'பறவையின் பாதை' – அப்துல்
ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக்
கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட்டார் 'இந்தத்
தொகுதி படிமங்களின் பூங்கா' என்று. அப்துல் ரகுமான் தன்
கவிதைகளில் படிமம், தொன்மம், குறியீடு
என அத்தனை அம்சங்களையும்
அருமையாய் பயன்படுத்துவார்.
படிமம் என்பது
சொற்களால் வாசகனின் மனதில் கவிஞனால்; வரையப்படும் ஓவியம். ஒரு வர்ணனை கூடப்
படிமம்தான். ஆனால் உவமை, உருவகம், தொன்மம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதும் கவிதை ஒரு அழகான படிமமாய்
உருவாகும்.
அப்துல் ரகுமானின்
சொல்லாட்சித் திறன், தன் கவிதைளிற்கும் தொகுப்புக்களிற்கும் தலைப்பிடும்போதுகூட
அழகாய் வெளிப்படும். இந்தத் தொகுப்பின் பெயரைப் பாருங்கள் 'பறவையின் பாதை'. நான் இதற்கு முன்னர்
ஒருபோதும் இந்த சொல்லை யார் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை.
தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.
ஒளிதல்
கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும்
அதனால் உன்னிடமிருந்து தப்ப
இருள்களுக்குள் ஓடினேன்
நீ புன்முறுவல் செய்தாய்
நான் உறக்கத்தில் ஒளிந்தேன்
நீ கனவாக வந்தாய்
நான் விதையில் ஒளிந்தேன்
நீ நீராக வந்தாய்
நான் வீணையில் ஒளிந்தேன
நீ விரலாக வந்தாய்
நான் மொட்டுக்குள் ஒளிந்தேன்
நீ சூரிய கிரணமாய் வந்தாய்
நான் பாவத்தில் ஒளிந்தேன்
நீ மன்னிப்பாய் வந்தாய்
நான் பொய்யில் ஒளிந்தேன்
அது என் முகத்திரை என்றாய்
நான் சந்தேகத்தில் ஒளிந்தேன்
அது என் விளக்கடி நிழல் என்றாய்
நான் இல்லை என்ற பாலையில்
ஒளிந்தேன்
`சிலந்திப் பூச்சியே!
என் வீட்டு மூலையில்
வலை பின்னுகிறாய்` என்றாய்
No comments:
Post a Comment