முன்னுரை
மனித எண்ணங்களையும், உணர்வுகளையும்
எடுத்துச்சென்று, வெளிப்படுத்தும் கருவியாக மொழி அமைகிறது. மனிதன் பேசுவதற்கு
தொடங்கிய நாள்முதல் மொழியில் ஒழுங்கில்லாமல் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பின்னர் நாளடைவில் அவகர்கள் மதி நுட்பத்திற்கேற்ப அவனைத் திருத்திக்கொண்டு
மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்கும் முயற்சியில் இறங்கினான். கற்றல், கற்பித்தல்
தொடர்பான சிந்தனைகள் இந்தியப் பண்பாட்டில் வேதகாலம் தொடங்கியே ஏற்பட்டுவிட்டது.
எந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? தவறுதலாக உச்சரித்தால் ஏற்படும் விளைவுகள்
நேரிடும் என்று தெரிந்து கொண்டான். கற்பித்தலை எளிமையாக்குவதின் மூலம் மாணவர்களின்
திறன்களை எவ்வாறு வெளிக்கொணர முடியும் என்பதை ஆய்வுப்பொருளாகக் கொண்டு இக்கட்டுரை
அமைகிறது.
கேட்டல் திறன்
நான்குவகைத் திறன்களில் கேட்டல் திறனே
மிகவும் இன்றியமையாத திறனாகும். இதனையேத் திருவள்ளுவர்,
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை" (குறள்: 157)
செல்வத்துள் எல்லாம் தலை" (குறள்: 157)
என்று குறிப்பிடுகிறார். ஒன்றைப்
படித்துத் தெளிவதைவிட கேட்டு தெளிவதே பயனுள்ளதாக இருக்கும். ஒரு குழந்தை வயிற்றில்
இருக்கும் பொழுதே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது. அக்குழந்தை பேசுவதற்கு
வேண்டுமேயானால் நாட்கள் பல ஆகும். அதுவரை கேட்டல் என்ற ஒருதிறனை வளர்த்துக்
கொண்டுதான் வரும். ஆசிரியர் பேசும்பொழுது மாணவர் கேட்கின்றனர். கேட்கின்றவர்
எல்லோரும் மிகக்கவனமுடன் அல்லது கூர்மையுடன் கேட்பதாகச் சொல்ல இயலாது. ஏனெனில்
ஆசிரியர் பேச்சின் கருத்து மிகக்கடின மானதாக அல்லது பேசப்படும் பொருள் மாணவர்களின்
அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். எனவே கேட்பவரின் திறன் மாறுபட இடமுண்டு.
ஒருவர் கேட்க முற்படும் பொழுதும்
படிக்கும் பொழுதும் பேசும்பொழுதும் என்ன என்பதை செவிமடுத்து கேட்பது அதுவே அவரின்
அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். ஆசிரியர்கள் வாசிக்கும் பொழுது மாணவனைத்
தன்வயப்படுத்தி எளிமையான சொற்களைச் சொல்லும் பொழுது அவன் செவிமடுத்து கேட்பான்.
மாணவரின் புரிதல் திறனுக்கேற்ப பாடல்கள் பாடியோ அல்லது ஒரு சொல் சொல்லி அதற்கு
எதிர்ச்சொல் என்னவாக இருக்கும் என மாணவனை யோசிக்க வைக்கவேண்டும். ஆசிரியர் மாணவர்
களுக்கிடையே ஒரு தொடர்ச்சி சங்கிலிப் பிணைப்பு இருந்தால் தான் கேட்டல் திறன்
முழுமைப்பெறும் என்பதில் ஐயமில்லை. கேட்கும் திறன் என்பது தனிப் பட்டவர்களின்
மனநிலை, விருப்பு, வெறுப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தும், தனிப்பட்டவர் களின் திறமை,
அவர்களின் உடல், மனநிலையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்தும் உள்ளது.
வாசித்தல் பழக்கம்
ஒரு பாடத்திட்டத்தில் உள்ள
பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கும் மாணவனை மற்றப் புத்தகங்களையும் படிக்க
வைப்பதற்கு தூண்டுகோலாக ஆசிரியர் விளங்கவேண்டும். கதைப்புத்தகங் கள், நாளிதழ்கள்
போன்றவற்றை வாசிப்பதற்கு ஆர்வங்காட்டுவதால் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்
கொள்வதோடு, பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் முடிகிறது. தினந்தோறும் வகுப்பில்
ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இன்றையச் செய்திகளை வாசிக்க வைக்கும் பொழுது
மாணவர்களிடையே ஒர் உந்துதல் ஏற்பட்டு அவனை விட நாம் நன்றாக வாசிக்க வேண்டும்
என்று அறிவுப் போட்டி ஏற்படும்.
வாசித்தலின் போது ஆசிரியர் எந்த
இடத்தில் ஏற்றி இறக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது மாணவரின் மனதிலும்
நன்றாகப்பதியும். வாசிக்கும் பொழுது சந்திப்பிழை, ஒற்றுமிகுதல் ஒற்று மிகாதல்
போன்ற இலக்கண குறிப்புகளையும் ஆசிரியர் சொல்லிக்கொண்டே வந்தால் நாளடைவில் மாணவன்
பிழையின்றி வாசிக்கவும் அதன் மூலம் எழுதவும் முடியும். நூல் வாசிக்கும் பழக்கம்
இல்லையெனில் அவர்களது அறிவை விரிவுபடுத்த முடியாது. ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை
எழுதச்சொன்னால் அவர்கள் வார்த்தையைத் தேடுவர். அவர்களிடத்தில் சொல்லாட்சித்திறன்
இல்லாமல் போய்விடும். மாணவர்களிடத்தில் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு
பிடித்தமான கதையைச் சொல்லி பின்பு அக்கதையின் சுருக்கத்தை எழுதச்சொல்லும் பொழுது
அவனுடைய சொந்த முயற்சி வெளிப்படும். எனவே ஆசிரியர் வாசித்தல் பழக்கத்தை
ஏற்படுத்தும் பொழுது சிறந்த மாணவனை உருவாக்க முடியும்.
இலக்கணம் கற்பித்தல்:
ஒரு மொழியைப் பிழையின்றிப்
பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. சொற்களை விளக்கும் கருவியாக
இலக்கணம் அமைகிறது. இலக்கணம் என்பது மொழிக்கு விளக்கம் கூறும் மரபிலக்கண நூற்களின்
செய்திகள் மட்டுமல்ல. நாம்பேசும் எழுதும் மொழியின் அமைப்பையும் ஒழுங்கு நெறியையும்
கூறுவதாகும். இலக்கணத்தை கற்பிக்கும் ஆசிரியன் மாணவரிடத்தில் பயத்தை உண்டு
பண்ணுதல் கூடாது. இன்றைய சூழ்நிலையில் குருட்டு மனப்பாடம் செய்ய வைத்து
அவர்களுக்கு புரிதல் திறனே இல்லாமல் செய்து விடுகின்ற போக்கே நிலவி வருகின்றது.
இலக்கண ஆசிரியர் பாடம் கற்பிக்கும் பொழுது அக்கால மொழிச்சூழலை மாணவர்களுக்குக்
கற்றுக்கொடுத்து அதன்மூலம் அக்கால மொழிப் பயன்பாடு எவ்வாறு இருந்தது? அந்த
மொழிக்குரிய இலக்கணம் இவையென்று தெளிவுபடுத்த வேண்டும். காலந்தோறும் மொழியானது
மாறுதலுக்குட்பட்டது. எனவே மரபிலக்கணத்தைச் சொல்லி கொடுக்கும் பொழுது, தற்பொழுது
மொழியின் நிலை என்ன என்பதையும் விளக்கி மாணவர்களுக்கு வேறுபாட்டை உணரும் திறனை
ஏற்படுத்த முடியும். மொழியைப் பிழையின்றி உச்சரிப்பதற்கு முதலில் மாணவனுக்கு
பிறப்பியல் செய்திகளைக் கூற வேண்டும். எந்த எழுத்து எந்த இடத்தில் பிறக்கிறது
என்பதை மாணவனே அறிந்து உச்சரிப்பதற்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
மாணவர்களின் வயது வரம்புக்குத்
தகுந்தவாறு இலக்கணம் அமைய வேண்டும். குறிப்பாகத் தொடக்கக்கல்வி மாணவனுக்கு
பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்குரிய வரையறைத் தெரிந்தாலே போது மானது. அதைவிடுத்து
பெயரெச்சம், வினையெச்சம், முற்று போன்ற இலக்கணக்கருவிச் சொற்களை கற்றுத் தரும்
பொழுது மாணவனுக்கு இலக்கணத்தின் மீதே கசப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே இலக்கணம்
பாடத் திட்டம் மாணவரின் புரிதல் திறனுக்கு ஏற்பவே அமைய வேண்டும். பாடத்தில் உள்ள
உதாரணங்களை மட்டும் கூறாமல், மாணவனைச் சிந்திக்க வைத்து உதாரணங்கள் கூறிய பின்
இத்தொடரில் பெயர்ச்சொல் எது வினைச்சொல் எது என அவர்கள் கண்டறிவதற்கு நாம் சோதனை
நடத்த வேண்டும்.
கற்பித்தலின் தரம்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
கற்பிக்கும் பொழுது தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாதவற்றை எளிய சொற்களின் மூலம்
விளக்குதல் வேண்டும். ஆசிரியர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாடத்திட்டத்தில் உள்ள
பாடத்தை முடிக்கவேண்டும் என்று அவசர அவசரமாய்ச் செல்லாமல் மாணவரின் புரிதல் திறனுக்
கேற்றபடி பாடத்தை நடத்த வேண்டும். முதல்நாள் வகுப்பில் நடத்திய பாடத்தை மறுநாள்
மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில், அவர்களிடம் வினாக்களை எழுப்புவது,
மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை பற்றிய அறிவு போதுமானதா இல்லையா என ஆசிரியர்கள்
தீர்மானிப்பதற்கு வழிவகுக்கும். மேலும், மாணவனின் புரிதல்திறன் அதிகரிப்பதற்கு
எழுதுகோல்களினால் வரைந்த வரைபடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற வற்றை ஆசிரியர்
பயன்படுத்தலாம்.
மாணவன் பெரிய கவிஞனாக ஆகாவிட்டாலும்
தமிழ்மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவன் படிக்கும்,
பயன்படுத்தும் மொழியில் சொல்வளம் அதிகமாக இருக்குமாறு பாடத்திட்டம் அமைய வேண்டும்.
சொற்களைக் கற்பிக்கும் பொழுது அவன் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படக்
கூடியவையாகவும், அனுபவத்திற்கு உட்பட்டவையாகவும் மொழி அமையவேண்டும். மாணவனுக்கு
சிறு சிறுக்கட்டுரை, கவிதை, சிறு நாடகங்கள் போன்ற வற்றிற்கு வாய்ப்பு கொடுக்கும்
பொழுது அவனுடைய கற்பனையாற்றல் விரிவடைந்து எந்தச் சொல்லை எங்குப் பயன்படுத்த
வேண்டும் என்ற ஆற்றல் ஏற்படுகிறது. மாணவன் பிழையின்றி பேசவும், எழுதவும், அவனுடைய
கற்பனைத்திறனை அதிகரிக்கவும் ஆசிரயரே முழுப்பங்கு வகிக்கிறார். இலக்கணத்தை
முழுமையாக கற்று கொண்டோமேயானா ல் எந்த ஒரு மொழியையும் எளிமையாக பேச, எழுத நம்மால்
முடியும் என்பதில் ஐயமில்லை.
கற்பிக்கும் முறை:
கல்வி பயிற்றலில் பல்வேறு மாற்றங்கள்
வந்தும் தமிழின் பண்பாட்டுப் பெறுமானம் காரணமாக, அதன் பயில்வு முறையில் அதிக மாற்றங்கள்
ஏற்பட்டன என்று கூறமுடியாது. தமிழ் வகுப்பும் தமிழாசிரியரும் கல்விப்போக்கில்
பொதுவான ஓட்டத்துடன் இணையாப் பொருளாகக் கொள்ளப்படும் ஒரு நிலைமை காணப்பட்டு
வந்துள்ளது” முனைவர் கா. சிவத்தம்பி.
கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே
நிறைவு பெறுகிறது. பள்ளிக்கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டிய பாடங்களுள் ஒன்று
மொழிப்பாடம். மொழித்திறனைப் பெறுபவர் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும்
வல்லமையைப் பெறுவர். அம்மொழித்திறனை மாணவர்கள் பெறுவதில் முக்கிய பங்கு
வகிப்பவர்கள் மொழியாசிரியர்கள். ஆனால் மொழியாசிரியர்கள் என்றாலே பிறதுறை அறிவும்
பயன்பாடும் அற்றவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. நவீன தொழில் நுட்பம்
வளர்ச்சியடைந்துள்ள, தொலைத்தொடர்புச் சாதனங்களின் ஆட்சிக்கால மான, அந்நிய மொழி
மோகம் நிறைந்த இன்றைய சூழலில் மொழிப்பாடம் கற்பித்தல் என்பது மொழியாசிரியர்களை
எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும். இக்காலக் கட்டத்தில் மொழிப்பாடம் கற்பிக்க
வேண்டிய முறைமைகளையும் மொழிப்பாடம் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகளையும் தொடர்ந்து
ஆராய வேண்டியது தேவையாகிறது.
செந்தமிழ் நாப்பழக்கம்
பொதுவாக இந்நூற்றாண்டைத்
தொலைத்தொடர்பு யுகம் என்றழைக்கலாம். கணினியில் மூழ்கிப் போவதைப் போலவே
தொலைக்காட்சியிலும் மூழ்கிப்போய் விடுகின்றனர் மாணவர்கள். தொலைக் காட்சியின்
உச்சரிப்புப் பிழைகள் மாணவர்களிடமும் பதிந்து விடுகின்றன, முக்கியமாக மாணவர்கள்
விரும்பிப்பார்க்கும் சன்மியூசிக், ஜாக்பாட் (கேள்வி என்பது பல ஆண்டுகளாக, கேல்வி
என்று உச்சரிக்கப் பட்டதைத் தமிழ் அறிந்தவர்கள் அறிவர்) முதலிய நிகழ்ச்சிகளில் ல,
ள, ழ, ந, ன, ண, ர, ற ஆகிய எழுத்துகள் ஒலி வேறுபாடுகள் இன்றியோ அல்லது தவறாகவோ தாம்
பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றன. புதிதாகப் படித்து முடித்து வரும்
தமிழாசிரியர்களில் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழியின் தனிச்சிறப்பே
சிறப்பு ழகரம். இவ்வொலி இன்று தன் சீரிழந்து நிற்கிறது.
“நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல். எழுத்து: 95)
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல். எழுத்து: 95)
நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து
அண்ணத்தைத் தடவ ழகரம் பிறக்கிறது.
“நாவிளிம்பு வீங்கி யண்பல் முதனுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 96)
நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில்
அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தை வருட ளகரமும் பிறக்கிறது. இலக்கணங்களை
மனத்தில் நிறுத்திக்கொண்டு இவ்வொலிகளை உச்சரித்துப் பழகுதல் வேண்டும். மாணவரோ
பிறரோ யாராகவிருப்பினும் செய்தித்தாளைப் படித்து அதனை ஒலிப்பேழையில் பதிவு செய்து,
மீண்டும் கேட்கும் பொழுது தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். இப்பயிற்சியின்
மூலம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர முடியும். இதற்காகவே
“ஓடுற நரியில ஒரு நரி கிழநரி கிழநரி
தலையில ஒரு முடி நரைமுடி”
என்னும், இது போன்ற நா நெகிழ்
பயிற்சிகள் நம் முன்னோர்களால் முற்காலத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.
எண்களின் கூட்டு கணிதம் என்றும்
எழுத்துக்களின் கூட்டு இலக்கணம் என்றும் கூறுவர். பண்டைய முறையில் உயிர்
எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஒலிக்கக் கற்பிக்கும் பொழுது இரண்டு
எழுத்துக்களாகச் சேர்த்துக் கூறுவர். (விதி விலக்கு- ஐ, ஒள).
அஆ இஈ உஊ எஏ ஒஓ
க்ங் ச்ஞ் ட்ண்
த்ந் ப்ம் ய்ர் ல்வ் ழ்ள் ற்ன்
இவ்விணை எழுத்துகளை இனஎழுத்துகள்
என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் பொழுது
இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று
எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்று கூறச் செய்தல்
வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ‘ண்’ என்னும் எழுத்து தான் டகரத்தின் முன்
வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின்
‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும்
மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே. ஆனால் மேல்நிலை
மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் கூட மூன்றுசுழி ண் இரண்டு சுழி ன் என்றுதான்
கூறுகின்றனர். மாணவர்களின் இந்நிலைக்கு அவர்களுக்கு முறையாகக் கற்பிக்காமையே
காரணம் எனலாம். எனவே மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுத்துகளையும் அவற்றை
ஒலிக்கும் முறைகளையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களையும் அறிந்து முறையாகப்
பயிற்றுவித்தால் மாணவர்களின் இழித்தகைமை நீங்கும். மொழிப்புலமை ஓங்கும்.
இலக்கணமும் இன்சுவையே
ஆங்கிலவழியில் பயில்வதே இன்றைய
நாகரிகமாக உள்ளது. தமிழ்ப்பாடத்தை ஆர்வமின்றிப் பயில்வதும் அதிலும் இலக்கணப்
பாடத்தைப் புறக்கணிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. கருத்தைப் பிறருக்கு
எடுத்துச்சொல்வது பேச்சும், எழுத்தும். மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை
புரிவது இலக்கணமே. இலக்கணம் கற்பிக்கும் பொழுது பழைய மரபுகளை மீறாமல் புதிய
உத்திகளைப் பயன்படுத்தி ஆர்வத்தைத் தூண்டுவது கற்பித்தலில் தலையாய ஒன்றாகும்.
“மனத்தி னெண்ணி மாசறத் தெளிந்து
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்” (தொல்.பொருள்: 656)
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்” (தொல்.பொருள்: 656)
என்பது தொல்காப்பியம். இலக்கண விதிகளை
இலக்கிய வழிகளில் மட்டுமல்லாமல் உலகியல் வழிகளிலும் பொருத்திக் காட்டுதல் வேண்டும்
என்பதையே தொல்காப்பியர் “இனத்திற் சேர்த்தி” என்னும் தொடரால் உணர்த்துகிறார்.
கற்பித்தல் நிலையில் இலக்கணம் கற்பிக்க கரும்பலகையை மிகுதியும் பயன்படுத்துதல்
வேண்டும். ஒப்புமைக் கூறுகளைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுதலும் ஐயப்பகுதிகளைத்
தடை விடைகளைக் காட்டி தெளிவித்தலும் வேண்டும்.
இலக்கணக்குறிப்பு தொழில் பெயராகவிருப்பின் விகுதி, தல், அல், அம், ஐ, கை இவற்றுள்
ஒன்றாக இருக்க வேண்டும், வியங்கோள் வினைமுற்றாக இருப்பின் க, இய, இயர் என்னும்
மூன்றில் ஒன்றாக அதன் விகுதி அமைதல் வேண்டும் முதலியவற்றை அறிந்து சொற்களைப்
பகுப்பர். எனவே உறுப்பிலக்கணம் எழுதும் பொழுது அதன் இலக்கணக்குறிப்பையும் எழுதச்
சொல்லுதல் இன்றியமையாதது. சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் பழகிக்கொண்டால்
உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய வாசிப்பும் எளிதாக இருக்கும்.
இலக்கணக் குறிப்பைப் பயிற்றுவிக்கும்
பொழுது மாணவர்களுக்கு அனுபவம் மிக்க பொருள்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்
அமைந்திடின் ஆர்வம் மிகுவதுடன் மனதில் நிறுத்துவது எளிதாகிறது. சான்றாக உருவகத்தை
விளக்க.
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இவ்வழி இரட்டைக்கிளவியின் விளக்கமும்
தரலாம். ஆசிரியர் மனத்தின் எண்ணி மாசறத்தெளிந்து இவ்வுத்திகளைப் பயன்படுத்தி
மாணவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் இலக்கணப்பாடமும் இனிமையான
அனுபவமாக அமையும். ஆனால் இம்முறையில் பயிற்றுவிக்கும் பொழுது ஆசிரியருக்குத்
தெளிவு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஐயங்கள் எழாவண்ணம் பயிற்றுவிக்க இயலும்.
அதேசமயம் ஊடகங்களின் மொழிகளை உள்வாங்கிக் கற்பிக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன்
இருத்தல் வேண்டும்.
செவியுணவே சுவையுணர்வு
அறிவுக்கு விளக்கம் கொடுக்க வந்த
திருவள்ளுவர் “தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு” (குறள்-424) என்கிறார்.
ஆன்ற பெருமையைத்தரும் செவிக்கு உணவாகிய, கேள்விச் செல்வத்தைப் பெற மாணவர்கள்
பெரிதும் விரும்ப வேண்டும். செவிவாயாக நெஞ்சுகளனாகக் கேட்டு, கேட்டவற்றை விடாது
உள்ளத்து அமைத்தல் வேண்டும். காட்சிவழிக் கற்றலுக்கு அடுத்த நிலையில் அதிகப்பலன்
தருவது கேட்டல் வழிக்கற்றலில் தான். காட்சி, கேள்வி வழியில் 50 விழுக்காடு கற்றல்
நடைபெறுகிறது என்றால் அதில் 11 விழுக்காடு கேட்டல் வழியில் நடை பெறுகிறது.
கல்வியாளர்களில் பெரும்பாலோர் விரிவுரை முறையையே சிறந்தது என்கின்றனர்.
இக்கேட்டலில் மாணவர்கள் திறன் பெற்றுள்ளனரா என்பதை அறிய மேல்நிலை வகுப்புகளில்
‘கேட்டல் பேசுதல் திறனறி தேர்வு’ (Testing off Oral - Aural skills)
நடத்தப்படுகிறது. இத் தேர்விற்கு ஆசிரியர் ஏதேனும் ஒரு பகுதியைப் படித்துக்காட்டி
படித்தவற்றுள் சில வினாக்களை எழுப்பிச் சோதித்தல் வேண்டும். சில தமிழ்க்
கையேட்டில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது
மாணவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி கேட்டல் திறனைக் குன்றச் செய்கிறது.
நன்னூலில் எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம் என்ற இரண்டு பகுதிகள் மட்டும் தான் உண்டு. தொல்காப்பியத்தில் இவ்விரு
அதிகாரங்களோடு பொருளதிகாரம் என மூன்றாவது பகுதியும் உள்ளது. எழுத்ததிகாரத்திலும்
சொல்லதிகாரத்திலும் தமிழின் வரிவடிவம், அதன் உச்சரிப்பு முறை, எழுத்துகள் சேர்ந்து
சொற்கள் உருவாகும் முறை, சொல்லாக மாறும் பொழுது ஏற்படும் மாற்றங்கள், சொற்களின்
சேர்க்கையால் ஏற்படும் தொடர்கள், தொடர்கள் உருவாகத் தேவையான அடிப்படைச்
சொல்வகைகளான பெயர்ச்சொற்கள் (Noun) வினைச்சொற்கள் (Verb) இவ்விரண்டும் இணைந்து
தொடர்கள் உருவாகும் விதம், அப்பொழுது தேவைப்படும் இடை மற்றும் உரிச்சொற்கள்,
ஆங்கிலத்தில் முன் ஒட்டுகள் (Prefix) பின்னொட்டுகள் (Suffix), இடையொட்டுகள்
(Infix) எனப் பேசப்படுவன தொடர்களின் வகைகள் என விரிவாகப் பேசுகின்றன.
தமிழ் இலக்கண நூல் ஆசிரியர்கள்
தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை
உணர்ந்து உரைநடைக்கான இலக்கணங்கள் எழுதப்பட்டுள்ளன. நுஃமான் எழுதிய
அடிப்படைத் தமிழ் இலக்கணம் கொஞ்சம் வறட்சியான இலக்கணநூல் தான். ஆனால் அதன் பார்வை
நூல்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் முழுமையும் நிகழ்காலத் தமிழின் மாற்றங்களை
உள்வாங்கி உரைநடையின் போக்கையும் புரிந்து கொண்டு எழுதப்பட்ட நூல். பரமசிவம்,
அவர்களின் இக்காலத் தமிழ் மரபு சுவாரசியமான எடுத்துக்காட்டுகளுடன் தமிழ்
இலக்கணத்தைச் சொல்லித்தரும் நூல். மரபிலக்கணத்தையும் மொழியியலின் வீழ்ச்சியையும்
உள்வாங்கிக் கொண்டு ச. அகத்தியலிங்கம், அ. சண்முகதாஸ், செ. வை, சண்முகம்,
முத்துச்சண்முகன், ப.ரா. சுப்பிரமணியன், த.ராஜாராம், பொற்கோ போன்றோர் தமிழிலும்,
ஆந்திரநோவ், இ. அண்ணாமலை, தாமஸ் லெக்மோன், ச. ஆரோக்கியநாதன், போன்றோர்
ஆங்கிலத்திலும் எழுதியுள்ள நூல்கள் முழுமையும் இக்காலத் தமிழுக்கான உரை நடைக்கான
இலக்கணங்கள். இவையெல்லாம் தமிழ்மொழி கற்பித்தலில் பற்றிய நூல்கள் ஆகும்.
இந்நூல்கள் பல்கலைக்கழகப் பாடப்பகுதிகளில் இடம் பெறாமல் இருப்பது ஒருவருக்கும்
தெரியாமல் போய்விட்டது.
உலகம் முழுவதும் தமிழ்மொழிக்
கற்பித்தல்
உலகம் முழுவதும் தமிழ்மொழிக் கற்பித்தல்
ஒரே வகையாக இருக்க முடியாது. வெவ்வேறு நாட்டுக் கல்வி அமைப்பில் பாடத்திட்டத்தின்
நோக்கமும் உள்ளடக்கமும் வேறு. தமிழ் கற்போரின் நோக்கமும் கற்கும் சூழலும் வேறு.
தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேறுபாடுகளுக்குப் பொருந்தும் படி தமிழ்ப் பயிற்சி
அமைய வேண்டிய தேவை இன்று இருக்கிறது. ஒரே நாட்டிலும் பல திறப்பட்ட கற்போரின்
தேவைகளுக்கேற்பத் தமிழ்ப்பயிற்சி அமைவது பொருத்தம். இலக்கிய மாணவன் கற்கும்
தமிழும் பிறதுறை மாணவன் கற்கும் தமிழும் ஒன்றாக இருக்க முடியாது.
முற்காலத்தில் இலக்கியம் படிப்பதன்
நோக்கம் தமிழ் இலக்கிய மரபைத் தெரிந்துகொள்வதும், இலக்கியத்தை அர்த்தப்படுத்தி
நயம் காண்பதும் இலக்கியம் புனைவதும் இலக்கியத்தைக் கற்பிப்பதுமே. இக்காலத்தில்
தமிழைச் சிறப்புப் பாடமாகப் பள்ளிப்படிப்பு முடிந்தபின் கற்பிப்பதற்கு மட்டுமே
பொருந்தும். இலக்கிய உணர்வை மனதில் விதைப்பது ஆகியவற்றோடு மொழியின் அழகியியல்
வெளிப்பாட்டை அறிந்து பயன்படுத்தும் கருத்துப் பரிமாற்ற சாதனமாகவும் அமைய
வேண்டும். பல வகை மொழித் திறன்களில் இதுவும் ஒன்று. கருத்து வெளிப்பாட்டுத் திறனை
வளர்க்கும் வகையில் இலக்கியம் கற்பிக்கப்படவேண்டும்.
தமிழ் கற்பதில் பின்பற்ற வேண்டிய
திறன்கள்:
தமிழ் கற்பதில் பின்பற்ற வேண்டிய
பிறத்திறன்களில் உறவை உருப்படுத்திக்கொள்ளும் உரையாடல் திறன், சொல்லவந்த கருத்தைப்
பிசிறின்றி, வேண்டாத சொல்லின்றி, ஒரு தடவையில் விளங்கும்படி சொல்லும்
பேச்சுத்திறன், எழுதுத்திறன், ஒன்றைக்கேட்டு அல்லது படித்துத் தவறின்றிப்
புரிந்துகொள்ளும் திறன், அறிவார்ந்த விவாதத்திறன், ஆங்கிலத்தில் கேட்டதை,
படித்ததைத் தமிழில் எடுத்துச் சொல்லும், எழுதும் திறன் முதலானவையும் அடங்கும்.
இவைப் போன்ற திறன் தொகை (skill set) ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால், கல்வி, மாணவரின்
கற்கும் நோக்கப்படி பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை விளங்கும்.
இலக்கணத்தைத் தனியே கற்பிக்கத் தேவை
இல்லாமல் போகும். குழந்தைகள் தமிழை இயல்பாகக் கற்றுப் பேசும்பொழுது இலக்கணத்தை
மனப்பாடம் செய்வதில்லை, இலக்கணத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
மாணவர்கள் இம்மாதிரியான முறையையே வகுப்பறையில் மொழி கற்பதற்கும் விரும்புவார்கள்.
மொழியின் அமைப்பை ஆசிரியர் விளக்க இலக்கணம் தேவைப்படும், மாணவர்களின் கற்றல்
பிழைகளை விளக்கித்திருத்த இலக்கணம் உதவும். தமிழை முதல் மொழியாக தாய்மொழியாக
கற்கும் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தை எடுத்துரைக்கும் திறன் வேண்டும். அதற்கு
இலக்கணக் கலைச் சொற்கள் தெரியவேண்டும்.
தமிழ் கற்பிக்கும் சாதனங்கள்
தமிழ் கற்பிக்கும் சாதனங்கள் அச்சுப்
புத்தகங்களோடு நிற்கவில்லை. மணலில் விரலால் நெடுங்கணக்கை எழுதிப் படித்த
காலத்திலிருந்து சிலேட்டுப் பலகைக்குத் தாவியதைப் போல், அச்சிலிருந்து
மென்பொருளுக்குத் தாவுவதற்கு முயற்சிகள் தேவை. மாணவர்கள் தமிழை நண்பர்க ளுடன்
செய்தி பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் புதியத்தொடர்புச் சாதனங்களில் செய்வது
தமிழை மாணவர்களின் வாழ்க்கை யோடு இணைப்பதற்குத் தேவையான ஒன்று. இன்று பாடப்
புத்தகங்களில் உள்ள தமிழ் இதற்குப் பொருந்தாது. மாணவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்கு,
அவர்கள் தமிழைக் கட்டாயத்திற்காக அல்லாமல் விரும்பிக் கற்பதற்கு, செய்ய வேண்டிய
பலவற்றில் பல்லூடக வழி (Multi Media) தமிழைக் கற்பிப்பதும் ஒன்று.
தமிழ் கற்பது ஒற்றையடிப் பாதை அல்ல,
அது பல்வழிச் சாலை. மாணவர்கள் தங்கள் வேகத்தில் பயில வகை செய்வது இப்பொழுது தேவை.
ஆசிரியர் இல்லாமல் தன் முயற்சியில் தமிழைக் கற்க வசதிகளும் தேவை. இதற்கெல்லாம்
துணைசெய்ய இன்று கணினி இருக்கிறது. கரும்பலகை போல், கணினியைக் கற்றுக் கொடுக்கும்
சாதனமாகப் பயன்படுத்தும் திறனைப் பெறுவது தமிழாசிரியர்களுக்கு இன்றியமையாத
தாகிறது. கணினி தரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பாடங்கள் தயாரிக்க
வேண்டும். இதைச் செயல்படுத்த தமிழ் கற்ற கணினி வல்லுநர்களின் கூட்டுறவு தேவை.
முடிவுரை
தமிழ் மொழிக் கற்பதனால் எல்லா வகைத்
தேவைகளுக்கும் தனித்தனிப் பாடப்பொருள்கள் (Pedagogical Materials) தயரிப்பது
சாத்தியம் அல்ல தேவையும் அல்ல. தமிழ் கற்பிக்கும் முறை பலவகைப் பாடப் பொருள்களைப்
பொறுக்கி, அவற்றை வேண்டும் வகையில் இணைத்து மாணவர் களுக்குத் தருவதாக அமைய
வேண்டும். தமிழ் உலக மொழி என்றால் அதை உலகெங்கும் உள்ளவர்கள் கற்கும் வகை செய்ய
வேண்டும். அதைச் செய்யத் தமிழைப் பார்க்கும் பார்வையை ஒரு அரசியல்
சித்தாந்தத்திற்குள் அடக்குவது உதவாது. தமிழை வணங்கும் மொழியாக இருத்தால் வழங்கும்
மொழியாக ஓடவிட வேண்டும். தமிழைக் கொண்டாடும் மொழியாகச் சுருக்காமல் அதைப்
பேசுபவர்களை முன்னே கொண்டுசெல்லும் மொழியாக விரிக்க வேண்டும். இதற்குத் தமிழ்ப்
பாடங்கள் தயாரிப்பது அரசுகளின் அல்லது சில தமிழறிஞர்களின் கட்டுப்பாட்டில்
இருப்பதும் உதவாது. தமிழ்ப் பாடங்கள் உருவாக்குவது திறந்தவெளிப் படைப்பாக (Open
Source), கூட்டு முயற்சியாக மாற்றம் பெறுவது முக்கியமான தேவை. தமிழ்நாட்டு
பல்கலைக்கழகங்களில் இலக்கணம் கற்பிக்கப்படும் முறை எல்லாக் கலை இலக்கியங்களையும்
கற்பிக்கும் முறையும் தான் மாற்றப்பட வேண்டும் தகவல் தொழில்நுட்பத்தால் நெருங்கி
வரும் உலகில் இது சாத்தியம்.
துணைநூல்கள்
1. கழக வெளியீடு.,
1964. தொல், எழுத்ததிகாரம், இளம், உரை, சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம்.
2. கழக வெளியீடு.,
1974 தொல், சொல்லதிகாரம் நச்சினார், உரை, சென்னை, சைவ சித்தாந்த நூற்ப்பதிப்புக்
கழகம்.
3. குழந்தை,
புலவர்., 2011. மாணவர் அடிப்படை இலக்கணம், சாரதா பதிப்பகம், சென்னை.
4. கோதண்டராமன்,
இரா., 2004. தமிழெனப்படுவது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
5. கோதண்டராமன்,
பொன்., 2002. தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதாலம், பூம்பொழில் வெளியீடு, சென்னை.
6. சண்முகம், செ.
வை., 2001. இக்கால எழுத்துத் தமிழ், குமரன் பதிப்பகம், வடபழநி, சென்னை.
7. சிவதம்பி, கா.,
2001. தமிழ் கற்பித்தலில் உன்னதம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
8. சுப்பிரமணியன்,
பா.ரா., 2001. தமிழ் நடைக்கையேடு, மொழி அறக்கட்டளை வெளியீடு, சென்னை.
9. திருமலை, மா,
சு., 1997. மொழி கற்பித்தலும் பாடம் தயாரித்தலும், சென்னை.
10. நுஃமான், எம்.
ஏ., 2000. அடிப்படைத் தமிழிலக்கணம், யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெ கொழும்பு.
11. பரந்தாமனார்,
அ. கி., 1955. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (முதல் பதிப்பு), பாரி நிலையம், சென்னை.
12. பரமசிவம், கு.,
2012. இக்காலத் தமிழ் மரபு தற்காலத்தமிழின் இலக்கணம், அடையாளம், திருச்சி.
வணக்கம். மிக நன்று.
ReplyDelete