ஆழ்ந்த சட்ட அறிவு. இலக்கிய புலமை. இவரது தங்குதடையற்ற மேடை பேச்சில்,
மடை திறந்த வெள்ளம்போல் தமிழ் துள்ளி விளையாடும். இவரது
தீர்ப்புகளில் இலக்கிய மேற்கோள்கள் அதிகமிருக்கும். இது இவரது ஆழ்ந்த வாசிப்பின்
வெளிப்பாடு. 'நீர்நிலைகளில், எவ்வித கட்டுமான திட்டங்களுக்கும் அரசு அனுமதி அளிக்கக்
கூடாது,'
என்பன உட்பட பல்வேறு முத்திரை பதிக்கும் தீர்ப்புகளை
அளித்தவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்.
சட்டம், இலக்கியம், சமூக நிலை, விவசாயம் பற்றிய தனது பன்முக பார்வையை 'தினமலர்' பொங்கல்மலருக்காக அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
இலக்கிய ஆர்வம் வந்தது எப்படி?
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில்,
1974--75ல் புதுமுக
வகுப்பில் சேர்ந்ததிலிருந்து பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். இலக்கிய வாதிகள்,
பேராசிரியர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பேராசிரியர்
ஜெகந்நாச்சாரியார் ஒரு தமிழ் கடல். அவரது தொடர்பால், இலக்கிய ஆர்வம் வளர்ந்தது.
உங்களை கவர்ந்த இலக்கியப் படைப்புகள்?
திருக்குறள், கம்பராமாயாணத்தைத் தாண்டிய இலக்கியத்தை என்னால் பார்க்க
முடியவில்லை. வாழ்வியலுக்கு சித்தர்களின் பாடல்கள், ஒழுக்கமான தமிழுக்கு சைவ, வைணவ இலக்கியங்கள், நவீன தமிழுக்கு பாரதியாரின் படைப்புகள் என்னை கவர்ந்தவை.
பாரதிக்குப் பின் கண்ணதாசன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் என்னை கவர்ந்தவர்கள்.
இலக்கிய வாசிப்பு, நீதிபரிபாலனத்திற்கு உதவும் வகையில் உள்ளதா?
சில தீர்ப்புகளில் இலக்கியங்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு
தீர்ப்பில் திருமூலரின் திருமந்திரம், 2 தீர்ப்புகளில் கம்பராமாயண பாடல்கள்,
ஒரு தீர்ப்பில் வள்ளலாரின் பாடல்கள்,
மற்றொரு தீர்ப்பில் அதிவீரராம பாண்டியனின் பாடலை மேற்கோள்
காட்டியிருக்கிறேன். கடினமான செய்தியை எளிமையாகச் சொல்ல,
இலக்கிய வாசிப்பு பயன்படுகிறது.
பழைய தலைமுறை, இளைய தலைமுறை பற்றிய உங்களின் ஒப்பீடு?
நான் இளைஞனாக இருந்த காலத்தில், எதையும் நின்று, நிதானித்து, பார்த்து, கேட்டு, படித்து, ரசித்து, அனுபவிப்பதற்கு நேரமிருந்தது. இன்றைய தலைமுறைக்கு வெறும்
இயந்திரகதியான வாழ்க்கை. அதனால், அவர்களின் ரசிப்புத் தன்மை குறைந்துவிட்டதாக அஞ்சுகிறேன்.
50 ஆண்டுகளுக்கு முன் படிப்பு குறைவாகவும்,
அறிவு, அனுபவம் அதிகமாகவும் இருந்த தலைமுறையை கண்டேன். தற்போது
பட்டங்கள் அதிகமாக, நுண்ணறிவு குறைவாக இருக்கிற தலைமுறையை பார்க்கிறோம். ஆனால்,
அடிப்படையில் மனிதநேயமிக்க தலைமுறையாக இளைய தலைமுறை
வளர்ந்திருக்கிறது என்பதை, இயற்கை இடர்பாடு நேரும் போது பார்க்கிறேன்.
சமீப வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில், இளைய தலைமுறை செய்த தன்னலமற்ற தொண்டு பிரமிக்கத்தக்கது.
எனது தலைமுறையில் ஆற்றில் தண்ணீரை பார்த்தேன். தற்போது அங்கு லாரிகளைத்தான்
பார்க்க முடிகிறது. இளைய தலைமுறைக்கு, இயற்கையோடு இணைந்த வாழ்வை நாம் கொடுக்கவில்லை. அது அவர்களது
தவறில்லை. நமது தவறு.
உலகம் பசியாற உணவளிக்கும் விவசாயிகள், இன்று பன்முனை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
விவசாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதே?
விவசாயம், இயற்கையை நம்பியதைவிட, செயற்கையான ரசாயனத்தை நம்பியதாக போய்விட்டது. விளைபொருட்கள்,
ஆரோக்கியத்தை குறைப்பதாக உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி பெருக்கம் என்ற பெயரில், விளைநில அளவுகளை அதிகமாக பாழ்படுத்தியதன்
விளைவுகளை பார்க்கிறோம். ஆனால், ஆங்காங்கு இயற்கை வேளாண்மையை நோக்கி கொஞ்சம்,
கொஞ்சமாக சிலராவது மாறிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தண்ணீர் சேமிப்பு என்கிற நோக்கில், மின்சாரத்திற்காக தேக்கப்பட்ட பின்,
விளை நிலத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு
குறைந்துவிட்டது. மக்கள் தொகை பெருக்கம், லாப நோக்கத்தால் விளைநிலம், குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருப்பது கவலைக்குரிய செய்தி.
சில நாடுகளில் இருப்பதுபோல் 'கூட்டு வேளாண்மை' முயற்சி இங்கு நடக்கவில்லை. கிராமங்களில் நிலத்தில்
பாடுபடுவதைவிட, நகரங்களில் சாதாரண வேலை கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
எந்த தேதியில் இந்தியாவில், பில்லியனர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எல்லையைத்
தாண்டியதோ, அதே நாளில், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை, அதே எண்ணிக்கையைத் தாண்டியது.
வீட்டில் பசு வளர்க்கிறீர்கள்; பசுவின் மீது நேசம் ஏற்பட்டது எப்படி?
விவசாயத்தின் அடையாளமாக, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களோடு தொடர்புடைய இம்மண்ணின் அடையாளமாக
இருக்கும் பண்டிகை பொங்கல். அது இயற்கையோடு சேர்ந்து,
விலங்குகளுக்கும் மரியாதை செலுத்தும் திருநாள்.
சிறு வயதில் எங்கள் மன்னார்குடி கிராமத்தில், வீட்டில் பசுக்கள் இருந்தன. ஒரு பசுவை விற்றபோது,
வீட்டைவிட்டுச் செல்ல அடம் பிடித்தது. அதன் நினைவாக இன்றும்,
வீட்டில் பசு வளர்க்கிறோம். 2015 பொங்கலன்று பசு, கன்று ஈன்றது. அதற்கு 'பூரணி' என பெயர்
சூட்டியுள்ளோம். இவ்வாறு மனந்திறந்தார்.
பாரதி
No comments:
Post a Comment