இன்றைய சூழலில், தமிழ்க் கவிதைகளை முன்வைத்துப் பேசுகையில் ஒரு
விஷயத்தைப் பரிசிலிக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறை சார்
அறிதல்கள், சமயம், தத்துவம் சார்ந்த எண்ணவோட்டங்கள் ஆகியவற்றிற்கு அழுத்தம்
தந்து எழுதப்படும் கவிதைகளை மூளை உழைப்பினால் உருவாக்கப்பட்டது ஆகவே
செயற்கையானது எனப் புறக்கணிக்கின்ற ஒரு கோணலான பார்வையும் சிலரிடத்தே
உள்ளது. சிந்தனைப் போக்குகள் மற்றும் அறிவுத் தளங்களை கவிதைக்கு எதிரான
ஒன்றாகக் கருதும் இப்பார்வை காலரீதியிலான வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு
மொழி தன்னை புதுப்பித்துக் கொள்வதைத் தடுத்து அது தேங்கிப் போய்விடவே
வழிவகுக்கும்.
மனித மனதின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இரு வேறு எல்லைகளுக்கு
நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது. இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும்
அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு, ஒருமுகப்படுத்தப்படும்
எண்ணங்கள், அதன்வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன்
தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் குறியீடாக "மூளை"
உருவகப்படுத்தப்படுகிறது. மாறாக உணர்வுகள் என்பது நினைவுகள், மொழி, இனம்,
கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகள் அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன்
மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி "இதயம்" என்பதுடன்
அடையாளப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
இதில் புறவயமாக ஒரு குறைந்தபட்ச தர்க்க ஒழுங்கைப் பொதுவில்
உருவாக்கிக்கொண்டு, அதன் வழி விரிந்து செல்லும் அறிவுத் துறைகளான தத்துவம்,
விஞ்ஞானம், மருத்துவம், வரலாறு போன்றவை சிந்தனைகளின் தளத்தில் செயல்படுபவை
என்றும், எவ்விதமான புற நிர்ணயங்களுமின்றி தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட
நிலையில் செயல்படும் கலை, இலக்கியங்கள், வழிபாட்டு சடங்குகள் முதலியன
உணர்வுகளின் தளத்தில் இயங்குபவை என்றும் எளிமையாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஆனால் இத்தகைய கறாறான இருமைநிலை உண்மையில் சாத்தியமற்றதே. ஒரு வசதிக்காக
இரண்டையும் வேறுபடுத்தி நாம் பேசிவந்தாலும் அவை இரண்டும் இயல்பாகவே
வெவ்வேறு வீதங்களில் கலந்தும், ஒன்றையொன்று பூர்த்தி செய்துகொண்டும்தான்
எந்தவொறு மனித செயல்பாட்டிலும் காணப்படுகின்றன. மார்க்ஸின் திட்டவட்டமான
பொருளாதாரச் சிந்தனைகளுக்குப் பின்னிருந்து அவரை உந்தியது எல்லோருக்கும்
எல்லாமும் கிடைக்க வேண்டுமென்ற அவரது மாபெரும் உட்டோபியக் கனவும், அதன்
உணர்ச்சித் தீவிரமும்தான். அதேபோல் மானுட உணர்ச்சிகளின் மோதல்களை அதன்
அதிஉக்கிரத் தருணங்களில் நிகழ்த்திக் காட்டும் தாஸ்தாவெஸ்கிதான் நீட்சே,
ஃப்ராய்டு, ஐன்ஸ்டைன் போன்ற பல சிந்தனையாளர்களுக்கு அகத் தூண்டுதலாக
இருந்திருக்கிறார். விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், சமய ஞானிகள் போன்றோர் எளிய
மனித நிலைகளுக்கு அப்பாற்பட்டதொரு அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களாகவே
கருதப்படுகின்றனர். ஆயினும், அவர்களுமேகூட தங்களது இலட்சியத்தின் ஈடேற்ற
நிலையில் அடைவது புறநிர்ணயங்களுக்கு மேலான பரவசத் தருணங்களையே என்றால் அது
மிகையாகாது. லாவோட்சேயின் தத்துவங்கள், ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச ரகசியம் பற்றிய
குறிப்புகள், ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், புத்தரின் போதனைகள் போன்ற
புனைவல்லாத ஆக்கங்களிலுமேகூட முதிர்ந்த ஞானத்தின் கவித்துவ கணங்களை நாம்
தரிசிக்க முடிகிறது.
நம் கவிதை மரபிலும் இவ்விரு வகைகளுக்கும் அழுத்தமான உதாரணங்கள் உண்டு.
சங்கக் கவிதைகள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புலனனுபவங்களின் தளத்தில்
வைத்து வாழ்வை நமக்குக் காட்டுகின்றன என்றால், சிந்தனைகளின் வீர்யத்தால்
திரண்டெழும் கவித்துவப் பெரும்பரப்பை சித்தர் பாடல்களில் காணலாம். இவ்வுலக
வாழ்விற்கான அறமதிப்பீடுகளை லௌகீக மட்டத்தில் வைத்து அறுதியிட்டுக் கூறும்
குறள் எழுதப்பட்ட அதே மொழியில்தான் பிறகு உணர்வுகளின் கட்டின்மையால்
மொழியைத் தளும்பச் செய்கின்ற பக்தி இலக்கியங்களும் தோன்றியுள்ளன.
இன்றைய சூழலில் தமிழ்க் கவிதைகளை முன்வைத்துப் பேசுகையில் ஒரு
விஷயத்தைப் பரிசிலிக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறை சார்
அறிதல்கள், சமயம், தத்துவம் சார்ந்த எண்ணவோட்டங்கள் ஆகியவற்றிற்கு அழுத்தம்
தந்து எழுதப்படும் கவிதைகளை மூளை உழைப்பினால் உருவாக்கப்பட்டது. ஆகவே
செயற்கையானது எனப் புறக்கணிக்கின்ற ஒரு கோணலான பார்வையும் சிலரிடத்தே
உள்ளது. சிந்தனைப் போக்குகள் மற்றும் அறிவுத் தளங்களை கவிதைக்கு எதிரான
ஒன்றாகக் கருதும் இப்பார்வை காலரீதியிலான வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு
மொழி தன்னை புதுப்பித்துக் கொள்வதைத் தடுத்து அது தேங்கிப் போய்விடவே
வழிவகுக்கும். மேலும் தூய உணர்வுநிலை என்பது மிருகங்களுக்கு மாத்திரமே
சாத்தியமாகக்கூடிய ஒன்றாக இருக்கும். மனிதனுக்கு நினைவு என்ற ஒன்று
இருக்கும் வரையிலும் அவனுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளுவதிலேயே கூட
எண்ணங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும். தவிரவும் மனிதனின் முன்னிற்கும்
நித்திய ஜீவிதப் புதிர்களான மரணம், கடவுள் இவைகள் குறித்த பேச்சு இருக்கும்
வரையிலும் கவிதைகளிலிருந்தோ கலைகளிலிருந்தோ தத்துவ சிந்தனைகளைத் தனியே
பிரிக்கவியலாது.
ஒரு கவிதை முற்றிலும் உணர்வுகளின் மட்டத்திலேயே வினையாற்றுவதாக
இருந்தாலும்கூட அவ்வுணர்வுகள் செறிவூட்டப்பட்டு, திசைப்படுத்தப்பட்ட ஒன்றாக
இருந்தால் மட்டுமே அவை வாசகனிடத்தே குறித்த விளைவை ஏற்படுத்த இயலும்.
அங்ஙனம் உணர்வுகளை மொழிக்குள் சிதையாது மாற்றும் தொழில்நுட்பத்தில்
கவிஞனின் பிரக்ஞை முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நாம் நன்கறிவோம்.
அத்துடன் மாத்திரமல்லாது ஒருவன் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ள நேரிடுகிற
அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை வரிசைப்படுத்தி தொகுத்துக் கொள்ளவும்
அவற்றிற்குத் தகுந்த எதிர் வினையாற்றவுமே கூட அவனளவில் குறைந்தபட்ச
வாழ்க்கை நோக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆதலினால்
கவிதையினூடாகத் தனித்துப் பிரிக்க முடியாததொரு அம்சமாகவே சிந்தனை
உள்ளிழைந்தோடுகிறது எனலாம். அவ்வகையில் கடந்த அரை நூற்றாண்டு கால தமிழ்
நவீன கவிதைகளில் சிந்தனையின் விறுவிறுப்பை அறிவார்ந்தவொரு பரவசத்தைக்
கையகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ள கவிதைகள் சிலவற்றைப் பற்றியும் அவை
அடையாளப்படுத்தும் போக்குகள் குறித்தும் இக்கட்டுரை சுருக்கமாகத்
தொட்டுப்பேச முற்படுகிறது.
பாரதியின் வசன கவிதைகளிலிருந்தே யாப்பின் உடைவு தமிழில்
துவங்கிவிடுகிறது என்றாலும். "எழுத்து"க் கட்டத்திலிருந்துதான் புதுக்கவிதை
என்பது உத்தேசமான குறிக்கோள்களுடன் கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு
இயக்கமாக உருவெடுத்தது. தமிழ் நவீன இலக்கியத்தின் துவக்கக் கட்டமான
ஐம்பதுகளில் அவற்றுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டவர்கள் பெரும்பாலும்
கல்லூரிக் கல்வி பெற்ற மத்தியதர வர்க்கத்தவரே. அவர்கள் இயல்பாகவே தங்கள்
படைப்புகள், விமர்சன அடிப்படைகள் ஆகியவற்றிற்கான முன்மாதிரிகளை ஆங்கிலம்
வழியாக மேலை இலக்கியங்களிலிருந்தே பெற்றனர். இரண்டு உலகப் போர்களுக்குப்
பிறகான கலாச்சார வெறுமையின் காரணமாக ஐரோப்பாவில் உருவெடுத்த நவீனத்துவம்
துவக்கத்திலிருந்தே நம் புதுக்கவிதைகள் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தி
வந்துள்ளது. மாறுபட்ட கலாச்சார பின்னணியும் வளமான ஆன்மீக மரபும் கொண்ட நாம்
வாழ்க்கை முறைக்கு அத்தகைய மனமுறிவுகளும் நம்பிக்கையிழப்பும், அடையாளச்
சிக்கல்களும் பற்றி பேசும் நவீனத்துவ இலக்கியங்கள் ஒத்து வருபவை அல்ல. அவை
சிரழிவு நச்சு இலக்கியங்கள் என்று முற்போக்கு குழுவினரால் கடுமையாக
விமர்சிக்கப்பட்டது. என்றாலும் கைவிடப்பட்ட தனிமனிதனின் கையறு
நிலையிலிருந்து உலகை நோக்கும் நவீனத்துவ இலக்கியம் இங்கே வேர் ஊன்றி
வளர்வதற்கான சமூக அரசியல் தேவைகள் இருந்தன. நாற்பதுகள் வரையிலும் தேசியம்,
விடுதலை போன்ற இலட்சியங்களால் கட்டி எழுப்பப்பட்ட லட்சியவாதத்தின்
வன்முரண்களும் போதாமைகளும் ஐம்பதுகளிலேயே வெளிப்படத் துவங்கிவிட்டன.
தார்மீக நெறிகளின் வீழ்ச்சிகள், அதிகாரப் போட்டிகள், நெருக்கடிக்குள்ளகும்
உறவுகள் இவையெல்லாமுமே அன்றைய படித்த இளந்தலைமுறையைக் கடுமையான
நிதர்சனவாதிகளாக்கிவிட்டிருந்
தன. ஆகவே அரசியல், சமூக ஈடுபாடுகளிலிருந்து
இயல்பாகவே அந்நியப்பட்டு நின்றவர்களுக்கு மிக உவப்பானதாகவே நவீனத்துவத்தின்
கருத்தியல் இருந்தது. அதுவே அவர்களின் உத்வேக செயல்பாட்டிற்கான
அடிப்படையாகவும் அமைந்தது. சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன், பசுவையா, நகுலன்
முதலியோரை அவ்வகையில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். அதே நேரத்தில்
புதுக்கவிதையின் முதல்வராகக் கருதப்படும் ந. பிச்சமூர்த்தியிடம்
நவீனத்துவத்தின் பாதிப்பு எதையும் காண முடிவதில்லை. அவர் புதுக்கவிதையின்
வடிவம் உத்தி முதலியவற்றை மாத்திரமே மேலைக் கவிதைகளிலிருந்து உள்வாங்கிக்
கொண்டிருக்கிறாரே தவிர அவரிடமிருந்து வெளிப்பாடு கொண்டவையெல்லாம்
மரபிலிருந்து அவர் அடைந்தவையே அவருடைய ஆன்மீக ஈடுபாடு, வேதாந்த விசாரங்கள்,
அழகியல் தேடல்கள் முதலியவையே அவரது படைப்புகளுக்கான உந்துதல்களாக இருந்தன.
உலகின் பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்வதற்குக் காட்டிய ஆர்வமளவிற்கு
நாம் நமது மரபிலக்கியத்தைப் பற்றி தெரிந்த கொள்வதற்குப் போதுமான அக்கறை
காட்டவில்லை. ஆகவே, புதுக்கவிதை இயக்கம் என்பது தொடக்கத்தில் தனது
தத்துவம், பார்வை சார்ந்த அடிப்படைகளை முழுவதுமாக மேற்கிலிருந்தே பெற்று
வளர்ந்தது. இன்றளவும் அப்போக்கே கணிசமான பாதிப்பைத் தொடர்ந்து
செலுத்துகிறது. காலனியாதிக்கத்திற்குப் பின் நிகழ்ந்த மறுமலர்ச்சி காலக்
கல்விப் பரவல் மத்தியதர, ஓரளவு கீழ்த்தட்டு மக்களிடையே ஏற்படுத்திய
விழிப்புணர்வும், தாக்கமும் அளவிட முடியாதது. புதுப்புது அறிவியல்
கோட்பாடுகள் தொழில் நுட்ப மாறுதல்கள் ஆகியவற்றை ஆங்கிலம் மூலம் அரவணைத்துக்
கொண்ட ஒரு தலைமுறைக்கு மரபான ஞானமும், இலக்கிய ஆக்கங்களும்
காலத்திற்குதவாத பழம் பேச்சாகப் பட்டதில் வியப்பு ஏதுமில்லை. அவ்வகையில்
நம் மரபின் வளம் குறித்த புரிதலைத் தம் படைப்புகளில் ஆக்கபூர்வமாக
வெளிப்படுத்தியவர் என பிரமிளையே நாம் குறிப்பிடவேண்டும். நு=அஉ2 எனும் தனது
பிரபலக் கவிதையின் மூலம் அறிவியல் சமன்பாட்டைக்கூட ஓர் கவிதையாக மாற்ற
இயலும் என நிரூபித்த அவர் விஞ்ஞானத்தை வெறும் தொழில்நுட்பமாக மட்டுமே
பார்த்தார். அதன் எல்லைகளுக்கப்பால் இயங்கக்கூடிய மனிதனின் ஆன்மீக சாரம்
என்ன என்பது குறித்த விசாரணைகளே பலவாறாகவும் அவருடைய கவிதைகளில்
எதிரொலிக்கிறது. தேவதேவன். ஜெயபாஸ்கரன் போன்றோரை அத்திசை வழியின் இன்றைய
பயணிகளாகப் பார்க்க முடிகிறது.
மரபிலக்கியத்தில் பயிற்சி உடைய பிற முக்கிய கவிஞர்களாக சி. மணி.
ஞானகூத்தன் இருவரையும் குறிப்பிடலம். இவர்கள் பழந்தமிழ் வரிகளை, அதன்
வடிவத்தை அல்லது ஓசையைத் தங்களது ஆக்கங்களினூடாக இடைவெட்டாகச் சேர்த்துக்
கொள்ளும்போது உருவாகும் உருவித காலமுரண் இவர்களுடைய கவிதைகளில்
அலாதியானதொரு விளைவை உண்டாக்குகிறது. அதன்மூலம் உருவாகும் அபத்தமும்,
எள்ளலும் அவர்களுடைய படைப்புகளுக்கு மிகுந்தவொரு உலகியல் பிணைப்பை
நல்குகிறது. ஞானகூத்தனின் தோழர் மோசிகீரனார். சி. மணியின் நரகம் போன்றவை
உடனடியாக நினைவில் எழும் உதாரணங்கள்.
மனதின் பல்வேறு அடுக்குகள். அவற்றிற்கிடையேயான ஊடாட்டங்கள், விபரீதமான
கனவுகளின் உட்பொருள் இவை பற்றி ஃப்ராய்டு, யுங் முதலியோரின் ஆராய்ச்சி
முடிவுகள் மருத்துவத் துறையில் ஏற்படுத்தியதை விடவும் அதிக பாதிப்புகளை
நிகழ்த்தியது கலை இலக்கியத் துறைகளிலேயே என்றால் அது மிகையாகாது. இந்த
எல்லையற்ற பிரபஞ்சம் அளவிற்கே மனித மனமும் அச்சமூட்டக்கூடிய அதே சமயத்தில்
விளக்க முடியாத கவர்ச்சியுடைய ஒரு பெரும் புதிராக மனிதனின் முன் எழுந்து
நிற்கிறது. கூட்டாகச் சேர்ந்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தைக் கோரும்
நிகழ்காலத்திய சமூக அரசியல் பிரச்சனைகளிலிருந்து வெகுவாக விலகி தனது
தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக உள்நோக்கித் திரும்பிய இந்த
அகவயக் கவிஞர்கள் நித்தியமான அழகுகளையும், வாழ்வின் சாரமான உண்மைகளையும்
தேடி மொழியில் பயணிக்கிறவர்கள் ஆனார்கள். இப்போக்கின் உச்சத்தில் அதன்
எதிர்விளைவான சமூகத் தேவையினால் உருவானதே வானம்பாடிகளின் இயக்கம்.
குறிப்பிட்ட எண்ணிக்கையாலானவர்களுக்கு இடையில் மாத்திரம் ரசனைக்கும்,
ஆராய்ச்சிக்கும், துய்ப்பிற்கும் உரிய வஸ்துவாக இருந்த கவிதையை வெகுமக்கள்
ரசிப்பிற்கும் உவப்பானதொரு நுகர்வுப் பொருளாகப் பரவலாக்கியது இவ்வியக்கம்.
அடிப்படை நோக்கினை மார்க்சியத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக இவர்கள்
கூறிக்கொண்டாலும், இவர்களின் உடனடி கவன ஈர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்த
ஆரவாரமான மொழி ஜாலத்தை, மிகைக் கற்பனையை திராவிட இயக்க மேடை பாணி
பேச்சுகளிலிருந்தே சுவீகரித்துக் கொண்டார்கள் என்பதே நிஜம். திராவிட
இயக்கத்தினர். நமது கடந்தகாலம் பற்றிய ஒரு அதீதமான கனவை உருவாக்கிக்
கொடுப்பதன் வழியே நிகழ்காலச் சிக்கல்களிலிருந்து விடுபடுவது போலும் பிரமையை
தற்காலிகமாக எழுப்புவது, அதற்காக மொழியை, வலிந்து பெறப்பட்ட நெகிழ்ச்சியை
ஒரு சாதனமாக உபயோகிப்பது ஆகிய உத்திகளைக் கடைப்பிடித்ததன் வாயிலாகக்
குறுகிய காலத்திலேயே மக்கள் செல்வாக்கினைக் கணிசமாகப் பெற்றனர். அதுபோலவே
வானம்பாடிகளும் எல்லா சமூகப் பிரச்சனைகளுக்குமான தீர்வை, கற்பனை நவிற்சியான
வார்த்தைகளின் வழியாக அடைந்துவிடலாம் என நம்புகிறவர்களாக இருந்தார்கள்.
இவ்வியக்கத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு என்று பார்த்தால்,
தமக்குள்ளாகவே உற்று நோக்கிக்கொண்டிருந்த தமிழ்க் கவிஞர்களைப் புறத்தேயும்
முகம் திருப்பிப் பார்க்கும்படியான நிர்பந்தத்தை ஏற்படுத்தியதைக்
கூறவேண்டும். அவ்விதத்தில் புவியரசு, சிற்பி, ஞானி ஆகியோரின் சில
படைப்புகளை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.
தனிமனிதன், சமூகஜீவி என இருவகை உள்ளளுத்தங்களுக்கும் ஈடு கொடுக்கும்
விதமாக எழுதியவர்கள் என்று நோக்கினால் ஆத்மாநாம், கலாப்பிரியா,
ஞானக்கூத்தன் ஆகியோரைக் கூறவேண்டும். ஆத்மாநாமிடம் சமநிலைப்படுத்தப்பட்ட
உணர்வுகளின் சமரசமற்றத் தீவிரமும், கலாப்ரியாவிடம் பிரத்யேகமான பார்வை வழி
தொகுப்பு பெறும் வாழ்வியல் சித்திரங்களும், ஞானக்கூத்தனிடம் எதையும் சற்று
கோணலாக்கிப் பார்க்கும் வக்ரோக்தியும் அவை வெளிப்படும் விதத்தினால்
சமூகத்தின் மீதான அவர்களுடைய ஆழ்ந்த தரிசனமாக மாறிவிடுகின்றன.
கடந்த அரை நூறு வருடங்களில் தமிழ் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்திய
முக்கிய நிகழ்வுகளான 1) நக்சல்வாத அமைப்பினால் காவுகொள்ளப்பட்ட இளைஞர்கள்.
2) அவசர நிலைக் காலத்தில் நேர்ந்த நெருக்கடிகள். 3) இந்தி எதிர்ப்பு
போராட்டம் இவை குறித்தெல்லாம் காலத்தின் மனசாட்சியாகக் கருதப்படும்
கவிதைகளில் பதிவுகள் அதிகமில்லை என்பது தமிழின் துரதிர்ஷ்டவசமான நிலையையே
குறிக்கிறது. பிரம்மராஜனின் "விசாரம் வேண்டும் இறப்புகள்". சத்யனின் "இளம்
இரவில் இறந்தவர்கள்" போன்ற கவிதைகளையும் ஆத்மாநாமின் சில கவிதைகளிலும்
இப்பிரச்சனைகளின் எதிரொலிகளைக் கேட்க முடிகிறது. அரசியல் கவிதைகளுக்கான
ஆகச் சிறந்த தமிழ் உதாரணமாக இன்றளவுமிருப்பது ஆத்மாநாமின் கவிதைகள் சிலவே
மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய "அரசி" கவிதையையும் அவ்வரிசையில் சேர்க்கலாம்.
அதுபோலவே கல்வி, சமூக அந்தஸ்து எனப் பல விஷயங்களில் தமிழ்க்
கலாச்சாரத்தின் கீழ் அடுக்களில் இருந்த பெருவாரியான மக்களை அரசியல்
அதிகாரப் போட்டியின் மையத்திற்கு குறுகியதொரு காலத்தில் இழுத்து வந்து
சேர்த்தது. தமிழ்த் தேசிய உணர்வைப் பேசிவந்த திராவிட இயக்கம். அதன்
கலாச்சார, அரசியல் பங்களிப்பு விரிவான ஆராய்ச்சிக்குரிய ஒன்று. அதைப்பற்றி
விமர்சனப் பூர்வமான குரலை ஞானகூத்தனின் சில கவிதைகளில் காணலாம், அவ்வளவே.
எண்பதுகளின் மத்தியில் நவீனத்திற்குப் பிறகான அலையாக தமிழில் வீசியது
அமைப்பியல் பற்றிய அறிமுகம். நவீனத்துவத்தின் இடையில் சர்ரியலிசம்,
சிம்பலிசம், இமேஜிசம் முதலியவை குறித்துப் பேசப்பட்டாலும் அவை வடிவம்
சார்ந்த பரிசோதனை முயற்சிகள் என்பதற்குமேல் அதிகம் பேசப்படவில்லை. தமிழவன்
நாகார்ஜூனன், அ. மார்க்ஸ் போன்ற விமர்சகர்களால் முன்வைக்கப்பட்ட அமைப்பியல்
மற்றும் பின் அமைப்பியல் கொள்கைகள் விமர்சன ரீதியாக சில முக்கியத்துவமுடைய
கருத்துக்களை இன்று நிலைப்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. படைப்பியல்
ஆசிரியனுக்கான ஏகபோக உரிமையைக் குறைத்து, வாசகனுக்கான சுதந்திரத்தை
அதிகப்படுத்தியது, படைப்புக்கும் அதைப் படைத்தவனின் தனிப்பட்ட
வாழ்க்கைக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என
நிறுவியது. படைப்பில் எழுதுபவன் நிர்பந்திக்கும் ஒற்றை மையத்திற்கு பதிலாக
கலாச்சாரத்தின் ஊடுபாவுகளைப் பிரதிபலிக்கும் பல குரல்களை வலியுறுத்தியமை
ஆகியவற்றை அவற்றுள் முக்கியமான சிலவாகக் கூறலாம். இவையெல்லாம் பிறிதொரு
வகையில் எழுத்தாளனுக்கு தேவைப்படுகிற மேலதிகமான சுதந்திரத்தையும், படைப்பு
வெளியையும் நல்கியது எனலாம். தவிரவும் கவிதை தனித்த இலக்கிய வடிவம்
என்பதினின்றும் மெல்ல விலகி இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், திரைப்படம்
போன்ற பிற கலை வகைமைகள் மானுடவியல், வானியல், உளவியல் போன்ற அறிவுத்
துறைகள் ஆகியவற்றின் பாதிப்புகளையும் தன்னில் பிரதிபலிக்கும் ஊடுபிரதித்
தன்மையுடைய ஒரு வார்த்தைப் பரப்பாக இன்று மாறிவிட்டது. இதன் ஆக்கபூர்வமான
இயல்புகளை பிரம்மராஜன், ஆத்மாநாம், சுகுமாரன், எம்.யுவன் ஆகியோரின்
கவிதைகளிடையே நாம் இனம் காண முடியும்.
இதன் நடுவே காலம் மற்றும் வெளி குறித்த நிர்ணயங்கள் ஐன்ஸ்டீனின்
தொடர்பியல் கொள்கையிலிருந்து, குவாண்டம் இயற்பியல், ஸ்டியரிங்ஸ் தியரி வரை
பலவாறாக அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை இறுகிக் கெட்டிதட்டிப்போன
நம் நடைமுறை யதார்த்தத்தின் அனுபவ மெய்மைகளை அசைத்துப் பார்க்கும் தன்மை
கொண்டதாக உள்ளது. இதை ஆழமானத—‘ரு தியானமாக பரீட்சித்துப் பார்க்கும் போக்கை
ஆனந்த், தேவதச்சன், ஷா அ முதலியோரின் கவிதைகளில் காண்கிறோம். ஆனந்த்தின்
"சற்றைக்கு முன்" தேவதச்சனின் ஒரு டினோசரை நெருங்குவது எப்படி" ஆகியன
நினைவிற்கு எட்டும் தூரத்திலுள்ள உதாரணங்கள்.
எண்பதுகளில் எழுதப்பட்ட சில கவிதைகள் புதுக்கவிதை கோரும் குறைந்த பட்ச
அழகுகளான படிமம், குறியீடு, உள்ளார்ந்த ஓசை அமைதி ஆகியவற்றைக்கூட
புறக்கணித்துவிட்டு நேர்கவிதை எதிர் கவிதை என்ற வகைப்பாடுகளுக்குள் அமையும்
விதமாக எழுதப்பட்டன. கலாப்ரியாவின் "நவீன ஆண்டாள்கள்", விக்ரமாதித்யனின்
"ரத்தத்தில் கை நனைத்ததில்லை நான்". நகுலனின் "கோட்-ஸ்டாண்ட் கவிதைகள்".
ஆத்மாநாமின் சில கவிதைகள் இப்பிரிவிற்குள் அடங்கும். இதைப் போலவே
சர்ரியலிசப் படிமங்களை உபயோகித்து எழுதப்பட்ட முக்கியமான சில கவிதைகளையும்
(எ.கா பசுவய்யாவின் "ஆந்தைகள்" ஞானக்கூத்தனின் "தவளைகள்" ) அபத்தக்
கவிதைகள் என்பதற்கான உதாரணங்களையும் (சி. மணி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன்)
எண்பதுகளுக்கு முன்பிருந்தே காணமுடிகிறது. அதுபோலவே முற்றிலுமான பரிசோதனை
முயற்சிகள் என்ற அளவில் பிரேதா-பிரேதன் ஆகியோரின் "கிரணம்" கவிதைகளைக்
குறிப்பிட வேண்டும். மூச்சு திணறுமளவிற்கான பாலியல் உறவுப் படிமங்களும்,
வன்முறையின் வாதையும் ஒரு கொடுங் கனவு போல் கட்டின்றி விரியும் அக்கவிதைகள்
வாசகப் பங்கேற்பிற்கான வாயில்களை அதிகமின்றி மூடுண்டு போனவாயிற்று.
அவர்களுடைய பிந்தையக் கவிதைகளில் அடிப்படை அம்சமான அதீத புனைவு. புராதன
தொன்மங்கள் ஆகியவை இடம்பெறுவதைக் காண முடிகிறது.
தமிழ் நவீன கவிதைகளின் அசாதாரணமான வடிவ இறுக்கம், மொழிச் சிக்கனம், படிம
அடர்த்தி, உள்நோக்கிய பார்வை ஆகியவற்றிற்கு நேரெதிரான முனையில் இருந்து
இயங்குபவையாக ஈழத் தமிழ்க் கவிதைகளைச் சொல்லத் தோன்றுகிறது. உள்நாட்டு
யுத்தம், புலம் பெயர்ந்த அயலக வாழ்வு எனும் அதீதமான வாழ்க்கை
நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து உருவாகும் இக்கவிதைகள் இருண்மை, சிக்கல்,
நம்பிக்கையிழப்பு ஆகியவற்றிற்கு பதிலாக பெரிதும் நேரடியான வெளிப்பாட்டு
முறையையும், நம்பிக்கையின் பிரகாசத்தையும் கொண்டவையாக உள்ளன. காட்சி
விவரணை, தேவைக்கேற்ப இயற்கையை படிமமாகவோ குறியீடாகவோ பயன்படுத்துதல்,
தீவிரமான சூயளவயடபயைவின் தொனி ஆகியவற்றால் எழுதப்பட்டது இக்கவிதைகளின்
கவித்துவம் வெளிப்பாட்டின் தன்னிச்சையான மொழிப் பிரயோகத்தினால் இயல்பாகக்
கூடி வருவதே. வில்வரத்தினம், ஜெயபாலன், சேரன், சோலைக்கிளி, நட்சத்திரன்
செவ்விந்தியன் போன்றோரின் கவிதைகள் இலக்கியத்தின் ஒருவகை என்பதற்கும்
மேலாக, ஒரு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கப்படும்
ஒரு இனத்தின் நினைவுகள் பதியப்பட்டிருக்கும் சமூக - உளவியல் ஆவணங்களாகவும்
இவை பரிசிலிக்கப்பட வேண்டும்.
இரா. மீனாட்சி, திரிசடை, கி. விஜயலட்சுமி, சுகந்தி சுப்ரமணியன், ரிஷி
போன்றோர் ஒரு தொடர்ச்சியாக தமிழ்க் கவிதையில் செயல்பட்டு வந்தாலுமே கூட
தொன்னூறுகளிலிருந்துதான் பெண்களின் குரல் அவர்களுக்கேயான பிரத்யேக
அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் விதமான வீர்யத்துடன் ஒலிக்கத்
துவங்கியுள்ளது. இதுகாறும் ஆண்களின் பார்வை வழியாகவே வனையப்பட்டு
நிலைத்துவிட்ட பெண் பற்றிய பிம்பங்கள், புனைவுகளைக் கலைத்து புதியதாக ஒரு
பிரக்ஞையை உருவாக்க முயலுபவையாக சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, உமா
மகேஸ்வரி, கனிமொழி, வெண்ணிலா முதலியோரின் முனைப்பு உள்ளது. செய்தி
ஊடகங்களின் மிகையான கவனம், தீவிரமான கருத்தியல் மனச்சாய்வு
ஆகியவற்றினின்றும் விலகி தங்கள் கவித்துவம் குறித்த பிரக்ஞையுடன்
செயல்படும் பட்சத்தில் இவர்கள், தமிழ்க் கவிதைகளின் போக்கில் வலிமையானத—‘ரு
பாதிப்பை செலுத்துவார்கள் என நம்பலாம்.
புலன் அனுபவங்களின் உள்மடிப்புகளை அதன் மொழிக்கு முந்தைய நிலைகளை
கவனப்படுத்தும் யுவன், படிமத்தைத் துறந்த எளிய மொழியின் வழியே
கவித்துவத்தின் அபூர்வ கணங்களைத் தொட முயலும். மனுஷ்யபுத்திரன், புனைவுச்
சித்தரிப்புகளின் ஊடாக புதிய எதார்த்தங்களை எழுதிப் பார்க்கும்
சங்கரராமசுப்ரமணியன், லட்சுமி மணிவண்ணன், ஒரு சொல்லுக்கும் அதிகமான
கருணையையும், உயிர் பொறுக்கவொண்ணாத தாபத்தையும் நுரைத்துத் ததும்பும்
மொழியின் கட்டின்மை வழியே வடிக்க முயலும் யூமா வாசுகி. தனிமையை, வாதையை,
சுயசிதைவாக்கம் செய்யப்பட்ட கலைந்த மனப்பிம்பங்கள் வழியே சித்தரிக்கும்
பாலை நிலவன், தேர்ந்த விஞ்ஞானியின் கச்சிதத்துடன் தன் நினைவுச் சேர்மங்களை
வினைபடுதலுக்கு உள்ளாக்கும் அமலன் ஸ்டேன்லி, பிரத்யேகமான இனக்குழு
அடையாளங்களை வார்த்தைகளின் மேலேற்றி உச்சாடனம் செய்ய எத்தனிக்கும் என்.டி.
ராஜ்குமார் என உத்வேகத்துடன் இயங்கும் இளைஞர்களின் கூட்டமொன்று தமிழ்க்
கவிதையின் புதிய திசைகளுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவே
இப்போதுமிருக்கிறது.
முன்னெப்போதைவிடவும் பிரசுர வெளியீட்டு வாய்ப்புகளும், விற்பனை
முயற்சிகளும் பெருகியுள்ள இன்றைய சூழல், இலக்கிய ஆக்கங்களுக்கான எல்லா
சாத்தியங்களின் கதவுகளையுமே விரியத் திறந்து வைத்துள்ளது, என்றாலும்
உரைநடைப் படைப்புகளின் அளவிற்கு கவிதைகள் குறித்த பேச்சு இங்கு அதிகமில்லை.
வெளியிடப்பட்டுள்ள தொகுப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், விமர்சன
நோக்கில் கவிதையியல் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள் மிகக் குறைவே. இதை
நிவர்த்திக்கும் வகையில் முன்னோடி படைப்பாளிகளும், மொழிபெயர்ப்பாளர்களும்,
திறனாய்வாளர்களும் செயல்பட முன்வருவார்களேயானால் தமிழ்க் கவிதைப் பரப்பு
அதன் விஸ்தீரணத்துக்கு சற்றும் குறையாத அளவு ஆழமும் கொண்டதாக மிளிரும்.