மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம்.
அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக
திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று 'அத்ரிமலை' எனும் மூலிகை மலை. இதைத்தான், 'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்'
என பாடினர். 'இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள்
விலகியோடும்,' என்பது நம்பிக்கை.
இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம்,
மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத
காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இயற்கை அன்னையையும் காக்கும் 'சித்து விளையாட்டு' சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம்,
என்பது அனுபவத்தால் வெளிப்பட்ட வார்த்தைகள்.
இம்மலைக்கு செல்வதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். கடனா அணை,
முண்டந்துறை வன காப்பகம் என எண்ணற்ற ஸ்தலங்களை
உள்ளடக்கியது. பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி
வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல்,
நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என
நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை (85 அடி உயரம்) அடைய வேண்டும் (மினி பஸ் வசதி உள்ளது).
அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீ., துாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள
வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது
சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம். இப்படி... ஒவ்வொரு பகுதியாக கடந்து
சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம்' (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.
கோரக்க சித்தருக்காக... அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது.
இங்கு,
அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு,
'சித்தர்கள் தியானம் செய்த
இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி,
உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது'
என்பது நிதர்சனம்.
இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரிமலையின் அற்புதங்களை,
ஒருமுறையேனும் சென்று பாருங்களேன்!
தொடர்புக்கு, 'அவசியம்' ராமுஜி, 98421 89158.
No comments:
Post a Comment