Thursday, March 30, 2017

கூத்தாண்டவர் கோவில் திருவிழா



                அரவான் அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது.
இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவனான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச் சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், “சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம்என்றான். “சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார்.
அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர்தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன். வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது. மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல், “களப்பலிக்குத் தயார்என்று சம்மதம் தெரிவித்தவன், அதேசமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். “நான் திருமணமாகாதவன் பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார்என்றான். கண்ணன் யோசித்தார், இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றிவிடலாம். ஆனால், முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது?”
நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், “உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம்என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான்.
மாலை நேரம் முடிந்து இரவு மௌ; மௌ; தலைகாட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான்; கைகோர்த்தான். சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்குமுன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக்கொண்டு மாளிகைக்குள் சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.
அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்துகொண்ட அந்த அழகி யார்? “அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார்என்றும்; “கண்ணனே பெண்ணாக மாறினார்என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான்.
விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவனை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத்தான் பாரதப்போர் என்று வரலாறு சொல்கிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பௌர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோவிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான்தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்குமுன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள்தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
பௌர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் சந்நிதிமுன் மணப்பெண்போல் ஒவ்வொரு திருநங்கையும் அலங்கரித்து நிற்க, அந்தக் கோவில் பூசாரி ஒவ்வொருவருக்கும் அரவான் சார்பாகத் தாலிகட்டுவார். அன்றிரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத் திருவிழா நடைபெறும். மறுநாள் காலை அரவான் களப்பலியானதாக நினைத்து, முதல் நாள் கட்டிக்கொண்ட தாலியை அறுத்தெறிந்து விட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு சோகமாகக் காணப்படுவார்கள். சிலர் ஒப்பாரிப் பாட்டுப் பாடுவார்கள்.
இந்த விழாவினையொட்டி கூத்தாண்டவர் கோவிலில் தனியாக அமைந்திருக்கும் மேடையில் அழகிப் போட்டிகள் நடைபெறுவது உண்டு. இதில் அரவாணிகள் மட்டும் கலந்துகொள்வார்கள். முதல் பரிசு பெறும் அரவாணிக்குமிஸ் கூவாகம்என்ற பட்டமும் வழங்குவார்கள். பாரதப் போருக்காகக் களப்பலியான அரவானின் தலை போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு களித்தான். பாண்டவர்கள் வெற்றி பெற்றதும் கண்ணபிரான் அரவானை உயிர்ப்பித்தார் என்றும் புராணம் கூறுகிறது.

Wednesday, March 29, 2017

சங்க இலக்கிய காதலும் சமகால பெண்ணின் மனநிலையும்



பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149இ ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
            வரலாற்று நோக்கில் பெண்களின் சமுக நிலையை நோக்கும் பொழுது சமுதாயத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருத முடிகிறது. தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும், பெண்களுக்கு என்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன.
            இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்துக் கொண்டால் எந்தவொரு மொழிக்கலப்பும், இனக்கலப்பும் இல்லாமல் தமிழ் தமிழாக இருந்த காலம் என்று கூறிக்கொள்ளலாம்.
சங்ககாலம் பற்றி எழுதப்போனால் அதற்கே இருபது, முப்பது பதிவுகள் தேவைப்படும். அதுகுறித்து ஆழமாக போகாமல் சங்க காலத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிலவற்றை எடுத்து அந்த காதல் ரசத்தை கொஞ்சம் நாக்கில் விட்டு தித்திப்பில் இலகிக்கலாம் வாருங்கள்.
            பொதுவாகவே அன்றிலிருந்து இன்றுவரை தமிழில் வந்த இலக்கிய வகைகள், இலக்கியம் கடந்து காலவோட்டத்தில் வந்த இன்றைய சினிமாவரையான பகுதிவரை காதல், வீரம் என்ற இரண்டு கருப்பொருட்கள் எல்லாவற்றிலும் புகுந்துவிட்டது.
            இந்த காதல், வீரம் ஆகிய இரண்டும் சங்க கால மக்களின் பெரு வாழ்க்கைமுறையில் அவர்களின் வாழ்வியங்களாகவே இருந்துவந்தமையும், அவற்றையே இலக்கியங்களும் பாடியமை யினாலேயே இந்த மரபணுப்பாய்ச்சல் இற்றைவரை எமக்குள்ளும் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
            காதலை சொல்ல முதல் அந்த வாழ்க்கை முறைபற்றி கொஞ்சம் தொட்டுவிட்டு போவோமே! சங்ககாலத்தில் ஆண்களும் பெண்களும் சம அந்தஸ்துடனேயே நோக்கப்பட்டார்கள் என்பதுடன், இலக்கியம் வாயிலாக ஆழநோக்கினால் இந்தக்காலத்தில் பெண் அடிமைத்தனம், அபரிதமான பெண்மைக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அனைவருக்கும் உரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆண்களுடன் பெண்கள் சகஜமாகப்பழகினார்கள், ஆனால் அவர்கள் அந்த சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை. கற்புநெறியில் சீரிய வாழ்க்கைமுறையை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆண் என்றால் அவன் வீரனாக இருக்கவேண்டும் என்பதே பெண்ணின் எதிர் பார்ப்பாக இருந்தது.
            நிலத்தின் தன்மைகளைக்கொண்டு அவர்கள் வாழ்ந்துவந்த இடத்தை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக வகுத்து வாழ்ந்துவந்தார்கள். நிலத்தின் தன்மைகள், அவற்றின்மேலான தொழில், அவற்றின் மூலம் உண்டாகும் இயல்புகள் என்பன இலக்கியங்களில் தாக்கத்தை செலுத்தின.
            பொதுவாகவே சங்க கால காதல் இலக்கியங்களுக்கு ஆழமான ஒரு வரையறை உண்டு. அந்த வரையறை உடைபட்டால் அது காதல் இலக்கியமாக (அகம்) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
            தம்முள் கூடும் இன்னம் இன்தென்று சொல்லாமை, பெயர்சுட்டாமை, ஒவ்வாத காதல், முரணான காதல்கள் (பொருந்தாக்காமம்) அகம் என்று கொள்ளல் ஆகாது.
            இப்படி நிறைய விதிகளும் உண்டு. இதுகுறித்து ஆழமாக போனாலும் பக்கங்கள் நிறைந்துவிடும் விசயத்திற்கு வருவோம் தேர்ந்தெடுத்த காதல் தேன் சொட்டும் செய்யுள்கள் சிலவற்றைக் காணலாம்.
            பெண்களின் கற்பின் திறம் பற்றியும், அதன் மூலம் பெண்கள் கற்பைத் தங்கள் தனிப்பெரும் குணமாகப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. எனினும் அவை பெண்களுக்கேயுரிய தனிப்பெரும் குணமாகிய கற்பை ஆண்களும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக ஆண்கள் எத்தனை பெண்களோடும் உறவு கொள்ளலாம் என்ற பரத்தையர் ஒழுக்கத்தைக் காட்டுகிறது. இவ்வாறு ஆண்கள் நடந்துக் கொள்வது அவர்களது தனித்த உரிமையாகவும், இதற்கும் மேலாக அவர்களுக்குப் பெருமை அளிக்கும் செயலாகவும் கருதப்பட்டது.
            மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான காதல் இது
ஒரு பெண் காதலினால் படும் இன்பவலியை அழகாக எடுத்துரைக்கின்றார் இந்தப் பாடலை  இயற்றிய கபிலர்.
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே
            சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல, காதல் வியப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது.
            இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ! வேர்ப்பாலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே!! என விழிக்கின்றது.
            அடுத்து இது கொஞ்சம் படு செக்ஸியான செய்யுள்தான். அப்படியே பொருளை சொல்லிவிடமுடியாது. பட்டும்படாமலும்தான் சொல்லவேண்டும் கடைசிவரி பொருளை அப்படியே கண்டுபிடிப்பவர்களுக்கு முழுவதும் விளங்கும். வேண்டுமென்றால் முயன்றுபாருங்களேன்.
            இது ஒரு பெண்ணின் உச்சக்கட்ட விரகாத உணர்வு. நீண்டநாள் பிரிவின் ஏக்கம். பாலைநிலத்து பெண் ஒருவள் விரகதாப உச்சத்தில் பிதற்றுவதாக கொல்லன் அழிசி என்ற புலவனின் செய்யுள்.
கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”
            கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்துபோகும் பசுவின் பாலைப்போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் விணாகிக்கொண்டிருக்கின்றதே (இப்படித்தான் கொஞ்சம் மறைச்சு பொருள் விளக்கம் தரமுடியும்)
            ஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிட்டால் முதலில் கெடுவதென்ன தூக்கம்தானே? அப்படி காதல் வயப்பட்ட பெண்கள், தாங்கள் தூங்காது அடிச்சுப்போட்டதுபோல தூங்கும் ஊரைப்பாhர்த்து பொறமாமைப்படுவதும், ஆத்திரப்படுவதும் கொஞ்சம் ஓவர்தான். நெய்தல் நிலப்பெண் காதல் வயப்பட்டு தூக்கம் தொலைத்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலர் சொல்கின்றார் இப்படி
நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்ற துஞ்சாதேனே
            நள்ளிரவு நிசப்தம் நலவுகின்றதே... தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே, அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர! (மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச்சொல்லி?) அடடா கால் என்று சொன்னால் அது பெண்ணுக்குத்தானா? ஆண் காதல் தாபத்தில் தவிக்கமாட்டானா? என்று எண்ணுகின்றோம் அல்லவா?
            ஆணுக்கு நாணம் வந்தால் அதைவிட அவஸ்தை வேறு இல்லை என்பதை சரியாக்குவதுபோல குறிஞ்சி நிலத்து தலைவன் ஒருவன் வெக்கப்படுகின்றான் ஏன் என்று புலவர் தொல்கபிலர் சொல்கின்றார் இப்படி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்த்து இலக்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யா அம் நாணுகம் சிறிதே
            நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள இந்தப்பெண்ணை தான் அடைந்தபோது, அந்த ஊரே தன்னை இந்த “நல்லவன்தான்இவளின் கணவன் என்று சொல்லும்போது தான் கொஞ்சம் வெக்கப்படுவாராம் இவர். (அப்பவே வடிவேலுவின் காமடிகள் ரிலீஸ் ஆகிட்டோ)
            காதலிச்சா கண்ணின் நிறம்மாறுமா? மாறும்தான் என்கின்றனர் அனுபவ சாலிகள்.
ஒருவகையில் நித்திரை இன்றி கண் நிறம்மாறும், ஆழுது அழுது கண்ணின் நிறம் மாறும், துரத்திக்கொண்டு வெயிலில் திரிந்தால் கண்ணின் நிறம் மாறும், அடி வாங்கிக்கூட கண்ணின் நிறம்மாறும்.
            அட போங்க ஆளே மாறும்போது கண்ணின் நிறம் மாறாத என்ன? குறிஞ்சி நிலத்தைச்சேந்த தலைவி ஒருத்தி காதலித்து தன் கண்களின் நிறம்மாறியது என்பதுபோல எழுதியுள்ளார் புலவர் கபிலர்.
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்
பைதல் ஒரு தலைச்சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே
            அழுக்குப்போக சுத்தமாக கழுவப்பட்ட யானையினைப்போலவும், பெரும் மழையினால் நிலமெல்லாம் கழுவப்பட்டு சுத்தமான நாட்டைச்சேர்ந்தவன் எனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான என் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என்கின்றாள். மஞ்சளாய்ப் போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னமோ இவளது கண்கள் பச்சையாகிவிட்டனவோ தெரியாது.

கற்புக் கோட்பாடு
            சங்க காலம் முதல் பெண்ணுக்கு வகுக்கப்பட்டு வந்த கற்புக் கோட்பாடுகளைப் பிற்கால நீதி நூல்களிலும் காணமுடிகிறது.
கற்பு எனப்படுவது சொல்திறம் பாமை
என்கிறது கொன்றை வேந்தன்.
ஒரு பெண்ணைப் பிற ஆடவன் நெஞ்சில் நினைத்து விட்டாலே அப்பெண் கற்பிழந்து விடுவாள் என்று கருதிய சமுதாயத்தில் பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கற்புடைமையைப் பெண்ணிற்கு மட்டும் உரியதாக்கியிருப்பதை.
காவல் தானே பாவையர்க்கு அழகு
என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. அதாவது பெண் தன்னை அழகு படுத்திக் கொள்ளக் கூடாது, வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது, பிற ஆடவனின் கண்ணில் படக்கூடாது என்பன போன்ற கருத்தாக்கங்களை இவ்வரிகள் மறைமுகமாகப் பெண்ணுக்கு அறிவுறுத்தியிறுக்கிறது.
கணவனுக்கு பணிவிடை செய்தும் அவனைத் தொழுதும் வாழ்பவள் தான் கற்புடைய பெண் என்ற கருத்து நிலவியதை,
குலமகட்டு அழகு தன் கொழுநனைப் பேனுதல்
என்று குமரகுருபரரும் கூறியுள்ள கருத்துகளிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. கற்புக் கோட்பாட்டுக்குள் சிக்கிப் பெண்கள் தங்கள் சுயம் இழந்திருப்பதை மேற்கூறிய கருத்துக்கள் அறிய வைக்கின்றன.
இவ்வாறு பிள்ளைப் பருவத்திலிருந்து, ஆண் - பெண் வேறுபாடுகளைக் கற்பித்தும் பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியிருப்பதனையும் நாம் சங்க இலக்கியங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.
            இப்படியே விரக தபாங்கள், பொய்க்கோபங்கள், நாணங்கள், கூடலின் பின் ஊடல்கள், பழியை காதலிமீதும், காதலன்மீதும் மாறி மாறி போடும் தன்மைகள், தங்கள் காதலை உலகமே கவனிக்கவேண்டும், அதுவே மிகப்பெரிய விடயம் என்ற எண்ணங்கள், விரகதாபத்தின் உச்சத்தில் வரும் சுய கோபங்கள் என்று காதலர்களின் பல்வேறு உணர்வுகளையும் சங்க இலக்கிய காதல்கள் தொட்டு நிற்கின்றன.
            எத்தனையோ அற்புதமான செய்யுள்கள்! தமிழ்; பக்தி மொழி என்பது தவறு. தமிழ் உணர்வுகளின் மொழி என்று சொல்லுங்கள். தமிழுக்கு உருகி உருகி கும்பிடவும் தெரிந்திருக்கின்றது. அதைவிட உருகி உருகி காதலிக்கவும் தெரிந்துள்ளது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...