிறது.
மருத நில வயல்வெளியில் எலிவேட்டைக்குச் சென்ற சிறுவர்கள் வில்லை எடுத்து ஆரவாரிக்கும் போது பெரிய கண்ணையுடைய சிறுமுயல் அங்குயுள்ள கரிப்பிடித்த பாத்திரங்கள் உடையுமாறு தாவிச் சென்றது.
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றிப் பாயும்,  வன்புலத்துவே5
         முல்லை நில வயலில் விளைந்த வரகினை உண்ண, முயல் தன் பெண் முயலோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்து அங்குயுள்ள கொடிகளின் மறைவில் உறங்குவதை அகநானூறு 284 ஆம் பாடல் புலப்படுத்துகிறது. முல்லை நிலத்தில் வரகு அறுவடை முடிந்த வயல்வெளியில் எலிதிரியும், அதனைப் பற்றிக்கொள்ள குறும்பூழ்ப் பறவையின் ஆராவாரத்தைக் கண்ட குறுமுயல் அஞ்சி ஓடும் போது கரிய கிளையையுடைய இருப்பைப் பூ உதிர்வதை புறநானூறு 384 ஆம் பாடலின் மூலம் முயலின் வாழ்விடம் வயல்வெளியிலும் இருப்பதை அறியமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடமானது இயற்கை எழில்மிகுந்த அழகிய முல்லைக்காட்டையும், உற்பத்தி பொருள் வளம் நிறைந்த அழகிய மருத வயல்வெளியையும் வாழ்விடமாகக் கொணடுள்ளதை மேற்கண்ட சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. இன்றைய நவீனவுலகக் காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி தேவை, உலகமயமாக்கல் போன்றவைகளின்  காரணத்தால்  காட்டு  வாழ்யிரினங்களின் வாழிடத்தை மக்கள் தன்வயப்படுத்திக் கொண்டு அதன் இயற்கைச் சூழலை மாற்றி அமைத்து விடுகின்றனர்.
சங்கப் புலவரின் கற்பனைத்திறன் (உவமையாக்கல்)
சங்கப் புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியவர்கள். அவர்கள் விலங்கு, பறவை, தாவரங்கள் இவைகளின் உடலுறுப்புகள் பற்றி இயல்புகளை   நுனித்தாய்ந்த  ஆழ்ந்த  அறிவுடையவர்களாகத் திகழ்கினறனர். தம் பட்டறிவிற்  கண்டுணர்ந்தவற்றை  வேறொரு பொருளுக்கு உவமையாகத் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குச் சான்றாக தொல்காப்பியர்,“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்6 என்ற நூற்பாவில்  உவமையும் பொருளும் ஒத்தன என்று உலகத்தரை மகிழ்ச்சி செய்தல் வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். பண்டைத் தமிழன் நுண்கலைகள் பற்றிய நுண்ணிய அறிவுயுடையவனாக திகழ்கின்றான்.“நுண்கலை என்பது கலைஞன் நிறையுற அனுபவித்த, அல்லது கண்ட, அல்லது கற்பனை செய்த அல்லது எண்ணிய ஒன்றைத் தனது சொந்த உணர்ச்சிகளையும் தோற்றப்பாடுகளையும் கலந்து மற்றவர்க்கு உணர்த்தும் வாயிலாகும் என்று டி. ஜி. டக்கர் என்பார் கூறியுள்ளார்7 என்பதை மு. வ. கூறுகிறார்.
சங்க இலக்கியத்தில் புலவர்கள் தங்கள் கண்ட இயற்கைப்பொருட்களைப் பற்றி நுண்ணறிவுக் கொண்டு, வேறொரு இயற்கைப்பொருட்களுக்கு உவமையாகக் கூறி தன் கற்பனைத் திறன் வெளிப்படுத்தியுள்ளனர். நம் ஊரில் மழைக்காலம் முடிந்துவிட்டது. உழவுத்தொழிலும் நின்றுவிட்டது. கலப்பைகள் சும்மா கிடக்கின்றன. வானத்தில் வெண்மையான மேகங்கள் சூழ்ந்துகொண்டு காணப்படுவதை, குறுமுயலின் நிறத்தை ஒப்புமைப்படுத்தி கூறியுள்ளதை,
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
 குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து8
            எனும் அகநானூறு பாடல் வழி வானத்தில் நிலவும் வெண்மேகங்களை குறுமுயலின்  நிறத்தோடு  உவமையாக்கியுள்ள கூறுபாடு தெளிவாகிறது. மேலும்   குறவர்கள்  தினைப்புனைத்தை முற்றாக அழித்து விட்டு, புதியகொல்லை உருவாக்க தினைகளை எரிக்கும் போது உருவாகும் புகைநிழலின் நிறத்தை முயலின் நிறத்தோடு உவமையாக்கியுள்ளதை, “இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்9 என்னும் பாடலடி மூலம் அறியமுடிகிறது.  முயலின் கண்ணை கூர்மையான ஆறலைக் கள்வர்களின் கண்ணோடும், நீருக்குள் விழும் மழைத்துளியின் குமிழியோடும் உவமைப்படுத்தியுள்ளதை,
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை10
நீருள் பட்ட மாரிப் பேருறை
 மொக்குள் அன்ன பொருட்டுவிழிக் கண்ண
 கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்11
            காட்டு வழியில் வலிமை பொருத்தி வழிப்பறி கள்வர்கள் அம்பு எய்யும் முயற்சியோடு கூர்மையான கண்களை வைத்து விலங்குகளை வேட்டையாட தயாராக இருப்பார்கள் அதைப்  போன்று கூர்மையான கண்ணையுடைய முயல் என்றும், நீருக்குள் விழுந்த மழையின் பெரிய துளியால் ஏற்பட்ட குமிழிபோன்ற உருண்ட விழியமைந்த கண்ணையும், கரும்நிறப்பிடரி அமைந்த தலையையும், பெரிய செவியையும் உடைய சிறுமுயல் என்று உவமையாக கூறுகின்றனார் சங்கப் புலவர்கள். இம்முயல்களுக்கு  இப்பெயர் வந்தமைக்கான காரணத்தை பி. எல். சாமி அவர்கள் “தமிழ்நாட்டில் காணப்படும் காட்டு முயலுக்கு விலங்கு நூலார்  Blacknaped Hare என்று பெயரிட்டுள்ளனர். இப்பெயர் இம்முயலிற்குள் கழுத்தில் உள்ள கருப்பு நிறப்பகுதியின் காரணமாக வந்தாகும்12 என்பதை கூறுகிறார்.
            சங்கப்  புலவர்கள்  தான்  கண்ட ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனித்து அதனை பிரிதொருப் பொருளோடு உவமையாக்கும் திறன் போற்றுதலுக்கூரியது. அவன் அவனோடு இயைத்து வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இயற்கைப்பொருட்கள்,  பிற உயிரினங்கள் போன்றவற்றின்   உடலுறுப்புகளின்  வடிவங்களை நன்கு கூர்ந்துநோக்கும் திறமை கொண்டவனாகப் புலப்படுகிறான். முயலினை வானத்தில் தெரியும் வெண்மேகங்களோடும்.  ஆறலைக் கள்வர்களின் கண்ணையை முயலின் கண்ணோடும்   உவமையாக்கியுள்ளதை  அறியமுடிகிறது. 
பண்டைத் தமிழரின் விருந்தோம்பல் பண்பும் வேட்டையாடுதலும்
            சங்கத்  தமிழர்கள்  விருந்தினரைப்  போற்றுவதைத் தலையாய கடமையாக  ஏற்றுச் செயல்பட்டனர். பண்டைத்  தமிழரின் விருந்தோம்பல் பண்பு தலைசிறந்த  நாகரிகப்பண்பாகும். அவர்கள் உறவினர்கள், நண்பர்கள்,  புலவர்கள், எதிர்ப்பட்டவர்களை விருந்தோம்பி மகிழ்ந்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்துள் விருந்து என்னும் இலக்கிய வகைமைக்கு  தொல்காப்பியர் விளக்கம் தருகையில் “விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே13 என  உரைக்கின்றார். ஆதனடிப்படையில் விருந்து என்பதற்குப் புதுமை என்று பொருள் கொள்வோமானல் புதிதாக வருபவர்களை விருந்தினர்களாக ஏற்று விருந்தோம்பல் செய்வது என்பது விளங்கும்.
            சங்க கால மக்கள் தங்களின் உறவினர்கள் அல்லாது மற்ற புலவர், பாணர்களுக்கு புலால் உணவிட்டு விருந்து உபசரித்ததை சங்கப்பாடல்கள் தெளிவுப்படுத்துகின்றன. கிள்ளிவளவன் தன் சுற்றத்தரோடு இளமையான கொழுத்த முயலின் இறைச்சியை உண்டு மகிழ்ந்து வந்தான்.
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
 குறுமுயல் கொழுஞ்சூடு கிழ்ந்த ஒக்கலொடு14
            இப்பாடல் வரிகளின் மூலம் குறுமுயலின் இறைச்சியை தன் சுற்றத்தரோடு அரசன் உண்டு மகிழ்ந்த செய்தியைக் காணமுடிகிறது. மேலும் சுட்ட முயல்கறியின் உணவை பாணர்களுக்கு விருந்தாளித்த செய்தி புறநானூற்றில் 319 ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. பொருள் இல்லாத சுற்றத்தினர்க்கு வேண்டிய பொருளினை அரசன் கொடுத்தாகக் கூறப்படும் செய்தி, வளமான மலரினின்று இறக்கிய மதுவும், குறிய முயலின் தசையோடு கலந்து தந்த நெய்ச்சோற்றையும், நெற்கூட்டில் இருந்து வேண்டுமளவு எடுத்துக் கொண்ட உணவுப்பொருட்கள் போன்றவைகளை அரசன் சுற்றத்தினர்க்கு கொடுத்தாக புறநானூறு 396 ஆம் பாடல் புலப்படுத்துகிறது.
            சங்ககால மனிதன் தன் உணவுத்தேவைக்காக ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குச் சென்று உணவுத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அவன் முயல் போன்ற விலங்கின் மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்துள்ளான்.
மென்புலத்து வயல் உழவர்
 வன்புலத்துப் பகடு விட்டுக்
 குறுமுயலின் குழைச் சூட்டோடு
 நெடுவாளை அவியல்15
            இப்பாடல் வரிகளின் மூலம் முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டுச் சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடு பழையச்சோற்றை உண்ட மருத நில உழவன் பற்றி செய்தி அறியமுடிகிறது

சங்ககால மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக விலங்குகள்,  பறவைகளை தந்திரமாக வேட்டையாடியுள்ளான். “முயலின் இறைச்சி மிக்க மெதுவானது என்பர். அதனால் விரும்பி உண்பர். முயலின் இறைச்சியின் சுவையை நோக்கியே ‘முயல் விட்டுக் காக்கைதிலைஎன்ற பழமொழியும் தோன்றின. நூயை நட்புக் கொண்டால் நல்ல முயல் இறைச்சியைத் தரும் என்பது நாயைக் கொண்டு முயல் வேட்டையாடும் வழக்கிலிருந்து தோன்றிது.” 16 என்பதை பி.எல். சாமி அவர்கள் ஒரு விலங்கினை இன்னோரு விலங்கைக் கொண்டு வேட்டையாடும் பழக்கம் இருந்துள்ளதை கூறுகிறார். அதில் சிறு விலங்கான முயலினை வேட்டையாடியுள்ளதைக் கீழேயுள்ள சான்று மூலம் அறியமுடிகிறது.
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்க அறவளை
 கருங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
 அருஞ்சுரம் இறந்த எம்பர்17
            பிளந்த வாயையுடைய நாய்களோடு பசுமையான புதர்களை அசைத்து, வேலி ஓரத்தில் தப்பி ஓடும் முயல்கள் செல்ல முடியாதபடி தொடர்ந்து வலைகளை மாட்டி  முள்ளுடைய  தாமரை  மலர்களின்  பின்பகுதி போன்ற நிறமுடைய நீண்ட செவிகளையுடைய  சின்ன முயல்களை அவை போவதற்கு இடமின்றி மறித்துப் பிடிப்பர். மேலும்  முயலை எறிந்து கொண்டு வந்த வேட்டுவன் பற்றிச் செய்தி நற்றிணை 59 ஆம் பாடலில் காணப்படுகிறது.
            பண்டைத்  தமிழன் விருந்திருக்கு மாமிச உணவு விருந்தாக அழித்துள்ளதை சங்கப்பாக்களின் வழி அறியமுடிகிறது. மேலும் தன் உணவுத்தேவைக்கு விலங்குகளை வேட்டையாடுதல் தமிழனின் மரபாக இருந்துள்ளதை  தெளிவுப்படுத்துகிறது.
            சங்கப் புலவர்கள் வகுத்த குறிஞ்சி, முல்லை,  மருதம், நெய்தல், பாலை போன்ற   ஐவகை நிலப்பரப்பில் முல்லை நிலத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ள முயலைப் பற்றிய  பதிவுகள் பதினேழு பாடல்களில் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடலிலும் முயலைப் பற்றி வௌவேறான கருத்தாக்கங்கள் காணப்படுகின்றன. சங்கப்புலவன்  ஊர்வன, பறப்பன, அஃறிணை, உயர்திணை போன்ற ஒவ்வொரு உயிரினங்களின் உடலுறுப்புகள் அதன் வடிவமைப்புகளை கூர்ந்து நோக்கும் திறன் போற்றுதலுக்குரியது. சங்க இலக்கியத்தில் முயல் முல்லை, மருத நிலத்தினை வாழ்விடமாகக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. சங்கப் புலவர்கள் முயலினை வானத்தில் நிலவும் வெண்மேகங்களின் நிறத்தோடும்,  வயலில் தினையை எரிக்கும் போது உண்டாகும் புகைநிழலின் நிறத்தோடும்  உவமையாகக் கூறியுள்ளனர்.  பண்டைத் தமிழன்  தன்  உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய தன்னோடு  ஊடாடிய வாழ்ந்த முயலை  வேட்டையாடி தானும் உண்டு உறவினர்கள், புலவர்கள்,  பாணர்களுக்கு விருந்தாக படைந்துள்ளான் என்பதை சங்கக் கவிதை வழி அறியமுடிகிறது. இன்றைய நவீனயுக காலத்தில் மக்களின் உணவுத் தேவைக்காக விலங்குகளை இயற்கையாக வளர்க்காமல் ஒரு குறிப்பிட்ட வரைமுறையோடு அடைத்து வைத்து அதற்கு இயற்கைச் சூழலோ இல்லாமல், விரைவாக சினையுறச் செய்து வளர்த்து விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டிக் கொள்கின்ற போக்கினை காணமுடிகிறது.
சான்றாதாரங்கள்
1. தொல். மரபியல், இளம். நூற்பா.552.
2. தொல். மரபியல், இளம். நூற்பா.554.
3. அகநானூறு, பா.எ.394.
4. ஐங்குறுநூறு, பா.எ.421.
5. புறநானூறு, பா.எ.322.
6. தொல். உவமையியல், இளம். நூற்பா.279.
7. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, மு. வ., ப. 335.
8. அகநானூறு, பா.எ.141.
9. அகநானூறு, பா.எ.140.
10. அகநானூறு,பா.எ.365.
11. புறநானூறு, பா.எ.333
12. சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி. எல். சாமி,  ப.396.
13. தொல். செய்யுளியல், நூற்பா.540.
14. புறநானூறு, பா.எ.34.
15. புறநானூறு, பா.எ.395.
16. சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி. எல். சாமி, ப.399.
17. பெரும்பாணாற்றுப்படை,  அடி. 115.  

குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்



            சங்க இலக்கியத்தில் யானை பற்றிய பதிவுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் குறுந்தொகையில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை அடிப்படையிலும் படைப்புநோக்கு அடிப்படையிலும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.  சங்க இலக்கியதில் விலங்கின விளக்கம் எனும் தலைப்பின்கீழ் விலங்குகளின் உடலுறுப்பு, உணவுமுறை, வாழுமிடம், அவற்றின் செயல்பாடுகள் ஆகியனவற்றை மிக விரிவாக பி.எல். சாமி எடுத்தியம்பியுள்ளார். அவர் விலங்கு நூலார் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். அவற்றுள் குறுந்தொகையில் 19 இடங்களில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளைக் கூறியுள்ளார். அவ்வாய்வின் தொடர்ச்சியாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை மற்றும் திணைப்பகுப்பு அடிப்படையில் வகைப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்
            குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள் 64 இடங்களில் அமைந்துள்ளன. அப்பதிவுகளை மரபுநிலை அடிப்படையில் பின்வருமாறு வகைப்பாடு செய்யலாம். அவை,
v  பொதுப்பெயர்(யானை)
v  இளமைப்பெயர்(கன்று, குழவி)
v  ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
v  பெண்பாற்பெயர்(பிடி, பெட்டை)
பொதுப்பெயர்(யானை)
            கன்று, பிடியென பால்வேறுபாட்டுடன் குறிக்கும் பெயர்கள் யானைக்கு உண்டு. இருப்பினும் யானை எனப் பொதுவாக அழைக்கும் பழக்கம் இன்றுமட்டுமல்லாது சங்கப் புலவரிடமும் அமைந்துள்ளது. அதனடிப்படையில் முப்பது(30) இடங்களில் யானை பற்றிய பதிவுகள் அமைந்துள்ளன. அவற்றைத் திணை அடிப்படையில் பின்வருமாறு வரைபடமாக்கலாம்.
            இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 16 இடங்களிலும், முல்லைபாடல்களில் ஓரிட்த்திலும், மருதப்பாடல்களில் 5 இடங்களிலும், பாலைப் பாடல்களில் 9 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. நெய்தல் பாடல்களில் யானை பற்றிய பதிவு இடம்பெறாமைக்குத் திணைசார் வாழ்வியலே காரணமாக அமையலாம்.
இளமைப்பெயர் (கன்று, குழவி)
பார்ப்பு, பறழ், குட்டி, குருலை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இளமைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர். அவற்றுல் யானைக்குரிய இளமைப் பெயர்களை,
           “யானையுங் குதிரையும் கழுதையும் கடமையும்
            மானோ டைந்தும் கன்றெனற் குரிய”  – தொல்.பொருள். 559
என்றும்,
           “ குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை”           – தொல்.பொருள். 563
என்றும் சுட்டுவார். இவற்றால் கன்றும் குழவியும் யானைக்கு இளமைப் பெயர்கள் என்பது பெறப்படும். இவ்விளமைப்பெயர்கள் குறுந்.225:1-2, 394:1 ஆகிய இரு இடங்களில் காணப்பேறுகின்றன. இவ்விரு அடிகளும் தலைவனை இயற்பழிக்குமுகமாக இடம்பெற்றுள்ளன. அப்பாடலடிகள் வருமாறு:
            “கன்றுதன் வயமுலை மார்ந்த
            தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட!”     –குறுந்.225:1-2
            “முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி”  –குறுந்.394:1
என்ற அடிகள் சுட்டும்.
ஆண்பாற்பெயர் (களிறு, வேழம்)
            ஆண்பாற்பெயர்களாக எருது, ஏற்றை(ஏறு), ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதல், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் அமையும் என்பர் தொல்காப்பியர். அவற்றுள் களிறு யானைக்குரிய ஆண்பாற்பெயராக அமையும் என்று பின்வரும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்நூற்பா வருமாறு:
                        “வேழக் குரிதே விதந்துகளி றென்றல்”    – தொல்.பொருள். 579
எனும் நூற்பாவில் கூறியமைபோல் குறுந்தொகையில் களிறு எனும் ஆண்பாற்பெயர் 32 இடங்களில் பயின்றுவந்துள்ளமை அறியப்பெறுகின்றன. அப்பதிவு ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
             இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 10 இடங்களினும் முல்லை நெய்தல் பாடல்களில் ஓரிடத்திலும் மருதப்பாடல்களில் இரு இடங்களிலும் பாலைப் பாடல்களில் 8 இடங்களிலும் அமைந்துள்ளன.
பெண்பாற்பெயர் (பிடி, பெட்டை)
            பெண்பாற் பெயர்களாக பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற பதின்மூன்று பெயர்களாக அமைவன என்பார் தொல்காப்பியர்.  இவற்றுள் யானைக்குரிய ஆண்பாற்  பெயர்களைப் பின்வரும் நூற்பா சுட்டுகிறது. அந்நூற்பா வருமாறு:
                “பிடியென் பெண்பெயர் யானை மேற்றே”   – தொல்.பொருள்.596
            இப்பாடலடியில் பிடி என்பது யானைக்குரிய பெண்பாற்பெயராக அமைந்தமை அறியப்பெறுகின்றது. இப்பெயர் குறுந்தொகையில் பன்னிரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 7 இடங்களிலும், முல்லைப் பாடல்களில் ஓரிட்த்திலும் பாலைப் பாடல்களில் 4 இடங்களிலும் அமைந்துள்ளன. மருதம், நெய்தல் ஆயிரு திணைப் பாடல்களில் இடம்பெற்றமைக்குத் திணைசார் வாழ்வியல் காரணமாக அமையலாம்.
படைப்பு நோக்கம்
                சங்கப் புலவர்கள் யானையைப் படைத்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அவை: அன்பைப் புலப்படுத்தும் முகமாக, சுற்றத்துடன் இணைந்து வாழும் பாங்கு மக்களிடமும் அமைதல் வேண்டுமென வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. பாலை பாடல்களில் இவ்விரு தன்மைகள் இடம்பெற்றுள்ளன. பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை, பெண்யானையைப் பருகச் செய்வது அன்பைப் புலப்படுத்துவதாகவும்; பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியில் குத்தித் தன் பெரிய சுற்றத்தின் பசியைத் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளன(நித்தியா அறவேந்தன், பழந்தமிழகத்தில் வறுமையும் வளமையும்,பக்.3-4) என்று குறித்திருப்பதும் கவனத்திற்குரிய ஒன்றாகும். இதனைக் குறிக்கும் பாடலடிகள் வருமாறு:
                        “பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
                   மென்சினை யாவும் பொளிக்கும்”                 – குறுந்.37:2-3
என்று பிடிபசியைத் தீர்க்கும் அன்புறு காட்சியும்,
                         “சிறுகட் பெருநிரை உறுபசி தீர்க்கும்”         – குறுந்.255:4
என்பது களிறு சுற்றத்தின் பசியைத் தீர்க்கும் அன்புறு மற்றும் கடமையுணர் காட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பாலைப் பாடல்களில் யானையது பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளன. அவை குறுந்.37, 79, 202, 255 ஆகிய பாடலடிகளில் இடம்பெற்றுள்ளை அறியப்பெறுகின்றன. சான்றாக,
கான யானை தோல்நயந்து உண்ட
                   பொரிதால் ஓமை வளிபொரு நெடுஞ்சினை”     – குறுந்.79:1-2
என்பதாகக் குறிப்பிடப் பெறுகிறது. இவ்வடியில் பாலைநிலத்தில் நீரின்மையால் ஓமை மரத்தின் மரப்பட்டையை உரித்து உண்ணும் பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளது. இத்தன்மைகள் சங்க மக்களின் வறுமைநிலையை மறைமுகமாக எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளன.
                யானைகள் குன்றுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும் காடுகளிலும் வழும் தன்மையுடையன (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பக்.278-279) என்பார் பி.எல்.சாமி. அத்தன்மையைக் குறுந்தொகைப் பாடலடியொன்று எடுத்தியம்புகிறது. அப்பாடலடி வருமாறு:
                “சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
                தொல்முரண் சோரும் துன்னருஞ் சாரல்”       – குறுந். 88:2-3
என்ற அடியில் நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் யானைகள் வாழுமிடமாக துன்னருஞ் சாரல் இடம்பெற்றுள்ளது. இதுபோல் அமைந்த பாடலடிகளில் குறிஞ்சிநில மக்களின் வாழ்வியற் சார்புகளை காணமுடிகின்றது.
                சங்க மக்களின் வளமை, வறுமை, சமுதாயச் சார்பு, அன்பு வெளிப்படும் தன்மை, வாழிடம் ஆகியன்வற்றை எடுத்தியம்புவதாக யானை எனும் கருப்பொருள் இடம்பெற்றுள்ளது.
தொகுப்புரை
v  பொதுப்பெயர், இளமைப்பெயர்,ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர் என்ற பாகுபாட்டில் யானை பற்றிய பதிவுகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
v  பொதுப்பெயர் அதிக அளவில் பாடப்பெற்றுள்ளன.
v  களிறு பற்றிய பதிவே குறுந்தொகை ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
v  யானைக் கருப்பொருள் வழி சங்க மக்களின் வாழ்வியற் கூறுகளை அறியமுடிகின்றது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...