முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-641 035.
பேச : 098438 74545.
பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வது கூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயரவே மாட்டார்களாம்.
புலம்பெயர்தல் விளக்கம்
“ஈழத் தமிழரின் புதியதான புலம் பெயர்வுகளின் வினைவாக முகிழ்ந்து வரும் தமிழ் இலக்கிய வகையைப் “புலம்பெயாந்தோர் இலக்கியம்” என்கிறார் எஸ்.பொ. (எஸ்.பொ, பனிக்குள் நெருப்பு, ப.19) ‘சமூகம்’ என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு அறிஞர்கள் பலவிதமான கருத்துக்களை மொழிந்துள்ளனர். “ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழக்கூடியதாகவும், சுதந்திரமாகத் தானே வளரக்கூடியதாகவும், தனக்கென்று ஒரு பண்பாட்டை உடையதாகவும், தனக்குள்ளே எல்லாச் செயல்களையும் நடத்திக் கொள்கிறதாகவும் அமைந்துள்ள ஒரு மனிதக்குழு. இதுவே மிகப்பெரிய சமூகக் குழுவாகும்” (தா. இராபர்ட் சத்திய சோசப், சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி, ப.219.) என்று சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி, சமூகம் என்பதற்கான வரையறையினைத் தருகிறது. “சமூகம் அனைத்துச் சமூக உறவுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பின்னல் என்னும் பொருளில் கையாளப்படுகிறது. பொதுவாகச் சமூகம் என்பது சமூக உறவுகளின் தொகுப்பு என்ற பொருளைத் தந்தாலும் நடைமுறையில் சமூகவியல் அறிஞர்கள் இப்பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஒரு நிலப்பகுதியில் நிலையாகக் கூடிவாழும் பெருந ;திரளான மக்கள் என்ற பொருளில் சமூகத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது தம்மைப் பேணிக்காத்துக் கொள்வதற்கும், அழியாமல் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக்குழு சமூகம் எனப்படுகிறது” (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.5, ப.588.) என வாழ்வியற் களஞ்சியம் மொழிகிறது.
உறவு
உறவு என்பதற்கு “இகுளை, இனம், உறவி, ஒக்கல், கடும்பு, கயிரை, கிளை, குடும்பம், கூளி, கேள், சுற்றம், தொடர்பு, நட்பு, நண்பு, நள்ளி, பந்தனம், பரிசனம்” (நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.1400.) என நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி மொழிகிறது. பொதுவாக உறவு என்பது மனிதன் குழுவாகச் சேர்ந்து வாழத்தொடங்கிய காலகட்டங்களில் இருந்து உருப்பெறத் தொடங்கின. இவை பெரும்பாலும் ஒருவரையொருவர் நம்பி வாழும் அல்லது உதவி வாழும் மனப்பான்மையைத் தோற்றுவித்தது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. ஒரு சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது.
பழங்காலத்தில் சாதுவன் போன்ற வணிகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்த செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கிப் புலம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் பழந்தமிழகத்தில் யவனர் சோனகர் போன்ற பிறநாட்டினர் வந்து வாழ்க்கை நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட புலம்பெயர் ‘மாக்களைச்’ சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. புகார் நகரில் புகார் நகர மக்களோடும் புலம்பெயர் மாக்கள் “கலந்து இனிது உறைந்ததாகத்” தெரிகிறது.
“அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிராக ஞாபகங்களின் போராட்டம்தான்” என்று செக்கோஸ்லவகிய எழுத்தாளர் மிலன் குண்டேரா குறிப்பிடுகிறார். நினைவுகள் இறக்கும்போது மனிதன் உயிர்ப்பற்ற பிணமாகிவிடுகிறான். நினைவுகள்தான் புலம்பெயரும் மனிதனைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அதிகாரத்துக்கு எதிராக இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் தாய்நாடு கற்பனையானது என்பதுபோலவே புலம்பெயர்ந்த நாடும் அவர்களுக்குக் கற்பனைகளை எதிர்நோக்கியதாகவே இருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் இருத்தல் ஒரு நிலப்பரப்பில் காலூன்றியது அல்ல. ஒரேசமயத்தில் அவர்கள் காலனியாதிக்க இனவெறிக்கும், தமது சொந்த தொலைதூர நாட்டின் மூடநம்பிக்கைகளுக்கும் கொலைகளுக்கும் பெண்அடிமைத் தனத்துக்கும் எதிரானவர்கள். அவர்கள் புகலிட நாட்டிலும் அதிகார அரசியலுக்கு எதிராகவே இருப்பார்கள். தொலைதூரச் சொந்த நாட்டிலும் அவர்கள் அதிகார அரசியலுக்கு விமரிசகர்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்? ஆனால் வந்த நாட்டிலும் விடமுடியாத பழைய நம்பிக்கைகளும், அடிமைத்தனச் செயல்பாடுகளும் வந்தநாட்டின் வக்கிரங்களும் அவர்களை பாதித்து முரண்களை ஏற்படுத்துகின்றன. இந்த முரண்களுக்குள் வாழ்வதாகவே அவர்களது எழுத்துக்கள் அமைகின்றன.
இன்று உலகஅளவில் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் பாதிப்பும் வீச்சும் மிகுதி. இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்தியின் நாவல்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஈரான் நாடு அவருக்குக் கொலைத் தண்டனை விதித்துள்ளது.
இந்திய வம்சாவளியினரில் இன்னொருவர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நைபால். டிரிடினாடில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்பவர். (அவருடைய ‘பெண்ட் இன் தி ரிவர்’ ஆப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளை விளக்கும் நாவல்.)
ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். ஸ்டாலின் காலத்தில் புலம்பெயர்ந்தவர். அமெரிக்காவில் இறந்தார். சுஜாதா பட், குஜராத்தில் பிறந்து பிரிட்டனில் வாழ்பவர். (மங்கீ ஷேடோஸ், ஸ்டிங்கிங் ரோசஸ் போன்ற நூல்களை எழுதியவர்). தஸ்லிமா நஸ்ரீன் பற்றி அறியாதவர் குறைவு. வங்காளதேசத்தில் பிறந்து அகதியாகச் சுற்றிவருபவர். (இவரது முக்கிய நாவல் லஜ்ஜா. )
சியாம் செல்வதுரை, இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர். இவருடைய முக்கியமான நாவல் ஃபன்னி பாய். ஏ. சிவானந்தன், இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்தவர். ரேஸ் அண் கிளாஸ் என்ற இதழை நடத்திவரும் இவரது மிக முக்கியமான நாவல் ‘வென் மெமரி டைஸ்’. கம்யூனி டீஸ் இன் ரெசிஸ்டன்ஸ் என்னும் முக்கியமான நூலையும் எழுதியுள்ளார். ஜீன் அரசநாயகம், இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்கவிஞர்.
உலகில், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமாக, பென் ஆக்ரி, செர்கே பேகஸ், ஏரியல் டாப்மேன், ழான் ஜோர்டன், இல்மஸ் குனே, மிலன் குண்டேரா, வோலே சோயிங்கா, தர்வேஷ் மஹமூத் எனப் பலர் உள்ளனர்.
புலம்பெயர் இலக்கியத்தின் அறிமுகமாகச் சில சான்றுகளை இங்கே காணலாம். சிறுகதைகள், நாவல்கள் பட்டியலையோ, எழுத்தாளர்கள் பெயர்களையோ சொல்வது பெயருதிர்த்தலாகவே அமையும். பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சுவடுகள் என்னும் கவிதைத்தொகுதி இங்கு நினைவுக்கு வருகிறது. நார்வேக்குப் புலம்பெயர்ந்த தம்பா என்பவரின் கவிதை இது. நார்வேயின் நீண்ட இரவு கவிஞரின் அகதி வாழ்க்கைக்கு உவமையாக அமைகிறது.
நாழிகையாகியும் படுக்கைக்குச்
செல்லாத சூரியனும்
குளிர்ந்தும் இருள்போர்வை
போர்த்தாத துருவதேசமும் கண்டுவியந்தேன்
எனது தேசத்தின் துயர்தோய்ந்த
இரவினின்றும் மீண்ட எனக்கு
இங்கு ஒளித்திரளாய்ப்
பகல் மிக நீண்டே தெரிகிறது.
மக்பை என்னும் பறவை இடம்பெயராமல் தன் நாட்டிலேயே வசிக்கக்கூடியது. இது வ. ஐ. ச. ஜெயபாலனுக்கு ஆதரவின்மை, தனிமை இவற்றிற்கான குறியீடு ஆகிறது.
உலகெங்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனிதச் சருகுகளாய்ப் புரள்கின்றோம்
என் நம் தாய்நாடு
ஓயாமல் இலை உதிர்க்கும்
உயிர்ப்பிழந்த முதுமரமா?
இப்படிப்பட்ட கவிதைகளில் அந்தந்த நாட்டுப் புதிய சொற்களும் சொற்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. அந்நியப்பட்ட உணர்வு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அதிகமாக இடம்பெறுவதில் ஆச்சரியமில்லை. ஈழக் கவிஞரும் திறனாய்வாளருமான சிவசேகரத்தின் ஒரு கவிதை (நையாண்டி) இது.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்து
பயன் மிக அறிந்த பனைசெறி நாட்டார்
வழிபல சென்றே பலதிசை பரந்தார்
வருகுவதெந்நாள் அறிவையோ நாராய்...
அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி
அந்நிய மண்ணில் அண்டிக்கிடந்து
மிகநலி மாதர் தம்நகர் மீளும்
வகையென ஒன்றை மொழிவையோ நாராய்...
நாராய் நினக்கோ யாதும் ஊரே
நாராய் நின் இனம் யாவரும் கேளிர்
பாராய் எங்கள் மனிதரின் நிலையை
நாராய் நமக்கோர் நல்வழி கூறாய்...
மைத்ரேயி என்னும் கவிஞர் எழுதும் சுற்றுச்சூழல் கரிசனை மிக்க கவிதை இது:
புற்றரையும் பசுங்காடும்
சலசலத்து நகர்ந்த சிற்றாறும்
கீச்சிட்டுச் சிற
கடித்த புள்ளினமும்
ஊர்வனவும் விலங்கினமும்
காளானென
முளைக்கும்
தொடர்மாடிக் கட்டடங்களில்
காணாமற் போயின.
நிலவும், கறுப்புப் பட்டில்
வெள்ளிக் கோலமிட்ட
நட்சத்திரங்களும்
நகரத்துத் தெருவிளக்கில்
வாங்கு வாங்கு என
விளம்பரிக்கும்
நியோன் விளக்கில்
மறைந்துபோயின.
தொழிற்சாலைக் கழிவில்
வாகனப் புகையில்
விமான செய்திப்
போக்குவரவில்
பஞ்சபூதங்களில் நாலுடன்
தொலைந்தது சூழல்.
நேரடிச் சந்திப்புத் தொலைபேசியிலும்
தொலைபேசித் தொடர்பு இலத்
திரனியற் கடிதத்திலும்
ஓய்வுநேரம் தொலைக்காட்சியிலுமாய்த்
தொலைந்தது உறவும் நட்பும்.
தொடர்புசாதனம் கக்கும் குப்பையில்
மூளை சலவைபெற ரசனை
கரைய
எண்ணியப் படுத்தப்பட்ட
கலை இலக்கியத்தில் கணினி
வரையும் ஓவியத்தில்
இயந்திர மனிதன் செதுக்கும் சிற்பத்தில்
அழகியல் தொலைய
உலகளாவிய இணையவலையூடு
கணினித்
திரையில் மினுங்கும் மாய யதார்த்தத்தில்
நிஜ யதார்த்தம் தொலைய
எஞ்சுமா
மனிதநேயமும் மானிட இருப்பும்?
இன்றைய பிரச்சினைகளை மிக எளிமையாக விளக்கி அழகாக நமது கவலையைக் கேள்வியாக முன்நிறுத்தும் கவிதை இது. புலம்பெயர்ந்த பிறநாட்டுக் கவிதைகளும் இவை போன்று ஒருவகையில் மனஅமைதி இழக்கவே உள்ளன. சான்று ஒன்று.
எங்கேயோ பிறந்தோம்
நான்கு திசைக் காற்றிலும் பரவினோம்
நூறு குழந்தைகள்
நூறு நாவுகளோடு பேசுகின்றன
நாளை நம் நாட்டுக்கு மீளவும் திரும்புவோமாயின்
கண்ணீரின் பொதுமொழியில் பேசுவோமென
நம்பிக்கை கொள்வோம்.
இது வியென் சின் என்ற வியட்நாமியக் கவிஞரின் கவிதை.
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான்.
அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து லாவோஸ{க்குத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். லாவோஸிலிருந்து அவர்கள் ஜெர்மனி செல்லவேண்டும். வேலையும் வாழ்வும் கிடைக்கும் கனவுகளில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
மூன்றாவது காட்சியில் ஜெர்மனியில் இம்மாதிரி மனித ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். லாவோஸிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டுவந்த தமிழர்கள் ஏற்றிய கப்பல் ஒன்று மூழ்கிப்போய்விட்டது. பிணங்கள் கடலில் மிதக்கின்றன. முழுகி இறந்தவர்களப் பற்றி ஒருவன் (சிவா) கவலை தெரிவிக்கிறான். அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த கப்பலைப் பற்றி-வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படுமாறு அவனுடைய நண்பன் அறிவுரை சொல்கிறான்.
சிவாவுக்கு திடீரென்று ஒரு போன் வருகிறது. மாஸ்கோவில் நட்டநடுவீதியில் தெரிந்த ஒரு தமிழ்ப்பெண் இறந்து கிடக்கிறாள். அவனது நண்பன் ஒருவன் அதைத் தெரிவிக்கிறான். கைவிடப்பட்ட பெண்கள் நடுவீதியில் அநாதைப் பிணமாகக் கிடக்கக் கேள்வியுறும்போது மனம் கனக்கிறது.
தங்களுக்குத் தெரிந்த பெண். அவளது சாவை நண்பர்கள்மூலம் ஊரிலுள்ள அவளது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கலாமே என்று சிவா சொல்கிறான். அதை அவன் நண்பன் ஒப்புக்கொள்ளாமல் வேலையைப் பார்க்கச் சொல்கிறான்.
“வியாபாரம் நிற்கவில்லை. மனிதர்கள் மிருகங்கள் பழைய கப்பல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன. அடுத்துவந்த நாட்களில் லாவோசிலிருந்து புறப்பட்ட ஆதிகால உக்ரெய்ன் கப்பல் ஒன்றில் பிள்ளை குட்டிகளுடன் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வண்ணக் கனவு கண்டுகொண்டிருந்தனர். கொழும்பிலிருந்து பலர் லாவோசுக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.”
என்று இக்கதை முடிகிறது. கதையின் தலைப்பு இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். ஈழத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது தொடக்கம் முதல் முடிவு வரை எத்தகைய அவதிக்கு ஆளாகிறார்கள் என்பதை இக்கதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறது. தாய்நாட்டைப் பிரிந்த சோகத்தையும் புலம்பெயர் நாடுகளில் அவர்கள் தேடிச் செல்லும்-கருணைக்கு ஏங்கும்-பிரபஞ்ச மனிதர்கள் குறித்த அவஸ்தையையும் இதில் காணலாம்.
அயல்நாடுகளிலிருந்து நிறையச் சிறுபத்திரிகைகள் தமிழில் வந்தன. நின்று போயின. மறுபடியும் சில வருகின்றன. நம் தமிழின் புலம்பெயர் இலக்கியம் இன்று ஈழத்தமிழ் இலக்கியமாகவே இருக்கிறது. ஈழக்கவிதைகளை நோக்கும் போது, முதல் கட்டம், பழங்கால முதல் மகாகவி ஊடாக நீலவாணன் வரை எனலாம். இரண்டாவது கட்டக் கவிதைகள் சேரன் போன்றோருடைய போர்க் காலகட்டக் கவிதைகளாக அமைந்துவிட்டன. இன்று மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோம். புலம்பெயர் கவிதைக் காலம். இதன் பொருள்விரிவை நோக்கி, எஸ். பொ. அடுத்த நூற்றாண்டுத் தமிழர் இலக்கியம் புகலிடத்தில் மையம் கொள்வதாகக் கூறுகிறார்.
புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை நம் தமிழ்ச் சமூகத்திலும் சில புதிய நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கிறது. முன்பு நமக்கு ஆங்கிலத்தோடும் ஆங்கில வாயிலாகவும் மட்டுமே தொடர்பு. இன்று நமது இலக்கியமும் மொழியும் பல்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களோடும், மொழிகளோடும், இலக்கியப் பாரம்பரியங்களோடும் தொடர்புறுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் புதிய உணர்வுகளையும், அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரைகிறார்கள். மேற் கத்தியச் சமுதாயத்தின் முன்னேற்றம், விநோதம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை போன்றவற்றால் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இன பயங்கரவாதம், புரியாத பண்பாடு, பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், அந்நிய நாட்டில் ஏற்படும் பயம், அங்கலாய்ப்பு, அந்நிய மாதல், சாதி வேற்றுமையை எதிர்கொள்ளல் என்று பொருள்விரிவு நிகழ்கிறது.
இன்று பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் மோதுவது சர்வதேச அரங்கில் ஒரு நியதியாகிவிட்டது. இனங்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றன. மொழிகளும் கலாச்சாரங்களும் கலப்படைவது தவிர்க்க முடியாதிருக்கிறது. உலக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில படைப்புகளையேனும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அளித்திருக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமையே.