Monday, January 11, 2016

நீங்கள் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது...

உதயசங்கர்

எனக்கு முதன்முதலில் எழுத்தாளர் கௌரிஷங்கர் நேரடியாக அறிமுகமானது, 1979-ஆம் ஆண்டு. நாறும்பூநாதன் தலைமையில் நான் சாரதி, மறைந்த நண்பர் முத்துச்சாமி ஆகியோர் நடத்திய மொட்டுக்கள் என்ற கையெழுத்துப்பத்திரிகையை வாசிப்பதற்காக சுற்றுக்கு விட்டிருந்தோம். அந்தக் கையெழுத்துப்பத்திரிகை தான் எங்களுக்கு கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த எழுத்தாளர்கள் வட்டத்தையும், இடது சாரித் தோழர்களையும் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னால் ஓவியர் மாரீஸ் கையெழுத்துப்பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தான். மிக அற்புதமான வடிவமைப்புடன் வந்து கொண்டிருந்தது. தேவதச்சன், கி.ரா. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, பசப்பல் ராஜகோபால், பிரதீபன், என்று எழுத்தாளர் குழாம் அதில் எழுதிக்கொண்டிநிறைந்திருந்தார்கள். அதில் எங்களுக்கு இடமில்லை. அந்தப்பொறாமையினால் தான் நாங்களும் கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம் என்று நினைக்கிறேன். மாரீஸோடு எல்லா எழுத்தாளர்களும் மிக நெருக்கமாக இருப்பார்கள். நாங்கள் தூரத்தில் இருந்து தேவதச்சன், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர்களைப்பற்றி யாரோ எப்படியோ சொல்லி சில மோசமான அபிப்பிராயங்கள் எங்களிடம் இருந்தன. அந்த வயதுக்கேயுரிய மனோநிலையில் லட்சியவாதத்தின் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கியிருந்த நாங்கள் அவர்களைச் சமூகப்பொறுப்பற்றவர்கள் என்றும், கலைகலைக்காக என்ற கொள்கை கொண்டவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு லட்சியக்காதலை மனதில் வரித்துக் கொண்டிருந்த எங்கள் பருவம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட விட்டேற்றியான போக்குகளை  கடுமையாக வெறுக்கச் செய்தது. மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகையில் அவர்களைக் கேலி செய்வதாக நினைத்து போலிக்காதல் என்ற தலைப்பில் எப்போது வேண்டுமானாலும் ஏறி இறங்கிச் செல்லும் டவுண்பஸ் என்கிற மாதிரியான அர்த்தத்தில் துணுக்கு எழுதியிருந்தோம். அது என்ன மாதிரியான விளைவை அவர்களிடம் ஏற்படுத்தும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அந்தப் பத்திரிகை சுற்றுக்குப் போனது. ஒரு நாள் மாலை எங்களை காந்திமைதானத்துக்கு வரச்சொல்லி மாரீஸ் அழைத்திருந்தான். அன்று இரவு ஏழு மணி இருக்கும். காந்திமைதானத்தில் உள்ள விசுவகர்மா ஆரம்பப்பள்ளியின் வாசல் திண்ணையில் தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் முருகன், உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருக்க, நான், நாறும்பூ, சாரதி, முத்துச்சாமி, நான்குபேரும் போய் நின்ற இடத்தில் தெருவிளக்கின் ஒளி சிந்திக்கொண்டிருந்தது. என்னுடைய நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?
அப்போது முதல் குரல் எழுந்தது. “ உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்? மொட்டுக்களாம் மொட்டுக்கள் அப்படியே மொட்டுக்களைக் கசக்கி எறிய வேண்டும். “ என்று முழங்கினார் கௌரிஷங்கர். அதைத் தொடர்ந்து அந்தக்கையெழுத்துப்பத்திரிகையை நார் நாராக கிழித்து எறிந்தார். அப்பாஸும், முருகனும் மாரீஸும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். தேவதச்சனும் ஏதோ சொன்னார். அவ்வளவு விரோதமாக அவர் ஏதும் சொன்னதாக நினைவிலில்லை. பத்து நிமிடங்கள் பொரிந்து தள்ளினார். எனக்கு அழுகையே வந்து விட்டது. எப்போது அந்த இடத்தை விட்டுப் போவோம் என்றிருந்தது. கௌரிஷங்கர் பேசி முடித்த பிறகு சிறு அமைதி. நாங்கள் ஏதோ சொல்லிவிட்டு போய் விட்டோம். அன்று எங்களுடைய மனநிலை மிகப்பரிதாபமாக இருந்தது. எங்களில் நாறும்பூ கொஞ்சம் தைரியமாக இருந்தான் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து எனக்கு கௌரிஷங்கரைக் கண்டால் பயம். பத்தடி தள்ளியே நிற்பேன்.
கோவில்பட்டி வீதிகளில் ஸ்டெப் கட்டிங் வெட்டி தாடி வளர்த்த ஒரு இளைஞன் ஒரு கையில் ரோஜாப்பூவுடன் ஒரு பெண்ணின் பின்னால் போவதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். எப்போதும் கையில் புத்தகத்துடன் சைக்கிளில் எந்தத் தெருவிலிருந்தோ, எந்தச் சாலையிலிருந்தோ திடீரென புகுந்து வருகின்ற ஒரு இளைஞனைப் பார்த்தோம். இரவில் காந்தி மைதானத்தில் ஓங்கிய குரலில் இலக்கிய விவாதம் செய்யும் அந்த இளைஞனின் குரலில் இருந்த நம்பிக்கை, அலட்சியம், தீர்க்கம், அந்த இளைஞனுடைய நடை, உடை, எல்லாம் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எந்த விவாதத்திலும் விட்டுக்கொடுக்காத பிடிவாதமும் ஈவிரக்கமில்லாத விமரிசனமும் தன்னுடைய வாதத்திற்கு ஆதரவாக அவர் சொல்கிற தர்க்கவிவரணைகளும் அவரை மிகப்பெரிய ஆளுமையாக கட்டமைத்தது, கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் அனைவரும் கௌரிஷங்கரைப் பார்த்து கொஞ்சம் அச்சப்பட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். கவிஞர் வித்யாஷங்கர் சொன்னதைப்போல கம்பீரத்தில் கோவில்பட்டி ஜெயகாந்தனாக இருந்தார் கௌரிஷங்கர். புதிய எழுத்தாளர்கள் யாராவது சிக்கி விட்டால் அவரிடம் புதுமைப்பித்தனைப் படித்திருக்கிறாயா என்ற கேள்வியில் தொடங்கி மூச்சு முட்டும் அளவுக்கு கேள்விகளைக் கேட்டு திணறடித்து விடுவார். முதலில் எனக்கு அப்படி பேசுவது வெறுப்பாக இருந்தாலும் பின்னர் இலக்கியத்தை மிகவும் எளிமைப்படுத்துவதற்கு எதிரான, குரலாகப் புரிந்து கொண்டேன். பின்னர் எப்போதோ பேசிக்கொண்டிருக்கும் போது இதையெல்லாம் தாண்டி இலக்கியத்துப்பக்கம் வர்றவன் வரட்டும் என்று சொன்னார்.  
நாங்கள் அறிமுகமாவதற்கு முன்பே 1975-எமர்ஜென்சி காலகட்டத்தில் கோவில்பட்டியில் ஆதர்ஷா என்ற திரைப்படக்கழகத்தை இடதுசாரித்தோழர்களான பால்வண்ணம், ஜவஹர், ஆர்.எஸ். மணி ஆகியோருடன் இணைந்து நடத்தினார். அப்போது சென்னையில் மட்டும் தான் திரைப்படக்கழகம் இருந்தது. ஷியாம் பெனகலின் ஆங்கூர், நிஷாந்த், சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி, ரித்விக் கடக்கின் மேகதாகதாரா, கே.பாலச்சந்தரின் புன்னகை, கிரிஸ் காசரவள்ளியின் சோமனதுடி, போன்ற திரைப்படங்களை தேசியத் திரைப்படக்கழகத்திடம் வாங்கித் தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். அப்போது புனேயிலிருந்து திரைப்படச்சுருள் அடங்கிய இரும்புப்பெட்டி ரயிலில் வரவேண்டும். திரையிட்டபின் மீண்டும் அதை ரயிலில் அனுப்ப வேண்டும். ஓரிரண்டு வருடங்கள் ஆதர்ஷா திரைப்படக்கழகத்தின் செயலாளராக இருந்தார். இந்த அநுபவம் காரணமாகவோ என்னவோ சினிமாவின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. திரைப்படத்துறையில் நுழைவதற்கான முயற்சிகளையும் செய்தார். அத்தகைய முயற்சிகளின் விளைவாகத் தான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தார். பிற்காலத்தில்  தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களான வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரைப் பற்றியும் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் அறிமுகமான பின்னர் உருவான வீதிநாடக இயக்கமான தர்ஷனாவில் அவருடைய பங்களிப்பு அதிகம். வீதி நாடக இயக்கம் என்ற புதிய நாடக இயக்கம் தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்திருந்த காலம். கோவில்பட்டியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், களத்தில் இறங்கினோம். கௌரிஷங்கர், தேவதச்சன், வித்யாஷங்கர், மனோகர், மாரீஸ், திடவை பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, என்று எல்லோரும் பங்கேற்றோம். கௌரிஷங்கர் பல நாடகக்கருக்களை உருவாக்கித் தந்தார். கோவில்பட்டியிலும் சுத்துப்பட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிக்காசோ நூற்றாண்டு விழாவை ஓவியர் அஃக் பரந்தாமன் தலைமையில் நடத்தினோம். அதே போல கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். இவையெல்லாவற்றிலும் அவருடைய பங்களிப்பு அசாதாரணமானது.
 அவருடைய காதல் கவிதைகளைத் தொகுத்து மழை வரும்வரை என்ற புத்தகம் வெளியானது. வித்தியாசமான புகைப்படங்களுடன் வடிவமைப்பில் ஒரு மாபெரும் புரட்சியாகத்தான் அந்தப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. மாரீஸ் அதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டான். அந்த நூலை சென்னையில் கவிஞர் நா.காமராசன் வெளியிட்டார். எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. அதே போல முந்நூறு யானைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.அந்தத் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய எழுத்தாளர்கள் கௌரிஷங்கர் சிறுகதைகளின் வடிவநேர்த்தியை வியந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஒரு சொல் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நேர்த்தி இருந்தது. வேலையில்லாத இளைஞனின் பிரச்னைகள், திருமணமாகாத பெண்களின் ஏக்கம், உதிரித்தொழிலாளிகளின் வாழ்க்கை, என்று அவருடைய கதைகளில் சமூகத்தின் கீழ்மத்தியதர வர்க்கத்து மக்களே நிறைந்திருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய முந்நூறு யானைகள் தொகுப்பைப் பற்றியும் கௌரிஷங்கரைப் பற்றியும் விரிவாக அவருடைய கதாவிலாசத்தில் எழுதியிருப்பார். அவருடைய கதைகளின் வடிவ நேர்த்தி என்னை மிகவும் பாதித்தது. கதைமொழியைப் பற்றி, கதையில் பாரா பிரிப்பதைப் பற்றி, கதையின் முதல்வரி, கதையின் கடைசிவரி, என்று நிறையப் பேசுவார். அவருடைய கதைகளில் ரேஷன் கடை, தலைவாழை, மிச்சம், முந்நூறு யானைகள், ஆகியவை மிக முக்கியமான கதைகளாகத் தோன்றுகின்றன. கவிதைகளில் கூட அந்தக்காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த புவியரசு, கங்கை கொண்டான், இவர்களின் சாயலும், மத்திய தரவர்க்கத்து காதல் ஏக்கம், கிளிஷேக்களுமாக இருந்தன என்று இப்போது தோன்றுகிறது. அவருடைய படைப்புகள் குறித்த விமரிசனங்களை மூர்க்கமாக எதிர்ப்பவர் என்ற வகையில் தன்னுடைய படைப்புகள் குறித்து அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர் கௌரிஷங்கர் என்று சொல்லலாம்.
கூடிப்பேசும் காந்தி மைதானத்தில் பல தடவை அவருடைய படைப்புகள் குறித்தும் விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அநேகமாக அங்கே விவாதங்களுட்படுத்தாத படைப்புகளே இல்லை என்று சொல்லலாம். கௌரிஷங்கருக்கு வருவாய்த்துறையில் வேலை கிடைத்த பிறகு அவருடைய இலக்கிய நாட்டம் மெல்ல மெல்லக்குறைந்து போனது. மிக நீண்ட காலம் வேலையில்லாமல் போராடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ வேலையில் தீவிரப்பிடிப்பும், வருவாய்த்துறைக்கே உரிய குணாதிசயங்களும் அவரிடம் வந்து விட்டன. எனக்கும் வேலை கிடைத்து திருவண்ணாமலை விருத்தாசலம், கொரடாச்சேரி, நெய்வேலி, என்று சுற்றிக் கொண்டிருந்தபோது கோவில்பட்டிக்குச் செல்லும் விடுமுறை நாட்களில் மாரீஸ், சாரதி, சிவசு, பாலு, ரெங்கராஜ், என்ற அளவில் என் பழக்கமும் குறைந்து விட்டது. கோவில்பட்டியில் சுழன்றடித்த கலாச்சாரப்புயல் கரை கடந்து விட்டது என்று கற்பனை செய்து கொண்டேன்.
நீண்ட கால வேலைக்குப்பின் தாசில்தாராக, டெபுடி கலெக்டராக பணி ஓய்வு பெற்ற கௌரிஷங்கருக்கு சமகால இலக்கியத் தொடர்பே இல்லாமல் போனது. அவரும் மீண்டும் அந்தத் தொடர்பை ஏற்படுத்தி விட முனைந்தார். வம்சி பதிப்பகத்திலிருந்து பின் செல்லும் குதிரை என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பும் அன்றில் என்ற தலைப்பில் கவிதைத்தொகுப்பும் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தித்த கௌரிஷங்கரிடம் பழைய கம்பீரம் இல்லை. இலக்கியம் பற்றி பேச்சு வரும்போது கொஞ்சம் தயங்கினார். தன்னுடைய படைப்புகள் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. மீண்டும் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்போதும் அவர் எழுபதுகள், எண்பதுகள் குறித்து பேசும்போது ஆதெண்டிக்காகப் பேசுவார். விவாதங்களில் முனைப்பாகப் பேசுவார். சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். சந்திக்கும் நேரங்களில் மிகுந்த உற்சாகத்தோடும், பாராட்டுகளோடும் என்னிடம் பேசுவார். கௌரிஷங்கரின் ஆக்ரோஷத்துக்கு நேர் எதிரான மென்மையான போக்குடைய கவிஞர் தேவதச்சன் தான் அவருடைய நீண்டகால நண்பர். இருவரும் பல விஷயங்களில் முரண்பாடுடையவர்கள் என்றாலும் தினமும் சந்தித்து அளாவளாவுவார்கள். தேவதச்சனைப் பார்க்க வருகிற கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்களோடு கௌரிஷங்கரும் விவாதிப்பார். சிலசமயம் பழைய ஆவேசமான கௌரிஷங்கரைப் பார்க்க முடியும்.
ஒரு வருடத்துக்கு முன் முதல் நெஞ்சுவலி வந்தபிறகு மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார். நேற்று முன்தினம் 18-12-15 இரவு மறுபடியும் வந்த நெஞ்சுவலியை மரணத்தின் முதல் அழைப்பென அவர் நினைத்துப்பார்க்கவில்லை. ஆங்கில மருத்துவம் படிக்கும் மகனின் சொல்லையும் கேட்கவில்லை. அவருடைய படைப்புகள் மீது அவருக்கிருந்த நம்பிக்கையைப் போல அவருடைய உயிரின் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. நேற்று 19-12-15 காலையிலிருந்து விட்டு விட்டு வந்த வலியையும் பொறுத்துக் கொண்டார். மாலைவரை வலியின் வேகம் கூடி மருத்துவரும் கைவிட்ட சில மணித்துளிகளில் எழுத்தாளர் கௌரிஷங்கர் காலமாகி விட்டார்.
கோவில்பட்டியில் மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் பண்பாட்டுஅசைவுகளுக்கும், கலாச்சாரமேன்மைக்கும் மொழிக்கும், இலக்கியத்துக்கும், பங்களிப்பு செய்தவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி அந்த ஊர் அறிவதில்லை. 70-களிலும், 80,-களிலும் கோவில்பட்டியில் நிகழ்ந்த பண்பாட்டு நிகழ்வுகளின் சூட்சுமமான விளைவுகள் காந்தி மைதானத்திலும், கதிரேசன் கோவில் மலையிலும், புழுதி பறக்கும் கோவில்பட்டி தெருக்களிலும் பரவிக் கிடக்கின்றன. கௌரிஷங்கரும் அப்படியான பங்களிப்பைச் செய்தவர். காலம் மாறியிருக்கலாம். இன்று அவருடைய படைப்புகளுக்கு மிகக்குறைந்த மதிப்பே கிடைக்கலாம். ஆனாலும் என்ன? அவர் இல்லையென்றால் அன்றிருந்த கோவில்பட்டி அன்றிருந்ததைப் போல இருந்திருக்காது.
இன்று காலை தகவல் தெரிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவருடைய இல்லத்துக்குப் போயிருந்தோம்.. மிகக்குறைவான ஆட்கள் அதுவும் உறவினர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். மரணத்தைப் போல குளிர்ந்த அந்த கண்ணாடிப்பெட்டியில் பட்டு வேஷ்டியும் பட்டுச்சட்டையும் அணிந்து கண்களை மூடிக் கிடந்தார் எங்கள் கௌரிஷங்கர்! அவருடைய உதடுகளில் நுரை தள்ளியிருந்தது. வலியை மென்று முழுங்கி வெளியான அந்த நுரை இன்னும் காயவில்லை. நெஞ்சு ஒரு கணம் அதிர்ந்தது. அவருடைய உதடுகளில் இன்னும் அவர் பேசுவதற்காக மிச்சம் வைத்திருக்கும் அந்தத் தர்க்கம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
எங்கள் அன்புக்குரிய ஆசானே போய் வாருங்கள்!

உங்கள் படைப்புகள் எங்களோடு வாழும்! 

நன்றி- உயிரெழுத்து ஜனவரி 2016

கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை...

உதயசங்கர்
பீடிகை

கதையின் தலைப்பைப் படித்தவுடன் இதென்ன கூத்து என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. பொதுவாக எழுத்தாளர்கள் தானே கதாபாத்திரங்களை உருவாக்குவார்கள் இல்லை இல்லை சிருஷ்டிப்பார்கள். அவர்கள் தானே கதாபாத்திரங்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி, அவர்களுடைய வாழ்வில் நிகழும் திடீர் திருப்பங்களைப் பற்றி அவ்வளவு ஏன் அவர்களுடைய பிறப்பும் இறப்பும் கூட எழுத்தாளர்களின் கையில் தானே இருக்கிறது. ஏனெனில் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் இல்லையா? உலக நன்மைக்கும் தீமைக்கும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து பொறுப்பாளிகளாகி விடுவார்கள். இவர்களுடைய கதைகளையோ கவிதைகளையோ படித்துத் தான் உலகம் நல்வழியில் நடப்பதாக ஒரு பிரமை எப்போதும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் தாங்கள் எழுதுவது எல்லாம் சாகாவரம் பெற்ற சரித்திரங்கள் என்ற கற்பனை தாங்கள் எழுதவில்லையென்றால் கிழக்கில் சூரியன் உதிப்பது கூட சந்தேகம் தான் அப்படின்னு ஒரு கெத்து. தங்களுடைய எழுத்துக்களைப் படிப்பதற்காக உலகமே தவம் கிடப்பது மாதிரி கொஞ்சம் தலையைத்தூக்கிக் கொண்டு நடப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு நாள் எழுத முடியாமல் போய்விட்டால் காய்ச்சல் வந்து விடும் இந்த எழுத்தாளர்களுக்கு. இவர்களுடைய கதைகளையோ, கவிதைகளையோ நாவல்களையோ படித்து விட்டு ஒரே ஒரு வாசகர் பேசிவிட்டாலும் போதும் கால்கள் தரையில் தரிக்காது. அப்படியே மேகத்தில் பறப்பார்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவர்களுடைய புத்தகத்தைப் பற்றிய டாக் தான் போய்க் கொண்டிருப்பதாக பீத்துவார்கள். ஒருத்தரும் பேசவில்லையென்றால் நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வருகிற வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று பீலா விடுவார்கள். ஆனால் ஒரு பயலும் படிக்கமாட்டேங்கிறானே என்று இரவில் தண்ணியப்போட்டுட்டு இவர்கள் அழுகிற அழுகை இருக்குதே..!.
இதிலே என்ன பெரிய வேடிக்கை என்றால் முற்றும் துறந்த விசுவாமித்திரமுனிவர்களைப் போல விருது, பரிசுகளைப் பற்றி,ப் பேசுவார்கள். வேறு எழுத்தாளர் யாராவது வாங்கும் போது அவர்களுடைய வயிற்றில் கொழுந்து விட்டு எரிகிற ஜூவாலைகள் தெரிவதை வெளியிலிருந்தே நீங்கள் பார்க்க முடியும். உடனே விருது வாங்கிய எழுத்தாளர் அதை வாங்குவதற்குச் செய்த பின் திரை வேலைகள் என்ன? என்று மகாபாரதக்கதை அளவுக்கான கதைகளை உருவாக்கி மறைவெளியில் உலவ விடுவார்கள். அந்த எழுத்தாளர்களை கடுமையாகத் திட்டக்கூடச் செய்வார்கள். ஏன் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்று பயந்து முன்கூட்டியே இந்த விருதுகளால் என் எழுத்துக்களின் அக்னியை தாங்க முடியுமா? என்றும் இந்த விருதுகளால் என் எழுத்தின் தகுதியை அளக்க முடியுமா? என்றும் மீசை துடிக்க வீராவேசம் பேசவும் செய்வார்கள். இதைக் கேட்கும் வாசகனுக்கு எழுத்தாளனின் கட்டபொம்ம வசனம் புல்லரிக்க வைக்கும் சிலர் நான் விருதுகளுக்காகவோ, பரிசுகளுக்காகவோ எழுதுகிறவன் இல்லை. அப்படி யாராவது விருதோ பரிசோ கொடுத்தால் மறுத்துவிடுவேன் என்றெல்லாம் ச்சீ..ச்சீ இந்தப் பழம் புளிக்கும் நரிக்கதை பேசுவார்கள். இதெல்லாம் விருதுகள், பரிசுகள், இவற்றின் தொகை, பிரபல்யத்தைப் பொறுத்து மாறும். கொஞ்சம் பெரிய தொகை கிடைக்கிறது, இதனால் நம்முடைய மூஞ்சியும் மீடியாவில் தெரியும் என்றால் போதும். உடனே என் எழுத்துகளுக்கு விருது கொடுத்ததின் மூலம் தன்னை அந்த விருது பெருமைப் படுத்திக் கொண்டதாகச் சமாளிப்பார்கள். என்ன ஜகஜ்ஜாலம் காட்டுவார்கள் தெரியுமா இந்த எழுத்தாளர்கள்?
எத்தப்பெரிய தமிழ் எழுத்தாளருக்கும் ஒரு ஆயிரம் பேர் தான் வாசகர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்களின் புகழைப் பொறுத்து அவர்களுடைய புத்தகங்களும் எல்லோர் வீட்டு அலமாரிகளில் இருக்கும். ஆனால் யாரும் படிக்க மாட்டார்கள். படிக்கிறதுக்கு யாரு புத்தகம் வாங்குகிறார்கள். எல்லாம் ஒரு கௌரவத்துக்காகத் தான். இந்த ஆயிரம், ஐநூறு வாசகர்களுக்காகத் தான் எழுத்தாளர்கள் விழுந்து விழுந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதான் தெரியுமே என்கிறீர்கள் இல்லையா?
இதிலே இன்னொரு கொடுமை என்னன்னா இந்த எழுத்தாளர்கள் சூரியனுக்குக் கீழே இருக்கிற அத்தனை விசயங்களைப் பற்றியும் எழுத, விமரிசிக்க, குற்றம் சொல்ல, மறுக்க, உரிமை உண்டு. ஆனால் இவர்களுடைய எழுத்துக்களை நீங்கள் யாரும் விமரிசிக்க, குற்றம் சொல்ல, மறுக்க உரிமை கிடையாது தெரியுமா? அப்படி யாராச்சும் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் தங்களுடைய அத்தனை உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டதாக கூப்பாடு போட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்ல ஒரு எழுத்தாளர் தான் இமயமலை மீது ஏறி தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக அறிக்கை விடுவார். இன்னொருவர் தான் இனிமேல் எழுத மாட்டேன். என் பேனாவை ( அ ) கம்யூட்டரை மூடி வைத்து விட்டேன் என்று முழக்கமிடுவார். மற்றொரு எழுத்தாளர் உலகம் முழுவதும் எழுத்தாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு சர்வதேச எழுத்தாளர்களைப் போராட்டத்துக்கு ஆதரவாக அறைகூவி அழைப்பார். கொஞ்சம் எழுத்தாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். கொஞ்சம் எழுத்தாளர்கள் தெளியத் தெளிய மது அருந்திக் கொண்டேயிருக்கும் போராட்டத்தைத் தொடங்குவார்கள். ஆக இவர்கள் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் பேசலாம்,. ஆனால் இவர்களைப் பற்றி யாரும் பேசப்பொறுக்காத சூராதிசூரர்கள்.
இவ்வளவு கடுமையாக எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற என்னை யார் என்று கேட்கிறீர்கள் ? உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்கிறீர்கள்? என்னுடைய பெயர் தங்கலட்சுமி. நான் என்னுடைய எழுத்தாளரின் படைப்பு. அவர் இந்தப் பெயர் தான் எனக்கு வைத்திருக்கிறார். அவரிடமிருந்தே நான் உருவானேன் அதனால் அவருடைய உள்ளும்புறமும் எனக்குத் தெரியும். அவர் எப்படி சிந்திப்பார், எப்படி பேசுவார், எப்படி சாப்பிடுவார், எப்படி உறங்குவார் எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமல்ல என்னை மாதிரி அவருக்குள் ஒளிந்திருக்கும் நிறைய கதாபாத்திரங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். இப்போது சமாதானமாகிவிட்டதா உங்களுக்கு!
இதோ அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னை உருவாக்குவதற்காக யோசித்து யோசித்து மதிமயங்கி உறங்கிவிட்டார். எப்போது வேண்டுமானாலும் அவர் எழுந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. அப்படி அவர் எழுந்து நான் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டால் அவ்வளவு தான். என்னை ஒரே ஒரு கோடு கிழித்து சாகடித்து விடுவார். எந்தப் படைப்பாளிக்கும் தன்னை மீறி தன்னுடைய படைப்பு பேசுவது பிடிக்காது. அதுவும் எழுத்தாளர்களுக்கு ஈகோ அதிகம். தன்னைத் தவிர உலகத்தில் எழுத்தாளர்களே இல்லையென்றும் தன்னுடைய படைப்புகளைத் தவிர மற்ற படைப்புகள் எல்லாம் குப்பை என்றும் சாதாரணமாகவே சொல்லுவார்கள். அப்படி இருக்கும் போது அவருடைய படைப்பான நான் அவருடைய எழுத்திலிருந்து தாவிக் குதித்து வந்து உங்களிடம் இப்படி குசுகுசு வென பேசினால் என்ன நினைப்பார்? தன்னுடைய கதாபாத்திரம் சோரம் போய்விட்டதாக நினைக்க மாட்டாரா? அதுவும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால் அம்மாடி.. அவ்வளவு தான்..
நேற்று ராத்திரி தான் அவர் என்னைப் பற்றி எழுதத் துணிந்தார். அவருடைய மனைவி கமலத்துடன் சிறு சண்டை. நல்லவேளை அந்த அம்மாள் அவருடைய கதைகளை வாசிப்பதில்லை. அவருடைய கதைகளை மட்டுமல்ல யாருடைய கதைகளையும் வாசிப்பதில்லை. அந்த அம்மாளுக்குக் கதை கட்டுரை எழுதுகிறவர்கள் உதவாக்கரைகள் என்று நினைப்பில் உள்ளவள். ஏதோ என்னுடைய எழுத்தாளர் அரசு உத்தியோகத்தில் இருந்ததினாலேயே கலியாணத்துக்கு சம்மதித்தாகவும், இந்தக் கோட்டிக்காரத்தனத்தையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் தன்னுடைய பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால் என்னுடைய எழுத்தாளர் இருக்கிறாரே வில்லாளகண்டன் விடுவாரா? அந்த அம்மாளிடம் நிதம் டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா.வண்ணதாசன், வண்ணநிலவன் என்று ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் பேசிப் பார்த்தார். அந்த அம்மாளும் கட்டிய பாவத்துக்காக கொஞ்ச நாள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கும் பொறுக்க முடியவில்லை. கொட்டாவி விட்டது. வேலை கிடக்கு என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அவர் பேச ஆரம்பித்ததும் “ ஏங்க கேஸுக்குப் பதியணும்….” ” ஏங்க நாளைக்கி ரேஷன் கடையில துவரம்பருப்பு போடறானாம்… ஞாபகமாக வாங்கணும்..” “ உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா இந்தப்பய ரித்தேஷ்..ஜூவாலஜி நோட்ஸ் கேட்டானே வாங்க வேண்டாமா? “ என்று கேட்க ஆரம்பித்தாள். உடனே நம்ம எழுத்தாளருக்குக் கோபம் வந்து ” நான் எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லிக்கிட்டிருக்கேன்…..நீ இப்படி அல்பமா பேசறியே..” என்று ஏச ஆரம்பிப்பார். அந்த அம்மாளும் ” இந்த அல்பம் இல்லைன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க…. நாங்க என்ன பெரிய இலக்கிய வாதின்னோ… அப்புறம் என்னவோ சொல்லுவீங்களே வாசுகியா வாசகியா…அப்படின்னு சொன்னோமா….அல்பம்னு தெரிஞ்சி தானே கலியாணம் முடிச்சீங்க… ” என்று வாக்குவாதம் செய்வாள். பல்வேறு வகையான சொல்லாயுதங்கள் இரண்டு தரப்பிலிருந்தும் ஏவப்படும். கடைசியில் கமலம் அழுது கொண்டே விருட்டென எழுந்து போய் விடுவாள். உடனே என்னுடைய எழுத்தாளருக்கு சுதி இறங்கி விடும். பேசாமல் இந்த இலக்கியம் சமூகம் புரட்சி இந்தக்கண்றாவியெல்லாம் விட்டுருவோமா என்று விரக்தியடைவார். எல்லாம் ஒரு மணி நேரத்துக்குத் தான். அப்புறம் மறுபடியும் இலக்கிய சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்து விடுவார்.
பாருங்கள்.. என்னுடைய எழுத்தாளர் மெல்ல அசைகிறார். ஒருவேளை அவர் எழுந்து மீண்டும் என்னைப் பற்றி எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார். அந்த நேரத்தில் நான் கதைக்கு வெளியில் இருந்தால் என்னைத் தேட ஆரம்பித்து விடுவார். என்ன இருந்தாலும் நான் அவருடைய படைப்பு தானே. அவருக்கு கஷ்டத்தைக் கொடுக்கலாமா? சரி… நான் போய்ட்டு அவர் வேறு வேலை பார்க்கும்போது உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். சரியா?

எழுத்தாளர் எழுதிய கதை
வேணு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். முருகன் வேணு வாங்கிக் கொடுத்த டீக்காகவும் சிகரெட்டுக்காகவும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். வேணு எழுதப்போகும் கதைகளை உரசிப்பார்க்கும் உரைகல்லாக முருகன் இருந்தான். ஏனெனில் வேணுவுக்கு வேறு நண்பர்கள் கிடையாது. அவன் அவ்வப்போது பேசுகிற மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம் என்று எல்லாவற்றுக்கும் காது கொடுக்கிறவனாக முருகன் இருந்தான். அந்தரங்கத்தில் வேணு மீது ஒரு கிரேஸும் இருந்தது. ஒரு வேளை நாளைப்பின்ன வேணு பெரிய ஆளாகி விட்டால் அவருடைய நண்பர் என்று சொல்வதில் பெருமை தானே.அதனால் அவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று அவனுடைய மனைவி சுனந்தா அவனைச் சீக்கிரமாக வரச்சொல்லியிருந்தாள். கடையில் சில சாமான்களும் வாங்க வேண்டியதிருந்தது. ஆனாலும் வேணு சொல்லி விட்டான்.
“ டேய் முருகா.. இன்னிக்கு ஒரு பெண்ணியக்கதை எழுதலாம்னு இருக்கேன். சொல்றேன் கேளு….எப்படி இருக்குன்னு நீ தான் சொல்லணும்..நீ சொன்னா கரெக்டா இருக்கும்…
முருகனுக்குப் பெருமை தாங்கவில்லை.
அம்மா தங்கலட்சுமியைத் தட்டி எழுப்பினாள்.
” அம்மாடி தங்கம் நீ போய் அந்த அறை வீட்டுக்குள்ள படுத்துக்க...”
என்று பட்டாசலில் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பிச் சொன்னாள். கண்விழித்த தங்க லட்சுமிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. மின்னலென மூளைக்குள் வெளிச்சம் பரவ அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். கலியாண அரவம் ஓய்ந்து விட்டது. விருந்தாளிகள் யாரையும் காணோம். அவளுக்கு உடம்பெல்லாம் அடித்துப் போட்டது மாதிரி அசதி. இருக்காதா பின்னே!
காலையில் மூன்று மணிக்கே தங்கலட்சுமியை எழுப்பிக் குளிக்கச்சொல்லி அலங்காரம் பண்ணி முடித்த போது மணி ஐந்தரை. அதற்குள் பெண் அழைப்புக்கு கார் வந்து விட்டது. ஏற்கனவே இரவில் சரியான தூக்கம் இல்லை. ஆட்கள் நடமாட்டமும் பேச்சுச் சத்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தது. காரில் உட்கார்ந்ததும் வெளிக்காற்று, அவள் சூடியிருந்த பூ மணம், பவுடர், சந்தன வாசனைகள் எல்லாம் சேர்ந்து தங்க லட்சுமியைக் கிறக்கி விட்டது. கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நாச்சியாராச்சியின் மடியில் படுத்து விட்டாள். நாச்சியாராச்சி சிரித்துக் கொண்டே,
“ ஏட்டி கோமு..போனதும் பிள்ளைக்கி சூடா காப்பிய வாங்கிக் கொடு… இப்பமே ஒறங்கி விழுதா பாரு… இப்படியே போனா மாப்பிள்ள தாலி கட்டும்போது இவ அவம் மடியில தான் கிடப்பா பாத்துக்க…”
என்று சொன்னாள். காருக்குள் ஒரே சிரிப்பாணி. அவளும் ஒறக்கச்சடவுடன் புன்னகைத்துக் கொண்டாள். பொழுது விடிய விடிய அவளுக்கும் தெளிச்சி வந்து விட்டது.
கலியாணம் என்றால் சினிமாக்களில் பார்ப்பது போல ஒரு பரவசமான அநுபவம் என்று நினைத்திருந்தாள் தங்க லட்சுமி. ஆனால் கலியாணக்கூட்டம், சத்தக்காடு, எல்லோரும் அவளையே பார்ப்பது போன்றவற்றால் ஒரு பதட்டம் மட்டும் இருந்தது. அதுவும் தாலி கட்டும் போது ஏதோ ஒரு அலை வந்து நெஞ்சில் பொங்கும்.. அது அப்படியே அவளை உணர்ச்சிமயமாக்கும் என்று கற்பனை செய்திருந்தாள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சப்பென்றிருந்தது. கண்களில் ஏற்பட்ட எரிச்சலைத் தான் அவள் முதலில் உணர்ந்தாள். மகிழ்ச்சியும் இல்லை. பயமும் இல்லை. ஒரு வேளை தூக்கமில்லாததால் இருக்கலாம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டாள். மாப்பிள்ளை கண்ணனும் அவளிடம் பெரிய ஆவலைத் தூண்டவில்லை. மாடர்ன் மோஸ்தர் படி நிச்சயத்துக்குப் பிறகு இரண்டு முறை சந்தித்து பேசியிருந்தான். கடிதங்களும் போட்டிருந்தான். தினசரி செல்ஃபோனில் மெசேஜும் அனுப்புவான். எதிலும் காதல் மொழிகள் இல்லை. எல்லாம் அவனைப் பற்றி தான் இருந்தது. பொதுநலம், கட்சி, மார்க்சியம், ஆண்பெண் சம உரிமை, ஈகோ, என்று ஒரு புதிய அகராதியே இருந்தது. அவளுக்குள் முதலில் இதெல்லாம் பயத்தை உருவாக்கியது. என்ன மாதிரியான ஆள் இவன் என்று யோசித்தாள். அவளுக்குத் தெரிந்தது சினிமாவில் பார்த்த கணவன் மனைவியின் ரெடிமேட் வாழ்க்கை தெரியும். அப்புறம் தினசரி ஒருதடவையாவது, “ உன்னக்கட்டிகிட்டு நாஞ்சீரழியுதேன்..” என்று இம்போஷிசன் போட்ட மாதிரி மாறி மாறி ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டே சேர்ந்து வாழ்கிற அவளுடைய அப்பா, அம்மாவைத் தெரியும். சேர்ந்து இருந்து விட்டால் போதும் ஒரே சிரிப்பாணியாய் சிரிக்கிற கனகாக்காவையும் அவளுடைய மாப்பிள்ளையையும் தெரியும். குத்துப்போணி மாதிரி இருந்த காந்திமதியை. தெருவில் தரையில் உருட்டி மிதிக்கும் அவளுடைய புருஷனைத் தெரியும்.. தினமும் அம்பது அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிட்டு போகிற அம்மையப்பன் அண்ணனைத் தெரியும். இப்படி அவளுடைய தெருவில் இருக்கும் பல தினுசுகளை அறிவாள். ஆனால் இது மாதிரியான புது தினுசை அவளுக்குத் தெரியாது. அவளுடைய நெருங்கிய சேக்காளியான சுந்தரியிடம் சொன்ன போது,
“ அட லூசு.. இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்… அவ அவன் பொண்டாட்டியை நாய் மாதிரி சொடக்கு போட்டு கூப்புடுதான்.. அவரு உனக்கு சம உரிமை தாரேங்காரில்ல.. அப்புறம் ஒன் சாம்ராச்சியம் தான்…”
என்று சொன்னதைக் கேட்டபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பயம் தெளிந்தது. தங்கலட்சுமி எழுந்து பாத்ரூமுக்குப் போனாள். போய் விட்டு வந்து முகத்தைக் கழுவி வாயைக் கொப்பளித்து விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். பின்பு அறைவீட்டுக்குள் அவள் நுழைந்தாள். அங்கே புது ஜமுக்காளம் விரித்து புதிய தலையணைகள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஓரத்தில் தாம்பாளத்தில் இரண்டு ஆப்பிள் பழம், கொஞ்சம் திராட்சைப்பழங்களும் லட்டு, மைசூர்பாகு இனிப்பும் இருந்தன. ஒரு தம்ளரில் பால். ஒரு சொம்பில் தண்ணீர். தங்கலட்சுமிக்கு அதையெல்லாம் பார்த்ததும் எதையாவது எடுத்து திங்கலாமா என்று எண்ணம் ஓடியது. அவள் தாம்பாளத்தை நோக்கி கையை நீட்டவும் அறைவீட்டுக் கதவைத் திறந்து கண்ணன் வரவும் சரியாக இருந்தது. கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஜமுக்காளத்தில் உட்கார்ந்தான். அவளுடைய கையைப் பிடித்து அவனுடைய பக்கமாக இழுத்தான்.
“ தங்கம் என்ன உனக்குப் பிடிச்சிருக்கா..”
“ ம் “
அவள் சொல்லி முடிக்குமுன்னர் அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தான். அவளுடைய தலையில் மாட்டிருந்த சடை மாட்டிகள் அழுத்தியது. அவள், “ கொஞ்சம் இருங்க..” என்று சொல்லியபடியே அந்த சடைமாட்டிகளை கழட்டி ஓரமாக வைத்தாள். அவன் அவளுடைய வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தான். அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“ என்ன தங்கம் ஏதாவது சொல்லேன்..”
“ என்ன சொல்ல..”
“ என்னயப்பத்தி என்ன நினைக்கிற..”
என்று சொல்லிக் கொண்டே சேலையை விலக்கி அவளுடைய மார்பில் கை வைத்தான். அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நேற்று வரை அவள் அந்தரங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுடைய உடலை அவன் அவ்வளவு சுலபமாய் ஆக்கிரமிப்பது ஒரு வித அருவெறுப்பைத் தோற்றுவித்தது. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவன் அவளுடைய உதடுகளில் முத்தமிட்டான். அவளும் அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் மீண்டும் அவளுடைய மார்பில் கையை வைத்து பிசைய ஆரம்பித்தான். அவள் மெல்ல அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே,
“ கூச்சமாயிருக்குங்க.. நாளைக்கு..”
“ அதெல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும்..கொஞ்ச நேரத்தில சரியாயிரும்..”
என்று சொல்லிக் கொண்டே அவளுடைய சேலையை உருவினான். அப்போது அவனுடைய கண்களில் இருந்த வெறி பசி கொண்ட ஒரு மிருகத்தின் வெறியைப் போலிருந்தது. அவள் பயந்து போனாள். அவனுடைய கைகள் போன திசையெங்கும் அவளும் தன் கைகளால் தடுக்க முயற்சி செய்தாள். ஆனால் அவளுடைய ஆடை குலைய குலைய அவனுக்கு அருள் வந்த மாதிரி அவளை இறுக்கி அணைத்தான். உடலெங்கும் முத்தமிட்டான். அவளுக்குக் கிளர்ச்சியாக இருந்தாலும் உடம்பு வலி அதிகமாகி விட்டது. அவன் அவளை முழுமையாக ஆக்கிரமிக்கும் போது அவள் பலகீனமாக, “ ப்ளீஸ் இன்னக்கி வேண்டாம்..” என்று சொன்ன வார்த்தைகள் அவனுடைய உதடுகளுக்குள் புதைந்து போனது. அவன் அவளை என்னவெல்லாமோ செய்தான். குழந்தை தன் கையில் கிடைத்த பொம்மையைத் தன்னிஷ்டம் போல வைத்து விளையாடுவதைப் போல அவன் அவளுடைய உடலை கையாண்டான். அவளுக்கு மூச்சுத் திணறியது. வலியும் வேதனையும் கூடி வந்தது. அவனைக் கீழே தள்ளிவிடக்கூட முயற்சித்தாள். முடியவில்லை. அவன் இன்னும் இறுக்கினான். இப்படியே போனால் அழுது விடுவாளோ என்று கூடப் பயந்தாள். கடவுளே எப்போது இது முடியும் என்று நினைத்தாள். திடீரென அவன் அவளுடைய கீழுதட்டையும் மார்பையும் கடித்தபடி விரைப்பானான். அவள் வலி தாங்காமல் லேசாகக் கத்தி விட்டாள். அவன் மெல்ல அவள் மேலிருந்து கீழே சரிந்தான். அவளுக்கு ஒரு பெருஞ்சுமை இறங்கிய விடுதலை உணர்வு தோன்றியது. உடனே உதடுகள், மார்புகள், அடிவயிறு எல்லாம் ரணவேதனை எடுத்தன. கண்களை மூடிப் படுத்துக் கிடந்தவன் மெல்லத் திறந்து அவளைப்பார்த்துச் சிரித்தான். ஒருக்களித்து படுத்துக் கொண்டே அவனுடைய வலது கையை அவளுடைய மார்பில் வைத்தான். தீப்பட்ட மாதிரி இருந்தது. அவனுடைய கைகளைத் தட்டி விட்டாள். அவன்,
“ எம்பிரண்டு முருகேசனுக்கு அந்த இடத்தைக் கண்டு பிடிக்கவே ஒரு மாசமாச்சாம்…” என்று சொல்லி விட்ட அசட்டுத்தனமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தெரிந்த வெற்றிக்களிப்பு அவளை என்ன வோ செய்தது.அவள் எழுந்து சேலை கட்டப் போனாள். அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு
“ இன்னிக்கி ராத்திரி இப்படித்தான்..” என்றான். அவள் ஒருபோதும் அப்படிப் படுத்தவள் கிடையாது.
“ இல்லீங்க… காலையில அம்மா கூப்புடும்போது அவசரம் அவசரமா சேலை கட்ட முடியாது…”
“ அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா? எதுக்காக பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே ரூமுக்குள்ளே அனுப்புறாங்க.. நீ பேசாம இரி…”
என்று சொன்னான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி அவன் தூங்கியதும் எழுந்து கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். அவள் கண்களை மூடியதும் உறங்கியும் விட்டாள். திடீரென அவள் மீது பெரிய பாறாங்கல் விழுந்து அமுக்கிய மாதிரி இருந்தது. மூச்சுத் திணறியது. செத்து விடுவோமோ என்று கூட நினைத்தாள். கைகளால் அந்தப் பாறாங்கல்லைத் தள்ளிவிட முயற்சி செய்தாள். முடியவில்லை. கண்ணீர் வந்து விட்டது. அடிவயிற்றில் வலி அதிகமாகி விட்டது. அவன் மறுபடியும் சரிந்து படுத்து உறங்கி விட்டான். அவளால் அவளுடைய உடம்பையே தொட முடியவில்லை. அப்படி வலித்தது. அந்த வலி வேதனையுடன் மீண்டும் உறக்கத்தின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டாள். மறுபடியும் ஒரு பெரிய திமிங்கிலம் அவளை விழுங்கியது. அவள் அதனுடைய பற்களில் அரைபட்டு சித்ரவதைப்பட்டாள். கண்களைத் திறக்கவேயில்லை.
இது தான் கலியாணமா? இதற்குத் தான் கலியாணமா? இதற்காகவா அம்மாக்கள், அப்பாக்கள், பெண்கள் கவலைப்படுகிறார்கள்.? அப்போது யாரோ எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து அவள் பெயரைச் சொல்லி அழைப்பது போல் இருந்தது. ஆனால் அவள் தானே கிணற்றுக்குள்ளே இருந்தாள். ஏற முடியாத வழுக்குக் கிணறு. எத்தனை முறை ஏற முயற்சித்தாலும் வழுக்கிக் கீழே விழுந்து அடிபட வைக்கும் கிணறு..இப்படியே வாழ்நாள் முழுவதும் அடிபட்டுச் சாக வேண்டியது தானா? அவளை அழைக்கும் குரல் வலுத்தது. இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள். அருகில் வேட்டையாடித் தின்ற களைப்பில் மூச்சு ஏறி இறங்க வாயைத் திறந்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான் கண்ணன். அவளால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. எரிச்சலும் கோபமுமாய்,
“ இரி.. வாரேன்.. காலைலே வந்து உயிர எடுக்கா…”
என்று கத்தினாள். அவள் போட்ட சத்தத்தில் அவன் ஹாங்.. என்று முழித்துப் பார்த்து விட்டுத் திரும்பிப் படுத்தான். அப்போது அவள் அவனைப் பார்த்த பார்வையில் அவ்வளவு வன்மமும் குரோதமும் இருந்தது.
” எப்படி இருக்கு கதை..முருகா..” என்று கேட்டான் வேணு. முருகன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே “ சூப்பர்..” என்றான். வேணுவின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அந்தக்குழைவுடன்
“ சரி முருகா நான் வாரேன்.. வீட்ல ஒய்ஃப் தனியா இருக்காங்க.. நான் சீக்கிரம் போய் சீக்கிரம் தொந்திரவு பண்ணனும்..இன்னக்கி ரெம்ப சந்தோஷமா இருக்கு.. கொண்டாடனும்ல.. “ என்று கண்களைச் சிமிட்டி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் வேணு. முருகனும் சேர்ந்து சிரித்தான்.

ஒரு இடைவெட்டு

ஸ்ஸ்ஸ்.அங்க எங்க பாக்கறீங்க….நாந்தான் தங்கலட்சுமி.. என்னோட எழுத்தாளர் இன்னும் கதையை முடிக்கல. ஒரு பிரேக் விட்டு காப்பி குடிக்கப்போயிருக்காரு. இதுவரை எப்படியிருக்கு கதை. எழுத்தாளர் எழுதிக்கிட்டிருக்கிற கதையை அவருக்கு முன்னாடி அவருடைய கதாபாத்திரமே வாசகருக்குச் சொல்வது இது தான் முதல் தடவை. இந்தக் கதையை எழுத இரண்டு வருசம் ஆயிருக்கு இவருக்கு. எனக்குத் தெரியாதா. உலக சரித்திரமே பெண்ணுடலில் எழுதப்பட்டது தானே. பெண்ணுடலைப் பிரதிகளாக்கி ஆண்கள் சாதனை என்று பீத்திக் கொள்வது தானே நடக்கிறது. என்னுடைய எழுத்தாளர் எழுதியிருப்பதுபோல நான் ஒன்றும் அப்பாவியில்லை. என்னோட கணவனாக எழுதியிருக்கிற கண்ணன் ஒன்றும் மார்க்சியவாதியுமில்லை. ஆனாலும் என்ன? விஞ்ஞானி, பத்திரிகையாளர், அரசியல்வாதி, முதலாளிகள், தொழிலாளிகள், சாமியார்கள், எழுத்தாளர்கள் என்று யாராக இருந்தாலும் சரி பெண்ணை உயிராக பார்ப்பவர்கள் இல்லையே. பெண் என்பவள் ஒரு உடல் என்பதைத் தாண்டி அவர்கள் ஒரு கணமேனும் சிந்தித்திருப்பார்களா? கதைக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். பெண்ணைத் தெய்வமும் ஆக்குவார்கள். அவிழ்த்தும் பார்ப்பார்கள். இது ஆண்களின் உலகம் தானே. அவர்களின் பொய்களாலும், கற்பனைகளாலும் புனைவுகளாலும் உருவாக்கப்பட்ட உலகம் இது. இங்கே அவர்களைத் தவிர யாரும் முக்கியமில்லை. பெண்கள் மட்டுமில்லை, குழந்தைகள் மட்டுமில்லை, காற்று, ஆகாயம், இயற்கை என்று தான் வாழும் இந்தப்பூமியையே ஒரு பெண்ணுடலாகப் பாவித்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள். எல்லா எழுத்தாளர்களின் கதைகளிலும் அவர்கள் இருப்பார்கள். இந்தக் கதையிலும் என்னுடைய எழுத்தாளர் இருக்கிறார். அட அதுக்குள்ளே வந்து விட்டார். சரி நான் ஒரு பிரேக் எடுத்துக்கிறேன்.

மீண்டும் பிரதி

முருகன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே வீட்டிற்கு நடந்தான். காலிங் பெல்லை அழுத்தியதும் கலைந்த முடியும், சோர்வான நடையுடன் வந்த முருகனின் மனைவி சுனந்தா கதவைத் திறந்தாள்.
“ கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா… வயித்துவலி.. இப்பவே வந்துருச்சி.. பீரிய்ட்ஸுக்கு முன்னாடியே இப்படி வலிக்கி… பேசாம கர்ப்பப்பையை வெட்டி எறிஞ்சிரலாமான்னு இருக்கு…..”
அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே கைலிக்கு உடை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளில் எடுத்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டான். அவன் வருவதற்குள் சுனந்தா உறங்கியிருந்தாள். அவன் அவளருகில் போய்ப்படுத்து அவளைத் திருப்பி முத்தமிட்டான்.
“ ஐயா சாமி.. வேண்டாம்.. என்னால முடியாது…” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள். முருகன் அதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவள் உடைகளைக் களையத் தொடங்கினான். அவள் பரிதாபமான ஆட்சேபணைக் குரலில்,
“ கலியாணம் முடிஞ்சன்னக்கிலிருந்து இந்தப் பிடிவாதம் தானே… நானும் ஒரு மனுசப்பிறவின்னு நெனச்சாத்தானே… பொண்ணாப் பொறந்ததே பாவம்…”
சொன்னதையெல்லாம் அவன் சட்டை செய்யவில்லை. அவன் அதற்குள் வெகுதூரம் முன்னேறியிருந்தான்.

தங்கலட்சுமி எழுதும் கதை

மேலே எழுதிய வரியுடன் பேனாவை மூடி வைத்தார் என்னுடைய எழுத்தாளர். கடிகாரம் இரவு இரண்டரை காட்டியது. அப்படியே கால்களை நீட்டி தலையைப் பின்னுக்குச்சாய்த்து சில நொடிகள் கண்களை மூடினார். கைகளை வெட்டி முறித்து சொடுக்கு போட்டார். பின்பு கண்ணாடியைக் கழட்டி மேஜையின் மீது வைத்தார். எனக்கு உண்மையில் என்னுடைய எழுத்தாளரை நினைத்தால் பெருமையாக இருந்தது. எழுத்து எப்பேர்ப்பட்ட வலிமை வாய்ந்தது. ஆனாலும் என்ன எழுத்தாளர்கள் தங்களுக்குத் தேவைப்படுகிற அளவுக்கு வாழ்க்கை எனும் மகாத்திரைச்சீலையில் ஒரு தையல்காரரைப்போல கத்தரித்து தங்களுடைய படைப்பை வாசகர்களுக்குக் கொடுக்கிறார்கள் இல்லையா? ஆனால் அவர்கள் தங்களுடைய படைப்புக்குத் தேவையில்லை என்று கத்தரித்துப் போடும் வாழ்க்கைத்துண்டுகளில் அவர்களால் கைவிடப்பட்ட உண்மைகள் கலைடாஸ்கோப்பைப் போல பலமுகங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கதையில் வருகிற தங்கலட்சுமியோ சுனந்தாவோ பாலுறவே வேண்டாம் என்று வெறுப்பவர்கள் அல்ல. அதன் இன்பத்தை அவர்களும் அநுபவிப்பவர்கள் தான். இனவிருத்திக்கு இயற்கையின் கொடை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால் ஆண்கள் பாலுறவைப் பற்றி மட்டுமே கவலைப்படும் போது பெண்கள் குழந்தைப் பேற்றைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஆக்கிரமிப்பு, வன்முறை, இவற்றைத் தான் வெறுக்கிறார்கள். உயிரற்ற ஒரு பாலுறவுச்சாதனமாக தங்களைக் கருதுவதை அவர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. இந்தக்கதைக்குப் பின்னால் நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி என்னுடைய எழுத்தாளர் எழுதாமல் நான் சொல்ல முடியாது. அது காப்புரிமைப் பிரச்னையாகி விடும். என்றாலும் மற்றவர்களைப் போல என்னுடைய எழுத்தாளர் கிடையாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவர் உறங்கும்வரை அல்லது அடுத்த கதையை யோசிக்கும்வரை அவருடன் இருப்பதற்கான உரிமை எனக்கிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?
இதோ அவர் எழுந்து அறையிலிருந்து வெளியே வந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தார். விடிவிளக்கு வெளிச்சத்தில் அவருடைய மனைவி கமலம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் விடும் மூச்சின் ஒலி சீராக வந்தது. அருகில் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் காலைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். மேஜை மீதிருந்த சொம்பை எடுத்து தண்ணீரைக் குடித்தார் என்னுடைய எழுத்தாளர். பின்னர் அவருடைய மனைவியின் அருகில் சென்று இந்தப்பக்கமாகத் திரும்பிப் படுத்தார் என்னுடைய எழுத்தாளர். ஒரு நிமிடம் கண்களை மூடியவர் என்ன நினைத்தாரோ திரும்பினார். கமலத்தைக் கட்டிப்பிடித்தார். திடீரென தூக்கம் கலைந்த கமலம் அவருடைய கைகளை விலக்கினாள். மீண்டும் அவர் அவள் மீது கைகளைப் போட அவள்,
“ சும்மாருங்க..ரெம்ப டயர்டாருக்கு…..காலைல அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும்..”
என்றாள். அவர் எதுவும் பேசவில்லை. அவளுடைய நைட்டியை மேலே உயர்த்தினார்.
“ என்னக்கி சொன்னதக் கேட்டிருக்கீங்க..”
என்று திரும்பி மல்லாந்து படுத்துக் கொண்டாள். என்னுடைய எழுத்தாளர் அவள் மீது சரிந்த போது கண்களை மூடி உறங்க நினைத்தாள் கமலம். ஆனால் முடியவில்லை. எனக்கும் அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை வாசகரே! நான் பிரதிக்குள்ளேயே இருந்து விடுகிறேன்.
நன்றி புதுவிசை

பின்பும் பெய்தது மழை...


உதயசங்கர்

அவளுடைய ஊரைப்போலில்லை. இங்கே அடிக்கடி மழை பெய்கிறது. அதுவும் அரமில்லாமல் சன்னல் வழியே வரும் பூனையைப் போல. நல்ல வெளிச்சமாக இருக்கிற மாதிரி தெரியும். அப்படியே லேசான நிழலைப் போல மேகங்கள் கூடும். அப்படியே பூவாளியிலிருந்து நீர் சொரிவதைப் போல மழை பொழியும். ஜெயாவுக்கு மழை பிடிக்காது. எரிச்சலாக இருந்தது. எப்போதும் நச நச என்று ஈரம். வீட்டில் எங்கு தொட்டாலும் குளிர் உடலை நடுக்கியது. எப்போதும் சூடாக ஏதாவது குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மழையின் ஒரு துளி பட்டால் போதும் ஜெயாவுக்கு காய்ச்சல் வந்து விடும். எப்போதுமே காய்ச்சல் அவளைப் பாடாய்ப்படுத்திவிடும். ஒரு முறை கோடை மழையின் பத்து பதினைந்து துளிகள் அவளுடைய தலையில் விழுந்து விட்டது. டைபாய்டு காய்ச்சல் வந்து அந்த ஆண்டு முழுப்பரிட்சை எழுத முடிய வில்லை. அப்புறம் டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்து பாசானாள்.

அம்மா இடிமின்னலோடு மழை பெய்யும் போதெல்லாம்

“ இப்படித்தாண்டி ஆசுபத்திரில உன்ன பெத்து வீட்டுக்குத் தூக்கிட்டு வரும் போது பிடிச்சது பாரு ஒரு மழை..பேய் மழை.. எதிரே என்ன இருக்குன்னே தெரியலன்னா பாத்துக்கோயேன்.. ஆட்டோக்காரன் எப்படியோ சமாளிச்சு வண்டியை ஒட்டி வீட்டுக்கு வந்துட்டான். முன் வாசலிலிருந்து வீட்டுக்குள்ள போணூமே…. பச்சைக்குழந்த மழையில நனைஞ்சிரக்கூடாதேன்னு வாசல்யே ஆட்டோவுக்குள் அரை மணி நேரம் காத்திருந்தேன்.. கையில குடை இருந்தும் பிரயோசனமில்லை…. விரிக்க முடியாது.. ஆட்டோக்காரன் புண்ணியவாளன்.. பொறுமையா இருந்தான்.. கொஞ்சம் மழை குறைஞ்சதும் துணியால உன்ன நல்லா சுத்திக்கிட்டு வாசல்ருந்து உள்ள ஓடுறா எங்கம்மா.. அப்ப இடிச்சது பாரு ஒரு இடி.. நான் ஆட்டோவுக்குள்ளேயே வீல்னு கத்திட்டேன்… எப்படி துணியால சுத்தியிருந்தாலும் உன்னோட தலையில் அஞ்சாறு சொட்டு மழை நனைச்சிட்டு… வீட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து அழுத பாரு ஒரு அழுகை..உங்க வீட்டு அழுகை..எங்க வீட்டு அழுகை..இல்லம்மா…காய்ச்சல் வந்து வந்த கையோடு மறுபடியும் ஆசுபத்திக்கு ஓடி யப்பப்பா.. நினைச்சாலே அழுகை அழுகையா வருது… இதில எம்மாமியார் பண்ணுன அழிம்பு.. அவளை அப்படிக் கவனிக்கல.. இப்படிக் கவனிக்கலன்னு…..போதும்டா சாமி நான் பொண்ணாப்பொறந்து புண்ணா போனதுன்னு.. அவ்வளவு வெப்புராளம்….எனக்கு ”

இந்தக் கதையை ஆயிரம் தடவையாவது சொல்லியிருப்பாள் அம்மா. அதனால் அந்த சம்பவமும் வந்த காய்ச்சலும் ஒரு திரைப்படம் போல ஜெயாவின் மனசில் நினைத்தவுடன் ஓட ஆரம்பித்து விடும். அம்மா அவளை மழையில் நனையவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

“ மழையில நனையாதே உனக்குப் பிடிக்காது..காய்ச்சல் வந்துரும்… “ என்ற வார்த்தைகளை மந்திரம் போலச்சொல்லி சொல்லி அது ஜெயாவின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அம்மா சொன்னதினாலோ என்னவோ. அவள் எப்போது மழையில் நனைந்தாலும் காய்ச்சல் வந்து விடும். அதனால் மழையை வெறுத்தாள். மழைக்காலத்தில் எங்காவது வெளியில் போனால் மழை வந்துருமோ மழை வந்துருமோ என்று பயந்தாள். ஆனால் அவளுடைய தங்கை சியாமளா மழையில் குதியாட்டம் போடுவாள். அம்மா என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள். அப்பா அவளை உற்சாகப்படுத்துவார். நல்ல மனநிலையில் இருந்தால் அவரும் கூட மழையில் குளிப்பார். ஜெயாவுக்கு அதைப்பார்க்கப் பார்க்க வெறுப்பாக இருக்கும்.

கௌதம் அலுவலகம் விட்டு வரும் நேரம் ஆகிவிட்டது. அவன் வந்ததும் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு பஜ்ஜி போட வேண்டும் என்று நினைத்திருந்தாள். கௌதமுக்கு உருளைக்கிழங்கில் என்ன பண்டம் செய்தாலும் பிடித்திருந்தது. அதனால் எப்போதும் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்து கொண்டேயிருக்கும். ஜெயாவுக்கு உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வுத் தொந்திரவு வந்து விடும். வயிறு ஏத்தமாதிரி ஊதிக் கொள்ளும். வீட்டில் மாதம் ஒரு தடவையோ இரண்டு தடவையோ அம்மா செய்கிறபோது தொட்டும் தொடாமல் சாப்பிடுவாள். இப்போதும் அப்படித்தான். கௌதமுக்கு நிறைய வைப்பாள். அவள் கொஞ்சமாய் எடுத்துக்கொள்வாள். கௌதம் அவள் மீது அன்பாக இருந்தான் என்று சொல்வது சம்பிரதாயமான வார்த்தை தான். எல்லா ஆண்களும் திருமணமான புதிதில் மனைவி மீது பிரியமாகத்தான் இருப்பார்கள். போகப்போகத்தானே தெரியும். மழையின் தாளம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்தது. அவள் அடுப்படிக்குள் போய் உருளைக்கிழங்கை எடுத்து கழுவி தொலி உரிப்பானால் உருளைக்கிழங்கின் தோலை உரிக்க ஆரம்பித்தாள்.

ஜெயாவுக்கு திருமணம் ஆகி இந்த ஊருக்குத் தனிக்குடித்தனம் வந்தபோது ஊரிலுள்ள எல்லோரும் எப்போதும் ஒரு குடையுடனே திரிவதைப் பார்த்தாள். ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய ஊரில் வெயில் எப்போதும் நூறு டிகிரிக்கு மேல் இருக்கும். ஆனால் குடைகளைப் பார்ப்பது அபூர்வம். அதே போல மழைக்காலத்தில் மட்டுமே மழை பொழியும் வறண்ட ஊர். மழைக்காலத்தில் எப்போதும் இடி மின்னல் என்று மேளதாளங்கள் மட்டுமே ஒரு அரை மணி நேரத்துக்கு கேட்கும். திருமண வீடுகளில் கலியாணத்துக்கு கொட்டுகிற நாதசுர மேளத்தைப் போல. இதோ வந்து விடுவேன் இதோ வந்து விடுவேன் என்கிற மாதிரி மழை மிரட்டிக் கொண்டிருக்கும். சில வேளை அந்த மிரட்டலோடு மழை போய் விடும். சில வேளை மழை கொடூரமான புயலைப் போல அடித்து விளாசும். வெளியில் யாரும் நடமாடக்கூட முடியாது. அந்த அளவுக்கு இடி, மின்னல், மழை, ஊரையே நாசமாக்கி விடும். இடிக்கு ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு பேர் இறந்து போவதும் உண்டு. நிறைய வீடுகளில் தொலைக்காட்சி, மிக்சி, ரேடியோவில் மின்னல் பாய்ந்து வீணாகி விடும். அதனால் லேசாய் இடி இடிக்கும்போதே ஜெயாவின் அம்மா “ டிவியை ஆஃப் பண்ணுங்க.. எல்லா பிளக்கையும் கழட்டிப் போடுங்க.. “ என்று கத்த ஆரம்பித்து விடுவாள். அதற்குக் காரணமும் இருந்தது. ஒருமுறை அயத்து மறந்து மழையின் போது டிவியின் பிளக் இணைப்பில் மாட்டியிருந்தது. அன்று இறங்கிய மின்னல் அவளுடைய வீட்டிற்குள் ஒரு ஒளிப்பந்தைப் போல ஒவ்வொரு மின்சார இணைப்புகளிலும், மின்சார சாதனங்களிலும் மாறி மாறி பறந்தலைந்து ஒரு பெரிய சத்தத்துடன் தொலைக்காட்சிப்பெட்டியில் அடங்கியது. அன்று அவளுடைய வீடு இருந்த ஏரியா முழுவதும் தொலைக்காட்சிப்பெட்டிகள் பழுதாகி விட்டன. அப்போது அம்மா மட்டும் வீட்டிலிருந்திருக்கிறாள். பயந்து அலறி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள். அந்த சம்பவத்தைச் சொல்லும்போதெல்லாம் அவளுடைய கண்களில் மரணபயம் தெரியும். அதைக் கற்பனை செய்யும் போதே ஜெயாவுக்கு உடல் நடுங்கும்.

திரைப்படங்களில் மழைப்பாட்டு வந்தாலே ஜெயாவின் உடல் நனைய ஆரம்பித்து விடும். எப்படித்தான் இப்படி நனையுறாங்களோ என்று கவலைப்படுவாள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிப்பாள். ஆனால் இங்கே பெண்கள் தினசரி தலைக்குக் குளித்து ஈரத்தலையோடு நீர் சொட்டச் சொட்ட அலைந்து திரிவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஜெயாவுக்கு அடுத்தடுத்து தலைக்குக் குளித்தாலே சளிப்பிடித்து காய்ச்சல் வந்து விடும். கௌதமுக்கு இதெல்லாம் தெரியாது. கலியாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது. அவளுக்கு கௌதமின் மீது எந்தப் புகாரும் இல்லை. சில வருத்தங்கள் இருந்தன. திருமணப்பேச்சு துவங்கும்போது பெண் வேலைக்குப் போக வேண்டாம் என்றான். ஜெயாவின் அப்பா எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை. அப்பாவுக்கு பெண்கள் சுயமாக வேலை செய்து சொந்தக்காலில் நிற்க வேண்டும். அப்போது தான் பொருளாதார ரீதியாக ஒருத்தரையே சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று அடிக்கடி ஜெயாவிடமும் சியாமளாவிடமும் சொல்லுவார்.

அவள் பி.இ. முடித்த கையோடு கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி சென்னையில் உள்ள ஒரு எம்.என்.சி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பெசண்ட் நகரிலிருந்த ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலில் தங்கியிருந்து ஓ.எம்.ஆர். ரோட்டில் இருந்த அவளுடைய அலுவலகத்துக்குப் போய் வந்தாள். அங்கே இருக்கும்போது வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்குவதைப் பற்றி, சியாமளாவுக்கு படிப்புச்செலவுக்கு பணம் சேர்ப்பது, அவள் சம்பாத்தியத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் ஒரு நல்ல மூணு பெட்ரூம் கொண்ட வீடு வாங்க வேண்டும். அப்பா ரிட்டையரான பிறகு தன்னுடன் குடும்பத்தை வைத்துக் கொள்ள வேண்டும். திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டியதில்லை. கொஞ்ச நாள் தள்ளிப் போடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் எல்லாம் திடீரென கலைந்து குழம்பி விட்டது. மூன்று மாதம் வேலை பார்த்திருப்பாள் அவ்வளவு தான். திடீரென அப்பா ஊருக்கு வரச்சொன்னார். திருமணப்பேச்சுக்கு முதலில் ஜெயா சம்மதிக்கவில்லை. அதிலும் வேலைக்குப் போகக்கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. “ ஒன் இஷ்டம்டா..” என்று மட்டும் சொன்னார். ஆனால் அம்மா விடவில்லை. அப்படி இப்படிப் பேசி மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக இளக வைத்து விட்டாள். அதோடு மாப்பிள்ளை வீட்டில் ஒரு வருடத்துக்கு அப்புறம் வேலைக்கு வேணும்னா போகட்டும் என்று சொன்னதாக அம்மா சொன்னாள். அது பொய்யோ உண்மையோ.. திருமணத்துக்குப் பிறகு கௌதமிடம் கேட்ட போது “ இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல.. பாப்போம்.. “ என்று பட்டும்படாமலும் சொன்னான்.

அவன் கைநிறைய சம்பளம் வாங்கினான். வேலை பார்க்கும் கம்பெனியிலிருந்து கார் கொடுத்திருந்தார்கள். வீட்டில் எல்லா நவீன சாதனங்களும் இருந்தன. அவன் தினமும் அவளுக்காக சின்னச்சின்ன பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டு வருவான். பொழுது போகாத பகலில் அவள் சீரியல்களைப் பார்ப்பாள். நினைத்த நேரம் உறங்குவாள். வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி வைத்து அழகு பார்ப்பாள். கௌதமுக்காக ஏதாவது புது ரெசிபி செய்து வைப்பாள். இரவு வந்ததும் குளித்து விட்டு வந்து கொஞ்சநேரம் டி.வி.யில் செய்தி பார்ப்பான். எப்போதும் அவனுடைய கவச குண்டலம் மாதிரி லேப்டாப் அவனுடன் இருக்கும். லேப்டாப்பில் ஒரு கண்ணும் டி.வி.யில் ஒரு கண்ணுமாக இருப்பான். அடிக்கடி ” ஜெயா..ஐ ஆம் லக்கி யு நோ… ஐ லவ் யூ ஜெயா..” என்று சொல்வான். முதலில் அதைக் கேட்ட போது கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது. பின்பு பழகி விட்டது. பிடித்தும் விட்டது. அப்படி அவன் சொல்லும்போது அவள் அவனைப்பார்த்துச் சிரிப்பாள்.

” ஒன்னோட சிரிப்பைப் பாக்கும்போது அப்படியே அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கணும் போல இருக்கு..” என்று கௌதம் சொல்வான். ஜெயாவுக்கு வெட்கமும் பெருமையுமாய் இருக்கும். அவள் சாப்பிட்ட பாத்திரங்களை ஒழித்துப் போட்டு விட்டு வரும்வரை அவன் லேப்டாப்பில் ஏதாவது பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் தற்செயலாய் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைக் கடந்து போனபோது லேப்டாப்பில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. அவள் கவனிப்பதைப் பார்த்ததும் லேப்டாப்பை மூடி விடுவான். அவள் எதுவும் கேட்டதில்லை. அவள் சந்தோஷமாக இருப்பதைப் போலத் தான் இருந்தது. இதை விட என்ன வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கொள்வாள். ஒரு வருடம் கழித்து வேலைக்குப் போக வேண்டும் என்ற வைராக்கியம் கூட மெல்ல தன் உறுதியைத் தளர்த்திக் கொண்டது.

தினசரி அம்மாவிடம் பேசும்போது

“ ஊரில மழை பெய்யுதாம்மா..இல்லியா..இங்கே ஒரே மழை..எப்பப்பாரு மழை தான் எரிச்சலா இருக்கு…”

என்று சொல்ல மறப்பதில்லை. மழை இன்னும் விடவில்லை. சன்னல் வழியே வெளியே மழையை வேடிக்கை பார்த்தாள். வானத்திலிருந்து நூல் நூலாக கீழே இறங்கிக் கொண்டிருந்த மழையைப் பார்க்கும்போது அப்படியே அந்த நூல்களைப் பிடித்துக் கொண்டு மேலே போய் மேகங்களை விரட்டி அவளுடைய ஊர்ப்பக்கமாகக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? உடனே காய்ச்சல் வந்துருமே என்று தோன்றியது. அவளுடைய குழந்தையை மழையில் நனைய விடுவாளா? அதுக்கும் காய்ச்சல் வந்தால்? சே.. என்ன யோசனை..ஒருவேளை கௌதம் மாதிரி இருக்கலாமே…ஆனால் கௌதம் மழையில் நனைவானா? அவனுக்குக் காய்ச்சல் வருமா? என்று அவள் கேட்டதில்லையே. ஒரு வேளை அவனுக்கும் மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்றால்…. அவளுடைய யோசனையின் கதவுகளை இழுத்து மூடியபடி மழையினூடாக கௌதம் காரின் ஹாரன் சத்தமும் கேட்டது. இன்று சீக்கிரமே வந்து விட்டான். அவள் வாசல் கதவைத் திறந்தாள். காரின் கதவைத் திறந்து வேகமாக சாத்திய கௌதம் உள்ளே ஓடி வந்தான். கையிலிருந்த லேப்டாப் பேக்கை ஜெயாவிடம் கொடுத்தான். திரும்ப ஓடினான் மழையின் உள்ளே மறைந்து போனான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் கையிலிருந்த அந்த பேக்கை அப்படியே கீழே வைத்து விட்டு கண்களால் அவன் மறைந்த திசையில் துழாவினாள். மங்கலான ஒளிநிழல் போல கௌதம் மழையின் நடுவிலிருந்து அவளை நோக்கி கை ஆட்டி கூப்பிட்டான். அவள் கூர்ந்து பார்த்தாள். அவன் தொப்பலாய் நனைந்து மழையோடு மழையாக கரைந்திருந்தான். அவள் பயந்தாள். அவனுக்குக் காய்ச்சல் வந்து விடுமோ.

திடீரென மழையின் கைகள் அவளைப் பிடித்து இழுத்தன. அவள் வேண்டாமென மறுத்து தலையாட்டுவதற்குள் மழை அவள் மீது இறங்கியது. மென்மையாக ஒரு பட்டுத்துணியால் போர்த்துவதைப் போல மழை அவளைப் போர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் உடலின் ரோமக்கால்கள் புளகாங்கிதமடைந்தன. மார்பு விம்மியது. ஒரு கதகதப்பு உடலெங்கும் பரவியது. மேலே நிமிர்ந்து பார்த்தாள். வெள்ளையாய் ஒரு ஒளிப்படலம் தெரிந்தது. வாயைத் திறந்து மழையை விழுங்கினாள். அதன் ஒவ்வொரு துளியையும் அவளுடைய உடலின் உள்ளுறுப்புகள் ருசித்தன. அந்த ருசியின் ஒளியில் காய்ச்சல் பயமோ அம்மாவின் எச்சரிக்கையோ புகையாய் மறைந்து விட்டன. அவள் முன்னால் உயிரின் துள்ளல் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியிலும் ஒரு உயிர் ஜனனம் ஆகிக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். அவளை தொப்பலாய் நனைத்த மழை அவள் அடைகாத்த கனவுகளுக்கும் உயிர் கொடுத்தது. அவள் மழையில் கைகளை வீசி தட்டாமாலை சுற்றி குதித்தாள். மழை அவளை வாங்கிக் கொண்டது. அவளும் மழையை வாங்கிக் கொண்டாள்.

வீட்டு வராந்தாவிலிருந்து கௌதம் கைகளை ஆட்டி ஜெயாவை அழைத்துக் கொண்டிருந்தான்.

“ போதும் உள்ளே வா ஜெயா… காய்ச்சல் வந்துரும்… “

என்று கத்திய சத்தத்துணுக்குகளை மழை விழுங்கி விட்டது. அவள் அவனை மழையின் வழியே வெறுமனே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகளின் நேரடித்தன்மை...





 - வா.மணிகண்டன்


 கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவையும் முன்வைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கும் போது எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்வினை கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவை முன்வைக்கப்படுவதைப் போலவே பிற இலக்கிய வடிவங்களிலும்(சிறுகதை,புதினம்) அவற்றிற்கு சம்பந்தமில்லாத வடிவங்களில் குப்பைகள் நிறைவது நிகழ்கின்றதுஎன்பது. இந்தக் கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் பிற இலக்கிய வடிவங்களைப் பற்றி பேசுவதற்கான திறனும் பயிற்சியும் இல்லாததால் அவற்றைப் பற்றி நான் விவாதிப்பதில்லை. அதே சமயம், கவிதையின் மீதான பிரியத்தினால் கவிதைகளில் நிரம்பும் குப்பைகளைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை.

கவிதைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம் என்றெல்லாம் வகைப்படுத்தி விடமுடியும். ஆனால் ரசனையின் அடிப்படையில் கவிதைக்கு துல்லியமான வரைகோடுகளை வரைவது அசாத்தியமானது. ரசனை,கவிஞனையும் வாசகனையும் கவிதையியல் கோட்பாடுகளைத் தாண்டி - கவிதையில் அவர்கள் பெறும் அனுபவத்தின் ரீதியாக இணைக்கிறது.எனவே கவிஞனுக்கும், கவிதையின் வாசகனுக்கும் கோட்பாடுகள் பற்றிய எந்த அக்கறையும் தேவையில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

கோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்படும் கவிதை பத்தாம் வகுப்பு மாணவன் வானவியல் கேள்விகளுக்கு பதில் எழுதுவதைப் போல அனுபவ வறட்சியோடு அமைந்துவிடலாம். அதேபோல கோட்பாடுகளின் அடிப்படையில் கவிதையை நெருங்கும் வாசகன் கவிதையில் இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடலாம். இதனை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான், இவர்கள் கவிதையியல் கோட்பாடுகள் பற்றி வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிறேன். ஆனால் கவிதையியலில் கோட்பாடுகளே அவசியம் இல்லை என்பதல்ல எனது நிலைப்பாடு.

கவிஞன்விதிகள் அல்லது கோட்பாடுகள்பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி தனது கவிதையை எழுதி விடுகிறான். வாசகனால் கவிதை வாசிக்கப்படும் கணத்தில் கவிஞன் அக்கவிதையிலிருந்து வெளியேறிவிடுகிறான். கவிதைக்கும் வாசகனுக்குமான பிணைப்பு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறும் இந்தப் புள்ளியில்தான் உருவாகிறது. கவிஞன் வெளியேறிய பின்பு, கவிதையை வகைமைப்படுத்துதலை கோட்பாட்டாளர்கள் செய்வார்கள். இந்த வகைமைப்படுத்துவதில் கவிஞனுக்கோ, ரசனை அடிப்படையிலான கவிதை வாசகனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், கவிதை தனது அடுத்த தளத்தை நோக்கி நகர்வதற்கான விவாதத்தை தொடங்க கோட்பாடுகள் உதவுகின்றன என நம்புகிறேன். இதுவே கவிதை வாசகனாக கோட்பாடுகள் பற்றி நான் கொண்டிருக்கும் மதிப்பீடு.

கவிதையியல் கோட்பாடுகள் பற்றிய அக்கறை கவிஞனுக்கு தேவையில்லை என்று சொல்லும் போது கவிதையின் வடிவம் பற்றிய வினா எழுகிறது. கவிஞனுக்கு கோட்பாடுகளைப் பற்றிய கவனம் தேவையில்லையென்றாலும், கவிதையின் வடிவம் பற்றிய சிந்தனை அவசியமாகப் படுகிறது. இந்த வடிவம் என்பது ஹைக்கூ, லிமெரிக் போன்று வரையறுக்கப்பட்டவடிவம் இல்லை- சொற்களையும், வரிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தி கவிதையின் வடிவத்தை மாற்றியமைத்தல்.

கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்.

கவிதையின் வடிவம் பற்றி பேசுவதற்கு செல்வராஜ் ஜெகதீசனின் இந்த ஒரு கவிதை உதவக் கூடும்.

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

சிற்சில துரோகங்கள்என ஒரே வரியில் இருப்பதற்கும் சிற்சில/துரோகங்கள்என்பதற்கும் இருக்கும் வேறுபாடு நுட்பமானது. ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு வரும் போது கிடைக்கும் இடைவெளியில் உள்ள வெறுமை அல்லது மெளனம் அந்தக் காட்சியை அழுத்தமாக்குகிறது. இந்த மெளனத்தை வெற்றிடம் என்றும் பொருட்படுத்தலாம்.

சிரிப்போடு விலகிய காதல்என்பதைவிடவும்சிரிப்போடு விலகிய ஒரு காதல்என்பது வேறு பொருளைத் தருகிறது. அனைத்துக் காதல்களும் சிரிப்போடு விலகுவதில்லை. இந்த ஒரு காதல் மட்டும்தான் சிரிப்போடு விலகியது என்பதை ஒருஎன்ற சொல் சுட்டுகிறது.

எதுவும் அதுவாய்/கடந்து போனதில்லை’ - நம் வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்பான நிகழ்வுகளுக்கு முரணான வரி இது.

நேரம், மகிழ்ச்சி, தோல்வி,அழுகை என்ற எல்லாமும் அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரி சற்று யோசிக்க வைக்கிறது. சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை. எதுவும் சில காலம்என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நிதர்சனம் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல் வெட்டுவதைப் போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சில துரோகங்களை மிகுந்த பிரையாசைப்பட்டே மறக்கிறோம் அல்லது மறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். ஜெகதீசனுக்கு கதை சொல்லும் பாட்டியின் மரணத்தை மறக்க முடியவில்லை என்றால் இன்னொருவருக்கு முதன் முதலாய் பாலியல் கதைகளைச் சொன்ன பக்கத்துவீட்டு லலிதா அக்கா தூக்கிலிட்டுக் கொண்டதை மறக்க முடியாமல் இருக்கலாம். கவிதை சொல்லிக்கு நண்பனின் நயவஞ்சகம் பதிந்து இருப்பதைப் போல இன்னொருவருக்கு வேறு ஏதேனும் நினைவில் இருந்து அழிக்கமுடியாததாக இருக்கலாம்.

கவிதை வாசித்தல் செய்தி வாசித்தலும் இல்லை, கவிதை என்பது வரிகளை மடக்கிப் போட்டு ஒரே வரியை இரண்டு முறை வாசிப்பதுமில்லை என்பதால் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானதாகிறது. தேவையற்ற சொற்களை தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டிவிடுவதும், பொருத்தமான சொல் கிடைக்காத போது கவிஞன் அந்தச்சொல்லுக்காக காத்திருத்தலும் பயனுடையதாகவே இருக்கிறது.

இந்த கச்சிதம்மேற்சொன்ன கவிதையில் சரியாக வந்திருப்பதாகப் படுகிறது.

கவிஞன் இந்த நகரத்தின் தூசி அடர்ந்த தெருக்களிலும், நகரத்தின் அரிதாரத்தை மிக வேகமாக பூசிக் கொண்டிருக்கும் கிராமங்களின் மரங்களுக்க்கு அடியிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதன். தன் சாதாரண அனுபவங்களை சாதாரண காட்சிகளாக கவிதையில் பதிவு செய்தும் கவிஞன் வெற்றி பெறுகிறான் அல்லது சாதாரணக் காட்சிகளை பூடகமான காட்சிகளாக கவிதையாக்கியும் வெற்றியடைகிறான். ஆனால் பதிவு செய்யப்படும் அந்த அனுபவத்தின் செறிவுதான் கவிதையின் இடத்தை நிர்மாணிக்கிறது.

கவிஞன் துருத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் வலிமையிழந்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். கவிதை முடியும் புள்ளியில் கவிஞன் கவிதையிலிருந்து உதிர்ந்து விட வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து கவிதையின் முழு உரிமையும் வாசகனுக்குத்தான். கவிஞன் விடாமல் தொற்றிக் கொண்டிருந்தால் அந்தக் கவிதையை வாசகன் உதிர்த்துவிடுவான். செல்வராஜ் ஜெகதீசனின் பின்வரும் கவிதை அந்த ரகம் தான்.


இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்

குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.

மிக நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையில், கவிதையின் முக்கிய பாத்திரமான எழுபது வயதுக் கிழவியின் மீதாக குவிய வேண்டிய வாசக கவனத்தை தனது இரண்டாயிரம் ரூபாய் மீதான ஷூவின் மீது நிறுத்திவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தன்னை கவிஞனின் இடத்தில் நிறுத்தி அந்தக் கிழவியைப் பற்றி யோசிப்பதற்கான இடத்தை கவிதையில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதையின் வாசகன் கிழவியை மறந்து கவிஞன் என்ன நினைக்கிறான் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறான். இதனை இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதையில் உருவாக்கிய காட்சியில் கவிஞன் நின்று கொண்டிருக்கிறார். தான் எடுக்கும் நிழற்படங்களில் தானும் இருக்க வேண்டும் என்று கேமராக்காரன் விரும்புவது எத்தனை அபத்தமாக அமைந்துவிடுமோ அதேபோலத்தான் கவிதைகளில் கவிஞன் நின்றுவிடுவதும்.

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

கவிதை எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்பவர்கள் நேரடியான கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். கவிதையில் நேரடித்தன்மையும் பூடகமும் சம அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். நேரடிக் காட்சிகளை கவிதையாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கவிதைக் காட்சி வாசகனுள் என்ன தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் காட்சியை மட்டும் பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. ஜெகதீசன் நேரடிக் கவிதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வெறும் சொல்லாடல்களாக்கி பல கவிதைகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு.

இந்தக் கவிதை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. இடம்,காலம் என்ற எந்தக் குறிப்புகளும் இல்லாத இந்த எளிமையான கவிதையில் ஒருவன்/ஒருத்தி இருக்கையை விட்டு எழுந்து சென்றிருக்கிறான்/ள். அந்தச் சூட்டை கவிதை சொல்லி உணர்கிறான். இதுதான் காட்சி.



வெறும் பேருந்து/தொடர்வண்டிப்பயணமாக மட்டுமே இந்தக் கவிதை இருக்க வேண்டியதில்லை. ஒரு தோல்வியடைந்த காதல் கவிதையாக நான் வாசிக்கிறேன்.

நின்று சலித்த/நீள் பயணமொன்றில்- சலிப்படைந்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில்
மென்று விழுங்கிய/பார்வையோடு நீ - பிரிவின் துக்கத்தோடு நீ பிரிந்து சென்றாய்
விட்டுச் சென்ற/இருக்கையில்/இன்னமும்/உன் சூடு - உன் நினைவுகள் எனக்குள்ளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு நேரடிக் காட்சியை இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று பல்வேறு கோணங்களில் கவிதையை அணுகுவது நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என்றாலும் வாசகன் தனது மனதுக்கு நெருக்கமான அனுபவத்தோடு கவிதையை அணுகுவதே மிகச் சிறந்த கவிதானுபவமாக அமைகிறது.

செல்வராஜ் ஜெகதீசன் தனது கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை தொகுப்பாக வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார். தனது முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து எண்பத்தாறு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தார். மூன்று ஆண்டுகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞர்- இத்தனை அவசரமாக தொகை நூலினை கொண்டுவருவதில் எனக்கு ஒப்புதலில்லை. இன்னும் தன் கவிதைகளை மேம்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் கவிஞன் சற்று பொறுத்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

அதே சமயம் தனது கவிதை சார்ந்து செல்வராஜ் ஜெகதீசன் இயங்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் தனது கவிதைகளை தொடர்ந்து பிரசுரிக்கச் செய்கிறார். கவிதை தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை. ஒருவனை சமயங்களில் உச்சபட்ச வேகத்துடன் வைத்திருக்கும் கவிதை அவனை இன்னொரு கணத்தில் மந்தமானவனாக்கிவிடுகிறது. ஆனால் ஜெகதீசனை கவிதை வேகத்துடனயே வைத்திருக்கிறது. இந்த வேகத்துடன் இன்னமும் செறிவான கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...