Friday, January 01, 2016

கலித்தொகை காட்டும் மகளிரின் வீரச்செயல்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
   
 சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலத்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம். ஆரோக்கியசாமி குறிப்பிடுவார்.
விளையாட்டு
     அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் +க்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகயைக் கோர்த்தும் விளையாடினார். என்று மருதகலி மூலம் அறியமுடிகிறது. “மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்” ( 82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மைச் செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக்கொய்குழை அகை காஞ்சித் துறை அணிஎன்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல் கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.
     இனமீன் இகன்மாற வென்ற சினமீன்
     உறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த
     நெய்தல் நெடுநார்ப் பிணித்;து யாத்துக் கையுளர்வின்
     யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்
     தாழாது உறைக்கும் மடமலர்த் தண்தாழை
     வீழ்ஊசல் தூங்கப் பெறின்
     மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்
     கடைஇயான் இகுப்ப நீஊங்காய் தடமென்தோள்
     நீத்தான் திறங்கள் பகர்ந்து (131, 6-14)
பழக்க வழக்கம்
     பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகத் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமுகம் சார்ந்த ஒன்று.
     பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமுகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்ப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில்முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லைஎன்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்க வழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.
     ஆய்மகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்ககும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர் தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவதாச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊருகாயாக் கூட்டி நுகர்வர் தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்புது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவை களைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர் சேம்;பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர் இவ்வள்ளைப் பாட்டு முரகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகும். அமையும். திருமணம் கைக்கூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர்.
இதனை
          சாரந்த மரத்தின் இயன்ற உலகைக்கையால்
     ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்
     ஐயனை ஏத்துவாம் போல” (43.5-7) என்றும்
         நிலை உயர் கடவுட்குக் கடம்ப+ண்டு, தன்மாட்டுப்
     பலசூலும் மனத்தோடு பைதலேன் யான்” (46.15-17)
என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.
திருமணம்
     அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவனை வீரம் உடையனவாகவும், அஞ்சா நெஞ்சினனாகவும் இருக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர்.  மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்தில்லை. இக்கருத்தினை
         நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
     காரிகதன் அஞசான் பாய்ந்த பொதுவற்கே
     ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (104, 73-76)
என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.
நம்பிக்கை
     நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உயர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமைகளைக்குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையளே, இக்கருத்தினைவான்தரும் கற்பின் மனையுறை மகளிர்என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.
          அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.
     வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
     யாக்கை பொறுத்த நிலம்” (குறள். 23-9) என்பார்.
அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது. கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.
          வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா
     கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்
     அல்ல புரிந்தொழுக லான்” (36. 12-14)
     மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,
       வாங்கமை மென்தோள் குறமட மகளிர்
     தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெலால் தம்மையரும்
     தாம்பிழையார் தாம்தொடுத்த கோல
என்னும் பாடலடிகளால் புலனாகிறது.
முடிவுகள்
    கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை  வைத்தும் +க்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில், சுறாவின் எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர்.  மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினார்கள,; என்று தெரிய வருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...