முன்னுரை
உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர்.
நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும்.
தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு
வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று
தமிழ்ப்படுத்திக்கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு
என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த, படிக்கும்
வாசகர்கள் உண்டு. தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின்
வழிக் காண்போம்.
நாவலின் கட்டமைப்பு
நாவலின் தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி,
பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன்
பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின்
கட்டமைப்பாகும்.
சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு
சிறுகதையே நாவலின் முதல் வளர்ச்சி
நிலை என்றும் அதிலிருந்தே நாவல் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் ஹட்சன் உரைக்கிறார். சிறுகதை ஒரு சிறிய
வட்டத்துக்குள் சுழல்வது. ஆனால் நாவல் மிகப்பெரிய பரப்பளவைக்
கொண்டு இயங்குவதாகும். புதினத்தில் நிறைய கதாபாத்திரங்கள்,
கற்பனைகள், வருணனைகள் வரலாம்.
முதல் மூன்று நாவல்கள்
1.
வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்“
2.
இராஜம் ஐயர் எழுதிய “கமலாம்பாள் சரித்திரம்“
3.
மாதவையா எழுதிய “பத்மாவதி சரித்திரம்“
நாவல்களின் வகைப்பாடு
நாவல்களை, துப்பறியும் நாவல்,
சமூக நாவல்,வரலாற்று நாவல்,மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல், வட்டார நாவல் எனப்பல வகைப்படுத்தலாம்.
துப்பறியும் நாவல்
ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்ததுவதாகவும்
இந்நாவல்கள் அமையும். ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார், தமிழ்வானன்,
பிடி.சாமி, சுஜாதா,
பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும்
நாவல் எழுதிப் புகழ்பெற்றவர்களாவர். இவர்களுள் இராஜேஸ்குமார்
அவர்களின் துப்பறியும் நாவல்களைத் தற்போது தொலைக்காட்சிகளில் குறும்படங்களாக எடுத்து
ஒளிபரப்பி வருகிறார்கள்.
சமூக நாவல்
காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை
எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும். கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி,
மு.வரதராசன், அகிலன்
போன்றோர் சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் அலையோசை, தியாகபூமி, மகுடபதி ஆகிய நாவல்களும், மு.வரதராசன் அவர்களின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு ஆகிய நாவல்களும் சமூக
நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகும்.
வரலாற்று நாவல்
நேற்றைய செய்தியே இன்றைய வரலாறு என்பர். தமிழக
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன்,
ஜெகசிற்பியன், மு.மேத்தா ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர். வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கல்கி ஆவார்.
கல்கி எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் பார்த்திபன் கனவு,
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
மொழிபெயர்ப்பு நாவல்
சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல்
என அழைத்தனர். காண்டேகரின் மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத்
தமிழில் மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார்.
தழுவல் நாவல்
இவ்வகைப் நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாராயண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி
என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத் தழுவி மறைமலையடிகள்
குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.
வட்டார நாவல்
அந்தந்த வட்டாரப் பேச்சுவழக்குகளையும், பழக்கவழக்கங்களையும்
கொண்டு எழுதப்படுவன வட்டார நாவல்களாகும்.சூரிய காந்தனின் “மானாவாரி மனிதர்கள்”, தோப்பில் முகமது மீரானின் “சாய்வு நாற்காலி” ஆகிய நாவல்கள் தக்க சான்றுகளாகும்.
பெண் நாவலாசிரியர்கள்
பெண் நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி,
இரமணி சந்திரன், இந்துமதி ஆகியோர் சிறந்த பெண்
எழுத்தாளர்களாவர்.
முடிவுரை
இன்றைய சூழலில் நிறையவே
பொழுதுபோக்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் நாவல் வாசித்தல்
என்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. அந்த வழக்கம் இந்தக் காலத்திலும்
தொடர்ந்து வருவது நாவலின் ஆதிக்கத்தை எடுத்தியம்பும்.
No comments:
Post a Comment