பாலுறவு பற்றி இப்படியெல்லாம் பேசுவது
புனிதமான இந்த உடலுறவைக் கொச்சைப்படுத்துவது ஆகாதா, தூய்மையான காதல் போன்ற
உணர்வுகளை இழிவுபடுத்துவது ஆகாதா என்று சிலர் கருதலாம்.
நியாயம்.
ஆனால் புனிதமான தூய காதல் என்றோ புனிதமான, தூய உடலுறவு என்றோ உலகில்
எதுவும் கிடையாது. எல்லாம் எதிர்பால் கவர்ச்சிதான். இந்தக் கவர்ச்சிக்கான
புறக் காரணங்கள், அகக் காரணங்கள் பலது இருக்கும். அது இங்கே நமக்கு
முக்கியம் இல்லை. அடிப்படை இந்தக் கவர்ச்சிதான். ஈர்ப்புதான்.
இந்த
ஈர்ப்பு இல்லாமல் காதல் இல்லை. உடலுறவு இல்லை. இது பொதுவிதி. இதில்
சிலபேர் மனத்தளவில் நேசிப்பது காதல் என்றும், உடலளவில் நேசிப்பது காமம்
என்றும் வகைப்படுத்தி காமத்தை இழிவுபடுத்தியும், காதலை உன்னதப்படுத்தியும்
பேசும் போக்கு இருக்கிறது. இது வெறும் மாயைதானே தவிர உண்மையல்ல.
காரணம்,
எல்லாக் காதலின் இலக்கும் உடலுறவுதான். இந்த உடலுறவு இல்லாத காதல்
இல்லை. அதேபோல எல்லாக் காதலின் சாரமும் காமம்தான். இந்தக் காமம் இல்லாத
காதலும் உலகில் இல்லை. ஆகவே காதலில் காமமும் உண்டு. காமத்தில் காதலும்
உண்டு. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. எனவே இவற்றில்
ஒன்றை மேன்மைப்படுத்துவதிலோ, ஒன்றை இழிவு படுத்துவதிலோ எந்த நியாயமும்
கிடையாது.
ஏனெனில் உடலளவில் எதிர்பாலை
விரும்பும் ஒரு ஆண் அல்லது பெண் மனத்தளவில் கொஞ்சமேனும் நேசிக்காமல்
உடலுறவில் ஈடுபட முடியாது. அதேபோல மனத்தளவில் நேசிப்பதாகக் கருதப்படும்
காதலிலும் எதிர்பாலோடு உடலுறவு கொள்வது பற்றிய எண்ணம் கிஞ்சித்துமின்றி
சும்மா வெறுமனே காதலித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இவ்விரண்டிற்குமான
உறவை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதேபோல
உடலுறவு சாரா தூய காதல் என்று ஒன்று எப்படி எங்கும் இல்லையோ அதேபோல
நிரந்தர அமர காதல் என்றும் எதுவும் எங்கும் இல்லை. எதிர்பால் காதல் என்பது
காமத்திலிருந்து எழுவது. இது அடுத்தவர் நலனில் ஆழ்ந்த அக்கறையும்
ஈடுபாடும் கொண்டதாக, அவரையே நினைத்து ஏங்க வைப்பதாக இருக்கும்போது காதலாக
வருணிக்கப்படுகிறது.
இந்தக் காதல் கை
கூடாத போதோ, இதற்குத் தடைகள் பெருகும் போதோ காதலின் வேகம் தீவிரமடைகிறது.
இதுவே தடைகளே இல்லை, அது எளிதில் கைகூடும் வாய்ப்பில் இருக்கிறது என்றால்
இதே காதல் பொசுக்கென்று போய்விடும். இதுதான் உண்மை. இதுதான் அறிவியல்.
இத்துடன்
எந்தக் காதலும் நிரந்தரமானது அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் மாறக்
கூடியதே என்பதும் உண்மை. அதாவது என்றென்றைக்கும் நிரந்தரமாக ஒருத்திக்கு
ஒருவன் மீதோ, அல்லது ஒருவனுக்கு ஒருத்தி மீதோ காதல் இருந்து கொண்டிருக்கும்
என்று சொல்ல முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் முடியாது. அது எந்தத்
தருணத்திலும் மாறலாம். ஆகவே நிரந்தரமான அமரத்துவமான காதல் என்பது எதுவும்
கிடையாது. இருக்கவும் முடியாது.
அப்படியானால்
வரலாற்றில் இதிகாசங்களில் காப்பியங்களில் அமர காதலர்கள் வருகிறார்களே,
அதெல்லாம் பொய்யா என்று சிலர் கேட்கலாம். மெய்தான். அந்தக் காதலெல்லாம்
நிறைவேறாத காதலாய்ப் போனதால் அவர்கள் அமர காதலர்களானார்கள். ஆனால் அதுவே
நிறைவேறிய காதலாய் ஆகியிருந்தால் அவர்களது அமர காதலின் உன்னதம்
தெரிந்திருக்கும்.
அது, அம்பிகாபதி -
அமராவதியோ, சலிம் - அனார்கலியோ, ரோமியோ - ஜூலியட்டோ அவர்கள் காதல் கனிந்து
திருமணமும் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளோடு வாழ்ந்திருந்தால் அவர்கள்
காதல் எப்படியிருந்திருக்கும் என்று தெரிந்திருக்கும். போகட்டும்.
அவர்கள் இல்லற வாழ்வைக் காண நமக்குக் கொடுத்து வைக்க வில்லை. ஆனால்
அவர்களுக்குப்பின் எத்தனையோ காதல் ஜோடிகளை நாம் பார்த் திருப்போம். அதை
வைத்தேனும் சில முடிவுகளுக்கு வரலாம்.
அடுத்து,
எந்தக் காதலின் தோற்றமும், காமமாகவே எதிர்பால் கவர்ச்சியாகவே இருக்கிறது.
இந்த எதிர்பால் கவர்ச்சி நீடிக்கிற வரை காதல் நீடிக்கும். இது
குறையும்போது, தணியும்போது காதலும் தணியும். இதுதான் உண்மை. இதன் கால
நீட்டிப்பு வேண்டுமானால் ஜோடிக்கு ஜோடி வேறுபடலாமே தவிர, சிலருக்கு
ஆறுமாதம், சிலருக்கு ஆறு வருடம், சிலருக்கு இருபது, முப்பது வருடம் என
இருக்கலாமே தவிர, இதில் எதுவும் நிரந்தர மானதல்ல. நூற்றுக்கு எழுபது
எண்பது விழுக்காட்டிற்கு மேல் ஏறக்குறைய இப்படி ஒருவரையொருவர் காதலிக்க
இயலாமல், ஒரு வேளை தொடக்கத்தில் காதலித்திருந்தாலும் அதைத் தொடர
முடியாமல், சமூக நிர்ப் பந்தங்களுக்கும் அதன் மதிப்பீடுகளுக்கும்
கட்டுப்பட்டு வாழ்ந்து வருபவர்கள்தான்.
ஆகவே,
மணமாகி அறுபதாண்டு நிறைவைக் கொண்டாடு பவர்கள் எல்லாம் ரொம்ப நேச பாசத்தோடு
வாழ்ந்து கொண் டிருப்பவர்கள் என்றோ, ஒருவரையொருவர் காதலித்து நிம்மதியாக
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றோ முடிவுக்கு வந்து விட முடியாது.
அரிதாகச் சிலர் இருக்கலாம். அது வேறு செய்தி. ஆனால் பொதுப் போக்கு
அப்படிக் கிடையாது.
அதேபோலத்
திருமணமாகியும் ஒருவரையொருவர் காதலிக் காமல் வாழ்வது போல, திருமணமாகாமலே
ஒருவரை யொருவர் காதலித்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் திருமண
உறவுகளுக்கு அப்பால் எங்கெங்கோ விலகியிருக்கிறார்கள். சேர்ந்து வாழ இயலாத
வர்களாயிருக்கிறார்கள் என்பதனாலேயே அவர்கள் ஒருவரை யொருவர் காதலிக்காமல்
இருக்கிறார்கள் என்று கருதிவிட முடியாது.
இவற்றையெல்லாம்
புறப் பரப்பில் நிகழும் நடப்புகளை வைத்து தீர்மானிக்க முடியாது. அவரவர்
அகத்தையும் தோண்டிப் பார்த்தால்தான் உண்மை புரியும். ஆகவே, பாலுறவில்
நிரந்தரக் காதல், ஒருவர் மீது மட்டுமே காதல் என்கிற போலித் தனங்களைப்,
பாசாங்குகளை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள இயலாது.
அதோடு
மட்டுமல்ல, காதல் என்பது ஓர் அருவ உணர்வு. அது மனிதப் பண்பு நலன், உடல்
நலன் சார்ந்தது. எனவே, இது எதிர்ப் பாலின் உடல் தோற்றம், வசீகரம், குண
நலன், இயல்பு, சுபாவம், ஆற்றல், பழகும் விதம், பேச்சு எனப் பல்வேறு
வகைப்பட்ட ஆளுமைப் பண்புகளோடு தொடர் புடையது. இதில் எந்தச் சார்புமே
இல்லாத தூய அருவக் காதல் என்று எதுவும் இல்லை. எதிர்பாலிடம் தான்
எதிர்பார்த்த பண்பு மற்றும் பிற புறநிலைகள் நீடிக்கிற வரை, இந்தக் காதல்
நீடிக்கும். அது குறையும் போதோ, அல்லது மாறும்போதோ காதலும் மாறும். வயது
முதிர்ச்சி காரணமாக ஈர்க்கும் பண்புகள், காட்டாக வாலிபத்தில் உடல்
ஈர்ப்பு, பிற ஆற்றல் ஈர்ப்பும் காதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
வயோதிகத்தில் பண்பு நலன், பிற ஒத்துழைப்புகள், இணக்கம் முதலானவை காரணமாக
இருக்கலாம். ஆக, இப்படிப்பட்ட ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படை யிலேயே காதல்
நீடிக்க முடியும். இப்படிப்பட்ட புறச் சார்பு எதுவுமே இல்லாமல் காதல்
நீடிக்க முடியாது.
ஆனால் நமது
திரைப்படங்கள் காதல் என்பது ஏதோ ஒரு உன்னத உணர்வு போலவும், அது அமரத்துவம்
வாய்ந்தது போலவும் யதார்த்தத்திற்குப் புறம்பாக அதை மிகையாகச்
சித்தரித்து, நாயகனோ நாயகியோ காதலுக்காக எதையும் செய்ய, எதையும் இழக்கத்
தயாராவது போல் சித்தரித்து இளம் தலைமுறையின் உள்ளங்களைச் சீரழித்து
வருகின்றன. இதுபற்றி விவரமறியாத விடலைப் பருவ இளம் தலைமுறையினர் இதையே
உன்னதமென்று நம்பி, திரைக் கதாநாயக நாயகிகள் போல் தாங்களும் இருக்க முயன்று
தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தாங்களே பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
எந்தப்
பொருளுமே கிடைக்காத வரை அது மகத்துவமானதுதான், உன்னதமானதுதான்.
ஏக்கத்திற்குரியதுதான். ஆனால் கிடைத்து நுகரத் தொடங்கியபின் காலப்போக்கில்
அது அதன் உன்னதத்தை, சிறப்பை இழந்துவிடும். காதலும் அப்படித்தான். இது
பொது உளவியல்.
வேண்டுமானால், ஒரு
பெண்ணின் மீதே பித்தாய்த் திரியும், அவள் போகுமிடமெல்லாம் பின்னாலேயே
போகும், அவள் திரும்பிப் பார்க்க மாட்டாளா, ஒரு வார்த்தை பேசமாட்டாளா என
ஏங்கும், அவளையே தன் உயிருக்குயிராய் நேசிப்பதாகச் சொல்லி அவளைப்
பின்தொடர்ந்தே சுற்றும் ஒரு இளைஞனிடம் ஒரு நாள் அவள் சட்டென்று நின்று
திரும்பி, ‘கலியாணத்தை எப்ப வச்சுக்கலாம்?’ என்று கேட்பதாக வைத்துக்
கொள்வோம். அந்த இளைஞன் நிலை குலைந்து போவான். ‘காதல் கீதல்’ எல்லாம்
காற்றாய் பறந்தோடி விடும்.
இது
ஒருபுறம். இன்னொன்று இல்வாழ்க்கையில் எந்த ஒரு ஆணுக்கும் நூற்றுக்கு நூறு
தன் எதிர்பார்ப்புக்கு உகந்தவாறு வாழ்க்கைத் துணை அமைவதில்லை. அதேபோலவே
பெண்ணுக்கும்.
இதனால், இணக்கமான
தன்மைகளில் எப்போதும் நட்போடும், முரண்பட்ட அம்சங்களில் அவ்வப்போது
சண்டையிட்டும்தான் எல்லாரது இல்வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.
மற்றபடி நூற்றுக்கு நூறு பொருத்தமான, எல்லா அம்சங்களிலும் நிறைவான இணை
என்பது உலகத்தில் கிடையாது. இருக்கவும் சாத்தியமில்லை. இதில்
தம்பதிக்குத் தம்பதி இணக்கமாயுள்ள விஷயங்களும், முரண்பட்ட விஷயங்களும்
அளவுகளில் கூட குறைய இருக்கலாம். அதாவது சில தம்பதிகளின் மத்தியில்
இணக்கமான விஷயங்கள் கூடுதலாகவும், முரண்பட்ட அம்சங்கள் குறைவாகவும், சில
தம்பதிகளின் மத்தியில் முரண்பட்ட அம்சங்கள் கூடுதலாகவும், இணக்கமான
அம்சங்கள் குறைவாகவும் அமையும். அவ்வளவே.
இதில்
எது கூட, குறைய இருக்கிறதோ, அதைப் பொறுத்தே அவர்களது உறவும் அதன்
நீட்டிப்பும். இணக்கமான அம்சங்கள் கூடுதலாயிருந்தால், அதிக அளவு
பிரச்சினையின்றி வண்டி ஓடும். முரண்பாடான அம்சங்கள் கூடுதலாயிருந்தால்
அடிக்கடி சண்டை, சச்சரவு, பிணக்கு என்று அப்புறம் அதன் உச்சமாக மண
விலக்கு, பிரிந்து வாழ்தல் முதலான நிலைக்குப் போக வேண்டியதுதான். அல்லது
சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சியும், குடும்பத் தகு நிலையைப் பாதுகாத்துக்
கொள்ளவும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாய் சிறை வாழ்க்கைபோல
இல்லறச் சிறைக்குள்ளேயே வாழ வேண்டியதுதான்.
இப்படித்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது பலபேர் வாழ்க்கை. வாழ்க்கை இப்படி இருப்பதனால்தான்
பல பேருக்கு இக்குறைகளின் நிறைவுக்கான தேடலும் உடன் நிகழ்வாக அமைந்து
விடுகிறது.
வாழ்க்கை என்று பொதுவாக
யோசித்தால் பொதுவாக எல்லா நிலையிலும் வாழும் எல்லாத்தரப்பட்ட மனிதர்களுமே,
அவரவர் நிம் மதியை நாடி அலைவதாக, அதற்கான தேடலோடு திரிவதாக இருப்பது
தெரியவரும். இதில் அவரவர் நிம்மதியின் இலக்கு வெவ்வேறானதாக, வெவ்வேறு
பாதைகள் கொண்டதாக இருக்கும். அது முக்கியமில்லை. மனிதன் நிம்மதியைத் தேடி
அலைகிறான் என்பதே முக்கியம். அதாவது எது தன்னிடம் இல்லையோ அதைத் தேடி
அலைவது, எது தனக்குக் கிட்டவில்லையோ அதை நாடித் திரிவது.
இப்படித்தான்
இல்வாழ்க்கையும். காதலித்தோ, பெற்றோர்கள் பார்த்தோ மணமுடித்து
இல்வாழ்க்கை நடத்தும் இளம் தம்பதியினர் தொடக்க உற்சாகத்தில் ஒருவர் குறை
ஒருவர் அறியாமல் சிலகாலம் குதூகலத்தில் நாட்களை ஓட்ட, காலப்போக்கில் ஒருவர்
குறை ஒருவருக்குத் தெரிகிறது. இது அவரவர் மனத்திலும் ஏக்கமாகப்
படிகிறது. மனம் இதற்கு மாற்று தேட முயல்கிறது. தேடுகிற மாற்று இந்தக்
குறைகளே இல்லாது இருக்கவேண்டும் என்கிற கட்டாய மில்லை. அதுவும் குறைகளோடே
இருப்பதானாலும் அது மாற்றா யிருப்பதால் தன் ஏக்கத்திற்கு அது
மருந்தாகிறது. இப்படித்தான் நிகழ்கிறது மண உறவுக்கு அப்பாலான உறவுகள்.
இதில்
பணிக்குச் செல்லும் பெண்கள், இல்லப் பணி பார்க்கும் பெண்கள் எவரானாலும்
சந்தர்ப்பமும் சூழலும் வாய்த்தால், தன் உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில்
இருக்கும் வெறுமையை நிறைவு செய்ய, எந்த ஒரு பற்றுக் கோள் கிடைத்தாலும்
போதும் என்கிற நிலைக்கு, வெளி உறவுக்கு ஆளாக நேருகிறது. இதில் எந்த
வாய்ப்புமே கிட்டாமல், வாய்ப்பு கிட்டினாலும் சமூக அச்சம் காரணமாக அதைத்
தவிர்த்து இந்த ஏக்கம், வாழ்நாள் முடிய அப்படியே மனத்தளவில் கிடந்து
மடிந்து போவதும் உண்டு.
ஆக,
எப்படியானாலும், காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களோ, அல்லது பெற்றோர்
பார்த்து மணமுடித்து வைத்த வர்களோ எவராயினும், நூற்றுக்கு நூறு
நிறைவாகவும் வாழ வில்லை. நூற்றுக்கு நூறு குறையோடும் வாழ்ந்து கொண்டிருக்க
வில்லை. இப்படிப்பட்ட குறைகளும் நிறைகளும் சேர்ந்தே வாழ்ந்து கொண்
டிருக்கிறார்கள் என்பதையும், என்றாலும் இக்குறைகளுக்கான தேடல் எப்போதும்
அவரவர் உள்ளத்திலும் உறைந்து கிடக்கிறது என்பதையும், வாய்ப்பு, சந்தர்ப்பம்
கிடைத்தால் அந்தத் தேடல் ஓரளவு நிறைவு செய்யப்படுகிறது என்பதையும், இதுவே
மண உறவுகளைத் தாண்டிய பாலுறவுக்கு அடிப்படையாய் அமைகிறது என்பதையும் நாம்
புரிந்து கொண்டால் போதும்.
இத்துடன்
பால்வேட்கை குறித்து முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது. இந்த
வேட்கைக்கு வயது வரம்பு கிடையாது. வயது முதிர்ந்த நிலையிலும், உடல்
ரீதியாக தளர்ந்த நிலையிலும் கூட மனத்தளவில் இந்த வேட்கை நீடிக்கும்.
அதற்கான செயற்பாடுகளை வெளிப்படுத்தும்.
எனவே,
வயதானவர்களின் பாலுறவு நடவடிக்கைகளை வைத்து, “இந்த வயசுல இந்தாளுக்கு
இப்படி ஒரு புத்தியா? இந்த வயசுல இந்த பொம்பளைக்கு ஆம்பிடையான் கேக்குதா?”
என்றெல்லாம் கேட்பது அர்த்தமற்றது.
இக்கேள்விகள்
சமூக ஒழுக்க நெறி, கட்டுப்பாடு நோக்கில் எடுத்துக் கொள்ளத்தக்கதே யன்றி
உயிரியல் நோக்கில், அதன் தேவை நோக்கில் பொருத்தமற்றவை.
காரணம்,
இந்தப் பால்வேட்கை என்பது குழந்தையாகப் பிறந்ததிலிருந்து, முதுமையாகி
இறக்கும் வரை மனிதனோடே தொடர்ந்து வருவது. அந்தந்த வயதிற்கும்
வாய்ப்பிற்கும் ஏற்ப வெளிப்படுவது. காட்டாக, இது பருவ வயது வந்து அதற்கான
ஆற்றல் நீடிக்கும் வரை நேரடி உடல் உறவாக வெளிப்படுகிறது. அதற்கான பருவம்
இழந்த நிலையிலோ இது வேறு விதங்களில் வெளிப் படுகிறது.
பாலுறவுக்கான
ஆற்றல் நீட்டிப்பு என்பது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுவது.
சிலருக்கு 50, 60 வயதுக்குள்ளாகவே ஆற்றல் இழந்து விடுகிறது. சிலருக்கு 70,
80 வயதுக்கு மேலும் நீடிக்கிறது. இது அவரவர் பிறப்பு வழி, மரபு,
வாழ்முறை, உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை சார்ந்து அமைவது.
இப்போதும்
கூட 70 வயது முதியவருக்கு குழந்தை பிறப்பு, 65 வயது முதியவர் மறுமணம்
என்றெல்லாம் அரிதாக நாளேடுகளில் செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். இவை
முதுமையிலும் பாலுறவு சார்ந்த செயல்பாடுகளாக அமைபவை எனினும் இவற்றுள்
எதுவும் சட்டவிரோத நடவடிக்கை கிடையாது. எல்லாம் சட்டப்பூர்வமாக அமைபவையே.
ஆனால்,
இவற்றுக்கு அப்பால் முதுமை வயதில், குடும்பத்துக்கு அப்பால் பாலுறவு, இளம்
பெண்களிடம் பாலுறவு சேட்டைகள், சிறு குழந்தைகளிடம் வரம்பு மீறல், தவறான
நோக்கோடு அணுகுதல் முதலான சட்ட விரோத குற்றச் செயல்களாகக் கருதத்தக்க
செயல்பாடுகள் குறித்தும் செய்திகள் வருகின்றன.
இம்மாதிரி
செய்திகளைப் படிக்கும் பலரும், ‘புள்ளைகள் வளர்ந்து கட்டிக் கொடுக்கிற
வயசுல பொண்ணு இருக்குது, அந் தாளுக்கு இப்படி ஒரு புத்தியா, அந்தாளு பேரன்,
பேத்தியெல்லாம் எடுத்தாச்சி, இந்த வயசுல இன்னொரு பொண்டாட்டி கேக்குதா?’
என்றெல்லாம் கேள்விகள் கேட்பதும், விமர்சனம் செய்வதும் குற்றம்
சாட்டுவதுமே நிகழ்கிறது.
இதேபோலவே
முதுமையடைந்த பெண்களும் சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற பாலுறவுச்
செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அரிதாக செய்திகள் வருகின்றன. இம்மாதிரி
நிகழ்வுகளைப் பெரும்பாலும் வெறும் குற்றச் செயலாக மட்டுமே நோக்கும் போக்கு
நிலவுகிறது. இம்மாதிரி நிகழ்வுகளில் அடுத்தவர் மீது வன்முறையை ஏவும்
சட்டவிரோதச் செயல்பாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. என்றாலும்,
இம்மாதிரி நிகழ்வுகளை வெறும் குற்றச்செயலாக மட்டுமே அணுகாமல் இவை ஏன்
நிகழ்கின்றன? எப்படிப்பட்ட சூழலில் நிகழ்கின்றன? என்பதையெல்லாம் ஆய்வு
செய்து அவற்றின் அடிப்படையிலேயே இவை தீர்க்கப்பட வேண்டுமேயல்லாது, வெறும்
வழக்குப் பதிவு, தண்டனை என்கிற ரீதியில் மட்டுமே இவற்றைத் தடுத்துவிட
முடியாது. இதற்குத் தீர்வு காணவும் முடியாது.
எனவே,
பாலுறவுச் சிக்கல்களை அணுகும்போது இந்த உண்மைகளையும் கவனத்தில் கொண்டே
அதாவது, பாலுறவு வேட்கைக்கு வயது வரம்பு கிடையாது என்கிற உண்மையையும்
கவனத்தில் கொண்டே இதை அணுக வேண்டும். இதுசார்ந்த உண்மையைப் புரிந்து கொள்ள
வேண்டும்.
No comments:
Post a Comment