Friday, November 08, 2019

களம்சார்ந்த கலைச்சொல்லாக்கம்


தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில், பல்வேறு துறைகளுக்காகப் பதினான்கு கலைச்சொல் பணிக்குழுக்களை அமைத்தது. தகவல் தொழில்நுட்பத்துக்காக முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமைந்த பணிக்குழு, கலைச்சொல்லாக்க உத்திகளை வகுத்துக் கொடுத்தது. அதில் 8-வது உத்தியாக, ஒரே ஆங்கிலச் சொல் வேறு வேறு இடங்களில், வேறு வேறு பொருளில் பயன்படுத்தப்படும்போது, இடம் பொருள் ஏவல் அறிந்து, தமிழில் வேறு வேறு கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் ஓர் ஆங்கிலக் கலைச்சொல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படலாம். அதன் பொருளறிந்து, கவனமாகத் தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க வேண்டும். எனவே, கலைச்சொல்லாக்கத்துக்குத் தமிழறிவு மட்டுமின்றித் துறைசார்ந்த அறிவு மிகவும் இன்றியமையாதது ஆகிறது. ஆங்கிலமும், தமிழும் தெரிந்துவிட்டால் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்க் கலைச்சொல்லை உருவக்கிவிட முடியாது. இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம், பொறியியல், கணிப்பொறியியல், இன்னும் இதுபோன்று பல்வேறு துறைகளிலும் புழங்கும் ஆங்கிலக் கலைசொல்லுக்குப் பொருத்தமான தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க அந்தந்தத் துறைசார்ந்த அறிவு அவசியமாகிறது.
            Bus, Driver, Conductor ஆகிய மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழில் இச்சொற்கள் முறையே பேருந்து, ஓட்டுநர், நடத்துநர் என்று வழங்கப்படுவதை அறிவோம். சுவையான தகவல் என்னவெனில், இந்த மூன்று சொற்களுமே கணிப்பொறி இயலில் இடம்பெற்றுள்ளன. கணிப்பொறியியல் அறிவு இல்லாத ஒருவர், கணிப்பொறி அறிவியலுக்கான கலைச்சொல் அகராதி ஒன்றைத் தயாரிக்கிறார், அல்லது கணிப்பொறித் துறையில் ஒரு நூலை மொழிபெயர்க்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் Bus என்ற சொல்லுக்குப் பேருந்து என்றும், Driver என்ற சொல்லுக்கு ஓட்டுநர் என்றும், Conductor என்ற சொல்லுக்கு நடத்துநர் என்றும் குறிப்பிட்டிருப்பார். அதைப் படிக்க நேருகின்ற கணிப்பொறி அறிவியலாளர்கள் குலுங்கிச் சிரிப்பர். இது ஏதோ நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட செய்தியன்று. இதுபோன்ற கலைச்சொற்கள் கொண்ட கணிப்பொறியியல் அகராதிகள் வெளிவந்துள்ளன என்பதை வருத்தத்தோடு இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
            மின்னணுத் துறையில் இரு வயரில் அமைந்த மின் இணைப்பை Channel, Circuit, Line என்று குறிப்பிடுவர். இரு முனைகளுக்கு இடையே தகவல் பயணம் செய்யும் இணைப்பை Path, Link என்றுகூடக் குறிப்பிடுவதுண்டு. இச்சொற்கள் தமிழில் பாதை, தடம், இணைப்பு, தொடுப்பு என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தகவல் பிட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பயணிக்கும். Bus என்பது 8, 16, 32 வயர்களின் இணைப்பில் அமைந்த தகவல் பரிமாற்றத் தடமாகும். ஒரே நேரத்தில் 8, 16, 32 பிட்டுகள் இணையாகப் பயணிக்கும். Bus என்பது அகலமான தகவல் பரிமாற்றப் பாதையைக் குறிக்கிறது. எனவே, Bus என்பதைப் பாட்டை என்கிறோம்.
            கணிப்பொறியோடு இயைந்து செயல்படும், விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), வரைவி (Plotter) போன்ற புறச்சாதனங்கள் பல உள்ளன. கணிப்பொறியானது, இந்தப் புறச்சாதனங்களோடு தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில், அவற்றின் மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்புக்கு, அதாவது கணிப்பொறிக்கும் புறச்சாதனத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு, Device Driver என்னும் நிரல் உதவுகிறது. சுருக்கமாக Driver என்பர். புறச்சாதனத்தை இயக்க உதவும் நிரல் என்பதால் Driver என்ற சொல்லுக்குக் கணிப்பொறியியலில் இயக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன. அவற்றுள் எளிதில் கடத்துபவையும் உண்டு. அரிதில் கடத்துபவையும் உண்டு. ஆங்கிலத்தில், அவற்றை முறையே, Good Conductor, Bad Conductor என்று குறிப்பிடுகின்றனர். எனவே, Conductor என்னும் சொல் கடத்தி என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. கணிபொறிக்கான மின்னணுச் சாதனங்கள் தயாரிக்க Semi-conductor பயன்படுகிறது. அதனை குறைக்கடத்தி அல்லது அரைக்கடத்தி என்று குறிப்பிடுகின்றனர்.
            ஆக, கணிப்பொறித் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் Bus, Driver, Conductor ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு முறையே, பாட்டை, இயக்கி, கடத்தி என்பது போன்ற தமிழ்க் கலைச்சொற்களையே பயன்படுத்துவர். பேருந்து, ஓட்டுநர், நடத்துநர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுபோன்று இன்னும் பல சொற்களைக் குறிப்பிடலாம். கணிப்பொறியியலில் விருப்பத் தேர்வுகளை உள்ளடக்கிய பட்டியல் அல்லது பட்டியைக் குறிக்கின்ற Menu என்ற சொல்லுக்கு உணவு விலைப் பட்டியல் என்று எழுதப்பட்ட கணிப்பொறிப் பாடப் புத்தகமும் வெளிவந்துள்ளது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்.
            சாதாரண ஆங்கிலம்-தமிழ் அகராதியில் Line என்றால் கோடு என்றுதான் பொருளிருக்கும். ஆனால், தகவல்தொடர்பியல் அகராதியில் Line என்றால் இணைப்பு என்றும், தடம் என்றும் பொருள் கூறப்பட்டிருக்கும். அதேபோல்தான், argument என்ற சொல்லின் நேரடிப் பொருள் வாதம் அல்லது விவாதம். ஆனால், கணிப்பொறி இயலில் arguments என்னும் சொல், ஒரு செயல்கூறுவுக்கு (Function) அனுப்பப்படும் உருபுகளைக் குறிப்பதால் செயலுருபுகள் என்கின்றனர். இதுபோல ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆக, கணிப்பொறித் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கம், அத்துறைசார்ந்த புலமை இல்லையேல் நகைப்புக்கு இலக்காகும் என்பது கண்கூடு.
            குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், ஒரே துறையிலேயே ஒரு குறிப்பிட்ட சொல் வெவ்வேறு துறைப்பிரிவுகளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் ஆழமாகச் சென்று பார்த்தால், ஒரே துறைப்பிரிவில்கூட ஒரு சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடியும்.
            Key என்னும் சொல்லுக்குச் சாவி, திறவுகோல் என்று பொருள் கூறுகிறோம். ஆனால், Answer Key, Key Stone, Key Industry, Key Source, Key Map ஆகிய சொற்களுக்கு முறையே விடைக் குறிப்பு, நடுகல், அடிப்படைத் தொழில், முதன்மை மூலம், கைப்படம் எனப் பொருள் கூறப்படுகிறது. இசையியலில் Keyboard, Key Note என்று இரு சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அத்துறையினர் முறையே, இசைப்பலகை, தொடங்கு சுரம் என்று வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகின்றனர். ஒருசொல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு விதமாகவும், ஒரே துறையில்கூட வெவ்வேறு களங்களில் வெவ்வேறு விதமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு Key என்னும் சொல் சரியான எடுத்துக்காட்டாகும்.
            கணிப்பொறித் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அத்துறைசார்ந்த புலமை போதும் என்பது பாதி உண்மைதான். சி, சி++, சி#, ஜாவா போன்ற கணிப்பொறி நிரலாக்க மொழிகள் (Programming Languages) பற்றிய பாடங்களையும், நூல்களையும் எழுத முனைந்தபோதுதான், என்னால் இந்தப் பாதி உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கணிப்பொறி நிரலாக்கத்தில் பயன்படும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்க மேம்போக்கான கணிப்பொறி அறிவு மட்டும் போதாது, கணிப்பொறி நிரலாக்கம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிந்தது. பொறியியல் கல்லூரிகளில் கணிப்பொறித் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்ற, பிணையத் தொழில்நுட்பம் (Network Technology) பற்றிய ஒரு முழுமையான பாடநூலைத் தமிழில் எழுதியபோது, குறிப்பிட்ட புலம் அல்லது களம்சார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அந்தந்தப் புலம்சார்ந்த அறிவு (Field Knowledge) அல்லது களம்சார்ந்த அறிவு (Domain Knowledge) எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

கணிப்பொறி இயலில், Bus, Drive, Driver, Argument, Operator, Compile, Platform, Exception, Switch, Key, Polling போன்ற பல்வேறு சொற்கள் வழக்கமான பொருளில் இல்லாமல், வேறான பொருளைக் குறிக்குமாறு பயன்படுத்தப்படுகின்றன. Key, Socket, Gateway, Distribution, Interface போன்ற சொற்கள், கணிப்பொறி இயலிலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சொற்களுக்குத் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும்போது துறைசார்ந்த அறிவோடு, குறிப்பிட்ட களம்சார்ந்த புலமையும் தேவைப்படுகிறது என்பதை நிறுவுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.
            முதலில் Key என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். கணிப்பொறியியலில், Keyboard என்னும் சாதனத்தை விசைப்பலகை என்கிறோம். Tab Key, Shift Key, Ctrl Key, Alt Key, Insert Key ஆகியவற்றை முறையே தத்தல் விசை, நகர்வு விசை, கட்டுப்பாட்டு விசை, மாற்று விசை, செருகு விசை என்று சொல்கிறோம். Key Press என்பதை விசையழுத்தம் என்கிறோம். அதாவது, Key என்ற சொல்லுக்கு ஈடாக விசை என்னும் சொல்லையே பயன்படுத்துகிறோம். கணிப்பொறிப் பிணையங்களைப் பற்றிப் படிக்கும்போது, Secret Key, Public Key, Private Key போன்ற சொற்களை எதிர் கொள்கிறோம். தகவலை இரகசியமாக வைத்துப் பூட்டுவது, திறப்பது என்ற பொருளிலேயே இங்கு Key என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே, விசை என்ற சொல் அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. சாவி எனப் பொருள்படும் திறவி என்னும் தூய தமிழ்ச்சொல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆகவே, Public Key, Private Key ஆகிய சொற்களைப் பொதுத்திறவி, தனித்திறவி என அழைக்கலாம். Key Distribution, Key Management ஆகியவற்றைத் திறவி வினியோகம், திறவி மேலாண்மை எனலாம்.
            Socket என்னும் சொல்லைப் பிணையத் தொழில்நுட்பத்தில், பிணைய வன்பொருள்கள், பிணைய மென்பொருள்கள் ஆகிய இரண்டைப் பற்றிப் பேசும்போதும் எதிர் கொள்கிறோம். வன்பொருள்களில், இரண்டு மின்சார அல்லது மின்னணு சாதனங்களை இணைக்கும்போது, பெரும்பாலும் ஒன்றின் நுழைப்பகுதியை இன்னொன்றின் துளைப்பகுதியில் பொருத்துகிறோம். இவற்றில் துளைப்பகுதியை Socket என்கிறோம். ஒரு சாதனம் அல்லது கம்பிவடத்தின் முனைப்பகுதி நுழைந்து பொருந்துகின்ற வாய்ப்பகுதி என்பதால், Socket என்பதைத் தமிழில் பொருத்துவாய் என்கிறோம். ஆனால், பிணையத்தில் தகவல் பரிமாற்றம் தொடங்குவதற்கு முன், இரு முனைகளிலுமுள்ள சாதனங்கள், சரியாகச் சொல்வதெனில், இரு முனைகளிலுமுள்ள கணிப்பொறிகளில் செயல்படும் பயன்பாட்டு நிரல்கள், தமக்கிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் முன்பு, ஒரு தருக்கநிலை இணைப்பை (logical connection) ஏற்படுத்திக் கொள்கின்றன. அந்தத் தருக்க இணைப்பின் இருபுறமுமுள்ள, கருத்தியலான (abstract) முனைகளே Socket எனப்படுகின்றன. பருநிலை இணைப்பில் (physical connection) பயன்படுத்தப்படும் பொருத்துவாய் என்னும் சொல்லை, தருக்கநிலை இணைப்பில் (logical connection) கருத்தியலான முனைகளுக்குப் பயன்படுத்துவது அவ்வளவு பொருத்தமாக இல்லை. என்னுடைய நூலில் நான் இணைப்புமுனை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். ஆனாலும், இன்னும் சிறந்தவொரு பொருத்தமான சொல்லைக் கண்டறிய வேண்டும் என்று கருதுகிறேன்.
            இதுபோலவே, Gateway என்னும் சொல்லைப் பிணையத் தொழில்நுட்பத்தில், பிணைய வன்பொருள்கள், பிணைய மென்பொருள்கள் ஆகிய இரண்டைப் பற்றிப் பேசும்போதும் எதிர் கொள்கிறோம். Gateway என்னும் சொல் நுழைவாயில் என்னும் பொருளைத் தருகிறது. இரண்டு பிணையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெறப் பல்வேறு சாதனங்கள் பயன்படுகின்றன. ஒத்தவகைப் பிணையங்களுக்கு இடையே, அனுப்பப்படும் தகவலைச் சரியான பாதையில் திசைவிக்க Router என்னும் சாதனம் பயன்படுகிறது. எனவே, அதனைத் திசைவி என்கிறோம். முற்றிலும் வேறுபட்ட பிணையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்கு Gateway பயன்படுகிறது. இது ஒரு சிறப்புவகைத் திசைவி ஆகும். அதனை, நுழைவாயில் என நேரடிப் பொருளில் அழைக்காமல், ஒரு சாதனத்தைக் குறிப்பதற்கு ஏற்றவாறு, திசைவி என்ற சொல்லுக்கு இசைந்தவாறு, நுழைவி என்ற சொல்லால் குறிக்கிறோம். ஆனால், அதேவேளையில், பிணைய மென்பொருளான நெறிமுறைகளைப் பற்றிப் படிக்கும்போது, இரண்டு தன்னாட்சிப் பிணைய முறைமைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில், Border Gateway Protocol, Interior Gateway Protocol, Exterior Gateway Protocol என்றெல்லாம் படிக்கிறோம். இவற்றில் Gateway என்ற சொல் ஒரு சாதனத்தைச் சுட்டவில்லை. சாதனத்தின் கருத்தியலான தன்மையையே சுட்டுகிறது. எனவே, இங்கே நுழைவி என்ற சொல்லைவிட நுழைவாயில் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கிறது. Border Gateway Protocol என்பதை எல்லை நுழைவாயில் நெறிமுறை என்று குறிப்பிடுவதே அதன் பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதாய் உள்ளது.
            Distribution என்னும் சொல் கணிப்பொறியியலில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப் படுகிறது. Distributed Systems, Distributed Database, Distributed Services என்றெல்லாம் பேசப்படுகிறது. இங்கெல்லாம் Distribution என்பதற்குப் பொதுவாகப் பகிர்மானம் என்றே பொருள் கொள்கிறோம். பகிர்மான முறைமைகள் அல்லது பகிர்ந்தமை முறைமைகள், பகிர்ந்தமை தரவுத்தளம், பகிர்ந்தமை சேவைகள் என்று குறிப்பிடுகிறோம். இங்கெல்லாம் பகிர்மானம் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்ட பகிர்ந்தமை என்னும் சொல் பொருத்தமாகவே இருக்கிறது.
            பிணையப் பாதுகாப்பு பற்றிப் படிக்கும்போது, ஒரு நிறுவனத்தின் எதிரிகள் அந்நிறுவனப் பிணையத்தின்மீது தொடுக்கும் பல்வேறு வகையான தாக்குதல்கள் பற்றிப் படிக்கிறோம். அவற்றுள், சேவை-மறுப்புத் தாக்குதல் (Denial of Service Attack) என்பது ஒருவகையான தாக்குதல் ஆகும். சுருக்கமாக, டிஓஎஸ் தாக்குதல் என்று கூறுவர். பிணையங்களில் நுகர்வி (Client), வழங்கி (Server) கணிப்பொறிகளுக்கு இடையே, பொதுவாக, கோரிக்கை-பதிலுரை என்ற வடிவிலேயே தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு நிறுவனத்தின் பிணையத்தைத் தாக்க நினைப்போர், அந்நிறுவன வழங்கிக்குப் போலியான கோரிக்கைகளைப் பல்லாயிரக் கணக்கில் அடுத்தடுத்துத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பர். வழங்கியானது, அத்தனை கோரிக்கைகளுக்கும் பதிலுரை வழங்க முடியாமல் திக்குமுக்காடும். அந்த நேரத்தில் வழக்கமான பயனர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலுரை அனுப்ப முடியாமல் வழங்கி திணறிப் போகும். உண்மையான பயனர்களுக்கு நியாயமான சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும். அவர்களுக்கு வழக்கமான சேவைகள் மறுக்கப்படுவதால் இது சேவை-மறுப்புத் தாக்குதல் ஆயிற்று.
            சில வேளைகளில் இந்தத் தாக்குதலை எதிரிகள் கடுமை ஆக்குவர். ஒரு கணிப்பொறியிலிருந்து ஒருவர் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, எதிரிக் குழுவைச் சேர்ந்த பலநூறு பேர், உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், முன்பே திட்டமிட்டபடி, ஒரே நேரத்தில் சேவை மறுப்புத் தாக்குதலைத் தொடுப்பர். இவ்வாறு பல முனைகளிலிருந்து தொடுக்கப்படும் சேவை மறுப்புத் தாக்குதல் ஆங்கிலத்தில் Distributed Denial of Service Attack (DDoS) எனப்படுகிறது. இதைத் தமிழில் எப்படிச் சொல்வது? பகிர்ந்தமை சேவை மறுப்புத் தாக்குதல் எனலாமா? அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை அல்லவா? பல்முனைச் சேவை-மறுப்புத் தாக்குதல் என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலச் சொல்தொடரில் உள்ளடங்கியுள்ள பொருளும் தெளிவாகப் புலப்படும்.
            எனவே, தகவல் தொழில்நுட்பப் பணிக்குழு வகுத்துத் தந்த கலைச்சொல்லாக்க உத்தியின்படி, ஆங்கிலக் கலைச்சொல்லின் நேரடியான மொழிபெயர்ப்பாக இல்லாமல், அது உணர்த்துகின்ற உண்மையான பொருளைத் துல்லியமாக வெளிக்கொணருமாறு, இடம், பொருள், ஏவல் அறிந்து, தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்குவதே சிறந்த நடைமுறையாக இருக்கும். அவ்வாறு, உண்மைமையான பொருளை வெளிக்கொணருமாறு கலைச்சொற்களை உருவாக்கக் களம்சார்ந்த புலமை (Domain Knowledge) கட்டாயத் தேவை என்பது, இதுகாறும் நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளின் மூலம் எளிதில் புலனாகும்.

கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் தமிழ்க் கணிப்பொறி இதழ்களின் பங்களிப்பு


கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் தமிழ்க் கணிப்பொறி இதழ்களின் பங்களிப்பு

                கணிப்பொறி அறிவியல் இன்றைக்கு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நடைமுறையிலும் கணிப்பொறியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கணிப்பொறியைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
                இத்தகைய காலச் சூழ்நிலையில் இரண்டு வகையான வளர்ச்சிப் போக்குகளைக் காண முடிகிறது. கணிப்பொறியில் செயல்படும் மென்பொருள் தொகுப்புகள் அனைத்தும் அவரவர் தாய்மொழியிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்ற வேட்கை அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கணிப்பொறி அறிவியலைத் தத்தம் தாய்மொழியிலேயே கற்கவேண்டும் என்கிற ஆர்வமும் தேவையும் உலக சமுதாயம் எங்கும் மேலோங்கி நிற்கிறது. தமிழ்பேசும் சமுதாயமும் இதற்கு விதிவிலக்கு அன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிநவீனக் கணிப்பொறி அறிவியலைத் தமிழ்மொழி மூலமே கற்றுப் பயனடையப் பேரார்வம் காட்டி வருகின்றனர்.
                தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு நகரங்களில் எல்லாம் பல்தொழில்நுட்ப பயிற்சிக் கூடங்களும், பொறியியல் கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன. அங்கெல்லாம் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாகப் கற்றுத் தரப்படுகிறது. பள்ளியிறுதி வகுப்புவரை தமிழ்மொழியிலேயே கல்வி கற்றவர்கள் பட்டயப் படிப்பையும் பட்டப் படிப்பையும் ஆங்கிலத்தில் கற்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அதே வேளையில் சிற்றூர்களில்கூட கணிப்பொறிப் பயிற்சி தரும் பயிற்சிக் கூடங்கள் ஏராளமாக உருவாகிவிட்டன. அங்கு பயிலும் மாணவர்கள் கணிப்பொறி அறிவியல் விளக்கங்களை தமிழிலேயே கேட்டறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
                தமிழ்நாட்டில் அறுநூறுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் கணிப்பொறி அறிவியல் கற்றுத் தரப்படுகிறது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் களஞ்சியத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் ஆயிரத்தைந்நூறு சமுதாய இணைய மையங்களை சிற்றூர்களில் நிறுவ தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சியில் கணிப்பொறி பற்றித் தமிழிலேயே பேசப்படுகிறது. சொல்செயலி, தகவல் தளம், மின் அஞ்சல், உலாவி போன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழிலேயே வெளியிடப்பட்டுள்ளன.
                தமிழ்மொழி சொல்வளம் மிக்க மொழி, அறிவியல் கருத்தமைவுகளை பொருள் குன்றாமல் விரித்துரைக்கும் அளவுக்கு ஏராளமான வேர்ச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி. கணிப்பொறி அறிவியலையும் தமிழில் கற்றுத் தரமுடியும் என்பதில் ஐயமில்லை.
                பள்ளியில் பல்வேறு அறிவியல் பாடங்கள் தமிழில் கற்றுத் தரப்படுகின்றன. அவற்றுக்குரிய கலைச்சொற்கள் அரசின் பாடப் புத்தகங்கள் மூலமாக ஓரளவு நிலைபெற்றுள்ளன. ஆனால் கணிப்பொறி அறிவியலில் தமிழ்க் கலைச்சொற்கள் பெருமளவு பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஒருவர் பயன்படுத்தும் கலைச்சொற்களை இன்னொருவர் பயன்படுத்துவதில்லை. இதனால் கணிப்பொறி அறிவியலை முதன்முதலாக தமிழ்மூலம் அறிந்துகொள்ள விழைபவர்களுக்குக் குழப்பமே மிஞ்சுகிறது.

 கணிப்பொறி பற்றித் தமிழில்
                கணிப்பொறி அறிவியலைத் தமிழில் எழுதும் முயற்சி நீண்ட காலங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கணிப்பொறி விந்தைகளைக் கதைகளில் எழுதியது மட்டுமின்றிக் கணிப்பொறி அறிவியல் குறித்துப் பொதுப்படையான நூல்களையும் எழுதியுள்ளனர். சுஜாதா அவர்கள கணித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சியாக ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்என்னும் நூலையும் வெளியிட்டார். பத்திரிக்கைகளிலும் பொதுவான கணிப்பொறிச் செய்திகளை அவ்வப்போது எழுதிவந்தார். யுனெஸ்கோவின் கூரியர் தமிழ்ப் பதிப்பில் அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் தொடக்க காலந்தொட்டே கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
                1993-ஆம் ஆண்டில் தினமலர் செய்தித்தாளின் வியாழன் இணைப்பான வேலைவாய்ப்புக் கல்வி மலரில் கற்போம் கம்ப்யூட்டர்என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகளை வெளியிட்டனர். ஏற்கனவே கணிப்பொறியில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்குப் பயன்படும் வகையில் டாஸ், டிபேஸ் கட்டளைகள் பற்றிய விளக்கங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கணிப்பொறித் துறையில் குறிப்பிட்ட பிரிவில் பயனாளருக்கு உதவும் பாட விளக்கமாக முதன்முதலில் தமிழில் எடுக்கப்பட்ட முயற்சி அத்தொடர் எனலாம். கணிப்பொறி அறிவியலைக் கற்கும் ஆர்வலர்களிடையே குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே அத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து குமுதம் வார இதழ் படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறிஎன்னும் தொடரை வெளியிட்டது. கணிப்பொறி அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுக் காடடுவதாய் அத்தொடர் அமைந்தது.
பல்வேறு வார மாத இதழ்களும் அவ்வப்போது கணிப்பொறி பற்றிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. 1994 நவம்பரில் வளர்தமிழ் பதிப்பகம் தமிழ் கம்ப்யூட்டர்என்னும் கணிப்பொறி இதழைத் தமிழில் வெளியிட்டது. கணிப்பொறித் துறைக்கென்றே தமிழில் வெளியான முதல் இதழ் என்பது மட்டுமன்று, இந்திய மொழிகளிலேயே கணிப்பொறிக்கெனத் தனித்த இதழ் வெளியிட்ட முதல்மொழி தமிழ் என்ற பெருமையும் அவ்விதழ் மூலம் கிடைத்தது எனலாம். கணிப்பொறி அறிவியல் பற்றிய பொதுவான கட்டுரைகள், குறிப்பிட்ட கணிப்பொறி இயக்க முறைமைகள் (Operating Systems), கணிப்பொறி மொழிகள் (Computer Languages), பயன்பாட்டுத் தொகுப்புகள் (Application Packages) பற்றிய கட்டுரைத் தொடர்களும் வெளியிடப்படுகின்றன. கணிப்பொறியில் பணியாற்றுவோர்க்கு ஏற்படும் சிக்கல்கள், ஐயங்கள், கேள்வி-பதில் பகுதியில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
                தமிழ் கம்ப்யூட்டர்இதழைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் நேரம்என்னும் இதழ் வெளியிடப்பட்டது. 1998 நவம்பர் முதல் கம்ப்யூட்டர் உலகம்என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. 1999 அக்டோபர் முதல் இணையத்திற்கென்றே ஒரு தனி இதழ் இன்டர்நெட் உலகம்என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. எத்தனையோ இந்திய மொழிகளில் கணிப்பொறி அறிவியலுக்கெனத் தனித்த இதழ்கள் கிடையா. அப்படியிருக்கையில் இணையத்திற்கெனத் தனித்த இதழ் தமிழில் வெளிவருவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
                பிப்ரவரி 2000 முதல் 'கணிமொழி' என்னும் ஒரு மாத இதழ் வெளிவருகிறது. கணிப்பொறி, இணையம், மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை ஜனரஞ்சக நடையில் தருகின்றனர். ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இதழை ஒரு தொழில் நுட்பப் பத்திரிக்கையாக இல்லாமல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடிய வெகுஜனப் பத்திரிகையாக வழங்கி வருகின்றர்.
                கணிப்பொறி அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் மேற்கண்ட இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாகக் கணிப்பொறியின் செயல்பாடு தொடங்கி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மீத்திறன் கணிப்பொறித் தொழில்நுட்பம் (Super Computer Technology) வரையிலான அதிநவீன கணிபொறி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து இதழ்களுமே கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுரைகளைக் கவனமாகத் தொகுத்து வெளியிடவில்லை என்ற போதிலும், மறைமுகமாகவேனும் கணித்தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு அவை பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ் கம்ப்யூட்டர்
                தமிழ் கம்ப்யூட்டரின் தொடக்க கால இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரியும். கணிப்பொறித் துறையின் நுட்பங்களை எல்லாம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பையே காணமுடிகிறது. தமிழில் சொல்லவேண்டும் என்ற வேகமும் தெரிகிறது. மற்றபடி, கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும், ஆங்கிலச் சொற்களைக் கூடுமானவரை தமிழில் மொழியாக்கம் செய்து எழுத வேண்டும், கருத்தமைவுகளை விளக்கும்போது தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
                ஆப்பரேடிங் சிஸ்டம், டேட்டா பேஸ், அப்ளிகேஷன், பாஸ்வோர்டு, ஹாட்டுவேர், சாஃப்ட்வேர், மானிட்டர், டவுன்லோடு, அப்லோடு, மெஷின் லேங்குவேஜ் என்று ஆங்கிலச் சொற்கள் அப்படியே ஒலிபெயர்ப்புச் செய்து எழுதப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் எய்டட் டிசைனுக்கு மிகப்பெரும் எதிர்காலம்என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு. இன்னும் சில சொல்தொடர்களில் 'யூசர்நேம், Password-ஐ பெறவேண்டும், ’Scan எடுக்க’, Peripheral-க்கு என்றெல்லாம்கூட எழுதப்பட்டுள்ளது.
                ஒருசில கட்டுரையாளர்கள் நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர். Touch Screen என்பதைத் 'தொடுதிரை' என்றும், Data Transfer என்பதை 'விவரப் பரிமாற்றம்' என்றும் பயன்படுத்தியுள்ளனர். சில தமிழாக்கச் சொற்களை அனைத்துக் கட்டுரை ஆசிரியர்களும் ஒன்றுபோலவே பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத் தக்கது. எடுத்துக்காட்டாக, variable என்பதை மாறிஎன்றும் constant என்பதை மாறிலிஎன்றும் memory-நினைவகம்என்றும் அனைவருமே பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, command என்பதைக் கட்டளைஎன்றே அனைவரும் எழுதுகின்றனர். சிலர் ஆணைஎன்று பயன்படுத்தியுள்ளதையும் காண முடிகிறது. குறிப்பிட்ட சில கட்டுரையாளர்கள் தொடக்கத்தில் கலைச்சொற்களுக்கு நல்ல தமிழாக்கச் சொற்களைக் குறிப்பிட்டுவிட்டுப் பின்னால் ஒலிபெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
                சி-மொழி பற்றிய கட்டுரைத் தொடரின் ஆசிரியர் கட்டுரைத் தலைப்பு, பத்தித் தலைப்புகளில் தூய தமிழாக்கச் சொற்களையே பயன்படுத்தியுள்ளார். செயல்கூறு (function), கிளைபிரி கட்டளைகள் (branching commands). மடக்கிகள் (loops). விவர இனங்கள் (data types), சுட்டு (pointer) பல்பரிமாணம் (multi-diamention), கோவை (array), குழு (structure) போன்ற சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் உள்ளே அவற்றைப் பற்றி விளக்கும்போது ஃபங்ஷன், அர்ரே, ஸ்ட்ரக்டர், பாயின்டர் என்று ஒலிபெயர்ப்புச் சொற்களையே பயன்படுத்தியுள்ளார். நாளடைவில் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சிறிது முன்னேற்றம் காண முடிகிறது. நோட்புக் கணிப்பொறிகளுக்கேற்ற புது சில்லு’. ’தட்டையான திரைகளிலும் வரைகலை வசதி’ ’மின்வணிகத்தில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்’, ’இணையத்தில் மருத்துவத் தளங்கள்’ ’ஆவணங்களைச் சேமிக்க பேஜ்சீப்பர் மென்பொருள்என்றெல்லாம் தலைப்புகளைக் காண முடிகிறது. கணிப்பொறி, இணையம், வரைகலை, இணையத் தளம், மென்பொருள், சில்லு, மின்னஞ்சல், மின்வணிகம், தகவல் தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றம், தகவல் தளம், ஆவணங்கள், நினைவகம், சேமிப்பகம் போன்ற சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
                தமிழ் கம்ப்யூட்டர் இதழில் அண்மைக் காலமாக கணிப்பொறி அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்என்ற தலைப்பில், துறைவாரியாக சொற்கள் தொகுக்கப்பட்டு அவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தி அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து அச்சொல்லின் தமிழ்ச் சொல்லாக்கம் என்ன என்று தராமல், தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தி அதற்குரிய விளக்கத்தைத் தந்து இறுதியில் அச்சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற முறையிலே அக்கலைச்சொற்களையும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவற்றுக்கு வேறு பொருத்தமான புதிய சொற்களையும் இன்னும் புழக்கத்திற்கே வராத புத்தம்புது சொற்களையும் அதில் காணமுடிகிறது. அதில் குறிப்பிடப்பட்ட பல புத்தம்புதுச் சொல்லாக்கங்களை ஒரு சில கட்டுரையாசிரியர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தொடர் வாயிலாகத் தமிழ் கம்ப்யூட்டர்இதழ் பல சிறந்த கணித்தமிழ்ச் சொற்களை வழங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
                தமிழ் கம்ப்யூட்டர் மூலமாக பல புதிய கலைச்சொற்கள் தமிழுக்குக் கிடைத்துள்ளபோதிலும், அப்பத்திரிகையில் கட்டுரை எழுதுவோர் அனைவரும் ஒன்றுபோல் அச்சொற்களை எடுத்தாள்வதில்லை என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக கம்ப்யூட்டர்என்ற சொல்லையே எடுத்துக் கொள்வோம். பெரும்பாலான கட்டுரை ஆசிரியர்கள் கம்ப்யூட்டர்என்றே எழுதுகின்றனர். ஒருசிலர் கணிப்பொறிஎன்று குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் கணினிஎன்று எழுதுகின்றனர். அதேபோல ஃபிளாப்பி டிஸ்க்’ ’ஹார்டுடிஸ்க்என்று சிலரும் நெகிழ்வெட்டு’, ’நிலைவட்டுஎன்று மிகச் சிலரும் எழுதுகின்றனர். ஹாட்டு டிஸ்க்என்பதை வன்தட்டுஎன்று எழுதுவாரும் உளர். ஆக, ’டிஸ்க்என்ற சொல் வட்டு, தட்டு, தகடு என்று மூன்று வகையாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே இதழில் அடுத்தடுத்த பக்கங்களில் இந்த மூன்று சொற்களுமே இடம்பெற்றுள்ளதையும் காண முடியும்.
                கட்டுரை ஆசிரியர்கள் அவரவர் தமக்குச் சரியெனப்படும் சொற்களையே பயன்படுத்துகின்றனர். அவை அப்படியே வெளியிடப்படுகின்றன. குறிப்பிட்ட சில சொற்களை இப்படிப் பயன்படுத்துங்கள் என்ற வழிகாட்டுதல் எதுவும் பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளரிடமிருந்து இல்லையென்றே சொல்ல வேண்டும்.

கம்ப்யூட்டர் நேரம்
                கம்ப்யூட்டர் நேரம்என்னும் இதழைப் புரட்டிப் பார்த்தால், எந்தவொரு தமிழ்க் கலைச்சொல்லும் கண்ணில் படவில்லை. பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை அப்படியே ஒலியாக்கம் செய்து வெளியிடுகின்றனர். ஆங்கிலச் சொற்களை அப்படியே ஆங்கில எழுத்துக்ளிலேயே எழுதும் முறை காணப்படுகிறது. கட்டளை, மின்னஞ்சல், தகவல், வலை, வெப்தளம், திரை போன்ற சில சொற்களை ஆங்காங்கே காணமுடிகிறது. மற்றபடி கணித்தமிழ் சொல்லாக்கத்திற்கான ஆர்வம் அப்பத்திரிக்கையில் எழுதுவோர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை. அண்மைக் காலமாக ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்சொல்லை வெளியிட்டு இக்குறையைச் சரிக்கட்டி வருகின்றனர். ஆனால் கட்டுரையாசிரியர்கள் எவரும் அவற்றில் ஒரு சொல்லைக்கூட மறந்தும் பயன்படுத்தவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தி.

 கம்ப்யூட்டர் உலகம்
                கம்ப்யூட்டர் உலகம்என்னும் திங்களிதழ், பக்க வடிவமைப்பில் சற்று வித்தியாசமாகத் தென்பட்ட போதிலும் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தமிழ் கம்ப்யூட்டர்இதழையே பின்பற்றுகிறது என்று சொல்லவேண்டும். கணித்தமிழ்ச் சொற்களைக் கையாளுவதிலும் தமிழ் கம்ப்யூட்டரின் வழியினையே பின்பற்றுகிறது எனலாம். என்றாலும் சில குறிப்பிட்ட கணித்தமிழ்ச் சொற்கள் தமிழ் கம்ப்யூட்டர்இதழைக் காட்டிலும் கம்ப்யூட்டர் உலகம்இதழில் சரளமாகப் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, கணிப்பொறி, இணையம், இணையத் தளம், தேடல் பொறிகள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தளம், மின்னஞ்சல், இயக்கத் தொகுப்பு, விசைப்பலகை, நினைவகம் போன்ற சொற்கள் மிகச் சரளமாகப் பல்வேறு கட்டுரையாளர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டேட்டாபேஸ், இ-மெயில், ஆப்பரேடிங் சிஸ்டம், கீபோர்டு, டிப்ஸ் போன்ற சொற்களும் பயன்படுத்தப்படாமல் இல்லை. ஹார்டுவேர், சாஃப்ட்வேர், புரோகிராம், மானிட்டர், ஹார்டு டிஸ்க், ஃபிளாப்பி டிஸ்க், வைரஸ், டிஜிட்டல், கிராஃபிக்ஸ், பிரவுசர், மல்ட்டி மீடியா, அனிமேஷன், ஆடியோ, வீடியோ, மோடம், பிரின்டர், பிராசசர் ஆகிய சொற்கள் அப்படியேதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கீடான தமிழாக்கச் சொற்கள் எங்கேனும் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்று தேடிப் பார்த்தாலும் கண்டறிய முடியவில்லை.
                கடவுச்சொல் (password), பதிவிறக்கம் (download) விவாத மேடை (Usenet) போன்ற ஒன்றிரண்டு புதிய தமிழாக்கச் சொற்களை ஆங்காங்கு காண முடிந்தது. கம்ப்யூட்டர் உலகம் இதழும் கணித்தமிச் சொல்லாக்கத்திற்கெனத் தனிப்பட்ட முயற்சி எதுவும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

இன்டர்நெட் உலகம்
                கம்ப்யூட்டர் உலகம்இதழில் எழுதும் கட்டுரையாளர்களே பெரும்பாலும் இன்டர்நெட் உலகம்இதழிலும் எழுதுகின்றனர். இணைய வணிகம், மின்னஞ்சல், பதிவிறக்கம், வைய விரிவலை (WWW), இணைய இதழ்கள், செய்திக்குழு (News Groups), இணைய உலாவி (Browser) போன்ற சொற்களைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். பத்திரிக்கையின் பெயர் இன்டர்நெட் உலகம்என்றிருந்தபோதிலும் உள்ளே பெரும்பாலான இடங்களில் இணையம்என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணிமொழி

                இதிலுள்ள கட்டுரைகள் மற்ற கணிப்பொறி இதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் இருக்கின்றன. கனமான தொழில்நுட்ப விவரங்களையும் எளிமையான கோணத்தில் எடுத்துச் சொல்லும் பாணி எல்லாப் படைப்புகளிலும் தெரிகிறது. இதன் காரணமாகவே ஏனைய, இதழ்களைவிட அதிகமான ஆங்கிலச் சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. வெப்சைட், இன்டர்நெட் சாட்டிங், கம்ப்யூட்டர் கேம், டவுன்லோடு, இ-மெயில் என்று மட்டுமல்ல பிஸி, பிஸினஸ், டாப்ரேங்க், அயிட்டங்கள், ஸ்பெஷல், ரெடி என சாதாரண ஆங்கிலச் சொற்களையெல்லாம் காண முடிகிறது. அதே வேளையில், வலைவாசல் (portal), வலையகம் (website), திணைப்பெயர் (domain name), வலைவாசி (netizen), ஊடுருவி (Hacker) போன்ற சிறந்த தமிழாக்கச் சொற்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதழாசிரியரின் இக்கட்டுகள்
                ’’கணிப்பொறி அறிவியல் பற்றிய விழிப்புணர்வை பத்திரிகை ஊடகத்தின் மூலம் ஏற்படுத்துவதே எங்களுடைய பிரதான நோக்கம். அதிநவீனத் தொழில்நுட்பப் புரட்சிப் பயணத்தில் தமிழ்ச் சமுதாயம் பின்தங்கிவிடக் கூடாது. அதே வேகத்தில் அவர்களையும் உடனழைத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தின் உந்துதலில் நாங்கள் செயல்படுகிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தை தமிழர்களுக்கு தமிழிலேயே விளக்கிச் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆங்கிலம் அறியாதோர் அதிகப் பலன்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.’’
"ஆங்கிலத்திலுள்ள தொழில்நுட்பச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டிராமல், வளர்ந்துவரும் நவீனத் தொழில் நுட்பத்தை உடனுக்குடன் தமிழில் தருகிறோம். தகவல் உடனடியாக வாசகரைப் போய்ச் சேரவேண்டும் என்பதே இப்போதைக்கு எங்கள் நோக்கமாக இருக்கிறது.’’ தமிழ் கம்ப்யூட்டர் இதழின் ஆசிரியர் திரு. க.ஜெயக்கிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு தெரிவிக்கிறார். வாசகர்களிடமிருந்து வரும் கருத்துகள் எதிரும் புதிருமாக இருப்பதுண்டு என்கிறார். தூய தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்தும்போது, ’கணிப்பொறி அறிவியலை தமிழில் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் தமிழ்க் கலைச்சொற்கள் புரியவில்லை. தொழில்நுட்பச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுங்கள்’’ என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கின்றனர். ’’ஏன் தமிழ் கம்ப்யூட்டர் என்று பெயர் வைத்துள்ளீர்கள்? தமிழ் கணிப்பொறி என்று பெயர் வைக்கக் கூடாதா? ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதினால் அறிவியல் தமிழ் எப்படி வளரும்?’’ என்று கேட்கின்ற வாசகர்களும் உண்டு என்கிறார்.
’’முதலில் தமிழர்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவோம். ஆங்கிலம் அறியாதோர்க்கும் அறிவியலை எடுத்துச் செல்வோம். பின்னணியில் அறிவியல் தமிழ் ஆக்கத்திற்கு முயற்சிகள் மேற்கொள்வோம்’’ என்பது அவருடைய கருத்து.
கம்ப்யூட்டர் உலகம், இன்டர்நெட் உலகம் இதழ்களின் பொறுப்பாசிரியர் திரு. எம்.சி. முத்து அவர்களும் இதே கருத்துகளைத்தான் முன்வைக்கிறார். ’’அறிவியல் தொழில்நட்பக் கருத்துகள் சாதாரண படிப்பறிவு உள்ளவர்கட்குப் போய்ச் சேர வேண்டிய தகவல் தொடர்பு மொழி’ (Communication Language)யில் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். தூய தமிழில் தர வேண்டும் என்ற எண்ணத்தில் அதைப் படிக்கும் வாசகருக்கு தகவல் சென்று சேராமல் போய்விடக் கூடாது. இப்படித்தான் எழுத வேண்டும் என்று கட்டுரை ஆசிரியர்களை நாங்கள் வலியுறுத்துவதில்லை. ஆனால் முரண்பாடான சொல்லாக்கங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதக் கூடாது என்று சண்டையிடும் தமிழ் ஆர்வலர்கள் தாங்களாக எழுத முன்வருவதில்லை. விவாதத்திற்கும் தயாராக இருப்பதில்லை.’’ என்கிறார். வாசகர்களிடையே முரண்பட்ட எதிர்பார்ப்புகள் இருப்பதை இவரும் சுட்டிக் காட்டுகிறார்.
கணிமொழி இதழின் ஆசிரியர் திரு.செ.ச.செந்தில்நாதன் அவர்கள், ''உருப்பொருட்களான பெயர்ச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்தலாம். பிரின்டர், மவுஸ், ஸ்கேனர், மானிட்டர் போன்ற சொற்களை அப்படியே பயன்படுத்தலாம். கருத்துருவான பெயர்ச்சொற்களை (Abstract Nouns) அக்கருத்தை உணர்த்தும் வகையில் மொழியாக்கம் செய்து பயன்படுத்தலாம். Web Casting என்பதை வலைபரப்பு என்றும், Motion Capture என்பதை அசைவுப்பதிவு என்றும் மொழியாக்கம் செய்யலாம்.'' என்று கூறுகிறார்.

கட்டுரையாளர்களின் கருத்துகள்
                தமிழ்க் கணிப்பொறி இதழ்களில் கட்டுரை எழுதுபவர்கள் பெரும்பாலோர் கணிப்பொறி அறிவியலை ஆங்கிலத்தில் கற்றவர்களே. தாங்கள் அறிந்து கொண்ட புரிந்து கொண்ட தகவல்களைத் தமிழில் விளக்கிச் சொல்லத் தெரிந்தவர்களே கட்டுரை எழுத முன்வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் மொழி இயலிலும், தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. தமிழ்க் கணிப்பொறி இதழ்களில் பலகாலம் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையாளர் ஒருவர், ’’தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்கும் அளவுக்கு எனக்குத் தமிழில் புலமை கிடையாது. கணித்தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொடுங்கள். அவற்றை என்னுடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தயாராக உள்ளேன்’’ என்கிறார்.
கணிப்பொறி அறிவியலிலும், தமிழ் மொழியிலும் ஒருசேரப் புலமை பெற்ற கட்டுரையாளர்கள் மிகவும் சொற்பமே. அப்டிப்பட்டவர்கள்கூட தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதத் தயங்குகின்றனர். ’’இப்போதைக்கு, தமிழ்க் கணிப்பொறி இதழ்களைப் படிப்பவர்கள் ஏற்கனவே கணிப்பொறியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் அல்லது கணிப்பொறித் துறையில் ஓரளவு பரிச்சயம் பெற்றவர்கள். ஹார்டு டிஸ்க், ஃபிளாப்பி டிஸ்க், பிரவுசர், புரோகிராம், மவுஸ், பிராசசர் போன்ற சொற்களை அறிந்துள்ளனர். நிலைவட்டு, நெகிழ்வட்டு, உலாவி, நிரல், சுட்டி, நுண்செயலி போன்ற சொற்கள் அவர்களுக்கு அந்நியமானவை. தூய தமிழில் எழுதத் தொடங்கினால், ’இது நமக்குப் புரியாதுஎன்று அவர்கள் ஒதுக்கி விடவும் வாய்ப்புண்டு’’ என்று அச்சம் தெரிவிக்கின்றனர். என்றாலும் மெல்ல மெல்ல கணித்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவதில் அவர்கள் ஆர்வம் உடையவர்களாகவே இருக்கின்றனர்.
’’File-Copy செய்யவும். படத்தை Scan செய்து File ஆக மாற்றவும். டெக்ஸ்ட் பாக்ஸில் கலர் ப்ராப்பர்டியை சேஞ்ச் செய்யவும்’’ என்றெல்லாம் எழுதுகின்ற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். எந்தவொரு கருத்தையும் தமிழில் சொல்ல அவர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. அப்படிப்பட்ட கட்டுரைகளும் வெளிவரத்தான் செய்கின்றன. பக்கத்தை நிரப்ப அதுபோன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்க் கணிப்பொறி இதழ்கள் இருக்கின்றன என்பதும் எதார்த்த உண்மை ஆகும்.
 வாசகர்களின் கருத்துகள்
கணிப்பொறி அறிவியலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள், ஏற்கனவே கணிப்பொறி அறிவியலை பள்ளியில், பயிற்சியகத்தில், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், கணிப்பொறித் துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே ஆங்கிலக் கணிப்பொறி இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பவர்கள். இப்படிப்பட்ட வாசகர்களே தமிழ்க் கணிப்பொறி இதழ்களை வாங்கிப் படிக்கின்றனர்.
இவர்களுள் பெரும்பாலோர் கலைச்சொல்லாக்கம் பற்றிக் கவலை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். கணிப்பொறி அறிவியலில் எம்.டெக்.படித்துள்ள ஒரு வாசகர் ’’என்னதான் இருந்தாலும், நம் தாய்மொழியில் படிக்கும்போது மனத்திற்கு இதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படிக்கும்போது புரிவதைவிடத் தமிழில் படிக்கும்போது எளிதாகப் புரிகிறது’’ என்று கூறுகிறார். கலைச்சொற்களைப் பொறுத்தவரை அவருக்குக் கவலையில்லை. ’’தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்தும்போது ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் கட்டாயம் கொடுத்துவிடுங்கள்’’ என்கின்றனர் பெரும்பாலான வாசகர்கள். தனித்தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவதை வன்மையாக எதிர்க்கின்றனர். ’’எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழ்க் கலைச்சொற்களையே பயன்படுத்த வேண்டும். அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களைத் தந்துவிட்டால் போதும்’’ என்பது அவர்கள் கருத்தாய் உள்ளது.

ஒவ்வொரு கட்டுரையாளரும் ஒவ்வொரு விதமாக எழுதுவதை பல வாசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கலைச்சொற்களைக் கையாளும்போது இதழ்முழுக்க ஓர் ஒத்திசைவு (consistency) இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும்போது கூட ஒத்திசைவு இல்லாமையைச் சுட்டிக் காட்டுகின்றனர். இன்டர்நெட் - இண்டர்நெட், வர்ச்சுவல் - விர்ச்சுவல், ஹார்டு டிஸ்க் - ஹார்ட்டிஸ்க், இ-மெயில் - ஈ-மெயில், டிஜிடல் - டிஜிட்டல், வேர்டு ஆர்ட் - வேர்ட் ஆர்ட், ஆபீஸ் - ஆஃபீஸ் என்று ஒரே இதழில் வேறு வேறு விதமாக எழுதப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.
 கணித்தமிழ் சொல்லாக்கத்திற்கான சில நெறிமுறைகள்
கணிப்பொறி அறிவியல் செய்திகள், தமிழ்க் கணிப்பொறி இதழ்கள் மூலமாக மட்டுமின்றி வானொலி, தொலைக்காட்சி, நூல்கள் வாயிலாகவும் தமிழ் பேசும் மக்களைச் சென்றடைகின்றன. கணிப்பொறித் தொழில்நுட்பத்தைத் தமிழில் எடுத்துக் கூறும் வாய்ப்பும் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக கண்கூடாகக் காண முடிகிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க கணித்தமிழ்ச் சொல்லகராதி எதுவும் இல்லாத காரணத்தால் அவரவர் தத்தம் நோக்கில் கலைச்சொற்களைப் பயன்படுத்தும் நிலைமை நிலவி வருகிறது. பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவது போல, கணிப்பொறித் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணித்தமிழும் தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோலப் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ் விசைப்பலகை தரப்படுத்தப் பட்டதைப்போல் கணித்தமிழ் சொல்லாக்கமும் தரப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்க் கணிப்பொறி இதழ்களை ஆய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையில், கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்:
1. நுட்பமான அறிவியலைச் சாதாரணக் கல்வியறிவு பெற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மொழியாக்கம் எளிமையானதாக இருக்க வேண்டும்.
2. சாதாரணமாகத் தமிழைப் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவருக்குப் புரியாத இலக்கியச் சொற்களைத் தவிர்க்கலாம். அவையும் ஆங்கிலத்தைப் போலவே அந்நியப்பட்டுப் போகும்.
3. ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழிபெயர்க்கக் கூடாது. (Hardware - வன்பொருள், Software - மென்பொருள்) மேலிருந்து நீர் கொட்டுவதால் ஆங்கிலேயர் water falls என்று சொல்ல நீர்வீழ்ச்சிஎன்று மொழி பெயர்த்தனர், அருவி என்ற சொல்லை அறியாதவர்கள்.
4. மேம்போக்கான மொழிபெயர்ப்புக் கூடாது. பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களைத் தேடிக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். Disk என்பதற்கு, தட்டு, தகடு என்பதை விட வட்டுஎன்ற சொல்லே பொருத்தமானது.
5. பொருத்தமான வேர்ச் சொற்களுடன் விகுதிகளை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்க வேண்டும். பல கணிப்பொறிகள் பிணைக்கப்பட்ட நெட்வொர்க் - பிணையம். இண்டர்நெட் - இணையம்.

6. சொல்லாக்கம் அச்சொல் சார்ந்த சொல்தொடர்களுக்கும் பொருந்தும் வகையில் அமைய வேண்டும். Browser - உலாவி; Internet Browsing - இணைய உலா; Browsing Centre - இணைய உலா மையம்.
7. தலைப்பெழுத்துச் சுருக்கச் சொற்களுக்கு (Acronyms) பொருளடிப்படையில் புதிய சொல் அல்லது சொல்தொடர்களை உருவாக்கலாம். ROM - அழியா நினைவகம்; RAM – நிலையா நினைவகம்.
8. நிறுவனப்பெயர், பொருளின் விற்பனைப் பெயர், மற்றும் பல சிறப்புப் பெயர்களை அப்படியே பயன்படுத்தலாம். மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் என்டீ, எம்எஸ்வேர்டு, ஸ்மால்டாக், பேஜ்மேக்கர், கோரல்ட்ரா.
9. மீட்டர், கிலோ, லிட்டர், டாலர், ரூபாய் ஆகியவற்றைப் போலவே பிட், பைட், ஹெர்ட்ஸ், மிப்ஸ் போன்ற அளவீட்டுச் சொற்களை அப்படியே பயன்படுத்தலாம்.
10. ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்தறிந்தவர் தமிழிலும் கற்கப் போகிறார் என்ற எண்ணத்தில் மொழிபெயர்ப்பு’ (translation) செய்யக் கூடாது. (mouse - எலி); ஆங்கிலமே அறியாத ஒருவர் முதன்முதலாக தமிழில் அச்சொல்லை அறிந்துகொள்ளப் போகிறார் என்ற கருத்தில் மொழியாக்கம்’ (transcreation) செய்யப்பட வேண்டும்.
 பின்னிணைப்பு:
கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் தமிழ்க் கணிப்பொறி இதழ்களின் பங்களிப்பான சொற்கள் சில இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன:
Analog - உவமம்
Digital - துடிமம்
Computer - கணிபொறி
CPU - மையச் செயலகம்
Memory - நினைவகம்
Keyboard - விசைப்பலகை
Monitor - திரையகம்
Mouse - சுட்டி, சொடுக்கி
Floppy Disk - நெகிழ்வட்டு
Hard Disk - நிலைவட்டு
Compact Disk - குறுவட்டு
Disk Drive - வட்டகம்
Printer - அச்சுப்பொறி
Inkjet Printer - மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer - புள்ளி அச்சுப்பொறி
Laser Printer - ஒளியச்சுப் பொறி
Ploter - வரைவு பொறி
Scanner - வருடு பொறி
Modem - இணைக்கி
Input - உள்ளீடு
Output - வெளியீடு
Network - பிணையம்
Internet - இணையம்
WWW - வைய விரிவலை
Website - வலையகம்
Portal - வலைவாசல்
Webpage - வலைப்பக்கம்
Webcasting - வலைபரப்பு
Netizen - வலைவாசி
Browser - உலாவி
Server - புரவன்
Client - கிளையன்
Terminal - முனையம்
Workstation - பணி நிலையம்
Node - கணு
Search Engine - தேடு பொறி
E-mail - மின் அஞ்சல்
E-Commerce - மின் வணிகம்
Download - பதிவிறக்கம்
Upload - பதிவேற்றம்
Encryption - மறையாக்கம்
Decryption - மறைவிலக்கம்
Hackers - ஊடுருவிகள்
E-Cash - மின்பணம்
IT - தகவல் தொழில்நுட்பம்
Text - உரை
Graphics - வரைகலை
Sound - ஒலி
Audio - கேட்பொலி
Video - நிகழ்படம்
Photo - நிழற்படம் / ஒளிப்படம்
Microprocessor - நுண்செயலி
ROM - அழியா நினைவகம்
RAM - நிலையா நினைவகம்
Mother Board - தாய்ப்பலகை
Expansion Slot - விரிவாக்கச் செருகுவாய்
Animation - நகர்படம்
Motion capture - அசைவுப்பதிவு
Wire freame - வலைப்புள்ளிச்சித்திரம்
Rendering - உருப்பெருதல்
Texture - புறத்தோற்றம்
Multimedia - பல்லூடகம்
Data - விவரம் / தகவல்
Column - நெடுவரிசை
Row - கிடைவரிசை
Table - அட்டவணை
Data Base - தகவல் தளம்
Word Processor - சொல் செயலி
Spread Sheet - விரிதாள்
Operating System - இயக்க முறைமை
Platform - பணித்தளம்
GUI - வரைகலைப் பணிச்சூழல்
User - பயனாளர் / பயனாளி / பயனர்
Password - நுழைசொல்
Application Package - பயன்பாட்டுப் பணித்தொகுப்பு
File - கோப்பு
Document - ஆவணம்
Directory - கோப்பகம்
Folder - கோப்புறை
Variable - மாறி
Constant - மாறிலி
Instruction - ஆணை
Command - கட்டளை
Program - செயல்வரைவு
Function - செயல்கூறு
Interpreter - ஆணைமாற்றி
Compiler - மொழிமாற்றி
Translator - மொழிபெயர்ப்பி
Binary Language - இரும மொழி
Window - சாளரம்
Menu - பட்டியல்
Icon - சின்னம் / குறும்படம்
Font - எழுத்துரு
Erase - அழி
Delete - நீக்கு
Remove - அகற்று
Format - வடிவமை / அழகமை
Virtual - மெய்நிகர்
Virtual Reality - மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு



கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...