Friday, January 01, 2016

பூமாலை அம்மா


      அன்புசிவா



     தலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய சிறுமூட்டை ஆகியவற்றை ஒரு தட்டுக் கூடையில் வைத்துச் சுமந்து ப+மாலை போயக்; கொண்டிருக்கிறாள்.

     சின்னப் பூப்போட்ட ரோஸ்; கலர் சேலை. கருநீலத்தில் ரவிக்கை.  முதுகுவரைக்கும் தொங்கும் தலைமுடி.  லேசாக வாடியிருக்கும் மல்லிகைப்பூ.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்.  நெற்றியில் ஐம்பது காசு அளவு குங்குமம்.  கால்களில் சிணுங்குகின்ற கொலுசு.  கரக்… கரக்.. என ஓசையிடும் பிளாஸ்டிக் செருப்பு.  இதையெல்லாம் பார்க்கும் போது பெண்கள் கூட இவ்வளவு நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியுமா?  என்பது கொஞ்சம் கேள்விக்குரிய விஷயம்தான்.

     ஆமாம்.  பூமாலை ஓர் திருநங்கை  உடலளவிலும் மனசளவிலும் திருநங்கை தான்.

     இவளும் மார்க்கெட் காய்கறி, மளிகைப் பொருட்கள் மூட்டை, தக்காளிப்பெட்டி தூக்கி வாழ்க்;கைச் சக்கரத்தை உருட்டிக்கொண்டு வருகிறாள்.

     நல்லவெயில்.  பூமாலைக்கு உடலும், உடையும் வியர்த்தது.  முந்தானைத் தலைப்பால் துடைத்துக் கொண்டவாறு, ஒரு திருப்பத்தில் போகையில் அந்த மாளிகை வீட்டைச் சில நொடிகள் பார்த்தாள்.  மாளிகை வீட்டுக் குடும்பப்பெண் பேசிய சில வார்த்தைகள் காதுகளில் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கின.

     “இதோ… பாரு… பூமாலை நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே!  நீ எங்க வீட்டுக்கு அப்ப… அப்ப வர்றதுனாலே சுத்தியிருக்கிறவங்கெல்லாம் நீ போறவரைக்கும் வீட்டை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க.  நீ போன பிறகு என் குழந்தைக்கிட்ட உன்னைப் பத்தி எப்படியெல்லாமோ விசாரிக்கிறாங்க தெரியுமா?  நீ இனிமே எங்க வீட்டுக்கு வர்றதா இருந்தா… நல்லா  நீட்டா  ஆம்பள மாதிரி டிரஸ் பண்ணிட்டு வா”

     பூமாலை சலிப்புத் தொனியில் “உ..ம்” என்று பெருமூச்சு விட்டவாறு அந்த வீட்டைக் கடந்து போகிறாள்.  சுமைகளைப் பார்சல் லாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டுக் கூலியாக இரண்டு பத்து ரூபாய்த் தாள்களையும்  கணக்காளரின் வழக்கமான ஆபாசக் கிண்டல்களையும் வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்.

     மீண்டும் அதே திருப்புமுனை.  அதே மாளிகை,  அதே வார்த்தைகளின் எதிரொலிப்பு,  அந்த இடத்தைக் கடந்தும் விட்டாள.; மனதுக்குள்ளே  நான் ஏன் ஆம்பளையாய் டிரஸ் மாத்தணும்?  வேஷத்தை மாத்திட்டா போதுமா?  மனசை மாத்த வேண்டாமா?.. சின்ன வயசுல வீட்டிலும் பள்ளிக் கூடத்திலும் பொம்பளைங்களோட அதிகம் பழகினேன்.   நடை, உடை, பாவனை எல்லாம்  பொம்பளைங்க மாதிரி தான்  வைச்சுக்கிட்டேன்.  பள்ளியில,  தெருவுல நடக்கிற கலைவிழாவில் எனக்கே  பொம்பளவேஷம் கொடுத்து எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க!  என்னமோ தெரியல  நானும் ஒரு பொம்பளையாய் இருக்க ஆசைப்பட்டேன்!  முடிவு என்னாச்சு?  எட்டாவது படிக்கையில் வீட்டில் உள்ளவர்களின் கண்டிப்புக்கும், தண்டிப்புக்கும் ஆளானேன்.  பள்ளிக் கூடத்துல சில பிரச்சனைகள் வந்ததாலே படிப்பை நிறுத்தியாச்சு.  ஒரு நாள் கரகாட்டம் ஆட வந்த திருநங்கைகளைச் சந்தித்தேன்.  அவங்க ரொம்ப ஆதரவா என்னிடம் பேசினாங்க.  அவங்களோட வரும்படியும், தங்களைப் போல முழுமையாய் மாறிடவும் சொன்னாங்க.  ஒரு நாள் வீட்ட விட்டு ஓடி அவர்களோட ஐக்கியமானேன்.  திருநங்கையாக மாறின பிறகுதான் பல கொடுமைகளை அனுபவிச்சேன்.  சுட்ட பிறகு தானே தெரிகிறது நெருப்பு என்று!  இந்த ஜென்மம் யார் குற்றம்?  பிரம்மன் குற்றமா?  தெரியல.  எப்படியோ நாற்பது வருஷம் போயிருச்சு.  இன்னும் கொஞ்ச காலம்… எனக்கு இதெல்லாம் தேவையா?  மாளிகை வீட்டோட சவகாசம் அந்த வீட்டுக்குப் போய் இன்னையோடு ஏழுநாள் ஆயிருச்சே!  இனியும் போக்ககூடாது என்று பலவாறு புலம்பியபடி நடக்கிறாள்.

     அடுத்த மார்க்கெட் சுமை கிடைக்கிற வரைக்கும் வழக்கமாக ஓய்வெடுக்கிற பெரிய மளிகைக்கடை ஸ்டோர்ரூம் பருப்பு மூட்டையில் ஒருக்களித்துச் சாய்வாகப் படுத்துக்கொள்கிறாள்.

     பூமாலையோடு நட்பு கொண்ட எண்ணற்ற அன்பு உள்ளங்களில், அந்த மளிகைக்கடை எதிரில் இலைக்கட்டு விற்கின்ற கிழவியும் ஒருத்தி.  அவள் வியர்வை தாளாது தன் முந்தானைத் தலைப்பால் துடைத்தும் விசிறியவாறும் குதப்பிக் கொண்டு வரும் எச்சிலை அழகாகத் துப்பிவிட்டு பூமாலை ஓய்வெடுக்கும் பருப்பு மூட்டை ஓரம் வந்தாள். 

     “ஏ…பூமாலை….ஏ….பூமாலை” என்று கூவுகிறாள் கிழவி.

     “ஏ…ஏ….என்னா?”  இது பூமாலையின் குரல்.  கிழவி தொடர்ந்தாள்.

     “சித்த நாளைக்கி முன்னாடி வீட்ட விட்டு ஓடி வந்த சின்னப் பையனை நடு சாமத்துல மார்க்கெட் கேட்டாண்ட கண்டு மக்கியாநாளு கொண்டுபோய் வூட்டுல வுட்டியே, அந்த பய சித்த நேரத்துக்கு முன்னாடி இங்கின வந்துச்சு.  “எங்க பூமாலையம்மா”ன்னு கேட்டிச்சி.  லாரி செட்டுக்கு சொமை கொண்டு போயிருக்குன்னு சொன்னேன்.  சரி சரி பூமாலையம்மா வந்தா சாய்ந்தரம்மா எங்க வூட்டாண்ட வரச்சொல்லு பாத்து ஒரு வாரம் ஆச்சுன்னு சொன்னான்.  “இல்லைன்னா நாளக்கி இஸ்கூலு போவா…மே இங்கின வந்துருவேன்னு வேற சொல்லிவிட்டுப் போயிருக்கு”  என்று கிழவி கூறிவிட்டு தன் இலைக்கடையை நோக்கி நடந்தாள்.

     பூமாலை கொஞ்சம் ஆழமாகத்தான் யோசித்தாள்.

     போன மாசம் நடு சாமம்.  பள்ளிக்கூட சீருடையில் தோளில் பையுடன் பேருந்து நிறுத்தத் திண்ணையில் மங்கிய மெர்க்குரி வெளிச்சத்தில் ஒரு சிறுவன் சுருண்டு கிடந்தான்.  அங்கே காய்கறி மூட்டைகளை லாரியிலும் பேருந்திலும் இறக்கிப்போடும் பலரின் பார்வையில் தென்பட்டானோ, இல்லையோ  அந்நேரத்தில் பூமாலையின் பார்வையில் பட்டான்.  இவனைப் பார்த்தால் வீட்டை விட்டு ஓடி வந்திருப்பான் போல தெரியுது, என்று பூமாலை யூகித்துவிட்டாள்.  நெருங்கி விசாரிக்கையில் சிறுவன் வீடு பள்ளிக்கூடத்திலிருந்து எட்டுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாகவும், அப்பா பிசினஸ் விஷயமாக அடிக்கடி பெங்களுர் சென்று விடுவதாகவும்,  அம்மா ஊருக்குள் புகழ் பெற்ற மருத்துவராகவும் இருந்து வருகிறார்.  வேறு சில ஊர்களில் இவங்களுக்கு மருத்துவ மனைகள் உண்டாம்.  அதைப் பார்த்து வருவதற்கே நேரம் சரியாக இருக்குதாம்.  மேலும் சாப்பாடு, படிப்பு, அன்பு. பாசம், டிரஸ்… முரண்டு பிடித்தால் அடி, உதை என்று பல விஷயங்கள் வேலைக்காரனோடு தான் என்றான்.  சிறுவன் சொல்வதைப் பார்த்தால் வேலைக்காரன் இந்த நூற்றாண்டு அரக்கன் போல தெரியுது.

     பூமாலை சிறுவனிடம்,

     “உலகந்…தெரியாத புள்ளயா இருக்கியே கண்ணு.  இந்த வயசுல ஒழுங்கா வூடு  அடங்கி இருக்க வேணாமா?”

     சிறுவன் பூமாலையிடம்,  

     “இந்த வயசில அப்பா அம்மா எங்கூட இருக்க வேணாமா?”

     அவனின் அறிவார்ந்த கேள்வியை எண்ணி கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிய போது காய்ச்சல் அடிப்பதை உணர்ந்தாள்.  அருகில் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று ஊசி போட்டு, மருந்து, மாத்திரை, பால், பிஸ்கட் எல்லாம் வாங்கிக் கொடுத்துத் தன்னுடைய குடிசை வீட்டில் நிம்மதியாக உறங்க வைத்தாள்.  மீண்டும் மார்கெட்டிற்கு ஓடினாள்.  விடியற்காலையில் இவன் விழிப்பதற்கு முன்பே வந்து சிறுவனின் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள்.  காய்ச்சல் குறைந்திருந்தது.  சிறுவனை அழைத்துக்கொண்டு அவன் சொன்ன மாளிகை வீட்டிற்குப் பயணமானாள்.  அங்கே டாக்டர் அம்மாவும் வேலைக்காரனும் சிறுவனைக் கண்டு பொழிந்த பாசத்திற்கு அளவேயில்லை.  பின்னர் பூமாலைக்கு நன்றி கூறப்பட்டது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுப்பக்கம் வரச் சொன்னார்கள்.  அது முதலாக சில தடவ போயிருப்பாள்.  அச் சிறுவனுக்கு நல்ல நண்பனாக, கதை சொல்லியாக, வளர்ப்புத் தாயாக பூமாலை இருந்தாள்.  ஆனால், அந்த டாக்டர் அம்மாவின் அந்த வார்தைக்குப் பிறகு அங்கு போவதில்லை.

     பூமாலை இன்னும் யோசிப்பதை நிறுத்தவில்லை.

     சின்ன வயசுல யார் யாருக்காக எப்படியெல்லாம் பொம்பள வேஷம் போட வேண்டாம் என்று வீட்டில் சொன்னபோது  கேட்டேனா?  இல்லயே.  எவ்வளவோ சொந்த பந்தங்களை இழந்து விட்டேன்.  என் வீட்டைச் சுற்றியுள்ள மத்த திருநங்கையோட போலியாக அக்கா, தங்கை, பாட்டி, அம்மா, பெரியம்மா… இன்னும் எத்தனையோ உறவுமுறை வைச்சு அல்லவா  வாழ்க்கை ஓடியிருக்கு.  நான் என் வாழ்க்கையைத் தொலைச்சிட்டேன்னு நினைக்கிறேன்.  இந்த அலி வேஷத்துக்காக எவ்வளவோ  சொந்த பந்தங்களை இழந்தாச்சு.  இப்ப அந்தச் சிறுவன் குத்தமில்லாத அன்பைப் பொழிகிறான்.  அவனோட உறவை இழக்க எனக்கு மனசில்ல.     இந்தப் பொம்பள வேஷத்தை மாத்தி ஆம்பள வேஷம் போட்டுகிட்டு மாளிகை வீட்டுக்குப் போவத்தான் போகிறேன்”  என்று தீர்மானமாக முடிவெடுத்தாள்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...