அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கினும் செய்யுள்
வழக்கினும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பகுத்துப் பேசுவது அகத்திணை மரபு.
அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வரையறைப்படுத்திப் பேசப்பெறும். அதனை,
”முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங்காலை” (தொல். பொருள்
இளம் நூ.3)
என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து
காட்டுவர். இவை
செய்யுளில் பயின்று வருதலால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடையது. அகப்பொருள் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
அகத்திணைப் பாகுபாடு:
அகத்திணையைத் தொல்காப்பியம் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்று ஏழு திணைகளாகப்
பகுத்துள்ளது.
ஐந்திணைப் பாகுபாடு:
குறிஞ்சி முதலான ஐந்தும் ஒத்த காமத்
தன்மையால் ஒன்றாயினும், ஒழுக்க
வகையால் தனிநிலை குறிப்பிப்பதற்காக ”ஐந்திணை” என்று எண்ணுப்பெயர் பெற்றன. ஐவகை ஒழுக்கங்களை தொல்காப்பியர்,
”புணர்தல்புரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றவை
தேறுங்கலைத் திணைக்குரிப் பொருளே” (தொல். பொருள்
இளம் நூ.16)
என்று குறிப்பிடுவர். இவ்வாறு ஒழுக்கங்கள் ஐந்து வகையாகப்
பிரித்து பேசப் பெறுவதால் இவற்றை ”ஐந்திணை நெறி” என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு.
இந்த ஐந்து ஒழுக்கங்களும் எல்லா நிலத்து மக்களிடமும் நிகழும்
பொதுவான நிகழ்ச்சிகளே எனினும், மலை நாட்டில் புணர்தல்
நிகழ்வதாகக் கூறுவது மரபு. பாலை நிலத்தில் பிரிதல்
நிகழ்வதாகவும், மருத நிலத்தில் ஊடல் நிகழ்வதாகவும்,
நெய்தல் நிலத்தில் இரங்கல் நிகழ்வதாகவும் இலக்கணம் வகுக்கப்
பெற்றுள்ளது.
1. முதற்பொருள்
1. முதற் பொருள் குறித்து,
”முதல் எனப்படுவது நிலம் பொழுது
இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” (பொ.3)
என்ற தொல்காப்பியர் நிலம், காலம், இரண்டையும்
குறிப்பிடுகின்றார். ஒரு செயல் செவ்வனே நடைபெற இடமும்
காலமும் இன்றியமையாதவை.
நிலம்:
மூலற்பொருளின் ஒரு பகுதியாகிய நிலத்தினை
நான்கு பகுதியாகப் பகுத்துக் கூறுவார் தொல்காப்பியர். பாலை இயற்கை மாறுபட்டால் பருவ மழை
பெய்யாது வளங்குன்றிய காலத்தில், மல்லை நிலமும் குறிஞ்சி
நிலமும் தம் இயல்பை இழந்து புதியதொரு தன்மையைப் பெறும். இத்தன்மையுடைய
நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று அழைத்தனர்.
”முல்லைபும் குறிஞ்சியும் முறைமையின்
திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்தப்
பாலை என்பதோர் வடிவங் கொள்ளும்” (சிலப். காடுகாண்.
64 – 66)
என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் இது நன்கு
விளங்கும்.
அ. குறிஞ்சி:
மலையும் மலை சார்ந்த இடமும்
புணர்ச்சிக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
குறிஞ்சி இயற்கை வளம் நிறைந்து காணப்படும். கூதிர் காலம் என்ற பெரும் பொழுதையும் யாமம் என்ற சிறு பொழுதையும்
புணர்ச்சிக்குரிய காலமாகக் கூறுவர். குறிஞ்சி நிலத்தில்
வாழும் மக்கள் குறவர் ஆவர்.
ஆ. முல்லை:
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கம்
இருத்தல் ஆகும். முல்லை மலர்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படும்.
இந்நிலத்திற்குரிய பெரும் பொழுது கார்காலம்; சிறு பொழுது மாலை நேரமாகும். முல்லை நிலத்தில்
வாழும் மக்கள் ஆயர் ஆவார்.
இ. மருதம்:
வயலும் வயல்சார்ந்த இடம் மருதம் ஆகும். வற்றாத நீரையுடைய ஆறு
கால்வாய்களாகப் பிரிந்து பாயும் நிலத்தை உடையது இப்பகுதி. வைகறை, விடியல் என்ற சிறுபொழுதுகள் இரண்டு,
பெரும் பொழுதுகள் ஆறும் இதற்கு உரியவை எனக் கொள்வர். உழவர், உழத்தியர் இப்பகுதியில் வாழ்பவர்கள்.
ஈ. நெய்தல்:
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். பெரும்பொழுது அனைத்தும் இதற்குண்டு. நுளையர்,
நுளைச்சியர் இப்பகுதியில் வாழ்வார்கள்.
உ. பாலை:
காதலால் கூடிக்கலந்த இருவரது பிரிவு
ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணை ஆகும்.
பெரும்பொழுது இளவேனில், முதுவேனில்,
சிறுபொழுது, நண்பகல், இதற்குப் பின்பனியும் உரித்து எனத் தொல்காப்பியர் கூறுவர்.
2. காலம்:
முதற்பொருளில் இன்னொரு பகுதியாக காலத்தைப்
பெரும் பொழுது என்றும், சிறுபொழுது
என்றும் பகுத்துப் பேசுவர். பெரும்பொழுது என்பது கார்,
கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
என்பனவாகும். சிறுபொழுது என்பது வைகறை, விடியல், ஏற்பாடு, நண்பகல்,
மாலை, யாமம் என்று குறிப்பிடுவர்.
2. கருப்பொருள்:
முதற் பொருளிலிருந்து தோன்றுவது கருப்பொருள். அது இடத்திலும் காலத்திலும்
தோன்றும். அது தெய்வம், உணவு,
விலங்குகள், பறவைகள், தொழில், பண், நீர்,
பூ போன்றவை.
இதற்குத் தொல்காப்பியர்
”தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப” (பொருள் 20)
என்று வரையறுத்துக் காட்டுவர்.
3. உரிப்பொருள்:
உரிப்பொருளாவது மக்கட்கு உரியப்பொருள். உரிப்பொருள் மக்கள் வாழ்வையொட்டி
இருக்கும். அவர்கள் வாழ்க்கை நெறியே ஒழுக்கமே உரிப்
பொருளாகும். உரிப்பொருளைத் தொல்காப்பியர் ஐந்து
பகுதியாகப் பிரித்துக் காட்டுவர். ஒரு நாடகத்தை பற்றி
பேசும் போது இன்ன இடம் என்றும், இன்னகாலம் என்றும்,
இன்ன பாத்திரங்கள் என்றும், ஒவ்வொரு
காட்சிக்கும் குறிப்பிடுவர். அவ்வாறே, அகப்பொருள் நிகழ்ச்சிகட்கு இந்த முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் உறுப்புகளாக அமைகின்றன. ஒவ்வொரு
திணைக்கும் தனித்தனியே இவை அமைதல் வேண்டும் என்றும் வரையறை செய்து காட்டுவார்
தொல்காப்பியர். உயிர்ப்பொருள்தான் இவற்றின் உயிர் நாடியாக
இருப்பதாகும். காதல், நாடகத்தின்
இயக்கம் இதுவே என்றும் கூறலாம்.
உரிப்பொருளாகிய காதல் நிகழ்ச்சியை இன்ன
காலத்தில் இன்ன பொருள்களைச் சூழ்நிலையாக அமைத்துக் கவிஞர்கள் கவிதையை ஆக்கும் போது
இந்த மூவகைப் பொருள்களும் அதில் காட்சி அளிக்கின்றன.
நிறைவுரை:
தமிழ் அகத்திணை கூறுகின்ற பல்வேறு காதற்
கூறுகள் தமிழகத்தின் நிலக்கூறுகளின் அடிப்படையில் எழுந்தவையாகும். குறிஞ்சி முதலான ஐந்திணைகளும் ஒத்த
தன்மையால் ஒன்றாயினும், ஒழுக்க வகையால் தனிநிலை
குறிப்பதற்காக அன்பின் ஐந்திணை எனப் பெயர் பெற்றுள்ளன. புணர்தல்,
பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய ஒழுக்கங்கள் நிலத்தின்
பெயரைச் சார்ந்து அமைந்துள்ளன என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற உரையில் அதன் வைப்பு முறை அமைந்திருப்பது, பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டும் கருவூலமாகத்
தொல்காப்பியம் அமைகின்றது.
No comments:
Post a Comment