முனைவர் பூ.மு. அன்புசிவா
இணைப்பேராசிரியார் மற்றும் தலைவர்
தமிழ்த்துறை
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை.
பேச: 9842495241.
முன்னுரை
உழவினை மிகச்சிறந்த தொழிலாக தமிழர்கள் தெய்வமாகக் கருதிவந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல நமக்கு கிடைக்கின்ற எல்லாவற்றிலும் இத்தகைய உண்மை விளங்கக் காண்கின்றோம். பிற இடங்களிற்போல உழவனைப் பழிக்கின்ற போக்கு இங்கு இல்லை. இதை நாம் இங்கு சுட்டுவது வெறியூட்டுவதற்கன்று, தமிழ்நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ள மனப்போக்கு எதிர்கால வளர்ச்சிகேற்றதாக உள்ளது என்பதை கூறுவதே என்பதை கூறுவதற்காகவே. உழவு என்பது “உழைத்தல்” “உழைப்பு” என்ற சொற்களோடு தொடர்புடையது. மெய்வருத்த பாடுபடல் என்று பொருள் படும். ஆகவே உழவுத் தொழிலுக்கே சிறப்பாக “உழவு” என்ற சொல் அமைந்திருத்தலைக் காண்கின்றோம். இதுவே
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்று வள்ளுவர் இந்த நுட்பத்தை தெளிவாக்குவதைக் காணலாம். தமிழ் இலக்கியம் பழமைச் சிறப்புடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துக்கூறும் கருத்துக் கருவூலமாகவும் உள்ளது. தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கும், மகிழ்விப்பதற்கும் எழுந்தது என்றாலும் கூட அறிவியல் செய்திகளை அறிவிப்பதும் இலக்கியங்களின் நோக்கங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஊன்றிக் கற்கும்போது உணரமுடிகிறது. அந்தவகையில் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடக்கும் வேளாண்மை அறிவியல் தொழில் நுட்பங்களை வெளிக்கொணர்வது தான் நமது நோக்கம்.
அறிவியலும் பயன்பாடும்
இன்றைய உலகம் அறிவியல் உலகம். நாளும் அறிவியல் கருத்துகள் வளர்ந்து வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கிற்கேற்ப நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டுமானால் நம் இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் பல்வேறு அறிவியல் கருத்துகளை வெளிகொணரவேண்டும். அதற்கு இதுபோன்ற ஆய்வுகளும் ஆய்வரங்கங்களும் பெரிதும் உதவும். மொழியை இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமின்றி அறிவியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்கு மொழியை எளிமைப்படுத்தி பழமை இலக்கியங்களிலுள்ள அறிவியல் தொழில் நுட்பங்களை ஆராய்ந்தெடுத்து அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.அந்தவகையில் நம்முன்னோர்களின் அனுபவம் எல்லா காலத்திற்கும் ஏற்றதாக இருப்பதை நாம் பெருமையடைய வேண்டும்.
உழவியல் தொழில் நுட்பங்கள்
உழவன் தன் நிலத்தை நன்கு உழவு செய்து பின் நடவு செய்வான். அந்த நிலத்தை எவ்வாறு உழுது பண்படுத்த வேண்டும் என்பதை தமிழ் இலக்கியங்கள் விளக்குகின்றன.
“அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே மேல்”
ஆழமாக உழும்போது கீழ்மண் மேல் மண்ணாகவும், மேல் மண் கீழ் மண்ணாகவும் கலக்கப்பட்டு, மண்ணில் இயற்கையாகக் கிடைக்கப்பெறும் உரங்கள் அனைத்தும் பயிர்களுக்குப் பயன்படுகின்றன. கம்மராமாயணத்தில் வரும் பாடல் ஒன்று ஆழ உழும் முறையை
“முள்ளரை முளரி வெள்ளி
முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச்
சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை
தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள்ளவரால் ஒளிப்ப மள்ளர்
உழுபகடு உரப்ப வாரும்” (பால. நாட்.18)
எனவரும் பாடலில்,உழவர்கள்(மள்ளர்கள்) உழுகின்ற காளைகளை வேகமாகச் செலுத்துகின்றபொழுது, கலப்பையின் கொழு ஆழமாய் பாய்ந்து வயல் நீரில் முன்னதாவே முளைத்திருந்த தாமரையின் முளைகளை ஒடிக்கின்றன, அதுபோல் மண்ணுக்குள் புதைந்துள்ள முத்தும்,பொன்னும் கொழுவின் இருமடங்கிலும் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. மணிகள் சிந்துகின்றன. கொழு ஆழப் பாய்ந்தமையால் சங்குகளில்பட்டு சலஞ்சலம் என்று ஒலி எழுப்பி புலம்புகின்றன. மீன்கள் மருதநிலத்தில் துள்ளி ஒடுகின்றன. கொழுவில் மாட்டிவிடாமல் ஆமைகள் தலையைச் சுருக்கிக் கொள்கின்றன.
வயலிலுள்ள மீன்கள் அருகிலுள்ள மடைகளுக்குள் சென்று ஒளிந்து கொள்கின்றன. என்பதை விளக்குகிறது. எனவே ஆழமாய் உழுவதால் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. ஆழ உழுவது என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும். ஆழமாக உழவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த உழவர் பெருமக்கள், எத்தனை முறை உழவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்கள்.
உழவு செம்மைபடுவதற்கு இடத்திற்கிடம் உழவின் எண்ணிக்கை மாறினாலும் கூட, பொதுவாக நான்கு உழவோடு பயிர்த்தொழில் செய்வது என்பது இன்று நடைமுறையில் உள்ளது. நான்கு உழவு போதுமானது. இதனை
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்” (குறள் 1037)
என்பது வள்ளுவம். ஒரு பலம் எடையுள்ள கட்டியைக் கால் பலம் எடையுள்ள கட்டியாக மாறும் வரை உழவேண்டும் உழ வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகும். ஒரு பலம் எடையுள்ள கட்டியைக் கால் பலம் எடையுள்ள கட்டியாக மாற்ற வேண்டுமென்றால் நான்கு முறை உழவேண்டும் என்பது தெளிவாகிறது. இதனையே
“முந்தித் தரிசடித்து முச்சாரியாய் மறித்து
நைந்திடவே சேறுகலக்கி நயமாக நாலுழவு”
என்று செங்கோட்டுக் பள்ளு வலியுறுத்துகிறது. முதலில் உழுவது தரிசு உழவு, இரண்டு மற்றும் முன்றாம் உழவு மறித்துழவு, நைத்து சேறாக வேண்டுமெனில் நான்காவது உழவு அவசியம் என்பதை வரிசைப்படி மிகத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
தீவிரப் பயிர் சாகுபடி
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப சாகுபடி முறைகளில் மாற்றங்களை கையாள வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம். இதனை வலியுறுத்தும் விதமாக சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் கூறப்படும் கருத்து தீவிரப்பயிர் சாகுபடி முறையை விளக்கும் வகையில் உள்ளது. சோழ மன்னனாகிய கிள்ளிவளவனைப் பாடும் ஆவூர் முலங்கிழார் எனும் புலவர்
“ஒருபிடி படியும் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடு கிழவோயே” (புறம் 40)
என்று வாழ்த்துகிறார். ஒரு பெண்யானை படுத்திருக்கும் சிறிய இடத்தில் ஏழு ஆண் யானைகளைப் பாதுகாக்கும் மகசூல் வளமுடைய நாட்டை உடையவனே என்பது பொருள்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது அழகிய கற்பனை என்றும் உயர்வு நவிற்சி என்றும் தோன்றும். ஆனால் விளக்க உரை எழுதிய ஆசிரியர், ஒருபிடிபடியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோய் என்றதனால் பொருள் குறைவின்மை கூறியவாறாயிற்று என்பர். எனவே அளவில் சுருங்கிய சாகுபடி நிலத்தில் மிகுந்த அளவு விளைச்சலைக் காணமுடிந்தது என்னும் குறிப்பை இப்பகுதி விளக்குகிறது. ஆக் குறைந்த நிலத்தில் நிறைந்த மகசூல் பெறுவது தீவிரப்பயிர் சாகுபடி திட்டத்தின் சாரமாகும். இதனை முன்னரே உணர்ந்த பெருமை நாம் சங்கத் தமிழர்களுக்கு உண்டு.
பல்பயிர்ச் சாகுபடி
ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்யும் வகையைப் பல்பயிர்ச்சாகுபடி முறை என்கிறோம். தனி மனித தேவைகளையும் சமுகத் தேவைகளையும் நிறைவு செய்வதற்கு இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும். இதனைக் கம்பராமாயணம்.
“கதிர்படு வயலின் உள்ள கடிமழ் பொழிலின் உள்ள
முதிர்பலம் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள
மதுவளம் மலரில் கொள்ளும்வண்டென மள்ளர் கொள்வார்” (பால.நாட் 21)
என்ற பாடல் விளக்குகிறது. வயல்களில் உழுது நெல்லை விளைவிக்கும் அதே நேரத்தில் கோசலநாட்டு ஜமள்ளர்கள்ஸ உழவர்கள் பல்வேறு பயிர்களையும் விளைவித்துப் பயன் பெற்றார்கள். வயல்களில் இயல்பாக நெல்சாகுபடி செய்யப்படுகிறது.
சோலைகளில் மலர் சாகுபடியும், தோட்டங்களில் பழச்சாகுபடியும் செய்யபடுகின்றன. இவையின்றி புறத்தே உள்ள மானாவாரி நிலங்களில் புன்செய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பதியமிடப்பட்ட கொடிபயிர்களும் படர்ந்து விளையக் கூடிய காய்கறிப் பயிர்களும் சாகுபடி செய்து உழவர்கள் பயன் பெற்றனர் என்பதையும் அறியப்படுகிறது.
இயற்கை உரங்கள்
நடுகைக்கூரிய வயல்களில் உழவு வேலைகள் தொங்கும் முன்னரும் உழவு வேலைகள் முடிந்த பின்னரும் நிலத்திற்கு வளம் சேர்க்க இயற்கை உரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். உழவுப்பணியை மேற்கொள்வதற்கு முன்னர் வேளாண்பெருங்குடி மக்கள் தங்கள் வயல்களில் ஆட்டுகிடையும், மாட்டுகிடையும் வைத்து தங்கள் வயல்களைத் தயார்படுத்தினர். உழும்போது பசுந்தழை உரம்போட்டு நிலத்திற்கு வளம் சேர்த்தனர். இதனை
“ஆடு பயிர்காட்டும் ஆவாரை நெல்காட்டும்”
“கார் ஆடு பிசானம் குழை”
ஆகிய பழமொழிகள் விளக்கி நிற்கும்.
உரமிடுதலில் கிடைவைத்தல் என்னும் கால்நடைக் கழிவுகளைப் பயன்படுத்தலும் குழைப்பதித்தல் என்னும் பசுந்தழை உரத்தைப் பயன்படுத்துதலும் பண்டைக்காலம் முதல் பயன்பட்டு வந்தன. ஆனால் நிலங்களின் தன்மைக்கேற்பவும் பயிர்களின் தேவைக்கேற்பவும் உரச்சத்துகளைப்பயிர்களுக்கு அளிக்கும் முறை தற்போது அறிவியல் நோக்கில் பின்பற்றப்படுகிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்ற முக்கிய உரச்சத்துகளும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்புசத்து,துத்தநாகம், பொரிகம், தாமிரச்சத்து, மாங்கனம், மாலிப்பிடினம் முதலிய நுண்ணுட்டச் சத்துக்களும்பயிரின் தேவை, நிலத்தின் இயல்பு, ஆகியவற்றை ஆராய்ந்து தனித்தனியே அளிக்கப்படுகின்றன. பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு, அகத்தி,சணப்பு, அவுரி, பில்லி பயறு ஆகியன ஆகியன அறிவியல் முறைபடி பயிர்த்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.
நீர் மேலாண்மை
பயிர் விளைச்சலுக்கு வேண்டிய முக்கிய காரணிகளில் இன்றியமையாததாக நீர் விளங்குகிறது. நெல்லுக்கும் நீருக்கும் உள்ள உறவை ‘நீரைக்கண்டு நெல்லை விதை’ ’நெல்லுப்பயிர் நீரின் மேல்’ என்ற பழமொழிகள் காட்டும். அதே போல நீருக்கும் நிலத்துக்கும் உள்ள உறவையும் உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள உறவையும் இணைத்து புறநானூறு
“நீரும் நிலனும்புணியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே”
என்று நீரின் அவசியத்தைக் குறிப்பிடும். ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர், ஆகியவற்றைப் பயன்படுத்தி பயிர்த்தொழில் செய்ததை இலக்கியங்கள் விளக்குகின்றன.
நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டால் விளைச்சலும் நிறைவாக இருக்கும் என்பது பொதுக்கருத்தாகும்.
“வரப்புயர நீர் உயரும்”
“நீர் உயர நெல் உயரும்”
என்ற ஒளவையாரின் கருத்து இதனை வலியுறுத்தும்
“நீரேற நெல் விளையும் நெல்விளைய போறேறும்”
என்னும் பழமொழியும் மேற்கண்ட கருத்தை உறுதிப்படுத்தும்.
பயிர்களுக்கு நீரும் உயிர்களுக்குத் தாய்பாலும் மிகவும் அவசியம் .
இவ்விரண்டு செய்திகளையும் இணைத்து வேளாண்மை அறிவியல் நுட்பம் ஒன்றை கம்பர் தம்காப்பியத்தில் சுட்டியுள்ளார். இதனை,
“இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம்
படவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயூ வென்பது தாய்முலை அன்னதிவ்
உரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெல்லாம்” (பால.ஆர.12)
என்று கம்மராமாயணத்தில் குறிப்பிடுகிறது. சூரிய குல வேந்தர்கள் நல்லொழுகத்தின் காரணமாய் சரயு நதி வற்றாத வளம் சுரக்கும் பெரும்நதியாக உள்ளது.
அது, அப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தாய்ப்பாலாய் இருந்து வளர்க்கும் ஆற்றல் உடையது என்பது இப்பாடல் காட்டும் பொருளாகும். இதனை சற்று கூர்ந்து நோக்குவோமேயானால் உள்ளுறையாக பொருள் ஒன்று இருப்பதை அறிய முடியும். பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமாக விளங்குவது தாய்ப்பாலாகும்.
பிறவகை பால் எல்லாம் உயிர் வளர்ச்சிக்கு திறனுடையது எனினும் தாய்ப்பாலுக்கு நிகராகாது. அதைப்போல பயிரின் வளர்ச்சிக்கும் பல்வேறு பாசனமுறைகள் இருந்தாலும் ஆற்று பாசனம் தான் மிகச்சிறந்தது எனும் கருத்து பெறப்படுகிறது. ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட வளங்கள் அனைத்தும் பாசனத்தின் வழியே பயிர்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, ஏனைய பாசன முறைகளைக்காட்டிலும் ஆற்றுநீர் பாசனமே உயர்ந்தது, சிறந்தது என்ற அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.
பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றுப்பாசனமே சிறந்தது என மேலே குறிப்பிட்ட கம்பர் பிறிதொர் பாடலில் சமையற்கட்டிலிருந்து வடிந்து விடப்பட்ட கழுநீரும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது எனக் குறிப்பிடுகிறார்.
“முட்டில் அட்டில் முழுங்குற ஆக்கிய
நெட்டு லைக்கழு நீர்நெடு நித்தத்தால்
பட்ட மென்கமு கோங்கு படப்பைபோய்
நட்ட செந்நெல்லின் நூறு வளர்க்குமே” (பால. நாட.26)
என்ற பாடல், சமையல் கட்டிலிருந்து வார்க்கப்பட்ட கழுநீர் பெருவெள்ளம் நாற்றங்கால் மற்றும் பாக்குத் தோப்புகளில் சென்று பின்னர் வயல்களில் நடபட்ட நெற்பயிரின் நாற்றை வளர்க்கும் என்று கூறுகிறது.
ஆகவே கழுநீரானது நாற்றங்காலுக்கும், பாக்கு முதலிய தோட்டப்பயிர்களுக்கும் நல்ல வளர்ச்சியைத் தருகிறது என்றும் அறியமுடிகிறது. சோற்றின் கழுநீரில் உயிர்சத்துகள் உள்ளன. உலைக்கழுநீரை வடிக்காமல் பெற்ற உணவே சிறந்த சத்துணவாக விளங்குகிறது. அதுபோலவே பயிர்களுக்கும் சிறந்த உயிருட்டச் சத்தாய் விளங்குறது என்ற அறிவியல் உண்மை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.
பயிர்ப்பாதுகாப்பு
பயிர்ச்சாகுபடி முறைகளில் மிக முக்கியமான பணியாக பயிர்ப்பாதுகாப்பு விளங்குகிறது. பயிருக்குத் தேவையான உரத்தைக் கொடுத்தல், களை நீக்குதல், நீர்ப்பாய்ச்சுதல் ஆகிய செயல்பாடுகளால் பயிரைக் காத்தல் ஒருவகை. பூச்சித்தாக்குதல், நோய்தாக்குதல், எலிகளால் நாசம் ஏற்படுதல், கால்நடைகளால் அழிவு உண்டாதல், போன்றவற்றிலிருந்து காத்தல் இரண்டாம் வகை. ஆக பயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டதிலும் முறையான ஏற்பாடுகளின் வழியாகப் பயிர்பாதுகாப்பினை மேற்கொள்ளலாம். வள்ளுவர் இனிய உவமையின் மூலம் பயிர்பாதுகாப்பினை இன்றியமையாமையை விளக்குகிறார்
“செல்லான் கிழவ நிருப்பின் நிலபுலந்து
இல்லாளின் ஊடி விடும்” (குறள் 1039)
கணவன் தன்னிடத்து வந்து தனக்கு வேண்டிய கடைமைகளைச் செய்யாமல் வேறிடத்தில் இருந்து கொண்டால், மனைவி எப்படி ஊடுவாளோ அதைப்போல நாள்தோறும் நிலத்திற்குச் செல்லாதவனை நிலமும் ஊடும்.
ஆக நிலத்தில் பயிர் செய்யக்கூடியவன் நாள்தோறும் நிலத்திற்குச் சென்று அதற்கு வேண்டிய பயிர்பாதுக்காப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நிலத்திலிருந்து பெறவேண்டிய மகசூலை இழக்க நேரிடும் என்று உட்குறிப்பாக விளக்குகிறார். உரிய நேரத்தில் நிலத்திற்கு சென்று பயிரைப் பேணாமல் விட்டால், பயிர் விளைச்சல் கெட்டுப் பாழாகும் என்னும் கருத்து “மாடு மேய்க்காமல் கெட்டது” “பயிர் பாக்காமல் கெட்டது” என்கிறது பழமொழி. அதுபோல “இனம் இனத்தைக்காக்கும்” “வேலி பயிரைக்காக்கும்” ஆக இலக்கியங்கள் பலவகைகளில் பயிர்ப்பாதுகாப்பை மேற்கொள்ளலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.