Friday, September 16, 2016

சக்திஜோதியின் ‘கடலோடு இசைத்தல்’ – ஒரு பார்வை

பொன்.குமார்
 
கவிதையில் அகம், புறம் என்னும் கூறுகள் உண்டு. அகம் பாடுவது புதியதல்ல. சங்க காலம் முதலே தொடர்ந்து வருகிறது. ‘அக நாநூறு’ என்னும் தனித் தொகுப்பும் சான்றாக உள்ளது. இன்றும் அகம் பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் எத்தனை விழுக்காடு கவிதை இருக்கிறது என்பது ஆய்வுச் செய்யப்பட வேண்டியுள்ளது. அகத்தைப் பேசினாலும் அழுத்தமாக, அழகாக, கவிதையாக பேசுபவர்கள் இல்லை. இக்கலையில் தனித்து விளங்குபவர் கவிஞர் சக்தி ஜோதி. ‘நிலம் புகும் சொற்கள்’ தொகுப்புக்குப் பிறகு அளித்துள்ள இரண்டாம் தொகுப்பு ‘கடலோடு இசைத்தல்’. முதல் தொகுப்பின் தொடர்ச்சியாகவே உள்ளது. 
 
‘பழமை’ என்னும் முதல் கவிதையே கடலைப் பாடுகிறது.
கடலின் பழமைக்குக்
கடலே சாட்சி என்கிறார். கடல் பழமை வாய்ந்தது என்பதை விட பெருமையும் பெற்றது.
ஆழ்கடலின் மௌனத்தைக்
கலைத்துக் கொண்டிருக்கிறது
காற்றலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறியீடாக உள்ளது. மனம் மௌனமாக இருந்தாலும் கலைப்பதற்கான காரணங்கள் உள்ளன என்கிறார். தொடர்ந்து ‘கடலோடு இசைத்தல்’ இல்
நிலத்தின்
வாசல் திறக்கிறது
கடல் புகுகிறது
கடலின்
வாசல் திறக்கிறது
நிலம் நிறைகிறது என்கிறது. நிலமும் கடலும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்தும் பரிமாறியும் வாழ்கிறது என்று குறிப்பிடுகிறார். நிலம், கடல் என்பதும் குறியீடாகக் கையாளப்பட்டுள்ளது. ‘கடலை அறிந்தவள்’ என்றாலும் அறியாமலும் அறிந்துமே உள்ளாள் என்கிறார். இக்கவிதை ஒரு ‘சிறுமி’யை வைத்து எழுதப்பட்டுள்ளது. இத்தொகுப்பு கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பற்றிய கவிதைகள் கடல் போல் வாசக மனத்தில் அலை வீசுகின்றன. வாசக மனத்திலும் அலை எழுப்புகின்றன. 
மழை பெய்வதும் நிலம் புகுவதும் இயற்கை. மழையை மண் உள் வாங்கிக் கொள்கிறது.
தன் மேல் படரும்
ஆண் வாசமென்று
வெட்கத்துடன் மலர்கிறது நிலம் என கவிதையாக்கியுள்ளார். நிலத்தைப் பெண்ணாக்கியுள்ளார். மண்ணை ஒரு ‘மனுஷி’ யாகவே பார்த்துள்ளார். மழைக்காகவே மண் காத்திருக்கிறது என்கிறார் . ‘மழைப் பொழுதி’ல் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மகளோடு மழையில் நனைந்ததைப் பற்றி எழுதியதில் அவர் ஆனந்தப் பட்டதை அறியமுடிகிறது. மழையில் நனையும் பொழுது மகள் தானாகவும் தான் மகளாகவும் மாறியதைக் குறிப்பிட்டுள்ளது கவனிப்பிற்குரியது. மழை விடவில்லை என்கிறார். கவிஞரும் மழையை விடவில்லை. மகளுக்கும் தாய்க்குமான உரையாடலாக அமைந்த கவிதை ‘கேள்வியும் பதிலும்’. நீரை ‘ருசி’ என்கிறார். நீர் அருந்துவதை ஆனந்தம் என்கிறார். ஆனந்தமே சுதந்திரம் தருகிறது என்கிறாள் மகள். 
பரிசாக விலை உயர்ந்த பொருளை மட்டும் தர வேண்டியதில்லை. பரிசாக வழங்கப்படும் பொருளில் விலையைப் பார்க்கக் கூடாது. அன்பையே பார்க்க வேண்டும். அன்பும் காதலும் இருக்ககுமானால் ‘காலணி’யும் பரிசு பொருளாகும். ‘நீ அறியாத பரிசு’வில் ‘காலணி’யைப் பரிசு பொருளாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
காலணியை அன்பின் குறியீடாக
பாதுகாப்பின் அடையாளமாகக் கற்பிதம் கொண்டிருந்தேன்
காலணியை
காதலுக்குரிய பரிசு பொருளாக மாற்றிச் சென்றிருக்கிறாய் காலணிக்கும் ஓர் உயர்ந்த இடத்தை இக்கவிதைப் பெற்றுத் தந்துள்ளது. காலணியை தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடாக காட்டப்பட்டு வருவதை மறுத்துள்ளது.
நீரில்லா நிலைமையைத் ‘தண்ணீர்’க் கவிதைக் காட்டியது .ஒரு புறம் நீரில்லா நிலை. நீருக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மழையை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் கடல் அனைத்தையும் மூழ்கடித்து விடுகிறது. இய்றகையை எப்போதுமே மனிதர் மீற முடியாது. இயல்பாகவே இருந்தது ‘தண்ணீர்’ . ‘ரிஷி மூலம்’ கவிதையில்
பிறந்த குழந்தை பருகும் முதல் துளி நீரில்
துவங்குகிறது அதன் தேடல் என்கிறார். தண்ணீர் எப்போதுமே தேவையானது என்பதுடன் அதை தேடியே அடைய வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.
‘பறவையும் பூட்டும்’ மனிதர்களுக்கானது.
ஒருவரும்
புரியா உலகத்தில்
புரிந்து கொண்ட படி
நடனமாடுகின்றன
அனைத்துக் கால்களிலும்
பூட்டப்பட்டிருக்கிறது
ஒரு பூட்டு கால்களை புரியச் செய்கிறார். கால்களுக்கு புரிதல் ஏற்படுத்தியுள்ளார். புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
மனிதர்களுக்குள் நல் உறவு தேவை. ஓருவரை ஒருவர் புரிந்து செயல்பட வேண்டும். புரிதல் இல்லாத போது கசப்புணர்வே ஏற்படும்.
ஒரு
கசப்புணர்வு
தடுப்புச் சுவர்களை
எழுப்பிய படியிருக்கிறது என ‘மீள்தல்’ கவிதையில் எழுதியுள்ளார். உறவில் ஒரு முறை விரிசல் ஏற்பட்டால் விரிசல் பெரிது ஆகவே செய்யும். ஆயினும் பெருஞ்சுவர்களை தகர்த்திட விரும்புவதாகவே குறிப்பிடுகிறார்.
மனசிலிருக்கும் வெறுப்பு
நிலமெங்கும் எழுப்புகிறது ஒரு சுவரினை என ‘‘தடைகள்’ கவிதையிலும் கூறியுள்ளார். சீனப் பெருஞ் சுவர் பற்றிய கவிதையில் அதில் நிகழ்ந்த மரணங்களையே வெளிச்சப்படுத்தியுள்ளார். மரணங்கள் பதிவாக்கப்படவில்லை என வருந்தியுள்ளார்.
கிளிகளைப் பற்றி பேசியுள்ளது ‘கிளி புராணம்’. மீனாட்சி , காமாட்சி, ஆண்டாள் ஆகியோரிடமிருந்த கிளிகளைப் பற்றி பேசி தற்போது கூடடையாதது பற்றியும் கூடடைந்தது பற்றியும் பேசியுள்ளார். கூடடையாதது வானில் பறக்கிறது. அடைந்ததோ அடிமையாகவே இருக்கிறது என்ற இரு வகையானவற்றையும் கூறியுள்ளார்.
பெண்களை நிலவுடன் ஒப்பிடுவது தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நிலவுடன் ஒப்பிட்டு சுயமாய் இயங்கும் சக்தி படைத்தவள் என பின்னுக்குத் தள்ளி விடும் முயற்சியாகவே உள்ளது. கவிஞரோ ‘நிலவென்று சொல்லாதே’ என கோபமாகவே உரைக்கிறார்.
என்றென்றும்
பெண் நிலவாயிருக்க விரும்பவே மாட்டாள்
அவள்
சூரியன்களைப் பிரசவிப்பவள் என பொங்கி எழுந்துள்ளார். சூரியன்களைப் பிரசவிப்பவளும் ஒரு சூரியனாகவே இருப்பாள். இனிவரும் காலங்களிலாவது பெண்ணை நிலவுடன் ஒப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும் ‘பெண்’ கவிதையில்
பஞ்ச பூதங்களாய இருக்கிறேன்
எனக்கென
சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை என கவலையுற்றுள்ளார் . தொகுப்பின் முடிவிலுள்ள ‘பெண்மை பற்றி சில கவிதைகள்’இல்
சிவப்பிலான உடை
இனி என் அடையாளமாகப் போகிறது என எச்சாpத்துள்ளார். பெண்கள் சார்பாக குரல் எழுப்பியுள்ளார்.ஒவ்வோர் உள்ளத்திலும் அன்பு இருக்கிறது. நபருக்கு நபர் சதவிகிதத்தில் வேறுபடும். ஆனால் வெளிப்படுத்த தெரியாததாலே பெரும் பாலான உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. அன்பை வெளிப்படுத்த சொற்கள் உண்டோ? இல்லை ‘கடத்தல்’ கவிதையில்
ஒரு போதும்
உணர்ந்த அன்பை
சொற்களில் வெளிப்படுத்த முடிந்ததில்லை என கூறியிருப்பது உண்மையே. இறுதியாக
ஒரு துளி
கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது
அன்பு என்கிறார்.கண்ணீர் வழியாக அள்பைக் கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அன்பலான சொல்’லில்
பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே என அன்பைக்காட்டுகிறார். அன்பிலான சொல் தீர்ந்து போகாததது என்கிறார். ‘தனிமையின் வெளி ‘யில் பிரியங்களுக்கு
இணையான வார்த்தைகள் எதுவும்
இல்லையென மொழி உணர்த்துகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ‘தனிமையின் வெளி’ கவிஞருக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்று அறிய முடிகிறது.
எப்பொழுதுமே
தென்றல் வீசுவதில்லை எனத் தொடங்கும் ‘தருணம்’
எப்பொதும்
ஜன்னல் கதவுகள்
திறந்தே இருப்பதில்லை என முடிகிறது. இரண்டு முரண்பட்ட தருணங்களை எடுத்து வைக்கிறார். தென்றல் வீசும் போது ஜன்னல் திறந்திருப்பதில்லை. ஜன்னல் திறந்திருக்கும் போது தென்றல் வீசுவதில்லை . தருணம் வாய்க்காமலே காலங்கள் கடந்து கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளார்.
காலங்காலமாக
வாழ்வோமென்ற நம்பிக்கையில்
கட்டப்பட்ட
மூதாதையரின் வீடு
சலனங்களேதுமற்றிருக்கிறது
‘கனவுகள் புதைந்த வீடு’ மூதாதையரின் நம்பிக்கை வீணாகியதற்காக வருத்தப்ட்டுள்ளார்.ஆயிரம் கனவுகளுடன் ஆசையாய் வீடு கட்டுபவர்கள் வீட்டில் வாழ முடிவதில்லை. மரணம் உள்பட காரணங்கள் பல.
‘தாலாட்டு’ கவிதைப் பிரிவைப் பாடியுள்ளது. பிரிவின் வேதனையைக் கூட வன்மையாக பேசாமல் மென்மையாக பேசியுள்ளார். பிரிந்து சென்ற போதிலும் எங்கேயோ உறங்குவதற்கு இங்கிருந்தே விசிறுவதாக கூறி தன் பிரியத்தை, அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரிந்தாலும் பிரியம் குறையாது என்பது கவிஞரின் நம்பிக்கை.
‘அடையாளம் ‘ கவிதை ஒரு தனித்த அடையாளத்துடன் உள்ளது.
சிதிலமான கோட்டையின்
இரத்தச் சிவுப்புச் சுவர்களில்
அடிமையின் நிழல்
அதிகாரத்தில் நிழல்
பரவிக் கிடக்கிறது காலம் காலமாக இவ்வாறான ‘அடையாளாங்கள்’ ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஆண்டான்டு காலமாய் அதிகார வர்க்கம் மக்களை அடிமைப்படுத்தியே வந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அடையாளம் ஏற்படுவதையும் சாpத்தரம் தொடர்வதையும் தடுக்க முடியாது என்கிறார்.
பிடித்ததும் பிடிக்காததும்’ பொதுவானது. அனைவரிடமும் இருக்கும். ‘பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்’ வாழ்ந்தாக வேண்டும்.
எனக்குப் பிடித்தது அவனுக்குப் பிடிக்காது
அவனுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது
நாங்கள்
பதினாறு மக்களைப் பெற்றிருக்கின்றோம் பிடித்தாலும் பிடித்தாலும் வாழ்க்கைத் தொடர்கிறது என்கிறார். மனித வாழ்ககை முரண்பாடுகளால் ஆனது என்பதை ஒவ்வொருவர் வாழ்விலும் அறிந்ததே என்பதை மறுக்க முடியாது.
கவிஞர் சக்தி ஜோதியின் கவிதை உலகம் அலாதியானது. அவருக்குள் ஓர் உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த உலகத்துக்குள்ளேயே வாழ்கிறார். அந்த உலகத்தில் இருந்து கொண்டே அகச்சூழலின் வழியாக புறச்சூழலைப் பேசியுள்ளார் .காதல் சமூகம் சார்ந்தததே என்கிறார். அதற்கேற்பவே காதல் மூலம் சமூகத்தைக் காட்டுகிறார். இனிமையான மொழியைக் கொண்டு கவிதைகளை எழுதி வாசக இதயத்தை வருடச் செய்துள்ளார். முதல் தொகுப்பைப் போலவேஇரண்டாம் தொகுப்பிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். கவிஞர் கடலோடு இசைத்தது மனத்தோடும் இசைக்கிறது. மெல்ல அசைக்கவும் செய்ய முயல வேண்டும். ‘புறக்காரணிகள் என்னை அச்சுறுத்தும் போது துன்பமடைவதை விட கவிதை எழுதுதல் சிறந்த ஆயுதம் எனவே நம்பத் தோன்றுகிறது் என்கிறார். .அவ்வாறு எழுதப்பட்டதாகவே உள்ளது ‘கடலோடு இசைத்தல்’.
 வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், கருமண்டபம் திருச்சி – 1
 விலை ரூ.50

சக்திஜோதியின் மூன்று கவிதை நூல்கள் – ஒரு பார்வை...

ஆத்மார்த்தி
வெகு காலமாக கவிதைகளை வாசித்து வருபவன் என்கிற செருக்கு, எனக்குள்ளிருந்து அவ்வப்பொழுது வெளிப்பட்டு வந்தே இருக்கிறது. உலகத்திலிருக்க கூடிய அத்தனை கவிதைகளையுமே வாசித்து முடித்தவன் போன்றதொரு அகத்தொனியை அது அவ்வப்பொழுது ஏற்படுத்துவதை வசதியாக மறந்து போயும் இருந்து இருக்கிறேன்.
என் இரட்டை ஆளுமைகளில் நான் தெரிவிக்க மறுக்கும் எனது அகத்தை கட்டமைத்ததில் கவிதைகளுக்கு மிக அதிகமான பங்கு இருக்கிறது என்பது ஒன்றை தவிர,மிகச் சமீபத்தில் தான் எனக்கு எழுத தெரியும் என்பது எனக்கு தெரியும்.
ஆனாலும்,அன்னிய நிலமொன்றில் தவற விட்டபயண ஊர்திக்கு மாற்று வாகனம் ஒன்றை எதிர்நோக்கி,அந்த நிலத்தின் மைந்தர்களுக்கு நடுவிலான கூட்டத் தனிமை ஒன்றில் வெளிப்பட்டு சிதறிவிடுமோ எனத்தேக்கி வைத்த அச்ச அடுக்குகளை எல்லாம் மறைத்து கொண்டு காலம் தின்று கால் கடுக்கும் ப்ரயாணி ஒருவன், எங்கனம் அந்த நேரம் அந்த இடத்தில் கடைவிரித்து தனக்கு தெரிந்த வித்தைகளை அவிழ்த்துக் கொட்டி காசுக்காக கையேந்தும் வித்தகனின் தட்டில் பலமாக தன்னிடமிருக்கும் நாணயங்களில் சிலவற்றை சிந்தி வைப்பானோ…அது போலத் தான் அந்த பிரயாணியை ஒத்த மனநிலை தான் எனக்கு இருந்தது,
சக்திஜோதி என்னும் கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புக்களை அடுத்தடுத்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகச் சமீபத்தில்தான்.இதற்கு முன் அவரது எந்த கவிதையையும் படித்ததில்லை என்ற பெருந்தகுதியுடன் அவரது நிலம் புகும் சொற்கள்/கடலோடு இசைத்தல்/எனக்கான ஆகாயம் என்ற மூன்று தொகுப்புக்களை அடுத்தடுத்து படித்து முடித்தேன்.
சூரியனுக்கு மட்டுமல்ல/அதைச் சுற்றிச் சுற்றி வருவது/நான் தானெனஎனக்கும் தெரியும்/ அகத்திலிருந்து கிளம்பி நெற்றியிலறையும் நேரடியான வரிகளில்,காலம் தின்றது போக மிச்சம் கிடைத்த வாழ்க்கையின் நகர்தலை தோற்றப்பிழை என்ற கவிதை சொல்கிறது.
எங்கும் காணோம் நமதன்பின் வெளியை/ஒரே ஒரு முறை என்னைப்பார்/நமக்கான நட்சத்திரத்தை /உன் விழிகளில் இருந்து உருவாக்குகிறேன் அன்பின் நிலம் என்னும் கவிதை மேற்சொன்ன வரிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.சக்தி ஜோதியின் கவிதைகள் அன்பு வயப்பட்டவையாக இருக்கின்றது அதிர்ஷ்டவசமே என்றெண்ணத் தோன்றுகிறது.ஆழ்மனத்தின் எல்லாப் பரப்பிலும் அன்பு ஒரு ஊற்றாகப் பெருகாதவரை இந்த வரிகள் தோன்றச் சாத்தியமே இல்லை.
உன்னைப் பிரிகையில்/பெருகும் துயரத்திற்குக் /குறைந்தது இல்லை/நினைவின் மகிழ்வு.என்கிறார்.சக்திஜோதிக்கு கைவந்திருக்கிற நினைத்து மகிழ்தல் என்பது பெரும்பாலும் ஆண்டாளின் தனிமையின் மொழிச்செறிவுக்கு நிகரானது.படிக்கிறவர்களுக்குள் ஒரு நெகிழ்தலையும் நிறைவையும் ஏற்படுத்தும் சக்தி ஜோதி,அதற்காக கையில் எடுப்பது ஒவ்வொரு முறையும் சாதாரணமான அன்பை, பிரிவை, தனிமையை, காதலை,ஊடலை… இவை காலகாலமாக இலக்கியங்களில் அடித்துத் துவைக்கப்பட்டவையே,இருந்தாலும் அசாதாரணமான ஒரு துயரை,ஒப்பும் மிகுதியும் இல்லாத உணர்வுகளை சொல்ல வரும் பொழுது அதே அன்பும் தனிமையும் வேறு ஒரு வண்ணத்துக்கு மாறிவிடுகின்றன.தொலைந்த குழந்தை கையில் கிடைக்கும் கணத்துக்கு ஒப்பான மகிழ்தல், சக்திஜோதியின் அக உலகில் உலா வரும் பொழுது நமக்கும் இடம் பெயர்கிறது.
காதல் என்ற பொருளை சக்திஜோதி மிக அனாயாசமாகக் கையாள்வது இந்த நிலம் புகும் சொற்கள் தொகுப்பின் முழுமையிலும் நம்மால் உணர முடிகிறது.குறிப்பிட்ட காலத்துக்கு எலும்புகள் நொறுங்கக் காதலித்து முடித்து,அதற்குப் பின்னதான வாழ்க்கையில் எந்த உருவத்திலும் காதலின் ப்ரதிகள் உள்நுழையா வண்ணம் சர்வசித்தமாய் தன்னையே வேவுபார்க்கக் கூடிய மன நடுக்கம் மிகுந்து கிடக்கும் தற்பொழுதைய பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையில், மணல்மேலோடும் பளிங்கு நதியாய் சிலிர்க்க வைக்கிறது சக்திஜோதியின் வரிகளில் காதல்.
இரவு நண்பனாகி வெகு நாட்களாயிற்று என்கிற வரிக்குள் இருக்கும் இரவுக்கும் தனக்குமான புரிதலை அழகுறச் சொல்கிறார்.அந்தரங்க முகம் கவிதையில்.
.நீங்குதல் கவிதையில்.நீ/வந்து நீங்கியபின்/உடல் தணலாகக் கொதிக்கின்றது/பின்/உன் நினைவுக்காற்று/என்னைக் குளிர்விக்கக்க/என்னை மீட்டுக் கொள்கின்றேன்/அந்த இரவில்.காமத்துக்கும் காதலுக்குமான இயல்பான இடைவெளியில் ஊடுருவும் கண்ணாடி இழைகளை,இலகுவாகக் கட்டவிழ்க்கின்றன இந்த வரிகள்.அழகுணர்ச்சி விரவ அதே நேரத்தில் மொழியைக் கடந்து போகிற படைப்பாளி என்னும் பொறுப்புணர்வை நன்கு புரிந்தவராய் கவிதைப்படுத்துகிறார்.
மனத்தட்டுப்பாடில்லாத மனம் தராத மகிழ்வை, வெட்கத்தை வெறும் ஒரு பெயர் தருவதாக கிளர்ந்தெழுகிறார். என்னோடு கலந்தால் என்னை அறிந்து கொள்வது எளிதென உனக்குச்சொல்வதற்கு ஒருவரும் இல்லையா? என வினவுகையில் தனிமையில் தாபத்தின் நீட்சியை நம் கண் முன் நிறுத்துகிறார்.
உனது முத்தம் பெருகி அதில் மூழ்கிக்கொண்டிருக்கும் என்னை உனது இன்னும் ஒரு முத்தத்தை தவிர எது காப்பாற்றும்..? என்கிறார் முத்தம் என்னும் தலைப்பில்.ஒரு குமிழியை இன்னொரு குமிழி துரத்திச் சென்று அதை உடைத்து தானும் உடைபடுவதை சிதைவு என எங்கனம் கொள்ள முடியாதோ…அது போன்ற தரிசனம் தான் முத்தத்தின் வாயிலாக நமக்கு ஏற்படுகிறது.
இவையெல்லாவற்றையும் தனக்குள் விழுங்கிக்கொள்வது போல் ஒவியம் என்கிற கவிதை….
என்னைச் சித்திரமாக
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்
ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப் போனது என்பதும்
நான்
யார் யாருக்கோ அடையாளமாக
இருக்கையில்
உன் நினைவில்
என்னிருப்பை உணர்கின்றேன்.
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே.
இதன் ஆரம்ப வரிகளின் அழகான எதிர்மாறலாய் முடிவு வரிகள் இருப்பது சக்திஜோதியின் மொழிவன்மையை பெரிதாய் புலப்படுத்துகிறது.ஒரு தனிமைக்குள் இத்தனை திடமான உணர்வுகளா என நம்மை வியக்க வைக்கின்றன நிலம்புகும் சொற்கள் தொகுப்பின் கவிவரிகள்.
……………………………………….
கடலோடு இசைத்தல் என்னும் தனது இரண்டாவது தொகுப்பில் இயற்கையை காதலின் பெருவெளியில் பொருத்திப் பார்க்கிறார் சக்திஜோதி. கடலுக்குள் புகுந்து வெளிப்படும் ஒற்றைக்கணத்தில் பரபஞ்சச் சுவையும் பழமையின் வாசனையும் வெளிப்படுவதாக சிலாகிக்கிறார்.
கடலோடு இசைத்தல் என்னும் கவிதையில் நிலத்தின் கடல் கடலிலும் கடலின் நிலம் நிலத்திலும் கிடப்பதாக சமன்பட்டுத்திப் பார்க்கையில் கடல் என்பதை நம் நிலம் சார் வாழ்க்கையினுள் கொண்டு வந்து விடும் இவரது முன்முடிவு சரியானதே எனத் தோன்றுகிறது.”கடல் நிலத்தின் வாசலைத்திறந்து புகுவதையும் கடலின் வாசல் திறக்கையில் நிலம் நிறைகிறதையும்” சொல்லி இப்படி முடிக்கிறார்….”அலை பாடிக் கொண்டிருக்கிறது கடல் பாடல்களை” என.
ஞாபகம் என்னும் கவிதையை தாபம்,காமம்,காத்திருத்தல்,என கலவியின் சகல உள் முகங்களுடனும் அணுகுகிறார்.அவனை நினைவுபடுத்திய கடல் என்னும் பிரதேசத்தை அச்சத்துடன் கவனிக்கும் சக்திஜோதியின் கவிமனம்…அந்த அனுபவத்தை உடனே உலகளாவிய பரவலுக்கு ஆட்படுத்துகிறார்….”கடல்/கரை/மணல்/காலடித்தடங்கள்/கூடவே உடைந்த சிப்பி/ எந்த அர்த்தங்களுமற்று தம் இருப்பிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன”.என்கிறார்.
கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி, போன்ற பல்லாண்டு காலம் எழுத்தால் அறியப்பட்ட கவிஞர்களின் வரிசையில் சக்திஜோதியைக் கொண்டு பொருத்தலாம் என்பது மேற்சொன்ன கவிதை நமக்கு கொடுக்கக் கூடிய மென் உணர்வு இழைகளாலான அனுபவத்தில் அர்த்தமாகிறது.
பெண்ணின் காதலும் அளவற்ற கொடையாக நிகழும் கலவியும் ஒருவனை”திரும்பவும் நீ நீயாகிவிடாத நிலையடைவாய்”என்னும் “தேன்” என்னும் கவிதை வரிகள் இதற்கு மேல் அடியெடுத்து வைக்கவியலாத கையறு நிலையை காமம் உடல்களற்ற வெளியில் ஏற்படுத்தும் என்ற பொதுமையை உடத்தெறிகிறது..
வலுக்கும் சாரல் தன் மேல் படரும் ஆண் வாசம் என நிலம் வெட்கத்துடன் மலர்வதாக சொல்லும் ஜோதி.., நிலமெங்கும் பாய்ந்தோடும் மழை நீர் நின்றதும் நிலம் தன் உடலை மூடிக்கொண்டு உட்கொண்ட மழை என்னும் பேராண்மையைப் பருகுவதாக சொல்லி..பிறகு மழையே தானாகிறாள் என சொல்லும் பொழுதுசங்க இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைத்த காதலின் மாயவித்தையை நம் கண்ணில் நிறுத்துகிறார் காட்சியாக்கி.
அலைந்து திரிகிற பறவை/ முத்தத்தை உதிர்க்கிறது/கனவெங்கும். நிலத்தை/அடையவியலாத முத்தம்/வெளியெங்கும்/உதிர்ந்து கிடக்கிறது/பின்னிரவின் நிலா
வெளிச்சமாய்.
அந்தரத்தில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒட்டிக்கொள்கின்றன, முத்தங்கள்.பின்னிரவின் நிலவொளியாய்.படிப்பவர் நெஞ்சில் கலவையான உணர்வுகளைக் கிளறிவிடக்கூடியதாகிறது.
கடலை அறிந்தவள் என்னும் இன்னொரு கவிதையில் “பேரிரைச்சலைத் தரும்/ அலைகள் கூட /பெருமௌனம் என்பதாகத்தான் /நம்பிக்கொண்டிருந்தேன் .மிக அமைதியான அதே சமயத்தில் மிக உறுதியான வரிகளல்லவா..?
கிளிபுராணம்..கவிதையில்..”கூடடையாத கிளிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பறந்து செல்கின்றன அகன்ற வானில”கிளிகள் சொல்வதை சொல்வதாகவும்,மீனாட்சியின் தோளிலும்,காமாட்சியின் கையிலும் பல நூறு வருடங்களாய் இருப்பதை பறைசாற்றுவதன் மூலமாக பெண்ணியத்தில் தனதான கருத்துக்களை எடுத்து வைக்கிறார் அமைதியாக.
“வீடு திரும்பி ஆடைகளை மாற்றிக் கொண்டிருக்கையில் மழையின் ருத்ரதாண்டவம் இன்னும் கூடியிருந்தது”.தன் மகளோடு மகளாகி மழையில் நனைந்துதான் மகளாயும் அவள் தானாகியும் மாறி குதித்து மழையை நுகர்ந்து முடித்த பின் வீடு திரும்பி விட்ட பிறகும் கவிமனம் மழையை உற்று நோக்குகிறது.அந்த மழையைஅளவெடுக்கிறது.அதனை ருத்ர தாண்டவமாய் காணுகிறது.
“ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது அன்பு. “கடத்தல் என்னும் கவிதையில் “ஒரு போதும் உணர்ந்த அன்பை சொற்களில் வெளிப்ப்டுத்த முடிந்ததில்லை”. என்கிற ஆதங்கம் தொனிக்கிறது.
.இந்த கடலோடு இசைத்தல் தொகுப்பில் இறுதியில் இடம்பெறக்கூடியது பெண்மை பற்றிய சில கவிதைகள், வண்ணமயமான உணர்வு களால்பெருக்கெடுக்கிறது.ஊதா நிறப்பயிர்கள்,நீலப்பூக்கள்,பசை நிற உலகம்,ஆரஞ்சு நிறக் காலைப்பொழுது வயலட் கனவுகள்,சிகப்பு தேவதை என நிறங்களின் தனித்த தன்மைகளின் வழியாக ஒரு கதானுபவத்தை நமக்குள் பதிய வைக்கிறது.
பொதுவாகவே சக்திஜோதி என்னும் இக்கவிஞர் பெரும்பாலும் உணார்வுகளின் நுண்ணிய தாக்குதல்களை எடுத்து வைக்கிறார். இவரது கவிதை உலகம் கண்டறிந்த அதிசயங்களை கருப்பொருளாக்க முனைவதே இல்லை எப்பொழுதும். அதீதமான சொல்லாடல்கள்,மொழியின் மாய இருள் நிறைந்த கவிதானுபவம் இவற்றுக்கெல்லாம் முயல்வதே இல்லை சக்திஜோதி… மாற்றாக மிகச் சாதாரணமான எல்லாருக்கும் அனேகமாக எளிதில் கைவரக்கூடிய சொற்களை எடுத்து கொண்டு, காலகாலமாய்க் கவிதைகளில் பலவாறும் கையாளப்பட்ட பொருள்/அனுபவம்/கற்பனை இவற்றையே தானும் தொடுகிறார். இது மிகச்சாதாரணம். ஆனால்…சக்தி ஜோதி, சாதாரணமான இயங்குவெளியை தேர்ந்தெடுத்து, அதை தனது பார்வையால் தனது அனுபவத்தால் அதீதமாக்கி விடுகிறார். இந்த அதீதமானது, அவரது மொழி மேதமையைக்காட்டப் பயன்படாமல், அடக்கி வாசிக்கிறது. செய்திகளாக நினைவில் தங்கிவிடுகிறது.
அவர் கடல்/நிலா/முத்தம்/கிளி/ என எதனை குறித்தாலும்…நமக்கு சக்திஜோதியுடைய கவிதைகளை படித்த பின் நம்முள் அவருடைய கடலும், நிலாவும், கிளியும் வந்து அமர்ந்து கொள்கின்றன. பிரத்யேகங்களான முத்தம், கலவி, காமம், ஊடல், தாபம் போன்றவற்றை பொது நிகழ்வுகளாக மாற்றிவிடும் சாதாரணங்களின் அசாதாரணக் கவிதைகள் சக்திஜோதியுடையது.
பெண் எனும் கவிதையில் இயற்கையை, நிலத்தை, காற்றை, ஒரு பெண்ணாக, அவைகள் போலத் தானும் குளிர்வதையும் வெப்பமுறுவதையும் அவற்றை சொல்ல உரிமை இல்லை எனவும் ஆதங்கப்பட்டும் கவிஞர்… பெற்றெடுக்கும் தாய்மைக்கு கொண்டாட உரிமை இல்லை எனச் சொல்லி பெண்ணியத்தின் சர்வநிச்சயக் குரலொன்றை முன்வைக்கிறார்.
“இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்.எனக்கென சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை”என முடித்தும் வைக்கிறார். சக்திஜோதியின் அக உலகம் இருள்களற்றது. எல்லா மாடங்களிலும் விளக்கேற்றிவைக்கிறார், தனது கவிதைகளால்.
………………………………….
காதலும் அதையொற்றி நுழையக்கூடிய ஊடலும் பன்னெடுங்காலமாக கவிப்பொதுப்பொருள்களாயின. காதல் என்பதைக் கையாள்வதில் உள்ள எளிமை கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கமாயி ருந்திருக்கக் கூடும்.ஆனால்,சக்திஜோதி காதலைஒரு சூத்திரமாக்குகிறார்.காதல் நிகழ்த்தக்கூடிய அகமாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனிக்கிக்கிறார்.காதலை உணர்ந்த பொழுது,காதல் நம்மை விழுங்கி தனக்கான இணக்கமாக மாற்றிவைக்கக் கூடிய இடர் எப்பொழுதும் உண்டு.ஆனால் காதல் என்ற ஒன்றை உட்கொள்ளும்அதே நேரத்தில் தன்னிலிருந்து தான் விலகி நின்று தன்னை நோக்கும் சக்தி ஜோதி,மிக அழகாக வித்யாசப் படுத்தி விடுகிறார்,தனது கவிதைகள் இயங்கும் மனங்களை.இது கைவரப்பெற்றதாலேயே,நிசப்தமாக காதலை அணுக முடிகிற ஜோதிக்கு,அதிர்வுகளற்று ஊடலையும் கையாள முடிகிறது.
எனக்கான ஆகாயம் என்னும் தனது சமீபத்திய தொகுப்பில் முன்னிரு தொகுப்புக்களை விடவும் இன்னும் பலமிகுந்த பிரயோகங்களால் நம்மை சந்திக்கிறார்.
காற்றில் மிதக்கும் துயரம் எனும் கவிதையில்”அன்பைப் பெற  காத்திருக்கையில்/மௌனத்தின் ஊடே/ கடந்து செல்கின்ற காற்றில் /மிதந்து கொண்டிருக்கிற காதல் /துயரமாக /கண்களில் வழிகிறது.என காத்திருத்தல் என்னும் கையறு நிலையை மிக அழகாக முன்வைக்கிறார்.
இரண்டு நிலா தெரியும் இரவுகளில்,கலவியின் நிறைவு தரக் கூடிய தனித்து விழித்தலின் அனுபவத்தை அந்த திறந்த விழிகளால் காட்சிப்படுத்துகிறார் ஜோதி. “நதியில் நீந்தும் மீன்களைப் போல/ நினைவுகளில் பயணிக்கிறது /ஒரு சொல்…………
………………….நீரின் ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்/கூடவே நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.”என்கிறார்
தருணம் என்னும் கவிதையில்.உடனுக்குடன் கூடு விட்டுக் கூடு பாய்வதைப் போல,எந்த ஒரு நேரடி அனுபவத்தையும் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே பன்முகம் கொண்டதாக விரித்து வைக்கும் ரசவாதியாய் தெரிகிறார் ஜோதி.
சமையலறை உலகிலிருந்து என்னும் கவிதையில் எல்லா விதத்திலும் ஒரு பெண் எங்கனம் தனது வீட்டிற்குள் இன்றைக்கும் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள்.என்பதை எடுத்து வைக்கும் சக்தி ஜோதி .தொலைபேசி/அலைபேசி/கேபிள்காரன்/விற்பனைப் ப்ரதிநிதி என அவளை சந்திக்கிறவர்களின் வாயிலாக இந்த கவிதை நிகழும் காலம் தற்காலம் என்பதை அழகுறப் பதிவு செய்தும் விடுகிறார்.
கணவனுக்குப் பிடித்த உணவை சமைக்கத் தொடங்கும் நவீன வசதிகளின் உடனிருப்பில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்ணை எடுத்துக்காட்டும் விதம் சப்தமின்றி வலிக்கும் சூட்சுமத்தை கையாள்கிறது.
நிலாக்காலம் எனும் கவிதையில்  நிலா வைக்காண இரண்டு வாரங்கள் கொந்தளிப்புடன் காத்திருந்ததாய் தொடங்கும் சக்தி ஜோதி நிலவு உறங்கப் பொன பிறகும் அதை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பொழுது,பொது நிகழ்வைத் தனித்ததாக்கி கவிதைப்படுத்துகிறார்.
சதுரங்கத்தை சொல்வதாக இரண்டு ராஜாக்கள் சுகித்திருக்க இரண்டு ராணிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்னும் கடைசி வரியில் அபிப்ராயங்கள் தேவையற்ற பெண்மொழியை முன்னெடுக்கிறார்.
வனத்தின் குரல் என்னும் ஒன்றில்”வனமெங்கும் அதன் வாசனை உன் அருகாமையை நினைவூட்டுகிறது” எனத் தனதான தனிமைக்குள் அவனை எளிதாய்வரவேற்று விடும் அவள் “மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நம்மை ஏளனம்செய்வது வனமெங்கும் ஒலிக்கிறது” என சொல்கையில அந்நிகழ்வு இருவரிடைப் பொது வாகிறது,அதனைப் பூர்த்தி செய்கையில்.
எனக்கான ஆகாயம் என்னும் கவிதையில் மழைக்காலத்தில் மழை தவறாமல் வந்து விடுவதை சொல்லும் சக்திஜோதி….நிலவற்ற வானம்/எனக்கு மேலே விரிந்திருந்தது………………………….இந்த மழைக்கால//வானம்/வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க/கிளையில் அமர்ந்திருக்கிறது/ஒரு பறவையென/என் காதல்…………………./நான் மிதந்து கடக்கிறேன்/எனக்கான வானத்தை.என மழையின் மேகங்களை அப்புறப்படுத்தி விட்டு தனக்கான ஆகாயத்தை மிதந்து கடக்கும் காதல்பறவையின் சிறகுகளைப் படபடக்க வைக்கிறார்.
முற்றத்தில் /வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கும் /அவள்/அவனுக்கான /வார்த்தைகளை /நதியில் மறைத்து வைக்கிறாள்./அதை விழுங்கிய மீன்களின் /வயிற்றில் /கல்லாய் உறைந்து கிடக்கின்றன.என்னும் கல்மீன் என்னும் கவிதை சக்திஜோதியின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று எனச் சொல்லலாம்.இதன் மொழிச்செழுமையும் நம்மை இந்த வரிகள் கொண்டு சென்று நிறுத்த கூடிய வெளியும் பரவசஉணர்வைத் தருகின்றன.
எதையும் கவிதையாக மாற்றிப் போடக்கூடிய வல்லமை சக்திஜோதியை பிறரிடமிருந்து அன்னியப்படுத்திக் காட்டுகிறது.மொழிவன்மையும்,இயங்கிக் கொண்டே இருக்கக் கூடிய அவஸ்த்தையுமே சக்திஜோதியின் கவிதைகளில் அழகியல் எந்த மிகையுமின்றித் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொள்வதை காண முடிகிறது. இதற்கு முன் என்னும் கவிதையில் /உண்மையில் உனது பிரிவும் சந்திப்பும் என்னுள் நிகழ்ந்திருக்கிறதா/என்னும் வரிகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி காற்றற்ற குளமொன்றின் ஒரே பழய அலையின் வட்டங்களை தக்கவைத்து
நிகழ்த்தக்கூடியதாய் இருக்கிறது.
“நீர்ப்பறவைகளின் பாதம் பட்டு கலைந்த பாசி மீண்டும் மூடிக் கொண்டது/குளத்தின் ஆழம் ஒரு போதும் தீர்ந்துவிடாத தாகத்தை தருகின்றது/”என்னும் குளத்து நீர் என்கிற கவிதையில் ப்ரம்மாண்டமாய் விரிகிறது கவிவெளி.
நிலவாகும் பறவை என்பதில்”பறவைகளற்ற கூண்டினைத் திறந்ததும் வெளியேறும் நிலவை பின்தொடர்கிறார் வழிதவறிய பறவையைப் போல.
மணல் இல்லாத ஆறு என்னும் கவிதையில்
“ஓலமிட்டு வருகிறது மஞ்சள் நில லாரிகள்…..வேம்புகள் இன்னும் சிறிது நேரத்தில் விழப் போகின்றன.லாரிகள் சுமக்கும் மணல்களில் சிறு நத்தைகள் சுருண்டு மடிகின்றன.”
பேரதிர்ச்சியை நமக்குள் வாரிவழங்கியபடி நமக்குள் மண் அள்ளும் லாரிகள் ஓட்டமெடுப்பது தான் இந்த கவிதையின் அலாதி.சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றுஆறுகள் மணலுக்காக மழிக்கப்படுவது.ஆனால்,இதை எதிர்காலச் சந்ததியின் ஏதோ ஒருவன் படிக்கும் பொழுது மணல் என்பது அருங்காட்சியகங்களில் எளிதில் காணக்கிடைக்கலாம் என்னும் அபத்தம் நம்மை புரட்டி அடிக்கிறது.
என் சிறுவயது நெற்றியினை அலங்கரித்தது வேங்கை மரப்பொட்டு/
என் குமரிப்பருவத்தை அழகுபடுத்தியது/என் மகளுக்குப் பொட்டிட மரம் தேடுகிறேன். வேங்கை இருந்த நிலம் என்னும் கவிதையின் இடைவரிகள் இவை.
கவிதைகளுக்குள் ஒரு மாபெரிய நாவலை அலட்சியமாகக் கடந்து செல்வது இங்கு இயல்பாய் நிகழ்கிறது. சக்திஜோதியின் தரிசனம் வியக்க வைப்பதாயிருக்கிறது.அடைப்புக்குள் அடங்கக் கூடிய முடிவான கவிதைகள் இவருடையது.பொதுவாக முடிவுற்ற கவிதைகளை படிக்கையில் சாதியமாவது,அது தரும் நேரடி அனுபவம் மட்டுமே.வாசிப்பவனது மனதில் பலகாலம் அது இயங்கிக்கொண்டிருப்பதில்லை.நேரடி அனுபவங்கள் மனதில் அறைபவை மட்டுமே எப்பொழுதும் நீடிக்கும்.ஆனால்..சக்திஜோதி இந்த மரபை உடைக்கிறார்.முடிவுற்ற கவிதைகளை அவர் தன் வசப்படுத்திக்கொண்டு,தான் எழுதியவற்றை முன்வைக்கிறார்.
அனாயாசமாக .பெண்ணியம்,காதல்,இயற்கை,பழமையைப் போற்றுதல், காலம் மனிதனை விழுங்குதல்,சொந்தத் தனிமை, ஊடல்,கானகம், மனசுக்குள் இயங்கக் கூடிய மௌனம்,மாற்றங்களின் அபத்தம்,பிற உயிரினங்களின் மீதான கரிசனம்,சொல்லிலடங்காப் பேரன்பு,
காமம்,கலவி,சார்ந்திருத்தல்,தனித்தியங்குதல்,இன்னும் இன்னும்…..
அவிழ்க்கப்பட்ட பெண் மனம் ஒன்றை மிக அருகாமையில் சந்திக்க முடிகிறது சக்திஜோதி யின் கவிதைகளில். உள்ளுணர்வையும், மொழியறிவையும் கலந்து பிசைந்தால்,கவிதை நெய்யலாம் என்ற கூற்றுக்கான உச்ச பட்ச சாத்தியம் எளிதில் தொட முடியாதது.அதன் ஆரம்பச்சுவர்களைத் தகர்த்தெறிகின்றன…. சக்திஜோதியின் கவிதைகள்.
 
 
 
 

சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள்

 மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்திய
ஆறு கவிதை நூல்கள் – விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.
 இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற அளவுக்குக் கவிதை பற்றிய விவாதங்களோ உரையாடல்களோ நடைபெறுவதில்லை. பத்திரிகைகளிலும் இதே நெருக்கடியைப் பார்க்கலாம். ஒரு கவிதைத் தொகுதிக்குப் பொருட்படுத்தத் தகுந்த மதிப்புரையோ ஒரு கவிஞரின் படைப்புப் பற்றிய விரிவான திறனாய்வோ வெளியாகும் வாய்ப்புக் குறைவு. கவிதையியல் பொறியில் சிக்கிக் கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் இந்த உரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருகிறேன். இதில் என்னைப் பங்கேற்கத் தூண்டிய நண்பர்கள் ‘காலச்சுவடு’ கண்ணன், கவிஞர்கள் சக்திஜோதி, செந்தி மூவருக்கும் நன்றி.
இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஆறு கவிதை நூல்களில் சக்திஜோதியின் ‘எனக்கான ஆகாயம்’ தொகுப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன். இது சக்திஜோதியின் மூன்றாவது தொகுப்பு.இதற்கு முன்பு அவருடைய முதல் தொகுப்பான ‘நிலம்புகும் சொற்க’ளை வாசித்திருக்கிறேன். பொருட்படுத்தப்பட வேண்டிய கவிஞர் என்ற எண்ணத்தை அந்தத் தொகுப்பு எனக்குத் தந்தது. இந்த நிகழ்ச்சியையொட்டி சக்திஜோதியின் எல்லாத் தொகுப்புகளையும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் பேசவேண்டியது அவருடைய மூன்றாவது தொகுப்பை முன்வைத்துத்தான்.
இருந்தாலும் அவருடைய இதுவரையான எல்லாக் கவிதைகளையும் ஒருசேர வாசித்தபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு இதை விடப் பொருத்தமான சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது.
சக்திஜோதியின் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெறும் கவிதைகள் பெரும்பான்மையும் ஒரே இயல்பைக் கொண்டிருப்பவை. முதல் தொகுப்பான ‘நிலம் புகும் சொற்களில்’ இடம் பெறும் ‘காதல் வழி’ என்ற கவிதையையும் மூன்றாம் தொகுப்பான ‘எனக்கான ஆகாயத்’தில் இடம் பெறும் ‘தருணம்’ என்ற கவிதையையும் எளிதாக ஒப்பிட முடியும்.
ஆற்றின் கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்
வெள்ளம் என்மீது
புரண்டோடுகின்றது
தொண்டை வறண்டு
தாகத்தில் தவிக்கின்றேன்
கால்கள்
நீரில் மிதக்கின்றன
ஆற்றின் போக்கை
எதிர்க்க
இயலாமல்
மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது
இனி
நானும்
என்னிடமிருந்து
நீரும்.
இதன் இன்னொரு சாயலை ‘தருணம்’ என்ற இந்தக் கவிதையில் பார்க்கலாம்.
கிளர்ந்தெழும் நினைவுகளின்
சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நினைவுகளில் பயணிக்கிறது
ஒரு சொல்
அருகாமை நறுமணம்
உணவுப் பொருட்கள்
உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது.
குளத்துத் தாமரைக் கொடிகளில்
சிக்கி மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்
வந்தடையும் சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி
வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது
முழுதாய் விடுபடத் துடிக்கிறது
உன் நினைவு
தாமரை இலைமேல்
படர்கிறது
ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.
ஒரே மனதின் இரு வேறு நிலைகளைச் சொல்பவை இரு கவிதைகளும்.
‘காதல்வழி’ என்ற முதல் கவிதையில் நினைவுகளின் வசப்படும் நிலை. ‘தருணம்’ கவிதையில் நினைவுகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் நிலை. தனிக் கவிதைகளில் அல்லாமல் மூன்று தொகுப்புகளிலும் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார் சக்திஜோதி. இது அவருடைய கவிதை இயல்பாகத் தோன்றுகிறது. இந்த இயல்பில் ஒரு தீர்மானமும் முறைமையும் தென்படுகின்றன. இந்த முறைமை சார்ந்தே அவருடைய கவிதைத் தொகுப்புகள் உருவாக்கப் படுவதாகவும் தோன்றுகிறது.
இந்த முறைப்படுத்தலின் இன்னொரு அம்சம் தொகுப்புகளுக்கு எழுதப் பட்டிருக்கும் முன்னுரைகள். தமிழில் முன்னோடிகளான மூன்று எழுத்தாளர்களின் முன்னுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், கல்யாண்ஜி. இப்படி அமைந்திருப்பது தற்செயலாகவும் இருக்கலாம். கல்யாண்ஜியின் முதன்மையான வெளிப்பாட்டு ஊடகங்களில் கவிதையும் ஒன்று. மற்ற இருவரும் கவிதை யிலும் கைவரிசை காட்டியிருப்பவர்கள். இப்படியான பொருத்தமும் தற்செயலானதாக இருக்கலாம். இந்த மூன்று தொகுப்புகளின் தலைப்புகளிலும் ஒரு தேர்வும் தீர்மானமும் தெரிகின்றன. நிலம் புகும் சொற்கள், கடலோடு இசைத்தல், எனக்கான ஆகாயம். ஐம்பூதங்களில் மூன்றைத் தொகுப்புகளில் பிரதிநிதித்துவப்படுத்துவது தற்செயலானதல்ல என்பது என் ஊகம். இந்தத் தலைப்புகளையொட்டி யோசிக்கும்போது முன்னுரையாளர்களின் வரிசை கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடலுக்குப் பிரபஞ்சனையும் நிலத்துக்கு நாஞ்சில் நாடனையும் ஆகாயத்துக்கு கல்யாண்ஜியையும் முன்னுரையாளர்களாக ஆக்கியிருக்கலாம். கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும். அதனாலென்ன? இன்னும் இரண்டு பூதங்களுக்கான தொகுப்புகள் மிச்சமிருக்கின்றன. யார் யார் காற்றையும் தீயையும் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்ற வாசகக் குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன். இல்லை இவை யெல்லாம் தற்செயலாக ஏற்பட்டவை என்று சக்திஜோதி சொல்வாரானால் அடுத்த தொகுப்பின்போது என்னுடைய அவதானிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
மூன்று தொகுப்புகளையும் ஒருமித்து வாசித்தபோது கவனித்த இன்னொரு அம்சம் என்னை மிகவும் வியப்படையச் செய்தது. மூன்று தொகுப்புகளும் ஒருவருக்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இது தற்செயலானதல்ல; தீர்மானமானது. இந்தத் தீர்மானத்தின் வெவ்வேறு சாயல்களில்தான் சக்திஜோதியின் கவிதைகள் உருவாகின்றன. சமர்ப்பணத்தில் தென்படும் அளப்பரிய காதலைத் தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. இந்தத் தொகுப்பின் தன்னுரையில் அவரே அதை ஒப்புக்கொண்டுமிருக்கிறார். ‘காதலும் பிரிவும் அதுசார்ந்த காட்சிகளும் நிரந்தரமாக எனது கவிதைகளின் அடையாளமாகி விட்டன. சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். ஓர் நபரின் மீதான காதல் மட்டுமல்ல; பிற உறவுகளின் மீதான காதல்,இயற்கை மீதான காதல் என்று இந்தக் கவிதைகள் வெவ்வேறு உருக் கொள்கின்றன. என்னைப் போன்ற ஒரு சந்தேகப் பேர்வழிக்கு இந்த உலகத்தில் அத்தனை காதல் சாத்தியமா? என்ற கேள்வி எழுவது சகஜம். ஆனால் காதலாகிக் கசியும் இந்த மனநிலையையே கவிதையின் இயல்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார் சக்திஜோதி. தமிழில் எழுதும் பிற பெண் கவிஞர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும் அம்சம் இது.
தமிழில் வாசக கவனத்தைப் பெற எளிய வழி காதலை முன்வைத்து – உருக்கமான சரியாகச் சொல்வதென்றால் அசட்டுத்தனமான கவிதைகளைத் தயாரிப்பதுதான். இது ஆண் வழி. பெண்ணை வியந்து பரவசப்பட்டு அவளைக் கொண்டாடும் கவிதைகள். அல்லது காதலியின் வஞ்கத்தைச் சொல்லிப் புலம்பும் கவிதைகள். இவை ஆண்களின் பங்களிப்பு. மாறாக ‘என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று இறைஞ்சும் அல்லது ‘என் காதலுக்கு நீ தகுதியானவனல்லன்’ என்று குற்றம் சாட்டும் பெண் வழிக் கவிதைகள். எடுத்துக் காட்டுகள் தராமலே உங்களுக்கு விளங்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தேய்வழக்கிலிருந்து தப்பியவை சக்திஜோதியின் கவிதைகள். இவை காதலைப் பற்றிய கவிதைகளல்ல . காதலிலிருந்து உருவான கவிதைகள். காதலைப் பெண்ணும் ஆணும் பார்க்கும் பார்வையிலேயே வேறுபாடு இருக்கிறது. பெண்ணுக்கு அது வாழ்க்கை. ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி. அதனாலேயே சக்திஜோதியின் கவிதைகள் பெரிதும் காதலைச் சார்ந்து இருக்கின்றன என்று கருதுகிறேன்.
சக்திஜோதியின் கவிதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதிய மூன்று பேரும் அவரது கவிதைகளில் சங்க இலக்கியச் சுவடுகள்
தென்படுவதாகத் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைக் கவிஞரும் ஏற்பளிப்புச் செய்திருக்கிறார். வெள்ளிவீதியாரின் சந்ததி என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். இந்த உரிமை பாராட்டலை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சங்கக் கவிதைகளில் இடம் பெறும் மாந்தர்களில் தீவினையாளர்களே இல்லை. தலைவனோ தலைவியோ தோழியோ தோழனோ தாயோ செவிலியோ யாரும் காதலுக்குத் தடை விதிப்பவர் களல்லர். சமூகப் பழக்கங்களும் இருத்தலின் தேவைகளும்தான் தடையாக அமைபவை. சக்திஜோதியின் கவிதைகளிலும் காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரிவுகள்தாம் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. காதலில் நேரும் பிரிவு, தனிமை, விரகம் இவைதாம் இந்தத் தொகுதிக் கவிதைகளின் பாடு பொருட்களாக அமைகின்றன. பெரும்பாலும் பெண் நிலையிலிருந்தே இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன. விதிவிலக்கான ஒரு கவிதை ‘தீபங்களின் நடுவே’. பெண் மீதான ஆணின் தவிப்பைச் சொல்கிறது. சமயங்களில் பெண்ணுக்கே தன்னுடைய நிலை மீது சந்தேகம் வந்து விடுகிறது. ‘இதற்கு முன்’ கவிதை அதை வெளிக்காட்டுகிறது. (பக் 51) இன்னொரு கோணத்திலும் சக்திஜோதியின் கவிதைகள் சங்கக் கவிதைகளின் சாயலைக் கொண்டிருக்கின்றன. சங்கக் கவிதைகளில் வெளியில் உள்ள இயற்கைச் சித்தரிப்பு அகத்தையே வெளிப்படுத்துகிறது. நதி.நிலவு, வானம், பறவை, வனம்,சாலைகள்,மழை, மலை, காற்று என்று எல்லாப் புறப் பொருட்களும் இந்தக் கவிதைகளில் அகத்தின் மாற்றுப் பொருட்களாகின்றன. ‘அரும்புகள் மலரும் பருவம்’ பக் 54 . பொழுதுகளும் காதலுக்கானவையாக மாற்ற மடைகின்றன.’எனது இரவும் பகலும் / ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது’ என்றும் ‘அவன் / என்னிலிருந்து நீங்கிச் செல்லும்/ ஒவ்வொரு விடியலும்/ துயரம் மிக்கதாகவே புலர்கிறது’ என்றும்
காதலனை முன்வைத்தே பொழுதுகளும் அமைகின்றன. காதலனுடனான இருப்பு. அதில் நேரும் பிரிவு, அது தரும் வேதனை இவையே இந்தத் தொகுப்புக் கவிதைகளின் மையம். பிரிவால் கொள்ளும் ஊடல் கூட காதலுக்கு ஊறு விளைவிக்கும் என்ற பெருந்தன்மையான நிலைப்பாட்டை இந்தக் கவிதை களினிடையில் காண முடிந்தது. சங்க காலக் கவிஞர்களிடமிருந்து சக்திஜோதி முன்னோக்கிச் செல்லும் தருணம் இது.
பெண்ணுரிமைப் பரப்புநர்கள் போற்றவும் தூற்றவுமான இரண்டு கவிதைகள் தொகுப்பில் அடுத்தடுத்து உள்ளன. பெண்ணின் இயல்புகளைப் பறித்துக் கொண்டவர்களுக்கிடையிலிருந்து அவள் மீண்டு எழும் செயலைச் சொல்கிறது இந்தக் கவிதை. பக் – 33.அதே கவிதையின் மறுபக்கம் ஆணின் நேசத்தில் பெண் தன்னை முற்றிலும் இழப்பதை ‘பரிமாணம்’ பக் – 34 பேசுகிறது. இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது எதிர்மறையாகத் தோன்றும் கவிதைகளையும் சக்திஜோதி எழுதியிருக்கிறார். குறுகிய பரப்புக்குள் வாழ விதிக்கப்பட்ட பெண்ணின் குமுறலைச் சொல்லும் கவிதை ‘சமையலறை உலகிலிருந்து’ வெளிப்படுகிறது. பக் – 30. இந்தக் கவிதையும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. தனது இருப்பை எந்த விமர்சனமும் புகாருமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்நிலையை முன்வைக்கிறது. இவ்வளவு அமைதியானதா காதலின் உலகம்? ‘ஆம், என்பது சக்திஜோதியின் ஒப்புதலாக இருக்கிறது. அதை நிறுவுவதற்கான விரிவான சான்றுகள் அவருடைய கவிதைகள். நிகழ் உண்மைகளின் நகலெடுப்பல்ல படைப்பு. அதுவாய்த்த உண்மைகளைச் சார்ந்து உருவாகும் மாற்று உலகம். இந்த நோக்கில் சக்திஜோதியின் கவிதைகள் ஓர் மரபின், அதுவும் மேன்மையானது என்று கொண்டாடப்பட்ட ஓர் மரபின் அடிப்படைக் கூறுகளிலிருந்து சமகால உணர்வுடன் ஒரு மாற்று உலகை உருவாக்குகிறார். கவிதை எப்போதும் சமகாலத்தின் துடிப்புகளைக் கொண்டிருப்பது. நிகழ்காலத்திலிருந்தே கடந்த காலத்தைப் பரிசீலனை செய்கிறது. சக்திஜோதியின் கவிதைகள் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்தைப் பார்க்க முற்படுகின்றனவா என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நினைவுகளை மீட்கும் முயற்சிகள் இந்தக் கவிதைகள். கடந்து போன வாழ்வின் கணங்களை மீட்கும் ஆசை இந்தக் கவிதைகளில் தென்படுகிறது. ’முடிந்த கதைகள்’, ’தோழி ஒருத்தியின் குரல்’, ‘வேங்கை இருந்த நிலம்’ ஆகியவை இந்த ஆசையின் உதாரணங்கள். முதலிரண்டு கவிதைகளும் தனி மனித உணர்வோட்டமாக நின்று விட மூன்றாவது கவிதை இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நேரும் நவீன அத்துமீறலைச் சொல்கிறது.
சக்திஜோதியின் கவிதைகளை வாசித்துப் பெற்ற நெகிழ்வான மனநிலையில் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். மலையாளக்கவிஞரான ஜெயதேவன். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ஆரம்ப வகுப்புகள்தாம் வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு அதன்படியே சிறு குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர். மிகவும் மென்மையானவர். பள்ளிப் பிள்ளை களிடம் மாளாத அன்பு கொண்டவர். அந்த அன்பு அவர் பேச்சிலும் செய்கைகளிலும் தெரியும்.ஓர் ஆள் இப்படி அன்பின் அவதாரமாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியப் பணியில் ஒரு முறை கூடப் பிள்ளைகளை  அடித்ததில்லை. அடிப்பது என்ன? குரலை உயர்த்தி மிரட்டியது கூட இல்லை. நான் பணியாற்றிய பதிப்பகத்தின் வாயிலாக அவருடைய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட் டேன்.அந்த வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் ஜெயதேவனின் கவிதைகளைப் பற்றிப் பேசியதற்கு இணையாக அவரது நல்லியல்புகளைப் பற்றியும் பேசினார்கள். மலையா ளத்தின் முக்கிய எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட எல்லாப் பேச்சாளர்களும் கவிதையும் கவிஞரும் ஒன்று என்ற தோரணையில்தான் பேசினார்கள். அன்று அந்தப் பேச்சுகளும் ஜெயதேவனின் செய்கைகளும் கொஞ்சம் செயற்கை யானவயோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் கவிஞருடன் உருவான நெருக்கம் அந்த சந்தேகத்தைப் போக்கியது. அவர் மட்டுமல்ல அவருடைய மனைவியும் ஏழு வயது மகளும் கூட அன்பின் தூதுவர்களாகவே இருந்தார்கள். நேசத்தின் சிறகுகளை தங்கள் உடுப்புகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடு கிறார்கள் என்று கூடத் தோன்றியது. ஆனால் அது அவர்களின் இயல்பு. அவர் கவிதைகளும் அந்த இயல்பிலிருந்தே பிறந்தவை. ஜெயதேவனிடம் பின்னர் கேட்டுமிருக்கிறேன்:‘ பூமியில் இவ்வளவு அன்பு சாத்தியமா? அதை மட்டுமே எழுதிக் கொண்டி ருக்கவும் வேண்டுமா?’ . அவருடைய இயல்பைப் பற்றிச் சொல்லி யிருப்பதனால் அவருடைய பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் ஊகிக்க முடியும்.
காதல் மேலான மானுட உணர்வு. அது நெருக்கமும் பிரிவும் பிரிவின் வேதனையும் மட்டும்தானா? அதில் ஒளிந்து கிடக்கும் தவிர்க்க முடியாத வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகள் அல்லவா? காலமும் இடமும் காதலால்தான் வரையறுக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளை சக்திஜோதியிடமும் கேட்கலாம். அதற்கான பதில்கள்தான் தனது கவிதைகள் என்று அவர் சொல்லக் கூடும். காதல் என்ற உணர்வுக்காகத் தனி நூலே தொகுக்கப்பட்டிருக்கும் மொழியில் அவர் அப்படிச் சொல்வது இயல்பானதாகவும் இருக்கக் கூடும்.

கடலோடு இசைத்தல் – கவிதை தொகுப்பு


வாழ்வின் கவிதைக் குரல்எஸ் . செந்தில் குமார்
தமிழின் நவீன  கவிதை  தன்னுடன் வாசிப்பதற்கு எப்போதும் இணையான மற்றொரு கவிதையின்
அடையாளத்தைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக வசிப்பவர்கள் இந்த  அடையாளத்தை
எளிதில் கண்டடைந்திடலாம் . இணைபிரதி என்கிற parallel text  ஐ     மனதில் வைத்துக்கொண்டு எந்தவொரு கவிஞனும்   கவிதை எழுதுவதில்லை.தட்டையான அர்த்தத்தைத் தரக்௬டிய  கவிதையின் காலத்தை வாசகர்களும்எழுத்தாளர்களும் வெற்றிகரமாக முடித்து விட்டார்கள். நவீன கவிதை ஒன்றுக்கு மேற்பட்டபல அர்த்தங்களை  தரக்௬டியதாகவும்      அதே  சமயம் ஓரே   அர்த்தத்தை தரக்௬டியதாகவும்     அமைந்து விடுவது கணித விளையாட்டு அல்ல, என்பதை நவீன  வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். வாழ்வின்நெருக்கடிகள் , போதாமைகள் ,நிராகரிப்புகள் மேலும் மேலும எழுத்தையும் எழுத்தாளனையும் உருவாக்குகிறது. நிச்சயமாகச் சொல்லலாம், வாழ்வின் நெருக்கடிகளே கவிதையின் அதன் மொழியின் அதன் வடிவத்தின் தன்மையைத்   தீர்மானிக்கிறது .சிறுகதை உள்ளிட்ட உரை நடைகளில் நிச்சயமாக துணை  பிரதி ஒன்றை வாசிக்கும் போது கண்டடைய முடியாது.பல சிக்கல்களை  அதே நேரம்  பல அர்த்தங்களை  உருவாக்கும்  வாழ்க்கையின் நிழலைப் போல தான் கவிதையும்,அதன் வடிவமும் ஓன்று சொல்லத் தோன்றுகிறது.
                                  தமிழின் நவீன கவிதையில்  சக்திஜோதியின் ‘கடலோடு இசைத்தல்’ என்கிறத்  தொகுப்பு அதன் மொழியாகவும், கச்சிதமான வடிவத்திற்காகவும் உண்மையான அனுபவத்தை நேர்மையாகவும்,உயர்த்தியும் தாழ்த்தியும் பேசாது கவிதை என்கிற மெல்லிய குரலிலேயே எழுதியிருப்பது  அதிசய மனதாகும்.
                 மலையும் அதன் கீழ்  பறந்து கிடக்கும் வயல்வெளி  நிலமும் இக்கவிதைகளின் பின்னனிகளாகவும்,கவிதை அர்த்தங்கொள்ள உதவும்  வண்ணங்களாகவும்  அமைந்துவிடுகின்றன.நவீன கவிதையின்   தனிமை,தனித்த அறை உள்ளிட்ட படிமங்கள்  காலவதியாகிவிட்டது.தற்போது சிறுகதையில் இந்த படிமம் விரிவாக விவரிக்கப்பட்டு எழுதப்படுகிறது என்பதை  குறிப்பிட வேண்டும் மலை கிராமத்ததின்  வாழ்வும் அந்நிலத்தின் வாழும்  பெண்ணின் குரலும் கவிதையாக்கப்பட்டிருக்கிறது என்ற தட்டையான அர்த்தம் இக்கவிதைகளைப்  பரீசிலிக்கப் போதுமானதாக இல்லை.மனம், உடல்,சிந்தனை ,ஆகியவற்றின் மீதான அடக்குமுறையை எதிர்த்து இக்கவிதையின் மெல்லிய அச்சம் மிகுந்த குரல் ஒழித்துக் கொண்டேயிருக்கிறது.ஆனந்தம் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு அது தான் இவ்வளவு சுதந்திரத்தைத் தருகிறதா என்று முடியும் கவிதை(பக்கம் -20 ).
                     கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் உள்ளது. இதே சுதந்திரம் என்ற சொல் அர்த்தம் தரும் கவிதையொன்று கிளிபுராணம் என்ற தலைப்பில் உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளாய் கூட்டினை அடையாத கிளிகள் பறந்து செல்கின்றன.
அகன்ற வானில் என்று முடிகிறது பறத்தல் என்பது வானம்  என்பாதும், கவிதையில் அடங்குதல் அடக்கம் ஒடுக்குமுறை ஆகியவற்றின் எதிரான படிமமாகத்தான் வாசிக்கும் போது உருவாகிறது. கவிதையில் வானத்தை வானமாக மட்டும் வசிக்கும் சூழல்  நவீன  கவிதைக்கு எதிரானதாகும் .
       சுதந்திரத்தைப்பற்றிய  மனவோட்டம் மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருப்பது போல ,இக்கவிதைகளில்  சில பிரிவும்  அது தரும் துயரம் கவித்துவமான வார்த்தைகளால்  எழுதிச் செல்லப்பட்டிருக்கின்றன .பக்கம் 36 காதலின் மெளனம் என்கிற கவிதை ‘புறாக்கள் கூடடையும் சப்தம் சொல்லத்தூண்டுகிறது பிரிவின் வேதனையை ‘என்ற மூன்று  வாக்கியம்  மனதில் நீங்காத  சித்திரத்தையும் ஒருவரிடமிருந்து பிரிந்து செல்லும் துயரத்தைப் படிமமாகச் சொல்கிறது . இவ்வேதனை உச்சமாகி ,ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து  செல்கிறது  .அன்பு  என்று பக்கம் -46-47 ல் உள்ள கடத்தல் என்ற தலைப்பிலான கவிதையின் கடைசி வரிகளாக இடம் பெற்றுள்ளது பிரிவு என்பது வேதனையானது  அதை விட பிரிவை நினைவு கூறும் தருணம்.இத்தொகுப்பில்  பக்கம் -60 ல் ‘ஆசிர்வதிக்கப்படட மாலைப்பொழுது’என்கிற கவிதை முழுக்க பிரிவின் துயரத்தைத் தான் நம்முன் சித்திரப்படுத்த விரும்புகிறது .நேர்த்தியான ஒளிப்பதிவாளர் பதிவு செய்யும் காட்சிக்கும் அதற்கு உவந்த இசையும் இணையும் போது பார்வையாளகள் மனதில் எழுசிக்கொள்ளும் அனுபவமே  இக்கவிதையை வாசிக்கும் பொழுது  ஏற்ப்பட்டது.
                     இக்கவிதைத்தொகுப்பில்  இரண்டு கவிதைகள்  விசித்திரமான கதையிடல்  தன்மையை வடிவரீதியாகவும்,கருத்துரீதியாகவும்  அமைத்திவிட்டது .தேன் என்கிற கவிதையின் தொடக்கம் அற்புத எதார்த்த மொழியில் அமைந்துவிட்டது (பக்கம் -18 ) .’அவள் தான் நீள் கூந்தலில்  பூலெனச்  சூடியிருக்கிறாள்  நிலவை . நிலவருகேச்  செல்வாயெனில் கூந்தலில் சூடியுள்ள  நிலமலர்களை   வீசியெறிவாள்  உன்னை நோக்கி.பிறகு நீ அதிலிருந்து கசியும் தேனை பருகுவாயெனில்  முதல் துளி அவளது காதலானாக்கும் ,இரண்டாவது  துளி அவளுடன்   கைகோர்த்து உலவச்செய்யும்  மூன்றாவது துளி அவளின் பூங்காவில் ஆலிங்கனத்தில் மயங்கி  முத்தமிடுவாய் .இக்கவிதைவரிகள் கதையின் தொடக்கமாகவும்,கதையின் குணமாகவும் அமைந்திருக்கிறது .மாலதி மைத்தி, ராணிதிலக் ஆகியோருக்குப்பிறகு கவிதையின் முக்கிய குணங்களில்  நன்றாக அற்புத எதார்த்தத்தை tools ஆக பயன்படுத்தியிருப்பது  சக்திஜோதி மட்டுமே . உடல்களையும் ,அதன் பயன் சார்ந்த வெளிபாடுகளையும்  அரசியலாக்கி எழுதுவதும் ,எழுதியதையெல்லாம்  கவிதையாக்கம் செய்வதும் நவீன கூறுகளில் ஒன்றாகயிருக்கும்   இச்சூழலில் இயற்கையை பாடுபொருளாக்கியிருப்பது  கவணிக்கவேண்டியது.
                                 அதே  போல பக்கம் -74 ல் இத்தொகுப்பில் நீள்  கவிதையான ,பெண்மைப்பற்றிய சில கவிதைகள் பெண்மையின் ஏழு பருவங்களையும் ,அந்த பருவத்தை நிலக்காட்சியோடு கூறும் முறையும் பரிசோதனையை மீறி சிறப்பாக  அமைந்துள்ளது .Nearly Story என்று கூட இக்கவிதையைச் சொல்லலாம் .மாலதி மைத்ரியின் இரும்பு தொப்பி கவிதை வடிவம் போல கதையாகச் கூறிச்செல்லும்  முறை வெற்றியாக அமைந்துள்ளது .பெண் குழந்தை பிறந்து ,வளர்ந்து ,வெற்றிகரமான   வாழ்வையும் ,அதிகாரமையத்தையும்  அடையும் வரை கவிதை  கதைச் கூறிச்செல்கிறது.சீனா ,ஜப்பான் ,இந்தோனேசியா ,ஆகிய  நாட்டு  மக்களின் கனவில் சிவப்பு நிறம் தெரிந்தால் நல்ல சகுணம் என்றும் அது வெற்றி அடையாளம் என்றும் ,பெருபான்மையோர்  கருதுகின்றனர்.இக்கவிதையில்  ஏழாவது பருவத்தில்  அவர்கள் முட்டையின் சிவப்பு சாயமிட்டு பரிசளிக்கும்  கனவைக் காணத் தொடங்கவுள்ளனர்,என்ற முதன்பாடாகவும்,அதே நேரம் உலக பொதுவும்சமாகவும்  இருக்கிறது .எல்லோருக்குமான கனவு  என்பது குறிப்பிட்ட இனக்குழுவின்   கனவு  என்பது  வேறுவேறாகவே   இதுவரை  வாசிக்கப்பட்டுள்ளது .ஏழுநிறங்களின் ஏழு காலங்களையும்,அக்காலத்தினுடாகப் பயணிக்கும் பெண்ணின் பள்ளிப்பருவம், காதல் ,நட்பு , மனவாழ்க்கை, சிற்றின்ப   இயலாமை ,பொருளாதார  நெருக்கடி  என்று இக்கவிதை முயற்சிப்பதும்  சாத்தியமாகியிருக்கிறது  பக்கம் 30 ல் .அதே போல கிளி புராணம் என்ற கவிதையும் பெண்ணின்  பொதுவான வாழ்வாதாரங்களை மையமிட்டே பாடிச்செல்கிறது .பல   ஆயிரம் ஆண்டுகளாய்  கூட்டினை அடையாத கிளிகள் பறந்து செல்கின்றன  அகன்ற வானில் ,என்ற கவிதை ஒடுக்கப்படுவதால் என்பதற்கு  எதிரான கவிதையாக இருந்த போதிலும்  கவிதையும் அதன் நோக்கமும் ,பெண்   வரலாற்றை  மையமிட்டதாகவே உள்ளது
                                               தொகுப்பில் கடல் என்பது ஆழ்மனதிலிருந்து  வெளியேறும்  சொல்லாகவும் ,அகச்சிக்கலை தீவுக்கொள்ளத்தவிக்கும்  வடிவமாகவும்  உள்ளது. ‘கடல் ஒரு தேவதை என்றேன்’ என்ற சொல் கடல் வெளியே அதன் மொத்த பிரதேசத்தையும்  உள்வாங்கி திரும்பவும் ,பதிலீடாக ஒரு சொல்லாக உருமாறிச்சொல்லுவது அதன் போல கடற்கரை,கடல்சிப்பி ,தோனி, கடற்கரை பௌர்ணமி  என்று தனித்தனி அழகியில் கூறுங்கள்  இங்கு படித்துச்செல்வதில் சிக்கலாகி ‘தேவதை’என்று முடிந்திருக்கிறது  . மனதிலிருக்கும்   சிக்கலை கழற்றிக்கொள்ளத் தேவைப்படும்  பாதுகாப்பும் ,தொலைத்தல் ,சுயம்  இழத்தல் போன்ற கூறுகளோடு  ,இதனை பொருத்திப்பார்க்க  வேண்டும் .கடல் தப்பித்தல் என்று பிரம்மராஜன்  தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.சக்திஜோதி தனது ஆறு கவிதைகளில்  ,கடல் பழமை ,கடல் நீலம் அது ,ஆழ்கடல் மௌனம்  வெளிப்படுத்தாத  காமத்திற்கு நிகராணது.கடல் என்பது  பிரபஞ்சத்தின்   ஓசைகளை உள்வாங்கிய நிலம் என்று சொல்லும் சக்திஜோதி ‘முரண்’ கவிதையில் கடல் என்பது வாழ்வும்  தத்துவமும் ,வாழ்வும் கவிதையும் ,வாழ்வும் பேரின்பமும்  சந்திக்கும் புள்ளி  என்பது போல எழுதிருக்கிறார் . அக்கவிதை கடலின் மீன்களைச் சேகரித்துக் கூடையில் சுமந்து செல்கிறாள் ஒருத்தி .ஒருவன் கரையொதுங்கிய நட்சத்திர மீன்களை திரும்பக்கடலில்  எறிந்து கொண்டிருந்தான்.
எஸ் .செந்தில் குமார் 
3 /4 ,பட்டிணத்தார்சந்து ,பரமசிவன் கோவில் வீதி,போடிநாய்க்கனுர்
cell-9994284031

கவிஞர் சக்திஜோதியின் கவிதைகளின் பெண்ணியம்

 
சி.ஆர்.மஞ்சுளா,
 தமிழ் விரிவுரையாளர்,
 இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  படூர்
 பழங்காலச் சமுதாயத்தில் ‘குடும்பம்’என்ற அமைப்பு காணப்படவில்லை.அன்று பெண் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறாள்.
ஆனால் இடைக்காலத்தில் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்  இன்றும் அதிலிருந்து விடுபட  தனக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். அதற்கான அவளின் முயற்சி கவிதையாகவும்  உருப்பெற்றது. ‘இலக்கிய  வீதி ‘   என்ற அமைப்பு தமிழகத்திலேயே  முதன்முதலாக பெண்  கவிஞர்களின் கவிதை நூலைத்  தொகுத்துத்  தரும் முயற்சியில் ஈடுபட்டது  இங்குக் குறிப்பிடத்தக்கது. இனி கவிஞர் சக்திஜோதியின்  படைப்புகளில்  காணப்படும் பெண்ணியப்போக்கு ஆய்விற்கு  உட்படுத்தப்படுகிறது.
 அறிமுகம்

           ஜோதி என்ற இயற்பெயருடைய  பெண்  கவிஞர் தமிழ்நாட்டில் உள்ள  தேனி மாவட்டத்தில்
 15 .03 .1972       ஆம்    ஆண்டு பிறந்தவர்.’ஆய்வியல் நிறைஞர்’ என்ற பட்டம்  பெற்றத்தோடு  யோகக்கலையும் பயின்றவர். கவிஞர் ,எழுத்தாளர்,பேச்சாளர் ,சமூகசேவகி,தொழில்நிர்வாகி ,ஓவியர்,அன்புமனைவி,நல்லதாய்,எனப்
பன்முகப்பார்வை கொண்டவர் .கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக  2001 ஆம் ஆண்டு  ஸ்ரீசக்தி அறக்கட்டளையை  நிறுவியவர் .தற்பொழுது அது திண்டுக்கல்  மற்றும் தேனி மாவட்டங்களில் 15  கிளைகளுடன்  மொத்தம் 3880 சுய உதவிக்குழுக்களாக 780  கிராமங்களில்  இயங்கி வருகிறது .சிறந்த  நேரு யுவ கேந்திராவின் சமூக பணியாளர்  விருது , தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் சிறந்த இளைஞருக்கான மாநில   விருது , பசுமை   விருது, லயோலா கல்லூரியின் லைவ் விருது , நபார்ட் வங்கி விருது  முதலிய பல விருதுகளைப் பெற்றவர்.
          இயற்கை வளங்களை மேம்படுத்துதலில் மண் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் நீர்வடிப் பகுதிகளை அமைப்பதும், விவசாயிகளின் மேம்பாட்டில் கவனம் செழுத்துதலும் ,  மருத்துவமுகாம்,மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல்  , விழிப்புணர்வு  நிகழ்ச்சி , கிராமப் புற பெண்களுக்காக  தொழில் பயிற்சிகள் , மாணவர்களுக்கான பயிற்சிகள்  என்று இயங்கிவரும்  இக்கவிஞருக்கு ‘கவிதைப்படைப்பு’ ஒன்றே பேரின்பமாகும். இவரின் ‘நிலம்புகும் சொற்கள் ‘என்ற கவிதை நூலும்,’கடலோடு இசைத்தல்’ என்ற கவிதை நூலும் இங்கு ஆராயப்படுகின்றன .
பெண்ணின் ஏழு வகைப்பருவம்:

     தமிழ் இலக்கிய மரபில் பெண்மையை ஏழு பருவங்களாக வகுத்துச்  சொல்லுவது மரபு .அவை பேதை-7 ,பெதும்பை-11 ,மங்கை-13 ,மடந்தை-19 ,அறிவை-25 ,தெரிவை-31 பேரிளம்பெண்-40 ,என்பதாகும்.”சக்திஜோதியின் ‘பெண்மை’பற்றிச்  சில கவிதைகள்  ‘பெண்மையின் பருவங்களை  நிறங்களாகக் காண்கிறது. ஊதா,நீலம்,பச்சை,வயலட் ,மஞ்சள் ,ஆரஞ்சு,சிவப்பு என தமிழ்க்கவிதையுலகில்  இதுபோன்ற மற்றொருவரும்  பார்த்ததாக எனக்கு  நினைவில்லை” என்று நாஞ்சில் நாடன் போற்றுகிறார் .(கடலோடு இசைத்தல்,அணிந்துரை) இதன்மூலம் பெண்ணின் பெருமையும்,தாய்மையும் உணர்த்தப்படுகிறது.
பெண் சிசுக்கொலை ‘பெண்சிசுக்கொலை’ நடக்கிறது என்று சொல்லும் பொழுது இதற்குப் பெண்களும்தான் காரணம்  என்று நகரத்து ஆண்கள் பலரும் குரல் கொடுக்கின்றனர்.தான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை பெண்ணாக இருந்தால் கொன்றுவிடலாம் பரவாயில்லை என்கிற உளவியலை அவளுள் விதைத்ததற்கு இந்தச் சமுதாயம் நிச்சயம் பொறுப்பேற்கத் தான்  வேண்டும் .
“கள்ளிப் பாலுக்குத் தப்பிய
பெண் ஜென்மமெனக் கலங்கும் பிரசவித்த தாய்
பால்புகட்டுகிறாள்  வேதனை கூடி 
நஞ்சிட்டுக் கொன்றிட  யோசித்தவள்
பனிபொழியும் அதிகாலையில்
ஊதாநிறத்தில்
முளைவிட்டு வேன்னரம்போடிய பயிர்களால்
மீண்டெழுகிறாள்  “(கடலோடு இசைத்தல்;ப -74 )
 என்ற   வரிகளில்  பெண்சிசுக்கொலை எவ்வாறெல்லாம்  நடக்கிறது  என்ற தகவல் அதிர்ச்சி தருகிறது.இதில் ஏதோ தப்பிப்  பிழைத்த பெண்கள் இன்று உலவ நேர்ந்துள்ள  அவலமும்  விளக்கப்பட்டுள்ளது.
அடையாளம் :

இறைவன்  ஒவ்வொரு  பொருளுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையை  அடையாளமாகக் கொடுத்துள்ளான் .சான்றாக  வெப்பம்  கதிரவனுக்கான அடையாளம்;சிறகு என்பது பறவைக்கான  அடையாளம்  முதலியவையாகும் .ஆனால் பெண்களுக்கு மட்டும் எப்பொழுதும் சொந்த அடையாளம் இருப்பதில்லை  என்று  கவிஞர்  குமுறுகிறார்.
            தான் இன்னாரின்  மனைவி,இன்னாரின் மகள்  அல்லது  மருமகள்,இன்னாரின் அம்மா என்று சொல்லிக் கொள்வதைத் தனக்கான  அடையாளமாகக் கொண்டு வாழ்கிறது  இந்தச் சமுதாயம். இதற்கு (எ -டு ) ஓர் ஓவியநிகழ்ச்சியைக்  கவிஞர் சக்திஜோதி  காண்பிக்கிறார் .ஒரு பெண்ணை மாதிரியாக  வைத்து ஒருவர் ஓவியம் தீட்டுகிறார்.அங்கு அப்பெண்  பேசுவது ஒட்டுமொத்த  பெண் சமுதாயத்தின் குரலாக  அமைகிறது.’நான் எத்தனையோ  முறை பலருக்குச் சித்திரமாக வரையத் தேவைப்பட்டுள்ளேன் .இப்பொழுது நீயும் என்னைச் சித்திரமாக  வரைந்து   கொண்டிருக்கிறாய்’ , என்று அந்தப் பெண் பேசத் தொடங்குகிறாள்.

நான்
யார் யாருக்கோ  அடையாளமாக
இருக்கையில்
உன் நினைவில்
என்னிருப்பை  உணர்கின்றேன்
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே”(நிலம் புகும் சொற்கள்;ப -49 )
   என்று கவிஞர்  சொல்லும் பொழுது நம்மையும்  மீறி  அழுகை  பீறிடுகிறது .ஓர்  ஆடவனைத்  தனக்கான துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்  ஒரு பெண் .அவனும் அவனுக்கான அடையாளத்தை  அவள் மீது திணித்து விடக்கூடாது  என்பதைக் கவிதை ஆழமாகச் சொல்லிவிடுகிறது.அடையாளங்கள் மீது கவிஞருக்கு  எந்த வெறுப்பும் இல்லை.ஆனால் அவை அந்தப் பெண்ணினுடைய  அடையாளமாக இல்லை  என்பதில் கவிஞரின் ஆதங்கம் அமைந்துவிடுகிறது.அதனால் அந்த அடையாளத்தையே  துறக்கத் துணியும் ஆர்வம் கவிதை வரிகளில் தோன்றுகிறது .
“அடையாளங்களோடு மட்டுமே 
வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொருத்தி
தன்னை மறைத்தபடி
பார்வையிடுகிறாள் சித்திரத்தை
ஆயிரம் வாசல்களில்
ஏதேனும் ஒன்றிற்குள்  சென்றால்
அடையாளங்களைத் துறந்து விடலாமென
அறிவிப்பு ஏதுமில்லை அவ்விடத்தில் ,”(கடலோடு இசைத்தல்  ப -67 )
என்ற வரிகள் கவிஞரின் விருப்பத்தை  விளக்கிவிடுகிறன.
 பெண் விடுதலை;
நிலம்,நீர்,ஆகாயம்,காற்று,நெருப்பு  ஆகிய அனைத்தும் பெண்ணின் வடிவங்கள்  என்று  கவிஞர் நம்புகின்றார்.ஆனால்  இயற்கையைப் போல ஆற்றல் படைத்த பெண்ணை இச்சமுதாயத்தில்  இயற்கையாய்  இருக்க விடுவதில்லை. எனவே அவளுக்கு காற்றைப் பார்த்தாலும், நிலத்தைப் பார்த்தாலும்,சந்திரனைப் பார்த்தாலும்,கடலைப் பார்த்தாலும், பொறாமை ஏற்படுகிறது. அவளிடத்திலும்  குளிர்ச்சியும்,வெப்பமும் உண்டாகிறது.ஆனால் அதை வெளிப்படுத்த உரிமையில்லை. தன் குழந்தையைக்  கொண்டாடவோ  அவளுக்கு உரிமையில்லை.
 “நான் கூட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை
இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்
 எனக்கென
சொல்லிக் கொள்ளும்படி  ஒன்றும்மில்லை”,(கடலோடு இசைத்தல்;ப -65 )
என்ற வரிகள் பெண்களின்  உண்மைநிலையைப் படம்பிடிக்கின்றன.
தனக்கான உடைமைகளையும்  தன்னிடத்தில்  தராத இந்தச் சமுதாயத்தில் தன் சிறகுகளால்  உயரத்தில்  பறக்க  வேண்டும் என்ற எண்ணம் ஒருத்திக்குத் தோன்றுகிறது. அதனால் விமானம் ஏறிப் புறப்பட்டாள்.அதில் சலிப்பு உண்டானது தவிர மகிழ்ச்சி  பிறக்கவில்லை. பறவையைப்  போலத் தன் சொந்தச் சிறகுகளால்  பறக்க வேண்டும்  என்ற ஆசை அவளுள் வளரத் தொடங்குகியது.ஆனால் அப்படி  எந்த அதிசயமும்  அவளும் நடக்காது என்று உணர்ந்து கொண்டாள்.அவளின் ஆசை கனவாக  மலர்ந்தது.
‘உறக்கத்திலோ
கனவிலோ
சிறகுகளை அசைத்து
பறந்து கொண்டிருக்கிறாள்
வானில்’. (கடலோடு இசைத்தல் ; ப -25 )
    என்ற  கவிதை முடிகிறது.ஒரு மனிதனுக்கு  உறக்கம் மட்டும் இல்லை
என்றால் நிறைவேறாத ஆசைகளுடன் -தாங்கமுடியாத  அவமானங்களுடன்  அவன்  என்றோ இறந்திருப்பான்.
அவனை இன்னும் உயிர்ப்போடு இருக்கச் செய்வதில் உறக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு .இதனை “பெண்ணியப் பார்வையில் படைத்தது  பாராட்டுதற்குரியது.
                ஓர்  இடத்தில் ஆசிரியர் பெண்ணைக் கிளியாக உருவகிக்கிறார்.ஒரு பெண் எவ்வளவு அறிவு பெற்றிருந்த பொழுதும் ‘குடும்பம் ‘என்ற  அமைப்பிற்குள்   செக்குமாடு  போன்று கழல வேண்டிய நிலை உள்ளது . ஆனால்,அவளை எந்த கூட்டிலும் போட்டுப் பூட்டி வைக்கவில்லை  என்ற ஏளனத் தொனி நம்மைச் சிந்திக்க  வைக்கிறது. அந்தக் கிளி (பெண் )வீட்டைச்
சுற்றி  வருவதிலேயே  அதன் வாழ்நாள்  கழிந்துவிடுகிறது.அவளுக்கும்  ஆலயங்களில்  ஆண்டவர்  அருகில் காணப்படும் கிளிகளுக்கும்  பெரிய வேறுபாடு இல்லை.ஒருவேளை  இந்தக் குடும்பக்  கிளியை விடுவித்துவிட்டால்  அது அகன்ற வானில் பறந்து விடுதலையாய் வாழுமோ என்ற எண்ணமும்  கவிஞருக்கு எழுகிறது.
“பேரூந்துகளில் கூண்டோடு பயணிக்கும்
பல கிளிகள்
தம் பயணத்தை அறியாதவை” (கடலோடு இசைத்தல் ; ப -30  )
இது  ஒருபுறம் இருக்க பெண்களுக்குத் தான் தியாக உணர்வு தேவைப்படுகிறது  என்ற உணர்வும் தோற்றுவிக்கப்படுகிறது. விட்டுக் கொடுத்து  வாழ்தலைச்  சிலர் அடிமைத்தனம் என்று சித்தரித்து   விடுகின்றனர்.ஆனால் அது தவறு.
            வாழ்க்கை என்பது புரிதலிலும்,சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதலிலும் வாழ்ந்து  கொண்டிருக்கிறது.சூழ்நிலைக்கு  ஏற்ப மாறுவதை விட்டுக்கொடுத்தலை அடிமைத்தனம் என்று வருணிப்பதும் பிழையாகும்.கரப்பான்பூச்சி  இந்தப் பூமிக்கு வந்த காலத்தில்,வாழ்ந்த எத்தனையோ  உயிரினங்கள் இன்று இல்லை.காரணம்  கரப்பான்பூச்சியின்   சூழ்நிலைக்கு
 ஏற்ப  மாறும். விட்டுக் கொடுக்கும்  தன்மையால்  அது இன்னும் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.இந்தக் குடும்பங்களில் பெயரளவில் தலைவன் இருந்தாலும் ஆட்சியில் இருப்பது தலைவி தான்  என்பது அனைவரும் அறிந்த உண்மை .இதனை ,
  “சுதந்திரத்தின்
இசையை இசைக்கும் போது
அறிவதில்லை
தியாகத்தின் மொழியை”(நிலம் புகும் சொற்கள்;ப 41 )
என்ற வரிகள் உணர்த்திவிடுகின்றன”.
தாய்மை ;
    
அறிவியல் எவ்வளவு வளர்ந்த பொழுதும்,ஆணின் விந்துவைத் தனியே  பலநாள்கள் எடுத்து வைத்துப் பத்திரப்படுத்தும் அதற்குக் கருவறை இல்லாமல்  குழந்தையைப்  பிரசவிக்க  இதுவரை தெரியவில்லை .
“அவளது தொடுதலில்
பறவையாக உருமாறிப் பறக்கப் போகிறது
மேலும் சில பறவைகள்”(கடலோடு இசைத்தல்;ப -78 )
 என்ற வரிகள் எத்தனை நூற்றண்டுகள்  ஆனாலும் பெண்மை போற்றப்பட வேண்டியது என்பதை இச்சமுதாயத்திற்கு உணர்த்துகின்றன.
  
கவிஞருக்கு நிலவின் மேல் என்ன கோபமோ  தெரியவில்லை!அது  சூரியனின்  ஒளியில் ,இரவல் ஒளியில் அல்லவா ஒளிர்ந்து  கொண்டிருக்கிறது  என்று சாடுகிறார். எனவே,நிலவைப்  பெண்களுக்கு  உவமையாகச் சொல்லக்கூடாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார் .பெண் உயிர்ப்பில்லாத  ஒரு நிலவாக இருக்க  விரும்பமாட்டாள் .
“நான்
உயிர்ப்புடனிருப்பவள்
நிலவல்ல
ஆயிரம் ஆயிரம் சூரியன்களைப் பெற்றெடுக்கும் பெண்
நிலவல்ல ,”(கடலோடு இசைத்தல்;ப -41 )
என்ற வரிகள் பல  நூற்றண்டுகளைத்  தன் தாய்மையால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் பெண்மையை வணங்காமல் இருக்கமுடியவில்லை .
   
 தாய்க்குத் தன் மகன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவன் குழந்தையோ, ஆனால் விடலைப் பருவ மகனுக்குத்  தாயின் தொடுதல் கூச்சத்தைத் தருகிறது .
“பால் சுரக்காத
மார்பின் தவிப்பை உணரவியலாமல்
முலைப்பால் அருந்தி வளர்ந்தவன்
என்னை விலக்கி நகர்கின்றான்
ஒரு பெண்ணைத் தீண்டிய  கூச்சத்தோடு  ,”(கடலோடு இசைத்தல்;ப -43 )
என்ற கவிதை வரிகள் ஆண்மகன் என்ற ஒரு தகுதி இருந்தாலே  பெண்ணின்  மனவுணர்வுகள்  புரியாது  போலும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஆனால்  அது விடலைப் பருவத்தின்  வெளிப்பாடு .எனவே,அப்பருவத்திற்குரிய  உணர்வு மறுக்கப்படுவதற்கில்லை .
சமத்துவப்பார்வை
     விண்வெளிக்குச் செல்லும் அளவு பெண்கள் சாதனை படைத்தபோளுதும்  பெண்குழந்தைக்கு  ஆண் உடைகள் உடுத்தி அழகுபார்ப்பதும் ,ஆண்மகனைப் போல வளர்ப்பேன்  என்று சொல்லுவதும்  நின்றபாடில்லை .பெண்கள் அதிகமான மதிப்பெண்களைத்  தேர்வுகளில்  எடுக்கும் பொழுது ஆணையும் ,விஞ்சும் பெண் என்று பாராட்டப்படுகிறாள்.
ஆனால் அவளாக இருக்கும் பொழுது புறக்கணிக்கப்படுகிறாள்.பெண்ணின் விருப்பம் ஆணுக்குப் பிடிக்காத பொழுதும் ஆணின் ஆசையைப்  பெண்  விரும்பாத  பொழுதும் குழந்தைப்  பிறப்பிற்கு மட்டும்  குறைவில்லை . இது வழக்கமாகிவிட்டது.
இந்நிலை மாறிச் சமத்துவம் நிலவ வேண்டும்  என்பதை.
“பெண் உயர்வல்ல  ஆணும்  உயர்வல்ல
மேலும்
ஆணின்றி பெண்ணும்
பெண்ணின்றி ஆணும் வாழ இயலுமோ ,” (கடலோடு இசைத்தல்;ப -72 )
என்ற வரிகள் விளக்கிவிடுகின்றன.
  
பூமியைப்   பெண்ணாகக் கருதிப் போற்றும் பண்பு நம் நாட்டில் உள்ளது.தமிழ்த்தாய் வாழ்த்தில்
பேராசிரியர் மனோண்மணியம் சுந்தரனார் பூமியை ‘நிலமடந்தை’ என்று உருவகப்படுத்தியிருப்பார். இங்கும் அந்த உருவகம் சுட்டப்பட்டுள்ளது . மழையை      ஆணாகவும்,நிலத்தைப் பெண்ணாகவும் பாவித்துக் கவிஞர் பாடியுள்ளார். மழையான ஆணின் தீண்டுதல் நிலமான பெண்ணின் மீது நிகழ்கிறது . பெண்மை மணக்கிறது . அந்த அற்புதம்  தாவரங்களாக விளைகின்றன .அதற்கு ஈடு ,இணை  இல்லை.
“அவள்
தன் உடல்  திறந்து பருகுவாள்
மழையென்னும்  பேராண்மையை
பின்பு
மழையே தானாகிறாள்”(   கடலோடு இசைத்தல் ப-72 )
என்ற கவிவரிகள் கலவியைச் சொல்கிறது .”பெண் தன் விடுதலையைக் கண்டடைவதன்  மூலம் ஆணுக்கான விடுதலைக்கும் கிரியா  ஊக்கி ஆகிறாள்.தானே நிலமும் மழையும் ஆகும் விந்தை அது “(கடலோடு இசைத்தல் ,அணிந்துரை )என்று  குறிப்பிட்டுள்ளார்  நாஞ்சில் நாடன் .
      பகலில்  கதிரவனையும் இரவில் நிலவையும் மலராகச் சூடியிருக்கும்  பெண் தன் மலரின் தேனைப்  பருகியவர்களை அவர்களாக மாறமுடியாமல்  செய்யும் வல்லமை படைத்தவள். எனவே ,ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்துவதும், பெண்ணிலிருந்து ஆணை வேறுபடுத்துவதும் தேவையற்ற இயற்கைக்கு  மாறான செயல் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.
நிறைவுரை:
   இந்த நூற்றாண்டிலும்  பெண்களை  ஆசைத்துணையாக மட்டும் கருதும் ஆடவர்கள் இருக்கின்றனர்.தலைவன் தரும் முத்தத்தை  அன்பின் அடையாளமாகத் தலைவி எண்ணுகிறாள்.ஆனால்  அது கடைசியில் வெறும் கூடலோடு
முடிந்துவிடும்பொழுது அதில் ஆனந்தமோ ,அழகோ , அன்போ  பிறப்பதில்லை  என்பது நிதர்சனமான  உண்மை .
இந்நிலை  மாற வேண்டும்  என்பதற்காக “நிலம்புகும் சொற்கள்”மற்றும் “கடலோடு இசைத்தல் ” ஆகிய கவிதை நூல்கள் பாடப்பட்டுள்ளன.

சக்தி ஜோதியின் கவிதைகளின் “வலி+அனுபவம் =கவிதை

பூ.மு.அன்புசிவா,
முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை,
 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 செல் -9842495241 .
 
வாழ்க்கையின் இயங்குதளத்தின் கடந்து செல்லும்போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கின்றது.அதை விட்டு வெளியேறமுடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புக்களையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக்கொண்டு ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது கவிதைத்தளம்.இன்னும் கூடுதலாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது கவிதை. கவிதையின் இறுக்கமான நடை குலைந்து எளிமை ஓர் அழகாகப் பரிணமித்தும் பேச்சு மொழியில் கிடைக்கும் கலகக் கூறுகளை உள்ளடக்கிய அரிய சொல்லாட்சிகள் கவிதையின் பிரதான அலகுகளாகியின .தமிழ்ச் சமூகத்தின் பன்முகச் சிறப்பம்சம் இக்கவிதைகளின் வெளிப்பட்டன.கவிதை எழுதுவதே ஒரு கலகச் செயல்பாடுகள்.
சக்திஜோதியும் கவிதையும்:
கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்றமுடியும். ஆக உயிரை -உணர்வை -உடலைக்-கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கைத்தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக் கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கின்றன சக்திஜோதியின் கவிதைகள் .ஏனெனில் கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது.கவிதை என்பது மனித மொழி ,மனவலி இவைகளை எதார்த்தமாக விதைத்திருக்கிறார்.
“என்னை முத்தமிடுகையில் உனது பிரச்சினை என்ன வென்பது எப்பொதும் புரியவில்லை உனக்கான முத்தத்தில் புதைந்திருக்கும் பிரியங்களின் இரகசியங்களை நீ அறிந்து கொள்ள முயல்வதேயில்லை “
என்ற அடிகளில் புரிந்துகொள்ள உணர்ச்சிகளால் ஆன இவரின் கவிதைகள் முத்தங்களின் தேன் கூடாக அமைகிறது. நம் வாழ்வின் அன்றாடப் பழக்கத்தில் உள்ள மொழியானும் கவிதைக்கான மொழி தனியானது என்பதை சக்திஜோதியின் கவிதைகள் காட்சி தருகின்றன.
“நிறைவேறாத கனவுகளோடு நான் மரணத்தைத் தழுவு விரும்புவது குறித்து துக்கமில்லை ஆசைகள் இலட்சியங்கள் கனவுகள் உன் முன் அணிவகுக்கின்றன மரணத்தருவாயில் “
கவிதைகளைப் புரிந்து கொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும்.பின்பு அதற்கான ரசனை வேண்டும்.இவ்விடத்தில் ஒன்றை நினைவு கொள்ளலாம். ‘அமெரிக்க படைப்பாளியான வர்ஜினியா வூல்ப் என்பவரிடம் ‘ ஒரு வாசகர் கேட்டார் ‘உங்கள் படைப்புகளை மூன்று முறை வாசித்தும் புரியவில்லையே ‘என்றாராம் .அதற்கு வூல்ப் நான்காவதுமுறை வாசியுங்கள் என்றாராம்.
புரிந்து கொள்ள முடியாது என சக்திஜோதியின் கவிதைகளைத் தள்ளி வைக்க முடியாது ‘வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஓர் அம்சத்தைத்தான் தம் படைப்புக்களில் எங்கும் சொல்லியிருக்கிறார்.சிறு சிறு நிகழ்வுகளைக் கூடத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் .
 “ஒவ்வொரு மரணமும் விதைத்து போகின்றது இன்னும் இன்னும் கனவுகளை”
என்றும் கவிதைகளைக் காணும்போது கனவுகளை விதைத்து அது சாத்தியப்படாதபோது அதை மரணம் என்று சொல்லிவிடுகிறார் என்றாலும் இருண்மை என்பது கவிதையில் மட்டுமல்லாமல் தம் வாழ்க்கையிலும் இருப்பதைத் தெளிவாக்குகிறார். ஒருவருக்கு வாய்க்கிற தனிமைச் சூழல் அதனுள் முளைத்திருக்கும் மவுனத்தின் கனவுகளை வெளிக் கொணர்வதே கவிதை என்பதை ஆழமாகக் புரிந்து வைத்திருக்கிறார். எதிர்பாராத தருணத்தில் கவிஞன் தனக்குள் புதைந்திருக்கும் அனுபவத்தைக் கவிதையாக்கி விடுகிறான்.அந்தக் கவிதைனுள்ளே நுழைந்து அனுபவங்களையும் வலியையும் அசைபோடும்போது அது கவிதையாக வெளியேறுகிறது.
“அனுமதிக்கப்படுவதும் மறுதலிப்பதும் அனைத்துச் சந்திப்புகளிலும் நிகழ்ந்தேறி விடுகிறது நிகழ்த்தப்படாத சந்திப்புகளில் ஏற்படுகின்ற நினைவின் அத்துமீறல்”
கவிதைகளின் சந்திப்பு என்பது ஓர் நிகழ்வு என்பதை மையமாகக் கொண்டு நினைவோடு மறுதலிப்பது என்பதை சொற்களில் உறைய வைக்கிறார்.
ஒரு கவிதையைப் புரிந்தேதான் ஆக வேண்டும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் படிப்பவரின் மனதை பொறுத்துத்தான் புரியும்படியாக இருக்க வேண்டும் .கவிதை என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. சக்திஜோதியின் கவிதைகளின் நவீனக் கவிதை மொழியைக் குறித்துப் பேசலாம்.இவரின் கவிதைகள் இப்படித்தான் நவீனக் கவிதை மொழி இருக்க வேண்டும் என்ற வரையறைகளைக் கொண்டிருக்கின்றன .
“அது என் அந்தரங்கங்களை இருட்டுப் போர்வையினால் போர்த்திப் பாதுகாக்கிறது பகலின் முகமூடிகளைக் கழற்றிய பின்பும்கூட என் முகத்தைப் பாதுகாக்கின்றது “
 என்னும் கவிதையைக் காணும்போது தம் அனுபவத்தைப் படைப்பாக ஆக்கித் தருகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது .
“நீ வந்து நீங்கியபின் உடல் தணலாகக் கொதிக்கின்றது பின் உன் நினைவுக் காற்று என்னக் குளிர்விக்க என்னை மீட்டுக் கொள்கிறேன்” போன்ற கவிதைகள் தணலாக வீசுகின்றன.
கவிஞர்கள் பலர் பெரும்பாலும் சுதந்திர உணர்வும் முற்போக்கு எண்ணமும் கொண்டவர்களாகவும்,தம்மைக் தொடக்க நிலையில் அறிமுகப்படுத்திக் கொள்பவராகவும் இருக்கிறார்கள்.அது போன்று சக்திஜோதியின் கவிதைகளும் அமைகின்றன.
“அந்த இரட்டைத் தென்னை மரங்களின் இடை மேலுயரும் பளிச்சிடும் வெள்ளி எதற்க்குச் சொந்தமானது “
இரு மலைகளுக்கிடையே உதிப்பது வெள்ளி.இங்கு இரட்டைத் தென்னை மரங்களிடையே அதைக் காட்டுவதில் புதுமை என ஒரு கவிஞர் கூறுகிறார்.
காதலிப்பது ஒருவரை,மணப்பது ஒருவரை எனஎண்ணும்போது எந்தக்கவிஞனுக்கும் வெறுப்போ , சினமோ வருவதில்லை .இளைஞர்கள் பேரிழப்பாகக் கருதிச் சுமக்க முடியா சோக வாழ்விற்கு அடிமையாகி நினைத்தவாறு கவிதை எழுதி மனம் புழுங்கித் தவிப்பது வேடிக்கை.
“மறந்து விடுங்கள் உங்கள் மனசு சுமக்கமுடியாதபடி மணக்கும் என் நினைவுகள் கனக்கத் தொடன்கிருந்தால் என்னை மறந்துவிடுங்கள் “
கோபக் கனல் தெறிக்க வேண்டிய வயதில்,சோகக் கவிதை வாசிப்பது வேதனை.
பொழுதுபோக்கிற்காகக் காதலிக்கத் தொடங்கியவர் பலர்.பெண்களின் பார்வைக் கூடக் கரைசேராக் கப்பல் போலும். மனமெங்கும் கனம்.காதலின் நினைவால் அழுத்தும் சுமை.வேறிடம் நோக்கிக் காதல் பயணம்.சுட்டால் தானே நெருப்பு. ஒரு பெண்ணின் அழகையும் அவள் வருகையும் கண்டு .ஆடவர்களின் சலனப்படுத்தப்படுவதைக் கவிதையாக்கிய நிலை பெண்களைக் காணும் இளைஞர்கள் அவ்வளவு பலவீனமாக்குவது பயனற்ற செயல்.
“பனியில் இரவு முழுக்க நனைந்த மலர்போல குளிர்ந்து கிடக்கின்ற அன்பு என்மேல் முத்தங்களாய் பொழிகிறது”
தாஜ்மகாலை அழகியல் பார்வையில் பலர் படம் பிடித்து காட்டியுள்ளனர்.காதலன் காதலியிடம் கூறுவதாக அமைந்துள்ள கூற்று உண்மையின் வெளிப்பாடே.
 “நானருகில் இருக்கையில் கார்மேகம் கனிந்து பெய்யும் மலையென என் மீது முத்தமழை பொழிய “
கவிதைக்கு கற்பனையைப் போலவே உணர்ச்சியும் ஓர் இலக்கியக் கூறு எனலாம் .
“கடல் நிலம் மலை பாலை என எங்கும் காணோம் நமதன்பின் வெளியை”
என்ற அர்த்தமுள்ள வரிகளில் அன்பு ஒளிர்கிறது .தீவிர போராட்டத்திற்குப் பின்பு அன்பு மலரும்போது மானுட வாழ்க்கை மலர்ச்சி பெறுகின்றது.
தொகுப்புரை
 கவிதை மொழி உருவாக்கத்தில் இரு குறித்தன்மையில் அமைந்த சொல்லின் பொருள் உறைந்த நிலையிலிருந்து கவிதையில் இயக்கம் கொள்ளாத நிலைக்களன்களாக அமைகின்றது. எந்தப் படைப்பாளியைவிடவும் இலக்கியப் படைப்பாளிக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்புண்டு. எழுதுபவர் கலைஞர்களில் சிறப்பானவர் என்பது என் கருத்து. பிக்காசோவின் ஓவியங்களை விடவும் பித்தோவானின் இசைக் கோளங்களை விடவும் வான்கோவின் ஒரு வார்த்தை ,கதையின் ஒரு சொல் மக்களை ஆட்டிபடைத்துவிடும்” என்கிறார் ஜெயகாந்தன். இன்று கவிதை மொழி வியக்கத்தகு வண்ணம் மாற்றம் அடைந்திருக்கிறது.அரசியல்,சமூக நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றம் கலாசாரத் துறைகளிலும் பிரதிபலிக்கிறது. தண்ணீர் கொடுத்து உபசரிப்பது தமிழ் மரபு.பாட்டில் தண்ணீரைக் கேட்கவும் ,கொடுக்கவும் சங்கடப்படுமளவு பண்பாடு மாறிவிட்டது. ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றையக் கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. பழைய மரபுகளைக் கடந்து புதியன வருகின்றபோது அது நவீனமாகிப்போகிறது.அந்தந்தக் காலக்கட்டத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்கள் அந்தந்தக் காலத்தின் நவீன இலக்கியமாகிக் கொள்கின்றன.இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான கவிதைகள் அதற்கான மொழி அடையாளங்களோடு அமைந்திருக்கின்றன .ஆகக் கவிதைக்கான மொழி என்பது பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளைத்தான் நவீன கவிதைகள் என்கின்றனர். தற்காலக் கவிதைகள் யாவும் புதுக்கவிதை என்கின்ற வடிவத் தோற்றத்தில் இருந்தாலும் அதனுள் பொதிந்திருக்கும் மொழிப்புழங்கல் நவீனமாக அமைந்திருக்கிறது. தற்காலத்திய வாழ்க்கை நவீனமாகிக்கொண்டிருக்கும் சுழலில் நவீன வாழ்வின் பிரதிபலிப்பாக இன்றையைக் கவிதைகள் இருப்பதனால் அவற்றை நவீனக் கவிதைகள் ‘ எனச் சுட்டலாம் .நவீனக் கவிதை மொழியாய் வடிவம் கொண்டு சக்தி ஜோதியின் கவிதைகள் தமிழைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் என்பதே சாத்தியம்.

ஒரு பெண் நிகழ்த்துகிறாள்

சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில்பயணத்தில் ஒரு முதிர்ந்த தம்பதியைப் பார்த்தேன். மனைவிக்கு 65 வயதிருக்கலாம்… கணவருக்கு 70 இருக்கலாம். அந்த இரவு நேரப் பயணத்திலும் அவர்கள் இருவருக்கும் களைத்துப் போகாத தெளிந்த முகம். அவர்களது செயலும் பாவனைகளும் மட்டுமல்ல… உடலும் கூட ஒன்று போலவே இருந்தது. நீண்டகால தாம்பத்தியம் அவர்களை அவ்விதமாக ஒன்று போலவே ஆக்கியிருந்தது என்று தோன்றியது. மூன்றடுக்கு இருக்கையில் அவர்களுக்கு இரண்டு பக்கங்களிலும் மையத்தில் படுக்கை கிடைத்திருக்கிறது. நான் மேலே என்பதால் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு வசதியாக கீழ்ப்படுக்கை அமைத்துத் தருவதில் கவனமாக இருந்தார்.பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டுப் பார்த்தார். அவர், ‘பயணிகளுக்குள் நீங்களே அனுசரித்து மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எங்கள் பகுதிக்கு கொடைரோட்டில் ஆள் ஏறுவதாக இருந்து. ஒரு பெண்ணும் அவருடைய வயதான தாயாரும்திண்டுக்கல்லில் ஏறினார்கள். அந்தப் பெண்ணிடம் தன் மனைவிக்கு இருக்கையை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். அந்தப் பெண்ணோ, ‘உடல்நலம் இல்லை… இடையிடையே எழுந்துக்க வேண்டியிருக்கும்’ எனச் சொல்லிவிட்டார். அவர் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு  பக்கத்துத் தடுப்புக்குச் சென்றார்.
‘யாராவது கீழ்ப்படுக்கை விட்டுத் தரமுடியுமா’ என மனைவிக்காகக் கேட்டார். பிறகு இளைஞர் ஒருவர் இடம் மாற்றிக் கொண்டார். இவர் ஓடும் ரயிலில் மனைவியைக் கைப்பிடித்து பக்கத்து தடுப்பின் படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு திரும்பி வந்து மையத்தில் ஏறிப் படுத்துக் கொண்டார். ரயில் திருச்சியை நெருங்கி விட்டது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… இது போன்ற காட்சியை நான் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரயில் மட்டுமல்ல… இரவு நேர பேருந்துப் பயணங்களில் தன்னுடைய மனைவியை நள்ளிரவில் அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கவோ, பால் வாங்கிக் கொடுக்கவோ பரிவுடன் நடந்து கொள்கிற ஆண்களைப் பார்க்கிறேன். மனைவியைக் கைப்பிடித்து சாலையைக் கடக்கச் செய்யும் வயதான கணவன்களைப்  பார்த்திருக்கிறேன். அவரும் கையில் ஒரு தடி வைத்திருக்கலாம், தடுமாறி நடக்கலாம் என்றாலும் மனைவியிடம் அவர்கள் காட்டுகிற பரிவு குறித்து நான் கவனம் கொள்வதுண்டு.  நீண்ட காலத் தாம்பத்தியம் அமையப் பெற்ற தம்பதியரை அவதானிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.
‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் முதிர்ந்த தம்பதியின் நெருக்கத்தையும் அல்சைமர் நோய்வாய்ப்பட்ட மனைவியிடம் கணவனின் அரவணைப்பும் நேர்த்தியாக காட்டப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. இவர்களுக்குள் ஆரம்ப காலத்தில் மனவேறுபாடு இருந்திருக்கும்தானே? உடலின் வாசனையோ, வேறு எதுவோ ஒன்று அவர்களுக்குள் பிடிக்காமல் போயிருக்கும்தானே? உணவின் சுவை வேறுவேறாக இருக்கும் தானே? உடுத்துவது, உறங்குவது என ஒரு நாளின் பழக்கவழக்கங்களில் மாறுபட்டிருப்பார்கள்தானே? இப்படி எத்தனையோ இருந்தும் அவர்கள் மிகஒற்றுமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த விட்டுக்கொடுக்கும் இடம் அல்லது ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை என்பது எவ்விதம் நிகழ்ந்திருக்கும்?
பெரும்பாலும் வயதான பின்பு கணவன் இறந்து விட்டால், பெண்கள் மகன் வீடு, மகள் வீடு என அனுசரித்துக் கொண்டு தங்கள் வாழ்வைத் தொடரும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். மனைவிஇறந்துவிட்டாலோ அந்த ஆண் மிகவும் தளர்ந்துபோய் விடுகிறான் என்பதே உண்மை. ஏனெனில் பெண் என்பவள் தகப்பன், சகோதரன், பிறகு கணவன் என சார்பு நிலையிலேயே வளர்க்கப்படுகிறாள் என்பதால், மகனிடமோ மகளிடமோ இணைந்து அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர இயலுகிறது. ஆண் என்பவன் வளர்ப்பிலேயே தனித்து வளர்க்கப்படுகிறான். ஆண் பொருளீட்டத் தொடங்கியவுடன் அவனுக்கு தான் ‘ஆண்’ என்கிற எண்ணமும் அது சார்ந்த சமூகத்தின் கற்பிதங்களும் மேலோங்குகின்றன. குடும்பம் என்கிற நிறுவனத்தின் மையமாக தானே இருப்பதாக நினைக்கிறான்.
தண்ணீர் சூடு செய்து குடிப்பது, தானே சாப்பாடு போட்டு சாப்பிடுவது, தன்னுடைய உடைகளைத் தானே துவைத்துக் கொள்வது, தன்னுடைய பொருட்களை தானே ஒழுங்கு செய்து வைப்பது போன்ற அடிப்படையான வேலைகளைக் கூட அவன் செய்வதில்லை. அவற்றையெல்லாம்  தன்னுடைய மனைவிபார்த்துக் கொள்வாள் என்றும், அவனைப் பராமரிப்பது, அவன் குழந்தைகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்காகத்தான் மனைவி இருக்கிறாள் என்றும் நினைக்கிறான். அதனால் தன்னுடைய நீண்டகால இணையான மனைவி இறந்த பின்பு அவன் செயலிழந்து போகிறான். தனக்கென ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.
ஆண்தான் இந்தச் சமூகத்தின் மையம் எனில், இணையான தன்னுடைய பெண்ணை இழந்த ஒருவன் ஏன் இவ்விதமாகத் தளர்ந்து போக வேண்டும்? இது எப்படி நிகழ்ந்தது என சிந்தித்தால், இதை அந்தப் பெண்ணே நிகழ்த்துகிறாள். பொதுவாக திருமணம் ஆனவுடன் ஒரு பெண்ணுக்கு அவளுடைய அம்மா, ‘மாப்பிள்ளைக்கிட்ட பக்குவமா நடந்துகொள்… அவர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நீதான் விட்டுக் கொடுத்து போகவேண்டும்’ என்று சொல்வார். ‘காயத்ரி’ திரைப்படத்தில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு கணவன் வீட்டுச் சூழல் தவறானதாகத் தெரியும். அப்போது அவளைப் பார்க்க வருகிற அம்மாவிடம், ‘உங்களோடு என்னையும் அழைத்துப் போய்விடுங்கள்’ எனக் கூறுவாள். அம்மா மகளிடம், ‘புத்திசாலித் தனமாக நடந்துகொள்ளம்மா’ என்பதாகவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குடும்ப உறவு நிலைத்திருப்பதில் பெண்ணே முதன்மையான பங்கு வகிக்கிறாள் என்பதை இதுபோன்ற சூழல்களின் வழியாக உணர முடியும்.
‘வியட்நாம் வீடு’ திரைப்படத்தில் ‘உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ பாடலில் சிவாஜிகணேசன் நடிப்பது சற்று மிகை என்று தோன்றினாலும், ‘என் தேவையை யாரறிவார்’ என்று கேட்டு நிறுத்திய ஒருகணம் பத்மினியின் முகத்தை அருகில் காட்டுவார்கள். அதில் எழும்புகிற கேள்வியும் ‘உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்றவுடன் அந்தப் பெண் மனதில் படருகிற நிம்மதியும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. பெண்களுக்கும் ஆண் என்பவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கிறது. அதனாலேயே அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறாள். இந்நிலை எங்கு தொடங்குகிறது? ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் நிகழ்விலேயே கணவனை இனியவன் என்று பெண் நம்பத் தொடங்குகிறாள்.
சங்க காலம் என்பது நிலவுடைமை சமூகம், நிலவுடைமையின் பண்பு பாலியல் ஒடுக்கம். இந்த பாலியல் ஒடுக்கம் என்பது பரந்துபட்டு எல்லோருக்கும் நிகழ்த்தப்பட்டதாக நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. மாறாக களவில் உறவு வைத்துக் கொள்கிற நிலையிலிருந்து திருமணத்துக்குப் பின்பான பாலுறவுக்கு இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிற செயல் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இது பெண்களை கற்பு நிலைக்கு ஒடுக்குதலுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதனால்தான் காதலில் ஈடுபடுகிற பெண் வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறாள். கண்காணிக்கப் படுகிறாள். தமையன், தாய் மற்றும் உறவினரால் தண்டிக்கப் படுகிறாள். பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதில் நிகழ்ந்
திருக்க வாய்ப்பில்லை எனவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காதலில் ஈடுபடும் பெண்கள் ஆண்களினால் வஞ்சிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் விரும்பிய ஒருவனை இணைத்து வைக்க உதவுகிற தோழியைக் குறித்து மகிழ்வதும் இயல்பாக இருக்கிறது.
சமூகம், பெற்றோர் என அனைவரின் ஆதரவுடன் விரும்பிய ஆணை மணம் முடிக்கிற பெண்கள் மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறார்கள். திருமணம் முடிந்தது, தலைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டாள். ஒரு நாள் தோழி தலைவியின் இல்லத்துக்குச் சென்றாள். தோழியின் வரவில் மகிழ்ந்த தலைவி, சிறந்ததொரு தலைவனுடன் பெரிதும் முயன்று தன்னை சேர்ப்பித்தமைக்கு அவளைப் பாராட்டி அஞ்சியத்தை மகள் நாகையார் பாடிய பாடல்…
‘முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடி இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்’ என நீ
வல்ல கூறி  வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை காண் இனி -காதல்அம் தோழீஇ!
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி,
நல்இசை நிறுத்த நயம்வரு பனுவல்,
தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
‘அன்புத் தோழியே! ஆராய்ந்து பார்க்குமிடத்து நீ மிகவும் நல்லவள். அருவி ஒலி பாறையிடத்தே மயில் ஆடிவர, கூத்தர் விழாவெடுக்கும் முதிய ஊரில் ஆடுகின்ற விறலியின் பின்னால், மத்தளக் கருவியை தழுவிக் கொண்டு வாசிப்பவன் போல, வளைந்து நிற்கும் பலாமரத்தின் குடத்தைப் போன்ற பெரிய பழத்தை தன்னகத்தே பொருந்தத் தழுவிக் கொண்டிருக்கும் ஆண் குரங்கு தன் இனிய துணையாகிய பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டுக்கு உரியவன் நம் தலைவன்…அன்னவன் உயர்குடிப் பிறப்பினன்… தன்னுடன் பழகியோரைப் பிரியலன்… நாவால் கெடுமொழி கூறான்… எல்லோரிடத்தும் அன்பினன் எனவெல்லாம் அவன் சிறப்புகளை எடுத்துக்கூறி என்னுடன் அவனை வைத்தனை…
விரைந்தோடும் குதிரைகள் பூண்ட நெடிய தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழம் புகழ் நிறுவிய புகழமைந்த பாண்மகனானவன், இனிய இசைத்தமிழ் நூலின் எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டினும், அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், எம் தலைவன் எம்மைத் திருமணம் செய்த நாளினும் இப்பொழுது பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.   சுருக்கமாகச் சொன்னால்… திருமணம்  முடிந்த பின் தோழி தலைவியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்வாறு சென்ற தோழியிடம் தலைவி, ‘உன் உதவியால் அடையப்பெற்ற தலைவன் ,’மலைநாடன், நல்ல குடியில் பிறந்தவன், தன்னுடன் கூடிய என்னைப் பிரியாதவன், நெடுநா மொழியை உடையவன், மிக்க அன்புடையவன்’ என்று கூறி எங்களைச் சேர்த்து வைத்தாய். அது அத்தனையும் உண்மை. முன்னைவிடவும் திருமணம் செய்து கொண்ட பின் அவன் மிக இனியவனாக இருக்கிறான்’ என்று சொல்கிறாள்.
ஒரு பெண் தன்னுடைய ஆணிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் போது அவனை மிக இனியவனாக நினைக்கிறாள். அதற்கு முன்பாக அவனை  ‘தன்னுடைய ஆண்’  என்று நம்பிக்கையடைகிறாள். மேலும் அவனே இந்த உலகத்தின் மிகச் சிறந்த ஆண் என்றும் அவனுடைய நெஞ்சில் இவளுக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும் அவனை இவள் மட்டுமே அரவணைத்துச் செல்ல முடியும் எனவும் நம்புகிறாள். இந்த நம்பிக்கையின் பொருட்டே அவன் வாழ்வில் யாவற்றையும் பெண்நிகழ்த்துகிறாள்.
அஞ்சியத்தை மகள் நாகையார் இந்தப் பெயர் காரணம் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, அஞ்சி என்பவரின் அத்தை மகள் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்த அஞ்சி என்பவர் அதியமான் நெடுமான் அஞ்சியாகவும் இருக்கலாம்.  நாகு என்னும் சொல் இளமையைக் குறிக்கும். இந்த வகையில் ‘அஞ்சியத்தை மகள் நாகையார்’ என அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம். அடுத்தது, அஞ்சி எனும் பெயர் உடைய ஒருவரை ‘அஞ்சியத்தை’ என அவர் உறவினர் அழைத்திருக்கலாம். அவருடைய மகளாக ‘நாகையார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். எவ்விதமாகவும் இவரது இயற்பெயர் ‘நாகை’ என்றிருக்கலாம். இவர் பெண்பாற் புலவர்தான் என்பதைப் பாடலில் உள்ள குறிப்புகளும் உறுதி செய்கின்றன.
இவரது பாடல், அகப்பாடலாக இருப்பதும் பெண்கூற்றாக இருப்பதும் ஒரு பெண்புலவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வைக்கின்றன.
இந்தப் பாடலில் கிடைத்துள்ள குறிப்புகள்குதிரைகள் பூட்டிய நெடுந்தேரை ஓட்டும் அஞ்சி மன்னனையும் அவன் மேல் பாடப்பட்ட இசைப் பாடலையும் அதனைப் பாடிய பாணனையும் தலைவி குறிப்பிடுகிறாள்.இசை பற்றிய குறிப்புகளையும் பாணன் இசைப் பண்ணை அமைத்தான் என்றகுறிப்பையும் இப்பாடல் தருகிறது (352:14-15).விறலியர், உழவர், பாண்மகன் ஆகிய பல்கலை வாணர்களை இப்பாடல் சுட்டுகிறது.மூதூரில் விழாக்கள் நடந்தன என்பதையும் விழா நாளில் விறலி ஆடுவாள் என்பதையும் அவள் ஆட்டத்துக்கு ஏற்ப, கலைஞர் முழவை அடிப்பார் என்பதையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.
முன்பே இருந்த பண்களை மேலும் ஆராய்ந்து பாணன் புதிது புதிதாகப் பண்ணை அமைத்தான் என்றும் தெரிவிக்கிறது. ஒரு பாடலாயினும் பலவகையாலும் செய்திச்செறிவுடைய கலைப் பாடலாகும் இது.இவரது பாடலாக சங்க இலக்கியத்தில் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. அக நானூறு: 352.

உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்

சக்திஜோதி
பெண் என்பவள் ஆணின் ஆதார சக்தியாக எவ்விதம் இயங்குகிறாள்?  இப்படி, ஓர் ஆணிடம் கேட்டால் ஒருவிதமான பதிலையும், ஒரு பெண்ணிடம் கேட்டால் வேறு ஒருவிதமான பதிலையும் கண்டடைய முடியும். அநேகம் ஆண்கள் கிண்டலாகவும் சொல்லக்கூடும்… அநேகம் பெண்களுக்கு தாங்கள் எவ்விதம் சமூகத்தின் ஆதாரம் என்பது தெரியாமலிருக்கக்கூடும். பெண்களின் வழிவந்த சமூக இயக்கம் என்பது காலந்தோறும் மறுதலிக்கப்பட்ட ஒன்றாகும். பெண் இயக்கம் எப்பொழுதும் ஆணைச் சார்ந்தும், அவனது நிழலிலேயே தனது பாதுகாப்பை உணரும் வகையிலும் கட்டப்பட்டது. இது  கட்டப்பட்ட யதார்த்தமே அன்றி, உண்மை அல்ல.
பெண் எல்லாச் சமூகத்திலும் ஆதார சுருதியாகப் போற்றப்பட்டிருக்கிறாள் என்பதை பல்வேறு தொன்மங்கள் வெளிப்படுத்துகின்றன. பெண்ணைச் சுற்றிலும் பின்னப்படும் பாதுகாப்பு  வளையங்கள் கூட, அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை அடியொற்றியதே. நிலம் எவ்வாறு ஒரு குடியானவனுக்கு ஆதாரமாகத் திகழ்கிறதோ, அதுபோல நாகரிகமடைந்த எந்த ஒரு சமூகத்தின் வளமைக்கும் மேம்பாட்டுக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி முதன்மைக் காரணமாக விளங்கும். அதனால்தான் பெண்ணை மனித சமூகத்தின் ஆதார சக்தி என்கிறார்கள்.
ஒரு பெண் தனக்கும், சுற்றுப்புறத்தில் தன்னைச் சார்ந்திருக்கும் ஆண்கள், குழந்தைகள், தாவரங்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் தேவையான யாவற்றையும், தன்னியல்பில் தானே செய்கிறவளாக இருக்கிறாள். ஒரு குழந்தை பசிக்கு அழுகிறதா, தூக்கத்துக்கு அழுகிறதா அல்லது உடல் நோவினால் அழுகிறதா என்பதைத் தாயே அறிவாள். எறும்பு முதலாக பறவைகள், கால்நடைகள், தாவரங்கள் என எந்த சிறிய உயிருக்கும் நீர் தேடி சேகரித்துப் பங்கிடுவது, உணவிடுவது, அவற்றைப் பாதுகாப்பது என்பன பெண்ணின் இயல்பாக  இருக்கிறது. ஆண்களின் பொறுப்போ ஒவ்வொரு நிலையிலும் பிறரால்
வலியுறுத்தப்படுகிறதாகவே இருக்கிறது.
சமூகம் என்பது ஆண் மையக்கருத்துரு என்பதைத் தாண்டி, ‘பெண்தான் சமுதாயத்தின் வளமாக இருக்கிறாள்’ என்பதே உண்மை. ஒரு சமூகத்தின் வளம் என்பதும் அந்தச் சமூகத்தின் வளர்ச்சி என்பதும் அதனுடைய உற்பத்தித்  திறனையே அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. அப்படியான வளம் மிக்க சமூகமே பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கிற முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும். முதலாளித்துவ மனோபாவத்துக்கு உழைக்கும் மக்கள் தேவை. உழைக்கும் மக்களைப் பெற்று, உருவாக்கித் தருகிற சக்தியாக பெண்ணை மென்மேலும் பண்படுத்தவே, பெண் ஒருவிதத்தில் போற்றப்படுகிறவளாக இருக்கிறாள்.
சங்க காலச் சமுதாயத்தில் தம் இனக்குழு வாழ்வின் நிலைப்பேற்றுக்காக வேறு இனக்  குழுவுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருந்தது. தன் இன மக்களுக்காக அவர்களின் உடைமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பும், அதற்கான சண்டையை, ஒழுங்குபடுத்தப்பட்ட போர் நிகழ்வுகளாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியமும் அக்காலத்தில் இருந்தது. அதனால் சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் என்கிற வகைமை வளர்ந்தது. போர் நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளும் கருத்துருவாக்கங்களும்  அதற்கான பேச்சுகளும் நிகழ்வுகளும் இதன் வழியே  வளர்ச்சியடைந்தன. தமிழ் மரபின்  வரலாற்று ஆதாரங்கள் பலவும் புறப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.
சங்கப் பாடல்கள் என்றால் காதல் மட்டும் அல்ல… ஒரு சமூகத்தின் கட்டமைப்பில் அதன் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு பற்றி சங்கப் பெண்பாற் புலவர் பொன்முடியாரின் ஒரு பாடல் இது…
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே…’

‘ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்துத் தருவது என்னுடைய முதலான கடமை. அந்தக் குழந்தையை நற்பண்புகள் நிறைந்த சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை. கூர்மையான வேல் செய்து கொடுப்பது கொல்லர்க்குக் கடமை.  நல்லாட்சி புரிவது மன்னனுக்குக் கடமை.
போர்க்களத்தில் பகைவரின் யானையைக் கொன்று வெற்றி பெறுவது இளைஞனுக்குக் கடமை’ என்று இப்பாடலுக்கு முதல் பார்வையில் அர்த்தம்
சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் முதன்மை, தலையாய என்பதைக் குறிக்கும் ‘தலைக்கடன்’ என்கிற சொல் இங்கே பெண்ணுக்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடவனுக்கும் கொல்லனுக்கும் அரசருக்கும் இளைஞனுக்கும் மற்றவருக்கும் கடமை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் முதன்மைப் பண்பைக் குறிப்பிடுவதற்கும், பின் வருகிற அத்தனை செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்குமான சொல்லாக, ‘தலைக்கடன்’ என்கிற சொல் குறிப்பிடப்படுகிறது என்று சொல்லலாம். ஆண் மையச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்ட சங்க காலத்தில் ஆணின் பொறுப்புகள் குறித்து ஒரு பெண்ணின் குரல் இவ்வாறாக வெளிப்படுகிறது.
ஒரு ஆண் – தந்தையாக இருந்தாலும், மன்னராக இருந்தாலும், கொல்லராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும், பெண்ணின் வழிநின்றே அடிப்படையான வாழ்வியல் கல்வியும் பொறுப்புகளும் கையளிக்கப்பட்டு மேன்மைப் படுத்தப்படுகிறது.   ஒரு பெண் எவ்விதம் மையமாக இன்றைக்கு இருக்கிறாள்? பெண்ணே குழந்தைகளை வளர்க்கிறாள். குடும்பத்தை நிர்வாகம் செய்கிறாள். தொழில், ஊடகம், அரசியல் என பல துறைகளில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்… இப்படிப் பல பதில்களை நாம் பெற முடியும்.
சமீபத்தில் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். ‘மேகவர்ணம் என்கிற பூங்கோவை’ என்று  தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார். தன் பெயர் பற்றி அவருக்கு மிகப்பெருமை என்றும் சொன்னார். அவருடைய மிகத்தெளிவான உச்சரிப்பும் சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுகிற குழப்பமற்ற பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிப் பேசுவது நிறைய பேருக்குக் கை வருவதில்லை என்பது என்னுடைய எண்ணம்.
‘அப்புறம் என்ன இந்தப் பக்கம்’, ‘இன்னைக்கு உங்க முகம் கொஞ்சம் வாடியிருக்கிறாற்போல இருக்கே’, ‘உடம்புக்கு எதுவும் சரியில்லையா’, ‘உங்கள் குரல் என்னவோ போல இருக்கேங்க’, ‘எதுனா பிரச்னையா’ எனத் தொடங்கும் பெரும்பாலான பேச்சுகள் எல்லாம் எதிரே இருப்பவரிட மிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெறுவதற்கான தொடக்கமே. நமக்கு ஒருவரிடமிருந்து ஒரு தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால்,  ‘என்னங்க… உங்களைப் பற்றி இன்னார், இப்படிச் சொன்னார், என்ன விஷயம்’ என்று நேர்படத் தொடங்குவதில்லை. வேறு எங்கோ பேச்சைத் தொடங்கி, ஊர்வம்பு பேசி, எதிரே இருப்பவர் தன் வாயாலேயே நாம் விரும்பும் அந்தச் செய்தியை சொல்லுகிறாரா என ஆராயும் மனோபாவம்  பலருக்கு இருக்கிறது. இது போல இல்லாமல், பூங்கோவை தன்னைப் பற்றி சொல்லி, என்னைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்ட உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. இதனால் மட்டுமல்ல… அந்த உரையாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கியமான வேறு ஒன்றும் உண்டு.
அவரிடம் நான், ‘என்ன படிச்சிருக்கீங்க’ எனக் கேட்டேன்… சற்றும் யோசிக்காமல், ‘நான் நல்லா விவசாயம் செய்வேன்’ என்றார் அவர்.  மேலும், அவரே தொடர்ந்தார்… ‘தென்னை, நெல், கத்தரிக் காய், வாழை, மிளகாய், தக்காளி… இப்படி  எல்லாப் பயிர்களையும் எந்தப் பருவத்தில் விதைக்கணும், களை எடுக்கணும், மருந்து தெளிக்கணும், அறுவடை செய்யணும் என ரொம்ப தெளிவாத் தெரியும்’ என்றார். ‘என்னுடைய படிப்புன்னா, அது நிலத்துல இறங்கி விவசாயம் செய்யுறதுதான்’ என்றார். ‘அப்பா ஏர் பிடித்து உழ, அம்மா நிலத்தில் இறங்கி விதை தூவவும் களை பறிக்கவும் என இருப்பார். அதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
அறுத்த நெல் கதிரை அம்மா களத்தில் சேர்க்க,  அவற்றை அப்பா அடித்து தானியங்களாக பிரித்தெடுக்க, பின்பு இருவரும் சேர்ந்து சேகரிக்க, அதைப் பார்த்து விவசாயம் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார். ஆண்கள் பலரும் விவசாயத்தை விட்டு வேறு பணிக்குச் சென்றுவிட்ட இந்தக் காலத்தில், அடுத்த தலைமுறைக்கான தானியங்களைச் சேமித்து வைக்கிற ஆதித் தாயாக இந்தப் பெண்ணை அப்போது உணர்ந்தேன். ஒருகணம் கண்கள் மூடி அவரை  வணங்கினேன். இவரைப் போன்ற பெண்களே இந்த சமூகத்தின் மையமாகத் திகழ்கிறார்கள்.
இது நிலா, இது வானம், இது கடல், இது பூ, மலை, மரம், செடி, கொடி, ஆடு, மாடு என நாம் வாழும் சூழலையும் நம் சூழலின் சுற்றுப்புறத்தையும் அனேகமாக நம்முடைய மூன்று வயதுக்குள் தெரிந்து கொள்கிறோம். இதனைத் தெரிவிப்பவர் பெரும்பாலும் அம்மாவாகவே இருப்பார். மூன்று வயதுக்குள் நாம் தெரிந்து கொண்ட  பலவற்றுக்குத்தான் பின்னாட்களில் அறிவுநிலை சார்ந்த விளக்கம் அறிந்து கொள்ளும்படியாக கல்வி நிலையங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன. அதன்பின்பே சமூகம் தன்னுடைய அனுபவம் சார்ந்த கற்பித்தலைச் செய்கிறது. இவ்விதமாகவே ஒருவர் தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறார்.
ஓர் ஆண் மன்னனாக நல்ல ஆட்சி நல்கவும் ஓர் ஆண் வீரனாக தன்னுடைய இனத்தையும் நாட்டையும் காக்கவும் ஓர் ஆண் சான்றோனாக சமுதாயத்தில் உயர்வு பெறவும் ஒரு பெண்ணே வழிப்படுத்துகிறாள்.
பெண் என்பவள் உற்பத்தித்திறன் உடையவள் என்பதால்தான், அவளை நதியாகவும் நிலமாகவும்  தெய்வமாகவும் போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கிற
முதலாளித்துவ சிந்தனை வளர்ந்திருக்கக்கூடும்.

யார் பொன்முடியார்?

இவர் ஆணா, பெண்ணா என்கிற விவாதம் கூட ஏற்பட்டிருக்கிறது. சங்கப் பாடலில் இவர்  எழுதிய 3 கவிதைகள் தவிர, புறத்திரட்டில் தகடூர் யாத்திரையில் 3 பாடல்கள் உள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தகடூர் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியை, அவருடைய தம்பி சேரநாட்டை ஆண்ட பெருஞ்சேரல் இரும்பொறை வெற்றி கொள்கிறார். சேர அரசன் இரும்பொறையை பொன்முடியார் பாராட்டிப் பாடி இருப்பதால், இவர் சேர நாட்டைச் சேர்ந்த பெண்ணாக  இருக்கலாம் எனக் கருதுகின்றனர். பண்டைய சேரநாட்டில் பொன்முடிநல்லூர் என்று ஓர் ஊர் இருந்திருக்கிறது. இவ்வூர் பெயர் இவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இப்போதைய தர்மபுரியே பண்டைய காலத்தில் தகடூர்.
அந்தந்த ஊர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர் அந்தந்த ஊர் மக்களுக்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும், அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (கி. ஸி. ழிஷீ. 205 ஷீயீ 1919) கூறுகிறது. பொன்முடியார் என்கிற இந்தப் பெண்பாற் புலவரை பண்டைய அரசுகளின் கொள்கைகளை அறிந்த சமூக அரசியல் அறிவுடன் செயல்படுபவராகவும் கொள்ளலாம்.

ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)

சக்திஜோதி
ஆண்-பெண் உறவு என்பது பிரிவு காலத்திலேயே மிகுந்த வலிமையுடன் இருக்கிறதை அறியலாம். பிரிவு காலத்தில் தனிமையில் வருந்தும் தலைவி மிகவும் வாடியிருப்பாள். அவள் வாழும் சூழலின் கருப்பொருட்கள் மூலமாகவும் தலைவனின் நினைவில் மேலும் துயர் அடைவாள். அது போலவே பிரிந்து சென்றிருக்கும் தலைவன், தான் செல்லும் வழியின் கருப்பொருட்கள் மூலமாக தலைவியை நினைவு கொள்வான். இவ்விதமாக காணும் பொருள் யாவும் தலைவன் – தலைவி இருவருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்த காலங்களை நினைவில் கொண்டுவந்து சேர்க்கும். இந்த மனம் சங்க காலத்துக்கானது மட்டும் அல்ல… குறுந்தொகை மனதின் நீட்சியாக கவிஞர் தேன்மொழி தாஸின் கவிதை இது…
‘வானவில் நீண்டு
பள்ளத்தாக்கை ஊடுருவி
சிகரத்தை சிகரத்தோடு
தைத்துக் கொண்டிருந்தது
மரஅணில்களின் காதலில்
சிதறிய கல்லின் ஓசை
வண்ணத்தில் பாய்ந்து
ஏழு ஸ்வரமானது
நீ தேவதேவன்
என் கண்களின் நிறம் கசக்கி
மேகங்களில் ஏற்றி
ஓட்டிக்கொண்டு போய்விட்டாய்
காட்டுத்தீயாய் பரவுகிறது
பூ மைனாக்கள் பேசி நிறுத்தும்
இடைவெளிகளில்
இடரும் நினைவுகள்…’
இந்தக் கவிதையில் தலைவனைப் பிரிந்து தனிமையிலிருக்கும் தலைவி அவள் காணும் கருப்பொருட்களின் மூலம் அவனை நினைக்கிறாள் என்று அறிய முடிகிறது. கருத்தும் செயலும் ஒன்றாக இருக்கும் தலைவன்-தலைவி இருவருக்கும், அவர்கள் காண்கின்ற எல்லாமும் ஒருவரை ஒருவர் நினைவூட்டுவதாகவே இருக்கும் என்பதை உணரலாம். பெண்ணின் தனிமை பேசுகிற இக்கவிதையிலிருந்து இந்த தனிமைக் காலத்தில் ஆணின் நிலையைப் பேசுகிற சங்கப்பாடல் ஒன்றில் மனம் நிலைபெற்றது.
‘உள்ளார் கொல்லோ தோழி’ என்கிற வரியை விட்டு மனதை  அகற்றவே இயலவில்லை. எத்தனை  நம்பிக்கை இந்தப் பெண்ணுக்கு. தலைவன் நம்மை நினைக்காமல் இருப்பாரா? அப்படி அவரால் இருக்க முடியுமா? அவர் செல்லும் வழியிலெல்லாம் அவர் காண்கிற அத்தனையும் அதன் அதன் தனித்த அர்த்த பரிமாணத்தில் நம்மை நினைவுபடுத்தும்தானே எனச் சொல்கிற ஊண் பித்தையார் என்கிற பெண்பாற் புலவர்  எழுதியுள்ள பாடல் குறுந்தொகையில்
உள்ளது.
‘உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார்
கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண்
டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே…’
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம் மேற்கொண்ட வினை முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் நம்மைத் தேடி அவர் வரவில்லை. உரல் போன்ற கால்களையுடைய யானை
‘யா’ மரத்தின் கிளைகளை ஒடித்து உண்டுவிட்டு சென்றிருக்கிறது. அங்கே மீதமிருக்கும் அடர்வு குறைந்த கிளைகளின் வழியாக  வெயில் புள்ளிகளாக விழுகிற அந்த மரத்தின் நிழலில் ‘மரல்’ என்கிற கொடியை தேவையான அளவுக்கு உண்ட ஆண்மான் படுத்திருக்கிறது. அந்தக் காட்சியை மலைகளைக் கடந்து செல்லும் தலைவர் பார்க்கிறார். இந்தக் காட்சியைப் பார்க்கும் தலைவர் தலைவியை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் என தோழி, தலைவியிடம் சொல்லி அவளைத் தேற்றுகிறாள். இந்தக் காட்சி எவ்விதம் தலைவியை நினைவுபடுத்துகிறது என வேறு சில சங்கப் பாடல்களுடன் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது.
யானை ஒன்று மரத்தின் கிளையை ஒடித்து உணவு உண்டு செல்லுதல் போன்ற காட்சி, ஆலந்தூர் கிழார் எழுதிய குறுந்தொகைப் பாடலில் (112) வருகிறது.
‘கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம்
படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்ட
என் நலனே…’
இந்த வரிகளை இங்கே இணைத்துப் பார்க்கலாம். மரத்தின் கிளையை பெரிய யானை வளைத்து முறித்து உண்கிறது. ஒடிந்த கிளையானது  முழுமையும் முறிந்து நிலத்தில் விழாமல், நார் மிகுந்து வழியும் நீருடன், மரத்திலிருந்து துண்டிக்கப்படாமல் இருக்கிறது. முற்றிலும் ஒடிந்து வாடி உலராமல், நீர்ப்பற்றுள்ள நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் தன்மையுடன் இருக்கிறது. இதைப் போல தலைவியின் நலன் தலைவனால் முற்றிலும் உண்ணப்
படாமலும் பழைய நிலைக்குத் திரும்ப இயலாமலும் தழைத்து துளிர்க்கும் காதலுடன் இருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் குறிப்புணர்த்துகிறது. ஊராரின் தூற்றுதலுக்கு அஞ்சினால் தலைவன் மேலுள்ள காமத்தை விடவேண்டும். காமத்தை விட வேண்டும் என்றால் தலைவியிடம் எஞ்சியிருக்கும்  நாணத்தை விட வேண்டும். நாணத்தையும் விட இயலாமல் காமத்தையும்  விட இயலாமல் இருக்கும் தலைவியின் நிலையைச் சொல்கிறது இந்தக் காட்சி.
மற்றொன்று,  பாலை பாடிய பெருங்
கடுங்கோவின் பாடல்…
‘நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே…’
தலைவன் விரைவில் திரும்பி வந்துவிடுவான் என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூறும் செய்தி இது. ‘இவன் சென்ற வழியில் ஆண் யானை ஒன்று தன் பெண் யானையின்  பசியைப் போக்க ‘யா’ என்னும் மரத்தின் பட்டையை  உடைத்து, உரித்து அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இந்த அன்பு தலைவன் நெஞ்சைத் தொடும். அவன் உன் மீது பெருங்காதல் கொண்டவனாதலின் திரும்பி வருவான்…’ யானையின் செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறி,  இறைச்சிப் பொருளில் அமைந்திருக்கிறது இப்பாடல்.
சங்க காலம் என்பது இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதை சங்கப் பாடல்களின் வழியாக அறிய இயலுகிறது. முதற்பொருளான நிலமும் காலமும் சங்க கால வாழ்வியலைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. போலவே நிலத்தில் காலத்தால் தோன்றுகிற கருப்பொருட்களான தெய்வம், மனிதர், பறவை, விலங்கு, ஊர், நீர், மரம், பூ, உணவு, இசை, தொழில் போன்றவை அந்தந்த நிலத்தின் அக ஒழுக்கங்களைக் கட்டமைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களில் வருகிற ‘யா’ மரம் தொடர்ந்து மேலும் பல சங்கப் பாடல்களில் வருகிறது என்பதால், இந்த மரத்தைத் தொடர எனக்குத்  தோன்றியது. பாலை நிலத்திலுள்ள இந்த ‘யா’மரம் யாஅம், விளாம், மரா, சாலம், குங்கிலியம், ஆச்சா எனவும் அறியப்படுகிறது. இம்மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கதென்று தெரிகிறது.
பவுத்த சமயத்தின்  புனிதக் குறியீடுகளில் சாலம் மரம் எனவும், இந்த மரம் சிற்பம் செய்யப் பயன்படுகையில் ஆச்சா எனவும், மருத்துவக் குறிப்புகளில் குங்கிலியம் எனவும் வேறு வேறு பெயர்களில் வழங்கப்படுகிற ‘யா’மரம் சங்க இலக்கியத்தில், தம் பெண்ணிடத்து அன்பு வைத்து காக்கிற ஆணின் மனதைச் சொல்கிறதாகவும் இருக்கிறது. ஒரே மரம் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் நிலத்தின் தன்மையில் வேறுவேறு பெயர் கொண்டு அறியப்படுவது போலவே பெண்ணும் அவளுடைய தனித்த தன்மையை அவள் வாழும் நிலத்தின் பண்பே நிர்ணயிக்கிறது என்றும் உணர முடிகிறது.
மரத்தின் கிளையை உடைத்து இலைகளைப் பறித்து உண்ணுகிற யானை தனக்கு போதுமான அளவே உண்ணுகிறது என்கிற  ஆலந்தூர் கிழாரின் பாடலில் தலைவியின் தவிப்பினை அதன் கசிந்து வழியும் ஈரத்துடன்  மறைபொருளாக தலைவனுக்கு உணர்த்துகிறாள் தலைவி. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடலில் தலைவியின் தவித்து தகித்திருக்கும் நிலையை தணிப்பது தலைவனின் கடமையென உணர்த்தப்படுகிறது. இந்த இரண்டு ஆண்பாற் புலவர்களின் பாடல் வழியாகச் சொல்லப்பட்ட பொருளில் உடன்பட்டும் சற்று மாறுபட்டும் தலைவியின் நிலையை தோழியின் குரல் வழியாக ஊண் பித்தையார் பேசுகிறார்.
‘வினையே ஆடவர்க்கு உயிரே’  என்கிற சொல்லாடலை பெண் மதிக்கிறாள். அந்தச் சொல்லின் பொருளை ஆண் உணரும்படி அவளே தூண்டுகிறாள்.
ஓர் ஆணுக்கு  செய்து முடிக்க வேண்டிய கடமைகளாக அவனுடைய செயலைப் பற்றிய கவனக் குவிதலை அவனுக்குத்  தூண்டுதல் செய்து, உள்ளிருந்து இயக்குவதும் உடனிருந்து வழிப்படுத்துவதும் அவனுடைய பெண்ணின் செயல்பாடாக இருக்கிறது என்பதை இவரின் பாடல் பேசுகிறது. அதனாலேயே தலைவன் மேற்கொண்டிருக்கும் வேலை முடியாமல் அவர் திரும்ப மாட்டார் என்று தனக்குச் சொல்வது போல அவனுக்கும் உணர்த்துகிறாள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்கிற சொல்லாடலின் பின்பு ஒரு பெண்ணின் தனித்திறன் அடக்கப்படுவதான  எண்ணம் பரவலாக  உள்ளது. உண்மையில் ஓர் ஆணை செயலூக்கம் மிக்கவனாக உருவாக்க பெண்ணின் முழுமனமும் உடலும் அவனுடனே கூட இருந்து செயல்படுகின்றன.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பக்திக்கதைகள், மாயாஜால மந்திரக் கதைகள் காலம் கடந்து பொதுமக்களின் கதைவெளிக்குள் பேசப்பட்ட  அநேகமான திரைப்படங்கள் எந்த விதமான கதைகளை பேசி வெற்றி பெற்றன என்று ஒரு புள்ளிவிவரம் எடுத்துப் பார்க்கலாம். கதாநாயகனாக காட்டப்
படுபவர்கள்  தத்தியாக, கோழையாக, கல்வியறிவு குறைவு பட்டவனாக,  வெற்றி பெற இயலாதவனாக, தொடர்ந்த தோல்வியில் தளர்வுற்றவனாக,
தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக, எதிர்மறை எண்ணங்கள் கொண்டவனாக, ஊனமுற்றவனாக அல்லது மனப் பிறழ்வு ஏற்பட்டவனாக,  ஊதாரியாக, குடிகாரனாக, பெண் பித்தனாக, அகம் பாவம் கொண்டவனாக… இப்படியான எதிர்மறை குணம் உள்ள ஆண்களைச்   சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஆண்
களை காதல் செய்து அல்லது திருமணம் செய்து  நல்வழிப்படுத்தி அவர்களை  சமூகத்தின் முக்கிய நிலைக்கு உயர்த்தி ஒரு பெண் செயல்படுவதான கதைகளே இன்றளவும் வெற்றி பெறுகின்றன.
இவ்வகையான கதைகள் சரியா தவறா அல்லது உண்மையைத்தான் சொல்கின்றனவா என்பன போன்ற வாதங்களை எல்லாம் கடந்து, நிகழ் வாழ்விலும் இவ்வகையான மனிதர்களை நாம் காணத்தான் செய்கிறோம். காமத்தை விட இயலா மலும் நாணத்தை விட இயலாமலும் தவித்திருக்கும் பெண்ணின் தயக்கத்தின் மீதே ஆணின் வாழ்வு கட்டப்படுகிறது. அவள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே அந்த ஆண் இயக்கம் மிக்கவனாக மாறுகிறான்.  தொடங்கிய காரியம் முழுமையும் நிறைவடையாமல் தலைவியைத் தேட மாட்டார்  என்று திரும்பத் திரும்ப ஒரு பெண்ணே கூறுவதன் மூலம் ஆணின் செயலை முழுமையும் முடிப்பதில்தான் பெண்ணின்  கவனமும் இருக்கிறது என்று அறிய முடிகிறது. ‘யா’மரம் போல பெண்  தனக்குள் நீர்மையையும் வைத்திருக்கிறாள்…  உறுதிமிக்க சிற்பமாகவும் இருக்கிறாள்… செயலூக்கம் மிக்கவனாக நாம் காண்கிற  ஒவ்வொரு ஆணின் உள்ளிருந்தும் ஒரு பெண் இயக்குகிறாள்.
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம்
மேற்கொண்ட  வினை முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் நம்மைத் தேடி அவர் வரவில்லை.
ஊண் பித்தையார்
இவரது பெயர் காரணம் தெரியவில்லை. ‘ஊண் பித்தி’ என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். வேறு சிலர் இவர் பெண்பாற் புலவர் இல்லை என்றும் சொல்கின்றனர். ‘உண்’ என்ற சொல்லின் நீட்டம் ‘ஊண்’.  அதனால் ‘உணவு’ என்று பொருள் கொள்ளலாம். ஆனால், ‘பித்தை’ என்கிற சொல்லுக்கு ‘தலைமயிர்’ என்று பொருள் வருகிறது எனவும்,  உணவு, தலைமயிர் என்பதை இணைத்து தொடர்புகொள்ள இயலவில்லை என தாயம்மாள் அறவாணன் குறிப்பிடுகிறார். என்றபோதிலும் ஊண் பித்தையாரின் பாடல் அகப்பாடலாகவும் பெண் கூற்றாகவும் இருப்பதைக் கணக்கில் கொண்டு, இவர் பெண்பாற் புலவராகவே அறியப்படுகிறார். இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது. பாடல் எண்: 232

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...