Monday, May 30, 2016

ஒரு பெண் தூது அனுப்புகிறாள்...

   சக்திஜோதி


வழியனுப்புதலும் விடைபெறுதலும் அத்தனை எளிதானதா மேலும் இவை இரண்டும் ஒன்றா என்ற கேள்வி இன்று காலையிலேயே மனதுக்குள் வளையமிடத் தொடங்கிவிட்டது. இந்தக் கேள்வியின் தொடக்கபுள்ளி எங்கிருந்து தொடங்கியது என யோசிக்கிறேன். அண்மையில் நண்பர் ஒருவரின் பிள்ளைப்பேற்றினைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனை கத்தோலிக்கக் சகோதரிகளினால் நடத்தப்படுகிறது. அந்த வளாகத்தினுள் மிகச்சிறிய தேவாலயம் உள்ளது. அந்த மருத்துவமனையில் நிகழ்கிற ஒவ்வொரு குழந்தைப் பிறப்புக்குப் பிறகும் தாயையும் குழந்தையும் தேவாலயத்தில் வைத்து ஜெபம் செய்து வாழ்த்தி வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்க நான் சென்றிருந்த சமயம் தாயும் குழந்தையும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புதிய உயிரை இந்த உலகில் வாழ்வதற்காக வழியனுப்பி வைக்கிற சகோதரியின் முகத்திலிருந்த மகிழ்வும் அவர்களிடம் விடைபெறுகிற இளம்தாயின் முகத்திலிருந்த உடல்நோவு கடந்த பரவசமும் சற்றுத்தள்ளி பார்வையாளராக நின்றிருக்கும் என்னிடமும் இயல்பாக வந்துசேர்ந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின்பு என்னுடைய வாகனத்தின் வருகைக்காகக் காத்திருந்தேன். அப்போது மருத்துவமனையின் தீவிர நோயாளிகள் பிரிவில் சற்றுமுன்பாக ஒருபாட்டியம்மா இறந்து போயிருப்பார் போல, அவரது உடலை தூய வெள்ளைத் துணியில் சுற்றி, குழந்தையை வழியனுப்பி வைத்த அதே சகோதரி மரித்த பெண்ணின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்து வழியனுப்பிக் கொண்டிருந்தார். முந்தின வழியனுப்புதலின் மகிழ்வு கரைந்த அந்த சகோதரியின் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று எனக்குள் பல்வேறு நினைவுகள் கிளர்ந்தெழச் செய்தது.
பிறப்புக்கும் மரணத்திற்கும் இடையே எத்தனை விதமான வழியனுப்புதல்களையும் விடைபெறுதல்களையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். முதல்முறையாக குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும்பொழுது அந்த அம்மாவும் கையசைத்து விடைபெறும் குழந்தையும் மனத்தில் எப்பொழுதும் நீங்காத காட்சி. இதே போல மகளைத் திருமணம் செய்து வழியனுப்பும் தகப்பனுக்கும் மகளுக்கும் இடையே கண்களால் நிகழ்கிற ஒரு விடைபெறுதல் ஒருபோதும் மறக்க இயலாத காட்சி. சமீபத்தில் என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நிச்சயம் செய்யும் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்பு ஒரு அறையில் அந்த மணப்பெண்ணும் அவருடைய அம்மாவும் எதிரெதிரே அமர்ந்திருக்க பக்கவாட்டில் நானும் மாப்பிள்ளைப் பையனுடைய அம்மாவும் அமர்ந்து, திருமண வீட்டிற்கே உண்டான கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தோம். சிறிதுநேர உரையாடலுக்குப் பின்பு பெண்ணின் அம்மா நிலைத்தப் பார்வையுடன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். வேறுபக்கம் திரும்பிப் பேசிக்கொண்டிருந்த அந்த மணப்பெண்ணும் அம்மாவின் பார்வை ஏற்படுத்திய ஏதோ ஒரு உணர்வினால் உந்தப்பட்டுத் திரும்பியவர் ஒரு நிமிடத்திற்கும் குறையாமல் அம்மாவின் கண்களுக்குள் உறைந்திருந்தார். அங்கே அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் “என்ன அம்மாவும் மகளும் கண்ணாலேயே பேசிக்கிட்றீங்க” எனக் கேட்டபின்பே அவர்கள் இருவரும் இயல்புக்கு மீண்டார்கள். அதுவரையில் தன்மகளை தன்னுடைய மகளாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அம்மாவுக்கு வேறு ஒருவீட்டிற்கு தன்மகளை முழுமையாக கையளித்து விடை தருவதன் துயரம் அங்கே தோன்றி மறைந்ததாகவே இன்றுவரையில் அந்தக் காட்சி எனக்குள் பதிந்திருக்கிறது. பொதுவாகவே விடைபெறுவது என்பது துயர் என்கிற அடிச்சரடு கொண்டே நெய்யப்படுகிறது.
அனேகமாக ரயில் நிலையங்கள் என்றாலே கையசைத்து நிற்கும் ஒரு காட்சியை சட்டென உயிர்ப்பித்துவிடுகின்றன. ரயில் என்பது உறவுகளின் அடிப்படையான பிரிவிற்கும் இணைவிற்கும் குறியீடாகவே எப்பொழுதும் தோன்றுகிறது. யாராவது ஒருவர் அவருக்குப் பிரியமான யாருக்கோ கையசைத்து விடைதரும் பொழுது தன்னுடைய மனத்தையும் இணைத்தே அனுப்புகிறார். விடைபெற்றுச் செல்பவரும் தன்னுடைய மனத்தை அந்த ரயில் நிலையத்தில் விட்டுச் செல்கிறவராகவே இருக்கிறார். ஒரு பயணம் தொடங்குகிற இடத்தில் மட்டுமல்ல, பயணத்தின் இடைவழியில் நின்று செல்லும் பொழுது அந்த ரயிலில் பயணித்து நெடுந்தூரம் செல்கிற பிரியத்துக்குரிய ஒருவருக்காக தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பழங்களை கையில் வைத்து ஐந்து நிமிட சந்திப்புக்காகக் காத்திருப்பவர் பலர் உண்டு. அந்தக் குறுகிய நேரச் சந்திப்பிற்காக இவரும் கூட போக்குவரத்து நெரிசல் கடந்து நெடுந்தொலைவு பயணித்து வந்திருப்பார். நின்று செல்கிற அந்த ரயில் நகர்ந்து செல்கையில் அவர்கள் இருவரையுமே இடம்மாற்றிவிட்டே செல்கிறது. வழியனுப்புகிறவர் பயணிக்கிறவராகவும் விடைபெற்றவர் ரயிலடியில் காத்திருப்பவராகவும் இடம்மாற்றம் நிகழ்வது என்பது இம்மாதிரியான சந்தர்ப்பங்களை உயிர்ப்புடையதாக்குகிறது.
எஸ். தேன்மொழியின் கவிதை,
“மனம் ஒவ்வாதொரு
வழியனுப்புதலைத்
தந்துவிட்டு விரைகிறேன்
இன்னும் சிறிதுநேரம்
நின்றால்கூட
நம்வழிகள்
அடைபட்டுவிடும்
வாசிக்கமுடியா
ஒருகோடிக் கவிதையோடு
உணர்வின் சிலையென
நிற்கிறாய் அதே இடத்தில்
கடந்துபோகும் என் கண்கள்
வழியைப் பின்நோக்கி
உன்னிடத்தில் தேடுகின்றன
என் பயணத்தின்
தொடர்ச்சியான திரும்பலில்
காட்சி தந்த நீ
மறைந்துவிட்ட அந்த
முக்கியத் தருணத்தில்
என் வழிகள்
மனம் கனக்க
நீ நின்ற புள்ளியில்
திரும்ப வந்து
சுழித்துக்கொள்கின்றன.”
பெண்கள் பெரும்பாலும் மனத்தினால் இயக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணை இந்தச் சமூகம் உடலாகப் பார்த்தாலும் அவள் தன்னளவில் உடலே அல்ல. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே அலைந்துகொண்டிருப்பவளாக இருக்கிறாள். அவளுக்குத் தெரிகிறது, அவன் சூழலின் காரணமாகப் பிரிந்து செல்ல வேண்டியவன்தான் என, ஆனாலும் அவள் தடுமாறிக்கொண்டே இருக்கிறாள். பிரியத்தினால் கனிந்திருக்கும் மனத்திலிருந்து மனம் ஒப்புதலோடு ஒரு வழியனுப்புதலை ஒருபோதும் தந்துவிட இயலாது.
கழார்க்கீரன் எயிற்றியனார் என்கிற சங்கப்பெண்பாற்புலவர் ஒருபாடலில் தலைவி அவளுடைய மனம் உடன்பட்டு வழியனுப்பிவிட்டு அதன்பின்பு வருந்துவதாகச் சொல்கிறாள்.
“நாண்இல மன்றஎம் கண்ணே நாள்நேர்பு,
சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. “
தலைவன் பிரிந்து செல்லும் பொழுது அவனோடு உடன்பட்டு வழியனுப்புகிறாள் என்றபோதும் அவன் பிரிந்து சென்றபொழுது அழாத தலைவி வாடைக்காற்று வீசுகிற பருவம் தொடங்கியும் தலைவன் வராததால் அழுகிறாள். வாடைப்பருவம் எப்படித் தொடங்கியது என்றால், நுண்ணியதாக மழைத் துளியோடு கலந்து வாடைக்காற்று வீசுகிறது. இந்தக் குளிர்ந்த காற்றின் நீர்த்துளி பட்டு, சூல்கொண்ட பச்சைப்பாம்புபோலத் தோற்றம் கொண்ட கரும்பின் திரண்ட அரும்பு மலர்கிறது. சூல்கொண்ட காதல் மலரவேண்டிய இத்தகைய வாடைக்காலத்திலும் தலைவன் இன்னும் திரும்பி வராததால் என் கண்கள் தானாகவே கண்ணீர் வழிய அழும்படியாக நாணம் இல்லாதவையாக இருக்கின்றன எனத் தலைவி சொல்கிறாள். அவளுடைய ஆற்றாமை மிகுந்த உணர்ச்சியை அவள் கண்கள் மீது ஏற்றிச் சொல்கிறாள். குறிப்பிட்ட காலத்தில் திரும்பிவிடக்கூடும் என்கிற எண்ணத்தில் உடன்பட்டே தலைவனை வழியப்புகிறாள் அவள். அவனோ வாடைக்காலத்திலும் திரும்பவில்லை.
சொல்லிச்சென்ற காலத்தில் திரும்ப இயலாது போய்விடுகிறபொழுது தனித்திருக்கும் தலைவி தன்னுடைய தோழியை அவனிடம் தூது அனுப்புவாள். அப்படி தோழியையும் தூது அனுப்ப இயலாது போகும்பொழுது தென்றல், மயில், கிளி, அன்னம், புறா, மான், முகில் என அவளின் புழங்குவெளியில் காண்பவற்றைத் தூதாக அனுப்பி தன்னுடைய நிலையை அவனுக்குச் சொல்ல விழைகிறாள். தலைவன் வரவு நிகழாத வாடைக்காலத்துத் தனிமையில் தவித்திருக்கும் கழார்க்கீரன் எயிற்றியனாரின் தலைவி அந்த வாடைக்கற்றையே தூதாக அனுப்புகிறார். அவரின் அகநானூற்றுப் பாடல்,
“விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால்
அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே.”
தலைவனின் வருகை இன்மையால் இறப்பதற்கு ஒப்பான துன்பத்துடன் தலைவி இருக்கிறாள். தலைவனை நினைத்து மெலிந்து கையில் உள்ள சில வளையல்களும் நெகிழ்ந்து விழ , அவனுடைய வரவினை விரும்புகிற மனத்துடன் இரக்கங்கொள்ளத்தக்க வகையில் இருக்கிறாள். பலவகைப்பட்ட மலர்களும் குழைய வானத்தில் முழங்கி, குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தணிந்த கூதிர்காலத்தின் கடைசி நாளில் தலைவியின் நெஞ்சத்தில் துன்பம் ஏற்படும்படியாக அவளைத் தனியாக விட்டுச் சென்றிருக்கிறான். இவள் இரங்குதலுக்கு உரியவள் என்று கருதாமல், களிரானது நீரை முகந்து சொரிவதுபோல, இடமெங்கும் மறைந்து போவது போல பனித்துளி விழ, தாமரை மலரும் கரிந்து போகிறது. இப்படிப்பட்ட முன்பனிக்காலத்துப் பாதி இரவில் குன்றுகளையும் நெகிழ்விப்பதுபோன்ற வாடைக்காற்றே நீ என் ஒருத்தியை மட்டும் வருத்துகிற குறிக்கோளுடன் வந்தாயோ எனக் கேட்கிறாள் தலைவி. ஓடும் புனல், கால்வாய்களிடத்திலே உள்ள மண்மேடுகளைக் கரைந்து நுண்மணலாக்குவது போல நெஞ்சம் நெகிழ்ந்து இளகிட கொடியவரான தலைவன் இருக்கும் திக்கில் நீ செல்வாயாக, அவ்வாறு நீ சென்றால் பொருள்தேடும் வேட்கை கொண்டு என்னை மறந்திருக்கும் என்னுடைய தலைவர் என்னை நினைவுகொள்ளக்கூடும் என வாடைக்கற்றைத் தூதாக அனுப்புகிறாள் தலைவி.
பெரும்பாலும் உடன் வாழுகிற மனிதர்களையும், மொழியையும் தூதாக அனுப்புகிற செயல் ஆணுக்கே கைக்கூடி வந்திருக்கிறது. ஆனால் பிரிவுகாலத்தில் பெண் சொற்களற்றுப் போகிறாள். ஆண்களைப்போல தன்னுடைய நிலையை அருகில் இருக்கும் மனிதரிடம் பகிர்ந்துகொள்ள அவளால் முடிவதில்லை. அதனால் வேறு எதன் வழியாகவாவது தன்னுடைய நிலையைச் சொல்லிவிடவும் பிரிந்திருக்கும் அவனைக் கூடியிருக்கவுமான மனத்துடன் இருக்கிறவளாகப் பெண் இருக்கிறாள்.
சிலபோது வேறு வேறு நிலப்பகுதியில் வாழநேரிடுகிற பிரியம் கொண்ட இருவர் முழுநிலா நாளில் தங்களை நிலவின் ஒளிவழியாகப் பரிமாறிக்கொள்வது இன்றும்கூட நிகழத்தான் செய்கிறது. என்றபோதிலும் சங்ககாலம்போலவோ பக்திஇலக்கியங்களின் காலம் போலவோ அல்லது சிற்றிலக்கியங்களின் காலம் போலவோ தூதுமொழியும் தூது இலக்கியமும் தனித்தனியாக இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி தூதினை வேறு ஒரு வடிவத்தில் செய்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு
கனிமொழி.ஜி. யின் கவிதை,
இன்னும் நீ தொடர்பெல்லைக்கு
வெளியில் தான் இருக்கிறாய் .
நீ தந்த குளிரும் வெம்மையும்,
வெம்மையும் குளிருமாய் மாறிவிட்டன…
சொற்களால் நமக்கான கூடு முடைந்தவன் நீ
எங்கே உறங்குகிறாய் …
சொல்வாயா…
நீயிருப்பது எந்த நிலம்
அங்கே இப்போது என்ன பருவம்
இக்கணம் என்ன பொழுது
பெரும்பயணம் செய்துவரும்
நீள அலகுடைய பறவைகள்
அங்கே வருமில்லையா
என்னைக்கடந்து செல்லும்
எல்லா நதிகளிலும் பூக்களைத் தூவுகிறேன்
எப்படியும் அலைசலிக்கும்
மணல்வெளிதானே உன் இருப்பிடம்
அலைக்கற்றையின் சூட்டில்
இன்னுமின்னும் பொறிக்கின்றன
வெண்மையான கால்களுடன்
நிறைய புறாக்குஞ்சுகள் .
உன் சொற்களற்ற இந்த அலைவெளியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான ஒரு ஸ்மைலியும்
ஒரு சிவந்த இதயத்தையும்
என் அலைபேசியில்
இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது.
************************************************************************************************************************
கழார்க்கீரன் எயிற்றியனார்:
எயிற்றியனார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் கழார் ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊர் சோழ நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கீரன் என்பவரின் துணைவியாகவோ மகளாகவோ இருக்கலாம் என்று ஒரு குறிப்பு உள்ளது. “வில்போல் சோழர் கழாஅர்”(நற் : 281) என்கிற இவரின் வரிகளினால் இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது.
பாலைத் திணையைப் பாடுவதில் தனித் தனித்தன்மையுடையவர் இவர். பாலைப்புனைவுக்கு இவர் மேற்கொண்டவை மருதநிலமும் வாடைக்காலமும். பொதுவாக தலைவன் செல்லும் வழியைப் பாடுகிற வழக்கம் உள்ள பெண்பாற்புலவர்களின் கூற்றுக்களில் இவர் தனித்து தலைவியின் வாடைக்காலத்துத் தனிமை உணர்ச்சியை ஆறு பாடல்களில் பாடியுள்ளார். அதனால் வாடை பாடிய புலவர் எனச் சொல்லலாம்.
அகநானூறு: 163, 217,235,294 குறுந்தொகை: 35, 261 நற்றிணை: 281,312 மொத்தம்: 8
************************************************************************************************************************
தூதுச்செய்தி:
• தொல்காப்பியத்தில் தூது செல்பவர்களை வாயில்கள் என்பர்.
• ஓதல், பகை, தூது இவை பிரிவே( அகத்திணை:27)
• அகப்பொருள் நிலையில் மட்டுமல்லாமல் புறப்பொருள் நிலையிலும் தூது வழக்கம். அதியமான் அரசனுக்காக ஔவையார் தொண்டைமான் அரசனிடம் தூது சென்றது.
• திருக்குறளில் தூது தனி அதிகாரம்(681-690)
• பக்தி இலக்கியங்களில் திருமுறைகளில், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவது போல பாடல்கள்.
• தமிழின் முதல் தூது நூல் 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய “நெஞ்சுவிடு தூது”.
• சிற்றிலக்கிய காலத்தில் 300 வகையான தூது நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
• அனைத்துத் தூது நூல்களும் “தூது” என்கிற சொல்லை இறுதியில் கொண்டிருக்கும், சோமசுந்தர பாரதியார் மட்டும் மேகம்விடு தூது என்கிற பொருள்படும்படியாக “மாரிவாயில்” என்று பெயர் வைத்திருப்பார்.
• இத்தனை வகையான இலக்கிய வகைமைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது சங்கஇலக்கியப் பாடல்கள்.
• காப்பியங்களில்: கம்பராமாயணத்தில் அனுமன் தூது, சீவகசிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியைத் தூது அனுப்புதல்.
• மகாபாரதத்தில்: ஸ்ரீ கிருஷ்ணர் தூது – விதுரர் வீட்டில் தங்கியதால் துரியோதனருக்குச் சார்பாக விதுரரை வில் எடுக்கவிடாமல் செய்தது பாரதப்போரின் முக்கிய நிகழ்வு.

ஒரு பெண் காதலில் ஆழ்ந்திருக்கிறாள்!

 சக்தி ஜோதி

ஒரு பெண்ணுக்கு பால் அறியாத பருவத்திலேயே அப்பாவாகவும் சகோதரனாகவும் ஆண் அறிமுகம் ஆகிவிடுகிறான். அப்போது அவளுக்கு அவர்களை ஆண்கள் என்று உணரவே தெரியாது. பெண் குழந்தை வளர்ந்து வரும்பொழுது உடைகளின் வழியாக ஓரளவு தன்னைப் பெண் என்று உணர்ந்து கொள்கிறது. ஆனால், விளையாட்டுகளின் வழியாகவே தன்னைப் பெண் என்று முழுமையாக  அறிந்து கொள்கிறது. அவளுக்கு மட்டும் விலக்கப்படும் விளையாட்டுகளும், அண்ணனுக்கோ தம்பிக்கோ அனுமதிக்கப்படும் விளையாட்டுகளும், அவர்கள் விளையாடும் வெளிகளும் ஆண் என்றும் பெண் என்றும் பால் வேறுபாடுகளை நிலைப்படுத்தத் தொடங்குகிறது.

குறிப்பிட்ட சில விளையாட்டுகள் மட்டுமே விளையாட பெண்களுக்கு இன்றுவரையில் அனுமதிக்கப்படுகின்றன. அதற்கு உடலியல் ரீதியாகக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பெண் என்று உணர்கிற இடங்களாக விளையாட்டுத் தளங்களே அமைந்துள்ளன. விளையாட்டுகளின் வழியாகவே அல்லது விளையாட அனுமதிக்கப்படும் இடங்களின் வழியாகவே ஒரு பெண்ணுக்கு பாலின வேறுபாடு முற்றிலுமாக அறிவுறுத்தப்படுகிறது.

சங்க காலத்தில் ‘ஓரை’ என்று ஒரு விளையாட்டை பெண்கள் விளையாடினர். கடலலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்த விளையாட்டுக்கு  முன்பாகவோ பின்பாகவோ வண்டல் விளையாட்டு, பாவை விளையாட்டு, அலவன் ஆட்டல் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுவது உண்டு.

ஓரை விளையாடும்போது மகளிர் தம் காற்சிலம்பு ஒலிக்க ஓடுவர். கடல் அலை மணலில் விளையாடும்போது மகளிரின் கூந்தல் நனைந்து நீர் சொட்டும். ஆற்றில் ஓரை விளையாடும் மகளிரோடு இளைஞர் சேர்ந்து கொள்வதும் உண்டு. என்றாலும், ஆண்களுடன் இணைந்து ஓரை விளையாடினால் அடக்கமின்மை என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பெண்களை உடலியல் ரீதியாக வேறுபடுத்திப் பார்ப்பது விளையாட்டுகளே.

போலவே, காதல் வயப்பட்டவுடன் பெண் முதலில் விளையாட்டுகளையே கைவிடுகிறாள். பல நேரங்களில் அம்மா கண்டித்தாலும் காதல் வயப்படாத வரையில் பெண் குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து விளையாடுவதை நிறுத்துவதில்லை. ஆனால், காதல் உணர்வு தோன்றியவுடன் பெண்களுடனே கூட விளையாடாமல் தனிமைக்குள் ஒடுங்கிவிடுகிறார்கள்.

‘தாதின் செய்த தண் பனிப்பாவை
காலை வருந்துங் கையாறோம்பு என
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க அன்ன
நசை ஆகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே...’

சங்கப் பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையாரின் குறுந்தொகைப் பாடலில் ‘பூந்தாதுக்களினால் செய்யப்பட்ட குளிர்ச்சியான விளையாட்டுப் பாவை, தலைவி தன்னை எடுத்து விளையாடவில்லையே என வருந்துகிறது. இந்தப் பூம்பாவையைக் காப்பாயாக எனத் தலைவியிடம் ஓரை விளையாடும் தோழியற் கூட்டம் சொல்லக் கேட்டும், தலைவி விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் தலைவியினுடைய பசலை நீங்குமாறு அவளுக்கு விருப்பமான ஒரு சொல்லைத் தலைவன் வந்து சொல்ல இயலாதா’ எனத் தோழி கேட்கிறாள்.  தலைவனுடைய ஒரே ஒரு சொல்லுக்கு ஏங்குகிறவளாக தலைவி இருக்கிறாள்.

அந்தச் சொல் அவளுக்கு விருப்பமான சொல்லாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள். அவளுக்கு ஆண் உடல் பரிச்சயம் ஆகும் முன்பாக அவனுடைய சொற்களினால் வசப்படுகிறவளாக இருக்கிறாள். அதனாலேயே சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு தடுமாறுகிறவளாகவும் இருக்கிறாள். பெண்ணுடலை தன்வசப்படுத்துகிற சொற்கள் எப்பொழுதும் ஆணுக்கு ஆதரவானதாகவே இருக்கின்றன. ஆனால், அந்தச் சொற்களின் வழியாகவே தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருப்பதாக பெண் நினைத்துக் கொள்கிறாள்.

அவளுக்கு விருப்பமான சொற்களை தலைவன் கூறத் தொடங்கியவுடன், அதுவரையிலான அவளுடைய வாழ்வில், அவளை ஆட்கொண்டிருந்த பல்வேறு செயல்பாடுகள் அத்தனையும் உதிர்ந்து அவனைச் சுற்றியே அவளுடைய  மனதை இயக்குகிறவள் ஆகிறாள். பெண்களுக்கு ஆண்கள் மீதான நேசிப்புத் தொடங்குகிற காலம் என்பதையும்  அவர்கள் விரும்புகிற நபர்களையும் அந்தப் பெண்கள் வாழுகின்ற சூழலே தீர்மானிக்கிறது. எனினும், பெண்களின் நேசிப்பு என்பது அவர்களின் மனத்திலிருந்து தொடங்குவதாக இருக்கிறது.

சங்க இலக்கியத்தில், பொதுவாக தினைப்புனம் காக்கச் சென்ற இடங்களில் காதல் தொடங்கியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவன் வேறு நிலத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அவனைப் பற்றிய நேரடியான எந்தத் தகவலும் இல்லாமலேயே தலைவி தன்னுடைய கண்களால் கண்டவுடன் காதல் கொள்கிறாள். பின்னர் ஒருகால கட்டத்தில் திரைப்படங்களையும் நாடகங்களையும் பார்த்து, அந்த கலைஞர்களின் மீது அன்பினை வளர்த்துக்கொண்ட பெண்கள் பலரும் உண்டு.

அதைப்போலவே பெண்கள் படிக்க ஆரம்பித்து, கதைகள் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கல்கியின் வந்தியத்தேவனையும், ஜெயகாந்தனின் சாரங்கனையும், நா.பார்த்தசாரதியின் அரவிந்தனையும் நேசித்த பெண்களும் உண்டு. ‘கதை படிக்கிற பெண் குடும்பத்துக்கு ஆகமாட்டாள்’ என்கிற கருத்துக்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் நிலவியது.ஒருவகையான மாய உலகத்திற்குள் பெண் தன்னை இருத்திக் கொண்டிருந்தாள். இம்மாதிரியான அன்பு எந்தவிதமான வாழ்வியல் செயல்பாட்டிற்கும் உதவாது என்று அவளுக்குத் தெரிந்தாலும், அதன் பின்னால் செல்கிறவளாக இருந்திருக்கிறாள்.

கதைகளின் நாயகர்களைத் தொடர்வது போலவே சொந்த வாழ்விலும், நேரில் சந்திக்க வாய்க்கும் ஆணிடம் கற்பனையான ஒரு காதலை கட்டமைத்திருக்கிறாள். பெண்களின் காதல் என்பது மிக முற்றிலுமாக மனம் மட்டுமே இயக்குவதாக இருந்தது. இம்மாதிரியான காதல் நிறைவேறாமல்  போகும் பொழுது பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். சங்க காலத்தில் மடலேறிக் காதலைத் தெரிவிப்பது என்பது ஆணுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது  போலவே இன்று வரையிலான சமூக அமைப்பு காதலைச் சொல்வதில் ஆணுக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம் அதிகம்.

அதைப்போலவே,  திருமணத்திற்கு முன்பாக ஓர் ஆண் எதற்காக தற்கொலை செய்து கொண்டாலும், ‘அது காதல் தோல்வி’ என்றோ, ‘ஒரு பெண் ஏமாற்றி விட்டாள்’ என்றோதான் சொல்லப்படுகிறது. இன்று வரையிலும் பெரும்பாலும் காதல் தோல்வியினால் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி வெளிவருவதில்லை. பெண்களின் இம்மாதிரியான மரணங்கள் தீராத வயிற்றுவலி என்கிற ஒற்றைச் சொல்லில் மூடி மறைக்கப்படும்.
இந்த நிலையிலிருந்து இன்றைய பெண் சற்றே நகர்ந்திருக்கிறாள்.

பெண்களுக்கு ஆணுடைய தோற்றமும் தூரத்துச் செயல்களும் அவனைப் பற்றிய செய்திகளும் மட்டுமே அறிமுகம் ஆன காலத்தில், மனம் மட்டுமே இயங்கும் நிலையில் பெண் இருந்தாள். இக்காலத்தில் திருமணத்திற்கு முன்பாக ஆணுடைய உடலும் அவளுக்கு அறிமுகம் ஆகிறது. சங்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட இயற்கைப் புணர்ச்சி, தற்காலத்தில் வேறு வடிவம் எடுத்திருக்கிறது.

சங்க இலக்கிய இயற்கைப் புணர்ச்சிக்கு இடமும் கால வரையறையும் இருந்தது. களவு வாழ்வில் மெய்யுறு புணர்ச்சியில் ஈடுபட்ட ஆணை, திருமண வாழ்வுக்குள் நெறிப்படுத்த தோழி, செவிலி போன்ற  மனிதர்கள் இருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு காதலைத் தொடங்கவும் முடித்துக் கொள்ளவும் ஒரு குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கிறது. மேலும், சங்க இலக்கியங்களில் காதல் தோல்வியினால் தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் குறிப்பு கள் இல்லை. ஆனால், அப்படி நிகழாமல் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களின் நிறைவேறாது போகும் காதல் என்பது அவர்களின் மனத்தின் அடியில் அமிழ்த்து கொண்டிருக்கும். ஆனால், மனதில் அமிழ்த்தியிருக்கும் காதலுடன் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள  பெண் தயாராகும் நிலை என்பது இயல்பாக இன்று அமைந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. இதை ஒருவிதமான மாயை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்விதமாக வேறு ஒரு வாழ்வுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள நேர்கிற பெண்ணின் நிலையைப் பற்றி இ.எஸ்.லலிதாமதியின் கவிதை ஒன்று...

‘நாதஸ்வரத்தில்
வழியும் இசை அழகுதான்
அதில் இல்லை நீ...
கழுத்தில் இடப்பட்ட  மாலையில்
இல்லை உன் வாசம்...
சூழ நின்று வாழ்த்துபவர்களின்
வாழ்த்தில் இல்லை
என் வாழ்க்கை...
என் தலை மீது விழும்
ஒவ்வோர் அரிசியிலும்
இருக்கிறாய் நீ!’

சமீபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மாணவி தன்னுடைய அம்மா ஒரு குறிப்பிட்ட பாடலை அவ்வப்போது பாடுவதைக் கேட்டிருப்பதாகவும், அப்பா வீட்டிலிருக்கும் நேரங்களில் ஒருபோதும் பாட மாட்டார் என்றும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பாடலின் பொருளும் அம்மாவின் குரலும் அம்மாவின் இளமைக்காலம் பற்றிய எதையோ ஒன்றை தனக்கு உணர்த்துவதாகச் சொன்னார். ஒருவகையில் பெண்  என்பவள் அவளுடைய மனதின் ஆழத்தில் அமிழ்த்தியிருக்கும் ஆணுடன் தனக்குள் பேசுகிறவளாக இருக்கிறாள்.

குறிப்பாக பாடல்களில் அவனை அடையாளம் காணுகிறவளாக  இருக்கிறாள். பெற்றோரின் விருப்பத்திற்கு உட்பட்டு  காதல் செய்தவனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள பெண் ஒப்புக் கொள்கிறாள். காலப்போக்கில்  யதார்த்தத்தில் அவனை மறந்துவிட்டது போலத் தோன்றும். ஆனால், அவளின் முக்கியத் தருணங்களில் அவளுக்கு வேராகவும் நீராகவும் அவனுடைய நினைவு இருப்பதாக, கலை இலக்கியா ஒரு கவிதையில் சொல்கிறார். 
 
‘நாம் சந்திக்கவே முடியாது போகலாம்
வாழ்க்கைச் சிக்கலின் நடுவே
கடக்கும் பாடலாய்   
நமது நேசம் சிறுத்துப்போகலாம்
காலம் பதியமிடும் புதரில்
நீ இருக்குமிடம்
மறைந்தும் போகலாம்
உன்னைக்காட்டிலும்
யாரையேனும் நேசிக்கச் சூழல் நேரலாம்
அப்போதும்
என் பேனா வழி வரும்
வார்த்தைக்கும் வரிக்கும்
நீதான் வேரும் நீரும்...’

ஒரு பெண் தான் விரும்பிய காதலனை திருமணம் செய்ய விடாமல் பெற்றோர் விருப்பத்துக்கு கட்டாயத் திருமணம் நிகழ்த்தப்படும் போது, தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் கேட்டு காதுக்குள் புளிப்பேறிப் போய்விட்டதாகத் தோன்றுகிற வசனம் ஒன்று... ‘அவன் என்னுடைய பிணத்துக்குத்தான் தாலி கட்டுவான்’ என கதாநாயகி சொல்வாள். இது அப்படியே ‘பிணம்’ என்று பொருள் கொள்ள வேண்டியது இல்லை. பெண்ணுடைய மனம் என்பது காதலனிடம் இருக்க, உடல் மட்டுமே வேறு ஒருவருக்குச் சொந்தமாகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

உண்மையில் இந்த மாதிரியான சொல்லாடல் இந்தத் தமிழ் திரைப்படங்கள் உருவாக்கியது அல்ல. சங்கப் பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையாரின் மற்றுமொரு குறுந்தொகைப் பாடலில், தோழியிடம் தலைவி சொல்வதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலில், தலைவியை அயலவர் பெண் கேட்டு வருகின்றனர். பக்கத்து ஊரில் பெய்த பெருமழையினால் பெரும் சேதம் விளைந்து விலங்குகள் ஆற்றில் அடித்து வந்து கொண்டிருக்கிறது.

இது  தெரியாமல், ஆழமான குளத்தில்  மீன் பிடிப்பதற்கு வலை  இடப்பட்டிருக்கிறது. அந்த வலையில்  மீன் கிடைப்பதற்குப் பதிலாக செத்துப்போன விலங்குகள்தான் சிக்கும். அது போல அயலவரின் இந்தத் திருமண முயற்சியும் நிகழும். அவர்களுக்குக் கிடைக்கப் போவது உயிர்த்துடிப்புள்ள மீன் அல்ல, செத்துப்போன விலங்கின் சதைப்பொருள் மட்டுமே என்பதாக பொருள்பட பாடியுள்ளார். 

‘காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே...’
காதல் வசப்பட்ட பெண்ணுக்கு அவளுடைய மனம்

மட்டுமே முழுமையாக அவளின் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பெண்கள் கல்வி கற்று, விழிப்புணர்வு அடைந்திருக்கும் இந்தக் காலத்தில்  காதல் தோல்வியினால் ஏற்படுகிற தற்கொலைகளின் சதவிகிதம் சற்று குறைந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. ஆனால், பெண் மனம் எத்தனை காலமானாலும் அதன் அடியாழத்தில் ஒரே விதமாகவே  இயங்கிக் கொண்டிருக்கிறது.அவள் விரும்பியகாதலை காலம் முழுக்க தன்னுடைய மனதின்
அடியாழத்தில் அமிழ்த்தியிருக்கிறாள்.

பூங்கணுத்திரையார்...

சங்க காலப் பெண்பாற்புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் என்பது 27 நாள்மீன் வரிசையில் 12வது மீன். உத்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் உத்திரை என்று பெயரிட்டனர். புலவர் என்பதால் ‘உத்திரையார்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைத்தனர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது.

அதனால் இவரை பூங்கண் உத்திரையார் எனச் சொல்வதாகவும் குறிப்பு உள்ளது. பூங்கண் என்பது காவிரியின் வடகரையிலுள்ள தோரூர் என கல்வெட்டுகளால் (M.E.R. No. 153 of 1932) அறியப்படுகிறது. எனவே, பூங்கண் ஊரைச் சேர்ந்தவராகவும் உத்திரை இயற்பெயர் கொண்டவராகவும் சொல்லலாம்.   சங்க இலக்கியத்தில் இவர் எழுதியதாக மூன்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு.

ஓரை விளையாடுதலின் காட்சிகள்...

தோழியருடன் தொகுதி வாய்ந்த பரல்கள் ஒலிக்க ஓரை விளையாடும் தலைவியைக் கண்டபடியிருக்கும் செவிலித் தாய்.  

(அகம் 49-16)

ஓரை விளையாடும் பெண்கள் சேற்றினைக் கிளறி ஆம்பல் கிழங்கோடு ஆமை முட்டையை எடுப்பார்கள்.

(புறநானூறு 176)

மகளிர் ஆற்று வெள்ளத்தில் இளையரோடு ஆடுவர். இப்படி ஆடாவிட்டால் மகளிரின் உடல்வளம் தேயும்.
         
(நற்றிணை 68)

மைந்தர் மகளிரோடு கூடி ஓரையாடுதல் அவர்களது அடக்கமின்மையைக் காட்டும்.   

(கலித்தொகை 82-9)

சங்கச் செய்தி...

‘ஓரை’  என்பது சங்க கால மகளிரில் இளையோர் விளையாடிய விளையாட்டு
களில் ஒன்று. ஓரை என்னும் சொல்லை விளையாட்டைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கொள்ள வேண்டியுள்ளது. ‘ஓரை ஒலித்தல்’ தொழிலைக் குறிக்கும். அனேகமாக ஓடிப் பிடித்து விளையாடுதல் போன்று ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்தது. ‘கடலா கரையா’ என்று ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டு என்றும் சொல்லலாம்.

பொன்மணியார்...


ஒரு பெண் நினைவுகளின் சொல்லாக இருக்கிறாள்:

நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்:

“ரோஸ் பட்” என்கிற சொல்லை வாழ்வின் கடைசிச் சொல்லாகச் சொல்லி மரணிக்கிற ஒருவரின் இரகசியத்தை அறியும் முயற்சியாக “சிட்டிசன் கேன்” என்கிற திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில், 1941ல் வெளியான சிட்டிசன் கேன் திரைப்படம், சார்லஸ் ஃபோஸ்ட்டர் கேனின் மிகப் பிரமாண்டமான மாளிகையில் செவிலியின் துணையுடன் தனித்திருக்கும் கேன், “ரோஸ் பட்” என்று சொல்லி மரணிக்க, அந்த ஒற்றைச் சொல்லின் வழியே அவரின் வாழ்வைப்பற்றிய புதிரை அறிவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சொல்லுக்கும் அவர் வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்பதை நண்பர்கள், எதிரிகள், காதலியின் பார்வையில் தேடிச் செல்கிறதாக கதையின் இழை பின்னலிட்டுள்ளது. ஒரு தடுப்புவேலியில் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையில் தொடங்குகிற திரைக்காட்சியில், அந்த உத்தரவை மீறி, உள்நுழைந்து செல்கிற காட்சியில் திரைப்படத்தின் கதை தன்னைத் திறக்கிறது. பல்வேறு தடைகளைக் கடந்து பத்திரிகைத் துறையில் வெற்றிபெற்று செல்வந்தனாக ஆகி அரசியலில் தோற்று ஆடம்பரமான மாளிகையில் தனித்து மரணித்த ஒரு மனிதனின் வாழ்வு என்பது தான் ஒரு வரியாக அமைந்த கதை. ஆனால் மரணத்தைத் தொடுகிறவனின் இறுதிச்சொல் திறக்கும் கதவுகள் எண்ணற்றவை.
“ரோஸ் பட்” என்கிற அந்தச் சொல்லின் மறைபொருளைத் தேடித் பயணிக்கும் பத்திரிக்கையாளர், அதற்கு ஒருவேளை ஒருபொருளும் இல்லையோ எனத் தோல்வியுற்று திரும்ப, தேவையற்றதாகக் கருதப்படுகிற சார்லஸ் கேனின் எரிக்கப்படுகிற பொருள்களில், அடர்ந்து எரிகிற தீயின் மேல் திரைப்படக்காட்சி நகர்ந்து நிலைக்கிறது. சார்லஸ் கேன் சிறுவனாக இருந்தபொழுது அவன் அம்மா அவனுக்குப் பரிசளித்த பனிச்சறுக்கு விளையாட்டுக்கருவியும் எரியும் நெருப்பில் தூக்கியெறியப்படுகிறது. தீயில் எரிந்து கருகும் அந்தப் பனிச்சறுக்குப் பலகையில் “ரோஸ் பட்” என்று எழுதப்பட்டிருக்க மீண்டும் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையுடன் படம் முடிவடைகிறது.
திரைப்படத்தில் தொடக்கக்காட்சிகளில் ஒன்றில், அம்மாவிடமிருந்து ஒன்பது வயதில் கேன் பலவந்தமாகப் பிரிக்கப்படும்பொழுது சார்லஸ் கேன் விளையாடிக்கொண்டிருந்த பனிச்சறுக்குப் பலகை அவனிடமிருந்து தனித்து விடப்பட்டுப் பனிப்பொழிவினால் மூடப்படுகிறது. சார்லஸ் கேனின் மரணத்திற்குப் பிறகு வேறு யாரும் முக்கியம் என்று கருதாத பழைய பொருள்களுடன் அந்தப்பலகையும் எரிந்து சாம்பலாகிறது. உண்மையில் மற்றவர்களின் கண்களுக்கு முக்கியத்துவப்படாத ஒன்றில் தான் சம்மந்தப்பட்டவரின் இரகசியம் அல்லது வாழ்வு அடங்கியிருக்கும். அதிகாரம், செல்வாக்கு, புகழ் என எல்லாம் அடைந்து, அரசியலில் தோற்று, இரண்டாவது மனைவியையும் பிரிந்து வயோதிகத்தில் தனித்திருக்கும் ஒருவனின் மனத்தில், அவன் இழந்த குழந்தைமையும் அம்மாவின் நினைவுமே ஆழப்பதிந்திருக்கிறது. இவை சார்ந்த நினைவாகவே இந்த “ரோஸ் பட்” என்கிற சொல்லை உணரமுடிகிறது. அந்தச் சொல்லுக்குப் பொருளை அறியவியலாமல் திரைப்படம் நிறைவடைகையில், இன்னொருவர் அத்துமீறி நுழைந்து கண்டறியவியலாத நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மரணத்தருவாயில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொல் அவர்களை நிறைவு செய்யும். அந்தச் சொல்லில் பொதிந்திருக்கும் முழுமையான வாழ்வை இன்னொருவர் அறியவே இயலாது. அனேகமாக மரணிக்கிற அத்தனை ஆண்களின் நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள். அந்த நினைவுக்குள் அயலார் யாருமே அத்துமீறி நுழையமுடியாது என்பதாக இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருவரின் நினைவு என்பதே சொல்லாக இருக்கிறது. சொற்களின் வழியாக மனிதர்களை நினைவு கொள்கிறோம். ஒருவர், தான் பேசுகிற சொற்களின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறார். சொல்லில் தெளிவும் நேர்மையும் வேண்டும் என்பதும் கொடுத்த வாக்கை எப்படியாவது காக்கவேண்டும் எனவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. ஒற்றைச் சொல்லுக்காகக் காத்திருப்பதும், சொற்களுக்குள் அடைக்கலமாவதும், சொற்களுக்குள் சிக்கிக்கொள்வதும், சொற்கள் பிறழ்வதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் ஒருவர் பேசும் சொற்கள் அவரின் அடையாளம் ஆகிறது. இன்னொருபக்கம், “ஆதியிலே சொல் இருந்தது” என “சொல்லை” தெய்வீகமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். “இறைவாக்குச்சொல்” என்பது குறிப்பிட்ட சிலருக்கே கேட்கமுடியும் என்பதாகவும் கேட்பவர்களை இறைத்தூதர்கள் என்றும் அவர்களின் வாக்கு இறைவனின் வாக்காக “சொல்” மீதான நம்பிக்கைத் தொடர்ந்திருந்தது. சொற்களின் மீதான அவ்விதமான தெய்வீக நம்பிக்கை ஒருபக்கம் தகர்க்கப்பட்டாலும் மறுபக்கம் சகமனிதருக்கு கொடுத்த வாக்கை காப்பதும், ஒருவரின் வாக்கை மூன்றாம் மனிதர் யாரேனும் செயல்படுத்த இயலுமா எனவும் சொற்கள் பிறழாமல் வாழ்கிறவர்களையும் காணமுடிகிறது. தன்னுடைய சொற்களில் வழுவாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கினைக் காக்கத் தவறுகிறவர்களை இழிவாக நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு சொற்களை ஏற்றும் மறுத்தும், சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
வாக்கு என்பது ஒரு வடமொழிச் சொல். வாக்கு என்றால் பேச்சு, சொல் அல்லது அது உருவாக்கிய மனம். வேதகாலத்தில் வாக்கு என்பது பெண் தெய்வமாகத் தொழுகை செய்யப்பட்டது. பிற்காலத்தில் வாக்கின் தெய்வம் சரஸ்வதி என்று வழங்கப்பட்டது. ஆக, ஒரு சொல்லைக் காப்பது என்பது பெண்ணைப் காப்பது, ஒரு சொல்லை மதிப்பது என்பது பெண்ணை மதிப்பது என்பதாகத் தோன்றுகிறது. அப்படியெனில் ஒருவரின் சொல் என்பதே பெண்ணாக இருக்கிறது. என்றபோதிலும் வாழ்கிற காலம்மட்டும் காதலின் சொல் பற்றி பெண்தான் வாழ்கிறாள். ஆணுக்கு ஒரு சொல்லைவிட்டு, அந்த சொல் சார்ந்த நினைவைவிட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களும் சூழலும் அமைந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு, அவள் செல்கிற தூரம்மட்டும் நேசித்தவனின் சொற்களே வாழ்க்கைத் துணையாக இருக்கிறது.
தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார். திலகவதியாரை கலிப்கையாருக்கு திருமணம் பேசி முடிவு செய்கிறார்கள். அப்பொழுது நாட்டில் போர்ச்சூழல் ஏற்பட சோழமன்னனின் படையில் இணைந்து போர்செய்ய கலிப்பகையார் செல்கிறார். போர்க்களம் சென்றிருந்த காலத்தில் திலகவதியாரின் தாய் மாதினியார் தகப்பன் புகழனார் இருவரும் இறந்துவிடுகிறார்கள். வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று சொல்லிச் செல்கிற கலிப்பகையாரும் போர்க்களத்தில் இறந்துவிடுகிறார். கலிப்பகையார் இறந்த செய்தி கேட்டவுடன் அவருடனேயே இறந்துவிட திலகவதியார் முயலுகிறார். தாய் தகப்பன் இறந்தபொழுது உடன் இறந்துவிட எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. தன்னுடைய வாழ்வே அவன்தான் என நம்பிய ஒருவன் இறந்தபின்பு தனக்கென தனித்த வாழ்வு ஒன்றுமில்லை என பெண் நினைக்கிறாள். தமக்கையின் முடிவினை தம்பி தடுத்து உயிர்வாழும்படிக் கெஞ்சுகிறார். அதன்பிறகு, மிகச் சிறியவனான தன்னுடைய தம்பி அப்பர் எனப்பட்ட மருள்நீக்கியாரைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறார். “கலிப்பகையாரின் சொற்களின் நினைவுடன் நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன்” எனத் தன்னுடைய தம்பிடம் சொல்கிறார். தன்னை நேசித்தவன் அல்லது கணவன் சொல்லிச் சென்ற “வந்துவிடுவேன்” என்ற ஒற்றைச் சொல்லின் முழுமையாக பெண் தன்னுடைய மீதி வாழ்வையும் வாழ்ந்து நிறைகிறாள்.
அவ்விதமான காதலின் சொற்களை மனதில் ஏந்தியிருக்கும் பெண் தன்னுடைய காலங்களைக் கடந்துவிடுகிறாள் என்று சொல்வதைவிடவும் அவளுக்குக் காலங்களே இல்லை என்று சொல்லலாம். சங்கப் பெண்பாற்புலவர் பொன்மணியாரின் குறுந்தொகைப்பாடல்,
“உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும் பேதையவே.”
அது ஒரு முல்லைநிலம். ஆயர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துத் திரியும் பரந்த சமவெளி. தலைவன் வெகுதூரம் பொருள்தேடிச் சென்றிருக்கிறான். மழைக்காலத்திற்குள் வந்துவிடுவதாக தலைவியிடம் கூறியிருக்கிறான். உவரி என்னும் உப்புமண்ணை உடைய கரம்புநிலம் எருது பூட்டி உழாமல் வெடித்துக் கிடக்கிறது. மழையற்று வறண்ட அந்த நிலத்தில், எருதுகள் உழுதல் செயலை செய்யாமல் கொட்டிலில் சோம்பிக்கிடந்தன. மழை பெய்தலை நீங்கிய காட்டில் புள்ளிமான்கள் வெம்மையால் புழுங்கின. இன்று, இப்பொழுது கரிய மேகங்கள் அடர்ந்து வானம் இடிக்கத் தொடங்குகிறது. இடியோசையின் முழக்கத்தில் அந்த ஓசை தாளாது பாம்புகள் தங்கள் படம் ஒடுங்கிக்கிடந்தன. அவ்வாறு மழை பொழிவதற்காகத் தாழ்ந்த மேகங்களைப் பின்தொடர்ந்து தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிகள் செயலற்றுப் போகும்படியான மாலைப்பொழுதும் வந்தது. மழை எல்லோருக்கும் இனிமை தந்தது. மேகங்களுக்காகவும் மழைக்காகவும் ஏங்கிக்கிடக்கும் பெண்மயில்கள் பூத்திருக்கும் கிளையிலிருந்து நீரில் தாவி தங்களுடைய துணையான ஆண்மயில்களை அழைத்துக் கூவுகின்றன. ஆனால் இந்த மயில்கள் பேதமையுடைவை என தோழியிடம் தலைவி சொல்கிறாள்.
பாடலில் அவள் உணர்த்துவது, உண்மையில் மழை பொழியவேயில்லை, இடி இடிக்கவேயில்லை, பாம்புகள் தங்கள் படத்தினை ஒடுக்கிக்கொள்ளவே இல்லை, மொத்தத்தில் கார்காலம் இன்னும் தொடங்கவேயில்லை. இந்தப் பெண்மையில்கள் சென்ற மழையின் நினைவில் தானாக கூவுகின்றன. கார்காலம் தொடங்கியிருந்தால் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பி வந்திருப்பான். அவன் சொன்ன சொல் தவறாதவன், அதனால் எருதுகளும், புள்ளிமான்களும், பாம்பின் படமும், இடியோசையும், மயிலின் அழைப்பும் தவறுதலாக இருக்ககூடும். தலைவன் சொல் எப்பொழுதும் மிகச் சரியாக இருக்கும் என்பதால் கார்காலமே இன்னும் வரவில்லை என்பதை அறியாத பெண்மயில்கள் பேதமையில் இருப்பதாக தலைவி சொல்கிறாள். தலைவனின் சொற்களுக்கு முன்பாக காலமும் பருவமும் சூழலும் அவளுக்கு நம்புவதற்கு அற்றதாக இருக்கின்றன.
தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத எதன்மீதும் பிடிப்பற்று வாழவும் குடும்ப உறுப்பினர்களுக்கான கடமைகளைச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் அவளுக்கு விருப்பமான ஆணைக் கண்டடைந்தவுடன் நெகிழ்நிலமாகிறாள். பெண்ணின் வாழ்வில் அவள் நேசிக்கிற ஆணின் வரவுக்கு முன்பான அவளின் நிலையை முழுமையுடையதாக அவள் நம்புவதில்லை. தி.பரமேஸ்வரியின் கவிதை,
“பாலை மட்டுமே
பழகிய கண்களுக்குக் காட்டினாய்
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தலையும்
உணர்த்தினாய் உணர்ந்தேன்
கரைத்தாய் கரைந்தேன்
மீண்டும் பாலைக்குள் நுழையும்படி
நேர்ந்த தருணத்தில்
எங்கோ பெய்யும் மழையின் வாசம்,
நினைவூட்டுகிறது என்னை.”
சூழலின் காரணமாக பிரிந்து செல்கிற நேசிப்புகுரியவர்கள் மனத்தில் சொற்களின் வாசமாக ஒருவர் மற்றவரை நிரப்பியபடியே இருப்பார்கள். எங்கோ பொழிகிற மழையின் வாசம் இவளை நிரப்ப, மழையின் துளிர்ப்பை எங்கோ தூரத்திலிருக்கும் அவனும் அந்தக்கணம் உணரக்கூடும். ஒருவேளை அவன் அப்போது உணராது இருந்தாலும். இவளின் நேசிப்பின் அடர்வு அவனது மரணப்படுக்கையின் நிறைவுச் சொல்லாக அவளையே நிறுத்திவிடும்.
அவன் சொல்லின் மீதான பெண்ணின் நம்பிக்கை எந்த நவீனக்காலத்திலும் மாற்றமடைவது இல்லை. அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் மனத்திற்கு சிலசமயம் அவன் சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் “அவனுடைய சொற்கள் பொய்யானது” என்று சொல்கிற அவளுடைய அறிவை அவள் நிராகரிக்கவே விரும்புகிறாள். அவ்விதமாக அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் நினைவையே அந்த ஆண் தன்னுடைய இறுதிச் சொல்லாக வைத்திருக்கிறான். காதலியாகவோ தோழியாகவோ
மனைவியாகவோ தாயாகவோ இருக்கிற யாரோ ஒரு பெண்ணின் நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன்னை நிறைக்கிறான்.
******************************************************************************************************************
பொன்மணியார் :
இவர் எழுதிய பாடலாக குறுந்தொகை -391 மட்டும் கிடைத்துள்ளது.
இவர் ஆணா பெண்ணா என்கிற குழப்பம் உள்ளது, ஆனால் இவர் பாடியிருக்கும் பாடலின் பொருள்குறித்தும் பெயரின் பொருள் குறித்தும் (பொன், மணி என பெண்கள் பிரத்தியேகமாக இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்களை குறிக்கும் பெயராக இருப்பதால்) பெண்பாற்புலவர் எனக்கருதப்படுகிறார்.
“பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாரிருங் கதுப்பும்” (நற்றிணை:166 )என்கிற பாடலில் பாடியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தப்பாடலின் பொருள் குறித்தும் பாடலின் சொற்கள் குறித்தும் இந்தப்பாடலும் பொன்மணியாரின் பாடலாகவும் இருக்கலாம் என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிட்டுள்ளார்.
***************************************************************************************************************
பொன்மணிமாலை:
சங்ககாலத்தில் பெண்கள் இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் பல இருந்தன. மேகலை(ஏழுவடம்), காஞ்சி(எட்டுவடம்), கலாபம்(பதினாறு வடம்), பருமம்(பதினெட்டுவடம்), விரிசிகை(முப்பத்திரண்டு வடம்), இவை மட்டுமல்ல, தோரை, அத்து, மனா, அரைப்பட்டிகை, அரைஞாண், உதரபந்தம், இரதனம், கடி சூத்திரம், சீர்த்தி முகம், இடைச்செறி, சதங்கை மணிக்கோவை, ஐம்படைக்கோவை, அரைச் சதங்கை, அரைவடம், அரைமூடி, கச்சைப்புறம் போன்றவை பெண்கள் இடையில் அணிகிற அணிகலன்களாக குறிக்கப்படுகின்றன.
”வண்டிருப்பன்ன பல்கா ழல்குல்“ பொருநராற்றுப்படை- 39 அல்குல் மேலே அணியப்பட்ட அணிகலன் வண்டின் ஒழுங்கைப்போல அமைந்திருப்பதாகவும் “பொன்னோடு மணிமிடை அல்குல் மடந்தை- குறுந்:274) பொன் அரைஞாணில் மணிகளுடன் கூடி பெண்கள் அரையில் அணியும் பிரத்தியேகமாக பொன் ஆபரணம் தான் பொன்மணி என அறியமுடிகிறது. இந்தவகை அணிகலன்களின் ஒட்டி வழங்கப்படுகிற இன்னொரு பெண்பால் பெயர் மணிமேகலை.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...