Wednesday, January 18, 2017

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்...!!!

 1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

8. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

9. மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

10. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

11. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
நன்றி: மாலை மலர்

ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்...


முன்னுரை
         உலகில் யாவரும் நூறு சதவிதம் நல்லவர்களும் இல்லை. நூறு சதவிதம் கெட்டவர்களும் இல்லை. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும்  அவர் செய்யும் ஒரு சில தவறு அவர் செய்த அத்துனை நன்மைகளையும் மறைத்துவிடும்.அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஹிட்லரைக் கூறலாம்.
ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்
             உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோலாட்சி காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.
நல்லவர் என்று பெயர் எடுப்பது கடினம்
கெட்டவர் என்று பெயர் எடுப்பது எளிது

ஜெர்மனியின் மிகச்சிறந்த மனிதர்
     ஹிட்லரின் ஆரம்பகால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்தரித்தில் தோன்றிய மிகச் சிறந்த மனிதராககே இருந்தார். முதலாம் உலகப் போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டி எடுத்தது. இதை மூன்றே வருடங்களில் சரிசெய்ந்தவர், ஹிட்லர். 1933-ல் ஹிட்லர் சான்சலர் பதவியை ஏற்றபோது அறுபது லட்சம் மக்கள் வேலையில்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவருடைய அமைச்சரான ஜால்மர்  ஷ்ஹாக்ட் என்பவர் தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக் காட்டினார்.

வேலைக்கேற்ற ஊதியம்
      ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர் தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலைகளை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர் தான். முதியவர்களுக்கு பென்சன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப்பெரிய புரட்சி திட்டங்கள்.

மிகப்பெரிய புரட்சி திட்டங்கள்

       போர்ஷ் கார் நிர்வன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும்  கூறினார். பின் பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய கார்க்கு போக்ஸ்வேன் என்று பெயரிட்டார். இன்று அந்த கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படகூடாது என்பதில் கண்டிப்பாக இருந்த ஹிட்லர், அதற்கென சட்டமும் கொண்டு வந்தார். அன்றைய தொழில்சாலைகளும் அதற்கான சாதனைகளை பொருத்திக் கொண்டன.

சுத்தமான நதிகள்
     அன்று ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலைகளிலும் சம்பள பிரச்சனை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல் தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் சிறையில் தள்ளினார். ஹிட்லர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தன. அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆண்டுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த ராணுவமாக மாற்றினார்.

முதல் ஐந்து வருட சாதனைகள்
      ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் ஐந்து வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தினர். ஆனால், அதன் பின்னர் ஹிட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால், அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

முடிவுரை 
     ஹிட்லர் என்றால் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த கொடுங்கோலாட்சி மட்டுமே. ஒருவேளை முதல் வருடம் போல் எல்லா வருடமும் அவர் சாதனையே செய்திருந்தால் அவரை இவ்வாறு பேசியிருப்போமா என்று தெரியவில்லை. எவ்வாறு நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நாட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்கும் ஹிட்லரே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாவார்.

பேய் - உளவியல் பார்வை...



பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார்,
"டே மச்சான், "பேய் இருக்குன்னு நம்புறியா?"
"என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா"
"எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்"
"என்னடா சொல்றா? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?"
"இல்லை உண்மையாத்தான் சொல்கிறேன் மச்சி. பலவாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்"
"என்னடா சொல்ற? நம்புற மாதிரியா இருக்கு? நிஜமாவா?"
"உண்மையா தான்டா. அதுமட்டுமில்லை, சில தடவை அது எங்கிட்ட பேசுது. அதை நான் தெளிவாகக் கேட்டிருக்கிறேன்டா"
"என்னடா நீ! இப்பிடிச் சொல்ற? எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கு...."
"என் காதுல அது பேசுறது கேக்கும் மச்சி. அப்பப்போ அந்த நேரத்துல மல்லிகைப் பூ வாசனையும் சேர்ந்து வருது. அப்படின்னா ஆவிகள், பேய்கள் இருக்குன்னு தானே அர்த்தம்"
"லூசு மாதிரி உளராதே! நீ சீரியஸாக சொல்றியோ என்று நானும் பயந்துட்டேன்"
"இல்லடா நான் சீரியஸாகத்தான் சொல்றேன். என்னைப் பார்த்தால் பொய் சொல்றவன் மாதிரியா உனக்குத் தெரியுது?"
அதைத்தானே நானும் யோசிச்சு குழம்பு போயிட்டேன். வேறு யாராவது இப்படிப் பேசினால், போடா வென்று.. சொல்லிட்டு போயிருப்பேனே. நீ பேச்சுக்குக் கூடப் பொய் சொல்பவனில்லையே!"

உங்களுக்கும், நண்பருக்குமிடையே நடந்த இந்த உரையடல்களில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்ன?பேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்ன? என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள்? அந்த உரையாடலைச் சரியாகக் கவனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா? அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு ஏன் வரப்போகிறது?

அப்படியென்றால் என்னதான் நடந்தது? உங்கள் நண்பர் பொய் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு உருவங்கள் தெரிந்ததும், காதில் குரல் கேட்டதும், மல்லிகைப்பூ வாசனை வந்தது அனைத்துமே உண்மைதான். அப்படியென்றால் பேய்கள், ஆவிகள் உள்ளன என்பதுதான் முடிவா? இல்லை! அதுவும் இல்லை. பேய் என்பது இல்லவே இல்லை! ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா? இதை விளக்கமாகப் பார்ப்போமா......!

உங்களுக்கு முன்னால் ஒரு ரோஜாப்பூவும், ஒரு மல்லிகைப்பூவும் வைக்கப்படுகிறது. அதில் நீங்கள் ரோஜாப்பூவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறீர்கள். ஆனால் மல்லிகைப்பூவை ஏற்கனவே பலமுறை பார்த்து இருக்கிறீர்கள். அதை மல்லிகைப்பூவென்று தெரிந்தும் வைத்திருக்கிறீர்கள். மல்லிகைப்பூவைப் பார்த்ததும் அதை, 'மல்லிகைப்பூ' என்று உடனே சொல்லி விடுகிறீர்கள். ஆனால் ரோஜாப்பூவை, ரோஜாவென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். காரணம் ரோஜாப்பூவைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதுவரை உங்களிடம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு பூவென்று தெரிகிறது. காரணம், வேறு பூக்களைப் பார்த்த அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே இருப்பதால், இதை ஒரு பூவென்று அனுமானிக்கிறீர்கள். ரோஜாப்பூவென்றுதான் சொல்லத் தெரியவில்லை.

முன்பு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஒரு பூவைக் காட்டி, இதுதான் மல்லிகைப்பூ என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்லிகையின் வடிவம், நிறம், மணம், அழகு, மென்மை என்ற அனைத்தும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருக்கிறது. அதனால்தான் அந்தப் பூவைப் பார்த்ததும், உங்கள் மூளை தன்னிடம் ஏற்கனவே பதிந்திருக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு, மல்லிகைப் பூவென்று உங்களுக்கு உணர்த்துகிறது. இந்தச் சாத்தியம் ரோஜாவுக்கு இருக்கவில்லை. மல்லிகையைப் போல, நீங்கள் நேரிலோ, படமாகவோ பார்த்த அனைத்துப் பூக்களையும், உங்கள் மூளை தன்னில் பதித்து வைத்திருக்கிறது.


உங்கள் முன் மல்லிகைப்பூ இருக்கின்றதோ, இல்லையோ! உங்கள் மூளையில் மல்லிகையின் உருவம் முதல் அதன் அனைத்து குணங்களும் பதிந்தபடியே இருக்கின்றன. எப்போதெல்லாம் நீங்கள் மல்லிகைப்பூவைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அல்லது அது பற்றிக் கேட்கிறீர்களோ, அல்லது அது பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அல்லது அதன் மணத்தை நுகர்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பூவின் உருவம் உங்கள் நினைவுக்கு வரும். அதாவது மல்லிகைப்பூ வெளியே எங்கும் இல்லை. அது உங்களுடனேயே இருக்கிறது. மல்லிகைப்பூ என்றில்லை. உலகில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் எந்தப் பொருளும் வெளியே இருப்பதாகத்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. அவையெல்லாம் உங்கள் மூளைக்குள், உங்களுடன்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. மல்லிகை என்னும் செய்தி உங்கள் மூளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நிரடப்படும் போது, அதன் வடிவம் மூளையில் இருந்து மீட்டெடுக்கப்படுவது போல, நீங்கள் உலகில் பார்த்த அனைத்துப் பொருள்களும், அவை சார்ந்த அனைத்துச் சம்பவங்களும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருப்பதால், தேவையான சமயங்களில் அவை வெளியே கொண்டுவரப்படும்.

நமது மூளை இது போலப் பதிந்து வைத்திருக்கும் செய்திகள் எவை தெரியுமா? நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்த்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்கு பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள். வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், இளையராஜாவின் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டு பிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். கந்தசாமி யார்? கமலக்கண்ணன் யார்? அஜித் யார்? அரவிந்தசாமி யார்? என்பதை உடன் சொல்லும் உங்கள் மூளை. முகங்கள் போலவே பார்த்த படங்கள், பொருட்கள், சினிமாக்கள் என எல்லாம் பதிந்து வைத்திருக்கிறது மூளை.

நமது மூளையில், 'செரிபெல்லம்' (Cerebellum) என்று சொல்லப்படும் சிறுமூளை, 'செரிப்ரல்' (Cerebral) என்று சொல்லப்படும் பெருமூளை என இருபகுதிகள் உண்டு. இதில் சிறுமூளையானது தற்காலிக உணர்ச்சியால் தூண்டப்படும் அனைத்துச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும். நெருப்புச் சுட்டதும் கையை உதறுவது, நுளம்பு கடித்தால் அடிப்பது போன்ற செயல்களை அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் நமக்கு நிரந்தரமாகத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பதிந்து வைத்திருப்பது பெருமூளைதான். பெருமுளையின் புறப்பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் (cerebral cortex) என்னும் பகுதியில்தான் இவையெல்லாம் பதியப்படுகின்றன. பெருமூளையான செரிப்ரம், சிறுமூளை செரிபெல்லம் இரண்டையும் மிக மெல்லிய சவ்வு போன்ற பகுதி மூடியுள்ளது. இதுவே செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படுகிறது. சிந்தனை, மொழி, நினைவுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் இந்த கார்டெக்ஸ் பகுதியில்தான் பதியப்படுகின்றன. பல மடிப்புகளுடன் இது காணப்படும்.


எப்போதும் தொழிற்பாட்டில் இருக்கும் நமது மூளை, தான் பதிந்து வைத்திருக்கும் கோடான கோடிச் செய்திகளை அமைதியான சூழ்நிலைகளில் அவ்வப்போது அது இரை மீட்கும். இரவில் நித்திரையின் போது, அது செய்யும் இந்த இரைமீட்டலைத்தான் கனவு என்கிறோம். சொல்லப் போனால் அந்த இரைமீட்டல் மூளைக்குத் தேவையானதும் கூட. கனவுகள் மூலம் மூளை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்லலாம். இன்று காலை ஒரு கார் விபத்தை நீங்கள் பார்த்திருந்தால், அன்று இரவு நித்திரையின் போது, உங்களுக்கு எப்போதோ நடந்த ஒரு சைக்கிள் விபத்தை அந்தக் கார் விபத்துடன் இணைத்து கனவாக மீட்டுத் தரும். மூளை பதிந்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான செய்திகளில், அவை சார்ந்த சாயலுடன் ஏதோ ஒன்று நடைபெறும் போது, அந்தச் செய்தியுடன் இணைந்த அனைத்தும் நிரடப்படும். அந்த நிரடலின் போது, அவற்றை ஒழுங்கமைக்க முடியாமல், குழப்பமாக வடிவில் வெளிக்கொண்டு வந்து கனவுக் காட்சிகளாகத் தருகிறது. ஆனால் விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் இரவில் காணும் கனவுக் காட்சிகள் போல, விழிப்பு நிலையில் இருக்கும் போதே அவை நிரடப்படுகின்றன. அந்த நேரங்களில் அவர்கள் விழிப்பு நிலையிலும் தமக்கு முன்னால் நடப்பது போலக் காட்சிகளைக் காண்பார்கள்.


இப்போது மீண்டும் நாம் மேலே உங்கள் நண்பன் சொன்ன பேய்க்கதைக்கு வருவோம்..............!

வெகுசில மனிதர்களுக்கு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை, குறிபிட்ட காலநிலை, நேரம் ஆகியவை சார்ந்து, மூளை ஒரு அமானுஷ்ய நிலையை அடைகிறது. இருட்டு, தனிமை போன்ற நேரங்களில், நாம் கேள்விப்பட்ட பேய்களின் செய்திகள், எமது முளையில் விழித்திருக்கும் ஒரு திட்டமிடப்படாத நிலையில் நிரடப்படுகிறது. அந்த நிரடலின் காரணமாக மூளை சில உருவங்களைக் காட்சிகளாகக் வெளிக்கொண்டுவருகிறது. அதாவது நாம் பார்த்த உருவங்கள், படித்த கதைகள், பார்த்த படங்கள் ஆகியவை சார்ந்து தானே உருவாக்கிய குழப்பமான ஒரு உருவத்தைக் காட்டுகிறது. சிலருக்கு அவ்வுருவம், அவருக்குத் தெரிந்த இறந்த ஒருவருடையதாகவோ, அல்லது கருமையான உருவமாகவோ தெரிகிறது. இறந்தவர்களின் உருவங்கள் தெரியும் போது, அவர்கள் இறந்த சமயத்தில் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்களின் வாசனைகளும், ஊதுபத்தி வாசனைகளும் கூட சேர்ந்து வரலாம். அவர்களின் குரல்களும் கூடக் கேட்கலாம். இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உணரப்படலாம்.

இதை மனோவியல் ஹலூசினேசன் (Hallucination) என்கிறது. ஹலூசினேசன் என்பது பலவகைகளில் மனிதனுக்கு ஏற்படலாம். Visual Hallucination, Auditory Hallucination, Olfactory Hallucination என்பவை அவைகளில் சில. பலருக்கு விஷேசமாக மண்டைக்குள் குரல் கேட்கிறது என்னும் பிரச்சனை அதிகமுண்டு. காதில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக நமக்கு சில இரைச்சல் ஒலிகள் கேட்பது சகஜம். கன்னத்தில் அறைந்தால் கேட்குமே ஒரு விசில் சத்தம், அது போல. வயதாகும் போது இந்தக் குறைபாடு வருவது சகஜமாக இருக்கும். ஆனால் இதுவே கொஞ்சம் அதிகமாகி, இந்த ஒலிகள் நமது மூளைக்குள் பதிந்திருக்கும் சில குரல்களின் ஞாபகத்தை தூண்டிவிடுகின்றன. அது மூளையில் இருந்து வெளிக்கொண்டுவரப்பட்டு, யாரோ காதுக்குள் எதுவோ சொல்வது போலவும், கட்டளையிடுவது போலவும் கேட்கத் தொடங்கும். சிலர் இப்படிக் குரல், தன்னைத் தற்கொலை செய்யச் சொல்லி தினமும் தூண்டியதாகச் சொல்லிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவங்களும் உலகில் உண்டு. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருட்டில் மரங்களுக்குக் கீழாக போனால், மல்லிகை மணக்கும். அங்கு மல்லிகை மரம் இல்லாவிட்டாலும் கூட.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், ஒரு உருவத்தைப் பார்ப்பவர்களோ, அல்லது குரலைக் கேட்பவர்களோ அப்படிப் பார்த்ததாகப் பொய் சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே உருவத்தைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அத்துடன் அவர்கள் பாரதூரமான வகையில் உள்ள அளவுக்கு மனநோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே சென்றால் மனவியல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஆனாலும் மனநோய் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor), ஒற்றைத் தலைவலி (Migraine), அல்ஸ்ஹைமர் (Alzheimer) ஆகிய நோய்கள் இருக்கும் போதும் இப்படியான ஹலூசினேசன் வர வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். எனவே இந்தக் காட்சிகளைக் காண்பவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காண்பதும், கேட்பதும், நுகர்வதும் நிஜம். அவர்களுக்குத் தேவை நமது உதவிதான். "பேய்கள் என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேதான் இருக்கிறது". இது சம்மந்தமான அறிவியல் உண்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் போதும். அப்போது பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.
 நன்றி உயிர்மை இதழ்

ஊக்குவித்தல்’ (Motivation)

‘ஊக்குவித்தல்’(Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது. இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள். எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’எனப்படுகிறது.
.
‘மாஸ்லோ’ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்; மேலும் உலகில்உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார். ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில்
உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது. 

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் . மகாதேவன்
 
முன்னுரை

    தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
    சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழினி பகுதியொடு
    அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன் தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின் பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக விளக்கின.  இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
  
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
    செறி எயிற்று, அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில் போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே அமைகிறது.  வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன.  “நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே“3 என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப் பொருந்துகிறது.  கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை முன்வைக்கிறது.  படைப்பாளியுடன் ஆய்வாளர்.  நிகழ்த்திய நேர் காணலில் “ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
    கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன.  வற்றாத ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள், வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள் இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
    “வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள்.  அவளது துடிப்பை வண்ணதாசன், “இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம் “சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப் புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது”5 என்கிறார்.
    வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
    “யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது“6 தாத்தாவின் முகத்தை விளக்க
    “பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8  சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்”9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.  
    வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம் முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
    “சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
    தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.  “பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையில் “நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.  இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் மூச்சுத் திணறுகின்றன.  நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க முடியும்.“10  மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
    புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக மாற்றுகிறார்.  1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார்.  “பெயர் தெரியாமல் ஒரு பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு வர்ணிக்கிறார்.
    நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம் வந்தது.  வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது”11 
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
    திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  மொழியின் சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
    வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
    நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
    கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக் கட்டமைப்பட்டுள்ளன.  அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும் தன்மையுடையனவாக அமைகின்றன.  தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின் வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன.
    “செப்பறைத் தேரிலும்
    படியும்
    சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.  இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம் கொண்டிருந்தார்.  அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையாக மாறியது.  வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின் வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
    “அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
    அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
    அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
    புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
    வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
    கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
    பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
    உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
    வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
    மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள் முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது.  புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.

“நேரடி வானத்தில்
    தெரிவதை விடவும்  
    நிலா அழகாக இருப்பது
    கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
    “மார்கழி மாத அதிகாலையில் போனால்
    பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
    நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16

கல்ணாஜி கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும் உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  தமிழர் பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன.  போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது.  அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  கல்யாண்ஜி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது,  “தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன.  மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக சிறுகவிதைகள் மிளிர்கின்றன.  அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
    இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது.  ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது.  மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக் காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.  “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன்.  அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“ என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக அமைகின்றன  இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற கருத்தியலை வலியுறுத்துகின்றன.  யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன.  கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன் சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.

மரங்களை அவர் நேசித்தார்,

“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது.  நாம் எவ்வளவுதான் அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1.    தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2.    குறுந்தொகை, பா.2.
3.    எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4.    ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6.    மேலது. ப.953.
7.    மேலது. ப.918.
8.    மேலது. ப.250.
9.    மேலது. ப.181.
10.    வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12.    பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13.    அறிவுமதி, கடைசி மழைத்துளி, ப.12.
14.    ச. மகாதேவன் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. ப.179.
15.    கல்யாண்ஜி, இன்னொரு கேலிச் சித்திரம், ப.59.
16.    மேலது, ப.71.
17.    கல்யாண்ஜி, உறக்க மற்ற மழைத்துளி, பக.5-6.
18.    கல்யாண்ஜி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ப.64.
19.    வண்ணதாசன், அகம் புறம், ப.86.

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

“என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்”

தமிழ்பட்ட வகுப்பு இளங்கலை மாணவர் கேட்ட இந்த கேள்வியை முன்வைத்து நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கீழ்க்காணும் விடையை அளித்தேன்.

“தமிழ் பி.ஏ, எம்.ஏ போன்றவற்றில் இலக்கியம், இலக்கணம் போன்றவையே கற்பிக்கபடுகின்றன. இவற்றை படித்தால் ஆசிரியர் பணிக்கு மட்டுமே செல்ல இயலும். இவற்றில் சேரும் பலரும் “தமிழ் எம்.ஏ படித்தால் அரசு வேலை கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பில் சேர்ந்து அப்படி கிடைக்கவில்லை என்றவுடன் “தமிழ் படித்ததால் வேலை கிடைக்கவில்லை” என குறைகூறுகிறார்கள். தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியருக்கான சம்பளம் மிக குறைவு. ஆக 100 பேர் பி.ஏ தமிழ், எம்.ஏ தமிழ் ஆகியவற்றை எடுத்து படித்தால் அதில் ஓரிருவருக்கு அரசு வேலை கிடைக்கும். 10,, 15 பேருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கும். மீதமுள்ளோர் படிப்புக்கு தொடர்பற்ற வேலைகளை செய்யும் நிலை உருவாகும். அந்த சூழலில் அவர்களது வேலைக்கு அவர்கள் கற்ற தமிழ் படிப்பு உதவபோவது கிடையாது.

இந்த பின்புலத்தில் தான் “தமிழ் படித்தேன். வேலை கிடைக்கவில்லை” என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை புரிந்து கொள்வது அவசியம்.

இதில் பள்ளி ஆசிரியர் படிப்புக்கு பி.ஏ தமிழே போதுமானது. கல்லூரி ஆசிரியர் படிப்புக்கு எம்.ஏ தமிழ் படித்து ஸ்லெட் அல்லது நெட் எழுதினால் போதும். அரசு கல்லூரியில் புரபசர் ஆக கூட எம்.பில் அல்லது பி.எச்.டி படிப்பதில் எந்த பலனும் கிடையாது. ஆக பலரும் பி.எச்.டி வரை படித்தும் அரசு வேலை கிடைக்காமல், அதே சமயம் வெறும் இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று அரசுவேலை பெறும் கனெக்சன் உள்ள மாணவர்களை கண்டு வெறுப்படைகிறார்கள்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றால் அரசு கல்லூரியில் இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் அளவே சம்பளம் உயரும். எம்.பில்லுக்கு அதுகூட கிடையாது. ஆக படித்த டிகிரியை வைத்து வேலையை எப்படி தேடுவது என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர பி.ஏ, எம்.ஏ. எம்பில், பிஎச்டி என தொடர்ந்து படித்து ஆண்டுகளை வீணாக்கிவிட்டு விரக்தி அடையக்கூடாது.

தமிழ் படிப்பது என்றால் இலக்கியங்களுடன் நின்றுவிடாமல்
1) கணிணியில் தமிழ்
2) செல்போனில் தமிழ் ஆப்
3) தமிழில் விளம்பரம் டிசைன் செய்தல்
4) புத்தகம், பதிப்பித்தல் துறையில் எடிட்டிங், ப்ரூப் ரீடிங்,

இப்படி அப்ளிகேஷன் ஓரியண்டட் துறைகளில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு அதிகம். உதாரணமாக என் நண்பர் தமிழ் முனைவர் அண்ணாகண்ணன் டிஜிட்டல் தமிழ் துறையில் சாப்ட்வேரில் தமிழை கொண்டுவரும் பொறுப்பில் உள்ளார்.
அரசும் “அப்ளைட் தமிழ் (Applied Tamil)” என்பது போன்ற படிப்பை தமிழக அரசு உருவாக்கி “கணிணி+ தமிழ், வணிகம்+ தமிழ்” என்பது போன்ற எலக்டிவ் பாட திட்டங்களை உருவாக்கவேண்டும். வணிக மொழி ஆங்கிலம் எனினும் மக்களுக்கு விளம்பரம் செய்வது, தகவல் தொடர்பு எல்லாம் தமிழில் தான் செய்யவேண்டும். அதை எப்படி சுவாரசியமாக செய்வது என்பதை கற்றுத்தரலாம். கல்லூரியின் வணிகதுறையும், தமிழ்துறையும் இணைந்து இதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கலாம்.

ஆனால் தமிழ் துறையை பிற துறைகளுடன் ஒட்டாத தனிமையில் வைத்து இலக்கியம், இலக்கணம் என்பதுடனேயே அதை தேங்க வைத்து நிறுத்திவிடுகிறார்கள். அதை படிக்கும் மாணவர்களும் என் எதிர்காலம் என்ன என குழம்பி நிற்கிறார்கள். தமிழை தனிமைபடுத்தாதீர்கள். தமிழ் இலக்கிய மொழி மட்டும் அல்ல. அது அறிவியல் மொழி, வணிக மொழி. அதை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளுடன் சேரவிடுங்கள். தமிழ் மாணவர்களுக்கு மேஜர் துறை தமிழாகவும், மைனர் துறை அறிவியல் அல்லது வணிகமாகவும் இருக்கட்டும். அறிவியல் அல்லது வணிகவியலில் ஆங்கிலத்திலும் சில பாடங்களை படிக்கவேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்தவேண்டும். இல்லையெனில் ஆங்கிலத்தில் இருக்கும் ரிப்போர்ட்டுகள் அல்லது கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய அவனால் எப்படி இயலும்?

தற்போதைய பி.ஏ அல்லது எம்.ஏ தமிழ் பாட திட்டத்தை படிக்கும் ஒருவருக்கு வெளியுலகில் இணையம், சோஷியல் மீடியா புரட்சி நடந்துகொன்டிருப்பதே தெரியாது. சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பக்திப்பாடல்களை கற்பிப்பதிலும், முனைவர் பட்ட ஆய்வுகளில் “புதுமைப்பித்தன் கதைகளில் காணும் பெண்ணியம்” என்பது போன்ற தலைப்புகளிலும் மட்டுமே ஆய்வுகள் நடப்பதுடன் நிறுத்திவிடுகிறார்கள்.

இம்மாதிரி ஆய்வுகளையோ, பாடதிட்டங்களையோ நாம் குறைகூறவில்லை. ஆனால் தமிழ் என்பது வெறும் வரலாறு மற்றும் இலக்கியமாக மட்டும் இருக்க முடியாது. அதை மக்களுக்கு பயனுள்ள துறையாக மாற்றவேண்டும். அதை செய்ய தவறியதால் ஆங்கிலவழியில் மட்டுமே படித்த ஒரு மாணவர் கூட்டம் அறிவியல், வணிகம், விளம்பரம் என தமிங்கிலத்தை பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தை புகுத்தி வருகிறது. வணிகம், அறிவியல், கணிணி போன்ற துறைகளில் தமிழ் சுத்தமாக இல்லாத நிலை நீடிப்பதே இதற்கு காரணம்.

தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்

தமிழ் இலக்கிய உலகில் நாவல் வடிவம் என்பது ஒரு நூற்றாண்டைக் கடந்து இயங்கி வருவதான ஒரு வகை இலக்கியம். இவ்விலக்கியம் தனிமனிதன் மற்றும் சமூகத்தோடு கொண்டுள்ள உறவுகளை ஆராயும் நோக்கில் படைப்பாளரின் பல்வேறு முயற்சிகளையும் ஆக்கங்களையும் உடைய தாகப் புதிய பரிமாணங்களைக் கண்டடைவதாக உள்ளது.
சமூக நிறுவனங்களான சமயம், அரசியல், பொருளாதாரம், குடும்பம், முதலான அனைத்தையும் நாவல்கள் வழி அறிய முடியும் என்பதால் இச்சமூக நிறுவனங்களில் அடிப்படை நிறுவனமான குடும்பம் பற்றிய தேடலும் அதற்கான இடமும் எத்தகையது என்பதை நோக்கமாகக் கொண்டு ஆசிரியரின் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும்.
குடும்ப நாவல் என்பது குடும்பத்தின் எல்லைக் குள்ளேயே அடங்கிய நிகழ்ச்சிகளை மையக் கருத்தாகக்கொண்டு எழுதுவது என்றாலும் இதைச் சமூக நாவல்களுக்குள் அடக்கிவிடுவதும் உண்டு என்பதால் இதற்கான வேறுபாடுகளைத் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதன் குடும்ப நாவல், சமூக நாவல் எனப் பிரித்தறியச் சொல்கிறார்.
குடும்ப நாவல்களில் வெவ்வேறு சூழ்நிலைகளும் நில வேறுபாடுகளும் மிகுதியாக இல்லாமலிருந்தாலும் வெவ்வேறு மன இயல்புகளும் அதனால் விளையக்கூடிய சிக்கல்களும் இருக்கும் என்பதான ஒரு தனிவரையறை குடும்ப நாவலுக்கு வகுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் சிறிய அமைப்பாகிய குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை மையக் கருத்தாகக் கொண்டு இலக்கிய உணர்வோடு கதைகள் புனைந் தவர்கள் அநேகர் என்று ஆய்வுலக இரட்டையர் களாக அறியப்பட்ட சிட்டியும் சிவபாத சுந்தரமும் நாவலில் குடும்பப் பதிவுகள் பற்றிக் குறிப்பிடு கின்றனர். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்ற குறுநாவல் தொடங்கி, பல நாவல்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட பதிவுகளே என்று நூலில் குறிப்பிடுகிறார்.
தமிழின் முதல் நாவலாக வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ அறியப்படுகிறது. நாவல் உலகில் வேதநாயகம் முன்னோடியாக அறியப்பட்டாலும் அவர் காலத்தில் நாவல் படைப் பதற்கு என்று நிறுவப்பட்ட வரையறைகளோ ஒழுங்குகளோ கிடையாது என்பதால் மக்களுக்குப் பொழுதுபோக்கினையும், அறக்கருத்துகளைப் போதிப்பதையும் தனது இரு நோக்கங்களாகக் கொண்டிருந்ததாலும் செறிவான அமைப்பை அவரது நாவல்கள் பெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.
பிரதாப முதலியார் சரித்திரத்திற்குப் பிறகு ஏழாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் அதன் பிறகு வந்த மாதவய்யாவின் பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களில் குடும்ப அமைப்புகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப் பிடுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிறகு எழுதி வந்த மு.வரதராசனார், அகிலன், நா.பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், சி.சு.செல்லப்பா போன்ற எழுத்தாளர்கள் குடும்ப அமைப்பிற்குள் நிகழும் பல்வேறு சிக்கல்களை நாவல்களாகப் படைத்துள்ளனர்.
கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’, பொன்னீலனின் ‘கரிசல்’ போன்ற நாவல்கள் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த அவலங்களையும் அவர்களின் குடும்ப நிலைப்பாடுகளும், குடும்ப இயக்கத்தைப் பாதிக்கின்ற வகையில் ஏற்படுகின்ற கூலித் தொழி லாளிகள், முதலாளிகள் இவர்களிடையே ஏற்படு கின்ற முரண்பாடுகள் போராட்டங்கள் பற்றியும் பேசுவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
பண்பாடும் நாகரிகமும் வளர்ந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு சாராரிடம் வறுமை பொருளாதாரத் தேவை களுக்காக ஏற்படுகின்ற சிக்கல்களும் குடும்பத்தைப் பாதிக்கின்றன. இதற்கான அனுபவத்திற்கும், புரிதலுக்கும் ஏற்ப படைப்புப் பொருளாக நாவல் உருவாக்கப்படுவதும் உள்ளது. நாவல்கள் சமூகப் புரிதல்களுக்கான ஊடகமாக உள்ளது. ஹெப்சிபா ஜேசுதாஸ், வை.மு.கோதை நாயகி அம்மாள் போன்ற பெண் படைப்பாளர்கள் நாவல் உலகில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் குடும்பத்திற்குள் பெண்கள் படும் இன்னல்களையும் பணிச்சுமை, பெண் மீதான சமூகப் புறக்கணிப்புகள் பற்றியும் தம் நாவல்களில் படைத்துள்ளதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அறுபதுகளுக்குப் பிறகு ஜெயகாந்தனின் நாவல்களில் குடும்பத்திற்குள் பெண் முன்னெடுத்துச் செல்லும் உரிமை சார்ந்த சிக்கல்கள், பெண்ணின் முற்போக்கான செயற் பாடுகள் பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள், பாலியல் நடத்தைகள் ஆகியவற்றின் காரணமாகக் குடும்பத்திற்குள் ஏற்படும் சிக்கல்கள், குடும்பச் சிதைவுகள் நாவல்களில் முன்வைக்கப்பட்டுள்ள தையும் எண்பதுகளுக்குப் பிறகு குடும்பம் தொடர்பான பதிவுகள் தமிழ் நாவல்களில் படைக்கப்பட்டிருப் பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
குடும்பம் பற்றிய சில பொது வரையறை களைக் கூறிச் செல்லும் போது, “குடும்பம் என்பது தலைமுறை தலைமுறையாகப் பண்பாட்டு மரபு உரிமையைக் கொண்டு செல்லும் ஒரு செயலி’ என்று சுட்டப்படுவதைக் குறிப்பிடுகிறார்.
குடும்பம் பற்றிய மார்க்சியர்களின் வரை யறுப்புகள் வேறுபட்ட கருத்தாக்கங்களை உடைய தாகவும் குடும்பம் என்பது சமுதாயச் சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது தவிர வேறில்லை என்பதும் வர்க்க சமுதாயத்தில் குடும்பம் ஒரு வர்க்கத் தன்மையைப் பெறுவதாக ஒரு கருத்தும் நூலில் விளக்கப்படுகிறது.
குடும்பத்தின் மூலத்தோற்றம் ஆராயப்படும் வகையில் ‘மனிதனின் கூட்டு வாழ்க்கை என்பது மனித இனத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்ற போது மனிதன் தன் தேடலின் காரணமாகத் தங்கள் இனத்துக்கான சில விதிமுறைகளுடன் தோற்று விக்கப்பட்டதுதான் குடும்பம்’ என்பதான மானிட வியலாளரின் ஆய்ந்தறிந்த கூற்றின் மூலம் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
புராதன மக்கள் கூட்டத்தில் குடும்ப அமைப்பு இல்லாமலிருந்ததும், தாய்வழிச் சமுதாயத்தில் குழுத் தன்மை கொண்டதாகவும் காலப்போக்கில் நிலைத்த உறவுகளுக்கிடையே வாரிசுரிமை, குடும்ப நெறிமுறைகள் வழியே வலுவான குடும்ப அமைப்பு ஏற்படுவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
பெண் கற்பு என்ற கருத்தாக்கம் தாய்வழிச் சமூகம் மறைந்து தந்தை வழிச் சமுதாயத்தில்தான் ஏற்பட்டது. தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தை களைப் பேணுவதும் வாரிசுரிமை வழங்குவதும் குறிப்பாக குடும்பச் சொத்தை முன்னிறுத்திய செயலாகவே உள்ளது.
நிலவுடைமைச் சமுதாயத்தில் ஆண் தலைமையின் கீழ்க் குடும்ப அமைப்பின் இயக்கம் அமைந்ததால் நிலவுடைமை ஆதிக்கத்தையும் முதலாளித்துவத்தையும் கட்டிக் காப்பதற்கேற்ற வாய்ப்புச் சூழல்கள் மிகுதியாக அமைந்ததையும் அதன் காரணமாகவே ஆதிக்க சக்திகள் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கவனமாகக் கட்டிக் காத்து வந்ததையும் குடும்ப அமைப்புகளின் வழியே அறியமுடிவதாகக் கூறுகிறார்.
குடும்ப அமைப்பு என்பது இடைக்காலத்தில் வேளாண், கைத்தொழில், பொருளுற்பத்தி, பதப் படுத்துதல் என்று குடும்ப உறுப்பினர்களிடையே வளமான இயக்கமாக இயங்கி வந்தது. ஆனால், தற்கால சமூகச் சூழல்கள் பல அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பக் காரணங்களால் மாறியுள்ளன. கல்வி, பொருளாதாரம் இவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் குடும்ப அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிலவுடைமைச் சமுதாயத்தில் பெண்களால் செய்யப்பட்டு வந்த குடும்ப அலுவல்கள் இன்று பல்வேறு செயலிகளாலும் நிறுவனங்களாலும் புரியப்படுவதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் இந்துப் பண்பாட்டின் ஆதிக்கமும் செல்வாக்கும் இருந்தாலும் இந்துப் பண்பாடு தன் வலுவான நெறிமுறைகளால் இந்தியக் குடும்பங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தாலும் மாறி வருகின்ற புதிய சமூக மாற்றச் சூழலுக்கேற்ப அவை தகர்க்கப்பட்டு வருவதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
குடும்ப அமைப்பு சிதைவடையக் காரணமான அகக்காரணிகள், புறக்காரணிகள் நூலில் விரிவாகக் காணப்படுகின்றன.
குடும்பம் சமுதாயத்தின் முக்கியமான அங்கமாக இருப்பதால் குடும்பமும் பொருளாதாரத்தையே முதன்மையாகக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது. இதன் பொருட்டு மார்க்சியர்கள் பொருளாதாரமே சமூகத்தின் அடித்தளம் என்று வலியுறுத்துவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வகைத் தேவைகளுக்கும் பணமே முதற்காரணியாக இருப்பதால் அதைத் தேடிய வாழ்க்கைப் போராட்டமும் பணப்பற்றாக்குறை அல்லது பணமின்மை போன்ற காரணங்களால் குடும்பம் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் சிதைவு களையும் சமூகவியலாளர்கள் பதிவு செய்தாலும் படைப்பாளர்கள் நாவல்கள் வழி அவற்றைச் சித்திரிப்பதும் உள்ளது. எழுபதுகளிலும் அதற்குப் பிறகுமான காலத்தில் பொருளாதாரச் சிக்கல் களால் குடும்பம் எதிர்கொண்ட சிதைவுகளை அறியும் ஆதாரங்களாக வேள்வித்தீ, கடல்புரம் போன்ற நாவல்களை நூலாசிரியர் எடுத்துக் காட்டுவது உணரத்தக்கது.
பழமையை உட்செறித்த சமுதாயம் புதிய தொழில்நுட்பத்துடன் போட்டி போட முடியாமல் சிதைந்து போவதை வண்ணநிலவனின் ‘கடல் புரம்’ எடுத்துக்காட்டுவதை நூலாசிரியர் குறிப் பிடுகிறார். குடும்பப் பொருளாதாரத்தில் இயற் கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் மாறுபாட்டால் பல குடும்பங்கள் சிதைவதையும் நாவல்கள் படம் பிடிக்கின்றன. இவ்வகையில் வேள்வித்தீ, நைவேத்தியம் போன்ற குறிப்பிடத் தக்க நாவல்கள் இடம்பெறுகின்றன.
குடும்ப வறுமையின் காரணமாகப் பாலியல் தொழிலில் பெண் ஈடுபடும் போக்கையும் அத் தொழில் இழிதன்மையுடையதாகக் கருதப்படுவதால் குடும்பச் சிதைவு ஏற்படுவதைக் கண்ணதாசனின் ‘விளக்கு மட்டுமா சிவப்பு?’ நாவல் அடையாளம் காட்டுகிறது. தொழிலாளர் போராட்டங்களும் குடும்ப அமைப்புகளைப் பாதித்துச் சிதைத்ததை கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ பாவண்ணனின் ‘சிதறல்கள்’ பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ போன்ற நாவல்கள் சித்திரிக்கின்றன.
மாறிவரும் உலகமய சூழலில் மனிதனின் நுகர்வு என்பது தனது அடிப்படைத் தேவைகளை விட இன்னபிற வசதிகளையும் இன்பங்களையும் அடையப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனிதனைக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறைகள் புதிய தொழில்நுட்பங்களால் வெகுவாகக் கவரப்படுகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துக்கேற்ப சுரண்டப்படும் அளவும் கூடுகிறது’ என்ற கூற்றுக்கேற்ப உற்பத்திப் பண்ட நுகர்வால் நுகர்வோரின் உழைப்பும் வருவாயும் சுரண்டப்பட்டு அதன் காரணமாகக் குறைந்த வருமானமுள்ள அடித்தட்டு மக்களின் குடும்பங்கள் சிதையும் வாய்ப்புக்கள் உருவாகின்றன. வரதட்சணை, பெண் சிசுக் கொலைகளும் குடும்பச் சிதைவுக்குக் காரணங்களாயுள்ளன. திருமணத்துக்கு முன்னும் பின்னும் ஏற்படும் தற்கொலைகள், கொலைகள் போன்றவை பெரும்பாலும் வரதட்சணைக் காரணங் களாலேயே ஏற்படுகின்றன. இதன் போக்குகளை இராஜம் கிருஷ்ணனின் பல நாவல்கள் படம் பிடித்துள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சமூகத்தில் விரைந்து பரவி வரும் நுகர்வுப் பண்பாடே வரதட்சணை என்னும் சமூக நோய் வளருவதற்கு மூல காரணமாக விளங்குகிறது என்னும் உண்மை ஆணித்தரமாகப் பல நாவல்கள் மூலம் விளக்கப் படுகின்றன.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தவிர தனி மனிதரின் உளச்சிக்கல்களும் குடும்ப அமைப்பைப் பாதிக்கின்றன. கற்பு என்பது மனிதப் பண்பாடு களில் ஒன்றாகக் கருதப்படுவதும் இதற்குக் காரண மாகிறது. பண்பாடு என்பது மனிதனை இடை யறாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் துணை புரிந்தாலும் அதையும் மீறிய பாலுணர்வு அவரை வழி நடத்துகிறது என்பதை ‘பெட்ராண்டு ரஸ்ஸல்’ கூறிய உண்மைக் கூற்றின் மூலம் ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.
பாலுணர்வு பற்றிய கண்ணோட்டங்களும், அதன் விளைவாக ஏற்படும் சமுதாயப் போக்குகளும், தனிமனிதப் பாதிப்புகளும், குடும்ப அமைப்பில் ஏற்படும் சிக்கல்களும் நாவல்களில் சித்திரிக்கப்படுகின்றன. ரகுநாதனின் ‘கன்னிகா’, எஸ்.சங்கர நாராயணனின் ‘மற்றவர்கள்’ ஐசக் அருமைராசனின் ‘வலிய வீடுகள்’ போன்ற நாவல்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். எழுபதுகளுக்கு பிந்தைய நாவலான ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’ இவ்வகையில் ஆசிரியரால் ஆராயப்படும் நாவல்களாக உள்ளன.
‘மனிதனின் உணர்வு நாட்டங்களுக்கும் சமூகம் கட்டிக் காக்க விரும்பும் கட்டுக் கோப்புகளுக்கும் இடையே காணப்படும் முரண்கள் தவிர்க்கவியலாத சங்கடங்களை ஏற்படுத்துகின்றன’ என்ற உண்மை களைப் பல நாவல்கள் எடுத்தியம்புகின்றன. சமுதாயத்தில் குடும்ப அமைப்புகள் குலையாமல் காக்க எத்தனை விதமான எச்சரிக்கை முயற்சிகள் எடுத்தும் பயனில்லாமல் போவது தனிமனித உணர்வுகளின் நாட்டங்களைப் பொறுத்து என்பதை ஆசிரியர் மென்மேலும் எடுத்துரைப்பது புலனாகிறது.
சமூகத்தில் ஆணுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சலுகைகளும் வாய்ப்புகளும் பெண் களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் பெண்ணிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழும்போதும், பெண் தனக் கான உரிமை கோரி முழங்கும்போதும் ஆணின் தன்முனைப்பு காரணமாகவும் குடும்பங்கள் சிதை வடைகின்றன. இந்தியக் குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே சமநிலையென்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் வேண்டாத போராட்ட உணர்வுகள் வெடித்துக் கிளம்புகின்றன. பெண் தன் உரிமையை நிலை நாட்ட முடியாதபோது அவமானமடைகிறாள். இதன் காரணமாக மணமுறிவுகள் ஏற்பட்டு மணவிலக்குகள் பெறப்படுகின்றன. இராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ என்ற நாவல் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பாலியல் உரிமை, பொருளாதார உரிமை குறித்த சிந்தனைகள் பெண்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. ஆயினும், இது ஓர் ஆணின் தகுதியைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டி யிருப்பது ஆணின் உரிமை என்பது பெண்ணை விட அதிக அளவில் சமுதாயத்தில் தன்மதிப்போடு இருப்பதையே காட்டுகிறது. ஆயினும், ஆசிரியர் நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான பதிவுகளாகக் காண இயலாது என்கிறார். மனித சமூகம் என்பது பல சாதி மதப் பிரிவுகளை உடையது. தனிமனித ஆளுமைகள் குடும்ப அரசியலாக உருவெடுக்கிறது.
சமூகப் புறக்கணிப்புகள் ஏதுமின்றிக் குடும்பம் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வது அவசியமாகிறது. குடும்பம் என்ற அமைப்பு சமூக நிறுவனத்தைத் தாங்கும் தூணாக உள்ளது. சமூகக் கட்டுக்கோப்புகள் மாறிவரும் காலச் சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையேயும் குறிப்பாக இளைய தலைமுறைகளிடையேயும் மனவேறு பாட்டினை ஏற்படுத்துகிறது. நூலாசிரியர் தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டு ஆய்வு நோக்கில் குடும்பச் சிதைவுக்கான உளவியல் காரணங்களையும், புறக்காரணங்களையும் பகுத்துக் கூறியுள்ளது ஆசிரியரின் முயற்சியாகவும் தேடலாகவும் உள்ளது. இத்தகைய ஆய்வுகள் தமிழ் நாவல்களிடையே வருவது சமுதாய நீரோட்டத்தில் ஒரு பொதுவான புரிதலில் மட்டுமல்லாமல் பல காரணிகளைத் தேடவும் வைக்கிறது.
தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்
முனைவர் அ.குணசேகரன்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

பண்டைய தமிழர் உணவுகள்...

பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினருக்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும், விருந்தோம்பும் பண்பாட்டையும் பத்துப்பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது.
மதுவும் புலாலும்
மதுவும், புலாலும் சங்க இலக்கிங்களில் மணம் வீசிக்கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும் இறைச்சியையும் சிறந்த உணவாக்க் கொண்டனர். வசதி படைத்தவர்கள் தம்மிடம் வந்த விருந்தினர்களுக்கு முதலில் மதுவைக் கொடுத்து மகிழச் செய்வர். மதுவுண்டு இளைப்பாறிய பின்னர் நல்ல மாமிசங்களோடு கூடிய விருந்தளிப்பர். இது பழந்தமிழர்தம் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நகைகளை அணிந்த மகளிர் இனிமை தரும் புன்சிரிப்புடன் பொற்கிண்ணத்தில் பல தடவை மதுவை நிரம்ப ஊற்றித் தருவார்கள். அவர்கள் கொடுக்கக் கொடுக்க நாங்கள் அதனை வாங்கி உண்டு எங்களின் வழி நடந்துபோன வருத்தத்தைப் போக்கிக் கொள்வோம். மதுவருந்திய மயக்கத்துடனும் நின்றோம் என்று மதுவின் களிப்பைப் பற்றி பொருநராற்றுப்படையானது,
“இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
போக்கு இல்பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம்வீட
ஆர உண்டுபேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை” (85-89)
- என்று குறிப்பிடுகின்றது. இப்பாடலில் செல்வர்களின் வாழ்க்கை குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
புலால் உணவு (அசைவ உணவு)
புலாலை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வெந்த்து வேவிறைச்சி என்றும், சுட்டது சூட்டிறைச்சி என்றும் வழங்கப்பட்டது. செம்மறியாட்டுக் கறியைச் சிறந்த்தாக எண்ணினர். செம்மறியாட்டுக் கறியிலும் அதன் தொடைக்கறியைச் சிறந்த சத்தும் கொழுப்புமுடையதாக்க் கருதினர். வந்த விருந்தினருக்குச் செம்மறியாட்டுக் கறி சமைத்துப் போடுவது பழந்தமிழரின் உணவு வழக்கமாக இருந்தது.
அருகம்புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறியாட்டின் மாமிசத்தை வேக வைப்பர். அதன் தொடையின் மேற்பாகத்துக் கறியினை எடுத்துக் கொடுத்து விருந்தினரை வற்புறுத்துவர்.
இரும்புச்சட்டத்தில்ல் புலாலைக் கோர்த்துத் தீயிலே சுட்டெடுத்த நல்ல கொழுத்த ஊன். அதன் நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம். சூடு பொறுக்காமல் அந்த்த் துண்டத்தை இந்தக் கடைவாய்க்கும் அந்தக் கடைவாய்க்கும் தள்ளித் தள்ளித் தின்போம். ஊன்தின்றது போதும் என்று வெறுத்தால் வேறு வேறு வகையாகச் செய்யப்பட்ட பலகாரங்களைக் கொடுப்பர். எம்மை அங்கேயே தங்கும்படியும் செய்வர் என்பதை,
“துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
கராஅரை வேவைப் பருகு எனத் தண்டி
காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ” (103-108)
- என பொருநர்கள் கூறுவதாகப் பொருநராற்றுப்படை மொழிகின்றது. இவ்வடிகளில் மாமிச உணவை இன்சுவை உணவாகத் தமிழர்கள் புகழ்ந்து உண்டது குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.
சிற்றூர்களில் பெரும்பாலும் புலால் உணவையே மக்கள் உண்டனர். தினையரிசியைச் சோறாக்கி, நெய்யில் புலாலை வேகவைத்துப் பொரித்து தாமும் உண்டு, தம்மை நாடிவந்தோருக்கும் இனியன கூறி உண்ணக் கொடுத்தனர். இத்தகைய அரிய செய்தியை,
“மானவிறல்வேள் வயிரியர் எனினே
நும்மில் போல நில்லாது புக்குக்
கிழவிர்போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம்பு அகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த
நெய்க்கண் வேவையோடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்” (164-169)
- என மலைபடுகடாம் நவில்கின்றது. இவ்வடிகள் சிற்றூர் மக்களின் பண்பினை எடுத்துரைக்கின்றது.
காய்கறி உணவு (சைவ உணவு)
மாமிச உணவைத் தவிர நல் காய்கறிகளைச் சமைத்து உண்ணவும் தமிழர்கள் அறிந்திருந்தனர். நல்ல தானியங்களைச் சமைக்கவும் கற்றிருந்தனர். கடினமற்ற அரிசி முழு அரிசி இத்தகைய அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாகச் சேர்ந்திருக்கின்ற சோறு. அதைப் பால்விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும் புளிக்கறிகளோடும் மிகுதியாகத் தின்போம் என்று சைவ உணவு சமைத்த முறையையும் அவ்வுணவை உண்டதையும் பொருநராற்றுப்படையில் பொருநர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கருத்தை,
“முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை” (113-116)
- எனப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் குறிப்பிடுகின்றார்.
கருவாடு (வலைஞரின் உணவு)
நெய்தல் நிலத்தில் வாழ்வோர் மீன் உணவை மிகுதியாக உண்பர். குழல் மீனைக் காயவைத்த உணவைக் குழல் மீன் கருவாடு என்பர். இந்த நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை,
“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்” (163)
- என சிறுபாணாற்றுப்படை நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
எயிற்றியர்களின் உணவு
வேடர்குலத்தைச் சார்ந்த பிரிவுகளுள் எயிற்றியர் என்பரும் ஒருவராவர். இவ் எயிற்றியர்கள் புளி சேர்த்து செய்யப்பட்ட உணவை உண்டனர். வேடர்குலப் பெண்கள் புளிக்கறி செய்வார்கள். சோறும் சமைப்பார்கள். வேட்டையாடிக் கொண்டு வந்த ஆமான் முதலியவற்றையும் சமைப்பார்கள். இவற்றைத் தாமும் உண்டு தம்மை நாடி வந்த விருந்தினர்களுக்கும் கொடுத்து உபசரிப்பர். எயிற்றியர் உணவையும், அவர்கள் விருந்து உபசரித்த தன்மையையும்,
“எயிற்றியர் அட்ட இன்புறி வெஞ்சோறு
தேமாமேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்” (175-177)
-எனக் குறிப்பிடுகின்றது.
எயிற்றியர்கள் புல்லரிசி உணவையும் உண்டனர். வெண்மையான பற்களை உடைய வேடர் குலப் பெண்கள், எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற புல்லரிசியைத் தேடிச் சேர்ப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற விளாமரத்தின் அடியிலே அகழ்ந்திருக்கின்ற உரலில் அந்த நெல்லைக் கொட்டி உலக்கையால் அதனைக் குற்றிக் கொழித்தெடுப்பர். பின்னர் கிணற்றில் சிறிதளவு ஊரியிருக்கின்ற உவர்நீரை முகந்து பானையில் ஊற்றி அடுப்பிலே வைத்து உலைவைப்பர். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டுச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்பர். இவ்வுணவை வந்த விருந்தினருக்கும் கொடுப்பர். இத்தகைய செய்தியினை,
“நுண்புல்அடக்கிய வெண்பல் எயிற்றியர்
பார்வையாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நிலவுரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல்லூற்று உவரி தோண்டித் தொல்லை
முரவு வாய்க்குழிசி முரி அடுப்பேற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல்” (94-100)
- எனப் பெரும்பாணாற்றுப்படை தெளிவுறுத்துகிறது. எயிற்றியர்களின் உணவான புல்லரிசியையும், உப்புக்கண்டத்தையும் குறிப்பிட்டு, அதனைச் சமைக்கும் முறையினையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது வியப்பிற்குரியது.
எயினர் உணவு
விற்பிடித்து வேட்டையாடி வாழும் வேடர்களின் உணவு, ஏழை எயிற்றியர்களின் உணவைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்தது. அவர்கள் உண்ணும் சோறு மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெற்சோறாகும். அது களர் நிலத்தில் வளர்ந்திருக்கும் ஈச்சமரத்தின் விதையைப் போலக் காணப்பட்டது. அச்சோற்றை நாய்களால் பிடித்துக் கொண்டுவந்த உடும்புப் பொறியலுடன் ஒன்று சேர்த்து உண்பர். இதனை தம்மை நாடி வந்தோர்க்கும் கொடுப்பர். இத்தகைய எயினர்களின் உணவு பற்றி,
“கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்
சுவல் விளை நெல்லின் செவ்வ்விழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்த்து வயின்தொறும் பெறுகுவீர்”  (129-133)
-என பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
உழவர்களின் உணவு
உலகிற்கு உணவிடும் உழவர்கள் அரிசி உணவையே மிகுதியாகச் சமைத்து உண்டனர். எனினும் உழவர்கள் பலவிடங்களிலும் வாழ்ந்தனர். அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் விளைந்த உணவுப் பொருள்களையே சமைத்து உண்டனர். என்பது நோக்கத்தக்கது. உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள். வயல்களில் பிடித்த நண்டையும், கொல்லையில் காய்த்த பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைப்பார்கள். அதனையே தம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வர். இதனை,
“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)
- என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
தொண்டை மண்டலத்தில் நெல் விளைவது குறைவு. புன்செய்ப் பயிர்கள்தாம் மிக அதிகமாக விளையும். அங்குள்ள உழவர்கள் பெரும்பாலும் வரகு, சாமை, அவரை உள்ளிட்ட புன்செய் தானியங்களையே அதிகம் பயிரிடுவர். அவர்களது உணவு புன்செய் தானியங்களாகவே இருப்பது நோக்கத்தக்கது.
வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை அவ்வுழவர்கள் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,
“நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி
புகர் இணர் வேங்கை வீசுண்டன்ன
அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவிர்” (192-196)
- என பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது. ஏழை உழவர்களின் இயற்கையான உணவினை இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்து சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்ததை,
“செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளைநெல்லின் அவரையும் புளிங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலுள் ஆங்கண் கழிமிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெருகுவீர்
பொன்னறைந்தன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை
தண் என் நுண்இழுது உள்ளீடாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவீர்” (434-443)
-என மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
மேலும் வயல்களில் வலைஞர்களால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வாளைமீன், தூண்டிலின் மூலம் பிடித்த வரால் மீன், இறைச்சித் துண்டுகள் இவற்றால் செய்யப்பட்ட உணவினையும், அரிசிச் சோற்றையும், பானையில் ஊற்றி வைத்திருக்கும் மதுவையும் காலை நேர உணவாக உழவர்கள் உண்டனர். இதனை,
“கண்பு மலி பழனம் கமழத்துழைஇ
வலையோர்தந்த இரும்சுவல் வாளை
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளஞ்செய் வினைஞர் வலிசி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும்
பெறுகுவீர்” (454-464)
என மலைபடுகடாம் தெளிவுறுத்துகிறது. இவ்வரிகள் உழுதொழில் செய்து வாழும் தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் விருந்தோம்பும் உயர்ந்த பண்பினையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஆயர் உணவு
முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,
“மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (166-168)
-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,
“வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
வளைஆன் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்
பலம பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்” (408-412)
-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை,
“கல்லென் கடத்திடைக கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்” (415-417)
-மலைபடுகடாம் மொழிகின்றது.
செல்வர்களின் உணவு
பிற நிலத்தில் வாழும் மக்களைக் காட்டிலும் வறுமையறியாது செல்வ்வளமுடன் வாழ்ந்தனர். ஏனெனில் மருதநிலப் பகுதியிலே பெரிய பெரிய ஊர்களும் உண்டு. இக்காலத்தில் கிராமப் புறப் பகுதிகளில் வாழும் மக்களைவி நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உயர்தரமான வாழ்க்கை நடத்துகின்றனர். இதுபோன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் வளமுடன் வாழ்ந்தனர்.
செல்வர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர். இதனை,
“தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளிக்ன் வாட்டொடும் பெறுகுவீர” (253-256)
-என பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
பார்ப்பார் உணவு
பார்ப்பாரின் உணவு இனிமையான அறுசுவை உணவாக இருந்த்து. அவர்கள் புலால் புசிக்க மாட்டார்கள்காய்கறி உணவுகளையே உண்டனர். இப்பார்பார்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள். தமிழர் குடியில் தோன்றியவர்கள். தமிழர்களிலே கல்வியும அறிவும் தனக்கென வாழாத் தகைமையும் மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களை அந்தணர்கள் என்றும் பார்ப்பார்கள் என்றும் பண்டைக் காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுவது இவர்களையே ஆகும். இத்தகைய பாரபனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன என்பர்.
இப்பார்பனர்கள் பாற்சோறும், பருப்புச் சோற்றையும் உண்பர். மேலும் அவர்கள் இராஜான்னம் என்று பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினையும் உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தயிர்ச்சாதம், மாங்காய்ச்சாதம், புளியஞ்சாதம், போன்ற சித்திரான்னங்களையும் உண்பர். தம்மை நாடிவந்தோர்க்கும் கொடுத்து உபசரிப்பர். இதனை,
“மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறு மீன்புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந்து அட்ட
சுடர்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதாநறுமோர் வெண்யெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சகம் நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைப்படப் பெறுகுவீர்” (301-310)
-பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். பார்ப்பார்கள் தமது இல்லத்திற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உணவளித்தனர் என்பதையும், அவர்கள் வேற்றுமை கருதாது அனைவருடனும் இனிதாகப் பழகினர் என்பதையும் இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
வேளாளர் உணவு
சொந்த நிலமுள்ள உழவர்களை வேளாளர்கள் என்றனர். இவர்கள் உழுவித்து உண்ணும் வேளாளர்கள் ஆவர். அவர்கள் இனிய பலாப்பழத்தையும், இளநீர், வாழைக் கனிகள், பனைநுங்கு, இன்னும் பல இனிய பண்டங்கள் ஆகியனவற்றையும் உண்பர். மேலும் சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்குகளையும் அவர்கள் உண்டனர். வேளாளர்கள் சைவ உணவினையே உண்டனர். இத்தகைய கருத்தை பெரும்பாணாற்றுப்படை,
“தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்
தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
வீழ்இல்தாழைக் குழவித்தீம் நீர்க்
கவைமுலை இருமபிடிக் கவுண்மருப் பேய்க்கும்
குலைமுதிர் வாழைக்கூனி வெண்பழம்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம்பல்தாரம் முனையிற் சேம்பின்
முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர்” (355-362)
-எனக் காட்சிப்படுத்துகின்றது.
பண்டைத் தமிழகத்தில் நிலமற்ற உழவர்கள் இருந்தனர். நிலமுள்ள உழவர்களும் இருந்தனர். நிலமற்ற உழவர்கள் தாழ்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். நிலமுள்ள உழவர்கள் வேளாளர் என்னும் உயர்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். இவ்விரு வகுப்பினரும் ஒழுக்கத்திலும் நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் மாறுபட்டிருந்தனர். உழவரைப் பற்றியும், வேளாளரைப் பற்றியும், அவர்கள் உண்ணும் உணவு குறித்தும் பத்துப்பாட்டு நூல்களுள் பெரும்பாணாற்றுப்படையே தெளிவுற எடுத்துரைக்கின்றது.
இவ்வாறு பத்துப்பாட்டு பண்டைத் தமிழரின் உணவு வகைகளையும், அவர்தம் உணவுப் பழக்கங்களையும் கூறுவதுடன் அக்கால மக்களின் வாழ்க்கை முறையினையும், அவர்களது வாழிடங்களின் தன்மைகளையும் பண்பாட்டு ஓவியங்களாகப் படைத்துக் காட்டுகின்றது.

மதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள்...

உலகமும் உலகத்துத் தோன்றும் யாவும் என்றும் நிலையில்லாதன. நிலைபேறுடையது சிறந்த புகழ் ஒன்றே. உயிர்களானது அறவழிப்படுமாயின் நிலையில்லா உடம்பை விட்டு நிலைபேறாம் - வீடுபேற்றை அடையும். இத்தகு கருத்தினை உள்ளடக்கியது நம் சங்கப் புலவர்களின் காஞ்சித் திணைக் கூறுகள். இவ்வியல், மதுரைக் காஞ்சியில் இடம்பெறும் நிலையாமைக் கூறுகள் பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது.

இன்பமும் துன்பமும்
இன்ப மயமான காட்சிகளினூடே துன்பக் கலப்பு இல்லாமல் இல்லை; பிறப்பு என்னும் போதே இறப்பும், புணர்வு என்னும் போதே பிரிவும் கலந்துதான் தோற்றமளிக்கின்றன. இவை ஒருவருடைய வாழ்வில் இரவும் பகலும் போல மாறி மாறி வருபவை என்பதை,

‘‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயலஆகி மாறு எதிர்ந்து
உளஎன உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நல்நசை துரப்ப
துன்னலும் தகுமோ? துணிவுஇல் நெஞ்சே’’ (அகம்., பா.எ., 327, பா.வரி: 1-6)
என வரும் அகநானூற்றின் வரிகள் எண்ணிப் பார்க்கச் செய்கின்றன. திருக்குறளும், இன்பம் விழையாதானும் துன்பத்திற்கே துன்பம் செய்து இன்பம் கொள்வான் என்பதை,

‘‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்’’. (திருக்குறள்., அதி : 63, கு.எ : 628)

என்ற குறள் மூலம் வாழ்வின் இன்ப துன்பம் பற்றிய கருத்தை உணரச் செய்கின்றது. மாங்குடிமருதனார், இன்பம் நிலைபெற்றுப் பெருகவும் துன்பம் கெடவும், வேண்டும் என்பதை,

‘‘கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!’’
கெடாது நிலைஇயர், நின் சேண்விளங்கு நல்லிசை!’’  (மதுரைக்கா: 208 - 209)

எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்வது போல் உலகோர்க்கு இன்பதுன்பம் பற்றிச் சுட்டிக் கூறியுள்ளார். ஒரே சமயத்தில் ஒரு பால் மகிழ்வும் மற்றொரு பால் துக்கமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உலகினைப் படைத்த முதல்வன் இப்படி ஒன்றையொன்று ஒத்துவராத வெவ்வேறு மாறுபட்ட இயல்புகளை ஒன்றாக நிகழும் வண்ணம் அமைத்திருப்பது மிகவும் விந்தையானது. இந்த உலகியலை உற்றுணர்ந்து தமது கருத்தை,

‘‘ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்ந் தோரே’’ (புறம்., பா.எ : 194)

- என்ற புறப்பாடல்வழி பக்குடுக்கை நன்கணியார் புலப்படுத்தியுள்ளார்.
இப்பாடலுக்கு உரை விளக்கம் தந்த ஔவை சு. துரைசாமி பிள்ளை, ‘‘இவர் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தார்கட்டும் ஏனைச் செல்வராகட்டும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, ‘‘மெய்வலி யுடையார்க்கே இவ்வுலகம் உரியது., உலகத்திற்கு பிறந்தார் அனைவர்க்கும் பொதுவென்பது பொருந்தாது’’ என்றும் ‘‘அவ்வலியைக் கெடாது பேணிக் கொள்ளற்குச் செல்வம் இன்றியமையாமையின் தேடுவது வலியுடையார்க் கேற்ப தென்றும் கருதி, அவற்றிற்கேற்ப நாளும் போரும் பொருளீட்டமுமே நினைந்தொழுகப் பண்ணிற்று. இதன் விளைவாக நாட்டில் இன்ப வாழ்வுக் கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை நன்கணியார். ‘‘இவ்வுலகம் இனிதன்று., ஒரு மனையில் சாப்பறை முழங்க, ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப் பிரிந்து கண்கலங்கி நிற்கிறாள். இவ்வாறமையுமாறு இவ்வுலகினைப் படைத்தவன் பண்பறிந் தொழுகும் பாடில்லாதவனெ யாவன். இவ்வுலகில் இத்தன்மையை யறிந்தவன் இதனிடையே கிடந்து உழல வேண்டுமென்பதன்று. இதனிற் சிறந்த இன்ப வுலகத்து இன்ப வாழ்வு காண்டலை வேண்டியவனாவான்’’ என இப்பாட்டால் வற்புறுத்தலானார்’’ எனலாம் (புறம்., பக்., 418 – 419).
இன்பமும் துன்பமும் கலந்து நிற்கும் இந்த உலகில் இன்பம் பெருக்கும் பேரின்ப வாழ்விற்கு ஏதுவான நல்ல செயல்களை அறிந்து செய்க! என அறிவுறுத்துவராயினர் சங்கப் புலவர்கள்.
நிலையாமை
தோற்றமும் மறைவும் என்றும் நிகழும் என்னும் நிலையாமை உணர்ச்சி அறிவாளர்களிடையே வேரூன்றியிருந்தது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை. மூப்பும் மரணமும் நேர்தல் எல்லார்க்கும் ஒத்தது. இவற்றையெல்லாம் சங்கப் புலவர்கள் ஆங்காங்கே குறிப்பாகத் தம் பாடல்களில் சுட்டிச் செல்கின்றனர். இவ்வுலகத்து நிலையில்லாதனவாகிய இளமை, செல்வம், யாக்கை இவை மூன்றும் எனக் கொண்டு நிலையுடையதுவாகப் புகழ் ஒன்றையே கூறுவாராயினர். உலகின் நிலை இவ்வாறாக இதில் பிறந்த பொருள்களின் நிலை கூறல் வேண்டுமோ? அவை யாவும் நிலையற்றனவே. ஒருவனுடைய ஆயுள் காலம் இவ்வளவு என்று அறுதியிட்டு அறிந்தார் எவரும் இலர். இக்கருத்து,

‘‘வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை’’  (நற்றிணை., பா.எ: 314, பா.வ : 1)

- என்ற நற்றிணைப்பாடல் வரியாலும்,

‘‘நாற்றம் சால்நளி பொய்கைஅடை முதிர்முகையிற்குக்
கூற்று ஊழ்போல் குறைபடூஉம் வாழ்நாள்’’ (கலி., பா.எ : 17, பா.வரி : 11-12)

-என்ற கலித்தொகைப் பாவாலும் வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. காற்றைக் காட்டிலும் நிலையற்ற வாழ்நாள் கழியும், கனவுப் பொருள்களே போல் நாள்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி மறைந்து இளமை நீங்கி முதுமை வருதலும் எல்லார்க்கும் நேர்கின்ற ஒரு நிலைமை. இதனை,

‘‘............... நாளும்
கனவுக் கழிந்தனை யவாகி, நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இந்நிலை அறியாய்!’’ (அகம்., பா.எ : 353, பா.வரி : 2-6)

-எனும் அகப்பாடல் அறியக் கூறுகின்றது.

இளமை நிலையாமை
இளமை ஆற்று நீர் ஓடுதல் போல மிக வேகமாகவே ஓடி மறைதலும், குளத்து நீர்போல் ஒரு காலைக் கொருகால் குறைந்து படுதலும் இளமையும் வாழ்நாளும் - மூப்பும் மரணமும் கனவு நிகழ்ச்சி போன்று ஆதலும் மதுரைக்காஞ்சியில்,

‘‘பொய்அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல்மாந்தரொடு
நல்ஊழி அடிப்படர
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! (மதுரைக்கா : 19-23)

எனவும்,
‘‘பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!’’ (மதுரைக்கா : 234-237)

எனவும் கூறி, இளமை முதல் உலகத்து யாவற்றின் நிலையாமையினை மிக நுண்மையாக உணர்த்தப்பட்டுள்ளது.

மரணம் யாவர்க்கும் வருவது உறுதி. உலகமெல்லாம் புகழ் பரவ ஒருகுடையின் கீழ் ஆண்ட மன்னரும் இறுதியில் மாய்ந்தனர் உயிரை நிலையாகப் பெறுதல் அரசர்க்காயினும் பிறர்க்காயினும் இயலாததொன்றாகும் என்பதை,

‘‘விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித்து ஆக
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒருதாம் ஆகிய பெருமை யோரும்
தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே’’  (புறம்., பா.எ : 366, பா.வரி : 1-5)

-என்ற புறநானூற்று வரியும்

‘‘இளமையும் காமமும் நின்பாணி நில்லா’’ (கலி., பா.எ : 12, பா.வ.: 14)
-என்ற கலித்தொகைப் பாடலும் கூறும் இளமையினது நிலையாமை மதுரைக்காஞ்சியோடு ஒப்புநோக்கற்பாலது. திருவள்ளுவர் கூறும்,

‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு’’ (திருக்குறள்., அதி : 34, கு.எ : 336)

-எனும் குறளும் வாழ்வு நிலையற்றது என்பதை உணரச்செய்கின்றது.

செல்வம் நிலையாமை
வாழ்நாளை வளமாக்கும் பொருளோ எல்லார்க்கும் ஒரு படித்தாகக் கிட்டுவது இல்லை. கிட்டிய பொருள் நிலையாக இருப்பதும் இல்லை. அது மாறிமாறி உறழ்ந்து கொண்டேயிருக்கும். செல்வத்தின் நிலைத்தன்மையின்மைக்குக் காரணம் எதுவாயினும், மதுரைக்காஞ்சியில் இருவேறு நிலையில் இழப்பதாகக் காட்டுகிறார். ஒன்று போர் மற்றொன்று பரத்தை வழிச் சேரல். பாண்டியனின் பெருமை கூறும் இடத்து, பகைவரின் செல்வங்கள் போரினால் அழிந்து பட்ட நிலையை,

‘உறுசெறுநர் புலம்புக்கு அவர்
கடிகாவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரிமேய
நாடுஎனும் பேர்காடு ஆக,
ஆசேந்த வழிமா சேப்ப,
ஊர்இருந்த வழிபாழ் ஆக’’ (மதுரைக்கா : 152 - 158)

என்றும் மேலும், அவ்வூரில் வாழ்ந்தேன்,

‘‘கொழும் பதியகுடி தேம்பிக்
செழுங்கேளிர் நிழல்சேர’’ (மதுரைக்கா : 167 - 168)
-என்ற மதுரைக்காஞ்சி வரிகளால் போரின் அழிவால் தாம் வாழும் குடிபெயர்ந்து சென்றனர் என்கிறார் மாங்குடி மருதனார். மேலும், பாண்டியன் தன்னைப் பணிந்தவர் தம் நிழல் வாழ்ந்தனர் என்றும் பணியாதாரினைப் போரிட்டு அடிபணியச் செய்து அவர்தம் செல்வத்தினை, திறையாகப் பெற்றார் எனவும் பின்வருமாறு கூறியுள்ளார் என்பது,

‘‘பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்ப,
பணியார் தேஎம் பணித்துத் திறைகொண்மார்’’ (மதுரைக்கா:229-230)

எனும் வரிகளால் அறியக் கிடக்கின்றது. இவைகள் போர் நிகழ்வால் ஏற்படும் செல்வ நிலையாமை எனலாம்.

செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த சங்கத்தமிழர், செல்வம் நிலையில்லாமல் சகடக்கால் போல் சுழலும் தன்மையது என்றும் கூறுவராயினர். பரத்தை வழிச் சேரலிலும் செல்வம் நிலையற்றதாகும் என்பதை,

‘‘திறந்து மோந்தன்ன சிறந்து கமழ்நாற்றத்து,
கொண்டல் மலப்ப புதல்மானப் பூவேய்ந்து,
நுண்பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய்பல கூட்டி கவவுக் கரந்து,
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி,
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மான புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேஎய’’ (மதுரைக்கா :567 - 577)

-என்று கூறுவதன் மூலம் செல்வம் நிலையற்றது என்பதை உணரச் செய்துள்ளார். பரத்தையர் வாழ்வு பற்றிக் கூறும் இளங்கோவடிகள்,

‘‘மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள்’’ (சிலம்பு., கானல்வரி., 52:3)

என்கிறார். அவர்களுடன் செல்வர்கள் சேர்ந்து பிரிந்த நிலைபற்றி கோவலன் வழி பின்வருமாறு கூறுமிடத்து,

............................ ‘‘தன்பைந்தொடி
வாடியமேனி வருத்தம் கண்டு, ‘‘யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு’ என்ன-’’  (சிலம்பு., கனாத்திறம் உரைத்த காதை., பா.வரி., 68 – 71)

என்கிறார். பொருட்செல்வம் தொலைந்து போயின எனக் கூறுவதால் செல்வத்தின் நிலையாமை தீயொழுக்கத்தின் கண்ணதாயும் உண்டென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். வாழ்நாளை வளமாக்கும் பொருளோ எல்லார்க்கும் ஒரு படித்தாகக் கிட்டுவதும் இல்லை. கிட்டிய பொருள் தானும் நிலையாக இருப்பதும் இல்லை அது மாறிமாறி உறழ்ந்து கொண்டேயிருக்கும். இதனை,

‘‘கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு உறையும்’’ (கலி., பா.எ : 21, பா.வரி : 10-11)

என்னும் கலித்தொகைப் பாடல் எடுத்துரைக்கின்றது. இக்கருத்தை வள்ளுவர்,

‘‘கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று’’ ( திருக்குறள்., அதி : 34, கு.எ : 332)

என விளக்கியுள்ளார். இதற்கு உரைகூறும் பரிமேலழகர், பெருஞ்செல்வ’ மெனவே துறக்கச் செல்வமு மடங்கிற்று. ‘போக்கு’ மென்ற எச்சவும்மையான், வருகவென்பது பெற்றாம். அக்குழாய் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கட் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போய வழித் தானும் போமாறு போல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமென்றதாயிற்று’’ என்கிறார் (திரு.,பரிமேலழகர் உரை., ப., 122) செல்வம் பெற்றதனால் ஆயபெரும் பயனை அடைந்து, அறநிலை வழுவாது வாழ்ந்தார் செல்வமும் கூட நிலைத்து நில்லாது போல் விடுகிறதாம் என்று செல்வ நிலையாமையை,

‘‘பெரிது ஆராச் சிறுசினத்தர்
சிலசொல்லான் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையாற் றண்டேறலர்
கனிகுய்யாற் கொழுந்துவையர்
தாழுவந்து தழுஉமொழியர்
பயனுறுப்பப் பலர்க்காற்றி
ஏமமாக விந்நில மாண்டோர்
சிலரே பெரும! கேளினி நாளும்
பலரே தெய்யவஃ தறியா தோரே
அன்னோர் செல்வமு மன்னி நில்லா
தின்னு மற்றதன் பண்பே யதனால்
.......................................’’ (புறம்., பா.எ.; 360, பா.வரி., 1-12)

புறநானூற்றில் தந்து மாறனுக்கு சங்க வருணரென்னும் நாகரையர் எடுத்துரைத்து ‘செல்வத்துப் பயன் ஈதலே’ என்பதை அறிவுறுத்தியுள்ளார். இதற்கு உரை விளக்கம் தரும் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, ‘‘நிலையாமை யறிந்து இந்நிலமாண்டோராகிய சிலரும், அறியாதார் பலருமாகிய இருதிறத்து வேந்தர் செல்வமும் நில்லாது; அதனால் நீ ஒழுக்கம் முட்டிலையாய் நிரப்பல் ஓம்புமதி யென்பவர், இவ்வுண்மையறிந்து பகுத்துண்பவர் பலரும் செல்வமும் வாழ்வும் நிலைபெறப் பெறுவர் போலும் என்னும் ஐயமறுத்தற்குப் ‘‘பலர் வாய்த்திரார் பகுத்துண்டோர்’’ என்றார். இனி தாம் உடையது பகுத்துண்போருள்ளும் ஒழுக்கமுட்டாது புகழ் வாய்ந்திருந்தவர் சிலரே பலர் அது வாய்த்திரார் என வுரைப்பினுமமையும். இதற்குப் புகழ் என ஒரு சொல் வருவித்துக் கொள்க’’ என்கிறார். (புறம்., ஔவை. சு. துரைச்சாமிப்பிள்ளை உரை., ப., 322).

யாக்கை நிலையாமை
உலக வாழ்வில் ஒவ்வொன்றையும் உற்று நோக்கும் போது எங்கும் நிலையாமைத் தத்துவம் நிலைபெறுதல் விளங்கும் வாழ்நாள் முதலியன எல்லாமே நிலையற்றதாகி ஓடுகின்ற நிலையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளைப் பயனுடையதாகச் செய்ய வேண்டும். துன்புறும் நாள்கள் வரும் முன்பே குறித்த நற்செயல்களைப் புரிய வேண்டும். நற்செயல் புரிதற்குத் துறவு நெறியே சிறந்தது எனவும் கருதியுள்ளனர். இறந்துபடும் முன்னர் இல்லறம் கொண்டு துறவறம் காண தொல்காப்பியர்,

‘‘காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’ (தொல்., பொருள்., கற்பு., நூற்பா., 51)

என்கிறார். பொருநராற்றுப்படையில்,

‘‘தவம்செய் மாக்கள்தம் உடம்பு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான’’ (பொருநர்., பா.வரி : 91-92)

என்பதனால், தவம் இயற்றியோர் உரிய காலத்தில் தம் உடம்பை விடுத்து உயர்ந்த உலகாகிய வீட்டுலக இன்பத்தையும் அடைவர் என்கிறது எனலாம். ஏலாதி இயற்றிய கணிமேதையார்,

‘‘இளமை கழியும் பிணிமூப் பியையும்
வளமை வலியிவை வாடும் - உளநாளால்
பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய்!
வீடே புரிதல் விதி’’ ( ஏலாதி., பா.எ., 21)

என்கிறார். இதற்கு விளக்கவுரை தந்த அழகரடிகளாம் இளவழகனார், ‘‘பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்கண் இவ்வைந்தானும் வரும் துன்பத்தையே நுகர விரும்பாது, வீடு பெறுதலையே விரும்புதல் ஒருவர்க்கு நெறியாவது’’ என்கிறார். (ஏலாதி., அழகரடிகள் உரை., ப., 26)

எல்லோர்க்கும் இறப்பு வருதல் உறுதி அதனை இயற்றும் யமன் சிறிதும் காலம் தவறாது கடமையைச் செய்து விடுவான். இளமை கழிந்து மூப்பும் இறப்பும் வரும் முன்னே நல்லறம் செய்தல் வேண்டும் என்பதை,

‘‘இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவனது இடைபிறர்க் கின்றித்
தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்க லுண்மை மாயமோ வன்றே
கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்கா
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று
நிலம்கலனாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே’’ (புறம்., பா.எ : 363)
என புறநானூற்றில் தேரையார் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்’ எனத் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் புறத்திணையியலில் இடம் பெறும் காஞ்சித்திணையின் பெருங்காஞ்சித் துறைக்கு இளம்பூரணர் இப்பாடலை எடுத்துக் காட்டியுள்ளார். எவ்வளவு செல்வம் வாய்க்கப் பெற்ற போதிலும் நாட்டில் வாழும் குடிமக்களும் தீநெறி விலக்கி நன்னெறியில் செல்வோராக வாழ்தல் வேண்டும். பலவகை அறங்களும் சேர்ந்து விளங்கினால்தான் நாட்டுமக்கள் அமைதியாக வாழமுடியும் என்பதை, ‘‘அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!’’ (ஐங்குறுநூறு, பா.எ : 7, பா.வ. 2) எனும் ஐங்குறுநூற்றுப் பாடல்வரியாலும்,

‘‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரு முவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமாஞ் ரதுவே’’ (புறம்., பா.எ : 195, பா.வரி., 6-9)

என்ற புறநானூற்றின் நரிவெரூஉத்தலையார் பாடல் வரிகளாலும் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. திருவள்ளுவரும்,

‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்’’ (திருக்குறள்., அதி : 4., கு.எ. 32)

என்கிறார். முதுகாஞ்சியில் மறுபிறப்பு பற்றிய சிந்தனை முன்வைத்து நிலையாமை யுணர்த்துகிறார் மதுரைக் கூடலூர்க்கிழார். இக்கருத்தானது,

‘‘மறுபிறப் பறியா ததுமூப் பன்று’’ (முதுமொழி., அல்லபத்து, பா.எ : 10)

என்ற முதுமொழிக்காஞ்சி அல்லபத்துப் பாடற்கூற்றால் அறியலாகிறது. மேலும், ஈயாதவனுக்குப் புகழில்லை என்பதை,

‘‘சோராக் கையன் சொன்மலை யல்லன்’’ (முதுமொழி., அல்லபத்து, பா.எ : 4)
என்ற முதுமொழிக்காஞ்சி அல்லபத்தில் நான்காம் பாடல்வழிக் காணலாம். மதுரைக் காஞ்சியில் நிலையாமைத் திறம்கூறும் நிலையாக,

‘‘கொன்ஒன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!
கெடாது நிலையியர் நின்சேண் விளங்கு நல்லிசை!’’ (மதுரைக்கா : 207 - 209)

‘‘கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே, உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!’’ (மதுரைக்கா : 235 - 237)

எனும் பாடல் வரிகள் மூலம் வீடுபேற்றின் நிமித்தத்தினை உணர்த்தி, நிலையாமையை வற்புறுத்தி நன்னெறிப் படுத்தியுள்ளார். வாழ்நாள் நிலையற்றது என்பதுணர்ந்த சங்கத் தமிழன் அதனோடு சேர்ந்து அழிய விரும்பினானில்லை. நிலையற்ற உலகில் நிலைபெற விரும்பினர் என்பதனைப் புறுநானூறு,

‘‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே’’ ( புறம்., பா.எ : 165, பா.வரி : 1-2)

என்கிறது. இந்த உலகில் புகழை அனைவரும் விரும்புகின்றனர் ஆனால், அதற்குரிய வழியை மட்டும் முழுதும் மேற்கொள்வாரில்லை’’ என்பர் அறிஞர் (அ.ச. ஞானசம்பந்தன்., அகமும் புறமும் (புறம்)., ப., 132).

தான் வாழ்நாள் பயனுடையதாக இருக்க வேண்டின்,
‘‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’’ ( திருக்குறள்., அதி:24, கு.எ: 236)

என மொழிகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மாங்குடிமருதனாரும்,

‘‘மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீ பெற்றநல் ஊழியையே!’’ (மதுரைக்கா : 781-782)

என பாண்டிய நெடுஞ்செழியனுக்குக் கூறுவார் போல் உலகமக்களுக்கு, வாழும் காலம் வரையறையற்றது இவ்வுலகத்தில் ஆண்டுமறைந்தோர் பலராவர் வாழும் நாள் வரை நல்லறம் செய்து இசையுடன் இருக்க,

‘‘பொய் அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல்மாந்தரொடு
நல்ஊழி அடிப்படர,
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!’’ (மதுரைக்கா : 19-23)

என்று மொழிவதன் வழி, நன்னெறி புகட்டியுள்ளார்.

இக்கருத்தினை,

‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு’’ (திருக்குறள்., அதி:24, கு.எ: 231) எனும் குறட்பாவுடன் ஒப்புநோக்கத்தக்கது.
உலகத்து நிலையாமையாவது இளமை, செல்வம், யாக்கை போன்றன நிலையற்றதைக் குறிக்கும் எனக் கூறுவாராயினர் சங்கத் தமிழர். இளமையானது - நீர்க்குமிழிபோல் கழிவது. செல்வம் - கூத்தாட்டு அலைக்களம் போல் யாதொரு காரணத்திற்காகக் கூடிப்பின் அக்காரணம் நிறைவேறியவிடத்துக் களையும் நிலைத்தன்மையற்றது என்பது தெளிவாகிறது. யாக்கை - நேற்றிருந்தார் இன்றில்லை என்றார் போல வாழ்நாளின் முடிவு அறுதியிட்டுக் கூறுவதற்கியலாத வழக்கை உடையது எனில் பொருந்தும். உலகத் தோற்றமும் முடிவும் நிலையற்றவிடத்து நிலைபேறாகிய வீடுபேற்றையடைய அறநெறி வழுவாது, செல்வத்துப் பயன் ஈதல் என்பதைக் கைகொண்டு வாழ வழிகூறுவதாய் மதுரைக்காஞ்சியை மாங்குடிமருதனார் படைத்துள்ளார் என்பது நோக்கத்தக்கது

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...