-அன்பு சிவா
மனிதனின் நலவாழ்வுக்கு அறிவியலும் தொழில்
நுட்பமும் துணைபுரிகின்றன. அவனது பொருளாதார மேம்பாட்டிற்கும் சிந்தனைப்
பெருக்கத்திற்கும், அறிவியல் ஒரு கருவியாகிறது. ‘செல்வம் கொழிக்கும்
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற, நாடுகள் அறிவியலுக்கும் தொழில்
நுட்பத்திற்கும் மிகவும் கடன்பட்டுள்ளன. கற்கருவிக் கால மனித வாழ்வைவிட
இன்றைய மின் சாதன கால மனித வாழ்வு மேம்பாடுற்றிருப்பதை நாம் கண்ணால்
காண்கிறோம். இந்த மேம்பாடு அறிவியலின் கொடை.
மனிதனின்
பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அவனது, சிந்தனை வளத்துக்கும்
அறிவியல் துணை செய்கிறது. மனித மனத்துள் பல்லாண்டுகளாகப் புதைந்து
கிடக்கும் ‘மூட நம்பிக்கையை’ அகற்றுகிறது, அறிவியல் மனப்பாங்கையும்
விழிப்புணர்வையும் ஊட்டுகின்றது. இராகுகாலம், சகுனம் பார்த்துச் செயலில்
இறங்குவது அறிவுக்கொவ்வாதது, என அறிவியல் அறிவு சுட்டிக் காட்டுகிறது.
அறிவியல் என்பது சோதனையைய ஆதாரமாகக் கொண்டது. சோதனைக்கு உட்படாத எதுவும்
அறிவியலுக்கு அப்பாற்பட்டது. வெறும் நம்பிக்கைக்கு மட்டுமே உரியது.
அறிவியல்
உணர்வு பெருகப் பெருக மனித நேயம் வளர்கிறது. அறிவியல் என்பது உலகு
சார்ந்தது. மனித குலம் முழுமைக்கும் சொந்தமானது. தொலைக்காட்சி என்பது அதைக்
கண்டு பிடித்த மனிதனுக்கும் அவனது நாட்டுக்கும் மட்டும் சொந்தமானதன்று.
உலகப் பொதுச் சொத்து அது. அரசியல் எல்லைகளையும், நாட்டு எல்லைகளையும்,
பொருளாதார எல்லைகளையும் கடந்து, அனைத்து மக்களுக்கும் தொண்டு புரிவதே
அறிவியல் தொழில் நுட்பத்தின் கடமை. ஆக்க சக்தியான அறிவியலை, அழிவு சக்தியாக
மாற்றுவது, மனித விரோதச் செயலாகும். ஆக்கத்திற்குப் பயன்படும் அணு சக்தி,
அழிவிற்குப் பயன்படும் போது, உலகமே எதிர்த்துக் குரல் கொடுக்கக்
காண்கிறோம். மனித நேயம் கருதாத அறிவியல் தொழில் நுட்பம் என்ற எதுவும்
இல்லை. அதனை மனிதப் பகையாக மாற்றும் கொடுமை தன்னலமுடையது. அதை
எதிர்ப்பதில், அறிவியலின் அடிப்படை புரிந்தோர், ஒன்றாக இணைவதை நாம்
காண்கிறோம்.
அறிவியலின் ஆக்க அழிவுத்
தன்மைகளையும், அவற்றைப் பயன்படுத்துவோர், நோக்கங்களையும், அறிவியல் மனித
குல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியதின் முறைகளையும் மக்களுக்கு
எடுத்துச் சொல்வது தேவையாகும். இத்தேவைகளை உணர்ந்து அறிவியல் இயக்கங்கள்,
உலகெங்கும் செலாற்றுகின்றன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய உலக
இயக்கம் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.
ஒன்றைப்
படித்தறிவது வேறு, கேட்டறிவது வேறு. கேள்வியறிவு படிப்பறிவுக்கு இட்டுச்
செல்வது ஒரு வளர்ச்சி. கல்வியறிவு குறைந்த நாட்டில் கேள்வியறிவும் அதனோடு
காட்சி அறிவும் மிகுதியும் வேண்டப்படுகின்றன. இவற்றை இயக்க வழியாகச்
செய்யும் போது, ஓர் ஒழுங்கும் முறையும் கிடைக்கின்றன. தமிழக வரலாற்றில்
இயக்க வழிச் சாதனைகளுக்கு, ஏராளமான சான்றுகள் உள்ளன.
சமண,
பௌத்த ஆதிக்கத்தை எதிர்க்க விரும்பிய சைவ வைணவ நம்பிக்கையாளர்கள் கி.பி.
6,9 ஆம் நூற்றாறண்டுகளில் இயக்கம் நடத்தினர். ஊர் ஊராகச் சென்று
திருப்பணியும் தமிழ்ப் பணியும் புரிந்தனர். சைவ வைணவ எழுச்சியோடு, பக்தி
இலக்கிமும் தமிழுக்குக் கிடைத்தன. கிறித்தவ மத போதகர்கள்; தங்கள் மதத்தைப்
பரப்பப் பல வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் வழி தமிழ் உரைநடை
வளர்ச்சியுற்றது. ஆங்கில வல்லாட்சியை எதிர்த்துப் பாதை காட்டிய தேசிய
இயக்கம் நாட்டில் விடுதலை உணர்வை வளர்த்தது. தமிழ் இலக்கியத்தில் புதிய
புதிய வளர்ச்சிகள் இடம்பெற்றன. ‘தேசியம் தந்த இலக்கியம்’ என்று அவை
அழைக்கப்பட்டன. இன்று அறிவியல் யுகம், அதற்கேற்பத் தமிழகத்தில் அறிவியல்
பரப்புதலில் பல இயக்கங்கள் மூலம் முனைந்து செயல்படுகின்றன. அதன் பலனாக,
அறிவியல் உணர்வும், கல்வியும், வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளது.
இந்த வளர்ச்சியோடு அறிவியல் தமிழும் வளர்கிறது. தமிழ்வழி அறிவியல்
பரப்புதல், அறிவியல் துறையில் தமிழை வளர்த்தல் என்ற குறிக்கோள்களையும்
அறிவியல் இயக்கங்கள் சிறப்புறச் செய்து வருகின்றன.
இந்த
இயக்கச் செய்ற்பாடுகளுக்கு, முன்னோடியாக விளங்கிய ஓர் அமைப்பை இங்கு
நினைவு கூர்தல் தேவை. அது மன்னார் குடியில் 1920ல் தொடக்கம் செயல்பட்டு
வந்த கௌமார குருகுலம் ஆகும்.
“மன்னார்க்
குடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கௌமார குருகுலம் மன்னார்குடியைச் சுற்றி 12
மயில் தூரத்திற்குள்ள கிராமவாசிகளின் கல்வி நலத்திற்காக அமைக்கப்ட்டுள்ளது.
சுற்றுப் பிரயாண புத்தகச் சாலைத் தொண்டினால் இங்கிருந்து 95 கிராமக்
கிளைகளுக்கு இனாமாகப் படிக்கப் புத்தகங்கள் கொடுத்து வாங்கப்படுகின்றன.
சித்திரை ஐப்பசி மாதங்களில் கிராம வாலிபர்களுக்கு பிரத்யேகப் பள்ளிக்கூடம்
வைக்கப்ட்டு, உயர்தரக் கல்வி போதிக்கப்படுகிறது.” என்ற குறிக்கோளுடன்
செயற்பட்டு வந்த இந்த குருகுலம்; பல சிறுசிறு வெளியீடுகள் மூலம் கல்வியறிவை
வளர்த்தது. அதன் வெளியீடுகளில், கணிசமான அளவு அறிவியல் வெளியீடுகளாக
உள்ளன. முதியோர் கிராமக் கல்வி என்ற வரிசையில், வெளியான அந்நூல்களில் கிராம
பூகோளம், பூதபௌதிக அறிவு முதலிய சிறு நூல்கள் குறிப்பிடத் தக்கன.
இந்திய
பூகோளம், உலோக பூகோளம், இந்திய தேச சரித்திரம், இங்கிலாந்து தேச
சரித்திரம் ஆகியன அடங்கியது இந்தூல். (1830இல் யுரேனியசு பாதிரியார் ‘பூகோள
சாஸ்த்திரம்’ என்கிற நூலைத் ‘தமிழர்கள் அறிவு பெறுதற்காக’ வெளியிட்டார்.
தமிழில் வெளியான முதல் அறிவியல் நூலாக இது இருக்கலாம் எனக்
கருதப்படுகின்றது). பூத பௌதிக அறிவு நூல் தாவரம், ஜீவராசிகள், விகாஸமுறை,
தினசரி வாழ்வில் பௌதிக அறிவு, பௌதிக சாஸ்த்திரம், ரஸாயன சாஸ்த்திரம் ஆகிய
பிரிவுகளை உடையது. ஜீவராசிகள் 8 பக்கம். பௌதிக சாஸ்த்திரம் 24 பக்கம். மிக
எளிமையான விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், தமிழ், சமஸ்கிருதம, ஆங்கிலம்;
கலந்த ஒரு நடை. ஆனாலும் புரியும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
குருகுலம் தமிழறிஞர்களையும், அறிவியல் அறிஞர்களையும் அழைத்துப் பல சொற்பொழிவு நிகழ்சிகளையும் நடத்தியது.
தமிழகத்தில் இன்று முனைப்புடன் செயல்படும் அறிவியல் அமைப்புகள்:
1. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (சென்னை – பாண்டிச்சோரி)
2. சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)
3. மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை)
4. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் (தஞ்சை)
5. தமிழக அறிவியல் பேரவை (காரைக்குடி)
6. வளர் தமிழ் மன்றம் (அண்ணா பல்கலைக் கழகம்)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெள்ளிவிழாக்
கண்ட கேரள சாஸ்த்திர சாகித்ய பரிஷத்தை முன்னோடியாகக் கொண்டு தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் செவ்வனே பணிபுரிந்து வருகிறது. இந்தியாவின் பல
மாநிலங்களிலும், இவ்வகை அறிவியல் இயக்கங்கள் செயல்பட்டு வருவது இங்குக்
குறிக்கத்தக்கது. கேரளத்தில் பரிஷத்தின் பாதிப்பு பெரியது. அதன்
வெளியீடுகள் லட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. மலையாள மொழி வளர்ச்சியிலும்
அதன் பங்களிப்பு குறிக்கத்தக்கதாகிறது. ‘தமிழ்ச் சமுதாயம் மேன்மேலும் வளர
தமிழில் அறிவியல் பரவவேண்டும்’ என்னும் சீரிய நோக்குடன் தொடங்கியுள்ள
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தோன்றிச் சில ஆண்டுகளே ஆகின்றது. அதன் அறிவியல்
பரப்பும் பணி தற்போதுதான் தமிழகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது. அதன்
வெளியீடான ‘துளிர்;’ இதழ் 25.000 படிகளுக்கு மேல் விற்பனையாவது, மகிழ்ச்சி
தரும் செய்தியாகும். துளிர் இல்லங்கள் அமைத்து குழந்தைகளிடையே அறிவியல்
கல்வியைப் பரப்புகின்றது. அறிவியலின் அனைத்துப் பகுதிகளையும் தமிழில்
தரமுடியும் என்ற உறுதியுடன் பல தரமான வெளியீடுகளைக் கொண்டுவருகிறது.
அண்மையில் அது வெளியிட்டுள்ள, ‘அணுவிலிருந்து ஆகாயம் வரை’ என்ற கட்டுரைத்
தொகுப்பு, உடற்கூறு இயல், வேதியியல், இயற்பியல் முதலிய பல துறைச்
செய்திகளயும் எளிய தமிழில் தருகிறது.
“முன்
சென்ற தத்துவ நூலில் நின்றும் காலதேச வஸ்துவாகிய மூன்று தத்துவங்களையும்,
கணித நூலின் பிரதான முடிவுகளையும், தனித் தனிப் பதங்களாகக் கொண்டு,
ஆங்காங்கு வேண்டுழி கணிதநூல் மார்க்கங்களை அனுஷ்டித்து மேற்கூறியபடி சாமியா
சாமியமாய் நிலம் நீர்க்கால் என்னும் அவஸ்தா பேதங்களையுடைய பொருள்கள்
இயங்குகின்ற சாங்க இயக்கத்தினையும், வெம்மை ஒளி மின்மயம்;
முதலானவற்றிற்குக் காரணமாய்; நிற்கின்ற அணு இயக்கத்தினையும் ஆராய்ந்து,
அவற்றின் குண விசேடங்களையும், தொழில் வேறுபாடுகளையும், திடப்படுத்தி
அறிந்து அவ்வவற்றிற்குரிய விதிகளை ஒழுங்குபட விரிக்கும் நூல் முதநூலில்
மூன்றாவது நூலாகும். இந்நூலிற்குப் ‘பிரகிருதி விஞ்ஞானம்’ ’பதார்த்த குண
விஞ்ஞானம்’ என்னும் பல பெயர் பொருத்தமுளதேனும், இந்நூலில்
விவரிக்கப்படுபவையே சக்தி வலிமை என்று நாம் வழக்கத்தில் கூறுவதாயும்,
பிரகிருதி என்பதும் இவ்விடத்தில் இப்பொருளையே குறிப்பிக்கின்றதாயும்,
இருக்கின்ற படியால், தமிழில் சக்தி நூல் என்று பெயரிடுதல் உசிதமாய்த்
தோன்றுகின்றது.” (நூற்றொகை விளக்கம்) மனோன்மணியம் சுந்தரனார் 1888 இல்
எழுதிய இயற்பியல் விளக்கம் இது. கடந்த நூறாண்டுகளில், தமிழின்
புலப்பாட்டுத் திறன் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை, அளவிட இந்த இரண்டு
பத்திகளும் ஒரு சான்றாகும்.
கலைச்சொல்
வரலாற்றிலும் ஆங்கிலமயம், சமஸ்கிருத மயம் என்பது மாறி, தமிழ் மயமாகும்
காலம் இது. இதற்கு அறிவியல் இயக்கங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. நேரடியாக
மக்களைச் சந்தித்து, சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, படநிகழ்ச்சி மூலம்
அறிவியல் செய்திகளைச் சொல்லவேண்டியிருப்பதால், தமிழில் எளிமையும் தெளிவும்
தானாகவே வந்து சேர்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும்
நடைப்பயணம் மேற்கொண்டு, கிராமங்களில் அறிவியல் கல்வியைப் பரப்புவதால்,
தமிழை எளிமைப்படுத்த நேர்கிறது. துளிர் இதழ் பள்ளிச் சிறுவர்களுக்காக
உள்ளதாகையால், அங்கும் தமிழ் எளிமைப்படுத்தப் படுகின்றது. ஆய்வுக்
கட்டுரைகள், பாடநூல்கள் முதலியவற்றில், இடம் பெறும் தமிழ் அமைப்பும் சிறிது
மாறுபடக் காரணம், படிப்போர் கேட்போரின் தராதரமேயாகும்.
சுதேசி அறிவியல் இயக்கம்.
காரைக்குடியை
மையப்படுத்தி இயங்கிவரும் சுதேசி அறவியல் இயக்கம் குன்றக்குடியிலும், அதை
ஒட்டிய சிற்றூர்களிலும், நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி,
அறிவியலைச் செயல்படுத்தி வருகிறது. அதன் சார்பில் வெளிவரும் ‘அறிக
அறிவியல்’ என்ற இதழ் பலதர வாசகர்களையும் நோக்கியது. எனவே அனைத்து வகை
செய்திகளையும், அது வெளியிடுகிறது. புரியும் தமிழில் தெளிவான முறையில்,
அறிவியல் செய்திகளைத் தருகிறது. பல நல்ல கலைச்சொற்களைப் பயன்படுத்தித்,
தமிழின் சொற் கோவையை வளப்படுத்துகிறது. பொறியில், உளவியல், வானவியல் அலகு,
வெப்பச் சமநிலை வேதியியல் முறை, இடைவினைகள் முதலியன சில காட்டுகள்.
‘பழங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ ‘மண் அரிமானத்தைத் தடுக்கும்
வெட்டிவேர்’ என்ற அழகுத் தமிழும், கட்டுரைத் தலைப்புகளாக இடம் பெறும்.
தமிழகப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பல கருத்தரங்குகளை நடத்தி, “தமிழின்
சொல்லுந் திறனை” வெளிப்படுத்திய பங்கும் இந்த இயக்கத்துக்கு உண்டு.
மக்கள் அறிவியல் இயக்கம்
அறிவியல்
சாதனங்களைச் சமுதாயத்தோடு இணைத்துப் பார்த்து, அந்த சாதனங்களின் வன்மை
மென்மைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் சக்திகளின் நலன்களையும், சமுதாய
உணர்வுடன் எடுத்து விளக்கும் பெருந்தொண்டினை இந்த இயக்கம் செய்து வருகிறது.
“மக்களுக்கே அறிவியல்” எனபது இதன் முழக்கமாக உள்ளது. அவ்வப்போது
கருத்தரங்குகளை நடத்தி கட்டுரைகளை நூலாக வெளியிட்டு வருகிறது.
அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்
1987
ல் தொடங்கிய இக்கழகம் 3 கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. கருத்தரங்கு பல
பொருள் தழுவியதாக அமையும். அனைத்துக் கட்டுரைகளையும் நூலாக்கி ‘வளர் தமிழ்
அறிவியல்’ என்று வெளியிட்டு வருகின்றன. இதுவரை 3 தொகுதிகள் வெளியாகியுள்ளன.
3வது கருத்தரங்கு, பொறியியல் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி அமைந்தது.
பண்டைய தொழில் நுட்பம் முதல், இன்றைய தொழில் நுட்பம் வரையிலான ஒரு வரலாற்று
அறிவை இக்கருத்தரங்கு வழங்கியது. நுட்பமான அறிவியல் செய்திகளைக் கூடத்
தமிழில் கூறமுடியும், என்பதற்கு இக்கருத்தரங்கு சான்றாயின. சில கட்டுரைகள்
அறிவியல் தமிழின் அமைப்பு பற்றியும், கலைச்சொற்களைப் பற்றியும் மொழியியல்
பார்வையில் வெளிப்படுத்தின. அறிவியல் தமிழ் வளர்ச்சியை முதன்மையாகக்
கொண்டு, இந்தக் கழகம் செயல்பட்டு வருகின்றது.
தமிழக அறிவியல் பேரவை
இந்திய
அறிவியல் பேரவையை முன்மாதிரியாகக் கொண்டு, இவ்வமைப்பு தொடங்கப் பெற்றது.
சென்ற ஆண்டு, இதன் முதல் கருத்தரங்கு நடைபெற்றது. அறிவியலின் பல துறைகளும்
இதில் இடம்பெற்றன. அவ்வுரைகள் தமிழில் இருந்ததால், அறிவியல் ஆய்வுகளைச்
சொல்லும் விதத்தில் தமிழும் பண்பட்டுள்ள நிலையைக் காண முடிந்தது.
செய்திகளைத் தெளிவுபட புரிந்து கொண்டால் வெளிப்பாட்டில் கடுமையிருக்காது
என்பதற்கு, சான்று, ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்; வாக்கினிலே இனிமை
உண்டாம்”. இதன் இரண்டாவது கருத்தரங்கு, நவம்பர் 1993ல், நடைபெறுகிறது.
தமிழகப் பல்கலைக் கழகங்கள் இவ்வமைப்பின் உறுப்பினர்கள்.
வளர்தமிழ் மன்றம்
அண்ணா
பல்கலைக் கழகத்தில் இயங்குகின்றது. “களஞ்சியம்” என்ற இதழ் மூலம் அறிவியல்
கல்விப் பணி ஆற்றிவருகிறது. கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடத்துவதன்
மூலம் தன் பணியை ஆற்றுகின்றது. 1993 மார்ச்மாதம் அனைத்து இந்திய அறிவியல்
தமிழ்க் கழகத்துடன் இணைந்து, சிறப்பான ஒரு கருத்தரங்கை நடத்தியது. இதில்
100 அறிவியலார் கலந்து கொண்டனர். அவர்களில் 80மூ பொறியாளர்கள். ‘அறிவியல்
யுகத்துக்கேற்ற தமிழ்’ என்ற தலப்பில் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தரங்கை
நடத்தியது. அதில் தமிழப் புலப்பாட்டுத் திறன் வெளிப்படும் வகையில் பல
நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அறிவியலைத்
தமிழ் வழிப் பரப்புதலில் சில இயக்கங்கள் ஈடுபட்டு வரக்கூடும். இவை
எல்லாவற்றின் நோக்கமும், தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்துவதாகவே உள்ளது.
தமிழ் வழி அறிவியலச் சொல்லுவதன் மூலம், அறிவியலும் வளர்கிறது. தமிழும்
வளர்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்த இரண்டு பணிகளையும் தமிழக
அறிவியல் இயக்கங்கள் செவ்வனே செய்து வருகின்றன எனபதே இவைபற்றிய அளவீட்டின்
முடிவாகும்.
No comments:
Post a Comment