Monday, December 28, 2015

நீதிபதி சந்துரு அவர்கள்

கிராமத்தின் பொதுவெளியில் ஒரு மரம் அதனருகில் ஒரு மேடை - அப்படியொரு அமைப்பைப் பார்த்தால் நமது பொதுப்புத்தி சொல்லும் அது நீதி வழங்கப்படும் இடம் என்று. கூடவே, நம் மனம் நிமிர்ந்தமர்ந்த, நேர்கொண்ட பார்வையோடு ஒருவரை  அங்கு அமர்த்தி விடும். அந்த இடத்தில் அவர்தான் நீதிபதி. நாம் அறிந்திருக்கிறோம், இங்கிருக்கும் எல்லாவற்றையும் விட நீதி மேலானது என்பதை .சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் மேடை ஒன்று அடையாளம் கண்டறியப்பட்டது. அது  நீதி வழங்கும் ஒரு இடமாக இருந்திருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது.

நீதி அமைப்புகளால் வழங்கப்படும் தீர்ப்பை சத்தியவாக்குபோல் நாம் நம்புகிறோம். நீதிபதியின் முன், வழக்கறிஞர்கள் கைகூப்பும் ஒவ்வொரு தருணமும் நீதி தேவதையை அவர்கள் ஆரத் தொழுகிறார்கள்.

​முற்காலங்களில் , கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே  மெய் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு.அமைச்சர்கள்,  அறிஞர்கள் எனப் பலர் கூடி விவாதித்து பின்னர் அரசனால் தீர்ப்பு வழங்கப்பட்டது என அறிகிறோம். அந்தத் தீர்ப்பின் விளைவாகத் தண்டனை வழங்கப்பட்டதை சில கல்வெட்டுகளின் வழியாகவும் நம்மால் அறியக்கூடுகிறது. முற்காலத்தில் சமிதி, சபா என்ற அமைப்புகள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை மேற்கொண்டன என்பதை நாம் வரலாற்றில்  படித்திருக்கிறோம். அப்போது  தீர்ப்பின் மொழி அனைவருக்கும் புரிந்தது. காலப்போக்கில் , நீதிமன்றங்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு , வருவாய், கல்வி, பாதுகாப்புத் துறைகளைப் போல அதுவும் ஒரு தனித்துறையாக மாறியது. அதன் விளைவாக, வழக்கின் மொழியும் , தீர்ப்பின் மொழியும் மக்களுக்கு அந்நியமாயின. நீதிமன்றங்கள் ஆங்கில மொழியைத் தங்களது அலுவல் மொழியாக மாற்றிக் கொண்ட செயல்பாடு, இந்த அந்நியத் தன்மை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியது. அற மதிப்பீடுகளைப் புறக்கணித்து தீர்ப்புகள் பெரும்பாலும் சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட போது, அது மக்களின் நம்பிக்கையை கரையச் செய்தது. வழக்கு நிலுவை, வாய்தா, காலநீட்டிப்பு என்பதன் வழியாக தாமதப்படுத்தப்படும் நீதி , மறுக்கப்படும் நீதி என்ற கருத்தை தாங்கிய எதிர்மனோநிலை கொண்டவர்களாக மக்களை மாற்றியது. தீர்ப்பு என்பதை சாதகம் அல்லது பாதகம்  என்ற இரட்டை வார்த்தைகளாக மக்கள் சுருக்கிக் கொண்டார்கள். தீர்ப்பின் மதிப்புமிக்க காரணிகளான ஆளுமை, மதிநுட்பம் மற்றும் முடிவெட்டும் திடம் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணரப்படாமல், சாரமற்றதாகவும்,  மாற்றங்களை உண்டாக்கும் தகுதியற்றவையாகவுமே  தற்காலத்தில் தீர்ப்புகள் கருதப்படும் நிலை உருவாகிவிட்டது.

​இருப்பினும் நீதியின் கதவுகள், தட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன, வழக்குகள் குவிந்து கொண்டேதான் இருக்கின்றன். வெவ்வேறு செயல்பாட்டு முறைகள் கொண்ட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட போதும், வழக்கின் எண்ணிக்கை குறையவில்லை.வழக்குகளோடு மக்கள் நீதிமன்றங்களை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால், நீதியைக் கடவுளோடு அவர்கள் இணைத்துப் பார்க்கிறார்கள். நீதிமன்றத்தைக்  கோயிலாகவும் நீதிபதியைக் கடவுளாகவைம் உருவகித்துக்கொள்கிற மனித மனம் நீதி அமைப்புக்குள் தன் பிரச்சனைக்கான நியாயத்தை அடைந்துவிட முடியும் என நம்புகிறது. ஒரு இடத்தில் தோற்கும் போது இன்னொரு இடத்தைப் பற்றிக்கொள்ளுதல் மனித இயல்பு. அதுதான் மேல்முறையீடுகளுக்குக் காரணமாக அமைகிறது. நல்லது /  கெட்டது, தர்மம்/ அதர்மம்  என்பதை பகுத்துப்பார்த்து செயல்படும் அறநெறிக் கோட்பாடுகளின் பாதுகாவலராக நீதி அமைப்பை நாம் நினைத்துக்கொள்கிறோம். பகுத்தறிவை உள்ளடக்கிய அறநெறியும், உணர்வுகளை செம்மைப்படுத்தும் ஆன்மீகமும் மானுடத்தை இயக்கிய போது , நீதி எல்லாவற்றுக்கும் தலையாயது என அது ஒத்துக் கொண்டது.

சமநீதி என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்கும் இன்றைய காலக்கட்டத்தில் ஒருசில நீதிபதிகளின் முயற்சிகளால் நீதியின் மொழி புதிர்த்தன்மையிலிருந்து சற்றே விடுபட்டிருக்கிறது. அது மனிதர்களுக்காக, மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதர்களிடையே உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் என்பதை மதிப்பிற்குரிய நீதிபதி சந்துரு அவர்களின் அம்பேத்கார் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற இந்தப் புத்த்கம் விளங்கவைக்கிறது.  நம்முள் இத்தனைகாலமும் மூடப்பட்டுக்கிடந்த கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து, தீர்ப்புகள் இப்படித்தான் எழுதப்படுகின்றன என்ற வெளிச்சத்தை இந்த நூல் நம் மீது பாய்ச்சுகிறது. நம்மில் பலருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த்த் தீர்ப்புகள் எப்படி உருவாக்கம் பெற்றன என்ற நுட்பமான செயல்பாட்டைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது. அதை சாத்தியப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.அனுபவம்,ஆய்வு,சுயசரிதை என்ற வடிவங்களின் கூறுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அவற்றையெல்லாம் தாண்டிப் புதுவகை இலக்கியமாக இந்த நூல் திகழ்கிறது.அதுமட்டுமின்றிப் படைப்பிலக்கியத்தின் வடிவங்களோடும் இதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது.

இந்தப் புத்தகத்தை தீர்ப்புகளின் தொகுப்பு என்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் அது நம் போதாமையின் வெளிப்பாடாகவே இருக்கும். இதிலிருக்கும் தீர்ப்புகள் வெறும் தீர்ப்புகள் அல்ல. இச்சமூகத்தில், மறுக்கப்பட்டதை எதிர்த்து, இயற்கையில் கிடைக்க வேண்டியதைக் கொடு என இடப்பட்ட ஆணைகள் தான் இந்த்த் தீர்ப்புகள். போராட்டங்களின் முடிவில் எட்டப்படுவதை, சில சமயம் எட்ட முடியாமல் போனதை,  சாத்தியப்படுத்தியப் பெருமை இத்தீர்ப்புகளுக்கு உண்டு. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு போராட்டத்தின் விளைவு/ வெற்றி என்று சொல்வதைவிடவும், இந்தத் தீர்ப்புகளின் அடித்தளத்தில் பல போராட்டங்களால் ஏற்படும் விளைவும், வெற்றியும் குவிந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

இப்புத்தகத்தின் முதல் அத்தியாயமாக  ’பெளத்தம் ஏன்?’  என்ற கட்டுரை உள்ளது. பெளத்தம், புத்தர் என்றவுடன், முன்வைக்கப்படும் சில விமர்சன்ங்கள் உள்ளன. புத்தரிடம் ,  அவரது, தாய், வளர்ப்புத் தாய் மற்றும் மனைவி ஆகிய நெருங்கிய பெண் உறவுகள் , தங்களை சங்கத்தில் சேர்த்துக் கொள்ள கோரும்போது , புத்தர் மறுத்து விடுகிறார். சீடர்களுக்கும் புத்தருக்கும் அது குறித்த விவாதம் நடக்கிறது. பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்கும் ஒரு சீடனிடம் புத்தர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
பெண்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். அப்படியே பார்த்துவிட்டால் பார்க்காத்துபோல் சென்றுவிடுங்கள். அவர்களோடு பேசாதீர்கள். .... பெண்களோடு இச்சையில் மகிழ்ந்து வாழ்வதைவிட கொடும் புலியின் வாயில் விழலாம், கொலைகாரர்களின் வாளுக்குப் பலியாகலாம்( The Gospel of Buddha, Compiled from ancient records by PAUL CARUS, London, 1894, p-93)என்கிறார். இதை எடுத்துக்காட்டி பௌத்தம் பெண்களுக்கு எதிரானது என வாதிடுவோர் உண்டு. ஆனால் பௌத்தத்தை ஆராய்ந்தால் அதிலும் குறிப்பாக அதை இந்து மதத்தோடு ஒப்பீட்டால் அது இந்து மத்த்தைவிடவும் பெண்களை மதித்த ஒரு மதமாகவே நாம் கருதமுடிகிறது.

 
பௌத்தம் மீதான இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளித்து அது பெண்களுக்கு அளித்திருக்கும் சிறப்பான இடத்தை விவரித்த அம்பேத்கர் , பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1951 இல் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தியப் பெண்கள், பௌத்தத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ளாததுபோலவே அம்பேத்கர் பெண்ணினத்துக்கு ஆற்றிய தொண்டையும் அங்கீகரிக்கவில்லை.பிரக்ஞைபூர்வமாக அரசியல் செயல்பாடுகளில் பங்கெடுக்கும் பெண்களும் இந்த வரலாற்று மறதிக்கு ஆளாகியிருப்பதுதான் நம்மை சங்கடப்படுத்துகிறது. அம்பேதகரை மட்டுமல்ல நீதிபதி சந்துரு அவர்களையும் தமிழ்நாட்டுப் பெண்ணிய அமைப்புகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அப்படிப் புரிந்துகொண்டிருந்தால் பெண்ணடிமையின் உற்பவிப்புத் தளங்களில் முக்கியமான ஒன்றான  கோயிலில் பெண்களும் அர்ச்சகராகலாம் என்று அவர் அளித்த புரட்சிகரமான தீர்ப்பை அவர்கள் கொண்டாடியிருப்பார்கள்.

இலக்கியம் என்ன செய்யும்? இலக்கியம் என்ன தரும் ? இது இலக்கியம் சாராதவர்கள் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி. இலக்கியம் காலத்தின் கண்ணாடி, அது வரலாற்றைக், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது, இலக்கியம், ஆக்கம்/அழிவு, வாழ்வு/ மரணம், துக்கம்/ மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. ஆனால், இலக்கியம் சமூகத்தை சமன் செய்யக்கூடிய வலுமிக்க தீர்ப்புகளை வழங்கும் என்பதை இப்புத்தகம் புதிய தகவலாய்த் தருகிறது (பக்கம்41, ப- 44, ப- 80)

சிலப்பதிகாரம் உள்ளிட்ட அநேக இலக்கியங்கள் அற போதனைக்  குவியல்களாக நம்மிடம் உள்ளன. நாம் அவற்றை சரியாக்க் கையாண்டதே இல்லை. ஆனால், இதிலிருக்கும் தீர்ப்புகள் , இலக்கியத்தை மிகச் சரியாக்க் கையாண்ட நீதிபதியை நமக்குக் காட்டுகின்றன.

பஞ்சமி நிலம் குறித்த தீர்ப்பை வழங்க இலக்கியம் மட்டுமல்ல, வரலாறும்  இவருக்குப் பயன்பட்டிருக்கிறது. நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பு ஒன்றில் அமெரிக்காவின் பூர்வகுடியான ஆதிவாசி ஒருவரின் கவித்துமான வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்:


ஒரு வண்ண ஓவியத்தை சிறு கீறல்களை உண்டாக்கி அழிக்கவோ

அதன் அழகைக் குலைக்கவோ முடியாது.

பூமியின் வெதுவெதுப்பையும் ஆகாயத்தையும் எப்படி உங்களால்

வாங்கவோ விற்கவோ முடியும்?

இந்த எண்ணமே வினோதமானது

காற்றின் தூய்மையும், நீரின் தவளைகளும் நமக்குச் சொந்தமில்லாத
போது , அவற்றை எப்படி வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு அடியும் எனது மக்களுக்கு உரியது

இந்த மண்ணில் ஊடுருவும் ஒளிக்கதிர், மணல், கடற்கரை, அடர்ந்த காடுகளின் ஊடே தோன்றும் பனித்துளி, அங்கு ரீங்காரமிடும் உயிர் வாழ் இனங்கள் அனைத்தும் எம்மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறது.

நட்சத்திரங்களுக்கு இடையே உலவிக் கொண்டிருக்கும் எம்மக்களைப் பார்த்து தங்களின் தாய்நாட்டையே மறந்து கொண்டிருக்கிறனர் அந்த வெள்ளையர்கள்

எங்கள் மூதாதையர் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை.

இந்த உலகத்தின் ஒரு அங்கம் நாங்கள்

இந்த உலகம் எங்களின் ஒரு அங்கம்

இங்கு மலர்கின்ற பூக்கள் எங்களின் உடன்பிறந்த சகோதரிகள்

இங்கு காணப்படும் குதிரை மற்றும் கழுகுகள் எங்களின் சகோதரர்கள்

இங்குள்ள மலை உச்சி, தெளிந்த நீரோடைகள் மனிதர்கள் எல்லோரும் ஒரே குடும்பம் “  (ப-42)



அம்பேத்கர் என்ற பெயர் , அந்த வார்த்தை, தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டு வருவதையும், வேறு இனத்தவர்/ இனத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கப்படுவதில் மிகப் பெரிய தீண்டாமை பின்பற்றப் படுவதையும் நம் மனசாட்சி ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து தீண்டாமைக்கு குரல் கொடுத்தவர் என்ற ஒற்றை வரியில் அவரது குரல்வளை நசுக்கப்படுவதற்கும்  நாமே சாட்சிகள். நமக்கு தெரியாது , இராமாயணம், மகாபாரதம் எப்போது யாரால் எங்கே எப்படி எழுதப்பட்ட்து என்பது. ஆயினும் சொல்லப்பட்டதை நாம் நம்புகிறோம், வியக்கிறோம். நமக்குத் தெரியும், நம் அரசியலமைப்பு  எப்போது எழுதப்பட்டது என்பது. நாம் அறிவோம், அது யாரால் எழுதப்பட்டது என்பதை. இந்திய வரைபடத்துள் நம்மை ஒருங்கிணைக்கும் அதன் திறமையை , உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாங்கும் அந்த பலம் மிக்க தூணை. மொழிகளால் இனங்களால் பிரிந்துகிடப்போரைக் கட்டி அரவணைக்கும் அதன் அளவிட முடியா சக்தியை, அது வழங்கும் பாதுகாப்பை. ஆயினும் , நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம், வியக்க மாட்டோம், வணங்க வேண்டாம் மதிக்க்கக் கூட மாட்டோம். அப்படியொரு நிராகரிப்பு. அதன் பின்னணியில் பார்க்கும்போதுதான் இந்த நூலின் சிறப்பு நமக்குப் புலப்படும்.

ரவிக்குமார் தனது பதிப்புரையில், ”அம்பேத்கரின் சிந்தனைகள்  வேறெந்தத் துறையையும் விட நீதித்துறைக்கு அதிகம் பயன்படக் கூடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அம்பேத்கரது சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து , அவரை நிராகரிக்கப்படவே முடியாத ஒரு ஆளுமையாக மாற்றி இருக்கிறது இந்தப் புத்தகம். ’தீண்டாமைச் சுவர்’, ’ சமத்துவமில்லாத கல்லறை’ என, இச்சமூகத்திலிருக்கும் சாதியின் அத்தனை கோர முகங்களையும் காரி உமிழும் இந்தத் தீர்ப்புகளுக்கு நன்றி சொல்லவேண்டும். சமத்துவத்தின்மீது மதிப்பு கொண்டவர்களை இந்தப் புத்தகம் அம்பேத்கரின் சிந்தனைக்குள் அழைத்துச் செல்கிறது. சாதீய வெறி அடங்க சிறுமிகளைப் பாலியல் காவு கொள்ளும் நாற்றமடிக்கும்  இந்தச் சமூகத்திற்கு அம்பேத்கரை இதைவிட தெளிவாக வேறு எவராலும் அறிமுகம் செய்ய முடியாது.

வெ.இறையன்பு அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல , சமன் செய்தல் என்ற கருத்தாக்கத்தை இத்தீர்ப்புகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அம்பேத்கரின் சிந்தனைகளைக் கறை படிந்த சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன் செய்யும் கருவியாகப் பயன்படுத்திய நீதிபதி சந்துரு அவர்களின் சீரிய பணிக்கு நாம் தலைவணங்குகிறோம்.

சுதந்திரத்தை எவரும் அன்பளிப்பாகப் பெற இயலாது. போராடித்தான் அதனைப் பெற முடியும். தன்னிலை உயர்வு என்பது மற்றவர்களின் ஆசீர்வாதத்தால் வருவதன்று. அது ஒருவர் தம் சொந்ப் போராட்டத்தின் மூலமாகவும் , செயல்களினாலும் மட்டுமே அடையக் கூடியது ”     என்று நீதியரசர் சந்துரு அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அம்பேத்கரின் வரிகள் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்டவராகத் தம்மை உணரும் ஒவ்வொருவருக்குமாக எழுதப்பட்ட வரிகள்.

நிலம் மனிதனின் அடிப்படை வாழ்வாதாரம்,. அவனிடமிருந்த வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது, அவன் பலவீனப் படுத்தப்படுகிறான். மனிதனை பலவீனப்படுத்தும் எந்தக் காரியமும் மனித குலத்துக்கே எதிரானது , என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மீட்பு என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, எந்த சட்ட சஞ்சிகைகளிலும் வெளியிடப்படாத போதும், இத்தீர்ப்பு இரு நீதிபதிகளடங்கிய அமர்வில் உறுதி செய்யப்பட்டது (ப -42) என்பதை நீதிபதி அவர்கள் வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்.தமிழகம் முழுவதும் பரவலான பாராட்டுகளை எனது தீர்ப்புகள் பெற்றிருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சட்ட சஞ்சிகைகளில் அத்தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை” “ தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால், அவை சட்ட சரித்திரத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் வாய்ப்புண்டுஎன்னும் அவரின் வரிகளில் மறைந்திருக்கும் வேதனையில் பதைபதைப்பில், தீண்டாமையின் வேர் பாய்ந்திருக்கும் ஆழத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரிய தீர்ப்புகளை சாதியின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றி ஆவணப்படுத்தியதன் வாயிலாக  மணற்கேணி பதிப்பகம் தனக்குக் கூடுதல் பெருமை சேர்த்துக் கொள்கிறது

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...