Friday, December 30, 2016

காத்திருப்பு...

உதடுகளை அறுத்தெறிந்தேன்
முத்தங்கள் என்னை
தொந்தரவு செய்யாதிருக்கட்டும்
பிரியமான முத்தத்தில்
தளர்ந்து போகும் ஆன்மாவை
கொன்று போடுவது
அத்தனை சுலபமில்லை.
வெட்டியும் அறுத்தும் கடித்தும்
முத்தத்திற்கான எல்லா வழிகளையும்
அடைக்கிறேன்
இரத்தம் கசிய
சதைகள் தொங்க
வேட்கை ஒய்கிறது.
எனக்கு காதலும் காமமும்
காத்திருப்பும் வேண்டாம்
சண்டைகள் அற்று
ஓய்ந்த போதுகளில்
குற்றச்சாட்டுக்கள் தளர
முத்தமிட எத்தனிப்பாய்
உதடுகளே அற்ற அந்த முகம்
உன்னிடம்
விழுப்புண்களை உண்டாக்குகிறது
உன் வாழ்வில்
கொடும் சித்திரமாய்
உதடுகளற்ற அந்த ஓவியம்
துரோகத்தை சகிக்காது
முடியைத் துறந்து
வெஞ்சினம் தணித்தாள் ஃபிரீடா
தன்னையே அழித்து
பழிதீர்த்துக் கொண்டவள் சில்வியா
காதலுக்காக காதை இழந்தான்
பிரிய வான்கோ
நீ உணர்வாயா இவர்களின் தனிமை
என்னிடத்திலும் இருப்பதை?
வெறிகொண்ட ஆன்மா
இன்பத்தைத் தூண்டும்
எல்லா உறுப்புக்களையும்
அறுத்தெறிய முனைகிறது

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...