"
காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே "
பிறக்கும்பொழுது கொண்டுவருவதில்லை பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்வேன்கச்சி ஏகம்பனே.
-
பட்டினத்தார்
இந்த மண் மீது பிறந்து வரும்போது நாம் எதுவும் கொண்டு
வருவதில்லை அதே போல இறந்து போகும்போதும் எடுத்து போவதில்லை இடையில் வரும் செல்வத்தை
சிவன் தந்ததென்று பிறருக்கு கொடுத்து உதவாமல் நமதென்று இருந்து கடைசியில் எந்த
பயனும் இல்லாமல் இறந்து போகிறவர்களுக்கு
நான் என்ன சொல்லமுடியும் .பிறப்பதும் நிர்வாணம் இறப்பதும் நிர்வாணம் , உடலெடுத்து வந்த நாம் அந்த உடலையும் எடுத்துப் போக முடியாது
.நிலையான சிவ பதத்தைத் தேடுவோம் நம்மால் இயன்ற வரை உதவி செய்வோம் .
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத் தழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!
- பட்டினத்தார்
நாம் வாழ்ந்த வாழ்க்கையும் தேடிய செல்வமும் வீட்டோடு
இருந்து விடும் நம் சுக துக்கத்தில் பங்கு
கொண்ட மனைவியும் வீதியோடு நின்று விடுவாள் . நாம் பெற்ற மைந்தரும் தலையிலடித்து
அழுது கொண்டு சுடுகாட்டுக்கு வந்து ஈமக்கடனை முடிக்கும் வரைதான் , முடிவில் நம்முடன் வருவார் யார் ? நாமும் யாருடனும் செல்ல முடியாது நம்முடன் யாரையும்
அழைத்துச் செல்லவும் முடியாது , நாம் செய்த
நன்மை தீமை என்ற இருவினையும் தாம் நம்மைத் தொடர்ந்து வரும் அதனால் புண்ணியம்
இல்லாவிட்டாலும் பாவம் செய்யாமலிருப்போம் .
இதையே பாம்பாட்டி சித்தரும் தன்னுடைய
பாக்களில் ......
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.
என்று மிக தெளிவாக கூறியுள்ளார் .
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டது பட்டு
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.
-
பட்டினத்தார்
உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் உயிர் பிரிந்த உடனே
நம் உடலை சுட்டுவிடப்போகின்றனர் நமது உறவினர்கள் .பட்டதெல்லாம் போதும் எந்நேரமும் சிவசிந்தனையிலே இருங்கள் சிவத்தை
போற்றுங்கள் அதுதான் சுகம் , நிலையானது
நம்மை வழி நடத்தி செல்லக் கூடியது .
இதே கருத்தை ஒத்து பாம்பாட்டியாரும்
நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே.
- பாம்பாட்டிசித்தர்
நீர்மேல் எழும் நீர்க்குமிழி நிலையில்லாமல் நொடிப்பொழுதில்
தோன்றி மறைந்து விடும் . அதே போல இந்த உடலும் ஓர் நாள் மறைந்து விடும் . இந்த
உண்மையை மனதில் கொண்டு அனைத்து உயிர்களையும் படைத்தவன் எம்பெருமான் சிவன் பதத்தை
நிலையாக பற்றிக்கொள்ள வேண்டும் .
கடுவெளி சித்தர் இந்த உடலை பற்றி ஒரு புதிர் போடுகிறார் பாருங்கள்
நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
- கடுவெளி சித்தர்
இந்த பாடல் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு பாடல் . இது
சாதாரண ஆண்டி ,குயவன் ,தோண்டி
கதையல்ல .நம் உடலை பற்றிய அழகான சிந்தனை .
பிறவிகளிலேயே மிகவும் உன்னதமான பிறவி இந்த மானிடபிறவி .இதை சரியாக பயன்படுத்தி
கடைத்தேற வழியைத் தேடாமல் உலக இன்பங்களில் சுழன்று மாயையின் பிடியில் சிக்கி இந்த
பாடலிலே வரும் ஆண்டியைப் போல தனக்கு தோண்டி கிடைத்து விட்ட சந்தோசத்தில் தோண்டியை
தலை மீது வைத்து ஆடி கடைசியில் அதை உடைத்தே விட்டான் . ஆண்டி எனும் இந்த ஆத்மா
கடவுள் எனும் குயவனிடம் வேண்டி விரும்பி ,அவன் தர மறுத்த போதும் பத்து மாதங்கள் காத்திருந்து இந்த உடலெனும் தோண்டியை
கொண்டு வருகிறது . தனக்கு தோண்டி (உடல்) கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கடவுளை
மறந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடிவில் அழிந்து போகிறது.
இந்தச் சடலம் பெரிதென - எண்ணியான்
இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே.
-
சங்கிலி சித்தர்
சங்கிலி சித்தரின்
இந்த பாடலுக்கு விளக்கமே தேவை இல்லை விளக்கமே பாடலாக இருக்கிறது .
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !
- பட்டினத்தார்
தெய்வம் ஒன்றுதான் உன் தெய்வம் என் தெய்வம் என்று தனியாக
இல்லை இறைவன் சிவமே ஏகனாகவும் அநேகனாகவும்
இருக்கிறார். இதையே மனிவாசகபெருமான் "ஏகன் அநேகன்" என்று தன்னுடைய
திருவாசகத்திலே குறிப்பிடுகிறார் . நிலையில்லாத செல்வத்தை நம்பாமல் நிலையான
செல்வமாகிய சிவனடியை போற்றுங்கள் .
பிற உயிர்களை அன்பு செய்யுங்கள் பசித்தவர்களுக்கு அன்னம்
கொடுங்கள் அதுவே நல்ல அறம் . சத்குருவான சிவத்தை மட்டுமே நம்புங்கள் அவர் பாதத்தை
மட்டுமே நம்பி இருங்கள் .இந்த உடலும் நம்முடன் இருக்கும் சொந்தம் அனைத்துமே
அடர்ந்த சந்தைக்கூட்டம் . சந்தை கூடும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அந்த சந்தை
முடிந்தவுடன் கூட்டம் கலைந்து விடுகிறது அதே போல மண்ணுக்குள் புதைத்த உடலானது
கலைந்து உருக்குலைந்து விடுகின்றது அது போல நமது சுற்றமும் அவர்கள் வேலை
முடிந்தவுடன் கலைந்து சென்று விடுவார்கள். மனமே இதுதான் உனக்கு உபதேசம் என்று அவர்
மனத்திடம் சொல்வதுபோல நமக்கும் சொல்கிறார் .
நீற்றைப் புனைந்தென்ன?
நீராடப் போயென்ன? நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !
- பட்டினத்தார்
திருநீற்றை தவறாது அணிந்தாலும் புனித நீராடினாலும் மனமே
மாற்றிபிறக்கும் வழிதெரியாமல் என்ன பயன் அனைத்து நூல்களை கற்றாலும் மந்திரங்கள் பல
கற்றாலும் என்ன பயன் உண்மையான பக்தி இல்லாவிட்டால் ஆற்றில் இருந்தும் கரை
அருகிலேயே இருந்தும் கரையறியாமல் தேடி அலைகின்றாயே என்று வருந்துகிறார் .
பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்தும் ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?
- பட்டினத்தார்
மனமே , உன்னால் பொய்
கூறுவதை நிறுத்த முடியவில்லை , மாமிசம்
சாப்பிடுவதை நிறுத்த மாட்டாய் ,கோபத்தை
தவிர்க்கவும் தெரியவில்லை ,
பிறர்க்குபகாரம் , தர்மம் ,
நல்லவைகளை செய்யவும் மாட்டாய் , சிவபெருமானையும் நினைக்க மாட்டாய் அவரின் ஐந்தெழுத்து
மந்திரத்தையும் உச்சரிக்க மாட்டாய் இதனால் உனக்கென்ன பெருமை கிடைத்து விடும் என
தனது மனதிடம் கேட்கிறார் .
சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் இருந்து சில பாடல்கள் .......
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சிலஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.
நமசிவாய என்ற நாமத்தை எந்நேரமும் மனதில் தியானித்து
நம்முள்ளே இருக்க வைத்தால் மாயை எனபடுவது அஞ்சி ஓடும் , நன்மைகள் பல கிட்டும் ஆகவே உண்மையான அந்த மந்திரத்தை நீ
மனதிற்குள் எப்போதும் தியானித்து கொண்டிருப்பாய் .
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.
ஒரு கல்லை நட்டுவைத்து அக்கல்லுக்கு பூமாலை போட்டு அதற்கு
தெய்வமென்று பெயரிட்டு அதை சுற்றி வந்து முணமுணவென்று மந்திரங்கள் என்கிற பெயரில்
எதோ சொல்லுகிறீர் .நீர் செய்வது எப்படி இருக்கிறதென்றால் ,சமையல் செய்யும் பாத்திரம் உணவின் சுவையை அறிவது போல்
இருக்கிறது . எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அந்த பாத்திரத்துக்கு சுவை தெரிவது
இல்லை அதே போல எவ்வளவு பூக்கள் போட்டாலும் மந்திரங்கள் எத்துனை ஓதினாலும் அதற்கு
பயனில்லை. சிவம் என்பது தனியாக வெளியில் இல்லை சிவம் நம்மில் கலந்து இருக்கிறது
அதை உணராமல் வெளியிலேயே தேடிகொண்டிருக்கின்றீரே , நீர் நட்டு வைத்த கல்லானது உம்மிடம் பேசுமோ என நம்மை சாடுகிறார்.
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
மனிதர்களே, நீங்கள்
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பெரிய கதவுகள் வைத்து அரண்மனை போல பெரிய வீடுகட்டி
பலகாலம் அவ்வீட்டிலே இன்பமாக இருப்போம் என நீர் மகிழும் தருணத்திலே உம் வாழ்க்கை
முடிந்து விட்டால் என்ன செய்வீர் ஒன்றும் செய்ய முடியாது அவ்வீட்டை விட்டு சென்று
தான் ஆக வேண்டும் ,
நிலையில்லாத மாயையில் இருந்து விடு பட்டு ஆலம் என்னும்
கொடிய விஷத்தை உண்ட திருநீலகண்டராகிய அம்மையப்பன் எனும் சிவபதத்தை நாடு அது தான்
உனக்கு நிலையான வீடு பேறு அளிக்கும் .
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே.
ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக கூடி கோவிலுக்கென்று விழா
எடுத்து ,
தேரிலே வடம் என்று சொல்லக்கூடிய கயிறை அனைவரும் கூடி
பிடித்து அத்தேரிலே கடவுள் என்று சொல்லி செப்புச் சிலை ஒன்றை வைத்து
இழுக்கிறீர்களே ,
திருமால் பிரமன் இன்னும் யாரினாலுமே அறியமுடியாத ஆதி சித்த
நாதர் எம்பெருமான் சிவம் அவரை வைத்து இந்த மனிதர் பன்னும் புரளியை பார்த்தால்
எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள் .
இங்கு தரப்பட்ட விளக்கங்களில் ஏதேனும் தவறு இருந்தால் இந்த
சிறியேனை மன்னித்து விடுங்கள் .
சிவத்தை போற்றுங்கள் !! சித்தர்களைபோற்றுங்கள்!!
No comments:
Post a Comment