Wednesday, January 25, 2017

தெருக்கூத்து...



 
தெருக்களின் ஓரங்களில் களம் அமைத்துக் கொண்டதால் இக்கலை தெருக்கூத்து எனப் பெயர் பெறலாயிற்று. தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய கலைவடிவம் இது. அறுவடைக்குப் பின்பும், கோயில் விழாக்களிலும் இவ்வகைத் தெருக்கூத்து நடத்தப் பெறுகிறது.

மேடை
மேடை வீதிகளிலும், நாற்சந்திகளிலும், கோயில்களுக்கு அருகிலும் தெருக்கூத்து     மேடை அமைக்கப்படுகிறது. தெருக்கூத்துக்கு, பொதுவாகத் திறந்தவெளி இடங்களை     ஒட்டியே     மேடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப் பெறுகிறது.     தென்னை     ஓலைகளால் வேயப்பெற்ற     சிறிய     மேடையில்                தெருக்கூத்து நிகழ்த்தப் பெறுகிறது. நடிகர்கள் வருவதற்கு முன்பு வெள்ளைத்துணி ஒன்று மேடையை மறைத்தபடி பிடிக்கப் பெற்றிருக்கும். நடிகர் வந்து அதன் பின்புறம் நின்றதும் திரை அகற்றப்படும்.

ஒளியமைப்பு   
தெருக்கூத்து     மேடையில்     தொடக்க காலத்தில் ஒளியமைப்புக்காகத்தீவட்டிகள்பயன்படுத்தப் பெற்றன.
அக்காலக்கட்டத்தில் மின்சார விளக்குகள் அறியப்படாமல் இருந்தது. காலமாற்றத்துக்கேற்ப, கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.     தற்போது சில இடங்களில் மின் விளக்குகளும் கூடப் பயன்படுத்தப்படும் நிலையைக் காணலாம்.

ஒலியமைப்பு
     தெருக்கூத்தில் நடிகர்கள் ஆடியும் பாடியும் நடிப்பது வழக்கம். பொதுவாக ஒலிபெருக்கி போன்றவை தெருக்கூத்து மேடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஓங்கிய குரலில் பாடியும், குதித்தும் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அப்படியே வாங்கிக் கொள்வதையே மக்கள் விரும்புகின்றனர். எனினும் நவீனம் என்ற பெயரில் ஒலிபெருக்கிகளும் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இசை
     தெருக்கூத்தில் இசை முக்கியமான கூறாக விளங்குகிறது. மிருதங்கம், டோலக், ஜால்ரா, புல்லாங்குழல், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகள்     பெரும்பாலும் பயன்படுத்தப் பெறுகின்றன. இவைகள்பக்க வாத்தியங்கள்” எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

இசைக்குழு மேடையின் பின்பக்கம் திரையை ஒட்டி, பார்வையாளர்களைப் பார்த்து அமர்ந்திருக்கும். இசையின் ஒலிப்பு ஓங்கிக் கேட்கும் வண்ணம் இசைக்கப்படும். இதனால் பாட்டும், தாளமும் சேர்ந்து அமைவதில்லை. தாளத்தின் ஓசையும், கருவிகளின் ஒலியும் பாட்டை அமுக்கி விடுகின்றன.

ஒப்பனை
     எந்தவொரு நடத்து கலைக்கும் ஒப்பனை (make-up) மிகவும் முக்கியமானதாகும்.     பாத்திரங்களை     வேறுபடுத்தவும், பொலிவுபெறச்     செய்யவும்     ஒப்பனை     உதவுகிறது. தெருக்கூத்துக்கான ஒப்பனை தனித்துவம் வாய்ந்தது ஆகும்.
                வேடத்துக்கேற்ற முக ஒப்பனை தெருக்கூத்தில் குறைந்தே காணப்படுகிறது. பொருளாதார வசதியின்மையே இதற்கான முக்கிய காரணமாகும். முகத்தில் பூசப்படும் அரிதாரம், கரிப்பொடி, காக்காப்பொன் போன்றன தாங்களாகவே தயாரித்துக் கொள்ளும் ஒப்பனைப்     பொருள்களாகும்.

                ஆடைகள் மிகவும்     கவர்ச்சிகரமாக வடிவமைக்கப் பெறுகின்றன. வெல்வெட்டு, பொன், வெள்ளிச்சரிகை, பட்டு போன்றவற்றால் உடைகள் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும் வேடத்திற்கேற்ற ஆடைகள் அமைக்கப் பெறுவதில்லை.
               
                ஆண் வேடதாரிகள் பெரும்பாலும் நீளக்கால் சட்டை (Pant)யுடன் சரிகை     தைக்கப்பட்ட     ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். பெண் வேடதாரிகள் பெரும்பாலும் நைலான் புடவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

கதை
     நாட்டுப்புற மக்கள், அறிமுகமான கதைகளையும், தங்களுக்கு விருப்பமான கதைகளையும், தெருக்கூத்து மேடையில் கண்டு களிப்பதில் விருப்பம் கொண்டவர்களாவர். எனவே மக்களுக்கு நன்கு     அறிமுகமான     தொன்மை     இலக்கியங்களும், நாட்டுப்புறக்கதைகளும் பெரும்பாலும் தெருக்கூத்துக்கெனக் கொள்ளப் பெறுகின்றன. எனினும் கால மாற்றத்திற்கேற்ப நடப்பியல் கூறுகளும் கதைகளாக்கப் படுகின்றன.

                மதுரை வீரன், பவளக்கொடி, நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, பாரதக்கூத்து, காத்தவராயன், சித்திராங்கி போன்றவை குறிப்பிடத்தக்க தெருக்கூத்துக் கதைகளாகும். எடுத்துக்காட்டாகநல்லதங்காள்கதையினை இங்குக் காண்போம்.

                நல்லதங்காள் கதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிமுகமான கதையாகும்.     காசி நாட்டு அரசியான நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள்.     நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. தனது சகோதரன் ஆளுகின்ற மதுரை நாட்டுக்குத் தனது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றாள். அவள் காசியை விட்டுச் செல்வதை அவளது கணவன் ஏற்கவில்லை. எனினும் தனது குழந்தைகளின் பசித்துயர் காணப் பொறுக்காமல் கணவன் தடுத்தும் மதுரை நாடு செல்கிறாள். மதுரையில் தனது சகோதரன் அரண்மனையில் இல்லாத நேரம் தனது அண்ணியின் (அண்ணன் மனைவி) கொடுமைக்கு ஆளாகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். நல்லதங்காள் நம்பிக்கை இழந்தவளாக மதுரை அரண்மனையை விட்டுத் துயரத்தோடு வெளியேறுகிறாள். அவள் கண்ணுக்கு ஆழமான பாழுங்கிணறு     தென்படுகிறது.     தனது குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தள்ளுகிறாள். கடைசியாகத் தானும் குதித்து மூழ்குகிறாள்.

                பெண்மையின் துயர் பேசும் இக்கதை தமிழகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற தெருக்கூத்துக் கதையாக உள்ளது. இக்கூத்துக் கதை பெண்களை அழவைக்கும் அத்தனைக் கூறுகளையும் கொண்டுள்ளதைக் காண்கிறோம்.

தெருக்கூத்தின் அமைப்பு
     தெருக்கூத்து நீண்ட கால வழக்கினைக் கொண்டது. எழுத்து வடிவிலான வரையறுக்கப்பட்ட உரையாடல் இல்லை. இதனால் கூத்தின் நீளம் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலை ஏற்படுகிறது. பாடல், உரைநடை, நடனம், பேச்சு யாவும் ஒன்றாக அமைந்த அமைப்பினைக் கொண்டு தெருக்கூத்து விளங்குகிறது.

நோக்கம்
     நீதி போதனைகளை மக்களிடையே பரப்புவதும், கூத்தின் நோக்கமாக உள்ளது. எனவே கூத்துக்கதைகளில் சமகால நிகழ்வுகளும் கலைஞர்களால் இணைத்துப் பேசப் பெறுவதுண்டு.

கால அளவு    
தொடக்க காலத்தில் கூத்து முடிய மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளப் பெற்றது. மக்களின் விருப்பத்திற்கேற்பக் கூத்துக் கதை வளர்க்கப்படும். மக்கள் முடிக்கச் சொன்னால் மட்டுமே கூத்து முடிக்கப் பெறும்.
கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்னும் பழமொழி கூட விடிய விடியக் கூத்து நடந்த நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா!

                ஆனால், கால மாற்றத்திற்கேற்ப, தற்பொழுது தெருக்கூத்தும் காலக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பெற்றுள்ளது.

நடத்து முறை
     தெருக்கூத்துகளில் பாத்திரங்கள்     யாவும் தனித்தனி நடிகர்களால் நடிக்கப்பெறும். தெருக்கூத்து நடிகர்கள் உரத்த குரலில் பாடத் தெரிந்தவர்களாவர். பெரும்பாலும் பெண் பாத்திர வேடங்களையும் ஆண்களே ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் பெண் வேடங்களைப்     பெண்களே ஏற்றுக் கொள்வதைத் தற்பொழுது காண முடிகிறது.

                தெருக்கூத்து     மேடையேற்றம்     தனித்தன்மையுடன் அமைந்துள்ளது. நடிகர்களையும், பார்வையாளர்களையும் பிரித்து வைப்பது திரைச்சீலை மட்டும் தான்.

                தொடக்கத்தில் தோடயப் பாடல்கள் பாடப் பெறும். பின்னர் விநாயகராக வேடமணிந்த ஒருவர் தோன்றி அனைவருக்கும் ஆசி வழங்குவார். அடுத்ததாக கட்டியங்காரனின் வருகை அமையும். கூத்தில் வரக் கூடிய பாத்திரங்களை கட்டியங்காரன் அறிமுகம் செய்வான். கூத்தின் நிகழ்ச்சிகளையும், சூழலையும், கதைப் போக்கையும் விளக்குவதாக அவனது பேச்சும், நடிப்பும் அமைந்திருக்கும்.

                மேடையில்     நடிகர்கள்     குதித்துக்     கொண்டு ஆர்ப்பாட்டத்தோடு     அறிமுகம்     ஆவார்கள். பின்பாட்டுக்காரர்களும் மிருதங்கம், ஆர்மோனியம், தபலோ போன்ற வாத்தியக்காரர்களும் மேடையில் ஒரு பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வாத்திய இசைக்கு ஏற்ப நடிகர்கள் தாள அசைவுடன் ஆடியும், பாடியும் நடிப்பார்கள்.

                நடிகர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் இடையே ஏற்படும் இடைவேளையில் சமகாலச் செய்திகள் கூத்துக்குள் நுழைவதுண்டு. கூத்தில்கோமாளிசிறப்பிடம் பெறுகிறான். (கோமாளி = தனது செய்கைகளினால் சிரிப்பை ஊட்டுபவன்.)

வீழ்ச்சி
     தெருக்கூத்தின் நீண்ட கால அளவும், மக்களிடம் அடிக்கடி அறிமுகமான தெருக்கூத்துக் கதைகளில் ஏற்பட்ட சலிப்பும், புதிய கலை வடிவங்களின் வருகையும் தெருக்கூத்துக்கலையின் நலிவுக்கு வித்திடலாயின. ஒப்பனை, ஆடைகள், இசை போன்றவையும் பொருத்தமாக அமையாத தன்மை தெருக்கூத்தின் இயல்பு நிலையைக் குறைப்பதாக உள்ளது.

                இக்காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் மட்டுமே செல்வாக்குப் பெற்ற கலையாகத் தெருக்கூத்துக் கலை விளங்கி வருகிறது. பிறபகுதிகளில் அவ்வப்போது மட்டுமே கூத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தெருக்கூத்தின் பயன்பாடு
     மக்களோடு     இயைந்த     கலையான தெருக்கூத்து எவ்வகையிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பார்ப்போம்.

                தமிழுக்கான நல்லதொரு நாடக வடிவத்தினைத் தெருக்கூத்து பங்களிப்புச் செய்துள்ளது. இத்தெருக்கூத்தின் செல்வாக்கு இன்றைய மேடை நாடக வடிவத்திற்குள்ளும் வந்திருக்கிறது.

                தெருக்கூத்துக் கதைகளின் மூலங்கள் இன்றைய மேடை நாடகத்துக்கான அடிப்படைக் கதைக் கருவாக வடிவம் பெற்றுள்ளன. புதிய அறிவியல் கருத்துக்கள் கூட இவ்வாறு கூத்து வடிவில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், தெருக்கூத்தில் இடம்     பெறும்     அடவுகள்பாத்திரச் சித்திரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன

Tuesday, January 24, 2017

சங்க இலக்கிய புறநானூற்றில் நீர்நிலை பற்றிய சிந்தனைகள்



 முனைவர் பூ.மு.அன்புசிவா 
முன்னுரை
         தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்யும் நூல் புறநானூறு ஆகும். புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத்தமிழ்நூலாகும்.  புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். புறம் என்ற சொல்லாட்சிக்குத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புப் பொருளுண்டு. புறநானூறுசங்ககாலவரலாற்றைஅறிய உதவும் பழமையானநூல். அதில் உள்ள ஒவ்வொருபாடலும் இன்னதிணையைச் சேர்த்துஎன்றும், இன்ன துறையைச் சேர்ந்தது. 1894 இல் உ.வே.சா முயற்சியால் வெளிக்கொணரப்பட்ட தமிழர் வாழ்வியல் விளக்கம் புறநானூறு ஆகும். போருக்கு நிகராக வள்ளண்மை, நட்பு, தமிழர் தம் உயரிய கொள்ளை எனப் பலவும் சிறப்பாகப் பதியன் பெற்றுள்ளன. அவ்வகையில் புறநானூற்றில் காணலாகும் நீர் நிலைகள் குறித்த சிறப்புச் செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
வாழ்வியலில் நீர் நிலைகள்
          உயிரிகளின் உணவுத் தேவைக்கும் உடல் பராமரிப்பிற்கும் அடிப்படையாக நீர் நிலைகள் அமைகின்றன. அகப்பாடல்களில் களவுப் புணர்ச்சி நிகழ்தலுக்குரிய களமாகவும் இன்புறுவதற்குரிய நிலையங்களாகவும் நீர் நிலைகள் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. வளமை உணர்த்தும் வாக்கிலும் அவைகள் சுட்டப்படுகின்றன. புற உலகம் அரசியல் உந்துதல்களால் இயக்கமாகும் தம்மையுடையதாகும். எனவே, புற உலகில் நீர் நிலைகளுக்கான அடையாளம் வேறு வடிவினத்ததாய் கையாளப்பட்டு உள்ளது.

புறநானூற்றில் நீர்  நிலைகள்
          புறத்தில் நீர் நிலைகளின் இன்றியமையாமை, போர்க்காலங்களில் நீர் நிலைகட்க உண்டாகும் நிலைகள், நீரக மேலாண்மை, நீர்நிலைப் பாதுகாப்பு, நீரின் ஆற்றல் எனப் பல்வேறு கோணங்களில் நீர் நிலைகள் ஆராய்ந்து அணுகப்பெற்றுள்ளது.

நீர்நிலைகளின் இன்றியமையாமை
          ஒரு பொருள் குறித்த மீஎண்ணங்கள் அப்பொருள் இல்லாதபோதே இருக்கும். இவ்வகையிலே, வறட்சியான இடம் குறித்த கருத்துக்கள் வருமாறெல்லாம் நீரின் இன்றியமையாமை அழுத்தமுறப் புறநானூற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அதனை,

‘‘ஊரி இல்ல, உயவு அரிய
நீர் இல்ல, நீள் இடைய’’ (புறம்:3, 17 – 18)
எனும் வரிகளால் அறியலாம். பாலைநில வழியானது எவ்வித ஊர்களும் இடையில் இல்லாது வழியில் தாகம் தீர்க்க நீர்நிலைகளும் அற்ற தன்மையில் இருக்கும் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. குடியிருப்புகள் அவ்வழியில் இல்லாமைக்கு நீரின்மை இன்றியமையாமைக் காரணமாகக் கருதவும் இடமுண்டு. உயிர் வாழ அடிப்படையான நீர் இல்லாத இடத்தில் வாழ்வவு நடைபெற வாய்ப்பு இராது. நீர் வாழிடக் காரணியாகப் புலவர்கள் உணர்ந்ததால் இவ்வாறான வறண்ட நிலம் பற்றிய கூற்று நீர் நிலைகள் குறித்த புலப்பாடுகள் மேலோங்குகின்றன.

நீர்நிலை - எல்லைகள்
          ஆட்சிப்பரப்பில் நில எல்லை, நீர் எல்லை என இருவேறு எல்லைகள் இருந்தன. பரந்துபட்ட நீர் எல்லைகள் மிக அதிகமான அளவில் பராமரிப்பிற்குரியவைகளாகச் சங்க காலத்தில் திகழ்ந்துள்ளன. கடற்போர், கடம்பர்கள் எனும் இனத்தவர் கடல் கொள்ளையில் ஈடுபட்டமை குறித்த பல்வேறு செய்திகளை நம் இலக்கியங்களில் இருந்து அறியலாம். கடல்போர்ச் சிறப்பினால் ‘கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்என வேந்தன் ஒருவன் புகழப்பட்டதன் அடிப்படையிலும் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்திலும் அறியலாம். இதனைப் புறநானூற்றின்,

                         ‘‘ஒவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
                              நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற’’ (புறம்:3,  1 – 2)
எனும் வரிகளால் அறியலாம். ‘நிலவுக்கடல்என்னும் சொல் நிலைத்த கடல் பரப்பை குறிக்கிறது. நில எல்லைகளைப் பாழ்படுத்தலாம். கடல், கடல் எல்லை என்பன வலியவைகள் ஆகும். எனவே, இவ்விடத்தில் ‘நிலவூக்கடல்என்ற சொல்லாட்சி கடலின் சிறப்புத் தன்மையோடு குறிப்பிடப்படுகின்றது. பண்டைத் தமிழகமும் ‘வடவேங்கம் தென்குமரி ஆயிடைநல் தமிழ்கூறு நல்லுலகத்துஎனுமாறு தொல்காப்பியத்தில் கடல் எல்லையால் சுட்டப்பெற்றிருக்கும்.

          இவ்வுலகமே கடலினை எல்லைப்பரப்பாகக் கொண்டது என்று புறநானூறு சுட்டுகின்றது. அதனை,
‘‘………………… இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப்பயம்கெழு மாநிலம்’’ (புறம்:58, 20 – 21)
எனும் அடிகளில் வழித் தெளிய உணரலாம். புறநானூற்றின் பல இடங்களில் இக்கருத்தினை ஒத்த பாடல் அடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தமை குறித்து (புறம் - 9) பேசுகின்றது.

நீரின் ஆற்றல்        
          பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கூறப்படும் நீரானது நிலம் என்னும் கூறுடன் இணைவுற்ற தன்மையில் உள்ளது. நீரின் தன்மை தண்மை ஆகும். எனினும் அதன் வலிமை மிகவும் பெரிய ஒன்றாகும். வெள்ளப்பெருக்குக் காலங்களில் அதன் வலிமையைக் கண்கூடாகப் பார்த்திருப்போம். அவ்வடிப்படையில், நீர்ப்பெருக்கு மிகுமானால் அதனை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது என்பதை,

‘‘நீரிமிகின் சிறையும் இல்லை………..’’ (புறம்:51, 1)
என்ற ஐயூர் முடவனாரின் அடியின் வழி உணரலாம்.
          நீர் நிலைகள் பழக்கமில்லாதவர்க்கு ஆபத்து நிறைந்ததாகும். அவற்றைக் கடப்பதற்குத் திறனும் துணிவும் இன்றியமையாமை ஆகும். அத்தகு ஆபத்துத் தன்மையுடைய நீர்த்துறை, வேந்தனது வீரத்திற்கு இணையாக நக்கண்ணையாரால் பேசப்பட்டதை,

‘‘ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே’’ (புறம்:84, 4 – 5)

என்ற அடிகளால் அறியலாம். உப்பு வாணிகம் செய்யும் உமணர்க்கு அச்சம் தரும் நீர்த்துறையானது இவ்விடத்தில் தலைவனுக்கு உவமையாக வந்துள்ளது.

நீர் - மருந்து
          பசியினைப் பிணி என்று மணிமேகலை பகரும். அப்பிணி தீர்க்கும் அரு மருந்தாக நீர் அமைகின்றது. நீரினையும் உணவினையும் ‘இரு மருந்துஎன்று சங்க காலத்திலிருந்து குறிப்பிட்டுள்ளமையை இக்கருத்தோடு பொருத்திப்பார்க்கலாம். தற்போது உடல் பிணி போக்கும் மருந்திற்கு நிகரான தன்மை உண்டு என மேலை நாட்டு மருத்துவமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், சர்.சி.வி.இராமன், (Water is the elixir of life) என்ற கட்டுரையில் நீரின் தன்மைகளைக் கூறி வியப்பார்.  பழங்காலத்தில் இருந்தே நீரானது மருந்தாக மதிக்கப்பெற்றதை,

‘‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது
இருமருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்’’ (புறம்:70, 8 – 9)
என்ற அடிகளால் அறியலாம். சோழன் கிள்ளி வளவனது நாடானது உணவிற்காக ஏற்படுத்தப்படும் நெருப்பினைத் தவிர வேறு நெருப்பினை அறியாதது, தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்துகளைப் பசிப்பிணிக்குத் தரும் தலைவன் என்று நீர்க்கொடையால் சோழன் புகழப்படுவதும் இங்கு சிறப்புடையதாகும்.

போர்க்காலத்தில் நீர்நிலை
          நீர்நிலைகள் நாட்டின் வளத்தினை முடிவு செய்யும் காரணியாக இருப்பதால் போர்க்காலங்களில் மிகுதியான ஆபத்துக்களைச் சந்தித்தன.
                   புறப்பொருள்வெண்பாமாலையில், ‘மழபுலவஞ்சிஎனும் துறையில் எதிரி நாட்டை அழிக்கும் பொருட்டு  நீர் நிலைகளை அழிப்பது குறிப்பாகக் காட்டப்படும்.

          போர்க்காலத்தில் நீர்நிலைகள் யானைகளால் அழிக்கப்பட்டமை குறித்து,
‘‘ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை’’ (புறம்:15, 9 – 10)
என்ற அடிகளால் அறியலாம். இப்போர்க்கால நிகழ்வே ‘மழபுல வஞ்சிஎன்ற துறையினுள் பிற்காலத்தில் இடம்பெற்றமையை அறியலாம்.

நீர்நிலைப் பாதுகாப்பு
          புற அரசியலில் எல்லைகளாகக் கருதப்பட்ட நீர்நிலைகளைப் பராமரிக்கக் காவலர்கள் பணியமார்த்தப்பட்டிருந்தனர். அகநானூற்றில், ஓரிடத்தில் இரவுக்குறிக்குத் தடையாகத் துயிலாது இருக்கும் அன்னையைத் தலைவி, ‘குளக் காவலன்போன்று உறங்காதிருக்கிறாள் என்று கூறுவாள்.

          குளங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் கரை உடைப்பு போன்றவற்றைச் சரிசெய்ய  காவலர்கள் நியமிக்கப்பெற்று நீல்நிலைகள் பராமாpக்கப்பட்டதை,

‘‘எண்நாள் திங்கள் அனையக் கொடுங்கரைத்
தெளிநீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ’’ (புறம்:118, 2 – 3)
என்ற அடிகளால் அறியலாம். ஊர்களில் நீர்த்தேவைக்காகக் கிணறுகள் வெட்டப்பட்டமையை (புறம் - 132) பாடலின் வழி அறியலாம்.
முடிவுரை
         புறநானூற்றில் பண்டைத்தமிழரின் வாழ்வியல் நீhநிலைகள், நீரின் தேவைகள், நீரின் எல்லைகள், போர், அறம், கொடை, மானம், வீரம் முதலிய இயல்புகள் சொல்லப்பட்டுள்ளன. பழந்தமிழ்நூல்களின் வழி அரசர்கள் நீரின் தேக்கம் பற்றிய சிந்தனைகள் இருப்பதைக் காணலாம். புலவர் பற்றிய தெளிந்த வரலாற்றைத் துல்லியமாகக் கணிக்க இயலாமல் இடர்ப்படும் தன்மையை இப்பாடல்களில் காணலாம். மனிதனின் அகம், புறம் என்ற இருவேறுபட்ட வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகித்தமை, அவற்றைப் பராமரித்தமை, புலவர்கள் தம் கூர்த்த சிந்தை மற்றும் வெளிப்பாட்டினால் அவற்றை நுட்பமாகக் குறிப்பிட்டமை குறித்து இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...