Thursday, January 18, 2018

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை

முனைவர் பூ.மு.அன்புசிவா
கோயம்புத்தூர்- 641 028
பேச:098424 95241,98438 74545.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

 “இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
     புpழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
 மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)
     இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.
     இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

 "நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
 தட்டோரம்ம இவன் தட்டோரே
 தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

 "அறையும் பொறையும் மணந்த தலைய
 எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
 தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,
"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
 தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
 கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
 நல்குரவு சேரப்பட்டார்'' (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
 அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)
 என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
 இரும்பெரு நீத்தம் புகுவது போல
 அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
 உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)

 என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

 1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.

பெண் கவிதையில் வலி

முனைவர் பூ.மு.அன்புசிவா
கோயம்புத்தூர் – 641 028
பேச : 098424 95241.

     இனபுணர்ச்சியை இத்தனை நுணுக்கமாகவும், வெளிப்படையாகவும். விவரிக்கும் இது போன்ற தமிழ் கவிதைகள் மிக அரிதாக எழுதப்பட்டு வந்தவை.  இன்று இது போன்ற பெண் படைப்பாளர்களின் மத்தியில் பரவலாக விவரிக்கப்பட்டு வருகிறது முக்கியத்துவம் பெறுகிறது.  சிறுகதை, கட்டுரை , நாவல், புதினம் போன்ற வௌ;வேறு ஆளுமையில் பெண்கள் ;இருந்த போதிலும் அதன் அடுத்தகட்டமான  நவீனம்.  அதிநவீனம் என்கிற இலக்கிய கட்டமைப்பில் எழுதப்பட்டு வந்த பெண் ஒரு களம் கடந்து கவிதைகளிலும் ஆளுமை  செய்தது.  கோணங்கி, எஸ்.ராமகிருஸ்ணன்;, எம்.ஐp.சுரேஸ் போன்ற ஆண்கள் மட்டுமே புனைவு  செய்து வந்த இலக்கியங்களை ஒரு காலகட்டத்தில் பெண்களாலும் அவர்களின் ;வலியை , துக்கத்தை, துயரத்தை பிரதிபளிக்க முடியும் என நிரூபித்தது. வெகுஐன பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.  தமிழில் சமையல், வீடு குழந்தைகள் என்ற தளத்திலோ அல்லது பெண்ணியம், சமத்துவம் என்ற தளத்தில் மட்டும் இயங்கிவந்த பெண்மொழி இப்போது பாலியல் உறவுகள், அந்தரங்க விசயங்கள் போன்ற வேறு பல எல்லைகளை தொடத் துவங்கியிருக்கிறது.

    சாரு நிவேதா போன்ற எழுத்தாளர்கள் ஆண்களின் சுய விசயங்களைக் கடந்து பெண்மொழியையும், கவிதை, கதை, கட்டுரைகள் போன்ற வெளிப்பாட்டில் அடையாளம் காண்பித்தார்கள்.  பெண்களுக்கு ஆண்களைவிட அனுபவங்களும், அதற்கான வாய்ப்புகளும் குறைவு என்ற நிலை மாற்றமடைந்து சிலர் தங்களுக்கே உரிய இடத்தை தங்களது படைப்புகளின் மூலம் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனம்.  ஒரு காலத்தில் லட்சுமி மாதிரியான சில பார்ப்பனியப் பெண்கள் மட்டுமே எழுதிவந்த படைப்புகள் சில காலமாற்றத்;தில் பார்ப்பனர் அல்லாத சில பெண்களையும் கடந்து.  ஒதுக்கப்பட்டுக் கிடந்த இலக்கியமான தலித் இலக்கியத்தையும் சிவகாமி, பாமா போன்றோரால் முன்னிலைபடுத்தப்பட்டு கதை வடிவங்கள், நாவல், ஆவணப்படங்கள், என்ற வகைகளும் ஆண்களுக்கு நிகரானது.  திலகவதி, சிவகாமி, பாமா, கிருஷாங்கினி, சல்மா, உமாமகேஸ்வரி போன்றோர் இன்னும் படைப்பாளுமையில் உயர்நிலையில் இருக்கிறார்கள். திலகவதியின் கல்மண்டபம் (நாவல்) சாகித்ய அகடாமி விருதுவரை பெற்றிருப்பது தமிழ் பெண்படைப்பாளர்களுக்கு ஒரு பெரிய அடையாளம் என்றே சொல்லலாம்.

    சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, பாமாவின் கருக்கு, சங்கதி மாதிரியான நாவல்கள் தலித் இலக்கியத்துக்கும் பேச்சுமொழி வழக்கு நாவலில் பெரிய அடையாளத்தையும் கொடுத்து பெரிய அளவில் பேசப்பட்டது.  சல்மாவின் இரண்டாம் ஐhமங்களின் கதை(நாவல்) இஸ்லாமிய பெண்களின் புறவாழ்வியலை எந்த மாற்றமுமில்லாமல் பட்டவர்த்தமாக எழுதியது இஸ்லாத் சமூகத்து மக்கள் மத்தியில் பெரும் ;சர்ச்சையை கிளப்பியது.  சு.தமிழ்செல்வியின் அளம், கீதாரி, கற்றாழை பெரிய அடையாளத்தைத் தந்;தது.  பாரததேவியின் கரிசல் இலக்கியத்தின் பேச்சு ;மொழிக்கதைகள் பரவலாக அறியப்பட்டது பல்வேறு பல்கலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.

    …..சுமக்கவேயில்லாத
    படி எப்படி ;இவ்வளவு
    கனத்துவிடுகிறது
    இந்த மாலை
    மாதவிடாய் ஈரம்நிரம்பி
    கணக்கிற பஞ்சை 
    போல        (கவிஞர்.சல்மா)

    
    சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்(கவிதை) தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள  கவிதை இது.  வெளிவந்த காலகட்டங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது இருந்தாலும் இதுமாதிரியான  கவிதைகள் கடுமையாக விற்பனையானது. பெருவாரியான  வரவேற்பும் கிடைத்தது என்பதை மறுக்க முடியுமா?
தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியத்துக்குப் பின் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது.  தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல  எந்த சமூகத்திலுமே  ஆண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேசினால் அது ஆண்களின் ;அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.  சமீபகாலமாக பெண்கவிஞர்கள். படைப்பாளிகள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேச வந்திருப்பது நல்ல விசயம். மிக முக்கியமான நிகழ்வு புதியதலைமுறை  கவிஞர்களின் அதீத வருகை குறிப்பாக பெண் வாசகர்களின் தனி கவனத்தைப் பெற்று வருகின்றன.  தொடர்ந்து; கவிதைகள் தொகுப்புகளாக வந்துகொண்டுதானிருக்கிறது.  அகத்திணை(கனிமொழி). பச்சைதேவதை(சல்மர்). முலைகள்(குட்டிரேவதி). மஞ்சனத்தி(தமிழச்சி). சங்கராபரணி(மாலதிமைதிரி), இரவுமிருகம்(சுகிர்தராணி), வெரும்பொழுது(உமாமகேஸ்;வ்ரி). லீனாமணிமேகலை. தமிழ்நதி, இளம்பிறை, அ.வெண்ணிலா, சந்திரா, புரியமாதவி, சத்யா இன்னும் பலவென்று எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது.  இதுபோன்ற புதிய தலைமுறைக் கவிஞர்கள் பெண்மொழி வாயிலாக பெண்களின் அந்தரங்க பிரச்சனைகளாக கருதப்பட்டு வருபவை பற்றியும், உடல் பற்றியும், பாலியல் உறவுகள் பற்றியும், பெண்;ணுறுப்புகள் குறித்தும். தைரியமாக எழுதத் தொடங்கியுள்ளது தமிழிலக்கத்தில் பெரிய அடையாளம் சங்ககாலப் பெண்கவிஞரான வெள்ளிவீதியார் பாடல்களிலும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள் பாடல்;;களிலும் பாலியல் நிகழ்வுகள் நிறைய இருந்தன.

    சமகாலத்தில் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது.  எல்லைகளை உடைக்கத் தொடங்கிருக்கும் தங்கள் மீது விமர்சனங்கள் கிளம்புவது நியாயமில்லை என்றே கூறவேண்டும்.  சிலர் ஒரு சில அதிர்ச்சிக்காக எழுதலாம்.  ஆனால் எல்லாக் கவிதைகளையும் அப்படிச் சொல்;லிவிட முடியாது.  பெண்களுக்கான வெளிப்படைப்புலகம் இப்போதுதான் விரிவடைந்து கொண்டிருக்கிறது.  அது முழுவதுமாக அவர்களை ஈர்த்து திசை திருப்பும், யதார்த்தத்தில் இல்லாத, கிடைக்காத சுதந்திரம் கிடைக்கும்.  அனைவரின் பார்வையும் கூர்மைப்படும். இவ்வiயான பெண்களை ஊக்கப்படுத்தலாம்.  கூடிய மட்டும் விவாதம் செய்யலாம்.  விமர்சனம் தவிர்;க்கலாமே. பெண்படைப்பாளி என்கிற பேதமில்லாமல் ;சகபடைப்பாளியாக பார்ப்போமா?

நண்பனின் காதல்...

வார்த்தைகளில்
ஒரு வசீகரம்

செயல்களில்
புது வேகம் .........

பார்ப்பது எல்லாம்
அழகு என்கிறான்......

படிப்பது அனைத்தும்
சுவாரஸ்யம் என்கிறான்.........

பக்கம் வந்து உற்று
பார்த்தேன் கண்களை

உள்ளுக்குள் காதல்
உலவுவதை உணர்ந்தேன் ...............

பரிபாடலில் முருகன் வரலாறு

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர் 
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035
பேச:098424 95241.

“பரிபாடல் என்பது மிகவும் முக்கியமான அதேவேளையில் ஓர் அசாதாரணமான தொகுதியாகவும் காணப்படுகிறது. முதலாவது, இது ஒரு இசைப்பாடல்; இலக்கிய வகை அல்ல. இது முற்றிலும் நிகழ்த்துகை, ஆற்றுகை சார்ந்த ஒரு வடிவம். அதிலே யார் பாட்டு இயற்றினார்கள்? யார் இசையமைத்தார்கள்? என்கின்ற தரவுகள் தரப்பட்டுள்ளன. இசைத்தமிழ் நூல் ஒன்று இங்கு இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது.”  எட்டுத்தொகை இலக்கியங்களுள் ‘ஓங்கு பரிபாடல்’ என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற நூலாதலால் இது பரிபாடல் எனப்பெயர் பெற்றது. பரிபாடல் பாடிய புலவர்கள் பதின்மூவர். அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர் ஆவர். “பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் வனப்பும் காப்பும் தந்த வையை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும்  மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது. பிறதொகை நூற்களைப் போலன்றித் தமிழ்நாட்டின் பகுதிகளையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுளாக இல்லாமல் மதுரை நகரையும் மதுரையையொட்டி ஓடுகின்ற வையை ஆற்றையும், திருப்பரங்குன்றத்தையும், திருமாலிருங்குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனக் கூறுவர். செவ்வேளைப் பற்றிய எட்டுப்பாடல்கள் 612 அடிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன.
கந்தவேளின் பெயர்கள்
முருகன் என்னும் பெயர் பரிபாடல் உள்ளிட்ட எல்லாச் சங்க இலக்கியங்களிலும் பயின்றுவந்துள்ளது. (முருகு:269, அகம்.158, பரி., 5;50, புறம்.,53, ஐங்குறு., 249) ‘விழைவு’ எனப் பொருள்படும். ‘வேள்’ (8:61), என்னும் சொல் அடைமொழி சேர்ந்து நெடுவேள்(3:37) வெல்வேள்(18:36), செவ்வேள்(5:13) எனப் பரிபாடலில் காணப்படுகிறது. கந்தவேளைக் குறிக்கும் செவ்வேள் எனும் பெயர் பரிபாடலில் மட்டும் தான்இடம்பெற்றுள்ளது. அதனால்தான் முருகனைப் பற்றிய பாடல்களைச் ‘செவ்வேள்’ எனும் தலைப்பில் பரிபாடலில் அமைத்தனர் எனலாம்.
வையை வரவும் வளமும்
“வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி 
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு வழை, ஞெமை, ஆரம், இனைய, 
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர் 
வளி வரல் வையை வரவு” (பரி. 12: 1-8)
என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது. மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது. மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும்; நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம், ஞாழல், தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது. இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல  இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார்.
கந்தவேளைக் குறிக்கும் பழைய சொல்லான ‘சேயோன்’ என்பதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். இச்சொல் விகுதியயின்றி, ‘சேய்’ எனப் பரிபாடலில்(6:69, 5:54) வந்துள்ளது. நச்சினார்க்கினியர், ‘செய்யவன்’ என்பதே ‘சேயோன்’ என நீண்டிருக்கவேண்டும் எனக் கருதுவர்.(முருகு. 61, நச்சர்.,உரை), ‘சேஎய்’ என்பது, ‘காஅய் கடவுட்சேய்'(5:13) என, ‘மகன்’ என்ற பொருளிலும் ‘சேஎய்குன்றம்’ (6:69) என, ‘செம்மை’ என்ற பொருளிலும் வந்து வழங்குகின்றது.
‘வேள்’ என்னும் சொல், ‘மன்மதன்’, ‘முருகன்’ இருவருக்கும் பொருவாக இருந்ததால் முறையே ‘கருவேள்'(மன்மதன்), ‘செவ்வேள்'(முருகன்) என்றும் அடைமொழி கொடுத்துக் குறிப்பிட்டனர். இளமையாய் இருத்தலின், ‘குமரன்’ என்றும்(9:82) திருமாலுக்கு மருமகனாய் இருத்தலின், ‘மாஅல்மருகன்” (19:57) முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. ‘வெறிகொண்டான்” (9:44) என்றும் முருகன் அழைக்கப்பெற்றார்.
கந்தவேள் பிறப்பு
செவ்வேளைப் பற்றி பாடிய புலவர்களுள் கடுவனிளவெயினனாரே கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். திரிபுரத்தை அழலால் எரித்தபின்பு சிவபெருமான் உமையோடு சேர்ந்திருந்தான்.இந்திரன் சிவபெருமானிடத்து ஒரு வரம் பெற்று இச்சேர்க்கையால் தோன்றிய கருவை அழிப்பாயாக என வேண்டினான். சிவபெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தின்படி அக்கருவினைச் சிதைத்தான். சிதைக்கப்பட்டகரு அமரர் சேனைக்குத்தலைவனாகும் என ஞானத்தால் உணர்ந்த தெய்வ முனிவர்கள் எழுவரும் இந்திரனுக்கு ஊறு வாராதென உறுதி கூறி அவனிடமிருந்து அச்சிதைந்த கருவை ஏற்றுச் சென்றனர். அதனை அம்மாதவர் வேள்வியின்கண் இட்டனர். பின்னர் அதனை அந்ததி நீங்கலாக கார்த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர். இவ்வறுவரும் அதனை உண்டு சூழுற்றுப் பின் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர். ஈன்ற அப்பொழுதே இந்திரன் இகல்கொண்டு முனிவர்களுக்குத் தான் கொடுத்த வரத்தை மீறி வச்சிரப்படையால் அவற்றை வெட்னொன்.
அவை ஆறு துண்டமாகச் சிதைந்தன. ஆறு துண்டமும் ஆறு குழந்தைகளாகிப் பின் ஒன்றாயின. குழந்தைப் பருவத்திலேயே முருகனிடம் இந்திரம் தோல்வியுற்றதால், முருகனுடைய இவ்வாற்லைக் கண்ட அக்னிதேவன்(அனலன்) தன்மெய்யிற் பரித்துக் கோழியை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இந்திரன் மயிலை அளித்தான். எமன் வெள்ளாடு நல்கினான் (5:12, 14:25-26).
முருகனைக் கார்த்திகை மகளிர் உமையம்மை இருவருக்கும் மகனெனப் பரிபாடல் கூறுகிறது (8:127,128) விட்டான் மனைவியான அருந்ததி, சிவன், முருகன் என்னும் கடவுளரைவிடப் பெருமை வாய்ந்தவள் என்பதை நிறுவவே முருகன் பிறப்புப் பற்றிக் கதைகட்டிவிடப்பட்டுள்ளது என மறைமலையடிகளால் கருதுவர்(மறைமலையடிகளார், தமிழர் மதம், ப.,207)
முருகனின் திருவிளையாடல்
முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் பல பரிபாடலில் காணக்கிடக்கின்றன. பல பரிபாடல்கள் முருகன் சூரபதுமனை மாய்த்ததைக் குறிப்பிட்டுள்ளன. புராணக் கதைகளை விரித்துரைக்கும் கடுவனிளவெயினனார் சூரபதுமன் அழிவினையும் விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன் ‘பிணிமுகம்’என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எரிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார்(பரி. 5:12-14, 5:7, 9:70, 14:18, 18:4, 19:10-103, 21:8-9)
பரிபாடலில் மொத்தமாக ஒன்பது வையைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களுமாகும். இவற்றில் அகத்திணைச் செய்திகளே பெரிதும் பயின்றுள்ளன. இவை எல்லாவற்றையும் அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வையையின் வரவும் வளமும், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக  அமைந்துள்ளன. அப்பாடல்களை இயற்றிய புலவர், இசை வகுத்தவர், பண் ஆகிய குறிப்புக்களை நோக்குவோம். கிரௌஞ்கசிரி என்ற வடமொழிப் பெயர் பரிபாடலில் இடம்பெறவில்லை. கிரௌஞ்சம் என்பது அன்றிற்பறவையினைக் குறிக்குமாதலால் அம்மலையை பறவையின் பெயர்பெற்ற மலை, “புள்ளொடு பெயாய பொருப்பு”(பரி. 21:9, 5:9) எனத் தமிழுணர்வுடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கந்தவேள் விண்ணக மடந்தை தேவசேனையை மணந்தது போலவே, மண்ணக மடந்தை வள்ளியையும் மணந்தமையால் விண்ணுலகும் மண்ணுலகும் முருகனால்இன்புற்றன (பரி-19:171,14:21-22). 

தலை, கைகள்
ஆறு தலைகளையும்இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர்கந்தவேள்( பரி., 5:10) கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் (பரி.-5:63-68) அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒக்கும் (பரி., 5:11) முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகை களையும் உடையவராகஅவரை உருவகஞ்செய்துள்ளனர் என்பர். (மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி, 2, ப., 487)
மார்பும் அடியும்
மலைபோன்ற ஆற்றலும் அகலமும் கொண்டது செவ்வேளின் மார்பு. அதன்கண் வாளால் வெட்டப்பட்ட வெற்றித் தழும்புகள்நிறைய உள்ளன(பரி., 9:27-28). சந்தனம் முதலிய நறுமணப் புகைகமழ மலர்மாலையும் முத்துமாலையும் கந்தவேள் மார்பினை அணிசெய்கின்றன (பரி.,9:28-29) தன் திருவடியில்தோலாலாகிய செருப்பினைக் கந்தவேள் அணிந்துள்ளான்(பரி., 21:3-7) மிதியடியைப் புனைந்துரைத்தல் நல்லச்சுதனார் பாடல்ஒன்றிலேதான் காணப்படுகின்றது.
ஆடையும் மாலையும் 
முருகனது ஆடை செந்நிறமானது. பசும் பூணினையும், முத்தாரத்தினையும் அவர் அணிந்துள்ளார். கடப்பந்தாரும் முத்துமாலையும் அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன(பரி:19:97). கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின், பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தார் சூடியவராகவே பாடியுள்ளனர்(பரி., 5:81, 21:10-11)
படைகள், கொடி, ஊர்தி
செவ்வேளைப் பற்றிப் பாடிய புலவர்கள் அனைவரும் முருகனது படைகள், கொடிடூ ஊர்தி பற்றிய சிறப்புகளை அழகுற எடுத்தியம்புகின்றனர்.
கந்தவேளைப் பாடிய புலவரெல்லாம் அவர்தம் வேற்படையினையும், சூரபதுமனை அழித்ததையும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். வேல் பரிபாடலில், “சுடர்ப் படை (14-18) ஏந்திலை(17-2), எ•கு(9-79) எனப் பலபெயரால் வழங்கப்பெறுகிறது. பலதேவர்கள் வழங்கிய பதினோரு படைகளும் முருகனிடம் இருந்தன (பரி., 5:63-68) சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன(பரி.,17-48) யானையையும்,மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள்(பரி., 19:28, 8-67) கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் பாடிய பாடல்களால் முருகனுடைய யானை ஊர்தியின் பெயர், ‘பிணிமுகம்’ என்பதனை அறியலாம்(பரி., 5:2, 17:49)
வெறியாட்டு
வெறியாட்டத்தைப் பரிபாடல் விரவாகக் கூறவில்லை. கந்தவேளைப் பாடிப் பரவும் வேலனைப் பற்றிக் கூறும்போது சொல்லளவில், ‘வெறியாட்டம்’ பற்றிய குறிப்பு காணப்படுகிறது (பரி., 5:13-15, 9:44)

பரிபாடலும் முருகாற்றுப்படையும்
பரிபாடலின் முதற்பாடலே திருமாலைப் பற்றியதாதலின் அதற்கெனத் தனிக்கடவுள் வாழ்த்தில்லை. அதுபோன்றே பத்துப்பாட்டின் முதற்பாட்டு முருகனைப் பற்றியதாதலின் அதற்கும் தனியாகக் கடவுள் வாழ்த்தில்லை
பரிபாடல் பாண்டிய நாட்டை மட்டும் சிறப்பித்துக் கூறுகிறது. ஆனால் முருகாற்றுப்படை தமிழகத்திலுள்ள முருகனுடைய ஆறுபடைவீகளையும் பாடிப் புகழ்ந்துள்ளது. முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலையை முருகனுக்குரியது என்று விளம்பும். பரிபாடலோ அதனைத் திருமாலுக்குரியதாகக் கூறும்.
முருகனது பிறப்பு அவனது சிறப்புகள் முதலியவற்றை இருநூல்களும் கருத்தொப்புமையுடன் எடுத்தியம்புகின்றன. வெறியாட்டு பற்றிய செய்திகளை முருகாற்றுப்படையில்(முருகு.,218-244) விரிவாகக் காணலாம். முருகாற்றுப்படையை விட பரிபாடலே கந்தவேளினது பிறப்பை விரிவாகக் கூறியுள்ளது. முருகனின் ஊர்திகளுள் ஆடும் ஒன்றென முருகாற்றுப்படை கூறுகிறது (முருகு-210).
திருமால், சிவன், அயன் முதலிய கடவுளர்கள் பரங்குன்றத்திற்கு முருகனை வணங்கச்சென்றனர் என்று பரிபாடல் கூறும். முருகனால் சிறைப்படுத்தப்பட்ட நான்முகனைச் சிறைவீடு செய்யவே சிவன் மால், இந்திரன் முதலிய தேவர்கள் சென்றனர் என்று முருகாற்றுப்படை கூறுகிறது. முருகாற்றுப்படை மட்டுமே முருகனின் ஆறு தலைகளும், பன்னிருகைகளும் புரியும் பணிகளை விரிவாகக் கூறுகிறது. பரிபாடலுக்குப் பண் வகுக்கப்பட்டுள்ளது. முருகாற்றுப்படைக்குப் பண் வகுக்கப்படவில்லை.
பரிபாடலும் கந்தபுராணமும்
பரிபாடலும் கந்தபுராணமும் முருகனைச் சிவபெருமானின் மகன் எனக் கூறினும் முருகன் பிறந்த கதையைக் கூறுவதில் கந்தபுராணம் பரிபாடலிலிருந்து வேறுபடுகிறது. பிரமனும் தேவர்களும் கைலாயம் சென்று சிவனைக் கண்டு தம்மைச் சூரபதுமனின் கொடுமைகளினின்றும் விடுவிக்க வேண்டுமென வேண்டினர். ஐம்முகமுடைய சிவபெருமான், மேலும் ஒருமுகத்தைப் படைத்துக்கொண்டு தம் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். பின்னர் தீக்கடவுளையும், வாயுதேவனையும் நோக்கி இப்பொறிகளைக் கங்கயிற் கொண்டு சேர்க்குமாற கூறினார். அவர்கள் சேர்க்கவே கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு அவ்வாறு தீப்பொறியும் ஆறுகுழந்தைகளாக மாறின.
திருமால் உள்ளிட்ட தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மகளிர் அறுவரும் அக்குழந்தைகளை வளர்த்தனர், உமையம்மை சரவணப் பொய்கை சென்று ஆறு குழந்தைகளையும் ஒருசேரத்தழுவியவுடன் அவை ஆறுதலையும் பன்னிருகைகளுமுடைய ஒரு குழந்தையாயின. இதுவே முருகன் பிறப்புப் பற்றிய கந்தபுராணக்கதையாகும்.
தொகுப்புரை 
சங்க இலக்கியங்களில் தனித்துவமாக விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக தனியே ‘புனலாடல்’ மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழ்நாட்டின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நான்முகனைச் சிறைப்படுத்திய குறிப்பு பரிபாடலில் இல்லை. ஆனால் பிரணவப் பொருளை நான்முகன் அறியாததால் முருகன் அவரைச் சிறை வைத்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
சூரபதுமனைக் கொன்ற வரலாறு பரிபாடலில் காணப்படுவது போன்று கந்தபுராணத்தில் காணப்படவில்லை. முருகனது வேல் சூரனது மார்பை இருகூறாக்கியதெனவும், ஒரு கூறு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறின என்றும் அவற்றை முருகன் ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டான் எனவும் கந்தகபுராணம் கூறுகிறது. இச்செய்தி பரிபாடலுள் வேறாகக் காணப்படுகிறது. கந்தவேளின் ஊர்தியாக ஆடு நாரதர் செய்த வேள்ளியினின்றும் வந்தது எனக் கந்தபுராணம் கூறுகிறது.யமன் ஆட்டினை முருகப்பெருமானுக்குப் பரிசளித்தததாகப் பரிபாடல் கூறுகிறது. கந்தபுராணம் மிகப்பெரிய நூலாகும். அது வீரவாகுவின் வரலாறு, சூரபதுமனினன் தம்பி தராசுரன் பற்றிய கதை சூரனினன் பிறப்பு அவன் வேள்ளிவியில்மறைந்தது பின்னர்உடனே தோன்றியது, சுவர்க்கம், சத்தியவுலகம், வைகுந்தம் என்னும் உலகங்களுக்குச் சென்றது முருகனுக்கும், சூரனுக்கும் நிகழ்ந்த பெரும் போர் முருகன்,வள்ளி, தேவசேனையாரை மணந்தது முதலியவற்றைக் கற்பனையுடன் விரித்துரைக்கும்.
சங்கஇலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காண்ப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. பரிபாடலில் பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் கூறும் முருகனது பிறப்பு வரலாறு கபரிபாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

கம்பனில் வெளிப்படும் மனித மாண்புகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர் 
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035
பேச:098424 95241.

    ஒரு செயலைச் செய்கிற உணர்வு, அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் தன்மை மறைந்து விட்டால், அதாவது ‘வினை’ என்ற ஒன்றில்லையேல் அதனால் ஏற்படும் பாவ, புண்ணியங்களும் இல்லாதொழிகின்றன. பாவம் அழிவது நல்லதே, ஆனால் புண்ணியம் சேராவிட்டால் எப்படி என்று தோன்றக் கூடும். நன்றாக யோசித்துப் பார்த்தால், நம்மால் செய்ய முடியும் என்றுள்ள காரியங்களுக்கு மட்டுமே நாம் “நான் செய்தேன்” என்று உரிமையும், பெருமையும் பேசுகிறோம். நமது எல்லைக்கப்பால் நடக்கின்றவற்றுக்கு, எதிர்பாராத நடப்புகளுக்கு, ஏன் நாம் நினைப்பதற்கும், விரும்புவதற்கும் மாறான செயல்களுக்கு “கடவுள் சித்தம்-அவர் இப்படிச் செய்ய முடிவெடுத்து விட்டால் யாரால் தடுக்க முடியும்?” என்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது மட்டுமல்ல, நாம் செய்யும் எல்லாக் காரியங்களுக்குமே அவர்தான் காரணம் என்கிற ஞானம் வந்து விட்டால், பிறகு அதில் நமக்கென்று என்ன சொந்தம் இருக்க முடியும்?  வழக்கமாக, ‘கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்று படிக்காமல் பரிட்சைக்குப் போனால் முடிவு என்னவாகும் என்று பலர் கேட்பார்கள். வெற்றிப் பெற வைக்க வேண்டுமென கடவுள் நினைத்தால், படிக்காமல் சென்றால் கூட ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நினைவு கூர்ந்து எழுதி தேர்வடையலாம். அப்போது நாம் ‘அதிர்ஷ்டவசமாக’, படிக்க முடியாமல் போனாலும், சிந்தித்து பதிலெழுதி தேர்வடைந்து விட்டேன் என்று நம் அறிவின் மீது பெருமிதம் கொள்வோம். 
மாறாக, சில வேளைகளில் கடைசி நிமிடம் வரை படித்து விட்டுப் போனாலும், அந்த வினாடியில் அவை மறந்து போகும். அல்லது எதிர்பாரா ஏதோ ஒரு தடையினால்  ஒரு மனிதனைப் போல இன்னொருவர் இருப்பதில்லை. பல கோடி மக்கள் இருப்பினும், கை ரேகைகள் ஒத்திருப்பதில்லை என்பதை அறிவோம்.  சமீபத்தியக் கண்டுபிடிப்பொன்று புல்லாக இருப்பினும், ஒவ்வொன்றும் தனி அடையாளம் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. இப்படி உருவில் தனித்தன்மை இருந்தபோதிலும், ஒவ்வொரு இனமும் தனக்கென சில குணங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் வேறுபாடு அதிகமில்லை. அதனால்தான் நாய் நன்றியுள்ளது, நரி தந்திரமானது, காக்கை ஒத்து வாழும் குணமுடையது என்றெல்லாம் கூறுகிறோம். மனிதர்களையும்  இவ்வாறு கூறு போட்டுப் பிரிக்க முடியும். அதனால்தான் ஒத்த குணங்களும், ஒத்த விருப்பங்களும், ஒத்த இலட்சியங்களும் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து எதையும் சாதிக்க முடிகிறது. ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரம் பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவற்றினூடே பிரியாதிருக்க முடிகிறது.
    வாழ்க்கை அனுபவங்கள், வளரும் சூழல், பெற்ற அறிவு, சிந்தனை இவை மாறுபடுவதால், பார்க்கும் கண்ணோட்டம், எடுக்கும் முடிவுகள் இவை மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். ஆனால் அவனது உணர்வும், மனமும் பெரும்பாலும் ஒன்றுபட்ட நிலையிலேயே செயல்படுகின்றன. இன்பத்தை நாடுவதும், துன்பத்தைத் தவிர்க்க எண்ணுவதும், தான் விரும்பியது கிடைக்காதபோது ஏமாற்றம் கொள்வதும், அதை அடைந்தே தீருவது என்று அதன்மீது வேட்கைக் கொள்வதும், இடையே கிடைக்காமல் போய்விடுமோ என்ற தாபத்தில் கோபம் கொள்வதும்; எல்லாருக்கும் பொதுவானது. அநேகமாக, இந்த வட்டத்திற்குள்தான் அனைவரும் அடக்கம். இதையே “மனித இயல்பு” என்று சொல்லுகிறோம். இந்தச் சராசரி தரத்திலிருந்து இவற்றை அடக்கி, மேம்பட்டு உயர்பவர்களைப் போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் அல்லது பின்பற்ற விழைகிறோம். இதிலிருந்து தாழ்ந்து போகிறவர்களை, நம் தரத்திற்கேற்ப மன்னிக்கிறோம், திருத்துகிறோம் அல்லது விட்டுவிலகுகிறோம்.
    இந்த மனித இயல்பு கூடக்குறைய இருக்க முடியுமே தவிர, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் நிரவியே இருக்கிறது. ஒரு அனுபவம் நேரிடும் போது உடனடியாக வெளிப்படுவது இந்த இயல்;புதான். சிலர் அதை அறிவால் அடக்கி, சீர் தூக்கிப் பார்த்து, மாறாக, தன் இச்சைகளை அடக்கியேனும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு சிலருக்கு அதை மீள முடிவதில்லை. இந்த மனித இயல்புகளை மீறுபவருக்குக் கூட அந்தரங்கத்தில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கலாம். வீணாக எதையோ இழக்கிறோமோ என்ற குறுகுறுப்பும், கழிவிரக்கமும் ஊடாடிக் கொண்டிருக்கலாம். இதுவும் மனித இயல்புதான்!
    இந்த உணர்வுகளை எடுத்த எடுப்பிலேயே வென்று விடுபவர் யாருமில்லை. இதனால்தான் ஞானியரும், மேதைகளும் புலனடக்கம் பற்றியும், அதைக் கடைப்பிடிக்க முடியா மனித பலவீனம் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்.
“தனியனேன் பெரும் பிறவிப்  பௌவத்து எவ்;வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்றுஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான்சுறவின் வாய்ப்பட்டு
இனிஎன்னே உய்யும்ஆறு என்றுஎன்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்”
என்கிறார் மாணிக்கவாசகர். (துணை ஏதும் கிடைக்கப் பெறாத நான், பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனதைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி உய்யும் வகை யாது என்று பலவாறு எண்ணுகிறேன்)
“சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடிக் காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே” என்கிறார் வள்ளலார்.
இந்தக் கண்ணோட்டத்தில் இராம காவியத்தினைக் கவனிக்கும்போது, அதில் பங்கு கொள்கிற ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்தச் சாதாரண மனித இயல்புகளை வென்றவர்களாகவே உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு சிறிதும் தயங்காது, தங்கள் முடிவுகளைப் பற்றிய உறுத்தலோ, வருத்தமோ இன்றிச் செயல்படுகின்றனர். தங்களைப் பற்றி மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளோரின் உணர்வுகளைப் பற்றியும் கூடச் சிந்தித்தார்களா என்ற ஐயம் எழுகிறது. அந்த அளவு உடனடியான பெரும் முடிவுகளைச் சடுதியில் எந்தப் போராட்டமும், கலக்கமும் இன்றி எடுக்கின்றனர். முடிவு எடுத்தபின்னரும் அதுபற்றி நினைத்துப் பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி எந்தச் சலனமுமின்றி ஓர் இலட்சியவாதியாக, ஒரு குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டுமென்றால் சராசரி மனித உணர்வுகளை வென்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அந்த அளவு ஏதோ ஒரு வகையில் “தெய்வாம்சம்” பொருந்தியவர்களாகவே அவர்களைக் காண்கிறோம்.
பால காண்டத்திலேயே, அயோத்தியின் சிறப்பைப் பற்றிக் கூறவந்த கம்பன் “பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன “செங்கண் மால்” பிறந்து, ஆண்டு, அளப்ப அருங்காலம் திருவின் வீற்றிருந்தனன்” (நகரப்படலம்-98) என்று ராமனுக்குக் கட்டியம் கூறிவிட்டான். எனவே ராமனை ஒரு தெய்வப்பிறவியாகவே நோக்குதல் நலம். இதை உறுதிப்படுத்துவது போலவே அகலிகை மீட்பு நடைபெறுகிறது:
“கண்ட கல்மிசைக் காகுந்தன் கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் .....”  (பால.அகலி.465)
    அறியாமை இருள் நீங்கி, ஞானமுற்றவன் பரமன் திருவடிகளை அடைவதைப் போல, அகலிகை முன்னைய வடிவத்தோடு எழுந்தாள் என்று ஐயமற தெரிந்துகொள்கிறோம். இதனால்தான் பரசுராமன் தன் வீரதீர பராக்கிரமச் செயல்கள் பற்றிய வர்ணனைகள் அனைத்தையும் சொல்லக் கேட்ட ராமன், “முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தன் ஆகி”,  “நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக” எனத் தனக்குரிமையான வில்லைத் தானே வாங்கும் நோக்கில் கூறுகிறான். அடுத்து அரியணை ஏறுமுன் கைகேயி ‘பரதன் நாடாளட்டும், நீ காடு சென்று பதினான்கு ஆண்டுகள் கழித்து வா’ எனக் கூறியபோது, குழப்பமோ,  வியப்போ, ஏன் என்ற கேள்விக்குறியோ இன்றி “அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்ற” முகம் கொள்ள ஒரு சாதாரண மனிதனால் முடியுமா என்பது சந்தேகமே! விராதன் சீதையைக் கொண்டு செல்ல முயன்றபோதும், “சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக” (ஆரணி.விரா.22) அவனால் இருக்க முடிந்தது. அகலிகை போன்று விராதனும், ராமன் காலடி பட்டதும் “பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் சுட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் விட்டு விண்ணிடை விளங்கினன்”.(ஆ.வி.45). போர்க்களத்தில் ராவணனுடைய வில்லுக்கெதிராய் அம்பு தொடுத்தபோது கூட ராமன் “முறுவல் எய்திய முகத்தினன்” ஆகவே விளங்குகிறான். சிகரம் வைத்தாற்போல ராவணன் வாயிலாகவே கம்பன்,
“எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை”
(யுத்த.கும்ப.17) என்று கூறுகிறான்.
    இப்படி எல்லா நிலைகளிலும், அதாவது மனித இயல்புள்ள ஒருவன் கோபமோ அல்லது வருத்தமோ கொள்ளும் இடங்கள் அத்தனையிலும் ராமன் நிலை குலையாது புன்சிரிப்புத் தவழ நிற்கக் காண்கிறோம். இந்த “தெய்வாம்சமே” ராமன் மீது இன்றுவரை சாட்டப்படும் குற்றங்களான ‘வாலி வதை’, ‘சீதையின் தீக்குளிப்பு” இரண்டுக்கும் பதில் கூற வல்லது. தீமை தோற்க வேண்டும், அதற்கு இடமளித்திருக்கும் மாயைக் கலைய வேண்டும், ஆன்மா மீட்படைய வேண்டும் என்றால் இறைவன் வலிய ஆட்கொள்ள வேண்டும்.அவன் கண் முன் இன்ப துன்பமும், ஆக்கல் அழித்தலும், “பொய்ம்மையும், வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்ற வள்ளுவத்திற்கிணங்க நன்று-தவறுகளும் ஒன்றே! “ஆத்மா பிறப்பற்றது, என்றுமுள்ளது. சரீரம் கொல்லப்படும்போதும் இது கொல்லப்படுவதில்லை. இந்நிலையில் யார் யாரைக் கொல்ல முடியும்?” (பகவத்கீதை2-20,21), “எல்லாப் பிராணிகளின் முதலும், நடுவும், முடிவும் நானே!” (பகவத்கீதை10-20) இந்த நோக்கில் வாலியின் முடிவை “வதமாக” எப்படிக் கொள்ள முடியும்? இந்த உண்மையை உணர்ந்தே வாலியும் “மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!” என்று பரவசப்படுகிறான்.(கிட்.வாலி.129)இதே கோணத்தில் செய்யப்பட்டதுதான் தாடகை வதமும். “ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்” என விசுவாமித்திரர் சொல்லும்போது, “அறன் அல்லவும் எய்தினால்” (பால.தாட.44) கூட இதைச் செய்து முடிப்பேன் என ராமன் கூறவில்லையா? தாடகை இராவணனுக்குப் பாட்டி என்ற உறவைக் கம்பன் “பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள்” (யுத்த. அங்கதன்32) என்று கூறுகிறான். எனவே விசுவாமித்திரனுடைய தவத்திற்கு பாதுகாப்பும், ராவணன் ராமனால் கொல்லப்படுவான் என்ற நம்பிக்கை தேவர்கள் பெறவும் செய்தது இந்த வதையும்!
    இனி மிக மிக நுட்பமான “சீதையின் தீக்குளிப்பில்” ராமன் நிலையினைப் பார்ப்போம். அலங்காரம் செய்ய மறுத்த சீதையை, அது ராமனின் விருப்பம் எனக்கூறிச் சம்மதிக்க வைக்கிறான் வீடணன். இதற்கிடையே ராமனும், அரக்கர்கள் சீதையைக் காணும்பொருட்டு கூடுவதைத்; தவிர்க்க எண்ணி விலக்குவோரைக் கடிய விரும்பி, வீடணனிடம் கோபமாகப் பேசுகிறான். பின்னர் சீதையைக் காண்கிறான்: அதுவும் எப்படிப்பட்ட சீதையை!?
“கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
 பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
 தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
 அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்” (யுத்த.மீட்சி.60)
‘தன்னைப் பிரிந்தாலும், உயிர்களுக்கு நல்லருள் புரிகின்ற தர்மம் போன்றவளை அன்பின் தலைவன் ஆழ்ந்து நோக்கினான்’. ஒரு கணவன், மனைவி மீது அன்பும், ஆசையும், நம்பிக்கையும் கொண்ட ஒருவன் போலப் பார்த்தான்! இங்கு அவனது ‘அவதார’ நோக்கு ஆரம்பமாகிறது. தெய்வாம்சம் பொருந்தியவர்களும் உலக வாழ்க்கையின் போது உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டியுள்ளது. தன்னை இறைவனின் குமாரன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஏசு, எத்தனையோப் புதுமைகளைச் செய்து மக்களை பிரமிக்கச் செய்தவர், தான் வாழ்ந்த சூழலுக்கேற்ப ‘மனுமகனுக்குத் தலை சாய்க்க இடமில்லை’ என்று கூறவும், தன்னையேச் சிலுவைச் சாவுக்குக் கையளிக்கவும் வேண்டியதாயிற்று.
    திரு ஜெயகாந்தன் மிக ஆழகாகக் கூறுகிறார்: “இறுதியில் என்ன மிஞ்சுகிறது என்று காட்ட எல்லாமே வேண்டும். தர்மம் வெல்லும் என்று காட்ட அதர்மம் வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பைப் பேச ஒழுக்கக் கேட்டின் விளைவையும் சொல்ல வேண்டும். ராமன் சரயு நதியில் மூழ்கி மாள வேண்டுமென்று யார் ஆசைப்படுவார்? சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்குச் சம்மதம்? டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஒதெல்லோ அவளைக் கொன்றது யாருக்கு உடன்பாடு? அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனைக் கிடைத்ததில் யாருக்கு மகிழ்ச்சி? பாலை மணலில் கயஸ் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி? ‘வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் சோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்’ என்று காட்டவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்!” அது போல சீதையைக் காணக் கூடியிருப்போர்  மனதில் தோன்றக் கூடியக் கேள்விகளுக்குப் பதிலளித்து, தன் அன்புக்குரியவள் மாசற்றவள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறான் ராமன் தற்போது. எனினும், அந்தக் கொடுமையைப் பொறாத கம்பன் “பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா”(படம் எடுத்துச் சீறுகின்ற பாம்பென) என்கிறான். குற்றமற்றவளைக் கடுஞ் சொற்களால் தாக்கி, ‘உன் நிலையை சாதித்துக் காட்டு’ என்று கூறிய  ராமன், அதற்குப் பிறகு  பேசவில்லை, பேச இயலவில்லை போலும்! ஆனால் கம்பன் ஒரு அருமையான சொல்லால் ராமன் சீதையை மனமார ஏசவில்லை எனஅவன் செய்கைக்கு முலாம் பூசுகிறான். “ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் வாடிய இல்லையால், உணர்த்துமாறு உண்டோ?” (யுத்த.மீட்சி.87) (ராமனின் ஊடல் கோபத்தால், தனக்கு உண்டாகிய வியர்வைத் துளிகள் உலரா நிலையில் வேறென்ன சொல்லி உணர்த்துவது?) என்று அக்னித் தேவன் வழி பேசுகிறான், ராமன் கொண்டது ஊடலேயன்றி வேறெதுவுமில்லை என்பதுபோல். இறுதியாக ராமன் ஊருக்கே, உலகத்திற்கே தெரிவிப்பது போன்று,
“அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை “யாதும் ஓர்
பழிப்பு இலள்” என்றனை, பழியும் இன்று இனிக்
கழிப்பிலள்”  (யுத்த.மீட்சி-97) 
என்று சீதையின் கற்பினை நிலைநாட்டுகிறான்!
    வானுலகில் தேவர்கள் தங்கள் தவத்திற்கு ஊறு செய்யும் அரக்கர்களை அழித்து, தங்களை காக்கும்படி வேண்ட, திருமால் “வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய், கானினும், வரையினும், கடி தடத்தினும் சேனையோடு அவதரித்திடுமின் சென்று” (பால.திரு அவதா.20) என்று கூறியதோடு,
“மசரதம் அனையவர் வரமும், வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்
கசரத துரக மாக் கடல்கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி
வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளையவர்கள என அடிபரவ ஏகி, நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்” 
(பால.திருஅவதா.21-22)
    ஐயத்திற்கிடமின்றி விண்ணுலக தேவர்கள் குரங்கினங்களாக, அரக்கர்களின் வர பலத்தையும், வாழ்வையும் அழிக்கத் தானே தசரதன்மகனாகவும், தன் படைக்கலங்களான சங்கும், சக்கரமும், படுக்கையான அனந்தனும் தனக்கு இளையோராகவும் பிறப்போம் என்றுவாக்களித்ததாகக் கூறுகிறான் கம்பன். (இதில் சங்கு-சத்துருக்கன், சக்கரம்-பரதன், அனந்தன்-இலக்குவன் என்பர். வான்மீகம் விஷ்ணுவின் பாதி அம்சம் ராமனாகவும், நாலில் ஒரு அம்சம் பரதனாகவும், மீதி அம்சம் இலக்குவன்-சத்துருக்கன் ஆகவும் பிறப்பெடுத்தது என்கிறது) மனித உருவில் இருந்தபோதும் இந்த “தெய்வாம்சம்”தான் அவர்களை ஒரு ‘ளரிநச அயn’ அளவில் மிகைப்படுத்தப்பட்ட சக்தியோடு உலவ வைக்கிறது. இதுமட்டுமல்ல, தெளிவாகவே நான்முகன், “முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன்” - முன்பே கரடிகட்கு அரசனான ‘சாம்பவந்தன்’ என்பவனாக நான் வந்து பிறந்துள்ளேன் என்று கூறியதாகச் சொல்கிறான் கம்பன் (பால.திருஅவ.25) அடுத்து வரும் பாடல்களில் (26-27) இந்திரன் வாலி, அவன் மகன் அங்கதனாகவும், சூரியன் வாலியின் தம்பி சுக்ரீவனாகவும், அக்கினி நீலன் என்ற வானரத் தலைவனாகவும் பிறப்பதாகவும், காற்றுத் தேவன் ‘மற்று எனது கூறு மாருதி’ என, “புராரி மற்றுயானும் காற்றின் சேய்” (திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப் பிறக்கிறேன்) என்று வாக்களிப்பதாகவும் காண்கிறோம். இந்தப் பிண்ணனி அசுரரை ஒழிக்க, தேவலோகமே திரண்டு வந்ததை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கிறது.
தொகுப்புரை
இதுவரை நாம் எப்படி வாழ்ந்திருந்த போதிலும், இனியேனும் பலர் சென்று வழிகாட்டிய அந்த ‘பேரின்ப வீட்டுக்கு’ச் செல்லும் திசையில் செல்ல முயல்வோம். மலை உச்சிக்குச் செல்ல அடிவாரத்திலிருந்து பல பாதைகள் இருக்கலாம். இதிலும் ‘என் பாதைதான் சிறந்தது’ என்ற குறுகிய நோக்கு வேண்டாம். மத வெறிக்கு இந்த எண்ணம்தான் அடிப்படை. அவரவர் வழியில் அவரவர் செல்லட்டும். முடிவு ஒன்று தான். அப்படியே தன் பக்தி மார்க்கத்தில் பற்றும், அதன் சிறப்பை மற்றவர்கள் உணரவில்லையே என்ற ஆதங்கமும், ‘தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்கிற முறையில் எல்லோருக்கும் அதை அறிவிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் - அதை ‘நமது நடத்தைத் தெரிவிக்கட்டும்’. குன்றின் மேல் வைத்த விளக்காக, இறை ஒளி நம் மூலம் பரவி எல்லோரையும் ஈர்க்கட்டும். வழி காட்டட்டும்!
குறிக்கோளை விடாது, அடுத்துள்ளவர் போல் நாமும் வாழ வேண்டும் என்று சொத்தும், புகழும் சேர்க்க விரும்புவது போல, இறைவனின் அருளைச் சேர்க்க ஆவலும், ஆர்வமும் கொள்வோம். ‘வாழ்க்கை எப்போதும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அளிக்கிறது-அதன் பெயர் நாளை’ என்பார்கள். அந்த ‘நாளை’ நமக்கு இறைவனில் தன்னை மறக்கும் நாளாகட்டும். பாலில் கலந்து விட்ட நீராக, பிரித்துணர இயலாத பிணைப்பாக இறை-மனித உறவைக் காண்போம். ஏனெனில் இதில் கூட ‘இறைவனின் சன்னிதானத்தில் நாம்’ என்றும், ‘இறைவனோடு இரண்டறக் கலப்பது’ என்றும் இரண்டு வகை நம்பிக்கை உண்டு;. இங்கே பாலோடு சேர்ந்துவிட்ட நீர் தனித்துத் தெரிவதில்லை என்கிற “அத்வைதம்” (கடவுளில் கலந்து “நாம்” மறைந்து போவது), தனித்துத் தெரியாவிடினும் பால்-நீர் என்ற இரண்டுமே உள்ளது என்கிற “துவைதம்” இரண்டும் கூட உண்மையில் ஒன்றைக் குறிப்பதாகவே ஆகிறது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...