Saturday, January 09, 2016

சங்கப் பெண் கவிகளின் அகம்...

தமிழின் தொன்மைக்கும், பெருமைக்கும் சான்றாய் நிற்பன சங்கப் பாடல்கள் ஆகும். ஆடவர், பெண்டிர் என்ற பேதமின்றி இருபாலாரும் பாடியுள்ளனர். அரசன் முதல் குறமகள் வரை பலரும், பல்வேறு தொழில் செய்தோரும் பாடியுள்ளனர். வேதகாலத்துப் பெண்பாற் புலவர்களைப் போன்றே சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களும் கல்வியில் சிறந்திருந்தனர்.எனவேதான் ஒளவையார் பெரும் புகழ் பெற்ற புலவராக இருக்க முடிந்திருக்கிறது. ஆண்பாற் புலவர்களை நோக்குகையில் பெண்பாற் புலவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். சங்ககாலத்துப் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.பெரும் பேரா. உ.வே.சா அவர்கள், சங்கப் பெண்பாற் புலவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது பேர் என்றும், மற்ற புலவர்களின்சொற்களுக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ, அவ்வளவு சிறப்பு இவர்களுடைய செய்யுட்களுக்கும் உண்டு எனக்குறிப்பிட்டுள்ளார். பேரா. ஒளவை. நடராஜன் அவர்களோ, இவர்களின் எண்ணிக்கை 41 என்று குறிப்பிட்டுள்ளார். பேரா. ந.சஞ்சீவி அவர்கள் தமது,சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் 36 பெண் பாற் புலவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒளவையாரைத் தவிர ஏனையோர்அகப் பாடல்களையே அதிகம் எழுதியுள்ளனர். சங்க காலத்தில், பெண்களால் எழுதப்பட்ட இப்பாடல்களிலிருந்து அவர்களின் காதல், வீரம், தனிமைத் துயர், கைம்மைநோண்புக் கொடுமை, பிற புலவர்களைப் புகழும் பெருந்தன்மை, வரலாற்றறிவில் சிறந்திருந்தமை, அவர்களின் சுயமரியாதை,காதலை வெளியிடுவதில் அவர்களுக்கிருந்த தயக்கம், பரத்தமை, வெறுப்பு போன்ற பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களையும், தந்தை வழிச் சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளையும் இப்பாக்களின் வழி அறியமுடிகிறது. ஆண் - பெண் பிரிவினையில் ஆண் எப்போதும் உயர்ந்தவனாகவே காட்டப்படுவதைக் காண முடிகிறது.பொருளீட்டுவது ஆண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்திலேயே பெருமையும், உரனும் ஆடவர்க்கும்; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்கும்உரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. மடலேறுதல் என்னும் காதலை பகிரங்கப்படுத்தும் உரிமை ஆண்களுக்கு மட்டுமேஉரியதாக இருப்பதைக் காண முடியும். பாடாண்திணையில், பாடப்படும் ஆண்மகனின் கொடை, வீரம் முதலியவற்றை ஆண்களுக்காக மட்டுமே பாட முடியும்.கைக்கிளை என்பது ஆடவர்க்கு மட்டுமே உண்டு. தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்கால் கிழத்திக்கு இல்லை என்பது தொல்காப்பியத்தில் வரும் களவியல் சூத்திரமாகும். கைக்கிளை என்னும் குறியீடு இரு பாலார்க்கும் கொள்ளத்தக்க பொது நிலையில்தான் அமைந்துள்ளது தெளிவு என்ற போதிலும்,ஆண்பாற் படுத்திக் கூறுவதே, இளைஞனின் காதலை எடுத்துக் கூறுவதே இலக்கண மரபாகும் என்பார் நாவலர் சோமசுந்தரபாரதியார். மேற்கண்ட களவியல் சூத்திரத்தில் பெருமிதற்குரிய நான்கனுள், முதலாவதாக வைக்கப்பட்டுள்ள கல்வியும் ஆண் மக்களுக்குரியஒன்றாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இருப்பினும் ஒரு சில பெண்கள் கல்வி கற்றதோடு கவியாகும் ஆற்றல்மிக்கவர்களாகவும் விளங்கினர். தந்தை வழிச் சமூகத்தின் கட்டுப்பாடுகள் இறுக்கமடையாத சூழலில் பெண்கள் கல்வி கற்கும்சூழல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உலகப் பெண்பாற் புலவர்களையெல்லாம் ஆய்வு செய்த பெருமைக்குரியவரான பெ.சு.மணி அவர்கள், கல்வி கற்பதில் ஆடவர்,பெண்டிர், இரு பாலாருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. கல்வி கற்கும் முறையில் வேறுபாடு நிகழ்ந்தது. போர்க்கலை,ஆட்சியியல், பொருளீட்டுதல் முதலான துறைகளில் ஆடவர்களுக்கும், இல்லறம் பேணும் கல்வியோடு, நுண்கலைகளும் பயின்றுபெரும் புலவர்களாகவும் விளங்க பெண் கல்வியும் அமைந்திருந்தன என்று கூறும் கருத்து ஓரளவிற்குப் பொருத்தமாக உள்ளதுஎனலாம். இப்படி இல்லறம் பேணும் கல்வி கற்ற பெண்டிர் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் கவி பாடும் அளவிற்கு தம்மைவளர்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. தமிழின் மகுடமென விளங்கிய பேரா. வ.சுப. மாணிக்கனார், தமது தமிழ்க் காதல் என்னும் நூலில், சங்க காலத்தில் ஆண் - பெண்சமத்துவம் நிலவியது எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து, பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின் பெண், கற்கும் உரிமையும், கவிபாடும் உரிமையும், காதல்உரிமையும், காதற்களவு செய்யும் உரிமையும், காதலனை இடித்துரைக்கும் உரிமையும், இல்லற தொழிலுரிமையும்,பெருமையும், புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தனர் என்பது நெற்றித் திலகம். சமுதாயத்தின் நாகரீகத்தை அதன் மொழிச் சொற்களில் கண்டு கொள்ளலாம். மொழி, நாகரீகத்தை வஞ்சிக்காது.தலைவன்-தலைவி, காதலன்-காதலி, கிழவன்-கிழத்தி என்னும் பால் நகர்ச் சொற்கள், தமிழ்ச் சமுதாய மொழியில் உள்ளன.பிறப்பே குடிமை, ஆண்மை ஆண்டு என இரு பாலார்க்கும் ஒப்பினது வகைகளைத் தொல்காப்பியர் ஏற்றத் தாழ்வின்றிச் சுட்டுவர்என்பதாகும். வ.சுப.மாணிக்கனார் குறிப்பிட்டது போல, காதலனைத் தேர்வு செய்யும் உரிமை அவளுக்கு இருந்திருக்கிறது. அதேநேரத்தில்,அவளது வெளி வீடாக மட்டுமே இருக்கிறது. கற்பு பேணப்படுகிறது. தலைவன் பரத்தையிடம் சென்று, பல காலம் கழித்துவந்தபோதிலும் அவனை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பொன்முடியார் தமது பாடலில் பாடியதுபோல், ஈன்று புறந்தருதல் பெண்ணுக்குரிய கடமையாக இருக்கிறது. புலவர்பெருங்கடுங்கோ பாடியதுபோல் வினை ஆடவர்க்கு உரியதாகவும், மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிராகவும்இருக்கிறார்கள். இதுவே சமூக நியதியாகவும் இருக்கிறது. குறுந்தொகை 14வது பாடலில் (அமிழ்து பொதி ..) நல்லோர் கணவன் இவன் எனப் பல்லோர் கூற மகிழும் அதே நேரத்தில்,சிறிது நாணமும் ஏற்படுகிறது தலைவனுக்கு. சங்க காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருப்பதற்குப் பூதப்பாண்டியன்மனைவி பெருங்கோப் பெண்டின் பாடல் சான்றாக இருக்கிறது. உடன்கட்டை ஏறாத பெண்கள் கைம்மை நோண்பு என்றபெயரில் கொடும் துயரை அனுபவித்திருக்கிறார்கள். இக்காலத்தைப் போலவே சுற்றத்தை விடுத்து, பிரிந்து கணவனுடன் வாழ்கிறார்கள் (கற்பு வலியுறுத்தப்பட்டமையைக் காணமுடிகிறது.) மேலோட்டமாகப் பார்க்கும்போதே பெண்ணுக்கெதிரான பல கூறுகளைப் பட்டியலிட முடிகிறது. இன்னும் ஆழமானமறு வாசிப்பில் நிறையச் செய்திகளைக் காண முடியும் என்று தோன்றுகிறது. எனவே சங்க காலச் சூழல் என்பது, தாய்வழிச்சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழிச் சமூகம் வேரூன்ற ஆரம்பித்த கால கட்டத்தையும் கொண்டிருப்பதாகக் கூறலாம். சங்கப் பெண்களின் அகம் சங்க காலப் பெண்பாற் புலவர்களில், ஒளவையார் முதன்மையானவராவார். வெள்ளி வீதியாரும், நன்முல்லையாரும் அடுத்தநிலையில் வைத்து எண்ணத்தக்கவர்களாவர். கழார்க் கீரன் எயிற்றியார், கச்சிப்பேட்டு நன்னாகையார், நச்செள்ளையார், ஒக்கூர்மாசாத்தியார், வெண்ணிக்குயத்தியார், மாற்றோக்கத்து நப்பசைலயார், வெறிபாடிய காமக்கண்ணியார், நக்கண்ணையார்,பொன்முடியார், நல்வெள்ளையார், தாயங்கண்ணியார், குறமகள் இளவெயினியார், பாரிமகளிர், ஆதிமந்தி, காவற்பெண்டு,பெருங்கோப்பெண்டு போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அகத்திணையியல் முதல் சூத்திரத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், ஒத்த அன்பான் ஒருவனும், ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாகஇவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம்என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்பது ஓர் ஆகுபெயராம் என்று விளக்கமாக கூறியுள்ளார். எனவே அகத்திணைஎன்ற சொல்லில் உள்ள அகம் என்ற சொல் வீடு, இல், மனை அல்லது குடும்பத்தையே குறிக்கிறது. அக்குடும்பத்தில் வசிக்கும்தலைவன்-தலைவியின் வாழ்க்கையைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். சங்க காலப் பெண்பாற் புலவர்கள் காதலை மிகவும் சிறப்புடன் எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமல் பாடி இருக்கின்றனர்.தலைவி, தலைவன், தோழி எனக் கூற்று யாருடையதாக இருப்பினும் வெளிப்படையாகவே நிகழ்கிறது. காதலில் தவிக்கும் தலைவியின் மன நிலையை ஒளவையின் பாடலொன்று அற்புதமாகப் படம் பிடித்துள்ளது. தலைவி காதல்நோயால் தகித்துக் கொண்டிருக்க, தென்றல் வீசி அந்நோயை அதிகமாக்குகிறது. ஊரோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. தன் துயரத்தை உணராமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வூரை, முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஓல்எனக் கூவு வேன்கொல் அலமரல் அசைவலி அலைப்பஎன் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே (குறு: 28. ஒளவை) என்ன செய்து எழுப்புவேன்? என்று கலங்கி நிற்கிறாள். தலைவன் ஒருவனை காலை, பகல், மாலை, யாமம், விடியல் என எல்லாப் பொழுதும் காதல்/காமம் வருத்திக் கொண்டிருக்கிறது.நினைவெல்லாம் பொழுதெல்லாம் அவளை நினைத்துக் கொண்டிருக்கும் அவன் தனது காதலே உண்மைக் காதல் என்கிறான். காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப் பொழுதிடை தெரியின் பொய்யே காமம் என்கிறது அள்ளூர் நன்முல்லையாரின் (குறு. 32) பாடல். தன் மன விருப்பத்தையேநன்முல்லையார் நாணம் காரணமாக தலைவன் மேல் ஏற்றிக் கூறினார் என்று கொள்ளலாம். தலைவன் இல்லாத சமயத்தில் பெண்கள் அழகுபடுத்திக் கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. இதனை கச்சிப்பேட்டுநன்னாகையாரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது. ஈங்கே வருவர் இனையேல் அவர்என அழா அற்கோ இனியே நோய்நொந் துறவி! மின்னின் தூவி இருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும் வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே! (குறு: 162) என்பது பாடல். பொருளீட்டச் சென்ற தலைவன் விரைவில் திரும்பி வருவார் என ஆறுதல் கூறும் தோழிக்கு தலைவி, நான்எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? தலைவன் இல்லாத காரணத்தினால் இந்த இளவேனில் காலத்திலும் மலர் இல்லாமல் வறிதாகஇருக்கும் கூந்தலைத் தடவுகிறேனே என வருந்திக் கூறுகிறாள். ஒத்த தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திற்குப் பிறகு மணம் செய்துகொள்வதன் மூலம் கற்பொழுக்கத்திற்கு வருகின்றனர்.என்றாலும் காதலை சொல்வதில் தயக்கமும் இருந்திருக்கிறது. இதனை வெள்ளிவீதியாரின் குறுந்தொகை பாடலொன்று உறுதிசெய்கிறது. இடிக்கும் கேளிர் நும் குறை ஆக நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில் கைஇல் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே. பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட; கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம். அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும்இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை. கையில்லாத ஊமையின் நிலையில் தலைவிபடும்துயரில் காதலை வெளிப்படுத்த இயலாத ஆதங்கம் தொனிப்பதையும் காண முடியும். வெள்ளி வீதியின் மற்றொரு பாடலில் (குறு: 149) தலைவியின் நாணம், காமத்தை எதிர்த்துத் தாங்கும் அளவிற்குத் தாங்கிப் பிறகுநிற்காமல் போய் விடுகிறது. வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஓடுவது போல் இங்கு காமம் நாணத்தை வென்று விடுகிறது. பொருளீட்டச் சென்ற தலைவனின் நிலையை எண்ணி வருந்தும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆயினும்பெண்பாற் புலவர்களின் பாடல்களில் அந்த வருத்தம் உணர்வுப்பூர்வமாக இருப்பதைக் காண முடிகிறது. பிரிந்து சென்றதலைவனை நினைத்து கவலையுடன் வருந்தும் தலைவியின் நிலை எப்படி இருக்கிறது என்றால் ஓர் ஊரில் அமைக்கப்பட்டுள்ளகொல்லனின் உலைக்களத்து துருத்தியானது, ஏழு ஊர்களின் பொது வேலைகளை ஏற்று வருந்துவது போல் அளவற்றதாக உள்ளதுஎன்கிறார் கச்சிப்பேட்டு நன்னாகையார். வெள்ளிவீதியின் நற்றினை 348வது பாடல் இப்படிப் போகிறது .. நிலவே, நீல் நிற ... ...யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு கனையிருள் கங்குலும் கண்படை இலெனே; அதனால், என்னொடு பொரும் கொல்இவ் உலகம்? உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே? இரவெல்லாம் தூக்கமின்றித் தனிமைத் துய்வில் வருந்தியுள்ளேன். (ஊர் உலகமோ மகிழ்ச்சியாக இருக்கிறது) அதனால் இந்தஉலகம் தன்னோடு மகிழவில்லையென்று நினைத்து என்னோடு வந்து போரிடுமா? அல்லது என்னுடைய துயரங்கொண்டநெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லையென்று சென்று உலகத்தோடு போய்ப் போரிடுமா? எதுவுமே தோன்றவில்லையேஎனக்கு (எதுவுமே தோன்றாதவளை தனிமை துயரம் மட்டும் வருத்திக் கொண்டே இருக்கிறது). வெள்ளிவீதி, நன்முல்லை ஆகியோரின் பிரிவுத் துயரம் கல் நெஞ்சையும் கரைத்து விடும் ஆற்றல் பெற்றவை. தலைவனின் மனம் விழாக் களத்தில் ஆடும் பெண்ணின் மீது போய் விடுமோ என அஞ்சும் அவனது காதலி, வெள்ளை ஆம்பலின்அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக் கொண்டு, அவன் முன்னால்சென்று தானே அவனை கைப்பற்றிக் கொள்ளப் போவதாக அந்தப் புதியவளின் ஏவல் பெண்டுகள் காதில் விழுமாறு கூறுகிறாள். இப்படித் தன் அழகைக் காட்டி அவன் அவளை மணந்து கொண்ட பின், மற்ற பெண்களின் தோள் நலம் வாடி விடுமே!.அவைதாம் இரங்கத்தக்க என்று பொய்யாக வருந்துகிறாள் காதலி. வாளை வாளின் பிறழ .. என்னும் ஒளவையின் இந்தப்பாடலில் வரும் காதலி தன் உடல் அழகின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பது வியப்பூட்டுகிறது. இக்காலத்தைப் போலவே சங்க காலத்திலும் சுற்றத்தாரிடம் இருந்து பிரிந்து தலைவனோடு சென்று இல்லறம் நடத்தும் சிறப்பைநக்கண்கைணயாரின் பாடல் (நற்றினை 19) மூலம் அறியலாம். திருமணம் நடக்கும் வரை, தலைவியின் நாணம் நீங்காதபடி கற்புத் தலைவியை அவள் விரும்பும் ஆடவர்க்கு மணம் செய்துவைப்பது தாயின் கடமையாக உள்ளது. எனவே சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல, அருங்கடி அன்னையு துயில்மறந்தனளே! (அகம் 256-12-14) எனத் திருமணம் வரை பெண்கள் கற்புடன் இருக்க, தாய் உறக்கமின்றி காவலிருந்ததைப்பாடுகிறார் நக்கண்ணையார். கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அல்லது கைமம்மை நோன்பு இருப்பது அக்கால வழக்கமாக இருந்தது.கைம்மை நோன்பின் கொடுமையை பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு எடுத்துரைப்பதோடு, கைம்மைநோன்பிருப்பதை விடவும் ஈமப் படுக்கையில் படுத்து உயிர் விடுவது, தாமரைக்குளத்து நீரைப் போல் இன்பமானது என்றுபாடுகிறார். தாயங்கண்ணியார் என்ற மற்றொரு புலவரின் பாடலில் இருந்து (புறம். 250) கணவரை இழந்தப் பெண்கள் தலைமயிரைக்குறைத்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ட நிலையை அறிய முடிகிறது. மாறோக்கத்து நப்பசலையாரின்புறம் 280வது பாடல் கணவன் சாவை, ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கும் துயரமான மன நிலையைச் சித்திரமாக வடித்துத்தந்துள்ளது. இந்தப் பாடலும் கைம்மை நோன்பின் கொடுமையை வெளிப்படையாகச் சொல்கிறது. சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து அக்காலத்துப் பெண்களின் காதல் -வீரம், பெரும்பாலும்பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருத்தல், பரத்தையிடம் சென்றுவரும் கணவனை கமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலவன் வேறொரு பெண்ணோடு போய் விடாமல்இருக்க காதலி செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்கட்டை ஏறுதல் என பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. 
நன்றி: அணங்கு

சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்


அரங்க மல்லிகா

பெண்ணியம் என்பது பெண்விடுதலையை மையப்படுத்திப் பல்வேறு நாடுகளில், பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தளங்களில் போரிட்ட இயக்கத்தின் சித்தாந்த வெளிப்பாடு ஆகும். பெண்ணை ஓர் உயிருள்ள மனுஷியாகப் பார்க்கச் சொல்லும் ஒரு கருத்தாக்கமாகும். ஏனெனில் ஆணாதிக்கச் சமூகத்தில், பெரும்பாலான பெண்கள் ஒரு நுகர்பொருளாகப் பார்க்கப்படுகின்ற சூழல் தொடர்கிறது.

1971இல் ஃபிரான்சில் பெண்ணியம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1872இல் அலெக்ஸாண்டர் டூமஸ் ஃபில்ஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர், பெண்கள் ஆண்களால் நடத்தப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். 1840இல் பெண்களின் உரிமைக்கான இயக்கம் (Women rights) தொடங்கப்பட்டாலும் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் பெண்ணின் இருப்பு நிலை குறித்த அடைமொழி, பண்பு சார்ந்து தங்களைத் தாங்களே பேசிக்கொள்வதும், சமூக பொருளாதார நிலைகுறித்த கேள்விகள் தொடர்ந்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டன.

இந்தியாவில் “பெண்ணியம்” என்ற சொல் 1960க்குப் பிறகே அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் இந்தியா அல்லது தமிழக சமூக-பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப இது கோட்பாடாக வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.

முதலில், கோட்பாடு என்பது என்ன? கோட்பாடு என்பது ஒரு முறையான சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கோர்வையாக விளக்கக்கூடிய ஒரு கூட்டுச் சிந்தனை என்று வரையறுக்கலாம் தர்க்க அடிப்படையில், பெண்ணின் சமூக நிலை சார்ந்த ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட முறையான பழக்க வழக்கங்களை, பண்பாட்டை கருத்தாக்கமாகப் பார்த்தல் தொடர்கிறது. ஆண் X பெண் என்ற பாலினம் இயற்கை/கலாசாரம் (Nature/Culture) சார்ந்த ஆணின் ஆளுகையில் பெண்வாழ்தல் என்ற மரபுப் பார்வையை விடுத்து, புதுக்கோட்பாடு வரையறுக்க வேண்டிய காலத்தேவை ஏற்பட்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் மொழிவாயிலாக, இலக்கியத்தில் பெண்ணின் உடல்/மனம் (Body/Mind) ஆணின் புனைவாக இருப்பதை மறுவாசிப்புக்குட் படுத்துகிறது பெண்ணியம். ஆணின் ஆதிக்கம் ஒரு கட்டமைப்பாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆதிக்கப் பரப்பில், தனது வெளியைத் தீர்மானிக்க முடியாமல் வாழும் பெண், ஆணின் அடக்குமுறைக்கு எதிராகக் கலகக்குரலை எழுப்புகிறான். ஆணுக்கு எதிரான நிலைபாட்டை முன்னெடுக்கிறாள். உதாரணமாக,

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த / நிச்சமும் பெண்பாற்குரிய”

(தொல்-பொருள்-களபு.8)

என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கப் பண்பாட்டு உருவாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்திலும், தலைவி தலைவனுடன் நேரிடையாகக் கூற்று நடத்த இயலாத தன்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு, தோழி, தலைவியின் உணர்வைத் தலைவனிடம் எடுத்துச்சொல்லும் தகுதி பெறுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். பிறருக்கு எடுத்துரைக்க இயலாததானே மனத்தில் அனுபவிக்கக் கூடியதை அகம் என்று சுட்டுவர். ஆயினும், தோழி, தலைவியின் அக உணர்வை எடுத்துச்சொல்லும் தகுதி பெறுவதுதான் சங்க இலக்கியத்தின் தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், பெண்ணின் சமூகத் தகுதிநிலை புரியும். அதாவது தலைவி நேரிடையே தலைவனிடம் பேசுவது தவிர்க்கப்படுவதைக் “கற்பு” என்ற அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால் தோழி நேரிடையே தலைவனிடம் பேசமுடிகிறது.

எனவே, சங்க இலக்கியத்தின் பெண், தலைவியாக வரும்போது கற்புடையவளாக எண்ணுவதும், தோழியாக வரும்போது, தலைவியின் உணர்வுகளை எடுத்துச் சொல்லும் பண்புடையவளாக அங்கீகரிக்கப் படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு பெண், இருவேறு பங்குநிலைப் பரிமாணம் பெறுவது சங்க இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் சூழலில் பெண்ணியம் என்பது மேலைநாட்டுக் கோட்பாடு என்றும், அது இந்தியாவில் வேரூன்ற முடியாமல் இருப்பதற்குப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து போராட, எந்தப் பிரச்சினையும் தீவிரமாக்கப் படவில்லை என்றும் கூறும் கருத்தை மறுத்து, இந்தியச் சூழலில் குறிப்பாக, மாநில/மொழி/சாதி அடிப்படையில் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ளப் பெண்ணியத்திற்கான விதை சங்க இலக்கியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனென்றால், மேலை நாட்டிலிருந்து இந்தியச் சூழலுக்கு வருவித்துக் கொள்ளும் கோட்பாடுகள் இந்த மண்ணின் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்திப் பார்க்கப்படாமல் அப்படியே மேலைநாட்டுக் கலாசாரத்தோடு புரிந்து கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் காலூன்ற எழுந்த மார்க்சியப் போராட்டம் (அங்கே பேசப்பட்ட) வர்க்கச் சிந்தனையை முன்வைத்துப் பேசப்படுகிறது. முதலாளி x தொழிலாளி, பணக்காரன் x ஏழை என்ற வர்க்கச் சிந்தனையை முன்னிலைப் படுத்திப் பார்க்கப்படுவதால், இந்தியாவில் இது வேர்கொள்ள இடர்ப்படுகிறது. காரணம், இந்திய அமைப்பு வருணத்தை உள்ளடக்கியது. சாதியமும், பார்ப்பனீயமும் இங்கே ஆதிக்கம் பெற்றவை. சாதியப் பார்வை மார்க்சியக் கோட்பாட்டில் இடம் பெறவில்லை. அதனால்தான் மேலை நாட்டிலிருந்து பெறப்பட்ட எந்தக் கோட்பாடும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதேபோன்று தான் பெண்ணியமும் அணுகப்படுகின்றது.

இங்கே, பெண்ணின் பிரச்சினையைச் சாதியக் கட்டமைப்பை உள்ளடக்கிப் பேசியிருந்தால் பெண்ணிற்குக் கொடுமை அதிகரித்திருக்காது. பெண், சட்டத்தின் துணையோடு உரிமைப் பெற்றிருப்பாள். இந்திய மண்ணின் விழுமியத்தோடு பெண்ணின் இருத்தல் விசாரணைக்குட்பட்டிருக்கும் இது நடைபெறாமல் போனதற்கு, ஆண் என்பவன் ஆண்மை உடையவன்; வீரமுடையவன்; ஆண் அழக்கூடாது; குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டும்; வாரிசைப் பெற்றுத் தரும் உரிமை ஆணைச் சார்ந்தது; ஆண் அறிவுடையவன். அறிவு அதிகாரத்தை வழங்குகிறது. அதிகாரம் ஆணைச் சார்ந்தது என்று ஆணின் பண்புகள் நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளப்படுகின்றன.

இதற்கு நேர் எதிராக, பெண் அஞ்சி அடங்கி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்கக்கூடாது. உரத்தக்குரலில் பேசக்கூடாது. ஆணிடம் நேருக்குநேர் நின்று பேசக்கூடாது. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இல்லறத்தை இனிதே காக்கவேண்டும். கணவன் வேறு பெண்ணை நாடிச் சென்றாலும் அவன் மீண்டும் இல்லம் வரும்போது, பெண் அவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கோட்டில் பெண்ணின் பண்புகள் ஆண்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றிற்கு எதிராக, பெண்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளனரா என்பதைச் சங்க இலக்கியத் துணையுடன் ஆய்வுக்குட்படுத்தலாம்.

சங்க இலக்கியத்தில் பெண்ணின் உணர்வுகளை அகப் பாடல்கள் உணர்த்துகின்றன. அவர்களின் அந்தரங்க உணர்வுகள் மொழி மூலம் எடுத்துச் சொல்லப்படுகின்றன. மொழி, முக்கிய ஆளுமை வகிக்கிறது. மொழி மூலம் பெண் பிரச்சினைகள் பொதுமைப்படுகின்றன. பெண்கள் விளிம்பு நிலையில் வாழ்வது ஏன்? என்ற வினாவை மையப்படுத்தி சங்க இலக்கியத்தை ஆய்வு செய்தால் பெண்ணியத்தைக் கோட்பாடாக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம். பெண் தன்னின் புறவாழ்வை அகத்தில் ஏற்றிச் சொல்லுதல் சங்க இலக்கியத்தின் மையமாக இருக்கிறது. கூரையின் ஓட்டை வழியே ஒளி ஊடுருவி, வீட்டின் இருளை அகற்றுவதைப் போல, பெண்ணின் விளிம்புநிலையை இருள் சூழ்ந்த வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெண்ணியம் அவசியமாகிறது.

எனினும் பெண்ணியச் சிந்தனை சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது என்று கூறமுடியுமா? என்றால் முடியாது. பெண் சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறாள், கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுரிமை வழங்கப்படவில்லை என்பதையெல்லாம் உணர்ந்து பெண்ணிற்காகப் போராடிய ராஜாராம் மோகன்ராய், உள்ளிட்ட சமூகச் சீர்திருத்த சிந்தனையாளர்களின் கருத்துக்களைப் பெண்ணியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலத்தான் சங்க இலக்கியத்தில் பெண்ணின் உரிமைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஒளவையார், வெள்ளிவீதியார், நச்செள்ளையார், காக்கைப் பாடினியார் ஆகியோரின் பாடல்கள் இதற்குச் சான்றாகும். பெண்பாற் புலவர்களின் மொழி, இன்றைக்குப் பேசப்படும் பெண்ணியத்திற்கான அனைத்துத் தன்மைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

ஆண் X பெண் என்ற இருமை எதிர்வுக்குள் இலங்கும் பெண்ணின் அடையாளம், பெண் உரிமை கோரல், பெண்ணின் உணர்வுகளை அப்படியே பதிவு செய்தல் எல்லாம் பெண்ணிய வாசிப்புக்குட் படுத்தப்படுகின்றன. ஆண் X பெண்ணிடையே உள்ள கலாசார அடையாளங்கள் கட்டுடைக்கப்படுகின்றன. அமைப்பியல், பின்-அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய கருத்தாக்கத் தளங்கள், அர்த்தங்களைக் கட்டுடைத்து, புதிய அர்த்தத் தளத்தை உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன. இந்த நிலையில் வாழ்வு, உடைமை, மனம், அறிவு போன்றன யாவும் மாற்றம் பெறுகின்றன. அத்துடன் மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற தளங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

பெண்ணியத்தை, சங்க இலக்கியக் கோட்பாடாக பார்க்கும் பார்வைக்கு மேற்சொன்ன மாற்றம் உறுதுணை நல்கும். இதற்கு மொழி ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இலக்கியத்தில் பெண் மீதான புனைவுகளும், பெண் தன் வலியை, வேட்கையைப் பதிவு செய்திருப்பதும் மொழிமூலம் சிதைக்கப்படுகிறது. உதாரணமாக, பெண்ணின் மொழி மௌனம் நிறைந்ததாகப் பார்க்கப்படுவதை, மௌனம் அதிர்வை ஏற்படுத்துவதை மறுவாசிப்புக்குட்படுத்துகிறது. பெண்ணியம் என்ற முனைவர் தேவதத்தா (“மௌனத்தின் அதிர்வுகள் - பெண்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2005) கூறும் கருத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். பெண் எழுத்து, பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையாரின் பாடல்களைச் சுட்டலாம். “இவரின் பல பாடல்கள் பெருந்திணை வயப்படுவன என வ.சுப. மாணிக்கம் கருதுகின்றார்.

இவர், பெருந்திணையின் நான்கு துறைகளில் ஒன்று “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்பது தலைவியின் காமம் ஒரு தலைக்கொருகால் பெருகிச் செல்வதன்று தணிவதில்லை. தோழி ஆற்றியும் அடங்குவதில்லை. ஊரெல்லாம் அறிந்து பேசும்படிக்கு அவள் காமம் வெளிப்படையானதாகும். (அகம் 273) என்று முனைவர் மு. பழனியப்பன் கூறுவது அவதானிக்கத்தக்கது. மேலும், அவரே, குறுந்தொகை 102 ஆம் பாடலிலும், ஒளவையாரின் கடக்க இயலா காமவேட்கைப்பட்ட தலைவியைக் காட்டி, “என் காமம் வானளவு உயர்ந்தது, அதை என் காதலன் முற்றத் தணிக்கவில்லை” எனக் கூறுவதாக எடுத்துரைக்கிறார். (மு. பழனியப்பன், பெண்ணிய வாசிப்பும் பெண்ணெழுத்துத் திறனாய்வும், ப. 68) கள்ளின் சாடி அன்ன இளநலம் என்று நற்றிணை 296ஆவது பாடல் தலைவியின் காமம் கள்ளைப் போன்றது; மயக்கக் கூடியது என்று சுட்டுகிறது.

அகநானூற்றில், முலையிடைத் தோன்றிய நோய் (அகம்-273) என்று கூறப்பட்டுள்ளது. இதில் பெண் காமத்தின் வெளிப்பாட்டைப் பெண்ணின் மார்பு வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டது என்ற கருத்தாக்கம் ஒளவையார் பாடலில் கட்டுடைகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணின் காமம்) பெண்ணின் உடல் நுகர்வுக்குட்பட்டிருந்தது. பெண்ணியக் கோட்பாட்டை உருவாக்க, பெண்ணின் உடல் நுகர்வுக்குரியதில்லை என்ற மீட்டுருவாக்கச் சிந்தனை பெண்ணியத்தை உருவாக்க உதவும். பெண்ணினுடைய உள்மன உணர்வுகளை, ஆழ்மன உணர்வுகளை, நனவிலா மனத்தை வெளிப்படுத்த மொழி தடையாக இருப்பதில்லை. ஆனால் பெண், அப்படி கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதைப் பல சங்கப் பாடல்களால் உணரலாம். எனினும் ஒளவை, வெள்ளிவீதியார் பாடல்களில் அகமொழி இயல்பாய் வெளிப்பட்டிருந்தாலும் எண்ணிக்கையில் குறைவு. ஆனால் வீரியமிக்கப் பாடல்களாக இருப்பதை மறுத்துவிட முடியாது.

பெண்களின் அகஉணர்வுகள் ஆண்களின் மொழிவழி வெளிப்படுத்தப்பட்டதைப் போல, அவர்களால் உருவாக்கப்பட்ட எல்லைக்கு வெளியே நின்று பெண்கள் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்வது விமரிசனத்திற்குட்படுகிறது. இந்த முரணைப் பெண்ணியவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு, எனது அனுபவம் எனது ப்ரத்யேக மூலப்பொருள். இதிலிருந்துதான் என்னடைய கவிதை தீர்மானிக்கப்படுகிறது. அக பெண்களுக்கே உரிய அனுபவம் இருக்குமே அதிலிருந்துதானே அவர்களின் கவிதைமொழி உருவாகக் கூடும் (சுகுமாரன், திசைகளும் தடங்களும், V. 51) என்கிற சுகுமாரன் கூறும் கருத்து, பெண்ணியக் கோட்பாட்டை வரையறுக்க உதவிடும்.

பெண் உடலைப் பெண்ணிடமிருந்து பிரித்து அதை ஆணினுடைய உடலாகப் பார்க்கும் ஆணியக் கட்டமைப்பைச் சிதைத்துப் பெண் தன் உடலை மீட்பதில் பெண்ணியக் கோட்பாடு உருவாக்க முடியும்.
பெண் உடல் மீட்புக்கு,

விசும்பு விசைத்து எறிந்த கூதனங் கோதையின் / ... ... / நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் / நம்முடைய உலகம் உள்ளார் கொல்லோ? / முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுலை / அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரன் முடி / ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை / ஆராக்காதல் அவிர்தளிர் பரப்பிப் / புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம் / நிலவரை எல்லாம் நிழற்றி / அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே” (ஒளவை, அகம்-273)

முலையிடை முளைவிட்ட நோய் நெஞ்சில் /வேர்விட்டு, அம்பலாகிய கிளை கிளைத்து / காதல் தளிர் பரப்பி, புலவர்கள் புகழும் / நாணம் இல்லாத பெரிய மரமாக மாறி / நிலம் முழுவதும் பரவி அலரையும் அரும்பையும் / பூத்து நிற்கின்றது. நோய்க்குக் காரணமான / தலைவன் மட்டும் வரவில்லை என்று கூறுகிறது
மேற்சொன்ன பாடல்.மற்றொரு பாடலில்

முட்டுவென் கொல் தாக்கு வென்கொல் / ..... .... / அலமரல் அசைவளி அலைப்பவென் / உயவு நோய்றியாது துஞ்சும் ஊர்க்கே (ஒளவை, குறுந் - 281).

காமம் மிகுதியாக, முட்டிக் கொல்வேனோ எனப் பெண் புலம்புவதாக மற்றொரு பாடல் இடம் பெற்றுள்ளது.
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி /இடைப்படை யழுவத்துச் சிதைந்த வேறாகிய / சிறப்புடையாளர் மாண்பு கண்டருளி / வாடுமுலை யூறிச் சுரந்தன / ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே
(ஒளவை-புறம்: 295)

போர்க்களத்தில் இறந்த மகனை, அவனது வீரத்தைக் கண்டு மகிழ்ந்தபோது அவளுடைய வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தது என்று ஒளவை பதிவு செய்திருப்பது தனி மனித காமம் X சமூகக்காதல் என்ற அடிப்படையில் சமூக விழுமியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னும் உண்ணாது கலத்தினும் படாஅது / .... .... /பசலை உணீய வேண்டும் / திதலை அல்குல் என் மாமைக் கவினே -- (வெள்ளிவீதியார், குறுந் - 27) என்ற பாடலிலும்

பெண்ணுடல் காமவயப்பட்டிருக்கும்போது உடல் மாற்றமடைவதை அந்தரங்கமான மாற்றத்தை
விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நலியாழ் / யாமம் உய்யாமை நின்றன்று / காமம் பெரிதே கலைஞரே இலரே
(வெள்ளிவீதியார், நற் - 335)

என்ற பாடலில் அலை பொங்க, கரையுடைத்துப் புறப்படும் கடல், மலர்ந்து மணம் வீசும் தாழைமலர், கரிய பனையில் மோதும் காற்று, எலும்புருக்க கத்தும் அன்றில் பறவை, யாமம் வரை வாசிக்கப்படும் யாழ் எல்லாவற்றிலும் பெரியது என் காமம் என்று கூறும் பாடலிலும் கூறப்பட்டுள்ள பெண்ணின் காமம் பெண்ணிற்குக் கூறப்பட்டுள்ள கற்பு ஒழுக்கத்திற்கு மாறானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கற்பெனப்படுவது / உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் / செயிர்திர் காட்சிக் கற்பு சிறந்தன்று எனத் / தொல்லோர் கிளவி (தொல்-3 நூற்பா-23)

என்ற நூற்பாவில் கற்பின் திறம் சுட்டப்படுகிறது. ஒரு பெண் தன் உயிரைவிட நாணத்தைப் போற்ற வேண்டும். அந்நாணத்தை விட கற்பு சிறந்தது என்பதை உணரவேண்டும். அதைப் பாதுகாக்கவேண்டும். ஆதலால் கற்பைப் பேணுவதற்கு உயிர் நாணம் இவற்றைவிட வேண்டி இருந்தால் தயங்குதல் கூடாது என்று தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. எனவே கற்பொழுக்கம் தலைவனைப் பேணுதல், அவனை மதித்தல், அவனை வழிபடுதல், அவன் பரத்தமைப் பேணினாலும் பொறுத்திருத்தல் என்றளவில் பெண்ணுக்கு வலிந்துரைக்கப்பட்ட கற்பு கோட்பாடு மேற்குறிப்பிட்ட பெண்பாற் புலவர்களின் பாடல்களில் மாறுபடுகிறது. கற்பு என்பது புனிதமாகப் பார்க்கப்படுகிறது. காமம் சமூக நெறிமுறைக்கு எதிரானதாக விளக்கப்படுகிறது.

ஆண் உறுதிபடுத்திய கற்பு கருத்தாக்கம் மற்றும் பெண் தங்கள் உடல்சார்ந்து சமூகத்திற்கு வெளிப்படையாகப் பதிவு செய்த காமம் கருத்தாக்கம் (கற்பு X காமம்) கற்பைப் பெண்ணுக்குரியதாகவும், காமம் ஆணுக்குரியதாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பெண்ணின் காமம் அலராக்கப்படுகிறது. ஆணின் காமம் அதிகாரமாக்கப்படுகிறது. அலர், பெண்ணைப் பழிக்கப் பயன்படுகிறது. ஆணிற்கு அதுவே மதிப்பை நல்குகிறது. எனவே, சங்க இலக்கியத்தில் பெண்ணியத்தைக் கோட்பாடாக்க எடுக்கும் ஆய்வுக்கு கற்பு X காமம் கருத்தாக்கம் அடிப்படையை அமைத்துத் தருகிறது. இதன்மூலம் புனிதங்கள் கட்டுடைக்கப்படலாம். பெண்ணின் மீட்சி புதுப்பிக்கப்படலாம். பெண் உடல் அதிகாரப் படுத்தப்படலாம்.

பெண் விடுதலையும் குடும்பமும்



மனித சமுதாய வரலாற்றில், சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால், செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல கருத்தாக்கங்களை, இன்றைய சமூகச் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. மனித இனத்தில் சாதியின் அடிப்படையிலும்,இனத்த்pன் அடிப்படையிலும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும், புனையப்பட்ட கருத்தமைவுகளையும் புரிந்து கொள்வதற்கு இன்றைய புதிய சிந்தனைகள் அடித்தளமாய் அமைந்துள்ளன. இப் புதிய சிந்தனைகள் வழிப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றே பெண்ணியமாகும். பெண்களுக்குச் சமூகத்த்;pல் உரிய இடம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்- பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது .இந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது? பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள்? எங்கு அவள் உரிமை மறுக்கப் படுகிறது? அவளுடைய சுதந்திரம் பறி போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதில் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடிகின்றது. ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள்.
தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெண்களை, தங்களின் இருப்பை, ஆளுமையை, உணர்ந்தவளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆளுமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைத் தொடரவே செய்கின்றது. அதனால் அவள் தன் இருப்பைத் தீவிரமாக உணர்த்த முயலுகின்றாள.; மாறி வரும் இந்நிலையை ஆண்களும் அறியத் தொடங்கியுள்ளனர். நடைமுறை வாழ்க்கையில் இவ்வறிதல் பெண் விடுதலை பற்றிய உணர்வாகச் சமூக எழுச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. எந்த அழுத்தமும் காலத்தால் விடுபட்டு வெளியேறுவதைப் போல், சமூக மாற்றங்களும், சமுதாய சீர்த்திருத்த இயக்கங்களும், புரட்சியாளர்களும் முன் வைத்த அறைகூவல்கள் பெண்ணுலகை விழித்தெழச் செய்துள்ளன.
பெண் விடுதலை:
நிலப்பிரபுத்துவ சமுதாயம் முதல் குறிப்பிட்ட காலகட்டம் வரை மனித இன மறு உற்பத்திக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டப் பெண், பின்னர் கூடுதலாக புதிய தொழில் மய சமுதாயத்தில் பொருள் உற்பத்தியிலும், மேற்கத்திய கலாச்சாரம் இவற்றின் தாக்கத்தால் பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பெண்கள் தங்கள் இருப்பினை உணரத் தொடங்கினர். இந்நிலையில் தாங்கள் அடிமைப்பட்டிருப்பதற்கான காரணங்களையும், தீர்வுகளையும், வழி முறைகளையும் யோசித்த நேரத்தில் பெண் விடுதலை சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. பெண்ணடிமை என்பது சமூகத்தில் பெண்களின் இருப்பைக் குறிக்கும். பெண் விடுதலை என்பது பெண்கள் வாழ்வின் இறுதி நோக்கம். பெண் உரிமை என்பது விடுதலை அடைவதற்கான வழிமுறையாகும். பெண் தனக்கான உரிமையை உணர்ந்து அதன்படிச் செயல்படத் தொடங்கும் போது அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் சுதந்திர வாழ்வு மேற்கொள்ள முடியும் என்ற சிந்தனையை உணரத் தொடங்கியுள்ளனர்.
‘பெண் விடுதலை என்பது, பெண் கல்வி, பணி வாய்ப்பு முதலானவற்றில் சம உரிமை பெற வேண்டும் என்பது கருத்தில் கொள்ளப்படுகின்றன. குடும்ப, சமூக, தொழில் நிறுவனங்களில் பெண் அடக்குமுறையை அறிந்து, தளைகளிலிருந்து மீட்சி பெறுவதை இச்சொல் அர்த்தப்படுத்துகிறது’1 என்கிறார் அரங்க மல்லிகா. மேலும்,
‘பெண் விடுதலை கோட்பாட்டிற்கு, ஆணுக்கு இருக்கும் அதே சமூக, பொருளாதார, உரிமைகளைப் பெண்ணும் அனுபவிப்பதற்குரிய சுதந்திரம்’2 என்று கமலி சுட்டிக் காட்டியுள்ளார்.
பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்த்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் குறிப்படத்தக்கது. இது பெண் என்பவள், ஆணின் போகப்பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி, பெண்ணினம் தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவி புரிந்தது. பெண்கள் மீதான மரபு ரீதியிலான கருத்தாக்கங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பற்றியும், அதிலிருந்து விடுபடும் விடுதலைப்பற்றிய விழிப்புணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பெண் விடுதலைச் சிந்தனைகளை முன் வைத்து எழுந்த புரட்சியின் மூலம் உணரலாம். பெண் விடுதலைச் சிந்தனைக்குக் காரணமாக இருந்தவர்கள் இந்திய மரபையும், இந்து மதத்தையும், வேதங்களையும், சாதியத்தையும்,பார்ப்பணியத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பெரியார், ஜோதிபாபூலே முதலானோர் கற்பு,குடும்பம் முதலான கருத்தாக்கங்களை முதன் முதலாகக் கேள்விக்குட்படுத்தி பெண் விடுதலைக்கு வித்திட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்..
பெண் விடுதலைக்கானத் – தடைக்கற்கள்
இன்றைய சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுவது குடும்பம் என்ற அமைப்பு எனப் பெண்ணியவாதிகள் நம்புகின்றனர். குடும்பம் என்பது ஒரு அதிகார உறவுகளின் படிநிலை கொண்ட (தலைவன், தலைவி, குழந்தைகள்) ஆணாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு முறையாகும். காலம் காலமாகக் குடும்பச் சூழலில் ;சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அதிலிருந்து விடுபட முடியாதபடி பொருளாதார உரிமையின்மை, பெற்றோரைச் சார்ந்து வாழும் படி கட்டமைக்கப்படும் சமூக ஒழுக்கம், பெண்கள் தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத சாதிய குடும்ப அமைப்பு முதலியவற்றின் காரணமாக, பெண்ணின் சுய அறிவும், இயல்பும் சுதந்திரமானதோர் ஆளுமை பெற்று விடாவண்ணம், கணவனும், புகுந்த இடமும் அடக்குகின்றன. ‘குடும்பம் என்பது விலங்கு. அடிமை நிலையை மட்டுமன்று நிலவுடைமையின் அடிமைத்தளத்தையும், உள்ளடக்கியது. அத்தோடு சமூகத்திலும், அரசியலிலும் பின்னர் ஏற்படப் போகும் பகைமை அனைத்தையும் உள்ளடக்கிய சிறுவடிவம் குடும்பமே’3 என்று காரல் மார்க்ஸின் மேற்கோளைக் சுட்டிக் காட்டி பெண் விடுதலைக்கு குடும்பம் என்ற நிறுவனமே தடையாக இருப்பதாக வாதிடுகின்றார் செ. கணேசலிங்கன்.
பெண் விடுதலைக்குத் தடைக்கல்லாக இருப்பவை ‘குடும்பம்’ என்ற நிறுவனமே எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும், அந்நிறுவனத்தில் காணப்படும் திருமணம் என்ற உறவே அடிப்படைத் தடை என்பர் பெண்ணியலாளர்கள். இதையே, ஜான் ஸ்டூவர்ட் மில் தன் பெண்ணடிமை என்ற நூலில் ‘திருமணம் என்ற நிறுவனம் பெண்ணுக்கு மிகப் பாதகமானது. பெண்ணடிமைத்தனத்திற்கு இத்திருமணமே காரணமாக உள்ளது என்;;;றும் இவற்றைப் போக்கினாலொழிய பெண் விடுதலைக்கு வழியில்லை’ 4என்று குரல் எழுப்பியுள்ளார்.
மேலும் திருமணம் என்ற அமைப்பிற்குள் (வந்த பின்) அவளின் பங்களிப்பு (அ) கடமைகள், குடும்ப அமைப்பு, சொத்து முறைகள். உறவு போன்ற இவை எல்லாம் (வழிவியாக வந்த) மரபு, சட்டம் ஆகியவற்றால் ஆளப்படுகின்றன. குடும்பத்திற்குள்ளேயே அவளின் பாலின வேறுபாடு ளுநஒ னுளைஉசiஅiயெவழைn) காரணமாக எழும் பணி வேறுபாடுகள், வரையறைகள், வௌ;வேறு நிலைகளன்களுக்கு அவள் கோரும் உரிமைகள், விடுதலை, மதிப்பு போன்றவை சமூக விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறாக, பெண் என்பவளின் விடுதலைக்குத் தடைக்கல்லாகக் காணப்படுவது குடும்பம் என்னும் நிறுவனமே என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தடைக்கல்லில் இருந்து விடுதலை அடைவதற்கான வழிமுறையையும் ஆராய முனைந்துள்ளனர்.
விடுதலை அடைய
ஆண் - பெண் என்ற பாலின வேறுபாடே, பெண் உடல் உழைப்பு மற்றும் அறிவுத் தலைமையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதற்குக் காரணமாக ஆணாதிக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆணாதிக்கம் கட்டமைப்பே குடும்பம் என்ற நிறுவனத்தில் அடித்தளமாக அமைந்துள்ளது. குடும்பம் என்ற நிறுவனத்திலிருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதை பல சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை கற்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வீட்டுக்குள் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆண்களின் மேலாதிக்கம் ஒழிக்கப்பட்டு குடும்ப அளவில் இருபாலினரும் சம அந்தஸ்து பெற்றால், பிற சமுதாயத்திலும் அ.ஃது மாற்றத்தையே விளைவிக்கும். வீட்டிற்குள் ஒரு பெண் பெறும் விடுதலையே பெண் விடுதலையின் தொடக்கமாக அமையும்5 என்கிறார் நிர்மலா ராணி.
பெண் விடுதலை குறித்து பெரியார்
ஆண்மை அழியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்று கூறிய பெரியார், பிள்ளைப் பெறுகின்ற பொறுப்பைச் சுமப்பதாலேயே நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க நேர்கிறது என்றார். எனவே கர்ப்ப வாசலை அடையுங்கள் என அவர் பெண்களிடம் கூறினார்.மேலும் விவகாரத்துச் சட்டம் பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக் கருவி என்றும் எடுத்துரைத்துள்ளார். பெண்கள் சாதி சடங்குகளைத் தாண்டி நிற்க வேண்டும் என்றும், அப்படி நின்றாலே விடுதலை சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார். மொத்த சமூக அமைப்பும் அடிமைப்படுத்துவதைச் சுட்டிக்காட்டும் பெரியார், ‘இருக்கின்ற சமூக அமைப்பு ஒத்து வராத போது, வாழ்நாள் முழுவதும் அதில் அடங்கி இருந்து அடிமை வாழ்வு வாழத் தேவையில்லை, ஒத்து வராத அமைப்பைத் தூக்கி எறிந்து விட்டு நமக்கு ஒத்து வரும் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்’6 என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலை நாடுகளில் பெண் விடுதலைக் கொள்கையின் அடையாளங்களாக விளங்கிய, ‘ஆண் துணை மறுத்துப் பெண் வாழுதல், மண விலக்கு, கருக்கலைப்பு செய்து கொள்ளுதல் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா?’ என இந்தியப் பெண்களின் மனதில் ஏற்பட்ட தடுமாற்றத்தையும், அவை குறித்து எழுந்த விவாதங்களையும், பெண்ணியச் சிந்தனையாளர்கள் முன் வைத்துள்ளனர். பெண் விடுதலையானது, குடும்பம்,சமூகம் முதலிய நிறுவனங்கள் பெண்களின் சுயத்தை அடிமைப்படுத்தும் போது, அதிலிருந்து வெளியேறுவதனால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இக் கொள்கையின் அடிப்படையில் உருவான பெண்ணியக் கொள்கையானது தீவிரவாதப் பெண்ணியச் சிந்தனையை முன் வைத்துள்ளது. ஆனாலும் தமிழ்ப் பண்பாட்டில் இப் பெண்ணியக் கொள்கைக்குப் பலவிதமான எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. தமிழ்க் கலாச்சாரத்தை முன் வைத்து பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் பரவத் தொடங்கின.
‘விடுதலை என்பது சுயமானது. யாரும் யாரிடமிருந்தும் பெற வேண்டியதில்லை’7 என்ற அடிப்படையில் பல சிந்தனைகள் தோன்றியுள்ளன. அதனை அடியொற்றியே, ‘விடுதலை என்பது பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானது செய்யலாம் என்பதாகும்’8 என்கிறார் ஹெர்பர்ட் ஸ்பென்ஸா.; ஆனால் தந்தையாண் சமுதாய விதியில் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார உற்பத்தியில் பங்கு பெற்றாலும், பெண்களின் சுயச் சார்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்கள் சுய ஆளுமை பெறா வண்ணம் குடும்பம், பணியிடம் சமூகம் போன்ற நிறுவனங்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற தடுமாறும் நிலையையும், விடுதலைப் பெற்ற பின்னர் சந்திக்கும் சிக்கல்களையும் பெண் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். பெண்களின் பிரச்சினைகளைப் பெண் எழுத்தாளர்களில் சிலர் ஆழமாகவும், சிலர் போராட்ட முனைப்புடனும், சிலர் தனக்கானப் பிரச்சினையாகவும் பதிவு செய்துள்ளனர். இப் பெண் எழுத்தாளர்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ள விதம் எத்தகையது என்பதையே இவ்வியல் ஆய்வு செய்கின்றது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளில், இடம் பெறும் பெண் விடுதலை குறித்த சிந்தனைகளில் குடும்பம் என்னும் நிறுவனம் எவ்வாறு தடைக்கற்களாகச் செயல்படுகின்றன என்பதையும், அதிலிருந்து விடுதலை பெற பெண்கள் போராடும் நிலையையும், விடுதலைப் பெற்ற பெண்கள் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையையும்., தடைக்கற்களினால் இன்னல்களுக்கு உள்ளான பெண்களின் வாழ்வினையும் பெண் படைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள முறையினைக் காணலாம்.
குடும்பம்:
பொதுவாகக் குடும்பம் பற்றிக் குறிப்பிடும் பொழுது பலவிதமானக் கருத்துக்கள் நிலவுகின்றன. ‘குடும்பம் தலைமுறை தலைமுறையாகப் பண்பாட்டு மரபுரிமையைக் கொண்டு செல்லும் ஒரு செயலி’9 என்று சுட்டுவர். கணவன் - மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகளின் உச்சக்கட்ட முரணாகக் குடும்ப அமைப்பில் சிக்கல் ஏற்படுகின்றன. இம் முரண்பாட்டினை, ‘எல்லாக் குடும்பங்களிலும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. இஃது எசமானுக்கும் அடிமைக்கும் இடையில் முதலாளிக்கும் தொழிலாளிக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு போன்றதே’10 என்று செ. கணேசலிங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக கருதப்படும் குடும்பம் எனும் நிறுவனத்தில் அடிப்படையாகக் காணப்படும் கணவன் - மனைவி, பெற்றோர் தம் பிள்ளை ஆகிய உறவுகளுக்கு இடையே சிக்கல்கள் தோன்றியுள்ளன. இச்சிக்கல்களினால் ஏற்படும் முரண்பாடான வாழ்வு சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
கணவன் - மனைவி உறவு:
குடும்ப நிறுவனத்தில் கணவன் - மனைவி மீது ஆதிக்கம் செலுத்துகின்றான். கணவனின் துன்புறுத்தல்களைப் பெண் எவ்வளவு தான் ஏற்றுக் கொண்டிருப்பினும், ஒரு கட்டத்துக்குப் பிறகு எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பான ஒன்றாகும். அப்படியான எதிர்த்தாக்குதல்; நிலையினை, வாஸந்தி, திலகவதி அனுராதா, பாமா ஆகிய படைப்பாளர்கள் படைத்துக்காட்டியுள்ளனர்
மனைவியைப் போதைப் பொருளாகவும,; உடைமைப் பொருளாகவும் கருதும் ஆண்களையும் அதில் சிக்கித் தவிக்கும் பெண்களின் மனவுணர்வையும் வாஸந்தி, ‘அனுமானங்கள் நம்பிக்கைகள்’, ‘தேடல்’ ஆகிய இரு சிறுகதைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாஸந்தியின் ‘அனுமானங்கள் நம்பிக்கைகள்’ கதையில், ராமகிருஷ்ணன்-மாலதி தம்பதியினர். பணத்தையே வாழ்வாகவும்,மனைவியைஉடைமைப் பொருளாகவும் கருதுபவன் ராமகிருஷ்ணன். இயற்கையின் மீது கணவனின் பணத்தாசையை வெறுப்பவள். இவர்களின் மகன் சூர்யா. சூர்யாவின் பள்ளி விடுமுறைக்காக, சூர்யாவைத் தன் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல ராமகிருஷ்ணனிடம் தன் சுயத்தை இழந்து, அனுமதி பெறுகின்றாள். கிராமத்து அழகில் மயங்கி சூர்யாவும், மாலதியும் இன்பமாக நாட்களைக் கழிக்கின்றனர். இந்நிலையில் இரவு ஏற்படும் காய்ச்சலால் சூர்யா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றான். ராமகிருஷ்ணனும், அவனது தாயாரும் மாலதியால் தான் சூர்யா இறந்து விட்டதாகக் கூறி, அவளைக் கொடுமைப் படுத்துகின்றனர். கணவனின் கொடூரச் சொற்களைத் தாங்கமுடியாமல், சூர்யாவின் இழப்பைத் தாங்க முடியாமல், மீண்டும் கிராமத்திற்குத் தன் தாய் வீட்டிற்கே வந்து விடுகின்றாள் மாலதி. அங்கு செல்லும் மாலதி, தான் கர்ப்பமுற்று இருப்பதை அறிந்து, சூர்யாவின் வரவாக எண்ணி மகிழ்கின்றாள்.(வாஸந்தி,வாஸந்தி கதைகள்:2005:பக்.299-323)
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் மாலதி, இயந்திர வாழ்வு வாழும் ராமகிருஷ்ணனிடமிருந்து முரண்படுகின்றாள். மகனின் இறப்பு, தற்செயலாக நிகழ, ஆறுதல் அளிக்காமல், தன் மீது குற்றம் சுமத்தும் கணவனை விட்டுப் பிரிகின்றாள். தன்னுடைய கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுத்த கணவனிடம்,
‘என்னுடைய வேர்கள் சில இன்னும் அங்கே இருக்கிறது. ஒரேயடியாய் என்னால் பிய்த்துக் கொண்டு வரமுடியாது, நீங்க என்னை மனுஷியாகப் பார்க்கவில்லை. வெறும் பண்டமாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் வாங்கிக் கொண்டு வந்துவிட்ட பண்டம். உங்களுடைய உடைமையாகிப் போன பண்டம். எண்ணங்களும், ஆசைகளும் ஏக்கங்களும் இருக்க லாயக்கற்ற பண்டம்’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.314) என்று குறிப்பிடுகின்றாள். பணத்தையே உயர்வாகக் கருதி, மனைவியின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற விரும்பாமல், சுய நலத்துடன் செயல்படுபவன் ராமகிருஷ்ணன். கணவனின் குணத்தைப் புரிந்து கொண்டு, மகன் சூர்யாவின் வாழ்விற்காக, பொறுமையுடன் வாழும் மாலதி, சூர்யாவின் இறப்பிற்குத் தன்னைக் குற்றம் சுமத்தி, வார்த்தைகளால் சித்ரவதைச் செய்யும் கணவனிடம் இருந்து விலகுகின்றாள்.
இதே நிலையினையே வாஸந்தி மற்றொரு தளத்தில் ‘தேடல்’ கதையில் விளக்கியுள்ளார். ஜனனி கணவனின் ஆதிக்க உணர்வின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றாள். அங்கு ஜனனி மனநலம் சரியான நிலையில்,
‘சத்தியமா உங்க இஷ்டத்திற்க்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுத மாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ பிளீஸ் -எனக்கு வேற போக்கிடமில்லே’(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.177) என்று கதற, ஜனனியின் கணவன் அவளை விவகாரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை மறுமணம் செய்வதாகக் கூறுகின்றான். அன்று இரவு கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருந்தும், கணவனின் சுயநலத்திற்காக தான் ஒதுக்கப்படுவதை உணரும் ஜனனி, மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து புதிய தேடலுடைய வாழ்வை எதிர் நோக்கிச் செல்லுகின்றாள்.(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்.164-178)
மேற்குறிப்பிட்டப்பட்ட கதைகளில் இடம் பெறும் மாலதி, ஜனனி ஆகிய இருவரும் கணவனால் உடைமைப் பொருளாகக் கருதப்படுகின்றனர். கணவனின் சுயநலத்தினை உணர்ந்த பின், கணவனை விட்டுப் பிரிந்து சுதந்திரமான வாழ்வை நோக்கி பயணிக்கின்றனர்.
இதைப் போன்று மற்றொரு தளத்தில்; மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவனின் ஆதிக்க உணர்வினையும், அதனால் மனம் வருந்தும் மனைவியின் மனநிலையினையும் வாஸந்தியின் ‘எல்லைகள்’, ‘வழக்கு’ ஆகிய சிறுகதைகள் பதிவு செய்துள்ளன.
வாஸந்தியின், ‘எல்லைகள்’ கதையில் திருமணமாகி முப்பது வருடமாகியும் ஐம்பது வயதான யசோதாவின் மீது சந்தேகப்படும் கணவன் சர்மா. யசோதா எந்த ஆணுடன் பேசினாலும், சந்தேகப் பார்வையாலும், பேச்சாலும் யசோதவை ரணப்படுத்துபவன். சர்மாவின் சந்தேகம் அதிகமாகிய நிலையில் அவனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றாள். அங்கு மருத்துவன் யசோதாவின் பொறுமையே சர்மாவைக் குணப்படுத்தும் என்று குறிப்பிடுகின்றான். வீட்டிற்கு வந்த பிறகும் சர்மா பக்கத்து வீட்டு ஆண்களுடன் யசோதாவை இணைத்துப் பேசுகின்றான். இதைக் கண்ட யசோதா,
‘இவருக்கு ஏதும் பிரத்தியேக வியாதி இல்லை. ஆதி மனிதன் காலத்திலிருந்து பிடித்திருக்கும் வியாதி இது. அவள் குனியக் குனிய அதிகமாகக் கூடிய வியாதி ….. இந்த மாதிரி ஒரு ஆணியிடம் அன்புப் பிச்சைக் கேட்பதும், தோழமை வேண்டி நிற்பதும் கூட ஒரு வியாதி தான்’9 (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.414) என்று உணர்ந்தவாறே யசோதா கையில் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: பக்:396-415)
இதே கருவினையே, வாஸந்தி ‘வழக்கு’ கதையில் கிருஷ்ணனின் இரண்டாம் மனைவி கௌரி. கிருஷ்ணன் கௌரி, தன் மூத்த மனைவியின் மகளான மாலினியை சித்திக் கொடுமைக்கு ஆளாக்குபவள் என்று சந்தேகிக்கின்றான். இந்நிலையில் திருமணம் நிச்சயமான மாலினி, காய்ச்சலில் அவதிப்பட்டு, எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றாள். வெளியூர் சென்று விட்டு திரும்பும் கிருஷ்ணன், மாலினியின் இறப்புக்கு கௌரியின் மீது குற்றம் சுமத்துகின்றான். இதனால் மனம் நொந்த கௌரி,
‘ஒரு ஜன்மத்தை விரயம் செய்தது போல இருந்தது. இந்த மனிதனின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று சதா சர்வ காலமும், பட்ட கவலையும், தாங்கிக் கொண்ட அவமானமும் இன்று மாலினியின் உடம்போடு மின்சாரத்தில் பஸ்பமாகி விட்டதாகத் தோன்றிற்று’(வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005: ப.429) என்ற உணர்வுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள் கௌரி. (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்:416-430)
யசோதா, கௌரி ஆகிய இருவரும் வயதான நிலையிலும் கணவனின் சந்தேக உணர்வுக்கு ஆளாகுகின்றனர். யசோதாவை பிற ஆண்களுடன் இணைத்தும், கௌரி ‘சிற்றன்னை’ என்ற காரணத்திற்காகவும், சந்தேக நிலைக்கும் ஆட்படுகின்றனர். இருந்த போதிலும்; கணவனின் நன்மதிப்பைப் பெற பொறுமையுடன் செயல்படுகின்றனர். இறுதியில் சந்தேக உணர்வு வலுப்பெறும் நிலையில், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனைவியின் உணர்வினைப் புரிந்து கொள்ளாத கணவனின் ஆதிக்க மனநிலையையும், அதனால் வாழ்நாள் முழுவதும் மனவேதனைக்கு உள்ளாகும் பெண்களின் நிலையையும் வாஸந்தி படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பெண்களின் கலை உணர்வுகளை லாப நோக்கிற்காகப் பயன்படுத்தும் ஆண்களின் உணர்வினையும், அதிலிருந்து விடுதலை அடையத் துடிக்கும் பெண்களையும் திலகவதியின் ‘கவசம்’, வாஸந்தியின் ‘சதுரங்கம்’ ஆகிய இரு கதைகள் எடுத்துக் காட்டியுள்ளன.
‘சதுரங்கம்’ கதையில் அனுசுயா வேசியின் மகள். அவளை அதிலிருந்து மீட்டெடுத்து மணம் செய்து கொண்டு, பாடகியாக்குகின்றான் மூர்த்தி. இதனால் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் அனுசியா செயல்படுகின்றாள். அனுசியாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூர்த்தி, அவள் வேசியின் மகள் என்பதால் உடல் ரீதியான ஆதிக்கத்தைச் செலுத்துவதில்லை. இந்நிலையில் ‘உனக்கு எந்த அபரிதமான அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுக்க நான் தயாராக இல்லை என்றது பார்வை. நீ என் மனைவியாக இருப்பது எனது சௌகரியத்துக்காக என்றது பேச்சு’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:ப.334)என்ற நிலையில் மூர்த்தியின் செயல்பாடு அமைகின்றது. இந்நிலையில் மூர்த்தியின் நண்பன் ஸ்ரீனிவாஸன் அனுசுயாவின் தனிமையைப் பயன்படுத்தி அவளுடன் உறவாடி ஏமாற்றிவிடுகின்றான். தான் ஏமாற்றுப்பட்டதை உணர்ந்த அனுசுயா, ஸ்ரீனிவாஸனுடனான உறவை துண்டித்துக் கொள்கின்றாள். இதனால் வியாபார ரீதியாக ஏற்படும் இழப்பிற்காக மூர்த்தி அனுசுயாவைத் திட்டுகின்றான். இந்நிலையில் கர்ப்பமுறும் அனுசுயா,
‘இது நாள் வரை என்னை நீ அவமானப் படுத்தியதை நான் தாங்கிக் கொண்டேன். என் சிசுவை நீ அவமானப்படுத்தினால் அதை நான் தாங்க மாட்டேன். இதனால் தான் போகிறேன் மூர்த்தி….. நீ எட்ட முடியாத தொலைவுக்கு….. தன்னிச்சையாய்ப் பறக்கும் அந்தப் பட்சி மாதிரி….’ (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:ப.342) என்கின்றாள்.
அனுசுயா குரல் வளத்தினை உபயோகித்து, பெரிய பாடகியாக்குகின்றான் மூர்த்தி. மேலும் பாடல் வாய்ப்பிற்காக அனுசுயாவை தவறாகவும் பயன்படுத்த முயற்சி செய்கின்றான். இங்கு அனுசுயா, தன் வாழ்வை வளமாக்கியதற்காக மூர்த்தியிடம் அடிமைப்பட்டு கிடக்க, அனுசுயா ஸ்ரீனிவாசனால் கர்ப்பமுற்ற நிலையில், மூர்த்தியிடம் இருந்து குழந்தையின் வாழ்வுக்காகப் பிரிகின்றாள். (வாஸந்தி, வாஸந்தி கதைகள்:2005:பக்:324-342)
மற்றொரு தளத்தில் திலகவதியின் ‘கவசம்’ சிறுகதையில் வரும் வந்தனா சிறுவயதிலேயே ‘ஆண்ட்டியிடம்’ விற்கப்படுகின்றாள். ஆண்ட்டி என்பவள் பாலியல் தொழிலில் இசை முதலிய கலைப் பயிற்சியளித்து வளர்க்கின்றாள். நாளடைவில் வந்தனா புகழ்பெற்ற சினிமா நடிகையாகின்றாள். இயக்குநர் நம்பியைக் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றாள். இருவரும் சேர்ந்து இயக்கும் புதுப்படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. படத் தோல்விக்குப் பிறகு நம்பி புதுப்படம் எடுக்க முயற்;சி மேற்கொள்கின்றான். புதுப்பட முயற்சிக்கு ‘பொன்வேலு’ என்பவனுக்கு வந்தனாவை விருந்தாகும் படி கூறுகின்றான். இதைக் கேட்ட வந்தனா,
‘என்ன குறை வச்சேன் இவருக்கு? உயிரைத் திரியாக்கி எரிக்கவில்லையா? கேட்ட போதெல்லாம் பணத்தை வாரிக் கொடுக்கவில்லை? எருமைகள் சேற்றுக் குட்டைகளில் சுகம் காணுவது போல, இவர் இரவைக் கழித்த பெண்களுக்குக் கூட பணத்தைக் கொடுத்து அழவில்லையா? இவர் வேண்டாம் என்று நினைத்ததற்காக வயிற்றில் வளர்ந்த இவருடைய பிள்ளையைச் சிதைக்கவில்லையா ….. கடைசியில் அத்தனைக்கும் பதிலாக புருஷன் மனைவிக்குச் செய்கிற கடைசி பட்சக் கொடுமையை செய்யவும் எப்படி அவரால் முடிந்தது’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.497) என்று வினாவுடன் இருளில் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள் வந்தனா (திலகவதி, ‘திலகவதிகதைகள்’, 2002: பக்:489-497).தன் தொழிலில் முன்னேற்றுவதற்காகத் தன்னை விற்கத் துணியும் கணவனிடமிருந்து விலகுகின்றாள் வந்தனா. மனைவியின் உணர்வுகளை மதிக்காமல், தன் சுயநலத்திற்காக, கணவன் என்ற ஆதிக்க உணர்வுடன் செயல்படும் உறவு நிலையில், பெண் விடுதலை நோக்கி பயணிக்கின்றனர்.
கட்டிய மனைவியை விட்டுவிட்டு பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்களின் சுயநலத்தினால், இன்னலுக்கு ஆளாகும் பெண்களின் நிலையை திலகவதியின், ‘அம்பிகா அப்பாவுமான போது’, அனுராதாவின் ‘தொப்புள் கொடி’ சிறுகதைகள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
திலகவதியின் ‘அம்பிகா அப்பாவுமான போது’ கதையில் கணவன் வாசுதேவனுக்கு சேவை செய்யும் பெண் அம்பிகா. இருந்தாலும் வாசுதேவன் கோகிலா என்னும் பெண்ணுடன் தொடர்பு கொள்கின்றான். ஊர்ப் பஞ்சாயத்தில் அம்பிகாவுடன் வாழ விருப்பமில்லை என்றும், அவளுக்கு ஜீவனாம்சம் தருவதாகவும் கூறுகின்றான். அதற்கு அம்பிகா,
‘என்னால முடியாது. இதுக்கு அப்புறமும் நான் அவரோட சேர்ந்து பொழக்கிறதுண்ணா அது விபச்சாரம் செய்யறாப்பல தான். என்னுடைய தேவைங்களுக்காக, என்னையே விக்கறது மாதிரி தான்.’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப:61) என்று கூறி விட்டு, கர்ப்பிணிப் பெண்ணாய் ஊரை விட்டு, வெளியேறுகின்றாள். தன் தோழி லட்சுமியின் வீட்டில் அடைக்கலமாகின்றாள். தோழியின் துணையோடு தையல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, ஆசிரியர் பயிற்சியில் படித்து, பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றாள். தன் மகன் விவேக்கிற்கு தாயும் தந்தையுமாகச் செயல்பட்டு, அவனைக் கலெக்டராக்குகின்றாள். கணவனைப் பிரிந்த அம்பிகா, தன் சுயத்தை உணர்ந்து, உழைத்து முன்னேறி, தன் மகனையும் வெற்றி பெற்ற மனிதனாக்குகின்றாள் (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.55-76)
இந்த கதைக் கருவையே மற்றொரு வார்ப்பில் அனுராதா தொப்புள் கொடி கதையில் உருவாக்கியுள்ளார்.தாமரையை விலக்கி விட்டு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொள்கின்றான் கணேசன். பொறுமையுடன் எவ்வளவு கூறியும் கணேசன் வேறு பெண்ணுடன் கூடிய தொடர்பை விலக்க மறுக்கின்றான். இதனால் தாமரை வீட்டை விட்டுச் செல்ல ஆயத்தமாகின்றாள். கணேசன் ஊரைக் கூட்டி, தாமரைக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் வீட்டை விட்டுச் செல்வதாகவும் கூறுகின்றான். இந்த வார்த்தையின் தாக்குதலால் தாமரை செய்வது அறியாமல் திகைக்கின்றாள்
‘என்னடீ பேய் முழி முழிக்கறே? அடுப்படியே திருப்பதி. ஆம்படையானே குலதெய்வம்னு இருக்கிறது தான்டீ ஒரு குடும்ப பொம்பளைக்கு லட்சணம்…. ஒரு பொட்டச்சி ஒண்ணு வூட்டுக்குப் பயந்துக்கணும். இல்ல ஊருக்குப் பயந்துக்கணும்; சொல்லடி…… பையன் எனக்குப் பொறந்தது உண்மைன்னா பையன வுட்டுட்டுப் போடீ’ .(அனுராதா,மணற்பொதிகள்:2004: பக். 40-53)என்கின்றான் கணேசன். வெற்று வார்த்தைகளால் சிக்கித் தவித்த தாமரை ஊராரின் முன் சந்தேக வார்த்தைகளைத் தெளித்த கணேசனுடன் இனி வாழ முடியாது என்று முடிவு செய்து கொண்டு ,
‘இது இவனுக்குப் பொறந்த குழந்தையில்லை… அதனால குழந்தைய இங்கவிட வேண்டிய அவசியமில்லை’.(அனுராதா,மணற்பொதிகள்: 2004: பக். 40-53) என்று குழந்தையைத் தாண்டி சத்தியம் செய்து வீட்டை விட்டு பையனுடன் வெளியேறி விடுகின்றாள் தாமரை.(அனுராதா,மணற்பொதிகள்:2004: பக். 40-53)
தாமரையின் கற்பைச் சந்தேகிக்கும் வார்த்தையைக் கூறினால் அவள் அமைதியாகி விடுவாள் என்று கணேசன் கருதியதற்கு மாறாக வீண் பழி;யை ஏற்கத் துணிகின்றாள் தாமரை.
பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் கணவன் தன் தவற்றை மறைக்க, மனைவி மீது பழி சுமத்த பெண்கள் சுய இருப்பு மற்றும் குழந்தையின் வாழ்வு கருதி கணவனை விட்டுப் பிரிகின்றனர்.
‘குடி’ என்னும் போதையின் காரணமாக கணவன் - மனைவி உறவில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குடியினால் பொறுப்பற்ற நிலையில் செயல்படும் கணவனால் மனைவியே குடும்ப பொறுப்பைச் சுமக்கின்றாள். ஆனால் குடிகாரக் கணவனின் பொறுப்பற்றத் தன்மை எல்லை மீறும் போது மனைவியும் பொறுமை இழக்கின்றாள். இதனை பாமாவின்‘பொன்னுத்தாயி’கதையில் பொன்னுத்தாயி - மூக்காண்டி தம்பதியினர். நான்கு குழந்தைகளைப் பெற்ற நிலையிலும் குடித்துவிட்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதோடு தன் உழைப்பினையும் சுரண்டும் கணவனை விட்டுப் பிரிகின்றாள் பொன்னுத்தாயி. ஊராரி;ன் தவறானப் பேச்சுக்கு ஆளானாலும் எதைப் பற்றியும் பொன்னுத்தாயி கவலைப்படவில்லை. மூக்காண்டியிடம் தன் நான்கு குழந்தைகளையும் விட்டு விட்டு தன் தாய் வீட்டில் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துகின்றாள். குழந்தையை வைத்துச் சமாளிக்க முடியாமல் பொன்னுத்தாயியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைக்கின்றான் மூக்காண்டி. பொன்னுத்தாயி கணவனுடன் வாழ மறுக்க இருவருக்குமிடையே ஏற்படும் வாக்குவாதத்தில் பொன்னுத்தாயியை அடித்து விடுகின்றான். பொன்னுத்தாயி இரத்தக் காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றாள். காவல் நிலையத்தில் அவமானப்படும் மூக்காண்டி கோபம் கொண்டு குழந்தைகளைப் ‘பொன்னுத்தாயிடம் விட்டு விட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றான். இதற்கு பொன்னுத்தாயி,
‘பிள்ளைகளக் கொண்டாந்நு எதுக்கு இங்கு உடனுங்கற? ஓம் பிள்ளைகள நீயே வச்சுக் காப்பாத்து. எனக்கு நீயும் வேண்டாம். ஓன்னால வந்த பிள்ளைகளும் வேண்டாம். பெத்தவ தான் பிள்ளைகள வளக்கணும்னு சட்டமா என்ன? இங்க கூட்டியராத, இனி இந்தப் பக்கமே வராத’.(பாமா,ஒரு தாத்தாவும் எருமையும்’,2003:பக்.67-68) என்று கூறி விடுகின்றாள். மூக்காண்டி கட்டினத் தாலியைக் கழற்றி, அதிலிலுள்ள தங்கத்தைக் கொண்டு வியாபாரத்தைக் தொடங்குகின்றாள் பொன்னுத்தாயி.(பாமா,ஒரு தாத்தாவும் எருமையும்’,2003:பக்.61-68)
இந்நிலையிலிருந்து மற்றொரு தளத்தில் குடும்பச் சூழ்நிலையிலிருந்து விலகிய பெண் பிற ஆண்களுடன் பழகுவதை ஒழுக்கக் கேடாகக் கருதும் சமுதாய நிலையை திலகவதி பதிவு செய்துள்ளார். திலகவதியின் ‘விசிறிகள்’ கதையில் சுமதி விவாகரத்துப் பெற்ற மருத்துவர். உடன் பணிபுரியும் ஐம்பது வயதான ராம்குமாருடன் நட்புடன் பழகுபவள். ஆனால் மற்றவர்கள் இருவரது நட்பையும் தவறாகப் பேசுகின்றனர். இவற்றைப் பற்றி சுமதி கவலைப்படவில்லை. இந்நிலையில் சிவாவின் நட்பு கிடைக்கிறது. சிவாவிடம் ராம்குமார் பற்றிய சுமதி சொல்லவும் சிவாவும் இருவருக்கும் உள்ள உறவை தவறாகக் கருதுகின்றான். (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002 பக்:214-322)
‘சுகந்தி யாரோ ஒருவனுக்கு மனைவியாக இருக்கறது தான் ஒரு பொண்ணுக்கு கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தரும்னு நெனக்கற சனாதனிங்க என்னை வைப்பாட்டின்னு சொல்றதைப் பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. எனக்கும் ராம்குமாருக்கும் இடையிலே இருக்கிற உறவை அறிவுபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் விளக்க என்னாலே முடியாது’(திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.317-318) என்று குறிப்பிடுகின்றாள்.
‘கல்யாணமானவரோட தொடர்புங்கறது பெண் விடுதலைக்கு விரோதமானதுன்னு ஏன் நெனச்சுக்கறே சுகந்தி? ஆம்பளைங்கறவன் தான் பொம்பளைக்குச் சொத்து. அவன் தான் அவளைப் பாதுகாக்கறவன், சம்பாதிச்சுப் போடறவன்கிற நெனப்பு தானே உன்னை இப்படி பேச வைக்குது. இன்னொருத்தி வந்துட்டா ஏற்கனவே இருக்கறவளுக்கு கெடைச்சு கிட்டிருக்கறதெல்லாம் பாதியாக் குறைஞ்சிடுமேன்னு தானே உன்னை மாதிரி ஆசாமிங்க. கவலைப்படறாங்க. என்னைப் பொறுத்தவரை அந்த மாதிரி பிரச்சனை இல்லையே. இருந்தாலும் பொம்பளை சகலத்துக்கம் ஒர்த்தனை சார்ந்து தான் இருக்கணும்னு நீ ஏன் நெனைக்கறேங்கறது எனக்குப் புரியல’……(திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.319) என்கின்றாள்.
திலகவதியின் ‘வலைப்பறவை’ கதையில் அலுவலக மேலதிகாரிப் பெண்ணின் கூற்று கதை விளக்கப்பட்டள்ளது. பணிபுரியும் பெண் மீரா. எளிமையும் தைரியமும் உள்ளப் பெண். இந்நிலையில் மீராவின் கணவன் லோகநாதன். மேலதிகாரியைச் சந்தித்து மீராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் மீரா தன் குடும்பத்திற்காகத் தன்னை நிராகரித்து பிரிந்து வாழ்வதையும் கூறுகின்றான். மேலும் மீராவைத் தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கூறுகின்றான். இந்நிலையில் மீரா – லோகநாதனின் கொடுமைக்காகப் பிரிந்ததைக் குறிப்பிடுகின்றாள் (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.376-381) மேலும்;,
‘அவரைப் பொறுத்;த வரை எது நடந்தாலும் வெற்றி தான். அவர் சொன்னத நம்பி நீங்க என்ன வற்புறுத்தி நான் அத ஏத்துக்கிட்டா கடைசியில என் காலுல தான வந்து விழந்தம்பார். நான் ஒரேயடியாக மறுத்துட்டா. அதுவே எனக்கு எதிரா உங்க மனதில ஒரு கரும் புள்ளியா பதியும்…. வுலைய அறுத்துக்கிட்டு தப்பிச்சிட்ட பறவை சந்தோஷமா இருக்கறது நியாயம் தானே. அந்தப் பறவையோட சந்தோஷமா மாதிரி தான என் சந்தோஷமும், தான் விரிச்ச வலையில அகப்பட்ட பறவை தப்பிச்சுப் போயிடிச்சேங்கற துக்கம் வேடனுக்கு இருக்கறதும் நியாயம். அதே மாதிரி துக்கம் வேடனுக்கு இருக்கறதும் நியாயம். அதே மாதிரி துக்கம் அவருக்கு இருக்கலாம்’ (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.380-381) என்றாள் மீரா.
தாய் - மகள் உறவு:
தாய் - மகள் உறவு நிலையில் தாயின் கடந்த கால வாழ்வினை மகளின் நினைவின் மூலம் அம்பை ‘ பிரசுரிக்கப்படாத கைப்பிரதி’ எனும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
திருமகளின் மகள் செந்தாமரை. செந்தாமரையை இலக்கியம், பதிப்பகம் முதலியவற்றில் தோழியாக வளர்கின்றாள் திருமகள். செந்தாமரைக்கு தன் தாயின் கைப்பிரதி டைரி கிடைக்கின்றது. அதில் இடம் பெற்றுள்ள தாயின் கடந்த கால வாழ்வினை அறிகின்றாள். மலேயாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து பதிப்பகம் - அச்சகம் தொடங்கும் ராமசாமியின் மகள் திருமகள். புரட்சிச் சிந்தனை உடைய ராமசாமி நூல்களைப் பதிப்பதில் புரட்சிச் சிந்தனையுடைய நூல்களையே பதிப்பிக்கும் கொள்கைக் கொண்டவன்.
‘ஒரு விதவைப் பொண்ணு ஒருத்தனைக் கட்டிக்கிட்டாக. ஆவ வாழ்க்கை நல்லா அமையுங்கறதுல என்னங்க புரட்சி? அவ படிக்கறதுக்கும் வேலை பண்ணுறதுக்கும் உதவி பண்ணனும். யூனிபாரம் போடுறாப்பல அவ பொட்டில்லாம, பூவில்லாம இருக்கக்கூடாதுன்னு சொன்னீங்கன்னா சரி’(அம்பை, ‘காட்டில் ஒரு மான’; 2000:ப.82) என்று புரட்சிச் சிந்தனை உடைய ராமசாமி விதவையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு கல்வி – வேலைவாய்ப்பு வழங்குகின்றான். தந்தையின் இலக்கிய ஆர்வத்தின் தொடர்ச்சியாக திருமகள் ஆங்கிலம் இலக்கியம் கற்கின்றாள். முழு சுதந்திரமாக வளர்க்கப்பட்ட திருமகள் கவிஞன் முத்துக்குமரனைக் காதலிக்க, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றார் ராமசாமி. திருமகள் - கல்லூரி, அச்சகம், பதிப்பகம் என்று அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தாள். முத்துக்குமரன் தன் மனைவி தன்னைக் கவனிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தான். இதனால் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின. குழந்தை செந்தாமரையின் வரவு, தந்தை ராமசாமியின் இறப்பு நிகழ்கின்றன. முத்துக்குமரன் கவிதையில் வன்முறை இருப்பதால் திருமகள் பதிப்பிக்க மறுப்பு தெரிவிக்க இருவருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற,
‘அவர் உனக்கு அப்பன்தானா இல்ல….. என்று கூற, திருமகள் ஆவேசத்தில் முத்துக்குமரனை உதைக்க, முத்துக்குமரன் திருமகளைத் தாக்கி, மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றான். அச்சக ஊழியரின் உதவியில் ஆறு மாத கால மன நல மருத்துவமனை அவஸ்தைக்குப் பின் விடுதலையாகும் திருமகள், தன் சொத்துக்களை விற்று, மகளுடன் சென்னைக்குக் குடியேறுகின்றாள். சில வருடங்களுக்கு பிறகு முத்துக்குமரன் இறந்து விட்டதை அறிகின்றாள். முத்துக்குமரன் நினைவுநாள் விழாவில் இலக்கியவாதி என்ற முறையில் கலந்து கொள்ளும் திருமகளின் வாழ்வை எண்ணிப் பார்க்கின்றாள் செந்தாமரை (அம்பை, ‘காட்டில் ஒரு மான’; 2000:பக்74-83)
காதலித்து திருமணம் செய்தவனால், கொடுமைகளுக்கு ஆளான திருமகள், அதில் இருந்து விடுதலையாகி, தன் மகளின் வாழ்வினை சிறப்புடையதாக மாற்றப் போராடி வெற்றியும் காண்கின்றாள். கணவனின் செயல்பாடுகளால் அவனை விட்டுப் பிரியும் பெண், தன் மகளின் வாழ்வினை சிறப்புடையதாக மாற்றியிருக்கின்றாள். தன் பொருட்டு இன்னல்களுக்கு ஆளான தாயின் வாழ்வினை எண்ணி வருந்தி, அவளுக்கு ஆறுதல் அளிக்கின்றாள் மகள் செந்தாமரை. கணவன- மனைவி பிரிவி;ற்குப் பிறகு பெண்களின் வாழ்வு கட்டமைக்கப்படும் நிலையை அம்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத் தளத்திலிருந்து மற்றொரு நிலையில் திலகவதியின் ‘நேசத்துக்குரிய எதிராளி’ கதையில் பார்வதியின் நினைவு கதையாக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு – பார்வதி தம்பதியினர். இவர்களது மகள் சுதா. திருநாவுக்கரசின் கொடுமைத் தாங்க முடியாமல் பார்வதி விவகாரத்துப் பெறுகின்றாள். இந்நிலையில் குரியன் தாமஸ் என்பவனுக்கு இரண்டாம் மனைவியாகின்றாள்.முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது பார்வதி இரண்டாம் தாரமாகின்றாள். இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்படும் குடும்பப் பிரச்சினையின் காரணமாக தாமஸ் தற்கொலை செய்து கொள்கின்றாள். இந்நிலையில் வளரும் சுதா தாயின் செயலகளுக்கான சூழ்நிலையை உணர்ந்து கொள்ளாமல் இள வயது முதலே வெறுக்கின்றாள். சுதா கல்லூரிப் படிப்பின் காரணமாக விடுதியில் தங்குகின்றாள். கல்லூரி ஆசிரியை, மணிமேகலை பெண்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைக் கற்றுத் தருகின்றாள்;. சுதாவின் தனிப்பட்ட வாழ்வை அறிந்த பின்,
‘பொய்யான நிரந்தரத் தன்னையைத தருதுங்கறதுக்காகக் கல்யாணத்தைப் பெரிசா நெனைக்கறோம்.உங்கம்மா அதை புறக்கணிச்சாங்க. இந்த சமூகத்தை உங்கம்மா லட்சியம பண்ணல…….எம் மனசுல பட்டதைச் சொல்றேன்…. சமூகங்கற பேரால அபிப்பிராயங்கள் சொல்றவங்களை சிந்திக்கத் தெரியாத மந்தைங்கன்னு தான் நான் சொல்லுவேன் வரையறுக்கப்பட்டுள்ள வாழ்க்கையைத் தான் மனுஷன் வாழணுமு;ன சொல்லுறவன் முட்டாள்’ ((திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:ப.406) என்று மணிமேகலை குறிப்பிடுகின்றாள்.சுதா தன் தாயின் வாழ்வினையும், மனநிலையையும் புரிந்து கொள்கின்றாள். விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும் சுதா தன் தாயிடம் தன் செயலுக்கு மனம் வருந்துகின்றாள். மகளின் மன மாற்றத்தினைக் கண்டு மனம் மகிழ்கின்றாள் பார்வதி. (திலகவதி, ‘திலகவதி கதைகள்’,2002:பக்.397-408)
முடிவுரை :
குடும்பம், என்னும் அமைப்பு பெண்கள் மீது மரபியல் கருத்தியல்களைத் திணிக்கின்றன. இக் கட்டுப்பாடுகள் எல்லை மீறிய நிலையில், பெண்கள் விடுதலையை நோக்கிப் பயணிக்கின்றனர். விடுதலை பெற்ற நிலையில் வாழ்வில் முன்னேறுகின்ற நிலையையே சிறுகதைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு, பெண் விடுதலைச் சிந்தனையை வாஸந்தி, அம்பை, திலகவதி, பாமா, அனுராதா, ஆகிய பெண் படைப்பாளர்களின் படைப்புக்களிலேயே காணப்பட்டுள்ளன. ஏனெனில் தொடக்கமாக கால நிலையில் பெண் உரிமை, பெண் சமத்துவம் என்பதே குடும்பச் சூழல்களில் பெறுவதே போராட்டமாக – தேவையாகக் கருதப்பட்டன. மேலும் பெண்களுக்கு குடும்பமே கோவிலாகவும் (அ) அடைக்கலமாகவும் கருதப்பட்டன. இந்நிலையில் குடும்பத்தை விட்டு வெளியே வருவது இயலாத ஒன்றாகவும், ஒழுக்கக் கேடாகவும் கருதப்பட்டன. எனவே தொடக்க சிறுகதையாசிரியர்களான ராஐம் கிருஷ்ணன், சூடாமணி, சிறுகதைகளில் பெண் விடுதலைச் சிந்தனைகள் இடம் பெறவில்லை. பின் வந்த சிறுகதையாசிரியர்களிடம் பெண் விடுதலைச் சிந்தனையுடைய சிறுகதைகள் இடம் பெற்றாலும், ‘ குடும்பம் எனும் அமைப்பிலிருந்து ஒரு பெண் தன்னை விடுவித்துக் கொள்வது தமிழ்ப் பண்பாட்டில் மிகச் சிரமமான ஒன்றாகவே இன்றுமுள்ளது’ என்ற கருத்திற்கேற்ப, மிகக் குறைந்த (பதினைந்து) எண்ணிக்கையிலான சிறுகதைகளே இடம் பெற்றுள்ளன என்பது முக்கியமான கருத்தாகும். மேலும் இக் கதைகளில் இடம் பெறும் பெண்கள் குடும்பம், சமூகம் என்னும் நிறுவனத்தை விட்டு வெளியேறி, சுதந்திர வாழ்வைத் தொடங்கும் தொடக்க நிலையிரான பெண் விடுதலைச் சிந்தனையையே முன் வைத்துள்ளனர். மேலும் குடும்பத்தை விட்டு விலகிய பெண்கள் சுய இருப்புடன், தன் குழந்தையின் வாழவை வளமாக்க போராடும் தாய்மை அடிப்படையிலான விடுதலைச் சிந்தனையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறிப்புக்கள்:
1. அரங்க மல்லிகா, ‘தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்’ ப.14
2. ஐன் லாரன்ஸ்,பகவதி (பதி.), ;இந்திய விடுதலைக்குப் பின் தமிழிலக்கியச் செல்நெறிகள்’, ப.177
3. செ.கணேசலிங்கன், ‘பெண்ணடிமைத் தீர’,ப.145
4 அரங்க மல்லிகா, மேலது,ப.22.
5. நிர்மலா ராணி, ‘பெண்ணியத் திறனாய்வு’,ப.10
6 அரங்க மல்லிகா, மு.குநுர்.ப.28
7. நிர்மலா ராணி, ‘தமிழ்ச் சிறுகதைகளில் பாலின வேறுபாடும் பெண்ணடிமைத்
தனமும்’ ப.58
8. பிரேமா, பெண் - ‘மரபிலும் இலக்கியத்திலும்’ பக்.84-85
9 அ.குணசேகரன், ‘தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்’ ப.19
10. செ.கணேசலிங்கன், ‘பெண்ணடிமைத் தீர’,ப.110



Wednesday, January 06, 2016

உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்

சக்திஜோதி
பெண் என்பவள் ஆணின் ஆதார சக்தியாக எவ்விதம் இயங்குகிறாள்?  இப்படி, ஓர் ஆணிடம் கேட்டால் ஒருவிதமான பதிலையும், ஒரு பெண்ணிடம் கேட்டால் வேறு ஒருவிதமான பதிலையும் கண்டடைய முடியும். அநேகம் ஆண்கள் கிண்டலாகவும் சொல்லக்கூடும்… அநேகம் பெண்களுக்கு தாங்கள் எவ்விதம் சமூகத்தின் ஆதாரம் என்பது தெரியாமலிருக்கக்கூடும். பெண்களின் வழிவந்த சமூக இயக்கம் என்பது காலந்தோறும் மறுதலிக்கப்பட்ட ஒன்றாகும். பெண் இயக்கம் எப்பொழுதும் ஆணைச் சார்ந்தும், அவனது நிழலிலேயே தனது பாதுகாப்பை உணரும் வகையிலும் கட்டப்பட்டது. இது  கட்டப்பட்ட யதார்த்தமே அன்றி, உண்மை அல்ல.
பெண் எல்லாச் சமூகத்திலும் ஆதார சுருதியாகப் போற்றப்பட்டிருக்கிறாள் என்பதை பல்வேறு தொன்மங்கள் வெளிப்படுத்துகின்றன. பெண்ணைச் சுற்றிலும் பின்னப்படும் பாதுகாப்பு  வளையங்கள் கூட, அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை அடியொற்றியதே. நிலம் எவ்வாறு ஒரு குடியானவனுக்கு ஆதாரமாகத் திகழ்கிறதோ, அதுபோல நாகரிகமடைந்த எந்த ஒரு சமூகத்தின் வளமைக்கும் மேம்பாட்டுக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி முதன்மைக் காரணமாக விளங்கும். அதனால்தான் பெண்ணை மனித சமூகத்தின் ஆதார சக்தி என்கிறார்கள்.
ஒரு பெண் தனக்கும், சுற்றுப்புறத்தில் தன்னைச் சார்ந்திருக்கும் ஆண்கள், குழந்தைகள், தாவரங்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் தேவையான யாவற்றையும், தன்னியல்பில் தானே செய்கிறவளாக இருக்கிறாள். ஒரு குழந்தை பசிக்கு அழுகிறதா, தூக்கத்துக்கு அழுகிறதா அல்லது உடல் நோவினால் அழுகிறதா என்பதைத் தாயே அறிவாள். எறும்பு முதலாக பறவைகள், கால்நடைகள், தாவரங்கள் என எந்த சிறிய உயிருக்கும் நீர் தேடி சேகரித்துப் பங்கிடுவது, உணவிடுவது, அவற்றைப் பாதுகாப்பது என்பன பெண்ணின் இயல்பாக  இருக்கிறது. ஆண்களின் பொறுப்போ ஒவ்வொரு நிலையிலும் பிறரால்
வலியுறுத்தப்படுகிறதாகவே இருக்கிறது.
சமூகம் என்பது ஆண் மையக்கருத்துரு என்பதைத் தாண்டி, ‘பெண்தான் சமுதாயத்தின் வளமாக இருக்கிறாள்’ என்பதே உண்மை. ஒரு சமூகத்தின் வளம் என்பதும் அந்தச் சமூகத்தின் வளர்ச்சி என்பதும் அதனுடைய உற்பத்தித்  திறனையே அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. அப்படியான வளம் மிக்க சமூகமே பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கிற முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும். முதலாளித்துவ மனோபாவத்துக்கு உழைக்கும் மக்கள் தேவை. உழைக்கும் மக்களைப் பெற்று, உருவாக்கித் தருகிற சக்தியாக பெண்ணை மென்மேலும் பண்படுத்தவே, பெண் ஒருவிதத்தில் போற்றப்படுகிறவளாக இருக்கிறாள்.
சங்க காலச் சமுதாயத்தில் தம் இனக்குழு வாழ்வின் நிலைப்பேற்றுக்காக வேறு இனக்  குழுவுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருந்தது. தன் இன மக்களுக்காக அவர்களின் உடைமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பும், அதற்கான சண்டையை, ஒழுங்குபடுத்தப்பட்ட போர் நிகழ்வுகளாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியமும் அக்காலத்தில் இருந்தது. அதனால் சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் என்கிற வகைமை வளர்ந்தது. போர் நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளும் கருத்துருவாக்கங்களும்  அதற்கான பேச்சுகளும் நிகழ்வுகளும் இதன் வழியே  வளர்ச்சியடைந்தன. தமிழ் மரபின்  வரலாற்று ஆதாரங்கள் பலவும் புறப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.
சங்கப் பாடல்கள் என்றால் காதல் மட்டும் அல்ல… ஒரு சமூகத்தின் கட்டமைப்பில் அதன் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு பற்றி சங்கப் பெண்பாற் புலவர் பொன்முடியாரின் ஒரு பாடல் இது…
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே…’

‘ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்துத் தருவது என்னுடைய முதலான கடமை. அந்தக் குழந்தையை நற்பண்புகள் நிறைந்த சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை. கூர்மையான வேல் செய்து கொடுப்பது கொல்லர்க்குக் கடமை.  நல்லாட்சி புரிவது மன்னனுக்குக் கடமை.
போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றி பெறுவது இளைஞனுக்குக் கடமை’ என்று இப்பாடலுக்கு முதல் பார்வையில் அர்த்தம்
சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் முதன்மை, தலையாய என்பதைக் குறிக்கும் ‘தலைக்கடன்’ என்கிற சொல் இங்கே பெண்ணுக்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடவனுக்கும் கொல்லனுக்கும் அரசருக்கும் இளைஞனுக்கும் மற்றவருக்கும் கடமை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் முதன்மைப் பண்பைக் குறிப்பிடுவதற்கும், பின் வருகிற அத்தனை செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்குமான சொல்லாக, ‘தலைக்கடன்’ என்கிற சொல் குறிப்பிடப்படுகிறது என்று சொல்லலாம். ஆண் மையச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்ட சங்க காலத்தில் ஆணின் பொறுப்புகள் குறித்து ஒரு பெண்ணின் குரல் இவ்வாறாக வெளிப்படுகிறது.
ஒரு ஆண் – தந்தையாக இருந்தாலும், மன்னராக இருந்தாலும், கொல்லராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும், பெண்ணின் வழிநின்றே அடிப்படையான வாழ்வியல் கல்வியும் பொறுப்புகளும் கையளிக்கப்பட்டு மேன்மைப் படுத்தப்படுகிறது.   ஒரு பெண் எவ்விதம் மையமாக இன்றைக்கு இருக்கிறாள்? பெண்ணே குழந்தைகளை வளர்க்கிறாள். குடும்பத்தை நிர்வாகம் செய்கிறாள். தொழில், ஊடகம், அரசியல் என பல துறைகளில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்… இப்படிப் பல பதில்களை நாம் பெற முடியும்.
சமீபத்தில் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். ‘மேகவர்ணம் என்கிற பூங்கோவை’ என்று  தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார். தன் பெயர் பற்றி அவருக்கு மிகப்பெருமை என்றும் சொன்னார். அவருடைய மிகத்தெளிவான உச்சரிப்பும் சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுகிற குழப்பமற்ற பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிப் பேசுவது நிறைய பேருக்குக் கை வருவதில்லை என்பது என்னுடைய எண்ணம்.
‘அப்புறம் என்ன இந்தப் பக்கம்’, ‘இன்னைக்கு உங்க முகம் கொஞ்சம் வாடியிருக்கிறாற்போல இருக்கே’, ‘உடம்புக்கு எதுவும் சரியில்லையா’, ‘உங்கள் குரல் என்னவோ போல இருக்கேங்க’, ‘எதுனா பிரச்னையா’ எனத் தொடங்கும் பெரும்பாலான பேச்சுகள் எல்லாம் எதிரே இருப்பவரிட மிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெறுவதற்கான தொடக்கமே. நமக்கு ஒருவரிடமிருந்து ஒரு தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால்,  ‘என்னங்க… உங்களைப் பற்றி இன்னார், இப்படிச் சொன்னார், என்ன விஷயம்’ என்று நேர்படத் தொடங்குவதில்லை. வேறு எங்கோ பேச்சைத் தொடங்கி, ஊர்வம்பு பேசி, எதிரே இருப்பவர் தன் வாயாலேயே நாம் விரும்பும் அந்தச் செய்தியை சொல்லுகிறாரா என ஆராயும் மனோபாவம்  பலருக்கு இருக்கிறது. இது போல இல்லாமல், பூங்கோவை தன்னைப் பற்றி சொல்லி, என்னைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்ட உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. இதனால் மட்டுமல்ல… அந்த உரையாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கியமான வேறு ஒன்றும் உண்டு.
அவரிடம் நான், ‘என்ன படிச்சிருக்கீங்க’ எனக் கேட்டேன்… சற்றும் யோசிக்காமல், ‘நான் நல்லா விவசாயம் செய்வேன்’ என்றார் அவர்.  மேலும், அவரே தொடர்ந்தார்… ‘தென்னை, நெல், கத்தரிக் காய், வாழை, மிளகாய், தக்காளி… இப்படி  எல்லாப் பயிர்களையும் எந்தப் பருவத்தில் விதைக்கணும், களை எடுக்கணும், மருந்து தெளிக்கணும், அறுவடை செய்யணும் என ரொம்ப தெளிவாத் தெரியும்’ என்றார். ‘என்னுடைய படிப்புன்னா, அது நிலத்துல இறங்கி விவசாயம் செய்யுறதுதான்’ என்றார். ‘அப்பா ஏர் பிடித்து உழ, அம்மா நிலத்தில் இறங்கி விதை தூவவும் களை பறிக்கவும் என இருப்பார். அதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
அறுத்த நெல் கதிரை அம்மா களத்தில் சேர்க்க,  அவற்றை அப்பா அடித்து தானியங்களாக பிரித்தெடுக்க, பின்பு இருவரும் சேர்ந்து சேகரிக்க, அதைப் பார்த்து விவசாயம் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார். ஆண்கள் பலரும் விவசாயத்தை விட்டு வேறு பணிக்குச் சென்றுவிட்ட இந்தக் காலத்தில், அடுத்த தலைமுறைக்கான தானியங்களைச் சேமித்து வைக்கிற ஆதித் தாயாக இந்தப் பெண்ணை அப்போது உணர்ந்தேன். ஒருகணம் கண்கள் மூடி அவரை  வணங்கினேன். இவரைப் போன்ற பெண்களே இந்த சமூகத்தின் மையமாகத் திகழ்கிறார்கள்.
இது நிலா, இது வானம், இது கடல், இது பூ, மலை, மரம், செடி, கொடி, ஆடு, மாடு என நாம் வாழும் சூழலையும் நம் சூழலின் சுற்றுப்புறத்தையும் அனேகமாக நம்முடைய மூன்று வயதுக்குள் தெரிந்து கொள்கிறோம். இதனைத் தெரிவிப்பவர் பெரும்பாலும் அம்மாவாகவே இருப்பார். மூன்று வயதுக்குள் நாம் தெரிந்து கொண்ட  பலவற்றுக்குத்தான் பின்னாட்களில் அறிவுநிலை சார்ந்த விளக்கம் அறிந்து கொள்ளும்படியாக கல்வி நிலையங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன. அதன்பின்பே சமூகம் தன்னுடைய அனுபவம் சார்ந்த கற்பித்தலைச் செய்கிறது. இவ்விதமாகவே ஒருவர் தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறார்.
ஓர் ஆண் மன்னனாக நல்ல ஆட்சி நல்கவும் ஓர் ஆண் வீரனாக தன்னுடைய இனத்தையும் நாட்டையும் காக்கவும் ஓர் ஆண் சான்றோனாக சமுதாயத்தில் உயர்வு பெறவும் ஒரு பெண்ணே வழிப்படுத்துகிறாள்.
பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கிற
முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும்.

யார் பொன்முடியார்?

இவர் ஆணா, பெண்ணா என்கிற விவாதம் கூட ஏற்பட்டிருக்கிறது. சங்கப் பாடலில் இவர்  எழுதிய 3 கவிதைகள் தவிர, புறத்திரட்டில் தகடூர் யாத்திரையில் 3 பாடல்கள் உள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தகடூர் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியை, அவருடைய தம்பி சேரநாட்டை ஆண்ட பெருஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொள்கிறார். சேர அரசன் இரும்பொறையை பொன்முடியார் பாராட்டிப் பாடி இருப்பதால், இவர் சேர நாட்டைச் சேர்ந்த பெண்ணாக  இருக்கலாம் எனக் கருதுகின்றனர். பண்டைய சேரநாட்டில் பொன்முடிநல்லூர் என்று ஓர் ஊர் இருந்திருக்கிறது. இவ்வூர் பெயர் இவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இப்போதைய தர்மபுரியே பண்டைய காலத்தில் தகடூர்.
அந்தந்த ஊர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர் அந்தந்த ஊர் மக்களுக்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும், அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (கி. ஸி. ழிஷீ. 205 ஷீயீ 1919) கூறுகிறது. பொன்முடியார் என்கிற இந்தப் பெண்பாற் புலவரை பண்டைய அரசுகளின் கொள்கைகளை அறிந்த சமூக அரசியல் அறிவுடன் செயல்படுபவராகவும் கொள்ளலாம்.

ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்

சக்தி ஜோதி

பொதுவாக இந்தக் காலத்தில் காதல் என்பது எவ்விதம் தொடங்குகிறது? கண்டதும் காதல், காணாமல் காதல், தொலைபேசி காதல், அலைபேசி காதல், குறுஞ்செய்தி காதல், மின்னஞ்சல் காதல், முகநூல் காதல் எனத் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. காதல் என்கிற சொல் அடுத்த தலைமுறையினரிடம் மிக இயல்பாக பரிமாறப்பட்டிருக்கிறது. Love and Hugs என்று எவ்விதமான மனத்தடையுமின்றி பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். திருமணத்துக்கு முன்பாக உறவு வைத்துக் கொள்ளலாமா கூடாதா என விவாதங்கள் ஒருபக்கம் நடக்கின்றன. டேட்டிங் கலாசாரம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் முந்தைய காலத்தில் கடிதங்கள் பரிமாறப்பட்டு காதல் தொடங்கியது அல்லவா? இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது. மிகக்கடுமையான  சாதியக் கட்டமைப்பில் இருந்த கிராமப்புறங்களில் கூட, சாதிவிட்டு சாதி காதல் கடிதங்கள் பரிமாறப்பட்டன. சில காதல்கள் இணைந்தன, பல காதல்கள்  தொடங்கின இடத்திலேயே முன் நகராமல் முடங்கிப் போயின. இன்னும் சில ஊரையும் உறவினரையும் விட்டு ஓடிப்போயின. இன்னும் சில காதல்கள்  தற்கொலை செய்துகொண்டன. இன்னும் சில பெற்றோரால் கௌரவக் கொலை செய்யப்பட்டன. இன்னும் சில ஊரையே பற்றியெரிய வைத்தன. இவ்விதமாக  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் காதலைப் பற்றிய தொடக்கமும் முடிவுமாக பல கதைகளை நாம் அறிந்திருக்கிறோம்.
அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் மிக முக்கியமானவை. அனேகமாக இந்தக் காலகட்டத்து திரைக் கதாநாயகர்கள் தாம் காதலிக்க விரும்பும் பெண்ணை தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் பற்றிப் பேசப் போகிறோம். கடிதம் கொடுத்து, ரோஜாப்பூ கொடுத்து, பரிசுப்பொருட்கள் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் கொடுத்து, கதாநாயகியின் பார்வையில் படும்படி அந்தப் பெண்ணின் தெருவில் அல்லது கல்லூரி வாசலில் நடையாக நடந்து, டீக்
கடையில் நாள் முழுதும் காத்திருந்து, அப்பா பணத்தில் பைக் வாங்கி கூலிங்கிளாஸ் போட்டு சுற்றிவருவது… அவள் செல்கிற பேருந்தில் தொங்கிக்கொண்டே  பயணம் செய்து அவள் கவனம் ஈர்ப்பது… இப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடித்து, போதாததற்கு பைத்தியமாக நடித்து, குடித்து ஆடை விலகி தெருவில் கிடந்து,  யாரேனும் அடியாட்களிடம் அடிபட்டு… இப்படி ஒரு பெண்ணை அடைய ஆண் செய்யும் தந்திரங்களாக திரைப்படங்கள் காட்டுகின்ற
காட்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வகையான ஒரு திரைப்படம் ‘விதி’. படத்தின் கதாநாயகியை தன்வசப்படுத்த கதாநாயகன் செய்யும் உத்திகள் ஏராளம். அந்தப் பெண் காதலை சொல்லும்போதே ‘நீங்க ஜெயிச்சுட்டீங்க’ என்று தொடங்குகிறாள். அந்தப் பெண்ணை உடலாகவும் அந்த ஆண் அடைந்த பின்பு தன்னை முழு வெற்றியாளனாக உணர்கிறான். ஆண் 10 ஆண்டுகள் கடந்தாலும் ஆணாகவே இருக்கிறான், பெண்ணோ 10 மாதங்களில் தாயாக ஆகிவிடுகிறாள்.இது இயற்கையின் நியதி என்று சொல்லி கதாநாயகன் விலகிச் செல்வது போலவே, அவனைத் திருமணத்துக்கு வலியுறுத்துவது பெண்ணின் கட்டாயமாக ஆகிவிடுகிறது என்பதாகக் காட்சிகள் தொடரும்.
இந்த இருவருக்குமான நெருக்கமும் உறவும் அவர்கள் இருவரும் முடிவு செய்வது, இந்த உறவுகளுக்கு வேறு எதுவும் சாட்சியாக இருக்க முடியாது. ஒரு பெண்  தன்னை உடலாகவும் ஓர் ஆணிடம் கொடுத்த பின்பு மிகுந்த கலக்கமடைகிறாள். திருமணத்துக்கு முன்பாக உறவு கொண்டதால் தான் களங்கமானவள் என்று  நினைக்கிறாள். உடன் உறவு வைத்துக் கொண்டவன் ஆண் என்பதால், அவனைப் பற்றி இழிவாக நினைப்பதில்லை. அந்த ஆண் தன்னை ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று விரும்புகிறாள். அவன் மறுத்து விலகிச் செல்கிறான் எனில், அந்தப் பெண் தன்னிலையிலிருந்து இறங்கி ஆணிடம் கெஞ்சுகிறவளாகவும்  பதற்றமுறுகிறவளாகவும் மாறுகிறாள்.
இயற்கையின் புற அடையாளங்களை வைத்து தன்னைச் சிறுமைப்பட்டவளாக ஒரு பெண் உணர்வது ஒருபக்கமும் அப்படி பெண்ணை சிறுமைப்பட்டவளாக  சமூகம் கற்பிப்பது மறுபக்கமும் என இன்றைக்கும் தொடரும் ஒரு நிகழ்வுதான் இது.இந்தப் படத்தை என்னுடைய பதின்பருவத்தில் பார்த்தேன். அப்போது நாங்கள் காடம்பாறையில் இருந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வரிசை வீட்டில் குடியிருந்த சாந்தியக்கா என்பவர் எங்களோடுதான் படத்துக்கு வந்திருந்தார். எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பவர் அவர். ஆட்கள் இல்லையென்றால் பூக்களோடும் செடிகளோடும் கூட பேசிக்கொண்டிருப்பார். அல்லது பாட்டுப்பாடிக் கொண்டிருப்பார். படம் முடிந்து திரும்பி வரும்போது சாந்தியக்கா மிக அமைதியாக வந்தார்.
மதியம் பார்த்த ‘விதி’ படத்தின் காட்சிகள் பற்றி எல்லோரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சாந்தியக்கா வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்துச் செத்துப் போனார். வீட்டுக்குள்ளிருந்து புகை வருவது பார்த்து எல்லோரும் உள்ளே போக, அப்போதே முக்கால்வாசி எரிந்து போயிருந்தார். காப்பாற்ற  முடியாமலும், ‘அவர் ஏன் அவ்விதம் செய்தார்’ என யாருக்கும் தெரியாமலும் செத்துப் போனார். திருமணம் ஆகாத ஒரு பெண் ‘விதி’ படம் பார்த்துவிட்டு  வந்தவுடன் செத்துப்போகிறார் என்றால் என்னவாக இருக்கும் என எனக்கு அப்போது புரியாத புதிராக இருந்தது.
பெண்களுக்கு தந்தையாக, சகோதரனாகத்தான் ஆண் என்பவன் அறிமுகம் ஆகிறான். அவள் பார்த்த அந்த ஆண்களின் அன்பைப் போலவே காதலனிடம்  எதிர்பார்க்கிறாள். அப்படியான காதலனையே கணவனாகவும் அடைய விரும்புவது பெண் மனமாக இருக்கிறது. பொதுவாக நீண்டகால பாதுகாப்பையும்  அன்பையும் ஓர் ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்க்கிறவளாக இருக்கிறாள்.
பெண் என்பவள் அடைவதற்கு அரியவளாக ஆண் முதலில் கருதுவதும், பின்பு அவளின் மனது அவன் வசப்பட்டவுடன் உடலுக்கு ஏங்குவதும், உடலும் வசப்பட்டவுடன் அந்தப் பெண்ணை அவன் மிக எளிதாகக் கடந்து செல்வதும் இயல்பாக நடந்துவிடுகிறது. இது திரைப்படங்கள் போலவே நிஜவாழ்விலும் நடந்துவிடுகிறது.இப்படியாக காதலில் தோய்ந்து தவித்திருக்கும் ஒரு பெண்ணின் நிலை பற்றிய வருமுலையாரித்தியின் பாடல்…
‘ஒரு நாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து, பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலுழும்என் நெஞ்சே’
ஒருநாள் வந்தவனல்ல… இரு நாள் வந்தவனல்ல… பல நாட்கள் வந்தவன். பலமுறை வந்து பணிவுடன் பேசி, என்னுடைய நல்ல நெஞ்சத்தை நெகிழ வைத்தவன்.  பின்னர், மலையில் முதிர்ந்து எவருக்கும் பயனளிக்காததும், வீழ்ந்தழிவதுமாகிய தேனடையைப் போல போனவன் ஆயினன். உற்ற துணையாகிய எந்தை போன்ற  அந்த தலைவன் இப்போது எங்கே இருக்கின்றானோ? வேறு புலன்களையுடைய நல்ல நாட்டிலே பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கிய ஆறாக  நம்மிடம் வருவது போல, என் மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகிறது என்பது பாடலின் பொருளாக இருக்கிறது.
ஆண் என்பவன் பெண்ணுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறான் என்பதாக பெண்நம்புகிறாள். ‘எந்தை’ என்று இங்கே சொல்வது கூட என் தலைவன் தந்தையைப் போன்றவன் என்கிற தந்தைமைச் சமூகத்துக்கான கருத்தாக்கத்தின் முன்னெடுப்பாகக் கொள்ளலாம்.வேறு ஊரில் பெய்த மழை ஆறாக பெருகி நெடுந்தொலைவு பயணம் செய்து பிறிதொரு ஊருக்குள் நுழையும் போது கலங்கி இருக்கும். அதுபோல தலைவன் தன்னை விட்டு வேறு எங்கேனும் சென்று இன்புற்று இருக்கக்கூடுமோ எனவும் தலைவி கலங்கியிருக்கலாம் என குறிப்பால் உணர்த்தப்படுகிறது.மலையின் உச்சியில் தேனீக்களால் முயன்று கட்டப்பட்ட முதிர்ந்த தேனடை என்பது அத்தனை எளிதில் வளைத்துவிட இயலாத தலைவியின் மனதைச் சொல்கிறது. அதனாலேயே தலைவன் ஒருமுறை அல்ல… இருமுறை அல்ல… பலமுறை வந்து பணிந்துப் பேசி அந்தப் பெண்ணை தன்னுடைய விருப்பத்துக்கு வணக்குகிறான்.
ஆண் இன்பம் நுகர்கிறவனாக இருக்கிறான் என்பதைக் குறிப்பிடவே தேன் என்றும் தேனடை என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. திருமணத்துக்கு முன்பாக  களவு காலத்தில் ஆண், பெண்ணுடன் உறவு கொள்கிறான். பின்பு பிரிந்து செல்கிறான். தலைவி காத்திருக்கிறாள். இம்மாதிரியான களவு காலத்தில் ஆணிடம்  தன்னை ஒப்புக்கொடுக்கும் பெண்கள்தான் பெரும்பாலும் ஆண்களை திருமணத்துக்கு வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் ஆண்  என்பவன் பெண்ணை திருமணத்துக்கு வலியுறுத்துவதாக அமைந்திருக்கும் காட்சிகள் இன்றைக்கும் கூட இல்லை என்றே சொல்லலாம்.
ஆண், பெண்  இருவரிடையே ஏற்படுகிற உடல் சார்ந்த உறவுக்குப் பின், ஆண் எப்போதும் தன்னை வெற்றியாளனாக பெருமிதம் கொள்கிறான். ஒரு பெண்ணைக்  கைக்கொண்டு விட்டதாகவும், இனி அவள் தன்னுடைய உரிமைக்கும் விருப்பத்துக்கும் உட்பட்ட பொருள் எனவும் நினைத்துக் கொள்கிறான். இந்தக்  காலகட்டத்துக்குப் பிறகு பெண்ணின் மனதில் ஏற்படுகிற உளவியல் சிக்கல்கள் அவளைத் தொந்தரவு செய்கின்றன. தன்னுடைய பாதுகாப்புக்காகவும் நீண்ட கால  உறவுக்காகவும் ஒரு பிணைப்பை அந்த ஆணுடன் ஏற்படுத்திக்கொள்ளவே ஒரு பெண் விழைகிறாள். உடல்சார் உறவுக்குப் பிறகு ஆணினுடைய சிறிய  அளவிலான விலகலையும் பெண் மனம் விரும்புவதில்லை.
இந்தச் சூழலில் இருக்கும் ஒரு பெண்ணின் நிலை என்பது தவிப்புடன் இருக்கிறது. அவள் முழுமையாக நம்புகிறவனே ஆனாலும், தன்னை அந்த ஆணிடம் ஒப்புக்
கொடுத்த பின்பு, எப்போதும் அந்தப் பெண் பதற்றத்தில் இருக்கிறாள். நீண்டகாலஉறவுக்கான சாத்தியப்பாடுகளை எண்ணி இயலாமையில் துன்புறுகிறாள். தன் நிலை எண்ணி கலங்கி நிற்கிறாள்.
“நல்ல நாட்டிலே பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கிய ஆறாக நம்மிடம் வருவது போல, என் மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகிறது…’’
வருமுலையாரித்திஇத்தி என்பது இவரது இயற்பெயராகவும் பெருமுளை என்கிற ஊரைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். பெருமுளை என்பது நாளடைவில் மருவி வருமுலை ஆகியிருக்கக்கூடும்.‘இத்தி’ என்பது விழுதுவிட்டு வளரும் ‘இற்றி’ மரத்தின் நாட்டுவழக்கு. பூ, செடி, கொடி, மரம் போன்ற பெயர்களை மனிதர்களுக்கு இட்டு அழைக்கும் வழக்கம் தமிழில் இருப்பதால் ‘பெருமுளை இற்றி’ என்கிற பெயர் வருமுலையாரித்தி என மருவியது எனலாம்.
இவரது பெயரை வருமுலை ஆரித்தி என்று பிரித்துப் பார்த்தால் பருத்த முலையை உடையவர் எனப் பொருள் வரும் எனவும், ‘முலை’ என்ற உறுப்பினால்  குறிக்கப்படுகிற கவிஞர் எனவும் குறிப்பு உண்டு.இவரது பாடல் ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது (குறுந்தொகை 176) .

ஒரு பெண் நிகழ்த்துகிறாள்


சக்தி ஜோதி


சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில்பயணத்தில் ஒரு முதிர்ந்த தம்பதியைப் பார்த்தேன். மனைவிக்கு 65 வயதிருக்கலாம்… கணவருக்கு 70 இருக்கலாம். அந்த இரவு நேரப் பயணத்திலும் அவர்கள் இருவருக்கும் களைத்துப் போகாத தெளிந்த முகம். அவர்களது செயலும் பாவனைகளும் மட்டுமல்ல… உடலும் கூட ஒன்று போலவே இருந்தது. நீண்டகால தாம்பத்தியம் அவர்களை அவ்விதமாக ஒன்று போலவே ஆக்கியிருந்தது என்று தோன்றியது. மூன்றடுக்கு இருக்கையில் அவர்களுக்கு இரண்டு பக்கங்களிலும் மையத்தில் படுக்கை கிடைத்திருக்கிறது. நான் மேலே என்பதால் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு வசதியாக கீழ்ப்படுக்கை அமைத்துத் தருவதில் கவனமாக இருந்தார்.பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டுப் பார்த்தார். அவர், ‘பயணிகளுக்குள் நீங்களே அனுசரித்து மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எங்கள் பகுதிக்கு கொடைரோட்டில் ஆள் ஏறுவதாக இருந்து. ஒரு பெண்ணும் அவருடைய வயதான தாயாரும்திண்டுக்கல்லில் ஏறினார்கள். அந்தப் பெண்ணிடம் தன் மனைவிக்கு இருக்கையை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். அந்தப் பெண்ணோ, ‘உடல்நலம் இல்லை… இடையிடையே எழுந்துக்க வேண்டியிருக்கும்’ எனச் சொல்லிவிட்டார். அவர் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு  பக்கத்துத் தடுப்புக்குச் சென்றார்.
‘யாராவது கீழ்ப்படுக்கை விட்டுத் தரமுடியுமா’ என மனைவிக்காகக் கேட்டார். பிறகு இளைஞர் ஒருவர் இடம் மாற்றிக் கொண்டார். இவர் ஓடும் ரயிலில் மனைவியைக் கைப்பிடித்து பக்கத்து தடுப்பின் படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு திரும்பி வந்து மையத்தில் ஏறிப் படுத்துக் கொண்டார். ரயில் திருச்சியை நெருங்கி விட்டது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… இது போன்ற காட்சியை நான் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரயில் மட்டுமல்ல… இரவு நேர பேருந்துப் பயணங்களில் தன்னுடைய மனைவியை நள்ளிரவில் அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கவோ, பால் வாங்கிக் கொடுக்கவோ பரிவுடன் நடந்து கொள்கிற ஆண்களைப் பார்க்கிறேன். மனைவியைக் கைப்பிடித்து சாலையைக் கடக்கச் செய்யும் வயதான கணவன்களைப்  பார்த்திருக்கிறேன். அவரும் கையில் ஒரு தடி வைத்திருக்கலாம், தடுமாறி நடக்கலாம் என்றாலும் மனைவியிடம் அவர்கள் காட்டுகிற பரிவு குறித்து நான் கவனம் கொள்வதுண்டு.  நீண்ட காலத் தாம்பத்தியம் அமையப் பெற்ற தம்பதியரை அவதானிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.
‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் முதிர்ந்த தம்பதியின் நெருக்கத்தையும் அல்சைமர் நோய்வாய்ப்பட்ட மனைவியிடம் கணவனின் அரவணைப்பும் நேர்த்தியாக காட்டப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. இவர்களுக்குள் ஆரம்ப காலத்தில் மனவேறுபாடு இருந்திருக்கும்தானே? உடலின் வாசனையோ, வேறு எதுவோ ஒன்று அவர்களுக்குள் பிடிக்காமல் போயிருக்கும்தானே? உணவின் சுவை வேறுவேறாக இருக்கும் தானே? உடுத்துவது, உறங்குவது என ஒரு நாளின் பழக்கவழக்கங்களில் மாறுபட்டிருப்பார்கள்தானே? இப்படி எத்தனையோ இருந்தும் அவர்கள் மிகஒற்றுமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த விட்டுக்கொடுக்கும் இடம் அல்லது ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை என்பது எவ்விதம் நிகழ்ந்திருக்கும்?
பெரும்பாலும் வயதான பின்பு கணவன் இறந்து விட்டால், பெண்கள் மகன் வீடு, மகள் வீடு என அனுசரித்துக் கொண்டு தங்கள் வாழ்வைத் தொடரும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். மனைவிஇறந்துவிட்டாலோ அந்த ஆண் மிகவும் தளர்ந்துபோய் விடுகிறான் என்பதே உண்மை. ஏனெனில் பெண் என்பவள் தகப்பன், சகோதரன், பிறகு கணவன் என சார்பு நிலையிலேயே வளர்க்கப்படுகிறாள் என்பதால், மகனிடமோ மகளிடமோ இணைந்து அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர இயலுகிறது. ஆண் என்பவன் வளர்ப்பிலேயே தனித்து வளர்க்கப்படுகிறான். ஆண் பொருளீட்டத் தொடங்கியவுடன் அவனுக்கு தான் ‘ஆண்’ என்கிற எண்ணமும் அது சார்ந்த சமூகத்தின் கற்பிதங்களும் மேலோங்குகின்றன. குடும்பம் என்கிற நிறுவனத்தின் மையமாக தானே இருப்பதாக நினைக்கிறான்.
தண்ணீர் சூடு செய்து குடிப்பது, தானே சாப்பாடு போட்டு சாப்பிடுவது, தன்னுடைய உடைகளைத் தானே துவைத்துக் கொள்வது, தன்னுடைய பொருட்களை தானே ஒழுங்கு செய்து வைப்பது போன்ற அடிப்படையான வேலைகளைக் கூட அவன் செய்வதில்லை. அவற்றையெல்லாம்  தன்னுடைய மனைவிபார்த்துக் கொள்வாள் என்றும், அவனைப் பராமரிப்பது, அவன் குழந்தைகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்காகத்தான் மனைவி இருக்கிறாள் என்றும் நினைக்கிறான். அதனால் தன்னுடைய நீண்டகால இணையான மனைவி இறந்த பின்பு அவன் செயலிழந்து போகிறான். தனக்கென ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.
ஆண்தான் இந்தச் சமூகத்தின் மையம் எனில், இணையான தன்னுடைய பெண்ணை இழந்த ஒருவன் ஏன் இவ்விதமாகத் தளர்ந்து போக வேண்டும்? இது எப்படி நிகழ்ந்தது என சிந்தித்தால், இதை அந்தப் பெண்ணே நிகழ்த்துகிறாள். பொதுவாக திருமணம் ஆனவுடன் ஒரு பெண்ணுக்கு அவளுடைய அம்மா, ‘மாப்பிள்ளைக்கிட்ட பக்குவமா நடந்துகொள்… அவர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நீதான் விட்டுக் கொடுத்து போகவேண்டும்’ என்று சொல்வார். ‘காயத்ரி’ திரைப்படத்தில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு கணவன் வீட்டுச் சூழல் தவறானதாகத் தெரியும். அப்போது அவளைப் பார்க்க வருகிற அம்மாவிடம், ‘உங்களோடு என்னையும் அழைத்துப் போய்விடுங்கள்’ எனக் கூறுவாள். அம்மா மகளிடம், ‘புத்திசாலித் தனமாக நடந்துகொள்ளம்மா’ என்பதாகவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குடும்ப உறவு நிலைத்திருப்பதில் பெண்ணே முதன்மையான பங்கு வகிக்கிறாள் என்பதை இதுபோன்ற சூழல்களின் வழியாக உணர முடியும்.
‘வியட்நாம் வீடு’ திரைப்படத்தில் ‘உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ பாடலில் சிவாஜிகணேசன் நடிப்பது சற்று மிகை என்று தோன்றினாலும், ‘என் தேவையை யாரறிவார்’ என்று கேட்டு நிறுத்திய ஒருகணம் பத்மினியின் முகத்தை அருகில் காட்டுவார்கள். அதில் எழும்புகிற கேள்வியும் ‘உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்றவுடன் அந்தப் பெண் மனதில் படருகிற நிம்மதியும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. பெண்களுக்கும் ஆண் என்பவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கிறது. அதனாலேயே அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறாள். இந்நிலை எங்கு தொடங்குகிறது? ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் நிகழ்விலேயே கணவனை இனியவன் என்று பெண் நம்பத் தொடங்குகிறாள்.
சங்க காலம் என்பது நிலவுடைமை சமூகம், நிலவுடைமையின் பண்பு பாலியல் ஒடுக்கம். இந்த பாலியல் ஒடுக்கம் என்பது பரந்துபட்டு எல்லோருக்கும் நிகழ்த்தப்பட்டதாக நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. மாறாக களவில் உறவு வைத்துக் கொள்கிற நிலையிலிருந்து திருமணத்துக்குப் பின்பான பாலுறவுக்கு இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிற செயல் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இது பெண்களை கற்பு நிலைக்கு ஒடுக்குதலுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதனால்தான் காதலில் ஈடுபடுகிற பெண் வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறாள். கண்காணிக்கப் படுகிறாள். தமையன், தாய் மற்றும் உறவினரால் தண்டிக்கப் படுகிறாள். பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதில் நிகழ்ந்
திருக்க வாய்ப்பில்லை எனவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காதலில் ஈடுபடும் பெண்கள் ஆண்களினால் வஞ்சிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் விரும்பிய ஒருவனை இணைத்து வைக்க உதவுகிற தோழியைக் குறித்து மகிழ்வதும் இயல்பாக இருக்கிறது.
சமூகம், பெற்றோர் என அனைவரின் ஆதரவுடன் விரும்பிய ஆணை மணம் முடிக்கிற பெண்கள் மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறார்கள். திருமணம் முடிந்தது, தலைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டாள். ஒரு நாள் தோழி தலைவியின் இல்லத்துக்குச் சென்றாள். தோழியின் வரவில் மகிழ்ந்த தலைவி, சிறந்ததொரு தலைவனுடன் பெரிதும் முயன்று தன்னை சேர்ப்பித்தமைக்கு அவளைப் பாராட்டி அஞ்சியத்தை மகள் நாகையார் பாடிய பாடல்…
‘முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடி இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்’ என நீ
வல்ல கூறி  வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை காண் இனி -காதல்அம் தோழீஇ!
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி,
நல்இசை நிறுத்த நயம்வரு பனுவல்,
தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
‘அன்புத் தோழியே! ஆராய்ந்து பார்க்குமிடத்து நீ மிகவும் நல்லவள். அருவி ஒலி பாறையிடத்தே மயில் ஆடிவர, கூத்தர் விழாவெடுக்கும் முதிய ஊரில் ஆடுகின்ற விறலியின் பின்னால், மத்தளக் கருவியை தழுவிக் கொண்டு வாசிப்பவன் போல, வளைந்து நிற்கும் பலாமரத்தின் குடத்தைப் போன்ற பெரிய பழத்தை தன்னகத்தே பொருந்தத் தழுவிக் கொண்டிருக்கும் ஆண் குரங்கு தன் இனிய துணையாகிய பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டுக்கு உரியவன் நம் தலைவன்…அன்னவன் உயர்குடிப் பிறப்பினன்… தன்னுடன் பழகியோரைப் பிரியலன்… நாவால் கெடுமொழி கூறான்… எல்லோரிடத்தும் அன்பினன் எனவெல்லாம் அவன் சிறப்புகளை எடுத்துக்கூறி என்னுடன் அவனை வைத்தனை…
விரைந்தோடும் குதிரைகள் பூண்ட நெடிய தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழம் புகழ் நிறுவிய புகழமைந்த பாண்மகனானவன், இனிய இசைத்தமிழ் நூலின் எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டினும், அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், எம் தலைவன் எம்மைத் திருமணம் செய்த நாளினும் இப்பொழுது பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.   சுருக்கமாகச் சொன்னால்… திருமணம்  முடிந்த பின் தோழி தலைவியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்வாறு சென்ற தோழியிடம் தலைவி, ‘உன் உதவியால் அடையப்பெற்ற தலைவன் ,’மலைநாடன், நல்ல குடியில் பிறந்தவன், தன்னுடன் கூடிய என்னைப் பிரியாதவன், நெடுநா மொழியை உடையவன், மிக்க அன்புடையவன்’ என்று கூறி எங்களைச் சேர்த்து வைத்தாய். அது அத்தனையும் உண்மை. முன்னைவிடவும் திருமணம் செய்து கொண்ட பின் அவன் மிக இனியவனாக இருக்கிறான்’ என்று சொல்கிறாள்.
ஒரு பெண் தன்னுடைய ஆணிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் போது அவனை மிக இனியவனாக நினைக்கிறாள். அதற்கு முன்பாக அவனை  ‘தன்னுடைய ஆண்’  என்று நம்பிக்கையடைகிறாள். மேலும் அவனே இந்த உலகத்தின் மிகச் சிறந்த ஆண் என்றும் அவனுடைய நெஞ்சில் இவளுக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும் அவனை இவள் மட்டுமே அரவணைத்துச் செல்ல முடியும் எனவும் நம்புகிறாள். இந்த நம்பிக்கையின் பொருட்டே அவன் வாழ்வில் யாவற்றையும் பெண்நிகழ்த்துகிறாள்.
அஞ்சியத்தை மகள் நாகையார் இந்தப் பெயர் காரணம் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, அஞ்சி என்பவரின் அத்தை மகள் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்த அஞ்சி என்பவர் அதியமான் நெடுமான் அஞ்சியாகவும் இருக்கலாம்.  நாகு என்னும் சொல் இளமையைக் குறிக்கும். இந்த வகையில் ‘அஞ்சியத்தை மகள் நாகையார்’ என அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம். அடுத்தது, அஞ்சி எனும் பெயர் உடைய ஒருவரை ‘அஞ்சியத்தை’ என அவர் உறவினர் அழைத்திருக்கலாம். அவருடைய மகளாக ‘நாகையார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். எவ்விதமாகவும் இவரது இயற்பெயர் ‘நாகை’ என்றிருக்கலாம். இவர் பெண்பாற் புலவர்தான் என்பதைப் பாடலில் உள்ள குறிப்புகளும் உறுதி செய்கின்றன.
இவரது பாடல், அகப்பாடலாக இருப்பதும் பெண்கூற்றாக இருப்பதும் ஒரு பெண்புலவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வைக்கின்றன.
இந்தப் பாடலில் கிடைத்துள்ள குறிப்புகள்குதிரைகள் பூட்டிய நெடுந்தேரை ஓட்டும் அஞ்சி மன்னனையும் அவன் மேல் பாடப்பட்ட இசைப் பாடலையும் அதனைப் பாடிய பாணனையும் தலைவி குறிப்பிடுகிறாள்.இசை பற்றிய குறிப்புகளையும் பாணன் இசைப் பண்ணை அமைத்தான் என்றகுறிப்பையும் இப்பாடல் தருகிறது (352:14-15).விறலியர், உழவர், பாண்மகன் ஆகிய பல்கலை வாணர்களை இப்பாடல் சுட்டுகிறது.மூதூரில் விழாக்கள் நடந்தன என்பதையும் விழா நாளில் விறலி ஆடுவாள் என்பதையும் அவள் ஆட்டத்துக்கு ஏற்ப, கலைஞர் முழவை அடிப்பார் என்பதையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.
முன்பே இருந்த பண்களை மேலும் ஆராய்ந்து பாணன் புதிது புதிதாகப் பண்ணை அமைத்தான் என்றும் தெரிவிக்கிறது. ஒரு பாடலாயினும் பலவகையாலும் செய்திச்செறிவுடைய கலைப் பாடலாகும் இது.இவரது பாடலாக சங்க இலக்கியத்தில் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. அக நானூறு: 352.

ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்


 சக்தி ஜோதி

முகத்தில் பெண் என்பவள் தாய் அல்லது மனைவி என்கிற நிலையில்தான் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகிறாள். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பொருளாதார வாழ்வில் பெண்கள், ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம். மற்றது இந்தப் பொருளாதாரச் சார்பு நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுச்சூழல்.
வீட்டு வேலைக்குப் பெண் எனவும் அந்த வீட்டையும் சுற்றத்தையும் பராமரிக்கும் பொருள் தேடி வெளியில் அலைபவன் ஆண் எனவும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சார்புநிலை என்பதை அவளே அறிந்திருந்தாலும், அவள் அந்நிலையிலிருந்து மாற விரும்புவதில்லை. குழந்தை வளர்ப்பு, வீட்டைப் பராமரிப்பது, குடும்பத்தினருக்குத் தேவையான சமையல், அதற்கான எரிபொருள்கள் தேடுதல், தண்ணீர் தேடி சேகரித்தல்… இப்படியான  வீட்டு வேலைகளுக்குப் பொருளாதார மதிப்பீடு செய்து பார்த்தால் பெண்களின் வேலை பங்கேற்பு விகிதம் ஆண்களை விடவும் கூடுதலாகவே இருக்கும். இவை தவிர குறைவான ஊதியத்தில் அதிக வேலை, சேவை வேலைகள், சம்பளமில்லா வேலைகளைச் செய்வதெல்லாம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஆண்-பெண் சமத்துவத்தை சட்டங்கள் வலியுறுத்தினாலும் மரபு வழியாக அமைந்த பண்பாட்டு மனம் என்பது ஆண்களிடமும்  பெண்களிடமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. குழந்தைப் பிறப்பு முதல் வளர்ப்பிலும் ஆண்-பெண் வேறுபாடுகளை இந்த சமூகம் பயிற்றுவித்திருப்பதால், அத்தனை எளிதில் மாறுவதற்கு இருவருமே தயாராக இல்லை என்பதே உண்மை.
இந்தப் பண்பாட்டு மனதின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் சங்க காலத்திலும் பொருள்வயின் பிரிவு என்பது ஆண்களுக்கானது.  ஒரு பெண்ணைத் தேர்வு செய்த பின்பு அந்த ஆண் அரிய வகை  பரிசப் பொருட்களைத் தந்து அவளைத்  திருமணம் செய்ததாக மரபு உள்ளது. அதற்காகவே தலைவன் திருமணத்துக்கு முன்பாக பொருள் தேடிச் செல்கிறான். இன்றும் கூட திருமணச் சடங்குகளில் மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் ‘வளைவிலை’ என்கிற பரிசப் பணமும் சீரும் இதற்குச் சாட்சி. திருமணத்துக்குப் பிறகு குடும்பம் நடத்தவும் தலைவிக்கு அணிகள் சேர்க்கவும் ஓர் ஆண் பொருள் தேடி செல்கிறான். மேலும் சமூகத்தில் மதிப்பு, மரியாதை என்கிற நிலையை அடைவதற்கும்  ஆண் என்பவன் பொருள் தேடிச் சேகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஓர் ஆண் தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமன்றி, சுற்றத்தினருக்கும் சேர்த்தே பொருள் தேடவேண்டியிருக்கிறது. இந்நிலை இன்றைய காலத்துக்கு மட்டுமானது அல்ல. சங்ககாலத் திலும் பொருள் தேடுதல் என்பது அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. அதுவே அறம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது . ஒருவர் அறநிலை நீங்காது இருக்க வேண்டுமெனில் பொருளில் வளமுடையவராக இருக்கவேண்டும். மேலும் உறவினர்களின் துன்பங்களைக் களைந்து அவர்களையும் காக்கவேண்டும் என்பது தலைவனின் கடமையாக  இருக்கிறது.
பொருள்தேடி பிரிந்து சென்ற தலைவனை நினைத்து மனம் வருந்தி நின்ற தலைவியிடம் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த  முள்ளியூர்ப் பூதியாரின் பாடல் இது…
‘அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்’ எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், ‘நறு நுதல்

மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில நாள் தாங்கல்வேண்டும்’ என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி,
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உறைஇக் கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே’
அற நெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை  நடத்தல் வேண்டும்… சிறந்தவர்களாகிய நம்முடைய சுற்றத்தாரது பலவகையான துன்பங்களை தாங்குதல் வேண்டும்… இவ்விரண்டை யும் செய்யாமல் வீட்டிலேயே சோம்பி இருப்பவருக்கு ஒருநாளும் இன்பம் இல்லை என்பதால் நம்முடைய தலைவர் பொருளீட்டும் முயற்சியை விரும்பி மேற்கொண்டுள்ளார். பல புரிகளால் முறுக்கப்பட்ட நீண்ட கயிற்றால்  கட்டப்பட்ட  வண்டியினை, எருதுகளின் வலிமையான  பிடரியில் பூட்டி, மேடான இடங்களில்  ஓட்டும்போது  உப்பு வாணிகர் அவற்றை அதட்டும் ஓசையைக் கேட்டு ஆண் மானும் பெண் மானும் பயந்து நிலைகெட்டு ஓடத்தொடங்கும்.
‘உமண்விளி’ என்பது உப்பு விற்கச் செல்லும் உமணர், உப்பு வண்டியை மேட்டு நிலத்துக்கு ஏற்றும்போது எருதுகளைப் பல நுகங்களில் கட்டி ஒன்றாகப் பிணைத்து இழுக்கச் செய்வர். அப்போது பல நுக எருதுகளை ஓட்டுவதற்குப் பலர் செய்யும் அதட்டல் ஒலிதான் உமண்விளி. இது சுற்றத்தாருக்காக தலைவனும் தலைவியும் பிரிந்து செல்லுதலை மறைபொருளாகக் குறிப்பிடுகிறது . அத்தகைய மேட்டுநிலமுடைய காடுகளின் அழகு கெடுமாறு கோடையானது பரவி,  நிலைபெற்று நிலத்தின் நீரினை உறிஞ்சும்.  அதனால் நீர் வற்றிய அழகிய பெரிய  நீண்ட மூங்கிலின் கணுக்கள் பிளந்து முத்துகள் தெறிக்கும். அவை கழங்குக்காயைப் போல தோற்றமுடையவை. முன்பு அவ்விடத்தில் கழங்கு ஆட்டம் விளையாடிய குழிகளிலே முத்துகள் தெறித்து விழும்.
கழங்கு என்பது கழற்சிக்காய். இதனை இக்காலத்தில் சூட்டுக்கொட்டை என வழங்குவர். இது வெண்மையானது. கழங்குகளைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் கழங்கு. நீளமான மூங்கிலில் முத்து விளையும். இது  மண்ணா முத்தம் எனப்படுகிறது . அவை மூங்கிலின் கணு உடைந்து தெறித்து மண்ணிலுள்ள பழங்குழிகளில் விழுவது கழங்கு விளையாட்டு போல இருக்குமாம். இக்காலத்தில் சிறுவர்கள் குண்டைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் அக்காலக் கழங்காட்டம் போன்றது.
இனிய களிப்பைத் தருகிற கள்ளினையும் அழகிய தேரினையுமுடைய அரசனாகிய நன்னனது வானளாவிய நீண்ட மூங்கிலையுடைய உயர்ந்த மலைச்சாரலையும் பொன் கிடைக்கும் பக்கமலையினையும் கடந்து சென்றார் நம் தலைவர்… ‘நறுமணமுடைய நெற்றியையும் கரிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளே! அரிய துன்பத்தால் வருந்துதலை சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய மாண்புற்ற ஒளி பொருந்திய கைவளையினைத் திருத்தி, தலை கோதி, தலைவன் சென்றிருப்பதால் விரைவில் வந்துவிடுவார்’ என்று தோழி, தலைவியை ஆற்றியிருக்க வலியுறுத்து கிறாள்.
சங்க காலத்தில் வினை என்னும் சொல் போரிடும் செயலைக் குறிக்கும். ‘வினை முற்றிய தலைவன்’ என்று சொல்லும்போது இச்சொல் போர் நிகழ்வில் பொருள்படுவதைக் காணலாம். இந்தப் பாடலில் ‘செய்வினை’ என்று வருகிறது. எனவே, இது பொருள் தேடும் வகையில் சொல்லப்படுகிறது. ‘அறம் தலைப்பிரியாது ஒழுகலும்’ என்கிற நன்னோக்குடன் பொருளீட்ட தலைவன் சென்றி ருக்கிறார். எனவே, அவர் பிரிவை சிலநாள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்பது பெண்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.
கோடை பரவி, நீர் வற்றிய பாலைநிலப் பாதையில் பொருள்தேடச் செல்லும் தலைவன் தன்னுடைய பாலுணர்வுகளை கட்டுப்படுத்தி மிக கடினமான நிலவழியில்
பயணம் மேற்கொள்கிறான். இந்நிலையில் தலைவியும் அவளுடைய  உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தலைவனுக்காக ஆற்றியிருக்கிறாள். தனித்திருக்கும் தலைவி தன் நிலையிலிருந்து சோர்ந்து தளர்வுராமல் காக்க, முன்பான கூடல் காலங்களில் தலைவனும் தலைவியும் இன்புற்றிருந்த நிலைகளை எடுத்துச் சொல்லி தோழியர் மூலமாக ஆற்றுவிக்கப்படுகிறாள் என்பது மரபாக இருக்கிறது.
சமூகத்தின் இயக்கத்துக்குத் தேவையான நீர்மை என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதால், பால் உணர்வுகளை தலைவன் வரும்வரையில் தலைவி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்க வலியுறுத்தப்படுகிறாள். இன்றைக்கும் கூட வெளிநாட்டு வேலைகளை விரும்பி ஏற்கிற ஆண்களும் வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளையை மணம் முடிக்க பெண்களும் விரும்புவதைக் காண்கிறோம். திருமணமான முதல் மாதத்திலோ, இரண்டாம் மாதத்திலோ, கணவன் – மனைவி பிரிந்து வாழ நேரிடும் என்பதை இருவருமே அறிந்திருக்கின்றனர்.
என்றாலும் சமூகம் மதிக்கும் பொருளாதார ரீதியான வாழ்வைக் கட்டமைக்க இவ்வகையான நிலையை இருவரும் விரும்பி ஏற்கின்றனர். தமிழகத்திலிருந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக இருக்கிறது . குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 20 சதவிகிதமும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 15 சதவிகிதமும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 10 சதவிகிதமும் தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளிலிருந்து 7 சதவிகிதமும் பொருளீட்ட குடும்பத்தைப் பிரிந்து செல்லும் ஆண்களை உடையதாக இருக்கிறது. தினந்தோறும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வருகிற ரயிலில் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்கிற ஆண்கள் பலரையும் அவர்களின் துயரம் தோய்ந்த முகங்களையும் காண முடியும்.
ஓர் ஆண் தனக்காகவும் தன்னுடைய சுற்றத்தினருக்காகவும், பிறந்த மண், வீடு, குடும்பம் சார்ந்த உணர்வுகளையும் பாலுணர்வுகளையும்  கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதாக ஒரு பெண் நம்புகிறாள். அதனாலேயே ஒரு பெண் தன்னுடைய உடலை ஆணுக்கானதாக ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள். ஒரு பெண் தன்னுடைய மனதை ஆணுக்கானதாக ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள். ஒரு பெண் தன்னுடைய மொழியை ஆணுக்கானதாக ஒப்புக் கொடுத்து ஆற்றியிருக்கிறாள். தமிழகத்திலிருந்து குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக இருக்கிறது.
முள்ளியூர்ப் பூதியார் சங்க காலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். பூதன் என்று முடிகிற ஆண்பால் பெயர்கள் இருப்பதால் பூதி என்பது பெண்பால் பெயர் எனக் குறிப்பில் உணர்த்தப்படுகிறது. முள்ளியூர் இவரது ஊராக இருக்கக்கூடும் இவர் நிறைய பாடல்களை எழுதியிருக்கக் கூடும். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நமக்குக் கிடைத்திருப்பது ஒன்று மட்டுமே – அகநானூறு 173.

உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்

சக்தி ஜோதி

தமிழர் வாழ்வில் இன்று நாம் காண்கின்ற பல்வகை வாழ்வியல் அம்சங்களை வெளிப்படுத்தும் பாடல்களை சங்க இலக்கியங்களில் காணலாம். ‘அகம் – புறம்’ என்ற இருவகை வாழ்வை, ‘காதல் – வீரம்’ என்கிற அழியாத் தன்மை கொண்ட அடையாளங்களாக தமிழர் தம் மேல் தரித்துக் கொண்டுள்ளனர். பல நூறு புலவர்கள் பாடிய சங்க இலக்கியப் பாடல்களில் காலத்தை விஞ்சிய பெண்பாற் புலவர்களின் பாடல்களும் அடங்கும். புலமையை ஆள்வது ஆண் என்கிற மேட்டிமைவாதத் தன்மையிலிருந்து ஒரு தகர்ப்பைச் செய்தவர்கள் பெண்பாற் புலவர்கள். அகப்பாடல்களும் புறப்பாடல்களும் என பெண்களின் பங்களிப்பு சிலவாக இருந்த போதிலும், பெண்களின் பாடல்களில் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நம்முன் விரிகிறது.
நவீனச் சமூகமாக மாறிவிட்ட போதிலும் தீவிர இலக்கியப் பங்களிப்பைப் பெண்கள் செய்வதில் இருக்கும் இடர்பாடுகளை எண்ணும் பொழுது, அக்காலத்தில் பெண்களின் இலக்கியச் செயல்பாடு என்பது மலைப்பைத் தரக்கூடியது. பெண்கள் வகைப்பட்டதாக புலமை மரபு மாறுகையில் படைப்பின் தன்மையானது சமூகத்தின் மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் கூட பெண்களை எழுதிப் பார்க்க முனைவது வெளிப்படையாகத் தெரியும். பெண்களை அவர்களே எழுதும்பொழுது இருக்கும் வாழ்வின் ஊடுபாவு தோற்றம் என்பது தனி வகையானது.
சங்க இலக்கியத்தில் பங்களிப்பைச் செய்த பெண்பாற் புலவர்களை அறிமுகம் செய்யும் விதமாக இப்பகுதி அமைகிறது என்ற போதிலும், ஆண்பாற் புலவர்களின் மனதையும் நவீன வாழ்வியலையும் பற்றிப் பேச வேண்டியதும் அவசியமாகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகச் செயல்பாடுகளில் பெருமளவு வேறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப்  படிக்கும் பொழுது, மனித சமூகத்தின் தொடக்க காலம் பற்றி யூகமாகவும் புனைவாகவும் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடிகிறது. வேட்டைச் சமூகப் பெண்களின் உடல் பற்றிய புரிதலும் மனம் பற்றிய உணர்தலும் ஏற்படுகிறது.
நாடோடியாக வாழ்ந்த மக்கள் தங்களுக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து, இனக்குழுச் சமூகமாக, வேளாண் மக்களாக மாறியபொழுது பெண்ணின் உடலமைப்பு, இனவிருத்தி, வாரிசுகளைக் காப்பது போன்ற நிலைகளில் பெண் என்பவள் இல்லத்துக்கு இன்றியமையாதவளாக மாறிவிட்டாள். நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற இந்தக் காலத்திலேயே பெண் உடல் மீது ஆணுக்கு ஆதிக்கம் செய்ய எண்ணம் வந்தது. பொருளாதாரத் தேவைக்காக வேறு பலத் தொழில்களைச் செய்யவும், அதற்காகக் குடும்பத்தை விட்டு ஒரு ஆண் பிரிந்து செல்லவும் அவசியம் ஏற்பட்டது போலவே, அவனுடைய வாரிசு களைக் காத்து குடும்பத்தை நிலைப்படுத்தும் செயலை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய கணவனுக்காக காத்திருக்கும் நிலை  ஏற்படுகிறது. காத்திருப்பு என்று சொல்லும் பொழுதே பிரிவு என்கிற ஒரு செயலை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது. ஒரு ஆணுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதே ஆணின் இருப்பைக் காட்டும் விதமாக இருக்கிறது. தகப்பனுக்காகவோ கணவனுக்காகவோ மகனுக்காகவோ ஒரு பெண் தன்னை அர்ப்பணித்துக் காத்திருக்கிறாள் என்பதே இன்றைக்கும் நாம் காண்கிற உண்மையான நிகழ்வு. பொதுவாக மணமுறிவு ஏற்படுகிற எத்தனையோ குடும்பங்களில் சட்ட ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்ணிடமே அந்தக் குழந்தை வளர்கிறது. அல்லது பெண்ணே அந்தக் குழந்தைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள்.
நான் மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்த போது, விவாகரத்து பெற வந்த பெண்ணுடன் தனித்துப் பேசினேன். அந்த ஆண் அவளை சந்தேகித்து பிறப்புறுப்பில் அடித்ததாகக் கூறி அழுதாள். அதனால் கணவனுடன் வாழ விரும்பவில்லை என்றும் அவரைப் பிரிந்துவிட விரும்புவதாகவும் சொன்னாள். ஆனால், ‘குழந்தையை என்னிடமே விட்டு விடுங்கள்… இவன்தான் இனி என்னுடைய எல்லாமும்’ என்று சொன்னார். இதே போல, சமீபத்தில் பார்த்த ‘குயின்’ என்ற ஹிந்தி படத்தில், பிரான்ஸ் நாட்டில் ஆண் துணை அற்ற ஒரு பெண் தன்னுடைய மகனைக் காட்டி, ‘இவன்தான் தன் உலகம்’ என்பார்.
பொதுவாகவே குடும்ப அமைப்பில் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படுகிற பொழுது, ஆண் என்பவன் அந்தப் பிரிவை எளிதில் கடந்துவிடுகிறான். பெண் என்பவள் அந்த பிரிவுக்குப் பிறகும் கணவனுக்கு முந்தைய தன்னுடைய பழைய வாழ்வுக்குத் திரும்பவே முடியாத நிலையை அடைகி றாள். தன் குழந்தை வளர்ந்து தன் இயல்பில் தானே இயங்கும் வரை இந்த நிலையிலிருக்கும் பெண்கள், அவர்களுக்குத் துணையாக காத்திருக்க வேண்டும். ஆக, பெண்கள் உலகமானது தங்களை ஆண்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒப்புக்கொடுத்து காத்திருக்கிறது.
இது போன்ற சூழல்களில் இன்றைக்கு பத்திரிகைகளும் ஊடகங்களும் சட்டமும் பெண்களுக்குத் துணையாக வருவது போலக் காட்சியளிக்கிறது. உண்மையில் ஒரு ஆண் இன்றைக்கு ஒரு பெண்ணைப் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் பல்வேறு வகையினதாக இருந்தாலும், அதனுடைய எல்லைகள் விரிவடைந்திருந்தாலும், நிகழ்வுகளின் முடிவில் அந்தப் பெண் காத்திருப்பவளாக மாறுகிறாள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
வெள்ளிவீதியார் இதன் அடிப்படையில் சங்கப் பெண்பாற் புலவர் வெள்ளிவீதியாரின் ஒரு பாடலை அறிமுகம் செய்ய நினைக்கிறேன். தலைவன் பிரிந்து சென்ற பின்பு வருந்தியிருக்கும் தலைவிக்கு தோழி ஆற்றுப்படுத்திச் சொல்வதாக அமைந்திருக்கும் பாடல் இது. ‘நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரும் உளரோநம் காதலோரே…’
‘தலைவன் நிலத்தைத் தோண்டி அதில் புகுந்துகொள்ள வில்லை. வானத்தில் ஏறி பறந்து எட்டாத நிலையில் சென்றுவிடவில்லை. கடலின் ஆழத்தில் சென்று விடவும் இல்லை. ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். வீடு வீடாகத் தேடினால் கண்டுபிடித்துவிடலாம்’ என்கிறாள் தோழி. ‘அப்படிக் கண்டுபிடித்து, அவன் இருப்பிடத்துக்கே தூது அனுப்பித் தலைவனைக் கொண்டு வருகிறேன்… கவலைப்படாதே’ என்று தலைவியைத் தேற்றுகிறாள்.
நேரடியாக இப்படிப் பொருள் எடுத்துக் கொண்டாலும், அந்தக் காலகட்டத்தை மனதில் கொண்டு இந்தப் பாடலின் வழியாக உணர்கிற பிரிவு நிலையைப் பார்த்தால்… இந்தத் தலைவன் பொருள் தேடியோ, போருக்காகவோ தலைவியைப் பிரிந்து செல்லவில்லை என்பதை உணர முடிகிறது. நிலத்தின் ஆழத்தில் நாகக் கன்னியர் இருப்பதாக ஒரு நம்பிக்கை… அவர்களைத் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது. வானலோகத்தில் தேவகன்னியர் இருப்பார்கள்… அவர்களையும் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது. ஆற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் சேரக்கூடிய கடலின் மேல் காலால் நடந்து சென்றிருக்க மாட்டான்.
நிலத்தில் புகுதலும் வானத்தின் மேலே பறந்து செல்லுதலும் நீரின் மேல் நடப்பதுமான சித்திகள் கைவரப்பெற்ற சாரணர் போல அல்ல நம் காதலர்… சாதாரண மானுடர்தான். அப்படியான சாதாரணனுக்கே உரிய குறைவுபட்ட இயல்புடையவர். வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வீட்டில் வேறு ஒரு பெண்ணிடம் தன் காமத்தைத் தீர்த்துக் கொள்ள சென்றிருப்பான். காதலை பெரும்பாலும் உடலாக உணர்கிற ஆண்களைத்தான் காலம் காலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியத்தின் ஒரு பிரிவுநிலையான பரத்தையர் பிரிவிலும் இதுவே நிலை. ஆண் விட்டுச் சென்றுவிட்டான் என்றாலும், பெண் பொறுமையுடன் இருக்கவே ஆண்பாற் கவிஞர்களின் பாடல்களில் வலியுறுத்தப்படுகிறாள். மாறாக வெள்ளிவீதியின் பாடல்களில், ‘எங்கே போய்விடுவான் தலைவன்… வந்துவிடுவான்’ என்கிற தன்னிலை சார் உணர்வு மேலோங்கியிருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...