Friday, January 01, 2016

நாட்டுப்புறப்பாடல்களும் உணவுகளும்


முனைவர் பூ.மு.அன்புசிவா

     உலகில் வாழும் அனைத்து உயிர்களின் அவசியத் தேவை உணவு. ஒரு செல் உயிரி முதல் பலகோடி செல் சூழலில் இயற்கை உணவு என்ற நிலையேறி சமைத்தல் என்ற பெயரில் சற்திழந்த எணவையே உண்ணும் நிலை உள்ளது. நம் முன்னோர் உண்ட உணவு வகைகள் எத்தன்மையன? எவ்விதமாக சமைக்கப்பட்டன எவ்வாற பரிமாறப்பட்டன என்னும்  முறைமை குறித்து எண்ணுவோர்.
தாலாட்டு
                எண்ணங்களின் வெளிப்பாடே இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் எண்ணங்களை தெளிவாகக் காட்டும் கண்ணாடி போன்றவை. அதிலும் தாலாட்டுப் பாடல்கள் தாயின் இன்ப துன்பங்கள் ஏக்கங்கள் போன்ற உணர்வுகள் வெளிப்படுத்துபவையாக உள்ளன ஒரு தாய் தான் உண்டு சுவைத்த உணவினையும் உண்ணக்கிட்டாத உணவு வகைகளையும் தன் தாலாட்டில் எடுத்துரைக்கிறாள். இனிய உணவை அதன் சுவையை தன் குழந்தையோடு ஒப்பிட்டு மகிழ்கின்றாள், தாலாட்டுப் பாடல்களில் உணவு வகைகளைச் சுவைப்போம்.
                குழந்தைச்செல்வம் பெற்றற்கரிய செல்வம் அக்குழந்தைச் செல்வத்தை உண்ணும் உணவில் உயர்ந்தவற்றோடு ஒப்பிடும் போக்கு காணப்படுகிறது. இதனை
                வாழைப்பழமோ நீ
                வைகாசி மாம்பழமோ
                கொய்யாப் பழமோ
                கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
                என்ற அடிகளால் உணரலாம்
கிராமப்புறங்களில் காதுகுத்தல் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இச்சடங்கின்போது காதுகுத்தும் ஆசாரிக்கு உலர்ந்த உணவுப்பொருட்கள் கொடுத்தல் உண்டு இதில் அக்குடும்பத்தின் செல்வச் செழிப்பு வெளியாகும்.
                சீமை சிறுபருப்புஎன் கண்ணே உனக்கு
தன்சீமை பச்சரிசி
எள்ளு நாழிகண்ணே உனக்கு
அளந்தெங்காய் முந்நூறு
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. சீமைசிறுபருப்பு என்பதின் மூலம் பருப்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்தென்று அறியலாம். தென்சீமை பச்சரிசி என்ற தொடர் தென்னாட்டில் தரமான பச்சரிசி உற்பத்தியானதை  உணர்த்துகின்றது.
                தவமிருந்து பெற்ற பிள்ளை
                கொல்லத்து வெல்லமோ.
                கோட்டாத்து சக்கரையோ
என்று பாடுகிறாள் ஒரு தாய். மழலைச் செல்வம் இனியது. எவ்வளவற்கெனில் கொல்லம் பகுதியில் உற்பத்தியாகும் வெல்லத்தின் அளவிற்கும் கோட்டாறு இங்கு உற்பத்தியாகும் சர்க்கரை அளவிற்கு கொல்லமும் கோட்hறும் முறையே வெல்லம், சர்க்கரை உற்பத்தியில் சிறந்து விளங்கின, என்பதை இதன் மூலம் அறியலாம் இவ்வாறு தாலாட்டுப் பாடல்களில் உணவுகள் இடம் பெற்றுள்ளன.
ஒப்பாரி           
நாட்டுப்புறப் பாடல்களில் பாடல்களுக்கு அடுத்த நிலையில் ஒப்பாரிப் பாடல்கள் உள்ளன. ஒரு பெண் தன் சோகத்தை முழுமையாக ஒப்பாரிப் பாடலில் வெளிப்படுத்துகிறாள் ஒப்பாரிப் பாடல்களிலும் உணவு குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இன்றைய சூழலில் பால் பதப்படுத்தப்பட்டு விற்கும் நிலை உள்ளது. அன்றோ உற்பத்தியாகும் பால் முழுவதையும் உறைய வைத்து தயிர், மோர், நெய்யாக விற்கும் நிலை இருந்து இதனை.
கடலு மொறையெடுத்து கருங்கடலைப் பாறையாக்கி
சங்கிலியும் தான்ப+ட்டி தயிர் கடையும் வேளையிலே
தயிர் கடையும் தலைகிக்கு சோகக் செய்தி வருகின்றது. தட்டில் உணவு காட்டிலும் வாழை இலையில் உணவு உண்டால் நல்லது. அதுவும் வருகின்றது.
தட்டில் உணவு உண்ணுவதைக் காட்டிலும் வாழை இலையில் உணவு உண்டால்  உடலிற்கு நல்லது, அதுவும் குருத்திலையே சிறநத்தது. அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலும் குருத்திலையில் உணவு படைத்தலை பெரியபுராணம் காட்டும். வாழ்க்கை நிலை மேம்பாட்டு இருக்கும்போது வாழை இலைப்பரப்பி வகைவகையாய் உண்ணும் நிலைமை இருந்தது. தலைவனை இழந்து தலைவி ஒருத்தி மிகவும் வருந்தி.
நீஙக இருந்தா எனக்கு
வாழை எலைக்கும் சாதமுண்டு
இந்த வளவுலமும் சொந்தமுண்டு
என்கிறாள்
வாழை இலையில் உணவு உண்பதை பின்வரும் தாலாட்டுப் பாடலும் உணர்த்துகிறது.
வாழை இலையில் பரப்பி
வந்தாரைக்கையமர்த்தி
வருந்தி விருந்து வைக்கும்
மகராசா பேரனோ
தென்னை இலை பரப்பி
சென்றாரைக் கையமர்த்தி
தேடி விருந்து வைக்கும்
தென்மதுரைப் பாண்டியனோ
விருந்தினருக்கு சிறப்பான உணவு வகைகளையே படைத்தல் வேண்டும் அதைக் காட்டிலும் உபசரிக்க வேண்டும் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. நன்கு உபசரிக்காத இடத்தில் உணவு உண்ணக்கூடாது என்பதை ஒளவையார்
                உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
என்பது இங்கே குறிக்கத்தக்கது.
விருந்தில் முக்கிய இடம்பெறுபவை உணவு உபசரிப்பும் உணவு வகைகளும், விருந்தோம்பலும் விதவித உணவு வகைகள் கீழ்காணும் பாடலில் இடம்பெற்றுள்ளன.
                முத்து குத்தி சோறாக்கி
      பத்து வித கறி சமைத்து
      பண்டியில்லா செம்பெடுத்து
      பாதம் கழுவி
      தின்னவா மாமான்னு
      தெண்டனிட்டு நின்னவளோ
விருந்தினரின் பாதங்களைக் கழுவுதல், அவர்களை வருந்தி அழைத்தல் போன்ற நிகழ்வுகள் இருந்துள்ளன. என்பதை அழைத்தல் போன்ற நிகழ்வுகள் இருந்துள்ளன, என்பதை மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. உணவு சமைத்தலின்போது அன்போடும் அக்கறையோடும் சமைத்தல் அவசியம். அந்த உணவில் தான் உயிரும் உடம்பும் ஓங்கி வளரும். இதனை
                சம்பா வெல அரிசி எடுப்பேன்
      பீக்கங்காள் மோர்குழம்பு
      பிரியமோட வச்சிருக்கேன்.
என்ற பாடல்கள் தொழில் பாடல்கள் காதல் பாடல்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த அளவிலேயே உணவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
                இயற்கை உணவே உடல்நலத்திற்கு உகந்ததென உடலியல் வல்வுநர்கள் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் விரதம் போன்ற நாட்களில் இயற்கை உணவையே உண்டனர். அதற்கு காரணம் வேக வைத்த உணவுகள் சிந்தனைத்தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதாகும் இதனை.
                வெந்த மாவைத் தின்னா
                விரதம் அழியுமுன்னு
                பச்ச மாவைத் தின்னு
                பகவானைத் தெண்டனிட்டு
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
வறியோர்க்கு உணவளித்தல் வாழ்வின் குறிக்கோள் இதனை மணிமேகலையும்
                உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்கிறது.
                இக்கருத்தைபசிதது வருபவர்ககு
     பாலமுதம் செய்து வைப்பார்
என்ற பாடலடிகள் வளர்த்துகின்றன.
வறட்சி நிலவி உணவுத்தட்டுபாடு ஏற்பட்ட காலங்களில் மிக எளிய உணவை உண்டனர். சோளம், வரகு, சாமை போன்றவை வறட்சியின் உணவாக அமைபவை. வறட்சியால் கால்நடைகளும் வள்ளல் தன்மை இழந்தன. இழந்தன
             சொர்ணக்கிளிபோலமீனாள்
      சோறு கொண்டு போனாளாம்
      நேரம் ஆச்சு தின்னுசொக்கர்
      நெல்லால் எறிந்தாராம்
      கல்லோ கிடந்ததென்று
      கடுங்கோவம் கொண்டாராம்
என்ற பாடல் உணர்த்துகிறது. மேலும் கூட்டுக் குடும்பச் சூழலில் சமைக்கும் பெண்ணிற்கே உணவு இல்லை என்பது பின்வரும் தாலாட்டு பாடல் உணர்த்துகிறது.
            மூணு துட்டு கறியெடுத்துக் - கண்ணே
      முட்டியிலே ஆனங்காய்ச்சி
      எலும்பு விழுகலேன்னுகண்ணே
      எட்டி உதைக்கிறாயோ
இப்பாடலின் மூலம் மண்பாண்டங்களில் உணவு சமைத்தல் அறிகிறோம்.
சோறு சமைத்தலின் பல  படிநிலைகளை ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
                அரிசியைக் குத்து முன்னே அரித்துக் கழுவு பின்னே
      உலையில் போடு உடனே மேலே மூடு
      கொதிதது வெந்தபின் வடித்து கொட்டி ஆற்றி எடுத்து
      கத்தரிக்காயை அரிந்து காரம் புளிப்பு தெரிந்து
      உப்பு மசாலும் போட்டு ஒத்திருக்கக் கூட்டு
      வெந்த பின்னே தாளித்து விரித்து இலையைப் போட்டு
      எல்லோருங் கூடி புசிப்பபோம் இன்பமாகக் களிப்போம்
இப்பாடலில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தினர். உலையில் அரிசி போட்டவுடன் மூடி சுகாதாரமாகச் சமைத்தனர். ஆற வைத்து உண்டனர்,  காரம், உப்பு, புளிப்பு அளவாக பயன்படுத்தினர். இலையில் உணவு உண்டனர் போன்ற பல செய்திகளை அறிய முடிகிறது.
                நாட்டுப்புறப்பாடல்கள் அம் மக்களின் வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளவாறே சித்தரித்துக் காட்டுபவை. நாட்டுப்புறமக்கள் பயன்படுத்திய உணவுகள் மட்டுமே பாடல்களில் பயின்று வந்துள்ளன, விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களை மகிழ்வோடு விருந்துன்னச் செய்ததை இப்பாடல்களில் காணலாம் பெற்றெடுத்த குழந்தைக்கும் உணவுத் தர இயலாத வறுமையையும் இப்பாடல்கள் சுட்டுகின்றன. உணவைக் குறித்த செய்திகள் தெம்மாங்கு. ஒப்பாரி தொழிற்பாடல்களில் சில காணப்படினும் தாலாட்டுப் பாடல்களில்தான் ஓரளவிற்கு காணப்படுகின்றன. பொதுவாக பார்க்கும் போது உணவு குறித்த செய்திகள் நாட்டுப்புற பாடல்களில் குறைவாகவே காணப்படுகின்றன. இதிலிருந்து நாட்டுப்புற மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் அளவிற்கு உணவு கிடைத்ததா? என்பது ஐயத்திற்குரிய ஒன்றே.
அணிகலன்களும்,  ஆபரணங்களும்
     அணிகலன்களையும், ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன்.  இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.  ஆடைகளால் தன்னை அழகுபடுத்தி அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது இருபாலருக்கும் பொதுவான இயல்பே ஆகும். 
     மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. 
      வரையுறழ் மார்பன் வையகம் விளக்கும்
      விரவு மணி யொளிர் வரும் அரவுறாih மொடு
      புரையோன் மேனிப் புந்துகிற் கலிங்கம்
      உரைசெல அருளினோன் - புறநானூறு
     (மலை போன்ற மார்பில் அணிந்த, உலகமெல்லாம் விலைமதிக்க தக்க பலமணிகள் கோர்க்கப்பட்டு, ஒளிவிளங்கும் பாம்பு போல வளைந்து கிடக்கும் ஈரமும் பூ வேலை செய்யப்பட்ட ஆடையும் தன் புகi; எங்கும் பரவ நலகினான்)  என்றும், ‘கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்த தோள் அரவுறழாரம் (கூத்தரது முழவு போன்றதும் அழகிய மணியாற் செய்ப்பட்ட வாகுவலயம் அணிந்ததுமான தோளிற் கிடக்கும் பாம்பு போலும் ஆரம்) என்றும் புறநானூற்றுச் செய்யுளடிகள் ஆடவர் அணிந்த அணிகளைப் பற்றிக் கூறுகின்றன. 
     விலங்கு நிலையி;லிருந்து காட்டு மிராண்டியாக மாற்றமடைந்து, பின் வேட்டைச் சமூகமாகவும் மாறி வளர்ந்து முன்னேறிய மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டு முனைந்த போது இயற்கையில் கிடைத்த பொருள்களான இலை தழைகளால்  மால கண்ணி முதலியவற்றைத் தொடுத்துப் கழுத்திலும் மார்பிலும் தலையிலும் அணிந்து கொண்டான். தோலை ஆடையாக அணிந்த மனிதன், இலை தழை மலர் முதலியவற்றைத் தொடுத்து மாலையாகவும், கண்ணியாகவும் அணிந்தான். 
     கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்ட
     பல்ப+மிடைந்த படலைக் கண்ணி
     ஒன்றமருடுக்கைக் கூழாரிடயன் என்று
     பெரும்பாணர்றுப்படை (173 -75)
இது குறித்துக் கூறுகின்றது. 
     பாசிலை தொடுத்த உவலைக் கண்ணி
     மாசூணுடுக்கை மடி வாயிடயன் - புறநானூறு: 54
     (பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும் மாசு பொருந்திய உடையையும் உடைய இடையன்) – என்றும்,” உவலைக் கண்ணி வன் சொலிளைஞர் (தழை விரவின கண்ணியையும் கூடிய சொல்லையும் உடைய இளைஞர்) என்று (மதுரைக் காஞ்சி) இலக்கியங்கள் கூறுகின்றன.  இவ்வாறு, கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் தன்னை இலை தழைகளால் அலங்கித்துக் கொண்ட செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன. 
     அந்தக் காலக் கட்டத்தில் வெள்ளி பொன் முதலிய உலோகங்களால் ஆபரணங்களும் அணிகலன்களும் ஆக்கி அணிந்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.  அவற்றை ஆக்கிக் கொள்ளும் நிலையினையோ அணிந்து அழகுபடுத்திக் கொள்ளும் நிலையினையோ மனிதன் எய்தியிருக்கவில்லை.  ஆதற்கு அவனுக்கு ஓய்வு கிடைக்க வில்லை.  அவன் வாழ்ந்த சமூக அமைப்பே அதற்குக் காரணம் ஆகும்.  (மனிதன் அநாகரிக நிலையில் வாழந்த காலக்கட்டத்தில் நேர்த்தியற்ற ஆபரணங்களைச் செய்து அணிந்து கொண்டான் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளாhகள்;)
     அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த செல்வர்களான தனிமனிதர்கள் பொன்வெள்ளி முதலியவற்றால் ஆன  ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டனர்.  அவற்றை அணிவதைப்  பெருமைக்குரியதாகவும், மதிப்புக்குரியதாகவும் கருதிக் கொண்டனர்.  உழைக்கும் மக்களை விடத் தாங்கள்  உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளவே அவர்கள் அவற்றை அணிந்தனர். 
     தாம் அனுபவிக்கும் செல்வமும் சுக போகமும் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்றும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் ஆண்டைகள் கூறிக் கொண்டனர்.  இம்மை  மறுமை மோட்சம் நரகம் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்பட்டன.  தங்களது சுரண்டல் நடவடிக்கைகளை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி, அவர்களது கவனத்தை திசை திருப்பவே அவர்கள் அவ்வாறு கூறிக் கொண்டனர்.  அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. 
     பொதுவுடமை வகைப்பட்ட கணசமூகமாக மக்கள் வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த காலக் கட்டத்தில் மனிதன் அணிகலன் அணியும் பழக்கம் நிலவவில்லை.  இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.  குறிஞ்சி முல்லை நிலங்களில் வேட்டச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த மக்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில், அந்நிலத்துப் பெண்கள் அணிகள் அணிந்தது பற்றிய குறிப்புகள் எவையும் காணப்படவில்லை.  பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களைப் பற்றி பேச நேரும் பொழுது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே அவர்களைப் பற்றிக் கூறும்.  மாணிழை மகளிர்வாலிழை மகளிர் என அணிகலன் பற்றிய அடைமொழிகளோடேயே மகளிர் குறிக்கப்பட்டனர்.  மகளிரைப் பற்றிய அடைமொழிகள், அவர்கள் அணிந்த அணிகலன்களின் சிறப்பைக் குறிப்பனவாகவே  இருக்கும் வள்ளுவரும் கூடகனங்குழை மாதர் என்று கூறுகின்றர். 
     ஆனால் கனசமூகத்து மகளிரைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில் அத்தகைய அடைமொழிகள் காணப்படவில்லை.  அரிவை எயிற்றி, தாய், பிணா, பெண்டு, மகடூ, மகளிர், மனைவி மனையோள், முதலியோள் என்பன. போன்ற, அணிகள் பற்றிய அடைமொழிகள் எவையும்  பெய்யப்படாத சொற்கiளாலேயே மகளிர் குறிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலக் கட்டத்தில் அணிகலன் எவையும் செய்யப்படத நிலையினையுமே இச்சொற்கள் உணர்த்துகின்றன.  அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் சமூகச் சூழல் அந்தக் காலக் கட்டத்தில் தோன்றியிருக்கவில்லை. என்பதையும் இச்சொற்கள் உணர்த்துகின்றன. 
     ஆனால் சமூக மாற்றம் நிகழ்ந்து வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகம் அடிமைச் சமூகமாக மாற்றம் கண்ட காலத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளும் செல்வர்களும் அவர்தம் பெண்களும் அணிந்து கொண்ட அணிகலன்களின் சிறப்பைக்  குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. பெண்களைக் குறிக்கும் சொற்களாகிய மங்கை மடந்தை அரிவை முதலான சொற்கள் அவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றிய அடமொழிகளுடனேயே குறிக்கப்பட்டுள்ளன.  அவ்வடைமொழிகள் அம்மகளிர் அணிந்திருந்த அணிகலன்களின் சிறப்புப் பற்றியும் அவர்தம் செலவச் செருக்குப் பற்றியும் தெளிவாக உணர்த்துகின்றன.  கோவலன்மாசறு பொன்னே  வலம்புரிமுத்தே என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகினறார். செறியரிச் சிலம்பின் குநற்தொடிமகளிர் (புறம் 36) ஒண்டொடி மகளிர் (புறம் 24)  வாலிழை மங்கையர் (புறம் 11) என்று சுரண்டும் வர்க்துப் பெண்கள் குறிக்கப்படுகின்றனர்.  இத்தொடர்கள் அம்மங்கையர் அணிந்திருந்த அணிகள் பற்றிய அடைமொழிகளோடு கூறப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.  அழகி  ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியைப் புறநானூறு கூறுகிறது. 
     ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
     பொலஞ்செய் பல் காசணிநத வல்குல்
     ஈகைக் கண்ணி இலங்கைத் தை இத்
     தரு மணலியல் வோள் - புறநானூறு: 253
     (குற்றமில்லாத பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும் பொன்னாற் செய்த கண்ணியும் விளக்கமுற ஒப்பனை செய்து கொண்டு, புதிதாகப் பரப்பிய மணலில் நட்நது உலவுகின்றவள்)  என்று கவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் அழகி அணிந்த ஆபரணச் சிறப்புக் குறித்துக் கூறுகிறார். 
     பொன்னாற் செய்த வளைந்த ஆபரணங்கள் அணிந்த  மகளிர் வானுற உயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததையும் அம்மகளிர் பல்வகை மணிகள் கோத்த வடங்களை அணிந்திருந்ததையும் கால்களில் பொன்னாற் செய்த பூண்களுடன் பொற்சிலம்பும் கைகளில் பொன் வளையல்களும் அணிந்திரு;ததையும் பந்தாடிய  அப்பெண்கள் பொன்னாற் செய்த கழங்கு கொண்டு ஆடியதையும் பெரும்பாணாற்றுப்படை (327-335) கூறுகிறது. 
     ……………………………………………………கொடும்பூண்
      மகளிர்
     கொன்றை மென் சினை பனிதவழ் பாவை போற்
     மால் வரைச் சிலமபின் மகிழ்சிறந்தாலும்
     பீலி மஞ்ஞையி னியலிக்  கால
     தமனியப் பொற்சிலம் பொலிப்பவுர் நிலை
     வான் றோய் மாடத்து வரிப்பந்தைசைஇக்
     கைபுனை குறுந்தொடித்தப்பைப்பய
     முத்தவார் மணற் பொற்கழங்காடும்
     (உயர்ந்த நிலையினை யுடைய தேவருலகத்தைத் தீண்டும் மாடத்து உறயும் வளாந்த பேரணிகலன்களையுடைய மகளிர் கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய  கொம்புகளையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய பெருமையுடைய  பக்க  மலையிலே மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையுடைய மயில் போலே உலாவி, பொற்பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவரிப்ப நூலால் வரிதலயுடைய பந்தினையடித்து இளைத்து, முத்தையொத்த வார்ந்த மணலிலே மெத்தெனப் பொன்னாற் செய்த கழங்கினைக் கொண்டு விளையாடும்) என்பது கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூற்று. 
     புகார் நகரத்தில் செல்வர்தம் மனைகளின் முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னவந்த கோழிகளை மனைத்தலைவி தன் செவிகளில் அணிந்திருந்த மகரக் குழையால் எறிந்து விரட்டினாளாம்.  அக்குழைகள், அவர்களின் பிள்ளைகள் உருட்டித் திரிந்த மூன்று உருளைகளையுடைய சிறு தேரினது வழியைத் தடுத்து விலக்கியதாம்.  இதனை,
     அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
     நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
     கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
     பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
     முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்
என்று பட்டினப்பாலையடிகள் (20-25) கூறுகின்றன. 
மேற்குறித்த பாடலடிகள் செல்வர் மனைகளில் மகளி;ர் அணிந்திருந்த அணிகளின் சிறப்பை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள் பற்றியும் அம்மகளிரின் செலவச் செருக்கு குறித்தும் கூறுகின்றன. 
     அடிமை எஜமானர்களான செல்வர் மனைகளில் அவர்தம் பெண்டிர் பொன்னாலும் நவரத்தினங்களாலும் புனையப்பட்ட அழகுமிக்க அணிகளை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்தனர்.  ஆனால் உழைக்கும் வர்க்கத்தவர் ஆன களமரும் தொழுவரும் கடையரும் தம் உழைப்பின் பயனைச் சுரண்டும் வர்க்கத்தாரிடம்  பறி கொடுத்துவிட்ட நிலையில்;, பொன் அணிகள் அணிந்திட வகையற்றவராய் வெறுங்கையராக வெற்றுக் கழுத்தினராக மூக்கும் காதும் மூளியாக இருந்தனர்.  செல்வர் மனைகளில் அடிமை எஜமானிகள் தம் கைகளில் பலவகை வேலைப்பாடுகள் அமைந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட வளையல் அணிந்து அழகு பார்த்தனர்.  அதனைக் கண்ட கடைசியர் தாமும் அவர்களப் போல் தம் கைகளில் வளையல் அணிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.  ஆனால் அவர்களின் அடிமை நிலை அவர்களுக்கு அந்த வாய்பபை மறந்துவிட்ட நிலையில் வயலில் களைபறித்த அப்பெண்கள், அங்கு களையாகப் பறித்துப் போட்டிருந்த குவளை ஆம்பல் முதலியவற்றின் தண்டுகளைக் கொண்டு வளையல் செய்து தம் கைகளில்அணிந்து அழகு பார்த்துக் கொண்டார்கள்.  இந்த அவலக் காட்சிய கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர் என்று புறநனூறு (352) கூறுகிறது.
     வயலில் களைறித்த பெண்கள் வயலுக்கு உரியவளான தலைவியைப் பார்க்கிறார்கள்.  அவர்கள் தம் கைகளில் பவளத்தால் ஆன வளையல்களை அணிந்து அழகு படுத்திக் கொண்டதை பார்க்கிறார்கள்.  அடிமைகளான கடைசியர் பவள வளையலுக்கு எங்கே போவார்கள்?  எனவே, வயலில் களையாக முளைத்து வளாந்திருந்த ஆம்பல் குவளை ஆகியவற்றின் தண்டுகளை வளையல்களாகச் செய்து தம்கைகளில் அணிந்து அழகு பார்த்துக்கொண்டார்கள்.
இக்காட்சியினை,
     பவள வளைசெறிந்தாட்கண்டு அணிந்தாள்பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு என்று பரிபாடல் ஆசியர் பரிவுடன் காட்டுகிறார். 
     இவ்வாறு உழகை;கும் வர்ககத்தவரான அடிமைப் பெண்கள் தம் அணிகல ஆசையைத் தணித்துக் கொண்ட அவலத்தைச் சங்க  நூல்கள் நமக்குக் காட்டுகின்றன.  இன்றும் கிராமப்புறங்களில் இத்தகைய காட்சிகளைக் காண முடிகிறது. 
     உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன் என்றும்பாசிலை தொடுத்த உவலைக் கண்ணியன்என்றும்கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்டபல்பூமிடைந்த படலைக் கண்ணியன் என்றும் கண சமூகமாக குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் இலை தழைகளால் மாலையும் கண்ணியும் தொடுத்து அணிந்து கொண்ட காட்சியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.  வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்ப்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் இலை தழைகளையே அணிகளாகவும் உடைகளாகவும் (தழையுடை) அணிந்து கொண்ட காட்சியையும் காட்டுகின்றன.  கணசமூகத்தில்உவலைகண்ணி வன்சொல் இளைஞனாக இருந்தவன், அடிமைச்சமூகத்தில்உவலைக்கண்ணித் துடியனாகவே இருந்தான் என்பதையும் தெளிவாக கூறுகின்றன. 

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...