கடைச் சோழ
மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.
1. விஜயாலய சோழன் (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன் (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன் (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன் (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067 முதல் 1070 வரை)
பிற்கால சோழ
மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன் (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 முதல் 1279 வரை)
இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை
பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த
விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப்
பார்ப்போம்.
மாவீரன்
முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக
வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை
ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால்
வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ்
வெளிவரவில்லையே ஏன்?
ராஜேந்திரசோழனுடைய
காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது.
கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச்
சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா
அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார்
தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள்,
மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது
மட்டுமா?
ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா,
ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள்
அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை
வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது
ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன்.
ராஜராஜனின்
மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ்
சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும்
பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள்
திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன்,
2ஆம் ராஜேந்திரன்,
வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.
இப்படி
திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக்
கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட
சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த
சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை
பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து,
கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.
பொதுவாக தமிழ்
மன்னர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் பிற நாடுகளை வென்று ஆக்கிரமிப்பது கிடையாது.
ஆனால் ஒருசில மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு இந்த ஆசை ஏற்பட்டு அதன் விளைவாகப் பல
நாடுகளை வென்று ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜராஜசோழனும் அவனுடைய
மகன் ராஜேந்திரனும் கடல்கடந்தும் சென்று மேலும் பல நாடுகளை வென்று வெற்றியைக்
குவித்து வந்தார்கள்.
ராஜேந்திர
சோழன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான கடல்கடந்த நாடுகளை வென்றெடுத்தவன்.
குறிப்பாக இவன்காலத்தில்தான் அந்தமான், லட்சத்தீவுகள், இந்தோசைனா என வழங்கப்பட்ட தாய்லாந்து,
மலேயா, லாவோஸ், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய பிரதேசங்களையும் பர்மாவையும் வென்று தன்
சாம்ராஜ்யத்தினுள் இணைத்துக் கொண்டான்.
ராஜேந்திர
சோழனுக்கு முன்பாக பல்லவ மன்னர்களும்கூட கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்திருக்கிறார்கள்.
ஆனால் ராஜேந்திர சோழந்தான் பர்மா இந்தோசைனா பகுதிகளையும் வென்று வெற்றிக் கொடி
நாட்டியவன். இந்த நாடுகள் அனைத்துமே ராஜேந்திர சோழன் காலத்தில் மட்டுமல்ல,
அவனைத் தொடர்ந்து வந்த பல சோழ அரசர்கள் காலம் வரை அதாவது
முதலாம் குலோத்துங்கன் காலம் வரை இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றன.
பல்லவர்கள்
காலத்தைவிட ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுத்துச் சென்ற அன்னிய மண்ணில் நமது
கலாச்சாரத்தைப் பரப்பி, பல சிவாலயங்களை ஆங்காங்கே கட்டி வைத்தான். இன்றும்கூட
தாய்லாந்து போன்ற இடங்களில் இவன் காலத்திய பழமையான உலக அதிசயங்களுக்கு ஈடான
சிவாலயங்களைக் காண முடிகிறது.
தஞ்சையில்
அதிசயிக்கத்தக்க வகையில் தந்தை ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்சரம் கோயிலைப் போல
தன்னுடைய புதிய தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோயிலைப் போன்றதொரு
கோயிலைத் தானும் கட்டிவைத்தான். தன்னுடைய சாதனைகளின் காரணமாக இவன் பரகேசரி என்றும்
யுத்தமல்லன் என்றும் விருதுகளைப் பெற்றான்.
ராஜராஜ சோழன்
தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜேந்திரனை
யுவராஜாவாக அங்கீகரித்து 1012இல் முடிசூட்டினான். ராஜராஜனுடைய இறுதிக் காலத்தில்
இவ்விருவரும் செய்த சாதனைகள் அளப்பரியவை. மன்னன் ராஜராஜசோழன் சார்பாக தனையன்
ராஜேந்திரன் சோழர் படைகளுக்குத் தலைமை தாங்கி வேங்கி,
கலிங்கம் ஆகிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி
பெற்றிருக்கிறான்.
1012இல் யுவராஜாவாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் ராஜேந்திரன் 1014இல்தான் அரசுரிமை பெற்று மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
தன்னுடைய தந்தை தன்னை யுவராஜாவாக அங்கீகரித்ததைப் போல ராஜேந்திரனும் 1018இல் தன்னுடைய மகனான ராஜாதிராஜனை சோழ இளவரசனாக
அங்கீகரித்தான். அது தொடங்கி தன் தந்தைக்கு உதவியாக யுவராஜாவாக இருந்து
அரசாட்சியைத் திறம்பட அடுத்த 26 ஆண்டுகளுக்கு நடத்தி வந்தான் ராஜாதிராஜன். மன்னனுக்குரிய
அனைத்து அதிகாரங்களும் கொண்ட யுவராஜாவாக இவர்கள் ஆட்சிபுரிந்ததும் ஒரு வகையில்
நல்லதாகப் போயிற்று. மன்னன் மரணமடைந்த பின்னர் யார் பட்டத்துக்கு வருவது என்ற
வாரிசுரிமைப் போர் இதுபோன்ற நேரங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா?
தொடக்க கால
ராணுவ படையெடுப்புகளும் வெற்றிகளும்.
ராஜேந்திர சோழ
மன்னனுடைய காலத்திய கல்வெட்டுகளிலிருந்து போர்களில் அவன் பெற்ற வெற்றிகள் குறித்த
பல செய்திகள் கிடைக்கின்றன. கி.பி.1002ஆம் ஆண்டு முதல் தன் தந்தையின் காலத்திலேயே அவன் பல
போர்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அப்படி அவன் படையெடுத்துச் சென்ற பெற்ற
வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுத்துச் சென்று
வென்றதும் ஒன்று. அது தவிர தற்போதைய கர்நாடக மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில்
இருந்த மேலச் சாளுக்கியர்கள் நாடும், தென் கர்நாடகத்தில் கோலாப்பூர்,
பண்டரிபுரம் ஆகிய பகுதிகளும் இவன் வெற்றி பெற்ற பகுதிகள்.
மேலைச்
சாளுக்கிய மன்னனான சத்யாசிரியன் அவனுடைய வாரிசு 2ஆம் ஜெயசிம்மா ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டான்.
துங்கபத்திரை நதியைத் தாண்டி இந்த நாட்டினை அடைந்து போரிட்டான். சாளுக்கியர்களின்
தலைநகரமும் ராஜேந்திரன் வசம் வந்தது. சாளுக்கியர்களின் பரந்து விரிந்து கிடந்த
நாட்டில் ரெய்ச்சூர் பகுதிகளையும் கிருஷ்ணா துங்கபத்ரா ஆகிய நதிகளைக் கடந்து
சென்று போரிட்டு வெற்றியடைந்திருக்கிறான். மைசூருக்கு வடமேற்கில் இருந்த
பிரதேசங்களையும் அங்கிருந்த அரசர்களைத் தோற்கடித்து மலைப்பகுதிகளுக்கு
விரட்டிவிட்டு ராஜேந்திரன் பிடித்துக் கொண்டான். வெற்றி பெற்று பிடித்துக் கொண்ட
பகுதிகளில் தனது வெற்றியைக் குறிக்கச் சில இடங்களில் சிவாலயங்களையும் எழுப்பினான்.
தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் ஐதராபாத்துக்கு வடக்கே இருந்த பகுதிகளையும்,
கர்நாடகப் பகுதிகளான கோலாரையும் பிடித்துக் கொண்டான்.
கோலாரில் தமிழில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுப் பகுதியும் காணக் கிடைக்கிறது.
இலங்கைப்
படையெடுப்பு.
ராஜேந்திர
சோழனின் தந்தையார் ராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையை முழுமையாகப் பிடிக்க வில்லை.
மேலும் சில பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்படாமலே இருந்தன. அதை பூர்த்தி
செய்து விட்டுப்போன பகுதிகளையும் பிடித்துவிட வேண்டுமென ராஜேந்திரன் இலங்கைக்குப்
படையெடுத்தான். கி.பி.1018ஆம் ஆண்டு இந்தப் படையெடுப்பைத் துவக்கினான் ராஜேந்திரன்.
முன்பு பாண்டிய மன்னர்களின் செல்வங்களையும், பொன்னாபரணங்களையும் கவர்ந்து வைத்திருந்த இலங்கை
அரசர்களிடமிருந்து ராஜேந்திரன் அவற்றை மீட்டதாகத் தெரிகிறது. இலங்கை அரசனின் தலைக்
கிரீடத்தையும், ராணியையும் அவரது மகளையும் கூட ராஜேந்திரன் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
சிங்கள ராஜா மகிந்தன் சிறைபிடிக்கப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டான். அந்த
மகிந்தனுடைய துரதிர்ஷ்டம் அவன் சோழ மன்னன் சிறையில் பன்னிரெண்டு ஆண்டு காலம்
சிறைப்பட்டுக் கிடந்து அங்கேயே மாண்டு போனான். இலங்கையின் "மகாவம்சமும்"
இந்தச் செய்திகளை உறுதி செய்கின்றன. எதற்காக இப்படி சோழ மன்னன் இலங்கை மீது
படையெடுத்து, அந்த ராஜாவைச் சிறைப்பிடித்து, ராணியையும், மகளையும் சோழ நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்?
இந்தக் கேள்வி நமக்கு எழத்தானே செய்யும். சோழ நாட்டு வணிகர்கள்
தங்கள் கப்பல்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கும்,
தூரக்கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் வழியில் (இப்போது
மீனவர்களைத் துன்புறுத்துவது போலவே) அப்போதும் அந்த வியாபாரக் கப்பல்களை
வழிமறித்து கொள்ளையடித்தும், வியாபாரிகளை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியும் கொன்றும்
வந்திருக்கின்றனர். இந்த அநியாயத்தை (இப்போது போல்) தட்டிக் கேட்காமல் இருக்க
முடியுமா?
சோழ தேசத்தை ஆளும் மன்னன் எனும் முறையில் ராஜேந்திரன் தன்
படைகளை அழைத்துச் சென்று இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டினான். இது பற்றி
கோலார் கல்வெட்டு செய்திகளும் கிடைத்திருக்கின்றன.
ராஜேந்திரனின்
சிங்கள நாட்டு வெற்றியை அடுத்து அங்கு சிறைப்பிடிக்கப்பட்ட மகிந்தனுடைய மகன்
ஒருவன் தமிழ் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டான். தமிழர் படைகளுக்கும் சிங்கள
படைகளுக்கு மிடையே பெரும் யுத்தமொன்று இலங்கையில் நடந்தது. அந்த யுத்தத்தில்
மிச்சமிருந்த சிங்கள எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு இலங்கை முழுவதையும்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் தமிழர் ஆட்சி 2ஆம் குலோத்துங்கன் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்தது.
கி.பி.1041இல் மறுபடியும் ராஜேந்திர சோழன் இலங்கைக்குச் சென்று அங்கு
தமிழர் படைகளுக்கு எதிராக உருவாகியிருந்த கலகத்தை ஒடுக்கினான். சிங்களர்களைத்
தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராகப் போரிட்டவன் பெயர் விக்கிரமபாகு என்பவன். இந்த
விக்கிரமபாகுவும் சில நாட்களுக்குப் பிறகு கலவரத்தில் மாண்டுபோனான். தமிழ்
மன்னருக்கு எதிராக இலங்கையில் சிங்களர் தவிர வேறு சிலரும் கலகங்களில் ஈடுபட்டு
வந்தனர். சிங்களர்களுக்கு உதவியாக பாண்டிய நாட்டிலிருந்து ஓடிவந்து புகலிடம்
தேடிக்கொண்ட பாண்டிய நாட்டு இளவரசர்களும், வடக்கே கன்னோஜ் பகுதிகளிலிருந்து வந்த சிற்றரசன் ஒருவனும்
இருந்தனர். இவர்கள் அனைவரையும் சோழர் படைகள் வெற்றி கண்டன. ராஜராஜன் காலத்தில்
நிறைவேறாமல் போன இலங்கையை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் திட்டம் அவர் மகன்
ராஜேந்திரன் காலத்தில் நிறைவு பெற்றது.
பாண்டியர்களும்
சேரர்களும்.
கி.பி.1018இல் ராஜேந்திர சோழன் தன்னுடைய பிரம்மாண்டமான சோழர் படையுடன்
அதற்குத் தலைமை ஏற்று பாண்டிய, சேர நாடுகளுக்குச் சென்றான். அப்படி படையெடுத்துச் சென்ற
ராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டின் நன்முத்துக்களையும்,
முத்துக்குளிக்கும் துறைமுகங்களையும் பிடித்துக் கொண்டதோடு
மேற்கில் இருந்த மலைகளைத் தாண்டிச் சென்று சேர நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டை
வெற்றி கொண்டான். இந்த பாண்டிய, சேர நாட்டுப் பகுதிகள் ஏற்கனவே ராஜராஜ சோழன் காலத்தில் சோழ
மண்டலத்துக்குட்பட்டவைகளாக இருந்தும், ராஜேந்திரன் மறுமுறையும் அங்கெல்லாம் சென்று தங்கள் ஆட்சியை
உறுதி செய்துகொண்டார். அப்படி ராஜேந்திரன் பிடித்துக் கொண்ட பாண்டிய மண்டலத்து
அதிபதியாகத் தன்னுடைய மகனை ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயருடன்
நியமித்தார் நிர்வாகியாக நியமித்தார்.
மேலைச்
சாளுக்கிய யுத்தங்கள்.
கி.பி.1021 ராஜேந்திர சோழன் தனது கவனத்தை மேலைச் சாளுக்கியர்கள்
பக்கம் திருப்பினார். 1015இல் 2ஆம் ஜெயசிம்மா என்பவன் மேலைச் சாளுக்கிய மன்னனாக
முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சிக்கு வந்ததும் தனக்கு முந்தைய அரசனான
சத்யாஸ்ரயன் இழந்தவற்றை மீட்டெடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். அந்த
சத்யாஸ்ரயன் சோழர்களோடு நடந்த யுத்தத்தில் தோற்று ஓடியவன். ஆனால் எப்படியோ ராஜராஜ
சோழனின் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டு
கப்பம் கட்டும் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு ராஜ்யத்தை மீண்டும்
பெற்றுவிட்டான். இந்த 2ஆம் ஜெயசிம்மா ஆட்சிக்கு வந்தவுடன் தானே சுயமாக செயல்படத்
தொடங்கினான்; காரணம் ராஜேந்திர சோழன் அப்போது தனது கவனத்தை இலங்கை மீதும்,
பாண்டிய சேரர்கள் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். இந்த
சமயம் பார்த்து ஜெயசிம்மா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்தான்.
மேலைச்
சாளுக்கியர்கள் கர்நாடகத்தின் வடக்கு, மராட்டியத்தின் பகுதிகளைக் கொண்டது. கீழைச் சாளுக்கியர்கள்
என்பவர்கள் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தென்னிந்தியாவின் கிழக்குப்
பகுதியிலும் ஆட்சி செய்தவர்கள். மேலைச் சாளுக்கிய ராஜ்யத்தை ஆண்ட இந்த
ஜெயசிம்மாவுக்குக் கீழைச் சாளுக்கியர் ஆட்சியிலும் தலையிட்டுக் குழப்பம் விளைக்க
எண்ணினான். அந்த வேங்கியில் விமலாதித்தன் என்பவன் அரசனாக இருந்தான். அவன் காலமான
பிறகு அவனது மகனும் சோழ மன்னர்களின் ஆதரவு பெற்றவனுமான ராஜராஜ நரேந்திரன் என்பான்
ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் ஜெயசிம்மா என்ன செய்தான் இவனுக்கு எதிராக அவன்
சகோதரன் விஜயாதித்தன் என்பவனை ஆதரிக்கத் தொடங்கினான். விமலாதித்தன் ராஜராஜ சோழனின்
மகளான குந்தவையை திருமணம் செய்து கொண்டவன். மாமன்னனின் மாப்பிள்ளை. விமலாதித்தனின்
இரண்டு மகன்களில் ஒருவன்தான் இப்போது வேங்கி ஆட்சிக்கு வரும் ராஜராஜ நரேந்திரன்.
மற்றொருவனை ஜெயசிம்மா ஆதரித்தான். இந்த நிலையில் சோழ மன்னர்கள் யாரை ஆதரிப்பார்கள்?
ராஜேந்திரன் ராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான். இந்தப்
போட்டியில் வேங்கி நாட்டில் உள்நாட்டுக் கலகம் உருவானது. அண்ணன் தம்பிக்கிடையே
பனிப்போர். ராஜேந்திர சோழனின் ஆதரவு பெற்ற ராஜராஜ நரேந்திரன் உள்நாட்டுப் போரில்
வென்றான். வேங்கி அவன் வசம் வந்ததோடு, சோழர்களின் கரங்களும் வலுப்படுத்தப்பட்டன.
ராஜேந்திர
சோழன் தன்னுடைய படைகளை இரண்டாகப் பிரித்து ஒன்றை மேலைச் சாளுக்கிய ராஜ்யத்துக்கும்,
மற்றொன்றை வேங்கிக்கும் அனுப்பி வைத்தான். மேற்கே
ஜெயசிம்மாவை எதிர்கொள்ள சென்ற படைகள் மாஸ்கி எனுமிடத்தில் நடந்த போரில் அவனைத்
தோற்கடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சாளுக்கிய நாட்டின் தலைநகருக்கும் சென்று
அங்கு அங்கிருந்த மற்ற சாளுக்கியர்களையும் தோற்கடித்தது. இந்தப் போரில்
ஜெயசிம்மாவின் பெரிய தளபதிகள் பலரை சோழர் படைகள் போரில் கொன்றுவிட்டன. மகாசமந்தா என்றும்
தண்டநாயகா என்றும் புகழ்பெற்ற தளபதிகள் கொல்லப்பட்டனர். ஜெயசிம்மாவின்
பேராசைக்காகத் தங்கள் உயிரை ஈந்தனர் இந்த வீரம் செறிந்த தளபதிகள். இந்த போரின்
மூலம் இரட்டைபாடி நாடு எனப்படும் மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில்
வீழ்ந்தது. இந்த சகோதர யுத்தத்தில் வெற்றிபெற்ற ராஜராஜ நரேந்திரனை,
ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று
வெற்றிக்கொடி நாட்டித்திரும்ப வரும்போது வேங்கிநாட்டின் பட்டாபிஷேகத்தைச் செய்த
கையோடு தன் மகளான அம்மங்கா என்பவரையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கி.பி.1031இல் இரட்டைபாடி நாட்டார் (மேலைச் சாளுக்கியர்) மீண்டும்
வேங்கி மீது படையெடுத்து வந்தனர். அந்தப் போரில் ராஜேந்திர சோழனின் மருமகனும்
வேங்கியின் மன்னனாக இருந்தவனுமான ராஜராஜ நரேந்திரன் தோற்று ஓடிப்போனான்.
சாளுக்கியர்களின் ஆதரவோடு விஜயாதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். தோற்றுப்
போன ராஜராஜ நரேந்திரன் தன் மாமனாருக்கு மீண்டும் உதவி கேட்டு ஆளனுப்பினான். இந்த
முறை ராஜேந்திர சோழன் தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜாதிராஜனை பெரும் படையோடு
வேங்கிக்கு அனுப்பினான். அப்போது நிகழ்ந்த பெரும் போரில் சோழர் படைகள் வெற்றி
பெற்றன. நரேந்திரன் மீண்டும் கி.பி.1035இல் அரசனானான். விஜயாதித்தன் இரட்டைபாடி நாட்டுக்குப் போய்
அடைக்கலமானான்.
ராஜேந்திர
சோழன் காலத்தில் மேலைச் சாளுக்கியர்கள் பெரும் தொல்லையாகவே இருந்திருக்கிறார்கள்.
சத்யாஸ்ரயன் அவன் மகன் ஜெயசிம்மா ஆகியோர் தவிர அவர்களுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களான
கடம்பர்கள், ஹொய்சாளர்கள், பாணர்கள், வைதும்பர்கள், கங்கர்கள் என அனைவருமே தமிழ் சாம்ராஜ்யத்துக்கு எதிரிகளாக
இருந்தார்கள். இவற்களையெல்லாம் வென்று ராஜேந்திரன் பெட்ட பட்டங்கள்
"முடிகொண்ட சோழன்", "ஜெயசிம்ம சரபன்", "மன்னைகொண்ட சோழன்" மன்னை என்பது சாளுக்கிய தலைநகர்
மான்யகேட்டாவைக் குறிக்கும். தமிழில் இதை மன்னைகடகம் என்றழைப்பர்,
"இரட்டைபாடி கொண்ட
சோழன்", "நிரூபதிவாகரன்" (நிரூபதுங்கன் எனும் ஹொய்சாளனை வெற்றி கொண்டதால்)
இப்படிப் பல
இப்படிப்
போர்க்களங்களைக் கண்டே ராஜேந்திரனுக்கு வயது முதிர்ந்து விட்டது. தன்னுடைய வயதான
காலத்திலும் சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. காரணம் சாளுக்கிய
2ஆம் ஜெயசிம்மாவும் அவனுடைய மகனான சோமேஸ்வரனும் சோழ நாட்டு
எல்லைப் பிரதேசங்களில் நுளம்பவாடி, கங்கவாடி எனும் கன்னட நாட்டுப் பகுதிகளில் கலவரம்
ஏற்படுத்தி வழிப்போக்கர்களிடமிருந்து சுங்கம் வசூல் செய்யத் தொடங்கினர்.
ராஜேந்திர
சோழனும்,
அவனுடைய மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜ சோழனும் அவர்கள்
மீது படையெடுத்து அவர்களை வென்று ஜெயசிம்மாவைப் போர்க்களத்தில் கொன்று,
பல தளபதிகளைக் கொன்றும், சாளுக்கிய தலைநகரை வசப்படுத்திக் கொண்டு சித்ரதுர்கம்
எனுமிடத்தில் நடந்த போரில் மாபெரும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்கு
ராஜேந்திரனின் மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜன் காட்டிய வீரமும்,
போர்த்திறனும் மன்னன் ராஜேந்திரனுக்குத் திருப்தி அளித்தது.
இதுதான் யுவராஜா ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். யுத்தத்தில் தான் பெற்ற
வெற்றிப் பரிசாக இவன் தன் தந்தைக்கு இரண்டு துவாரபாலகர் சிலைகளைக்
கொடுத்தனுப்பினான். அதில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வாயிலில்
வைக்கப்பட்டது. இன்னொன்று திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் இருக்கிறது. இந்த கோயில்
பின்னாளில் 3ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த
துவாரபாலகர் தற்போது தஞ்சை பெரிய கோயில் கலைப்பொருள் கண்காட்சியில்
வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோயில் ராஜேந்திர
சோழன் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டன.
சோழர்களிடம்
தோற்ற சாளுக்கியர்கள் தொடர்ந்து சோழர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறையும் இவ்விரு சாம்ராஜ்யங்களுக்குள் யுத்தம் நடைபெறும் போதெல்லாம்
சாளுக்கியர்களுக்குத் தோல்வியும், சோழர்களுக்கு ஏராளமான செல்வங்களும்,
பொன், நகைகள், குதிரைகள், யானைகள் மற்ற யுத்த தளவாடங்கள் இவைகள் அதிக அளவில்
கிடைத்தன. இது தவிர சாளுக்கியர்கள் சோழர்களுக்கு பெரும் தொகையை கப்பமாகக்
கட்டவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சோழர்களும் ஒவ்வொரு முறையும் அவர்கள் பால்
இரக்கப்பட்ட ராஜ்யத்தையும், மனைவி பிள்ளை குட்டிகளையும் அவர்களோடு சேர்ந்து கொள்ள
அனுமதித்திருக்கின்றனர்.
தன் தந்தையார்
கட்டிஆண்ட தஞ்சை சாம்ராஜ்யத்தின் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக்
கொண்டாராயினும், ராஜேந்திர சோழன் தன் தந்தையுடையதும் மற்ற அவர்களது முன்னோர்களின் சாதனைகளைப்
போற்றி மதித்து வந்திருக்கிறார். தன் தந்தையுடையதும்,
தன்னுடையதுமான போர் வெற்றிச் சாசனங்களை தஞ்சைக்
கோயிலில்தான் அவர் வெட்டிவைத்திருக்கிறாரே தவிர கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில்
இல்லை. அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் தங்கள் தலைநகரத்தையும்,
முடிசூட்டிக் கொண்டதையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் வைத்துக்
கொண்டாலும், கல்வெட்டுகளை மட்டும் தஞ்சை கோயிலில்தான் எழுதி வைத்தார்கள். ராஜேந்திர சோழன்
கங்கை,
கடாரம் முதலிய நாடுகளை வென்றதன் விளைவாக அவருக்கு
"பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன்" எனும் பட்டப் பெயரைப்
பெற்றார்.
கங்கை
படையெடுப்பு.
மேலை
சாளுக்கியர்களையும், கிழக்கில் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு
மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும்,
பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன்
படைகளை அனுப்பி வைத்தான். கி.பி.1019இல் சோழப் படைகள் கலிங்க நாட்டின் வழியாக (இப்போதைய ஒடிஷா)
கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது. அந்தப் படைக்குத் தலைமை தாங்கி ராஜேந்திர சோழ
மன்னனே தெற்கே தொடங்கி கோதாவரி நதிக்கரையில் வந்தார். முன்னேறிச் செல்லும் சோழப்
படையைப் பின்னாலிருந்து வேறு எந்த நாட்டுப் படையாவது வந்து தாக்கிவிடாமல் இருக்க
மன்னர் இப்படி ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். வங்காள தேசத்தை அடைந்த சோழர் படைகள்
அங்கு மன்னன் மகிபாலனை எதிர்கொண்டு போரிட்டு வென்றனர்.
இந்தப்
படையெடுப்பு பற்றி திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதன்படி இந்தப்
படையெடுப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றதாகவும்,
இந்தப் படை செல்லும் வழிகளில் எல்லாம் பல நாடுகள் சோழர்
படையின் வலிமையை உணர்ந்து சரணடைந்ததாகவும் தெரிகிறது. இந்தப் படையெடுப்பில்தான்
சோழர்கள் ரணசூரன் என்பவனைத் தோற்கடித்து கங்கை நீரை அவனைவிட்டுச் சுமக்கச் செய்து
சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.
வடக்கே
படையெடுத்துச் சென்று, அங்கெல்லாம் வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசனுக்கு
அங்கிருந்து மேலும் பல புதிய நாடுகளுக்கு வழி தெரிந்து அங்கெல்லாம் செல்லத்
தொடங்கினான். அப்படி அவன் செல்லும் வழியில் கலிங்கம் அதாவது இப்போதைய ஒடிஷா,
வங்கதேசம், அசாம் முதலான பகுதிகளைத் தாண்டி பர்மா வரை சென்றான். அப்படி
இவன் சென்ற வழியில் இருந்த வடமதுரை, கன்யாகுப்ஜம், சிந்து ஆகிய பிரதேசங்களும் சோழர் வசமாயின. சோழர் படையில்
தரைப்படை எத்தனை வலிமையானதோ, அதே அளவுக்கு கடற்படையும் வலிமையானதாக இருந்ததால்,
கடல்கடந்து மட்டுமல்ல, நாட்டின் கிழக்கு மேற்குப் பகுதிகளும் சோழர் வசமாயின.
சோழர்களிடம் தோற்ற அரசர்கள் வரிசை மிக நீண்ட வரிசை.
ராஜேந்திரனின்
சோழர்படை வென்ற பகுதிகள் அனைத்தும் முதலில் சோழப் பேரரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் அவைகள் சோழர்களுக்கு அடங்கிய கப்பம் கட்டும் சிற்றரசர்களாக
அங்கீகரிக்கப்பட்டுத் தனித்து அரசாள அனுமதிக்கப்பட்டனர். சோழர்களின் அன்னிய நாட்டு
வணிகங்களில் இந்த சிற்றரசுகளும் பங்கு பெற்றன. ராஜேந்திரனுக்குப் பிறகும் மூன்றாம்
குலோத்துங்கன் காலம் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தன.
தென்னாட்டில்
சோழர்களின் வலிமை என்ன என்பது இவர் காலத்தில்தான் வடக்குப் பகுதி ராஜ்யங்களுக்குப்
புரிந்தது. இத்தனை வலிமை பெற்றிருந்தும் சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளைத்
தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளாமல் சிறிது காலத்தில் அவர்களிடமே திரும்பக் கொடுத்து
தங்கள் ஆளுமையின் கீழ் சுதந்திரமாக ஆள வழிவகுத்துக் கொடுத்த பெருந்தன்மையை
புரிந்து கொள்ளலாம்.
கடல்கடந்த
படையெடுப்புகள்.
மாமன்னன்
ராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கி.பி.1025இல் சோழ கடற்படையைக் கொண்டு கடல்கடந்து சென்று ஸ்ரீவிஜய
ராஜ்யம்,
கடாரம் முதலிய நாடுகளை வெற்றி கொண்டிருக்கிறான். தவிர
சுமத்ரா,
மலாயா வளைகுடா, இப்போது மலேயாவில் உள்ள கேடா ஆகிய பகுதிகளையும் வெற்றி
கொண்டார். இதில் ஸ்ரீவிஜய ராஜ்யம் முன்பு சோழர்களோடு நல்ல உறவில்
இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மன்னராக
இருந்த விஜயதுங்கவர்மன் என்பவனை நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் எனும் புத்த
ஆலயத்தைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தார். அப்படி இருந்தும் அந்த ஸ்ரீவிஜய
ராஜ்யத்தின் மீதும் ராஜேந்திரன் படையெடுத்து அதனைப் பிடித்துக் கொண்டது ஏன் என்பது
தெரியவில்லை.
ராஜேந்திர
சோழனின் இறுதி நாட்கள்.
ராஜேந்திர சோழனின் வாழ்நாட்கள் முழுவதும் போரும்,
போர்க்களமுமாகக் கடந்து போயிற்று. அப்படி அவன்
படையெடுத்துச் சென்ற இடங்களில் எல்லாம் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சரிந்து சோழர்
வசமாயின. மன்னனுக்கு வயது அதிகமாகி மூப்பு அடைந்த போது அவனுடைய பிள்ளைகள்
படையெடுப்புகளைத் தாங்களே தலைமை வகித்து முன்னின்று நடத்தலாயினர். தன் மக்கள்
போரில் சூரர்களாக இருந்து வெற்றிகளைக் குவித்து வருவது கண்டு வயது முதிர்ந்த
ராஜேந்திரன் மனமகிழ்ச்சியடைந்தான். மன்னனின் மூப்பு கண்டு பாண்டியர்களும்,
சேரர்களும் கலகம் விளவிக்க முயன்றனர். ஆனால் மன்னன் தானே
இவற்றை முன்னின்று அடக்கினான். இலங்கையிலும் உருவான கலகத்தைத் தன் பலம் கொண்டு
மன்னன் அடக்கி வைத்தான்.
ராஜேந்திர
சோழன் விட்டுச் சென்றவை.
மாமன்னன்
ராஜேந்திரனின் இறுதி நாட்கள் மகத்தானவை. அவன் காலத்தில்தான் சோழ நாடு முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. சக்கரவர்த்திக்கு
அவனுடைய மகன்கள் உற்ற துணையாக இருந்து அவற்றை காத்து வந்தனர். இரக்கம்,
இறையுணர்வு, பிறர்க்கு உதவுதல், மக்களின் நலன் பேணுதல் என்று இவர்கள் காலம் பொற்காலமாக
இருந்திருக்கிறது. எல்லவற்றையும் விட ராஜேந்திரனின் பெருமைமிக்க குணமாக விளங்கியது
அவன் வென்ற நாடுகளைத் தோற்ற அரசர்களிடமே பின்னர் ஒப்படைத்ததுதான். என்ன
பெருந்தன்மை ராஜேந்திரனுக்கு. தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் வாயுவின் தலமாகக்
கருதப்படுவது காளஹஸ்தி. 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த
ஆலயம் இன்றும் தலை நிமிருந்து நின்று தமிழனின் பெருமையைப் பறை சாற்றிக்
கொண்டிருக்கிறது.
ராஜேந்திர சோழனின் காலம் தமிழரின் பொற்காலம்,
தமிழகத்தின் பொற்காலம், மக்கள் நலனுக்கு பொற்காலம், என்றும் மக்களால் மறக்கமுடியாத பொற்காலம் எனலாம். வாழ்க
மாவீரன் ராஜேந்திரன் புகழ்!
No comments:
Post a Comment