கேள்வி: முதலில் தாங்கள் பெற்றிருக்கும் ‘தலித் பெண்ணிய சிந்தனையாளர்’ விருதுக்காக புதியகாற்று சார்பிலும் எமது சார்பிலும் வாழ்த்துக்கள். இந்த விருது குறித்த விவரத்தைச் சொல்ல முடியுமா?
திருவண்ணாமலை
மாவட்டம் போளூர் தாலுகாவில் இயங்கி வரும் சக்தி பெண்கள் சுய உதவிக்
குழுவினரை வழி நடத்தி செல்லும் கிராம ஊக்ககம் (Village Integral Animation)
சுய உதவிக் குழு 10ஆம் ஆண்டு நிறைவு விழா நடத்தியது. விழிப்புணர்வு
ஊட்டுவதும், சுயவேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதும், பெண்களுக்கு இலவசமாக
சட்ட ஆலோசனைகளை வழங்குவதும் இந்த அமைப்பின் சிறந்தப் பணியாக இருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, இந்த அமைப்பின் சிறப்பம்சம் என்னவென்றால்
பெண்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தியிருப்பது ஆகும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பு தலித் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருவதையும், எத்திராஜ் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணியாளராக இருந்து கிராம
மக்களுக்குச் சில உதவிகளைச் செய்தமையையும் அறிந்து ‘தலித் பெண்ணியச்
சிந்தனையாளர்’ விருதை அளித்தார்கள். கிராம ஊக்கக நிறுவனத்தின் செயலாளர்
அருள் தந்தை செபாஸ்டின் அவர்கள் தான் இந்த விருதிற்கு ஏற்பாடு
செய்திருந்தார். ஆசியாவிலிருந்து வந்திருந்த அருள்தந்தை டிசௌசா இதை
வழங்கினார்.
கேள்வி:
தலித் இலக்கிய முயற்சிகள் இயங்கும் வேகத்தோடு தமிழில் தலித் அரசியல்
இயங்கவில்லை என்றொரு கருத்து ஒன்றுண்டு. அது பற்றிய தங்கள் எண்ணம்?
தலித்
இயக்கங்களிடம் தலித் அரசியலை கட்டமைக்க போதிய ஊக்கம் குறைவாக இருக்கிறது.
தலித் இயக்கத் தலைவர்கள் தங்கள் முன்மாதிரியாக திராவிடப் பாரம்பரியத்தைப்
பின்பற்றுவதால் தலித் அரசியல் கனமான அரசியலாக உருவாகவில்லை. தலித்
அமைப்புகள், இயக்கங்கள் யாவும் ஒன்றிணைந்து தலித்துகளுக்கு எதிராகத்
தொடுக்கப்படும் வன்முறைகளை எதிர்க்க வேண்டும். இந்தச் சிந்தனை தலித்
படைப்புகளில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தலித்
அரசியலை தலித் இலக்கியம் கலக அரசியலாக மாற்றி வருகிறது. இது தலித்
இயக்கங்களிடமும் இருக்கிறது. ஆனால், பார்ப்பனீய சாதி இந்துக்களிடம்
எதிர்வினையை ஏற்படுத்துவதில் தங்களுடைய கருத்தியலை மாற்றிக் கொள்ள வேண்டிய
அவசியம் இருக்கிறது.
கேள்வி: தலித் பெண்ணியத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாய் கூற இயலுமா. . .?
தலித்
பெண்ணியம் குறித்த பார்வை தலித் இயக்கவாதிகளிடம் வளர வேண்டும். தலித்
பெண்ணியம் முழுவீச்சோடு இந்த மண்ணில் காலூன்ற வேண்டுமென்றால், தலித்
பெண்கள் குறிப்பாக திராவிட இயக்கத்தில் இயங்கிய சொர்ணமா தேவி, மீனாம்பாள்
சிவராஜ், ரெங்க நாயகியம்மாள், அங்கயற்கண்ணி சிவராசு, ஞானசௌந்தரியம்மாள்
இப்படி பல தலித் பெண்கள் எவ்வாறு இயங்கினார்கள் என்பதைக் கவனித்து
அவர்களினுடைய வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தலித் பெண்ணியத்தை வளர்க்க
வேண்டும். மேலைநாட்டுப் பெண்ணியத்தை மனதில் கொண்டு தலித் பெண்ணியம்
பேசமுடியாது. ஏனென்றால் இந்திய மண் சாதிய மண்ணாக இருக்கிறது. சாதியத்தை
வேரோடு பிடுங்க வேண்டுமானால் முதலில் தலித் பெண்கள் போராட வேண்டும்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சி மாவட்டத்தில் பண்டாரா என்ற
கிராமத்தில் பய்யாலாலுக்குச் சொந்தமான நிலத்தைச் சாதி இந்து ஆக்கிரமித்த
பொழுது நிலம் தனக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்தி நிலம் தர மறுத்ததால்,
உரிமைக்குரல் எழுப்பிய பய்யாலால் மனைவி மற்றும் மகள் பிரியங்கா கொடூரமான
முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பால் சார் உறுப்புகளை
சிதைத்துக் கொலை செய்ததுடன் மகன்களையும் சாதி இந்துக்கள் கொலை
செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை எதிர்க்கத் திராணி இல்லாமல் மௌனம்
காத்தனர். மனித நேயமற்ற, விலங்குகள் கூட செய்ய விரும்பாத செயல் ஏறத்தாழ ஒரு
மாதத்திற்குப் பிறகு சமூகத்திற்குத் தெரிய வந்திருக்கிறது. இது போல, பல
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்கிறது. தலித் பெண்கள் மீதான
பாலியல் வன்முறையை எதிர்க்க வேண்டியது தலித் இயக்கங்களின் கடமை. தலித்
இயக்கங்களின் போராட்டம் சாதியத்திற்கும், ஆணாதிக்கத்திற்கும், தலித் பெண்
மீது நடைபெறும் வன்கொடுமைக்கும் எதிரானதாக அமையும் போது தலித் பெண்ணியம்
இந்த மண்ணில் காலூன்றும்.
கேள்வி: இன்றைய தமிழக / இந்தியப் பண்பாட்டு சூழலில் பெண்ணியச் சிந்தனை சாத்தியந்தானா?
பெண்ணியம்
என்பது பெண்களின் ஒட்டுமொத்த விடுதலையைப் பேசுவது. மக்கள் சக்திதான்
பெண்ணியம். இது ஓர் இயக்கம். பாதிக்கப்பட்ட எல்லா பெண்களும் போராட வேண்டிய
இயக்கம். இது குடும்பத்தில் ஆணின் ஆதிக்கத்தை எதிர்க்கிறது. ஏனென்றால்
குடும்பம் பெண்ணின் மகிழ்ச்சியை அங்கீகரிப்பதில்லை. முதலாளித்துவம் எல்லாக்
காலக்கட்டத்திலும் ஆணாதிக்கத்தை உற்பத்தி செய்வதாகவே இருக்கிறது. இந்த
இரண்டும் பெண்ணை மனித உயிரியாகப் பார்ப்பதில்லை என அட்ரின் ரிச் (Adrine
Reich) என்ற பெண்ணியவாதி கூறுகிறார். ஏறத்தாழ இந்தச் சூழல் உள்ள எல்லா
நாடுகளிலும் பெண்ணியம் பேச வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, பெண்ணியம் ஒரு
வலுவான கருத்தாக்கம் என்பதை மறுக்க முடியாது. இந்தியப் பண்பாட்டில் இந்து
மதம் பெண்ணை அடிமையாகச் சித்தரிக்கிறது. இதனால், பெண்கள் சுதந்திரமாக
முடிவு எடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. பெண்ணின் தேவைகளை ஆண்
தீர்மானிக்கிறான். இது மாற வேண்டுமென்றால் இந்து மதம் சார்ந்த
சிந்தனையிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். குறிப்பாக இந்தியப்
பண்பாட்டில் இருந்து பெண்கள் மீளுவது தவிர்க்க முடியாததாகும்.
கேள்வி: இன்றைய தலித் இலக்கியப் போக்குகள் குறித்து தங்களின் பார்வை என்ன. . .?
தலித்
இலக்கியம் தலித்துகளின் வாழ்வை, பண்பாட்டை மிகத் தீவிரமாகப் பேசுகிறது.
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வாழும் தலித்துகள் தங்களின்
வலியை, பறிக்கப்பட்ட வாழ்வைப் பேச தலித் இலக்கியம் ஒரு கருவியாக அமைகிறது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட The Roots என்ற நாவல் தமிழில் ஏழு தலைமுறைகள்
என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலைப் படிக்கும் போது
தலித்துகளின் தலைமுறைகள் காலங் காலமாக எவ்வாறு அடக்கப்பட்டிருந்தார்கள்
என்பதை வேதனையோடு புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முடிவு என்ன? என்பதை
யோசிக்க தலித் கலக அரசியல் தேவைப்படுகிறது. இந்தக் கலக அரசியலை ஒவ்வொரு
தலித்தும் உருவாக்க, தலித் இலக்கியம் ஒரு வாசற்கதவாக அமைகிறது. தலித்
இலக்கியத்தில் பாமா, சிவகாமி, இமையம், அன்பாதவன், அழகிய பெரியவன்,
விழி.பா.இதயவேந்தன், இராசமுருகுபாண்டியன், இராஜ் கௌதமன்,
என்.டி.ராஜ்குமார், மதிவண்ணன் மற்றும் பலர் தலித் வாழ்வியலைப் படைப்பாக்கி
உள்ளனர். கிறிஸ்துதாஸ் காந்தி, சிவகாமி, மோகன்லால்பீர், சாணக்யா ஜெ.மோகன்,
ஜான் ஜெயகரன், புனிதபாண்டியன், மு.பா.எழிலரசு, கௌதம சன்னா மற்றும் பலர்
தலித் விழிப்புணர்வை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்
இந்துத்துவ அடையாளங்களைச் சிதைத்து பௌத்த அடையாளங்களை மீட்டெடுக்கும்
பணியில் தலித் இலக்கியம் உருவாக வேண்டும்.
கேள்வி: பெண்ணியம் குறித்து பெண்களும், தலித்தியம் குறித்து தலித்துகள் மட்டுமே தான் எழுத/பேச வேண்டுமென்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறிர்களா..?
பெண்ணியம்
என்பது ஆணைத் தவிர்த்து பேச இயலாது. ஆணினுடைய அரவணைப்பும் பெண்ணினுடைய
ஒத்துழைப்பும், அதே போல பெண்ணினுடைய அரவணைப்பும் ஆணினுடைய ஒத்துழைப்பும்,
சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது பெண்ணியம். எனவே பெண்ணியத்தை
ஆண்களும் பேச முடியும். தாய்ப் பாலூட்டுவது தாயினுடைய அன்பையும்,
கடமையையும் உள்ளடக்கியது என்றால் தாய் இல்லாத பொழுது குழந்தைக்கு சங்கில்
பாலூட்டும் தந்தையின் அன்பும் தாயினுடைய அன்புக்கு நிகரானதே. ஆணுக்குள்
பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாய் இருக்க வேண்டுமென்ற சித்தாந்தமே பெண்ணியம்.
ஆனால்
தலித்தியத்தை தலித்துகள் பேசுவது தான் முறை. சாக்கடையில் இறங்கும்
ஒருவனால் தான் அந்த வீச்சத்தை அப்படியே சொல்ல முடியும். அவனுடைய மொழி,
உணர்ச்சி, வீர்யமிக்கது. ஆயினும், மலம் அள்ளும் ஒரு பெண்ணையோ ஆணையோ
பார்த்து பரிதாபப்படுபவர்கள், அவர்கள் வாழ்க்கையில் மேம்பட வேண்டும் என்று
அக்கறை காட்டுபவர்கள் தலித்தல்லாதவர்களாக இருந்தால் அவர்களை தலித்
சார்பாளர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையாளத்திலிருந்து
மொழிப்பெயர்க்கப்பட்ட சுந்தரராமாசமியின் “தோட்டியின் மகன்” இந்த உண்மையைச்
சொல்லும். ஆயினும், அவர் எழுதிய “பிள்ளைக் கெடுத்தாள் விளை” என்ற கதையில்
தலித் சார்பாளராக இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!
கேள்வி: உங்களுடைய நூல் முயற்சிகள் என்னென்ன..?
முனைவர்
பட்ட ஆய்வேடாகிய “தமிழ் நாவல்களில் பெண்களின் இரண்டாந்தரக் குடிநிலையும்,
மீட்சியும் (ஜெயகாந்தன், இராஜம் கிருஷ்ணன் 1970-90)” என்ற ஆய்வேடு “தமிழ்
இலக்கியமும் பெண்ணியமும்” என்ற நூலாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால்,
நவம்பர் 2002-இல், வெளியிடப்பட்டது. “பெண்ணியக் குரலதிர்வும் தலித் பெண்ணிய
உடல்மொழியும்” என்ற நூல் பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் விளக்கம்
சொல்வதாக அமைந்தது. இது 2002-இல் காவ்யா வெளியீட்டில் வெளி வந்தது.
“வழிகாட்டலும் ஆலோசனை கூறலும்” என்ற நூல் மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்.
“தலித் பெண்ணிய அழகியல்” என்ற பெயரில் திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்
வெளிவர இருக்கிறது.
கேள்வி: தமிழில் பெண்ணியம் பேசும் தலித் பெண் படைப்பாளிகளிடம் தலித் பெண்ணியத்தின் தாக்கம் இருப்பதாய் நினைக்கிறீர்களா..?
தமிழில்
தலித் பெண் படைப்பாளிகளான பாமா, சிவகாமி ஆகியோரது படைப்புகள்
தலித்தியத்தைப் பேசுகின்றன. தலித் பெண்கள் பிரச்சினைகளையும் அதிகம் பேசி
உள்ளனர். எனினும், தலித் பெண்ணியத் தாக்கம் படைப்புகளில் அதிகம் இல்லை
என்றே சொல்லலாம். சிறு தொண்டமாதேவியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும்
கொடுமைகளைத் தீவிரமாக கண்காணித்து எழுதும் பொழுது தலித் பெண்ணிய
எழுத்துக்கள் உருவாகும். குறிப்பாக, பாமாவினுடைய எழுத்துக்களில் சாதிக்
கலவரங்கள் நடைபெறும் பொழுது தலித் ஆண்கள் சேரியை விட்டு வெளியேறி
விடுகின்றனர். இதற்கு காரணம் தலித் ஆண்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக
இல்லாமையே ஆகும். தினக் கூலிகளாக இருப்பதால் நில அதிகாரம் இல்லாமல்
போகிறது. இதனால், இயல்பாக அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சேரியை
விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், தலித் பெண்கள் சேரியை விட்டு வெளியேற
இயலாமல் சாதி இந்துக்களால் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். சாதி
இந்துக்களை எதிர் கொள்ளத் தயார் ஆகின்றனர். இது தலித் பெண்கள் இடையே
ஏற்பட்டுள்ள ஓர் எதிர்வினை என்று சொல்லலாம். சாதிய ஆதிக்கத்தை எதிர்கொள்ள
தலித் பெண்கள் போராட வேண்டிய விதிமுறைகளை தலித் பெண் படைப்பாளிகள்
கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுது தலித் பெண்ணியம் எழுச்சிப் பெறும்.
கேள்வி: தலித் மக்களுக்கு பவுத்தம் விடுதலையைத் தருமென்று நம்புகிறீர்களா..?
பௌத்தம்
தனிமனித விடுதலையைப் பேசுகிறது. இந்துமதம் மனிதனை மேல், கீழ் என்று
பிரித்து தனிமைப்படுத்துகிறது. பௌத்தம் அப்படியல்ல. மனித வாழ்வு மதிக்கப்பட
வேண்டும் என்ற சிந்தனையைப் பௌத்தம் பேசுகிறது. இந்து சமூகத்தினரால்
சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் தீண்டாமைக்குள் வாழும் தலித் மக்கள்
விடுதலை பெற பௌத்தம் ஒரு மார்க்கமாக அமைகிறது. பௌத்தம் மதமல்ல. விடுதலையை
வென்றெடுக்கப் பயன்படும் ஒரு வழி. தலித் மக்களுக்குப் பௌத்தம் சார்ந்த
சிந்தனை குழந்தைப் பருவத்திலிருந்து ஊட்டப்பட வேண்டும். தலித் மக்கள் தலித்
கலாச்சாரமாக, இந்துக் கலாச்சாரத்தைத் தான் பின்பற்றுகிறார்கள். இன்றைக்கு
நடைமுறையில் உள்ள இந்து சிறு தெய்வ வழிபாடு என்பது அம்மன் விழா ஆகும்.
ஆனால் இந்த அம்மன் விழா என்பது பௌத்தத்தில் அம்பிகையம்மாள் புத்தரை வணங்கி
ஞானம் பெற்றதாக பண்டித அயோத்திதாசர் கூறுகிறார். பௌத்தத்தைத் தீவிரமாக
ஆதரிக்கும் அயோத்திதாசரின் சிந்தனைகள் ஏன் தமிழகத்தில் முழு வீச்சோடு தலித்
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனாலும்
அம்பேத்கர் சொல்வதைப் போல, தாழ்த்தப்பட்ட மக்களைத் தவறான பாதைக்கு
அழைத்துச் செல்வதாக நம் மக்களே கருதுகின்றனர்.
மதமாற்றத்தால்
அவர்களுடைய உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமூகத்தைச்
சேர்ந்தவர்களே தவறான பிரச்சாரம் செய்வதால் பௌத்தம் தலித் மக்களுக்கு
விடுதலை நல்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர். ஆனால் அண்மையில்
அக்டோபர் மாதத்தில் நடந்த அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற “Deeksha Boomi”
நிகழ்ச்சியில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஒன்று சேர்ந்த
நிகழ்ச்சி பௌத்தம் விடுதலையைத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
கேள்வி: இளையத் தலைமுறை மத்தியில் பெண்ணியம் / தலித்தியம் குறித்த விழிப்புணர்வு இருப்பதாய் உணர்கிறீர்களா. . .?
தமிழ்நாட்டில்
ஒரு முழம் பூ வாங்கி கொடுப்பதால் பெண்கள் மகிழ்வதும், வாங்கித் தராததால்
பிரிவதும் இயல்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்களுக்குப் பெண்ணியச்
சிந்தனை என்றால் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. டெல்லி, மும்பை
போன்ற நகரங்களில் நன்றாகப் படிக்கும் பெண்கள் இயல்பாகவே தங்கள் விடுதலை
என்ன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஒடுக்கப்படும் பெண்கள் தாங்கள்
ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து போராட பெண்ணியம்
பயன்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தாலும், சாதி இந்துக்களாலும்
அடக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அவர்கள் தங்கள் விடுதலையை தலித்
அரசியலாக்கி வருகிறார்கள். எனவே, பெண்ணியம், தலித்தியம் இந்திய வரலாற்றில்,
குறிப்பாக தமிழகப் பண்பாட்டில் ஓர் எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது.
கேள்வி: உங்களுடைய குடும்பப் பின்னணி குறித்து. . .
திருச்சி
மாநகரத்தில் திருவானைக் காவல் அருகிலுள்ள கொண்டையம் போட்டை என்ற
கிராமத்தில் நான் பிறந்தேன். என் அம்மா அஞ்சுகம் படிக்காதவர். விவசாயக்
கூலி வேலை செய்யும் உழைப்பாளி. அப்பா அரங்கசாமியும் விவசாயிதான். எங்கள்
கிராமத்தில் என் அக்கா திருமதி. செந்தமிழ்செல்வி முதல் எம்.ஏ. பட்டதாரி.
ஆல் இன்டியா ரேடியோவில் நிகழ்ச்சி அமைப்பாளர். என்அண்ணன் அரசு
போக்குவரத்துத் துறையில் இயந்திரத் தொழிலாளி. நான் பட்டம் என்ற
அடிப்படையில் எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி., முடித்திருக்கிறேன்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வாளர் தேர்வில் வெற்றிப் பெற்று
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக சேர்ந்து
பெண்கள் பிரச்சனைகளை மையமிட்ட ஆய்வை முடித்தேன். எத்திராஜ் மகளிர்
கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். அப்பாதான் என் விடுதலை
உணர்வை ஊக்கப்படுத்துபவர். அம்மாவும் அப்பாவும் 5 கிலோ மீட்டர் தூரம் கடும்
குளிரில் அறுவடைக்குச் சென்று ஈட்டி வரும் நெல்லை விற்று என்னையும், என்
அக்காவையும் படிக்க வைத்ததனால் ஊரார் எங்களை மிகக் கேவலமாகப்
பேசியிருக்கிறார்கள். எங்கள் நடத்தையின் மீது களங்கம் கற்பித்தார்கள்,
இன்றும் கூட கிராமத்தில் கேவலமாகப் பார்ப்பவர்கள் தான் அதிகம். ஆனாலும்,
நானும் என் அக்காவும் இன்றைக்கு அந்த கிராமத்தின் முன் மாதிரிகள் என்பதில்
பெருமிதம் உண்டு.
கேள்வி: தலித்துகளின் சமூக/பொருளாதார/பண்பாட்டு விடுதலைக்கு இன்றைக்கு முன்னிருக்கிற தீர்வுகள் என்ன...
அண்ணல்
அம்பேத்கர் சொல்வது போல கற்பி; ஒன்று சேர்; போராடு என்பதை ஒவ்வொரு
தலித்துக்கும் ஊட்ட வேண்டும். தலித்துகள் ஒருவேளை உணவை எந்த விதத்
தடையுமில்லாமல் பெறும் வரை போராட வேண்டிய தேவை இருக்கிறது. தலித்துகள்
தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க தலித் கலைகளை கருவியாக்க வேண்டும். பறை
இழிவு/இழவுக் கருவி என்ற ஆழ்மன சாதி இந்து புத்தியைப் பறையடித்துத்
தகர்க்கவும் இந்துயிசத்தில் கரைத்துக் கொண்டிருக்கும் நமது பண்பாட்டை
மீட்டெடுக்கவும் கலகக் குரல் எழுப்ப வேண்டும். பண்டித அயோத்திதாசர்
சிந்தனைகள், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகள், தலித் சிந்தனையாளர்கள் அனைவரின்
வாழ்வும் பணியும் அரசியலாக்கப்பட வேண்டும். வாழ்ந்த தலைவர்களின்
வரலாற்றிலிருந்து தலித்துகளின் சமூக/பொருளாதார/பண்பாட்டை மீட்டுருவாக்கம்
செய்ய வேண்டும். உலகமயமாதலின் கோரப்பிடியில் தலித்துகளின் வாழ்க்கை
நெருக்கப்படுகிறது. கல்வி உலகச் சந்தையாக்கப்படுகிறது. கிடைக்கும் அரசு
உதவிகள் மறுக்கப்படுகின்றன. இடஒதுக்கீட்டிலும் கிரிமிலேயர் எனும் சாதி
இந்து அதிக்கச் சங்கிலி தலித்துகள் மீது இறுகுகிறது. சமூக அவலங்களை
எதிர்க்கவும் மனித உரிமைகளுக்காகப் போராடவும் தலித்துகளுக்கு மனத்
தயாரிப்பு தேவையாக இருக்கிறது. பண்பாட்டுத் தளத்தில் இந்து மதம் சார்ந்த
போகி விழா, அம்மன் விழா, கார்த்திகை தீபவிழா, தீபஒளி விழா, பண்டித
அயோத்திதாசர் கூறியிருக்கும் முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
கேள்வி: கட்டுரை/விமர்சனம்/உரை தவிர்த்து கவிதை சார்ந்தும் நீங்கள் இயங்குகிறீர்கள். தலித்/பெண்ணிய படைப்புகளின் லட்சணமாக எதைக் கூறுவீர்கள்..?
பெண்ணின்
மீதான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை குடும்பம் / சமூகத் தளத்தில்
அதிகரிக்கும் போது அதை எதிர்த்துப் போராட வேண்டியது பெண்/ஆண்
பெண்ணியவாதிகளின் கடமை என்று சொல்லலாம். அப்படி பேசும்போது பெண் உடல்
சார்ந்த ஒடுக்குமுறைகளையும் பெண்ணியத்திற்குள் அடக்கலாம். பெண் உடல்
அரசியலை மட்டும் பெண்ணியமாகப் பார்க்கக்கூடாது. அதைத் தாண்டி,
வயிற்றுவலியோடும் காலோடு வழிந்தோடும் இரத்தப் பெருக்கோடும் ஆண்டைகளின்
வயலில் வேலைப்பார்க்கும் தலித் பெண்ணின் வலியும் பதிவு செய்யப்பட வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் தலித் சிறுமியை பாலியல் வன்புணர்வு கொள்ளும் சாதிய
ஆதிக்கவாதிகளை எதிர்க்க பெண்ணியவாதிகள் போராட வேண்டும். தலித்
எழுத்தாளர்கள் கூட, தலித் எழுத்தாளர்களில் ஒரு சிலரை மட்டும் தூக்கிப்
பிடிப்பதும், சிலரைக் கருவேப்பிலையாகப் பயன்படுத்துவது போல தூக்கி எறிவதும்
வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலித்தியம் பேசும்போது, தலித் ஆண்
எழுத்தாளர்களில் ஒரு சிலரை மட்டும் திரும்பத் திரும்ப
விளம்பரப்படுத்துவதும் தலித் பெண்ணியத்தைப் பற்றி வாய் திறக்காமல்
தலித்தியவாதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதும் தலித் பெண்ணியத்தைக்
கூர்ந்து அவதானிக்கச் செய்கிறது.
No comments:
Post a Comment