அமரர் ஜீவா (அமரர் ப.ஜீவானந்தம் அவர்களின்
நூற்றாண்டையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரதியைப் பற்றி அவர் எழுதிய
கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது) பாரதி தமிழகத்தின் தனிப் பெருமை. பாரதி
தமிழினத்தின் தவப்பயன். உண்மைக் கலையையும் மக்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி
இணைத்துள்ள சிறந்த ஜீவனுள்ள உறவோடும், அச்சமற்ற சிருஷ்டித் திறன்மிக்க சிந்தனை, தெள்ளிய நேர்மை,
வற்றாத வளமிக்க உயிராற்றல் ஆகியவற்றோடும் பாரதியின்
திருநாமம் என்றும் இணைந்து நிற்கும்.பாரதியின் பாடல்கள், நூற்கள், எழுத்துக்கள், சாகாவரம் பெற்ற மனிதன் மேதாவிலாசத்தின் நினைவுக்
களஞ்சியங்களாக ஊழி ஊழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். கம்பனுக்குப் பின் தமிழ்
மக்களுக்கு,
மகாகவி பாரதி, உணர்ச்சியாற்றல்,
கற்பனையாற்றல், அழகுக் கலையாற்றல்,
ரசனையாற்றல் முதலிய சிறந்த கவித்துவ அம்சங்கள் நிரம்பப்
பெற்ற மகாகவி. அவரிடம் கொழுந்துவிட்டெரிந்த அரசியல் உணர்ச்சித் தீ, மேற்கூறிய நல்லிசைப் புலமையோடு இரண்டறக் கலந்து
கவித்துவத்தின் அழகுக்கு அழகு செய்தது. பொதுமக்கள் வாழ்வோடு, தண்ணீரில் மீன் மாதிரிப் பழகிப் பாரதி, தனது படைப்பாற்றல், படைப்புப் பணி முழுவதையும் மக்கள் விடுதலைக்கும் நல்வாழ்வுக்குமே தத்தம் செய்த
பாரதி,
இருபதாம் நூற்றாண்டைய மக்களின் -சிந்தனை ஓட்டங்களையும்
உணர்ச்சிப் பெருக்குகளையும் அழகுச் சொட்டச் சித்திரிப்பதில் நேர் நிகரற்றக்
கலைஞனாகப் பொலிந்தான். பாரதிக்கு "நான்", "நாங்கள்" என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளையே
குறித்தன. பாரதியின் நல்லிசைப் புலமை, மாய காவ்ஸ்கி என்ற சோவியத் மகாகவி கூறியதுபோல், 'பிரபஞ்சம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் களிக்கும் காதலை' விரும்பிற்று. புஷ்கினைப் பற்றி ஒருவர் சொன்னதைப் போல
பாரதியின் கவிதை "என்றும் இருக்கிற எப்பொழுதும் இயங்குகிற இனத்தைச்
சார்ந்தது ..... சமுதாய உணர்வில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தன்மை
வாய்ந்தது". பாரதியின் மேதைப் பார்வையில் சரித்திரக் கண்ணோட்டத்தின்
தெளிவும் விழுந்திருந்ததால் அவனால் உறுதியான நம்பிக்கையோடு மேலும் மேலும்
மேன்மேலும் முன்னோக்கி,
முன்னோக்கிப் பார்க்க முடிந்தது. சந்தேக வாதக் கறை அவனுடைய
பாடல்களில் ஒரு எழுத்தைக்கூட அசுத்தப் படுத்தியதில்லை. "நமக்குத் தொழில்
கவிதை,
நாட்டுக்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்"
என்று தனக்குத் தொழில் "நாட்டுப்பணி" (மக்கள் பணி) என்று ஆணித்தரமாக
கூறி கவியரசின் தொழிலைப் பற்றி இவ்வாறு உலகறியப் பறை அறைகிறான் பாரதி. கவிஞன்
என்பவன் 'மக்கள் தலைவன், மக்கள் தொண்டன்'
என்ற நவயுக மகாகவியின் அறிவுரைக்கு இலக்கணமாக வாழ்ந்தவன்
பாரதி. 'மக்கள் வாழ்க்கையை விட்டு ஓடி ஒளியக்கூடாது, தங்கள் பலத்தையும் திறத்தையும் உணர வேண்டும்' என்றே பாரதி காலமெல்லாம் போதித்தான். இன்று ஜன யுகத்தில்
நாம் வாழ்கிறோம். நமக்கு மிக மிகத் தேவையான இலக்கியமும் கலையும், மக்கள் இலக்கியமாகவும், மக்கள் கலையாகவும்தான் இருக்க முடியும். அவை மக்களின் நலன்களை
எதிரொலிப்பவைகளாகவே இருக்க வேண்டும். அவை ஜனநாயகத் தன்மை கொண்டவைகளாகவும், எதார்த்தமும், மனிதத்துவமும் உடையவைகளாகவும், தேசிய,
அதே பொழுதில் சர்வ தேசியத் தன்மை உடையவைகளாகவுமே இருக்க
வேண்டும்'
என்று சீன அறிஞர் ஒருவர் கூறுகிறார். இந்த வகையில் பாரதி
நமக்குத் தகுந்த முன்னோடி;
சிறந்த வழிகாட்டி. இந்த எண்ணங்களோடு பாரதி பாடல்களின்
அறிமுகத்தையும்,
பாடல்களையும் பார்க்கலாம். தமிழும் தமிழகமும்: பாரதி தமிழை
நினைக்கிறான். தனது நெஞ்சில் ஊறி உறைந்து நிற்கும் தமிழை நினைக்கிறான். தனது
உயிரும் உணர்வும் ஆழ அமிழ்ந்து கிடக்கும் தமிழை நினைக்கிறான். அதேபொழுதில், தான் செவ்வனே அனுபவித்தறிந்த ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி,
வங்கம், பிரெஞ்சு
முதலான மொழிகளையும் அவற்றின் மூலம் உலகமொழிகளையும் நினைக்கிறான். உடனே
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று
ஒப்புநோக்கும் உணர்வுடன் தமிழமுதின் நிகரற்ற இனிமையைப் பெருமிதத்தோடு பாடுகிறான்.
அதே பொழுதில இத்தகைய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கோடானு கோடித் தமிழர்களின்
நிலையை நினைக்கிறான். "உலகமெலாம் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு"
நிற்கும் அவர்களுடைய அவல நிலைமை பாரதியின் நெஞ்சைத் தாக்கி, கண் கலங்க வைக்கிறது. "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ! சொல்வீர்!" என்று தமிழகம் கிடுகிடுக்க அறைகூவி, சாதாரணத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகிறான்.
"ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார் தாங்களும்
அன்னியர் ஆனார் - செல்வத் தமிழின் தொடர்பு அற்றுப் போனார்" என்று
வயிற்றெரிச்சலுடன் ஆற்றாமையால் ஒரு புலவர் பாடினாரே, அத்தகைய 'ஆங்கிலத்-தமிழர்களை' அடுத்த படியாகப் பாரதி நினைக்கிறான். இவர்கள் தமிழில் "ஷேக்ஸ்பியர்"
உண்டா,
"மில்டன்" உண்டா, "டென்னிஸன்" உண்டா,
"ஷெல்லி" உண்டா என்று புரியாத்தனமாக, ஆனால் புரிந்ததான எண்ணத்தோடு அடிக்கடி இளக்காரமாகக்
கேட்கிறார்களே,
அதையும் நினைக்கிறான். இவர்களுக்குப் பதில் - இதரர்களுக்கு
உண்மை அறிவிப்பு செய்ய நினைக்கிறான். எனவே, உலக மகாகவிகளையெல்லாம் கவிதா மனோபாவத்தோடு நன்றாகக் கற்றறிந்து
நிர்ணயித்திருந்த பாரதி "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" என்று அறுதியிட்டு உறுதி
கூறுகிறான். பின்வந்த ஆராய்ச்சி வல்ல பன்மொழிப் புலவர்களான தமிழ்ப் பேரறிஞர்கள்
பாரதி கூறிய இந்த உண்மையை அட்டியில்லாமல் ஒப்புக் கொள்கிறார்கள். ஆங்கில மோகம்
பிடித்து அலைந்த தமிழர்களுக்கு, "சேமமுற
வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!" என்று பாரதி
அறிவுறுத்துகிறான். (இன்றைய நிலையை ஜீவா கூறும் கூற்றோடு ஒப்பிட்டுப்
பார்க்கலாமே! இன்று ஆங்கில மோகம் எங்கு போய் முடிந்திருக்கிறது. தமிழில் பேசும்
தமிழனை எங்காவது காணமுடிகிறதா? ஆங்கிலத்தின்
இடையிடையே சிறிது தமிழ் கலந்து பேசும் அவலம் இன்று தலைவிரித்தாடுகிறதே. இந்த
கொடுமை ஒழிய இன்னொரு பாரதிதான் பிறந்து வர வேண்டுமா?) அடுத்தபடியாக "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே
வைகுண்டம்" என்பதுபோல், "தாங்கள்
கற்ற தமிழே எல்லாம்" என்று பத்தாம் பசலி மனப்பான்மையோடு புதுமை கண்டு கசந்து
முகம் சுளிக்கும் வைதிகத் தமிழ்ப் பண்டிதர்களைப் பாரதி நினைக்கிறான்.
"எல்லாப் பொருளும் இதன்பால் உள" என்ற வெண்பாப் பாட்டை இவர்கள்
சங்கராபரணத்தில் ஆலாபனஞ் செய்து எக்களிப்படைவதற்கு அடிப்படையான கிணற்றுத் தவளை
மரபை நினைக்கிறான். "மறைவாக நமக்குள்ளே பழங்கதை சொல்வதிலோர் மகிமை
இல்லை" என்று எடுத்துக்கூறி மாறுதல் வேண்டாத நம் பணிடிதர்களின் மனத்தடிப்பைச்
சுக்கு நூறாக உடைத்தெறிகிறான் பாரதி. அதே மூச்சில் "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில்
இயற்றல் வேண்டும்" என்று தமிழ் வளர்ச்சித் திருப்பணியில் இறங்கும்படி
ஆணையிடுகிறான். புதிய தமிழ்க் காதலர்களுக்கு, 'நாமே டமாரமடித்துக் கொள்வதனால் நமது புலமைக்குப் பெருமை ஏற்படாது.
வெளிநாட்டார் வணக்கம் செலுத்தும் பொழுதுதான் நமது புலமையின் திறமைக்கும் பெருமை
ஏற்படும்" என்பதைத் தமிழன்பர்கள் மறந்துவிடக் கூடாதென்றும் புத்தி
புகட்டுகிறான். அடுத்தபடியாக "கவிதை கவிதைக்காகவே", "கலை கலைக்காகவே" என்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் பாரதி நினைக்கிறான். அவர்களுக்கும்
யதார்த்தச் சூழ்நிலைக்கும்,
அவர்களுக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கும்
சுருங்கச் சொன்னால் அவர்களுக்கும் உண்மைக்கும் ஒட்டும் உறவும் இல்லாதிருப்பதை
நினைக்கிறான்,
உடனேயே அவர்களுக்கு "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்ற உண்மையைப் போதிக்கிறான். பள்ளத்தில்
வீழ்ந்து பரிதாபகரமாகத் தவித்துத் தத்தளிக்கும் "குருடர்கள்" (பாமர
மக்கள்) உண்மையுணர்ந்து உயர்நிலை எய்தவேண்டுமானால், வெள்ளத்தின் பெருக்கைப் போல், கலைப்பெருக்கம் கவிப்பெருக்கும் மேவ வேண்டும் என்று தமிழ் இலக்கியச்
செழிப்பின் தேவையை வற்புறுத்துகிறான். இறுதியாக "தெள்ளுற்ற தமிழமுதின் சுவை
கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்று மேற்கூறிய வகைதொகைகளிலெல்லாம்
வளரும் தமிழை நுகரும் தமிழ் மக்கள் புதிய யுகத்தில் புதிய உலகத்தில் புதிய மனிதராய்
மலர்ந்து புத்தின்பப் பெருவாழ்வு பெறுவர் என்று இமய முகட்டில் தூக்கி வைத்துத்
தமிழுக்கு பூசனை புரிகிறான் பாரதி. மேற்கூறியவை "தமிழ்" என்ற பாட்டில்
பாரதி காட்டும் முதன்மையான கருத்துக்கள். "தமிழில் முடியுமா?" என்று நம்பிக்கை செத்து, கேள்வி கேட்கும் பேராசிரியப் பெருமைக்காரர்களுக்கு "வானம் அளந்ததனைத்தும்
அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே" என்று தமிழை
வாழ்த்தி நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி. "சொல்லில் உயர்வு தமிழ்ச்
சொல்லே" என்று பிரிதோரிடத்தில் பாடுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
தமிழில் அதன் வலுவில் வளர்ச்சியில் பாரதிக்கு இருந்த அசையாத உறுதி கங்கு
கரையற்றது. பாரதியால் தமிழ் மேன்மையுற்றது, தமிழால் பாரதி மேன்மையுற்றான் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற்று மெய்
மெய் மெய். "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும்
கூடுவதில்லை - அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை" என்ற கருத்து
தமிழர்களான பல ஆங்கிலம் கற்ற அறிவாளிகளையும் கல்விமான்களையும் பிடித்தாட்டுகிறது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (இங்கு ஜீவா குறிப்பிடுவது 20ஆம் நூற்றாண்டு) - பாரதி காலத்தில் மேற்படிக் கருத்து உரம்
பெற்று நின்றதைப் பாரதி காண்கிறான். இதை உடைத்தெறிய வேண்டிய தனது கடமையை
உணர்கிறான். தமிழ்த்தாயின் வாய் மூலமாகத் தமிழின் வரலாற்றைக் கூறுகிறான்.
"ஆதிசிவன் பெற்றுவிட்டான்" அதாவது என்று பிறந்தேன் என்று உரைக்க முடியாத
தொன்மையினள் நான். அகத்தியன் இலக்கணத்தாலும், மூவேந்தர் அன்பு வளர்ப்பாலும், ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன். கள், தீ,
காற்று, வெளி இவை
கலந்து தெள்ளு தமிழ்ப் புலவர்கள் நல்ல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்கள்.
பற்பல சாத்திரங்கள் படைத்தளித்தார்கள். உலகு புகழ வாழ்ந்தேன். அன்று என் காதில்
விழுந்த திசை மொழிகள் பல. அவை இன்று இறந்தொழிந்தன. "இந்த கணமட்டும் காலன் -
என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்" "இன்றொரு சொல்லினைக்
கேட்டேன்" அது என்ன?
'புத்தம் புதிய கலைகள் தமிழினில் இல்லை. அவை சொல்லும் திறமை
தமிழுக்கு இல்லை. மெல்லத் தமிழ் இனி சாகும்' - இதுதான் அந்த அவலச் சொல். "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" "இந்தப் பெரும்பழி
தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன்". இதற்கு முன் பல
காவியங்களையும்,
பல சாத்திரங்களையும் கால மாறுதலுக்கு ஏற்பப் புதுமை செய்து
தமிழ் அழியாது நின்று வந்திருக்கிறது. இன்றும் அறிஞர்களின் இடையறாத முயற்சியால்
எட்டுத் திசையும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து தமிழ் புகழ் ஏறிப்
புவிமீது வாழ முடியும். இவ்வாறு சரித்திர உண்மைகளை எடுத்துக்காட்டி தமிழின்
உயிராற்றலில் நம்பிக்கையை ஊட்டுகிறான் பாரதி உணர்ச்சிப் பெருக்கோடு. பாரதிக்குப்
பின் இன்று வரை பல அறிஞர்களும், இளைஞர்களும்
அந்த நன்னம்பிக்கையை நாள்தோறும் மெய்ப்பித்து வருகிறார்கள். பாரதி தனது தாயகத்தை
- தமிழகத்தைப் பற்றிப் பாடுவதை அனுபவியுங்கள்! நாட்டன்பு நம்மிடம் மூண்டெழும்படி
எவ்வாறு கிளறுகிறான் என்ற விந்தையைப் பாருங்கள்! 'செந்தமிழ்நாடு'
என்றதும் அது சொற்றொடராகக் காதில் வந்து விழவில்லையாம்.
"இன்பத் தேனாக"க் காதில் வந்து பாய்கிறதாம். அந்த "இன்பத்
தேனும்" வாயில் பாய்ந்து இனிமையூட்டவில்லை. காதில் பாய்ந்து பரவசமூட்டுகிறது.
தொடர்ந்து,
இது - இந்தச் செந்தமிழ்நாடு - "எங்கள் தந்தையர்
நாடு" என்று பேச ஆரம்பித்தால் போதுமாம். "மூச்சில் ஒரு சக்தி
பிறக்கிற"தாம். ஏன்?
"தந்தையர் நாடு" என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய
சொல்லாக்கம். அதோடு பல்லாயிரம் ஆண்டையத் தமிழர் வாழ்வின் மாட்சியும், அதில் செறிந்து கிடக்கிறது. பின் மூச்சில் சக்தி பிறக்காது
என் செய்யும்?
இனி ஒவ்வொரு தமிழனின் காதிலும் தேனையும் உணர்ச்சித்
தீயையும் பாய்ச்சும். அட்சரம் லட்சம் பெறும் அந்த அடிகளைப் படியுங்கள் - பாடுங்கள், பார்க்கலாம். "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி
பிறக்குது மூச்சினிலே". இது மாதிரி ஒரு அடி உலக இலக்கியத்தில் வேறெங்கேனும்
காண முடியுமா?
தேசபக்தியைக் கடல் மடை திறந்ததுபோல ஓடவிட்டு எத்தனையோ
நல்லிசைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் - பற்பல நாடுகளில், பலப்பல காலங்களில், ஆனால் மேற்கூறிய அடிகளில் பாரதி காட்டும் தேசபக்தியின் வேகமும் வன்மையும்
போல் இனிப்பையும் நெருப்பையும் குழைத்து வேறெந்த கவிஞனேனும் பாடியதுண்டா? இவ்வாறு சராசரித் தமிழனுக்கு உணர்ச்சியில் தேனைப் பாய்ச்சி, உயிரில் சக்தியைப் பாய்ச்சி, புதுத் தமிழனாக்கி நிறுத்தி, செந்தமிழ்
நாட்டின் சிறப்பியல்புகளை,
சாதனைகளை ஓவியம்போல் காட்டுகிறான் பாரதி. தமிழகத்தின் ஆண்
- பெண்ணின் மேம்பாட்டை ஆறுகளின் வளமையால் நாடு "மேனி செழிக்கும்"
அற்புதத்தை,
மலை வளம், கடல் வளத்தை
அமர சித்திரமாக வரைந்து காட்டுகிறான். 'செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு' என்று பாடி, தனது தீர்க்க தரிசனக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி, நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறான். தமிழகத்தின் நேர்நிகரற்ற
புலவர் பெருமான்களை,
தமிழ்ப் பேரரசுகளை, தமிழ் மன்னர்களின் இணையற்ற விறல் வீரத்தை, தமிழர் நாகரிகப் பெருமையை, பண்பாட்டுத்
திறத்தை,
உலக இலக்கியம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் விதத்தில் பாடி, நாட்டைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நமக்குப்
புத்துயிரும் புத்துணர்வும் ஏற்படும் வண்ணம் நமது இதய வீணையின் ஒவ்வொரு
நரம்பையும் மீட்டுகிறான் பாரதி. பாரத நாடு: "சூரியன் உதித்தவுடனே சேதனப்
பிரகிருதி மட்டுமேயின்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும்,
உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இதைப் போலவே, ஓர் புதிய ஆதர்சம் - ஓர் கிளர்ச்சி - ஓர் தர்மம் - ஓர்
மார்க்கம் - தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சம் அனைத்தும் இரவியை நோக்கித்
திரும்பும் சூரியகாந்தி மலர் போல் அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற
சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி" என்ற நவீன மார்க்கம்
தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகாங்கிதமாயின. யானும் அப்புதிய
சுடரிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருடம் சில கவிதை மலர்
புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்". இவ்வாறு 1909-இல் வெளியான "ஜன்மபூமி" (ஸ்வதேச கீதங்கள் -
இரண்டாம் பாகம்) என்ற தனது பாடல் தொகுதிக்குத் தானே எழுதிய முன்னுரையில் பாரதி
குறிப்பிடுகிறார். "தேசபக்தி" என்ற நவீன மார்க்கச் சுடரிடம் அன்பு
பூண்டு புனைந்த பாடல்கள்தான் "பாரத நாடு" என்ற இந்தத் தலைப்பின் கீழ்க்
காணப்படும் பாடல்கள். "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி
சிறந்தனவே". என்ற கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டவன் பாரதி. எனவே அவன், வேறு எந்தக் கடவுளையும் வணங்கவில்லை. "வந்தே மாதரம்
என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்". என்று பாடி மாநிலத்
தாயைத்தான் முதல் கடவுளாக வணங்குகிறான். பாரதி இலக்கியம் முழுவதையும் துருவி
ஆராய்ந்தால் ஓர் உண்மையைத் தெள்ளத் தெளிவாகக் காணமுடியும். அதாவது பாரதி, சிவலோகத்தையோ, வைகுண்டத்தையோ அல்லது செத்த பிறகு கிடைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற எந்த
நாட்டையும் பதவியையும் நம்பவில்லை. இந்த வாழ்வை, இந்த மண்ணை இங்குள்ள மக்களைப் பாரதி நம்பினான். ஆகவே முழு மூச்சோடு - தாமரை
இலைத் தண்ணீர்க் கொள்கைக்கு நேர்மாறாக - தனது நாட்டிடம் பாரதி அன்பு பூண்டான். பாரத
நாட்டைத் திரிகரண சுத்தியோடு மனம் நிறைய நேசித்தான். "ஜாதி மதங்களைப்
பாரோம்",
"வேதியரும் ஈனச் சாதியரும் ஓர் தாயின் வயிற்றில்
பிறந்தோர்" என்று முழங்கினான். "வாழ்வும் வீழ்வும்", "முப்பது கோடி முழுமைக்கும்" பொது என்று கர்ஜித்தான்.
"புல்லடிமையும்",
"தொல்லை இகழ்ச்சியும்" தீர "ஒன்றுபட்டாலுண்டு
வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல்
வேண்டும் - இந்த ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்" என்று இந்நாட்டாரும், எந்நாட்டாரும் உலகில் இன்றும், என்றும் கடைப்பிடிக்கத் தகுந்த - கடைப்பிடிக்க வேண்டிய மனித
மந்திரத்தை எடுத்தோதினான். நாட்டு வணக்கம் என்ற பாட்டில் பாரதி, பெற்றார் உற்றாரோடு, குழந்தை குட்டிகளோடு இழைந்து குழைந்து வாழ்வதற்கு இந்நாடே ஆதார பீடம் என்பதை
இதயத்தைப் பிழிந்து பாடுகிறான். இந்த அருமருந்தன்ன பாட்டு மனித உணர்ச்சியுள்ள வரையில், அதிலும் வாழும் உணர்ச்சி உள்ளவரையில், அதில் ஆசாபாசத்தோடு வாழும் உணர்ச்சி உள்ளவரையில், சாகா வரம் பெற்று நிற்கும். யுகம் யுகாந்திர மட்டும், இந்தப் பாடலைப் பாடும் ஆண் - பெண் யாராயினும் உணர்ச்சி
வசப்பட்டு நாட்டின்பால் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காதிரார்" என்பது
திண்ணம். "பாரத நாடு" என்ற பாட்டு, "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு" என்ற பல்லவியில் ஆரம்பித்து
பாரத நாட்டின் சகல சம்பத்துக்களையும் அதி அற்புதமாக வர்ணித்துக் காட்டுகிறது.
"எங்கள் நாடு" என்ற பாட்டும் அவ்வாறே. "மன்னும் இமயமலையும் இன்னறு
நீர்க்கங்கையும் பன்னரும் உபநிட நூல்களும் மாரத வீரர்களும் நாரத கானமும் பூரண
ஞானமும் புத்தர் பிரானருளும் பெற்றநாடு எங்கள் நாடு". ஆகவே, "பாரத நாடு, பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலையீடே!" என்று மனமுருக நாட்டைப் பற்றிப் பாடுவதோடு
மட்டும் நிற்கவில்லை பாரதி. நாட்டுக்குரிய நமது கடமையையும் வலியுறுத்துகிறான்.
அந்தக் கடமை என்ன?
"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி இனி
மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில்
இனிக்கையை விரியோம்". கொத்தடிமைப் பட்டு சத்தற்ற வாழ்வில் நெளியும்
மோழைகளுக்கும் கோழைகளுக்கும் மேற்கூறியவாறு பக்குவமாக நாட்டுக் கடமையை
உணர்த்துகிறான் பாரதி. "ஜய பாரத" என்ற பாட்டில் பாரத நாட்டின்
பழம்பெருமைகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துக் கூறி, தாய் நாட்டை வாழ்த்துகிறான். இறுதியாக "சுதந்திரத்தி லாசையின்று தோற்றி
நாள்மன் வாழ்கவே" என்று நாட்டுத் தாய்க்கு நயம்படப் பல்லாண்டு பாடுகிறான்.
"பாரதமாதா" - என்ற பாட்டில் சரித்திர, இதிகாச,
புராண, காவிய
நாயகர்களின் கொள்கை செய்கைகளை பாரதமாதாவின் குணச் சித்திரங்களாக, எழில் நடப்புகளாக ஓவியம் தீட்டுகிறான் பாரதி. திருவாசகப்
பள்ளியெழுச்சி,
திவ்யப் பிரபந்தப் பள்ளியெழுச்சி கேட்ட நாட்டில், பாரதமாதா பள்ளியெழுச்சியும் கேட்க அருளினான் கவி வள்ளல்
பாரதி. பாரத சமுதாயம்: தமிழகச் சான்றோர்கள், பாரத நாட்டு முனிவர்கள், மேலை நாட்டு
நவீன அரசியல்,
சமுதாயப் புலவர்கள் இவர்களின் சமுதாயக் கண்ணொட்டம் என்ன என்பதை
பாரதி நன்கறிந்தவன். நம் நாட்டுப் பண்புக்குப் பங்கம் வராமல் புத்தம் புதிய
கருத்துக்களின் தேவையையும்,
ஊதியத்தையும் புறக்கணிக்காமல், இன்றைய நமது சமுதாயத்தின் பிரத்யட்ச சூழ்நிலையைத் தெளிவாகக்
கணக்கிலெடுத்து உலகில்,
பாரத நாட்டில் நமது சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று
வரையறுத்துக் காட்டிய தமிழகத்தின் (பாரத நாட்டுக்கும் பொருந்தும்) தலைசிறந்த
தீர்க்கதரிசி பாரதி. "பாரத மக்களின் தற்கால நிலைமை"* என்ற பாட்டில் தனது
காலத்துப் பாரத சமுதாயத்தின் அதள பாதாள நிலைமையைக் கல்லும் கனிந்துருக, வெகு உருக்கமாகப் பாடியிருக்கிறான் பாரதி. தமிழகத்தைப்
பகைப் புலனாகக் கொண்டு "இந்தத் துணைக் கண்டத்தில் வாழும் மானிடப் பரப்பின்
தொடை நடுங்கும் அச்சத்தை,
புழுத்து நாறும் மூடநம்பிக்கையை பயங்கரமான பாமரத் தன்மையை
நவக்கிரகக் குணாதிசயத்தை அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டைத்தனத்தை, புல்லிய வம்புதும்பு வல்லடி வழக்குகளை, விழிகள் குருட்டுத்தனத்தை, ஏமாந்த சோணகிரித்தனத்தை "பொறியற்ற விலங்குகள் போலும்" வாழ்க்கையை, நாம் நினைத்து நினைத்து, மனம் கரைந்து கரைந்து,
கண்ணீரும் கம்பலையுமாய்த் தேம்பித் தேம்பி அழத்தக்க
விதத்தில் பாடியுள்ளான் கருணையங்கடல் பாரதி. (குறிப்பு: "பாரத ஜனங்களின்
தற்கால நிலைமை" என்ற தலைப்பில் வெளியான பாடல் நொண்டிச் சிந்து மெட்டில்
அமைக்கப்பட்டு பிரபலமான பாட்டு. அதன் முழு வடிவத்தையும் படித்துப் பாருங்கள். அதன்
முதல் சில வரிகளை மட்டும் உங்கள் ஞாபகத்துக்காகக் கொடுத்திருக்கிறோம்.)
("நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி
யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படு வார் எண்ணிப்
பயப்படுவார்." ) "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால
வகையினானே" இந்த இலக்கண சூத்திரத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவன் பாரதி.
"போகின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்கிறான்.
"நிகழ்கின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் நம்மிடம் மலர்ந்து மணம் வீச
வேண்டும் என்கிறான். இதைப் புதிய சமுதாயத் தெளிவோடும் உறுதியாகக் கூறுகிறான்.
பாரத சமுதாயப் பாட்டு - பாரதி பாடிய இறுதிப்பாட்டு. பாரதியின் முதிர்ந்த அரசியல்
சமுதாயத் தத்துவ ஞானச்சாரம் நிறைந்த பாட்டு. இங்குதான், பாரத சமுதாயத்தை பொதுவுடைமை சமுதாயமாக -உலகுக்கொரு புதிய
சமுதாயமாக - தனது லட்சிய சமுதாயமாகக் காண்கிறான். இந்தச் சமுதாயத்தில்தான்
எல்லோரும் ஓர் குலம்,
எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை,
எல்லோரும் ஓர் விலை - ஆன சமுதாயத்தை மக்களே - உண்மையில் =
மன்னரான சமுதாயத்தைக் காண்கிறான். மனிதன் மனிதனான சமுதாயத்தை, மனிதன் அமரநிலை எய்திய சமுதாயத்தைக் காண்கிறான்.
சுதந்திரமும் விடுதலையும்: ஆங்கில நல்லிசைப் புலவர்களான பைரன், ஷெல்லி முதலிய புலவர்களும் பாரத நாட்டின் மகாகவிகளுள்
ஒருவரான குருதேவ் இரவீந்திரநாத் தாகூரும் எத்தனையோ அற்புத அற்புதமான சுதந்திரப்
பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இன்னும் உலக இலக்கியத்தில் எத்தனையோ கவியரசர்கள்
சுதந்திரதேவிக்கு நறுமணம் வீசும் கவி மலர்கள் பல சூட்டியிருக்கிறார்கள். ஆயினும்
எங்கள் பாரதியைப் போல்,
சுதந்திரத்தைப் பற்றி அதன் எல்லா அம்சங்களையும் பற்றி
இத்தனை ஆணித்தரமாகப் பாடிய புலவன் வேறு யாருமில்லை என்று துணிந்து கூறுவேன். பற்பல
நாட்டு இலக்கியங்களும் தமிழில் வெளிவர, வெளிவர,
தமிழர்கள் மேன்மேலும் பன்மொழிகளைப் பயிலப் பயில, சர்வதேச கலாச்சார உறவில் நெருங்கிய உறவு அதிகரிக்க, அதிகரிக்க, எனது
மதிப்பீடு சராசரித் தமிழன் அறியும் நால் வருமென்று நம்புகிறேன். விடுதலை மகாகவியான
பாரதியின் காட்சியில் பட்ட சுதந்திரம் மிகப் பெரியது. அது "ஆரமுது"; புளித்த கள்ளல்ல. அது "விண்ணில் இரவி"; மின்மினி அல்ல; "கண்ணிலும் இனியது அந்தச் சுதந்திரம்". பாரதி கருத்தில் இந்தச் சுதந்திரம்
"கண்ணீரும் செந்நீரும்" வார்த்து வளர்க்கப்பட்டது. படுவதேயன்றி, "தண்ணீர் விட்டு" வளர்க்கப் படுவதல்ல. ஆகவே இதை வீர
சுதந்திரம் என்று வீறுகொண்டு பாடுகிறான். "மானிடராதல் அரிது", "பிறந்தவர் யாவரும் இறப்பர்" இந்த உறுதி
கொண்டவர்களுக்குக் "கண்ணினும் இனியது சுதந்திரம்". இந்த உண்மைகளை ஆணி
அடிப்பது போன்று நிலை நிறுத்திக் கொண்டு "மண்ணி லின்பங்களை விரும்பி
சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?" என்று நம்மை உறுத்து நோக்கி, கணீர்க் குரலில் கேட்கிறான். சுதந்திரத்தைக் கத்தரிக்காய், வாழைக்காய் மாதிரி விற்பது அடிமடத்தனம் என்று இடித்துச்
சொல்கிறான் நமக்கு.பாரதி "சுதந்திர தேவிக்கு வணக்கம்" செலுத்தும் பாணி, ஈடும் எடுப்புமற்ற தனிப்பாணி. கோடானு கோடி விறல்
வீரர்களைப் பாதகாணிக்கை செலுத்தி "சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல்
மறக்கிலேனே" என்று மெய் மறந்து வணங்குகிறான். சுதந்திரம் இல்லாதவன்
"அணிகள்வேய் பிணம்" (அலங்காரம் செய்யப்பட்ட பிரேதம்) என்ற பாரதி
கூற்றைவிட அடிமைத்தனத்தை இகழவும் முடியாது. சுதந்திரத்தைப் புகழவும் முடியாது.
சுதந்திரம் இல்லாத நாட்டில் "ஆவியங்குண்டோ? செம்மை அறிவுண்டோ?
ஆக்கமுண்டோ?" என்று உலகு அதிர வினவுகிறான். அடிமை நாட்டில் காவிய நூல்களும் ஞானக் கலைகளும்
விளையாது என்கிறான். விடுதலை விழையாத, சுதந்திரத்தைப் பரிபாலிக்காத மக்களைப் "பாவிகள்" என்று சபிக்கிறான்.
சுதந்திரம்,
ஜனநாயகம் என்னும் "பேரறத்தினைப் பேணும் நல்வேலி"
என்றும்,
"சேராவாழ்க்கை", "துயர்மிடி" ஆகிய காரிருட் படலங்களைக் கிழித்தெறியும் "சோதி"
என்றும்,
"வீரருக்கு அமுது" என்றும் அமுதத் தமிழில் போற்றிப்
புகழ்கிறான். "வீர சுதந்திரம்" "சுதந்திர தேவியின் வணக்கம்"
ஆகிய பாடல்கள் உலக சுதந்திர இலக்கியத்தில் மட்டுமல்ல, உயர்தரத் தமிழ் இலக்கியத்திலும் தெவிட்டாத ஆரமுதத்
துண்டுகள். "சுதந்திரப் பள்ளு" என்ற பாட்டு, "பாரதி - மக்கள் கவி" என்ற மதிப்பீட்டுக்கு மணி மகுடம்
சூட்டுகிறது. சுதந்திரம் "பால் பிடிக்கும்" காலத்திலேயே, "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ"மென்று அறுவடை விழாக்
கொண்டாடுகிறானே. எதிர்காலத்தில் ஊடுருவிச் செல்லும் அவனுடைய "நுண்மாண்
நுழைபுலம்" என்னே!. ஜாதீய சமுதாயம் தகர்ந்து தரையோடு தரையாகித் தேய்ந்து
போனதையும்,
ஏகாதிபத்தியத்தின் ஏகபோக மிராசும் ஆதிக்கமும் ஆதீனமும், பொடிசூர்ணமாகி ஆடிக்காற்றில் பறந்து போனதையும் பாரதி
தொலை நோக்கிப் பார்க்கிறான். வர்க்கப் போராட்டத்தில் உழவனும் தொழிலாளியும்
வரிசை மேல் வரிசை பெறுவதையும், சோம்பேறிக்குத்
தண்டனை,
உழைப்பாளிக்கு ஓட்டுரிமை கிடைப்பதையும் பாரதி பார்க்கிறான்.
*"நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் - இது நமக்கே உரிமையாம்
என்பதறிந்தோம்" என்ற மக்கள் ஜனநாயகம் தழைப்பதையும் பாரதி பார்க்கிறான்.
சுதந்திரத்தின் சரியான திசையைச் செம்மையாகப் பார்க்கிறான். தீர்க்க தரிசனத்தாலும்
உணர்ச்சி வேகத்தாலும் எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, கோடானு கோடி உழவர்களாக நின்று ஆனந்த சுதந்திரப் பள்ளுப் பாடுகிறான்.
"விடுதலை"ப் பாட்டில் "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும்
விடுதலை",
ஏழைக்கும் அடிமைக்கும் மாதர்க்கும் விடுதலை.
"இழிவுகொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லை" "ஆண்களோடு
பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே".இத்தகைய பொன்மிழிகளை
இந்த ஜனநாயக சகாப்தத்தில் இந்த நூற்றாண்டில் ஒரு பேராற்றல் பெரும் புலவன், எளிமையாக இனிமையாகத் தமிழில் பாடினானே. அது தமிழும், தமிழ் மக்களும் செய்த தவப்பயந்தான். உலகில் எந்த
மொழிக்கும் இந்தப் பேறு கிடைக்கவில்லை. அமரர் ஜீவா அவர்கள் மேற்படி கட்டுரைகளை எழுதியதோடு
மட்டுமல்ல,
பாரதி புகழ் பரப்பிய சான்றோர்களில் தலைசிறந்தவராகவும்
விளங்கியிருக்கிறார். அவர் எந்த மேடையில் இருந்தாலும், அங்கு பாரதியின் குரல் அவரிடம் எதிரொலிக்கும். பாரதிதாசன்
நடத்தி வந்த "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்" எனும் இதழில் 1935இல் ஜீவா அவர்கள் எழுதிய "பாரதி கீதம்" எனும்
தலைப்பிட்ட பாடலை இங்கே தருகிறோம். இந்தப் பாடலை ஸ்ரீ தியாகையர் சுவாமிகள்
இயற்றிய "ஸ்ரீ ராம பாதமா" எனும் பாடலமைந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற
குறிப்பையும் அவர் கொடுத்திருக்கிறார். அந்த பாடல் வருமாறு:-- பல்லவி பாரதி கீதமே
பாடுவோம் நிதமே பயன் தரும் போதமே. அநுபல்லவி வீரமுங் காதலும் வீறுடன் வாழ்தலும்
வெற்றிதேச பக்தியூட்டும் முற்றிலும் விநோதமே சரணங்கள் வீழ்ந்த நற்றமிழர்
வாழ்ந்திட அமிழ்தம் விரும்பி யளிக்குமே நிதம் சூழ்ந்த நற்பொருளே சொல்லிய தெருளே
சுத்தமெய்ச் சுதந்திரம் சமத்துவம் விதைத்திடும் பாரததேச பக்த ராவேசம் பரிவுடனே
வாசம் சேரிதத் தூண்டுகோல் சீர்கவி வேண்டுகோள் ஜீவானந்தன் தோத்திரப்பா மேவும்
ஸ்ரீசுப்ரமண்ய அமரர் ஜீவா அவர்கள் "தாமரை" அக்டோபர் 1979 இதழில் பாரதியைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு நாம் படித்து
இன்புற வேண்டிய செய்தி. அது இதோ:-- "கம்பனைப் போன்றுதான் பாரதியும் இயற்கை
-- செயற்கைப் பெரும் புலவன். பாரதி பன்மொழிப் புலவன்;. தமிழ், ஆங்கில, ஆரிய மொழிகளின் சிறந்த நூல்களின் சிறந்த கூறுகளையெல்லாம்
தெளிவுறக் கற்றவன் அவன். செய்யுட் பாக்களை அனாயாசமாக பல்வேறு யாப்புகளில்
பாடவல்லவன் என்பதைக் காட்டியதோடு, சர்வ சாதாரணமான சிந்து வகைகளை எடுத்து, தனது எண்ணங்களுக்கு ஏற்ப, அவற்றில்
பல்வேறு புதிய வண்ணங்களைத் தீட்டி, ஒரு புதிய பரம்பரையையே தமிழ்மொழியில் நிறுவிவிட்டான்". இன்னொரு சுவையான
செய்தி! 1947இல் தோழர் ஜீவா தலைமறைவாய் இருந்தார். அவருடைய கம்யூனிஸ்ட்
கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு இந்த நிலைமை. அப்போது அவர் புகழ்பெற்ற
நாடக,
சினிமாக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களுடைய
வீட்டில்தான் இருந்தார். அப்போது தினமும் தோழர் ஜீவாவுடன் பாரதி பற்றி பேசவும், கேட்கவும் வாய்ப்பு நிறைய கிடைத்தது சகஸ்ரநாமத்துக்கு. ஜீவா
பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் பற்றிச் சொல்லச் சொல்ல நாடகக்காரரான
சகஸ்ரநாமத்துக்கு அந்த பாஞ்சாலி சபதத்தை அப்படியே நாடகமாக ஆக்கிவிட வேண்டும் என்ற
ஆர்வம் பிறந்தது. அப்படியே அவர் "பாஞ்சாலி சபதத்தை" கவிதை நாடகமாக மேடை
ஏற்றி பெரும்புகழ் பெற்றார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி. இந்த ஆண்டு அமரர்
ஜீவாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமும் அவருடைய
கட்டுரைகளையும்,
அவரைப் பற்றிய சில சுவையான செய்திகளையும் இந்தப் பாடத்தில்
கொடுத்திருக்கிறோம். பயனுள்ளதாக அமையுமென்று நம்புகிறோம்.
வாழ்க பாரதி புகழ்!
No comments:
Post a Comment