Monday, December 28, 2015

தமிழ் இலக்கியத்தில் மனிதமும் மனித உறவுகளும்



முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 028
பேச:098424 95241,98438 74545.

இன்றைய சமூகத்தின் நிலைக்களன்களாக விளங்குவன தமிழ் இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்கள் யாவும் மனிதப் பண்பாட்டைக் காட்சிப்படுத்துவனவாக அமைகின்றன. மனித சமூதாயத்தின் பண்பாட்டுக் கலாச்சாரச் சிந்தனைக் கட்டமைப்பில், தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்குண்டு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இலக்கியங்கள் சமூக இயக்கப் போக்கைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே இன்றுவரை செயல்பட்டு வருகின்றன. மண் புவியியல் சார்ந்த திடப்பொருள் மட்டுமன்று மானுடத்தின் ஆத்மா சார்ந்த உயர்திணைப்பொருள். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் மண்ணே மனிதனுக்குள் நிரம்பி வழிகிறது.  “மண்ணைப் பிசைந்து ஆணை உருவாக்கியவன் இறைவன்” எனச் சமயங்களும் மார்க்கங்களும் மண்ணையே ஆதியாகக் கூறுகின்றன.  “மண்ணிலிருந்து வந்தோம் மண்ணுக்கே செல்கிறோம்” எனப் பஜகோவிந்தம் உரைக்கிறது.  “கிருஷ்ண பரமாத்மா குழந்தைப் பருவத்தில் வாய் நிறைய மண்ணை உண்டு அதில் உலகத்தையே காட்டினார்” எனக் கிருஷ்ணலீலாதரங்கிணி பேசுகிறது.
ஆதி மனிதன் நாகரிக காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையத் தொடங்கிய போதும் மண்ணோடு அவன் கொண்ட உறவையும், இயற்கை மீது அவன் கொண்ட ஈடுபாட்டினையும் விட முடியாமல் வாழ்ந்து வாழ்ந்தான்.  பாண்டங்களை உருவாக்கி மண்ணின் மணத்துடனே உணவினை உண்டான்.  அவன் வணங்கிய நாட்டார் தெய்வங்களுக்குப் பெரிய கோவில் இல்லை.  திருக்குட் முழுக்குகள் இல்லை.  கோபுரங்கள் இல்லை ஆகம விதிகள் இல்லை, அவனைப்போல் அத்தெய்வங்களும் வெகு இயல்பாய் வெட்ட வெளியில் குடியிருந்தன. மண்ணால் செய்யப்பட்ட மண்மாடங்களும் இசக்கியம்மனும், குதிரையோடு அமர்ந்திருந்த அய்யனாரும் அவன் வழிபாட்டுத் தெய்வமாய் மாறினர்.  மண்ணை அவன் உயிரை விட உயர்வாய் மதித்தான்.
நாடு, இனம், மதம், மொழி, நிறம் போன்ற எல்லைகளைக் கடந்து எல்லோரும் ஒத்த உரிமை உடையவர் என்னும் உறவு கொண்டு வாழ்வதே மனித நேயம் எனப்படும். மேநாட்டு தத்துவ இலக்கிய மரபில் “ர்ருஆயுNஐளுயுஆ” என்று இக்கோட்பாடு அழைக்கப்பெறும். மனித நேயத்தை மையக்கருவாகக் கொண்ட எந்நோக்கினையும் “ர்ருஆயுNஐளுயுஆ” எனலாம்.
மனித நேயம் என்ற கோட்பாட்டை மானுடம், மனிதாபிமானம், மனிதம் போன்ற சொற்களால் குறிப்பிடுவர். மனிதனை மனிதன் மதிக்கவேண்டுமானால் முதலில் மற்றவர்கள் பால் அன்பு செலுத்தவேண்டும். எனவேதான்,  அன்பின் வழியது உயிர்நிலை (திருக்குறள்-80) என்றார் வள்ளுவர்.
தமிழரின் வாழ்வியலில் மண், தெய்வநிலையில் வழிபாட்டுக்குரிய பொருளாய் அமைகிறது.  பூமியைத் தாங்குகிற மண்மாதா பூமா தேவியாக வழிபடப்பெறுகிறாள்.  தமிழகக் கிராமங்களில் இன்றும் விவசாயிகள் வயல்பரப்பில் செருப்புக்காலோடு நடப்பதில்லை.  விதைக்கும் போதும் அறுவடையின் போதும் தமக்குச் சோறிடும் நில மக்களுக்குப் படையலிட்டுப் பூசை செய்கிறார்கள்.
மண்ணும் பெண்ணும்
மண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதைத் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகிறது. பெண் சந்ததியைத் தன் கருப்பையில் தாங்கி உருவாக்குகிறாள்.  மண் யாவற்றையும் தாங்கி உணவை உற்பத்தி செய்கிறது.  “போகம்“ எனும் சொல்லை இரு பிரிவிலும் பயன்படுத்துவதைக் காண்கிறோம் கிராமியப் பழமொழிகள் இரண்டினையும் இணைத்தே பார்க்கின்றன.
“மண்ணுக்குப் பூசிப்பாரு, பெண்ணுக்குப் பூட்டிப்பாரு”
“மண்இட மண்இட வீட்டிற்கு அழகு,
பொன்இடப் பொன்இட பெண்ணிற்கு அழகு”
பட்டினத்தாரும் இரண்டையும் ஒப்புமைப்படுத்தியே பார்க்கிறார்.
“பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே”
நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயரை வைத்த தமிழ்ச் சமூகம், நாட்டினைத் தாய்நாடு என வரையறுத்த தமிழ்ச்சமூகம், மண்ணை உயர்திணையாக்கிப் பெண்ணாகப் பார்த்ததைக் காண முடிகிறது.
மண்ணும் மனித உறவுகளும்   
குறுந்தொகையில் கலந்த தன்மை காதலால் கருத்தொருமிக்கின்றனர் அக்காதலர்களே, நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இன்று முதல் நீ வேறா நான் வேறோ? எனக் கலந்த தன்மையைக் குறுந்தொகை செம்மண்ணையும் மழைநீரையும் கொண்டே விளக்குகிறது.
“யாயும் ஞாயும் யாராகியோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல்
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே” (குறுந்தொகை. 40)
இருமணம் கலந்து நறுமணம் வீசும் இனிய சங்கமத்தைக் கூற மண்ணையும் மழையையும் வைத்தே சங்க இலக்கியம் விளக்கியது.


நற்றிணையில் நாணம்
சிறுவயதில் வெண்மணலை அழுத்திப் புன்னை விதையைப் புதைத்து விளையாட, மறந்துபோய் அதை எடுக்காமல் விட, வளர்ந்து புன்னை மரமாய் நின்றது.  நெய்யும் பாலும் விட்டு அதை வளர்த்ததால் “இம்மரம் உன்னை விடச் சிறந்த உன் தமக்கை” என்று கூறி வளர்ந்தனர்.  எனவே தமக்கை அருகில் காதல் பேச வேண்டாம் என்பதை
“விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள், புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும், நும்மொடு நகையே“ (நற்றிணை. 172)
மரத்தை உடன்பிறப்பாகக் கண்ட சமூகம் தமிழ்ச் சமூகம் என நற்றிணை காட்டுகிறது.
திருமந்திரம் உணர்த்தும் பக்திச் சிறப்பு
ஆறு கொண்டு வந்து குவிக்கும் ஆற்று மணலை ஆறு சுமக்காமல் வெள்ளத்தால் கொண்டு செல்லும்.  மேடு பள்ளமாகும்;  பள்ளம் மேடாகும்.  இயல்பாக மணல் செல்வதுபோல், முன்வினைப்படி எல்லாம் நடைபெறும் என்பதைத் திருமந்திரம்
“ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டு என் உள்ளம் பிரியகில் லாவே”  (திருமந்திரம். 2805)
உயிரிய வாழ்வியல் கருத்தைப் புலப்படுத்தத் திருமூலர் மணல் உவமையைக் கையாள்கிறார்.  இயேசுநாதர் மலைப்பொழிவில் மிக எளிய உவமைகளை, உவமைக் கதைகளைக் கையாண்டு மிகச் சுலபமாக வெளிப்படுத்தியதைப் போல இம்மணல் உவமை அமைகிறது.
திருக்குறள் காட்டும் நிலம்
இருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி சாதாரண கதலித் தண்டினை வெட்ட முடியாமல் நாணும்.  முரண் சிலநேரங்களில் வாழ்க்கையாகிறது.  மரம் தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழல் தருகிறது.  அவனது கயிற்றினைத் தாங்கக் கிளைதருகிறது.  தன்னைக் கொல்ல வந்த முத்தநாதனுக்கும் தத்தனை வைத்துப்பாதுகாப்புத் தரச் சொன்ன உயரிய மனிதர்கள் வாழ்ந்த தமிழகத்தில் வள்ளுவர் பொறுமைக்குச் சான்றாக நிலத்தை முன் வைக்கிறார்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”    (குறள். 151)
ஒளவையார் அரசன் உயர வழி சொல்கிறார்.   வரப்பு உயர்ந்தால் யாவும் உயரும் எனப் பொருளாதாரத்திற்கே அடிப்படை நிலம்தான் எனக்கூறும் ஒளவை.
“வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயரக் குடி உயரும்.
குடியுயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்!”
கற்ற கல்வியைப் பற்றிக் கூறிய ஒளவை அதையும் மண்ணுடன் ஒப்பிடுகிறார்.  “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு” என்கிறார்.
சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; பொருளாதாரம் மனிதனின் மதிப்பை நிர்ணயம் செய்வது சமூக அவலமாகும.; மனிதன் சக மனிதனை நேசிக்கப் பழக வேண்டும் என்று சமூகதேவைகளை கவிஞர் தம் கவிதைகளில் அனுபவம் சார்ந்த உணர்வாகப் பதிவு செய்துள்ளார். மேலும், இவரது கவிதைகள் தன்னையும் தன் உணர்வையும் பேசும் தன்வயக் கவிதைகளாக இருக்கின்றன. எனவே இதில் பெருவாரியான இடத்தைப் பிடிப்பது மானுட கலாச்சாரமும் மனித உறவு சார்ந்த மதிப்புச் சிந்தனைகளுமே. ஆக, மனிதனின் மாண்புகளையும், அனைத்து மனிதர்களும் சமமாக நுகர வழிவகுக்கும் மனித உறவு சார்ந்த நேயத்தின் முழுவீச்சையும் இவர் கவிதைகளில் காணமுடிகிறது.
தொகுப்புரை
லாரி லாரியாக மணல் வந்து கொண்டே இருக்கிறது.  நம் இல்லக் கட்டுமானங்களுக்கு, கதவாக, நிலையாக மரங்கள் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன.  தொட்டணைத்து ஊறுகிறது நம் இல்ல போர்வெல் குழிகள்.  நம் நுரையீரலுக்குத் தேவையான மட்டும் ஆக்சிஜனைத் தந்து கொண்டே இருக்கின்றன நம் சுற்றுப்புற மரங்கள்.  நம் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன வயற்காட்டு நெற்பயிர்கள்.  நம் மானத்தை மறைத்துக் கொண்டே இருக்கின்றன.  கரிசல் காட்டு பருத்தி விளைச்சல்கள், அறுபது ஆண்டுகளுக்கு முன் நம் தாத்தா நட்டு வைத்த வேப்பமரத்தின் நிழல் இதமாக இருக்கிறது நமக்கு.  பதிலுக்கு நாம் செய்யும் கைம்மாறு என்ன?  கான்கிரிட் கல்லறைகளில் மண்மாதாவைப் போர்த்தினோம் மரங்களை வெட்டி நிலங்களைப் பாழ்படுத்துகிறோம்.இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு ஏற்பட மாதம் ஒரு மரக்கன்று நட வேண்டும்.

1 comment:

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...