Thursday, December 31, 2015

தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை - நளினி ரட்ணறாஜா

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது.
தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக்கவில்லை . இன்று பிரச்சனை தீரும், நாளை விடிவு வரும் என்று கூவிக் கூவி வாக்கு வேட்டை நடத்துவது மட்டுமே நாம் காலம் காலமாகக் காணும் யதார்த்தம்.
மாற்றுக் கட்சிகள், பேரவைகள் எனத் தினம் தினம் அரசியல் அமைப்புக்கள் உருப்பெறுகின்றன. அதற்கான காரணம் என்னவென்று அவர்களைக் கேட்டால், மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தாமே – இதுநாள் வரை தாம் அங்கம் வகித்த அமைப்புக்கள் அல்ல – விடிவைப் பெற்றுத் தரப்போகிறோம் என்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களில் கூட பெண்களைச் சேர்த்து கொள்ளத் தயங்குகிறார்கள். அப்படிச் சேர்த்தாலும் கூட, ஓரிருவரை எவ்வித முக்கியத்துவமும் வழங்காமல் வெறுமனே பேருக்காக மட்டுமேதான் பட்டியலில் சேர்க்கின்றனர். இதுவே இலங்கைத்தீவில் இன்றுவரை நிலவி வரும் அரசியலாகவுள்ளது .
அண்மையில், தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கபட்டதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் பேரவையில் மருந்துக்குக் கூடப் பெண்களின் பங்களிப்பு இல்லை. இந்த அமைப்பை உருவாக்கியதன் பின்னணியில் நடந்திருக்கக் கூடிய கலந்தாலோசனைகள், கருத்தாடல்களில் கூட பெண்களின் பங்களிப்பு இருந்ததாகத் தெரியவில்லை.
இந்தப் பேரவையில் ஏன் பெண்களுக்கு இடமில்லை என்று முகபுத்தகத்தில் கேட்டதற்கு அவ்வமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒருவர் கூறுகின்றார், ”பெண்களின் பங்களிப்புத் தேவை என்ற கோஷம் தொடக்கத்திலிருந்தே பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது, ஆகவே, எதிர்வரும் காலங்களில் பெண்களைச் சேர்த்துக் கொள்வோம். அதற்காக தகமையான ஆளுமைகளை, துறைசார் நிபுணர்களை தேடிக் கொண்டிருகிறோம். ஆனால், எமக்குச் செயல்பாட்டளர்கள் தேவையில்லை” என்கிறார் அவர். ஆமாம், பெண் சட்டத்தரணிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் போன்றவர்களைத் தேடுங்கள். அரசியல் பதவிகளை அலங்கரிக்க அவர்களைக் கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியில் பணி செய்யும் செயற்பாட்டாளர்களையோ, பெண்ணியவாதிகளையோ மற்றும் மனித உரிமை ஆர்வலர்களையோ, முன்னாள் போராளிகளையோ அரசியலுக்குள் கொண்டு வந்தால் உங்களையும் உங்கள் செயற்பாடுகள், திட்டங்களைக் கேள்வி கேட்பார்கள், கண்காணிப்பார்கள், உங்கள் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வார்கள், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் சலாம் போட மாட்டார்கள் என்று அஞ்சுகிறீர்களா?
உங்களுடைய பெண்களுக்கு சம சந்தர்ப்பமும், சம வாய்ப்பும், தீர்மானம் எடுக்கும் சுதந்திரமும் சமூகத்தின் சகல மட்டங்களிலும், அரசியலிலும் கொடுக்க முடியாதவர்கள் சிங்களத் தலைமைகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு சமத்துவதத்தை பெற்றுத் தர முடியுமா? உங்களுக்கு அரசியலில்​பெண்களின் பங்களிப்பு பற்றிய தேவை உள்ளதெனத் தெரியாதபோது சிங்களத் தலைமைகளுக்கு எவ்வாறு தமிழ் மக்களின் பங்களிப்பு புரியப்போகிறது ?
சரியான பெண்களைத் தேடுகிறோம் என்ற கூற்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட வரலாற்றில், சகல துறைகளிலும், சகல மட்டங்களிலும், யுத்த களத்திலும், கடற்படையணியிலும், அரசியல் துறையிலும், ஆணுக்கு சமமாகப் பெண் நின்று போராடிய பூமியில் அரசியலில் என்றவுடன் மட்டும் தமக்குத் தோதான பெண்களைத் தேடுகிறார்களாம்.
துணிச்சலுடன் எதிரிக்கு முன்னின்று ஆயுதமேந்திப் போராடவும், தற்கொலை குண்டுதாரியாக தாம் கொண்ட இலட்சியத்திற்காகத் தமது உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து வந்த பெண்கள், அரசியல் என்றதும் உங்கள் கண்களுக்குக் காணாமல் போய் விட்டதுதான் அதிசயம்.
வெளிநாட்டுப் பயணங்கள், குளிரூட்டப்பட்ட கார்கள், செல்வாக்கு எல்லாம் கொட்டிக் கிடக்கும் சுகபோக அரசியலுக்குப் பெண்கள் தேவை இல்லை, ஆண்கள் மட்டுமே உரித்தானவர்கள் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் மக்கள் பிரச்சினையை முன்வைத்து ஆரம்பிக்கப்படுவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் அமைப்புக்களும் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றனர் .
போரால் உருக்குலைந்து, அனைத்து கொடுமைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணம், கண்ணீருடன் தம் உறவுகளைத் தேடி அலைவதெல்லாம் பெண்கள். பாலியல் தொழிலாளியாகவும், கூலித் தொழிலாளியாகவும், சுயகௌரவம் இழந்து உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அன்றாடம் செத்துப் பிழைக்கிறார்கள் பெண்கள்.
தீர்மானம் எடுக்கும் சகல மட்டங்களிலும் அதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பது ஆண்களே. சமூக நலன் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும், பெண்களின் பங்களிப்பின்றி தீர்வும் விடிவும் சமூகத்திற்கு எப்போதும் வராது.
கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன், “தமிழ் மக்கள் பேரவை“ என்ற பெயரில் உள்ள “மக்கள்” யார்? ஆண்கள் மட்டுமா? அமைப்பின் பெயரைத் “தமிழ் ஆண்கள் பேரவை” என்று மாற்றினால் மிகப் பொருத்தமாக இருக்குமன்றோ?
ஆணோ பெண்ணோ ஜனநாயக விழுமியங்களையும் நல்லாட்சியின் குணாதிசயங்களையும் மனித உரிமைகளையும், பெண் உரிமையையும் மதித்து நடக்காத, கருத்தில் கொள்ளாத எந்தக் கட்சியும் அல்லது எந்த அமைப்பும் தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வை பெற்றுத் தரும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகும்.

நிலத்தில் புரளும் கவிதைகள்- கறுத்தடையானின் “ஊட்டு”

கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாறுதல்களான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டாயிரத்திற்கு பிறகாக நம் வாழ்முறையில் பெரும் மாறுதலை விளைவித்திருக்கின்றன. கிராமம் தன் சாயலை இழப்பதை சிறு உச்சுக்கொட்டுதலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இயற்கை குரூரமாக வேட்டையாடப்படுவதை ரசிக்கப் பழகியிருக்கிறோம், மண்ணோடு வாழ்ந்தவர்களின் வாழ்வாரம் சிதைக்கப்படுவதற்கு மெளனசாட்சிகளாகியிருக்கிறோம். மண்ணும் மலையும் மலடாக்கப்படுவதின் சூட்சுமத்தை இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம் இரண்டாயிரத்திற்கு பிறகான வாழ்முறை மாறுதல்களுக்கு இணையான வேகத்தில் தமிழ்க்கவிதையின் போக்கு பாய்ச்சலை சந்தித்திருக்கிறதா என்று வினாவை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளலாம். அதற்கான பதில் இல்லை என்றே இருக்கும். சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளில் கவிதை தன்னளவில் மாறுதலைச் சந்தித்திருக்கிறதுதான் ஆனால் அது மெதுவான அதே சமயம் சீரான மாறுதல். வாழ்முறை மாறுதலின் வேகத்திலும் பரிமாணத்திலும் ஒப்பிடும் போது கவிதையில் நிகழ்ந்திருக்கும் மாறுதல் மிக மிகக் குறைவு.
கவிதையின் மொழியில், கட்டமைப்பில், பாடுபொருளில் தனித்துவத்தோடு இயங்கும் கவிதைகளை சமகாலக் கவிஞர்கள் கண்டடைந்திருக்கிறார்கள் என்றபோதிலும் இந்தக் காலகட்டத்தில் கவிதைபுதிய இயக்கமாகஉருப்பெற்றிருக்கவில்லை. பெரும்பாலும் யதார்த்தம், மாய யதார்த்தம், கவிதையினுள் புனைவு போன்றதான ஏற்கனவே கண்டறியப்பட்ட கவிதையியல் சார்ந்த தளங்களில் மட்டுமே தன்னை நகர்த்தி பரிசோதனை செய்து கொண்டிருக்கும் கவிதை மெதுவாகவே தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கவிதை கடந்து வந்திருக்கும் சீரான மாறுதல்களில் குறிப்பிடத் தகுந்த அம்சமாக அவ்வப்பொழுது கவிதை தன் நிலம் நோக்கித் திரும்புதலைக் குறிப்பிடலாம். கவிதை சொல்லியின் நிலம் என்பதில் பால்யம் குறித்தான அவனது மனச்சித்திரம், இழந்துவிட்ட அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து வாழ்க்கை முறைகள், மண் சார்ந்த வாழ்வியல் போன்றவற்றின் பதிவுகளை குறிக்கலாம். கவனமாக குறிப்பிட வேண்டுமானால் கிராமம் குறித்தான கவிதைகள் மட்டுமே நிலம் நோக்கி திரும்புதல் இல்லை- மாறாக மாயவெளிகளிலும் அந்தரதளங்களிலும் அலையும் கவிதை தன் கால்களை அசல் வாழ்க்கை முறையின் நிலத்தில் ஊன்றுவது. அது மிக அரிதாகவே தமிழ்க்கவிதைகளில் நிகழ்கிறது.
மணல்வீடு வெளியீடாக வெளிவந்திருக்கும் கறுத்தடையானின் ஊட்டு கவிதைத் தொகுப்பு தன் நிலம் நோக்கி திரும்பும் கவிதைகளின் பிரதியாக இருக்கிறது. கறுத்தடையானின் கவிதைகளை வாசிப்பதற்கு முன்பாகவே இக்கவிதைகள் பற்றி சில நண்பர்கள் சிலாகித்திருந்தார்கள். சிலாகிப்புகள் கவிதைத் தொகுப்பு குறித்தான பிம்பத்தினை எனக்குள் உருவாக்கியிருந்தன. இந்த பிம்பத்தை உடைத்துவிட்டு கவிதை வாசிப்பது பெரிய சவாலாக இருந்தது.
கோவில்பட்டி வட்டாரச் சொற்களால் கிராமத்து வாழ்முறையை கவிதைகளில் பதிவு செய்யும் கறுத்தடையானின் கவிதை மொழி தமிழ் கவிதைக்கு புதுமையானது. கவிதைக்கென நம் மனம் பழகியிருக்கும் மொழியிலிருந்து விலகி வேறொரு மொழியமைப்பில் இயங்குகின்றன இக்கவிதைகள். கவிதை மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை வரையறைகளும் உடைத்தெறியப்படுதலை ஏற்றுக்கொள்ளும் வாசக மனதினால் இந்தக் கவிதைகளை நெருங்க முடிகிறது. இதுவே தொகுப்பின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. பலம் என்பது கறுத்தடையானின் மொழியின் தனித்துவத்தை முன்னிறுத்தி குறிப்பிடப்படுவது. பலவீனம் என்பது இதுவரை கண்டடையப்பட்ட கவிதைக்கான மொழியோடுதான் கவிதை இருக்க வேண்டும் என்பதில் இல்லை- மொழியில் தவறவிட்டுவிட்ட கவித்துவம். அது இந்தத் தொகுப்பில் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது.
கிராமம் சார்ந்த வாழ்க்கை முறையில் எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அம்மனிதர்களின் வெக்கைகளும் இக்கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. உப்பங்காற்று சுழித்துசுழித்தடிக்க கோடையுழவால் பெருங்கடன்களை சுமக்கத்துவங்கும் விவசாயி, மூத்திரத்தின் கவிச்சவாடை நுகர்ந்தே இளமரியை தேடும் கிடாரிகள், இலந்த பழ முள்ளின் ஊக்கி தொக்கி நின்ற சதை ஆகியனவற்றை கவிதைகளில் வாசிக்கும் போது நாம் இழந்துவிட்ட அல்லது இழந்து கொண்டிருக்கும் இன்னொரு உலகம் மெளனமாக கண்ணாமூச்சி ஆடத்துவங்குகிறது.
வெண்கலப்பானையை புளியிட்டு
பொன்போல விளக்கி வைத்து
பச்சரிசி சொளகில் புடைத்து
அச்சுவெல்லம் அரைப்படியும்
முடிந்தால் முந்திரியும் சேர்த்து
பருத்தி மாரெடுத்து பக்கத்தில்
ஓராள் துணைக்கு தீத்தள்ள
பொங்கியதும் குலவையிட்டு
இறக்கிவைத்த சுடு சோற்றை
அளவாய் எடுத்து வையுங்கள்
ஆதியிலிருந்து வெம்மை தாங்கிய
அடுப்புக்கல்லுக்கு
என்ற கவிதை கிராமத்தில் பொங்கலிடும் காட்சியைப் பற்றியது. இந்தக் கவிதை வெறும் காட்சிப்படுத்தலாக மட்டுமே இருந்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். கவிதையின் கடைசி வரியில் அடுப்புக்கல்லுக்கு பொங்கலிடச் சொல்லி அறிவுறுத்துவதை செய்ய வேண்டியது கவிதையின் பணியில்லை. நேரடி அறிவுறுத்தல், தீர்மானமான வாக்கியங்கள் முதலானவை கவிதையை பலவீனப்படுத்தும் கருவிகளாகக் கருதுகிறேன். இத்தகைய பலவீனங்கள் கறுத்தடையானின் கவிதைகளில் தென்படுகின்றன.
வெயில் பூமியின் காந்தலை கறுத்தடையானின் கவிதைகள் தொடர்ந்து பேசுகின்றன. மழையை ஞாபகப்படுத்துவது/வெயிலாய்த்தானேயிருக்கிறது’,’காற்றில் எப்போதோ வந்துபோன/மழையின் வடுக்கள் போன்ற மழையை எதிர்நோக்கும் மண்வாசனையுடனான மனதினை தொகுப்பு முழுவதும் நெருங்கி விலகுகிறோம். நகரத்தின் ஃப்ளாட்களில் வசித்துக்கொண்டு கார்பொரேஷன் தண்ணீரைவாட்டர் டாக்டர்மூலமாக சுத்தம் செய்து குடிப்பவனுக்கு இந்தக் கவிதைகள் பேசும் மழைத்தேவையின் பரிமாணம் அதே நீள அகலத்துடன் புரியுமா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் தன் கிராமத்தை இழந்த ஒருவனால் அச்சுபிசகாமல் உள்வாங்க முடியும். மழை மண்ணோடு நிகழ்த்தும் பகடையாட்டத்தில் வெட்டியெறியப்படும் மனிதர்களின் வாழ்க்கை தீராத் துன்பங்களின் சாட்சிகளாகின்றன. இத்தகைய சாட்சிகளையும், சாட்சிகளின் பிரதிநிதிகளையும் கறுத்தடையான் மழை குறித்தான குறிப்புகளாக தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார்.
காரம்பசுக்கன்றின் வாயடக்கி
அவ்வழிவந்த சீம்பாலில் சீனி
சேர்த்த கடும்பு பட்சணமாய்
பரிமாற மாட்டின் கத்தல்கள்
கொம்பாய் குத்துகிறது தொண்டைக்குள்
விளக்கெண்ணெய் விரல்கள்
இதையெப்போதும் புரிந்து
கொள்ள போவதேயில்லை
இந்தக் கவிதையில் இளங்கன்றிடமிருந்து சீம்பாலை பறித்துக்கொள்ளும் நம் அவமானகரமான உரிமையையும் கன்றுக்குட்டியின் துக்கமும் மிகத் துல்லியமாக கவிதையாக்கப்பட்டிருக்கிறது. கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்விளக்கெண்ணெய் விரல்கள்என்ற படிமம் சுவாரசியமானது. கருணையில்லாத இயந்திரத்தனமான மனதை, பிற உயிர் ஒன்றின் துக்கத்தை நிராகரிக்கும் போக்கை இப்படிமம் துலக்குகிறது. இத்தகைய இயல்பான வாழ்முறை சார்ந்த படிமங்களை கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. கிராமம் சார்ந்த வாழ்முறையினை பதிவு செய்வதில் கறுத்தடையானின் துல்லியத் தன்மை கவிதைகளில் முக்கியமானதாகப்படுகிறது.
கவிதையின் வரிகளில் சொற்களுக்கு கவிஞன் தேர்ந்தெடுக்கக்கூடிய இடம் கவிதை வாசிப்பை எளிமையாக்குவதோடு, கவிதையின் தெளிவையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சொல் முந்தைய வரியில் இருக்க வேண்டுமா அல்லது அடுத்த வரியில் இருக்க வேண்டுமா என்பது கவிஞனின் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கவிதையியலில் சொற்களின் இடஅமைவுக்கான முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதுவரிகளில் சொற்களுக்கான இடத்தை தேர்வு செய்வதில் இன்னமும் கறுத்தடையானின் கவனம் கூடியிருக்கலாம் என்றுபடுகிறது உதாரணமாக இதே கவிதையில் /அவ்வழிவந்த சீம்பாலில் சீனி/ என்ற வரியில் வரும்சீனிஎன்ற சொல்லை  அவ்வழிவந்த சீம்பாலில்/சீனி சேர்த்த கடும்பு பட்சணமாய் என அடுத்த வரியில் அமைத்திருந்தால் இன்னமும் தெளிவு கூடியிருக்கும்.
தொகுப்பினை பற்றி பேசும் போது இன்னொரு கவிதையையும் குறிப்பிட முடியும். எங்கள் வீடு
நிரம்பவும் பெரியது
தாராளமாய் தூங்கலாம்
ஏழு பேர் நின்று கொண்டு
குறைந்தது இரண்டு பேராவது
கால்களைக் குறுக்கிக் கொண்டு- இந்தக் கவிதை வாசிக்கப்படும் முதல் கணத்தில் நம்மை புன்னகைக்கச் செய்தாலும் அடுத்த கணத்தில் உருவாக்கும் சலனம் அதிர்ச்சியூட்டக்கூடியது. நம் வீடு கனவுகளால் ஆனது, வீடு குறித்தான எத்தனை குறைகள் நமக்கு இருப்பினும் நம்  வீட்டை பிறரிடம் பழித்துப் பேசவே முடிவதில்லை. முடிந்தவரை சமாளிப்பதாகவே நம் செயல்பாடு இருக்கிறது. இது தமிழ் மனத்தின் பாங்கு என நினைக்கிறேன். அந்தப்பாங்கினையே இந்தக்கவிதையில் காண முடிகிறதுதமிழ்மனத்தின் சாயலை கவிதைகள் மூலமாக விரவச் செய்திருப்பதிலேயே கறுத்தடையானின் கவிதைகள் தன் இருப்பினை உறுதி செய்ய தகுதியுடையனவாக தம்மை அமைத்துக் கொண்டிருக்கின்றன.
கவிதைகளின் அடுத்த பதிப்பினை வெளியிடும் பட்சத்தில் இன்னமும் அதிகப்படியான வழக்கு சொற்களுக்கான பொருளை இணைப்பாக தர வேண்டும் எனக் கருதுகிறேன். தொகுப்பு முழுவதுமாக விரவிக்கிடக்கும் வட்டாரச் சொற்களின் பொருளை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாமலேயே பல கவிதைகளை உள்வாங்க முடியாமல் போய்விடுவது தொகுப்பின் குறை.
கவிதைக்கான வழமைகளை உடைத்தெறியும் கவிதை முயற்சிகளுக்கு நான் ஆதரவாளனவாகவே இருக்க விரும்புகிறேன். உடைத்தெறிதேலே கவிதையை உயிர்ப்பாக்கி புதிய தளத்திற்கு நகர்த்துகிறது என்ற நம்பிக்கையே என் ஆதரவிற்கான அடிப்படை. “ஊட்டுதொகுப்பு அத்தகையதொரு கவிதை முயற்சி.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...