இரா.காமராசு
கே.ஏ.ஜி என அறியப்பட்ட டாக்டர்
கே.ஏ.குணசேகரன் (12.05.1955)
சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு அருகில் மாரந்தை என்னும் சிற்றூரில் பிறந்தவர். தாத்தா
மாரந்தை கருப்பன் நாடகக் கலைஞர். தந்தை அழகர் பள்ளி ஆசிரியர். தாய் பாக்கியவதி
எட்டாம் வகுப்பு வரைப் படித்தவர். இந்தப் பின்னனி இருந்தும் சாதியும், வறுமையும் துரத்திய வாழ்வு அவருடையது.
“என்
இளைமைக்காலம் இஸ்லாமிய மக்களோடு தொடர்புடையது. அவர்கள் மிகுதியாக வாழும்
இளையான்குடியில் இல்லாத சாதி வேற்றுமை அதன் இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரக்
கிராமங்களில் விளங்கியதை என் பள்ளி நாள்களில் உணர்ந்தேன். கிராமங்களில் வாழும்
சாதி இந்துக்கள் சொல்லிவைத்தாற் போல் கடைப்பிடித்துவரும் தீண்டாமையின் கொடுமைகளைத்
தினுசு தினுசாக அனுபவித்த என் இளைமைக்கால வாழ்க்கையை அசைபோட்டேன். “வடு”
உருவானது. நான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகளை எழுதிய போதே
பல நேரம் எனக்குள் ஆத்திரம் பொங்கியது, சில நேரம் கண்ணீர் மல்கியது. பல சம்பவங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்
நண்பர்களிடம் எவ்வாறு சொன்னேனோ அதைப்போலவே எழுத்திலும் விவரித்துள்ளேன்.” என தன் “வடு” தன் வரலாறு முன்னுரையில் கே.ஏ.ஜி. கூறுவார்.
இளமையும் ஈடுபாடும்
அவரின் தாயார் சினிமாக் கொட்டகையில்
டிக்கட் கிழித்து,
விறகு வெட்டி விற்று, புல்லறுத்து அவரையும் குடும்பத்தையும் காப்பாற்றியது, காலை வேளைகளில் ஊறவைத்த புளியங்கொட்டைகளைத் தின்று
பசியாறியது,
வயலிலிருந்து நண்டு, நத்தைப் பிடித்துச் சாப்பிட்டது போன்றவற்றை அவர் சொல்லும் போது கழிவிரக்கம்
கோராத அவரின் - சமூகத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்வார்.
கே.ஏ.ஜி யின் வாழ்க்கை போராட்டங்கள்
நிரம்பியது. அடிப்படையில் சாதி சமூகமாக உள்ள தமிழ்ச் சமூகத்தில், அவர் தன்னை இன்குலாப் வார்த்தைகளில் “உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசனாக” நிலை நிறுத்திடக் காலமெல்லாம் கடுமையாக உழைத்தார்.
கல்லூரிக் கல்வி வரை கற்றலில் சுமாரான
மாணவராகவே அவர் வளர்ந்தார். இளம் பருவம் முதலே இசையிலும், கலையிலும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாடுவதும், நடிப்பதும் அவருக்கு இயல்பிலேயே அமைந்தது.
எம்.ஏ., படிச்ச பிறகு பி.எச்டிக்காக கிராமிய கலையை எடுத்துக்கிட்டேன். கிராமத்துக்கு
கிராமம் சுத்தி கிராமியப் பாடல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். அவுக பாடல்கள்ல
சிறுசிறு பிரச்சனைகள் - கூலி கொடுக்காததைப் பத்தி சிதறல்களாய் வெளிவரும்.
கஞ்சிக்குப் படுற கஷ்டமெல்லாம் பாட்டுல சொல்லியிருப்பாங்க. இப்படி எம்.ஏ., படிச்சது, நாடகப்பட்டறையில்
இசை அமைச்சது,
கிராமியத்துறை ஆராய்ச்சி. இவைகள் என்னை மெல்ல மெல்ல கிராமிய
இசைத்துறையில் இறுகக்கட்டிவிட்டது. (நடப்பு, ஜீலை 84,
நேர்காணல் பா.செல்வபாண்டியன்) எனத் தான் நாட்டுப்புற
இசைத்துறையில் கால் பரவியதை கே.ஏ.ஜி. குறிப்பிடுவார்.
உலகெங்கிலும் உழைக்கும் மக்களின்
நாட்டுப்புற இலக்கிய கலை,
இசை வடிவங்களை கையிலெடுத்தவர்கள் இடதுசாரிகளே.
தமிழ்நாட்டில் பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் பாடல் சேகரிப்பு, கதை சேகரிப்பு, ஆய்வு எனத் தொடங்கி நாட்டார் வழக்காற்றியலைக் கல்விப் புல வட்டாரத்தில் நிலை
நிறுத்தினார். பின்னர் அவரின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் சமூகவியல், வரலாற்றியல், மானிடவியல் புலங்களோடு சேர்ந்தப் பல்துறைக் கூட்டாய்வுகளை முன்னெடுத்தனர்.
அத்தருணத்தில் நாட்டுப்புறப் பாடல்
சேகரிப்பு,
பதிவு செய்தல், நூல்கள்,
ஒலி நாடக்கள் வெளியீடு என்ற தளத்துக்கு நகர்ந்தது, இளையராஜா வருகையால் திரைப்படத்திலும் செல்வாக்குப்பெறத்
தொடங்கியது. வெகுமக்களை ஈர்க்கும் நாட்டுபுற இசை வடிவங்களை காதல், பக்தி, நகைச்சுவை
ஆகிய தளங்களில் பலர் மேடைப்படுத்தினர். நடை, உடை,
பாவனைகளால் செவ்வியல் தழுவி நின்றனர். ‘பொழுதுபோக்கு’ வணிகப் பண்டமாக நாட்டாரிசை நகர்ந்தது. இத் தருணத்தில் தான் கே.ஏ.ஜி அசலான
நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் வலிகளையும் தன் குரல்களில் ஏந்தி வந்தார்.
த.மு.எ.ச,
பு.ப.இ, த.க.இ.பெ, ம.க.இ.க போன்ற இடதுசாரிப் பண்பாட்டு அமைப்புகளோடு
தொடர்பிலிருந்தார். சாதி,
வர்க்கம் இரண்டின் கோரமுகங்களையும் தன் மேடைகளில்
தோலுரித்தார்.
மக்களிசைக் கலைஞர்
கே.ஏ.ஜி பல தளங்களில் செயல்பட்டாலும்
அவரை இன்னமும் மக்கள் மனங்களில் நிலை பெறச் செய்திருப்பது அவரது கிராமியக் குரலே
என்றால் அது மிகையல்ல. அவரது குரல் ஆடம்பரமற்றது. கேட்போரை ஈர்த்து தன் வசமாக்கும்
வசீகரம் அவரின் குரலுக்கிருந்தது. சோகம், கழிவிரக்கம்,
கருணை, பச்சாதாபம்
கொண்டு மனமுருகிடச் செய்வது மட்டுமல்ல வீரவேசத்தோடு தன் மரியாதைப் பீறிடச்
செய்யவும் போர்க்கள முனையில் நிறுத்தவும் அவரின் பாடல்களால் சாத்தியமானது. அவர்
உருவாக்கிய ‘தன்னானே’ கலைக்குழு
தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் வலம் வந்தது. தொடக்கத்தில் பல இடங்களில்
டிக்கெட் போட்டு நிகழ்ச்சி நடந்ததும் உண்டு. பல அயல்நாடுகளுக்கும் அது சென்றது.
கொல்லங்குடி கருப்பாயி,
கோட்டைச்சாமி ஆறுமுகம் போன்றக் கலைஞர்களைப் பரவலான கவனம்
பெறச் செய்தவரும் அவரே. கங்கைபாலன், அழகர்சாமி வாத்தியார் போன்றவர்களும் அக்குழுவில் இடம் பெற்றனர். இன்று பிரபல
நாட்டாரிசைக் கலைஞராக விளங்கும் கலைமாமணி சின்னப்பொண்ணு-வை அறிமுகப்படுத்தி
வளர்த்தெடுத்தவரும் கே.ஏ.ஜி. தான். காஞ்சி அண்ணாசி, கலைமாமணி கைலாசமூர்த்தி, சத்தியபாலன், கலைச்செல்வி, கரகாட்டம் அம்மச்சி போன்ற கலைஞர்கள் அவர் குழுவில் பெருமை சேர்த்தனர்.
நாட்டார் பாடல்களை அதன் மெட்டை
எடுத்து அதன் உள்ளடக்கத்தை சமூகம் சார்ந்து மாற்றி அமைத்து அவர் உருவாக்கியப்
பாடல்கலள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. இன்குலாப், பரிணாமன், கந்தர்வன், தலித்சுப்பையா ஆகியோர் பாடல்களோடு அவரும் பாட்டுக் கட்டிப்
பாடினார்.
“அய்யா வந்தனமுன்னா வந்தனம்
வந்த சனமெல்லாம் குந்தனும்”
எனத் தொடங்கி பறையும், தவிலும், உருமியும், உடுக்கையும், நாயனமும் அதிர இசைக்கும் அவரது மேடைத் தொடக்கம் அபாரமானது. சாப்பறையாக இருந்த
பறையிசையை போர்பறையாக மாற்றியதில் கே.ஏ.ஜி க்கு பெரும்பங்குண்டு. தஞ்சாவூர்
ரெட்டிப்பாளையம் ரங்கராஜன் குழுவினரை அயல்நாடுகளுக்கெல்லாம் அறிமுகம் செய்தவர்
அவரே. கலை நிகழ்வுகளிலும்,
பொது நிகழ்வுகளிலும் பறையிசை ‘மங்கள’
இசைத் தொடக்கமாக மாறியதும் அவரின் வருகையோடுதான்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் குறிப்பாக கரகம், குறவன் - குறத்தி,
பறையாட்டம் முதலிய ஆட்டக்காரர்கள் அரை, குறை கவர்ச்சி ஆடைகளில் மேடையில் தோன்றுவர். இதனை
மாற்றியமைத்தவர் கே.ஏ.ஜிக்கு முக்கியப் பங்குண்டு.
“முக்காமொழம் நெல்லுப்பயிரு
முப்பதுகெஜம் தண்ணிக்கெணறு
நிக்காமத்தான் தண்ணியெடுத்தேன்
நெல்லுப் பயிரும் கருகிப்போச்சு….”
“ஏழஞ்சு வருசமாக என்னத்தக் கண்டோம்
ஏருபுடுச்சு பாடுபட்டு எதத்தாங்
கண்டோம்”
“அம்மா பாவாடை சட்டைக்கிழுஞ்சு போச்சுதே
பள்ளிக் கூடப் புள்ளயெல்லாம் கேலி
பேசுதே”
“மக்கள் வாழும் மண்ணகம்
சூரிய சந்திர விண்ணகம்
அணுயுத்தம் நம்மை அழிப்பதா
பூமியின் கர்ப்பகம் கலைப்பதா?”
“வெள்ளக்காரங்க ஆண்டபோதும்
அரிசனங்க நாம் - இப்ப
டெல்லிக்காரங்க ஆளும் போதும்
அரிசனங்க நாம் - இவங்கள
கூண்டோட ஒழிச்சாதான் அரிசனங்க நாம்…”
“தொட்டாலே தீட்டுப்படுமாம் - நாங்க
தொடாத பொருள் எதுவாம்
பார்த்தாலே பாவதோசமாம் - நாங்க
பார்க்காத காட்சி எதுவாம்…”
“பத்துதல இராவணன் ஒத்த தல ராமன் வென்றான்
மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா”
“ஒத்தமாடு செத்துப் போச்சு
ஒத்தமாடு நோஞ்சலாச்சு
ஒத்தமாடு வாங்கிவரப் பத்துப் பேர
கேட்டுப் பார்த்தேன் கடன்
கிடைக்கலியே”
இப்படி அவரின் கோபம் கொப்பளிக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழச்
செய்யவும் பாடல்கள் ஏராளம்.
‘ஆக்காட்டி
ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்ட…’, ‘வாகான
ஆலமரம் விழுது பதினாயிரம் கோடி பொறும்’ போன்ற அழகியலும்,
குறியீட்டுணர்வும் அமைந்த பாடல்களும் அவரை அடையாளப்படுத்தும்.
மேடையில் ஒரு வித எள்ளளும், பகடியும் அவருக்கு உடன் வருவன. “காருபோட்டு ஓடி வந்து கையெடுத்து, சலாம் போட்டு ஓட்டு கேட்டு வந்தாங்களே இப்ப ஒருத்தனையும்
காணலயே”, ‘விதவிதமா மீசை
வச்சே…..
உன் வீரத்தை எங்க வச்சே….’ ‘சின்னஞ் சிறுசெல்லாம் சிகரெட் பிடிக்குது…. சித்தப்பன்மார்ட்ட தீப்பெட்டி கேட்குது’. கணவன் மனைவி சண்டையில் பெண், எடுத்தாடி
வௌக்கமாத்த….
என்பது போன்றப் பாடல்கள் அந்த இரகம்.
இன்குலாப்பின் மனுசங்கடா பாடல்
அவரின் உச்சம். ‘நாங்க எரியும் போது எவன் மசிறப்புடுங்கப் போனிங்க….? என்று கேட்பதானாலும், அந்தப் பாடலின் இசையும், கம்பீரமும்
ஆயிரமாண்டு அடிமைத்தனத்துக்கு அவர் வைத்த பெருந்தீயாக பிரவகித்து நிற்கும். தோழர்
சி.மகேந்திரன் முன்னெடுப்பில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வெளியிட்ட ‘தன்னானே’, எழுத்தாளர்
பொன்னீலன் முன்னெடுப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வெளியிட்ட ‘மண்ணின் பாடல்கள்’, மற்றும் ‘மனுசங்கடா’ ஆகியப் பாடல்
ஒலிப்பேழைகளும்,
‘அக்னிஸ்வரங்கள்’, ‘தொட்டில் தொடங்கி தொடு வானம் வரை’ ஆகிய பாடல் தொகுப்பு நூல்களும் தமிழ்ச் சமூகத்தின் கழிந்த ஐம்பது ஆண்டு கால
மாற்றுக் கருத்தியல் கலை வடிவங்களாக எஞ்சி நிற்கின்றன. சமூக மாற்றத்திற்குக்
கலைகளின் பங்களிப்புக்கு ஆக்கச் சிறந்த சான்றுகளாக இவை அமையும்.
மாற்று நாடக அரங்கம்
1979 ல்
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் தேசிய நாடகப்பள்ளி சார்பில் நடைபெற்ற
நாடகப் பட்டறையில் கே.ஏ.ஜி பங்கேற்கிறார். நடிக்கவும், பாடவும் ஆர்வங்கொண்ட அவருக்கு இது பெரும் ஊக்குவிப்பாக
அமைந்தது. அப்பட்டறையில் இரண்டு நாடகங்களுக்கு இசை அமைத்து, பாடி, நடிக்கும்
வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இயக்குநர் பன்சிகௌல் போன்றவர்கள் தன்னைப்
பாராட்டியதாக அவர் நினைவு கூர்வார். அதன் தொடர்ச்சியாக அவர் நாடகத்துறையில்
நுழைகிறார். பணி நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நீலகிரி - பழங்குடி மக்கள்
ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இருந்தவர் நாடகத்துறைக்கு மாறுகிறார். பின்னர்
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக்கலைத் துறைக்கு இடம்
பெயர்கிறார். பேராசிரியர் சே.இராமனுஜம் போன்றவர்களின் வழிகாட்டல் அவருக்குக்
கிடைக்கிறது.
நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள், கூத்து மரபிலிருந்து நாடக அரங்கம் குறித்த வளர்நிலைகள்
குறித்து ஆய்வுரைகள் எழுதுகிறார். கூத்துமரபு, நடிப்பு,
ஒப்பனை, காட்சியமைப்பு, திரைச்சீலை, மேடையமைப்பு,
ஒலி - ஒளியமைப்பு, இசை,
நாடக எழுத்து… இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘நாடக அரங்கம்’
அடிப்படைப் பாடநூல் போன்றது. இதோடு இணைத்துப் பார்க்கத்
தக்க இன்னொரு நூல் ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’ என்பதாகும். கலைகளின் சமூக உறவுகள் குறித்த இந்நூல் பேசும்.
தலித் அரங்கியல்,
ஒடுக்கப்பட்டோர் அரங்கியல் ஆகிய நூல்கள் மாற்று அரங்கம், மூன்றாம் அரங்கம், மக்கள் அரங்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ‘தலித் அரங்கம்’
பற்றிய நூல்கள்.
1980 களின்
இறுதியில் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி உருவான தலித் எழுச்சியின் விளைவாக உருவான
தலித் அரசியல் ஆகிய முன்னெடுப்பில் கே.ஏ.ஜி. தன்னை இணைத்துக் கொண்டார். அவரின் ‘பலி ஆடுகள்’ நாடகம் முதல் தமிழ் தலித்நாடகம் எனவும், அவரின் ‘வடு’
முதல் தமிழ் தலித் தன் வரலாறு எனவும் அறியப்படும் சிறப்பைப்
பெறுகின்றன.
நாட்டார் இசையைப் போலவே நாடகங்களிலும்
மக்கள் சார்பையே முன் நிறுத்தினார். சாதி, தீண்டாமை,
பெண், அரவாணி, வறுமை, கல்வி, மரபு சார்ந்த சிக்கல்களையே அவரின் நாடகங்கள் பேசின.
அவற்றையும் தன் வாழ்விலிருந்தும், சூழலிலிருந்துமே
கே.ஏ.ஜி உருவாக்கினார்.
இசுவு வந்து வாயில் நுரைதள்ளி
விழுந்தவனுக்கு உதவி செய்து காப்பாற்றிய மச்சான் முனியாண்டியை ‘பரப்பய என்னைய ஏண்டா தொட்டுத் தூக்குன?’ என்று கேட்டுப் பஞ்சாயத்துக் கூட்டி, விழுந்து கும்பிடச் செய்யும் ஒரு நிகழ்வை தன் ‘வடு’
நூலில் கே.ஏ.ஜி குறிப்பிடுவார். இது தான் அவரின் ‘தொடு’ நாடகமாக
அரங்கேறியது.
பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, சத்திய சோதனை, கந்தன் X
வள்ளி ஆகிய நாடகங்கள் தொன்மங்களை மறுவாசிப்புச் செய்தவை.
மழி, மாற்றம்,
பேயோட்டம், அறிகுறி, வரைவு கடாவுதல்…. உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட நாடகங்களை அவர் படைத்துள்ளார். இவை பல
பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக உள்ளன.
“திரு.கே.ஏ.குணசேகரன்
நாடகக் கலை பற்றி என்னிடம் பாடம்கேட்ட சீடர்களில் ஒருவர். இனியவர், சுறுசுறுப்பானவர், கலைஞர்,
நாட்டுப்புற ஆட்டக் கலையில் பயிற்சியும் திறனும் மிக்கவர், இசைக்கலைத் திறன் மிக்கவர், தேடல் நோக்கமுள்ளவர். எல்லாவற்றிற்கும் மேலாக கபடமில்லை உள்ளத்தைக் கொண்டவர்” என்ற நாடகப் பேராசான் சே.இராமானுஜத்தின் வார்த்தைகள்
கே.ஏ.ஜி யை மதிப்பிட உதவும்.
நாட்டாரியல் ஆய்வகள்
நிகழ்த்துக்கலைகள், நாட்டார் பண்பாடு, பழங்குடிகள் வாழ்க்கை ஆகியன குறித்த கே.ஏ.ஜி எழுதிய நூல்கள் முக்கியமானவை.
நாட்டுப்புற இசைக்கலை,
கரகாட்டம், நாட்டுப்புற
மண்ணும் மக்களும்,
நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும், நாட்டுப்புற நிகழ்கலைகள், தமிழக மலையின மக்கள்,
நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், தமிழ் மன்னரின் மரபுக்கலைகள், சேரிப்புறவியல்,
இசை நாடக மரபு, பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள், இசைமொழியும் இளையராஜாவும் முதலிய நூல்கள் தனித்துவமானவை.
இவை மாற்றுப்பண்பாடு குறித்த
ஆக்கங்களாகக் கருதத்தக்கவை. கலை - கலைஞர்கள் - வெகு மக்கள் - பண்பாடு என்ற வகையில்
முக்கியமானவை. பயன்பாட்டுத் தளத்தில் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற இசை, கலை வடிவங்கள் அவற்றின் சமூகத் தாக்குறவுகள் குறித்து
இவற்றில் கே.ஏ.ஜி தனது கருத்தை முன்வைப்பார்.
“நமது நாட்டார்
கலை மரபை அதன் ஆன்மாவைச் சிதைக்காது நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது
கருத்தாகவுள்ளது. உழைக்கும் மக்களின் நோக்கில் நாட்டார் கலைகளையும், கலைஞர்களையும் அணுகும் நாட்டார் வழக்காற்றியலர்கள் ஒரு
சிலரே இன்று உள்ளனர். அவர்களுள் அன்பிற்குரிய நண்பரும் தோழருமான கரு.அழ.
குணசேகரனுக்கு ஒரு சிறப்பான இடமுண்டு” என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் மதிப்பீடு மிகச் சரியானது.
அடுத்து கே.ஏ.ஜியின் முக்கியப்
பங்களிப்பு பழந்தமிழ் நூல்களுக்குஅவர்எழுதியுள்ள புத்துரைகள். உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குநராகப் பணியேற்றவுடன் அதன் பொருத்தம் கருதி தன் பெயரின் ஆங்கில
முதல் எழுத்துக்களை மாற்றி கரு.அழ.குணசேகரன் ஆனார்.
புதிய முயற்சிகள்
பதிற்றுப்பத்துக்கு ஆராய்ச்சிப்
புத்துரை எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் வெளியிட்டார். அதில் பாணன், பாடினி, கூத்தர், விறலி, போன்ற
கலைஞர்களின் சமூகப் பின்புலத்தை, அரசியல்
செல்வாக்காக அழுத்தப்படுத்தினர். நகரும் குடிகள், மிதனவச் சமூகத்தினர் என அடையாளப்படுத்தினார். நியூசெஞ்சரி புத்தக நிறுவனம் வழி
பல நூல்களை வெளியிட்ட அவர்,
இறுதியாக பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரை
நூலையும் வெளிக் கொணர்ந்தார். இது சமணப் பார்வையில் அமைந்தது. மரபிலக்கியங்யளிலும்
தனது ஈடுபாட்டை காட்டும் நோக்கில் இந்நூல்கள் அமைந்தன.
அவரின் இளைமைக்கால வாழ்வைச் சொல்லும் “வடு”
பின் காலனிய எழுத்து முறையில் தன் வரலாறாக உள்ளது. தன்
பிற்காலக் கருத்தியல் செல்வாக்கு எதுவும் இன்றி அழகாக தன் வாழ்வை தன் சமூகத்தின்
ஒரு பகுதி வரலாறாக இதில் பதிவு செய்துள்ளார். திரைப்படத்தில் அவரின் நுழைவு
எதிர்ப்பார்த்தக் கவனம் பெறவில்லை. நாசரின் தேவதை, தங்கர்பச்சானின் அழகி போன்றவையும் பிறவும் நல்ல முயற்சிகள். அவரை இன்னும்
கூடுதலாக தமிழ்ச் சினிமா பயன்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அவரின் பாடலகள்
வீச்சோடு வந்திருக்க வேண்டும்.
புதுவை அரசின் கலைமாமணி வருது, கனடா தமிழ் இலக்கியச் சங்கத்தின் குரிசில் பட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாட்டார் இசை மேதை
விருது உட்பட பல பரிசுகளை,
விருதுகளை அவர் பெற்றார்.
தமிழை முறையாக எழுதவும், ஆங்கிலத்தில் பேச, எழுதவும் நிறைய கடின உழைப்பைச் செலுத்தினார். தான் ஈடுபடும் களங்களில் தன்
கால்களை ஊன்றச் செய்ய,
தன் அடையாளம் பேண அவரின் முயறிசியும், உழைப்பும் பின்பற்றத்தக்கது. கவிஞர் மீரா, தோழர் எஸ்.ஏ.பெருமாள் போன்றவர்கள் தொடக்கத்தில் உதவியதை
நினைவு கூர்வார்.
கல்விப் புலத்தில் போதிய கவனமும், பணி நிலைகளும் அவருக்கு அமைந்தன. அவர் நம்பி ஈடுபட்ட
அமைப்புகளும் அவருக்கு தோழமைக்காட்டின. எந்த நிலையிலும் மக்கள் சார்ந்த
செயல்பாடுகளில் அவர் சுணங்கியதில்லை. கலைஞர்களுக்கே உரிய பலமும் பலவீனமும்
அவருக்கும் இருந்திருக்கலாம்.
நீண்ட நாள் நீரழிவும், சிறுநீரக, இதய அறுவை
சிகிச்சைகளும் அவரை அவசரமாய் நம்மிடமிருந்துப் பிரித்துச் சென்றுவிட்டன.
மார்க்சியராக, அம்பேத்கரியராக, தமிழ்த் தேசியராக,
மக்கள் கலைஞராக சமூக மாற்றத்தில் அயராது பங்களிப்பு செய்த
டாக்டர் கே.ஏ.குணசேகரனின் நினைவுகள் நிலைத்து நிற்கும்.
“குழந்தை உள்ளம் - அதற்குள் கொதிக்கும் அனல்
இளகிய மனம் - அதற்குள் இரும்பான
உறுதி
வெட்டப்பட்ட சிறகுகள் - விண்தாண்டிப்
பறக்கும் எத்தனம்
எளிமையான பேச்சு - இறுக்கமான கொள்கை”
என ஈழநாடக அறிஞர் சி.மௌனகுரு கே.ஏ.ஜி யின் நினைவைப் போற்றுவார்.
சொந்த வாழ்வின் வலிகளில் இருந்து
கற்று,
தன் சமூகத்தின் நிலை கண்டு மனம் புழுங்கி, சமூக மாற்றப் போர்க்களத்தில் தன்னை முன்னணி கள நாயகனாக
ஒப்பளித்துக் கொண்டவர் கே.ஏ.ஜி. நம் காலத்தில் வாழ்ந்த ஒப்பற்ற மக்கள் கலைஞன்
அவர்.
No comments:
Post a Comment