திரைப்படத்திற்குப் பாடல் எழுதவேண்டும் என்ற விருப்பம் கவிதையெழுதப்
பிள்ளையார் சுழியிட்ட எவருக்கும் இயல்பாக எழும் உணர்ச்சிதான். இங்கே பலருடைய
கவிதைக் கூருணர்வுகள் முதலில் விழித்து எழுவதே திரைப்படப்பாடல்கள் வழியாகத்தான்
என்பது நம்முடைய சமூக எதார்த்தம். அந்த உணர்ச்சி மேலீட்டால் திரைப்படத் தயாரிப்பு
உலகுக்குள் நுழைந்து வெல்லவேண்டும் என்று தத்தம் முயற்சியைத் துவங்கியவர்களே
அநேகர்.
‘நான் கண்மாய்க்கரையில் அமர்ந்திருக்க, ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு என்னும் பாட்டொலி எங்கிருந்தோ
காற்றில் மிதந்து வரும். அதைக் கேட்டுவிட்ட பிறகு ஒரு நிமிடம் கூட என்னால் என்
ஊரில் இருக்கமுடியவில்லை. திரைத்துறையை நோக்கி ஓடி வந்தேன்’என்று இயக்குநர் சீமான் பேசியதை ஒருமுறை கேட்டிருக்கிறேன்.
பாட்டெழுதுவது என்னும் முயற்சியை முன்னிட்டு இங்கே வந்து அலைந்தவர்கள் பிறகு
திரைத்துறையின் வெவ்வேறு துறைகளுக்குள்ளும் நுழைந்து வேறு வேறு ஆளாகிவிடுகின்றனர்.
அண்மையில் சிறந்த குணச்சித்திர நடிகருக்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி
ராமைய்யா பாடல் எழுதுவதற்காக வந்தவர்தான். நஞ்சுபுரம் பாடல் வெளியீட்டு விழாவில்
நான் சந்தித்துப் பேசிய நடிகர் அமரசிகாமணி தாமும் ஒரு கவிஞர்தாம் என்றார். கவிஞர்
என்று சொல்லிக்கொள்வதே தமக்கு உண்மையான பெருமை என்றார். இங்குள்ள எத்தனையோ பட
முதலாளிகள் முதல் விளக்குத் தொழிலாளிகள் வரை, பாடல் எழுதுவதற்காகவே தம் பயணத்தை மேற்கொண்டு பிறகு தடம் மாறித் தம்
ஜீவனத்தைத் திரையுலகின் ஏதோ ஒரு துறையில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓர் இயக்குநராவது என்று திரையுலகுக்குள் திரிந்து பிறகு ‘இந்த இருக்கை கொஞ்சம் காலியாக இருக்கும் போலுள்ளதே’ என்று பாடல் எழுதத் துவங்கியவர்களே தற்காலத்திய
பாடலாசிரியர்கள். அந்த இயக்குநர் புத்திதான் தமிழைப் பலிபோட்டு ஹிட்டுக்காக எந்த
எல்லைக்கும் வெட்கமின்றி இறங்கக்கூடிய மனத்தை அவர்களுக்குத் தந்துவிட்டிருக்கிறது.
அவர்களால் அதிகபட்சம் காட்சிரூபமான ஒரு வரியை உருவாக்க முடிகிறதேயன்றி மொழிச்சாதனை
நிகழ்த்தப்பட்ட சிந்தனைப் பாய்ச்சலுள்ள புத்தெழிலான ஒருவரியைத் தவறியும்கூட இயற்ற
முடிவதில்லை. மேலும்,
இவர்களுக்குப் பாடல் எழுதுவதெல்லாம் ஒரு சப்பை மேட்டர். தம்
கூடாநட்புகள் மற்றும் கூழைக்கும்பிடுகள் வழியாக ஹீரோவாகிப் பவுடர் போட்டுக்கொண்டு
நாயகியின் கூந்தல் மணத்தை முகர்ந்தபடி சுவரொட்டிகளில் காட்சிப்படவே
துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னைக் கவிஞன் என்று பொதுத்தளத்தில்
அறிவித்துக்கொள்பவன்,
தன் சொல்லும் செயலும் நடத்தையும் வாய்கூறும் ஒற்றைக்
கருத்தும் நிகரற்ற பண்புடைமையோடும் வழிகாட்டும் பாங்கோடும் இருக்கவேண்டும்
என்பதைக் கைக்கொள்ளவேண்டாவா ? இல்லை, இவற்றை எதிர்பார்க்கும் நாம்தாம் ஏமாளிகளா ?
திரையுலகைப் புரட்டிப் போட்ட வெற்றிகள் எத்தனையோ அதன் வரலாற்றுப் பக்கங்களில்
காணப்படுகின்றன. எங்கிருந்தோ வந்து இணையில்லாத சாதனையை நிகழ்த்திவிட்டு இன்று அதன்
சுவடுகூடத் தெரியாமல் ஒதுங்கியிருப்பவர்கள் ஓராயிரத்திற்கும் மேலிருக்கக் கூடும்.
இவர்களில் பலரும் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களாக அதன்
கலாபூர்வமான பங்களிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு சாதித்தவர்களாக இருப்பர்.
ஆனால்,
அதன் வர்த்தகக் கோட்டைக்குள் தனிப்பெரும் ஆற்றலுடன்
நுழைந்து அதுவரை இருந்த ஜாம்பவான்களை விழிவிரியப் பார்க்க வைத்தவர்கள் மிகச்
சிலரே.
எந்த வாணிகமானாலும் சரி, அது வரலாற்று
அறிவோடும் அனுபவத் தீர்க்கத்தோடும் உரிய பக்கபலத்தோடும் முயன்றால் மட்டுமே
வெற்றியாகக் கனியக்கூடியது. வர்த்தக முன்னோடிகளுக்கு இணையான வெற்றியைப் புதிதாக
நுழைந்தவர்கள் பெற்றுவிடுவது என்பது திரைத்துறையைப் பொறுத்தவரையில் இன்னும்
கடினமானது. புதியவர்கள் அத்தகையவொரு உடைப்பை நிகழ்த்திவிட்டால் அதுவரை
கோலோச்சியிருந்தவர்கள் செல்லுபடியாகாமல் ஒதுங்கவேண்டியிருக்கும் என்பதால்
மூத்தவர்கள் அவர்களை ஊக்குவதில், ஏற்றிவிடுவதில்
ஆர்வம் காட்டமாட்டார்கள். இன்றும் அந்நிலையில் எவ்வொரு மாற்றமுமில்லை. அப்படிப்பட்ட
சூழல் நிலவிய காலத்தில்,
திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையைப் பயின்று, ஒரு திரைப்படத்தை நண்பர்களோடு இணைந்து உருவாக்கி அதற்காக
வருடக்கணக்கில் தணிக்கைப் பிரச்சனைகளோடு போராடி, பிறகு ஒருவழியாகப் படத்தை வெளியிட்டு பெரிய வெற்றியை ஈட்டிக்காட்டியவர்
ஆபாவாணன். அந்தப் படம் ஊமை விழிகள்.
கொங்கு நாட்டு மாவட்டமான ஈரோட்டை அடுத்த குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்
ஆபாவாணன். ஆறுமுகம்,
பாவாயி என்கிற அவர்தம் பெற்றோரின் முதலிரண்டு எழுத்துகளைச்
சேர்த்துத் தம் பெயரை அமைத்துக்கொண்டவர். இது ஆபாவாணன் தம் பெயர்க்காரணமாகக்
கூறியது. தமிழ் வழக்குப்படி தந்தை பெயரை முதலாகக் கொள்வதில்லையே, தாய் பெயரைத் தானே முதலாகக் கொள்ளவேண்டும் (‘நாரதரே... அம்மையப்பன் என்றுதானே சொல்கிறோம் ! அப்பன் அம்மை
என்றா சொல்கிறோம் ?)
என்று யாராவது கேட்டால் அதற்கும் என்னிடம் ஒரு
விளக்கமுண்டு. ஆ என்றால் பசு. பா என்றால் பாடல். பசுவின் பாடல் என்ன ? அம்மா என்பதே பசுவின் பாடல். ஆபாவாணன் என்றால் அம்மாவின்
அன்பன் என்றே பொருள் கொள்ளலாம். அவரின் பெயர்ப்புனைவே இனிய தமிழ்
விளையாட்டுதான்.
ஏற்கனவே ராஜராஜசோழன் போன்ற சினிமாஸ்கோப் படங்கள் வந்திருந்தாலும் ஊமைவிழிகள்
என்னும் அவரின் சினிமாஸ்கோப் படமே தமிழ்த்திரையின் சதுரச் சட்டகத்தைச் செவ்வகச்
சட்டகமாக்கியது. இந்த மாற்றம் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றுவிடக்கூடிய சாதாரண
மாற்றமன்று. தமிழ்த் திரை வரலாற்றை ஊமை விழிகளுக்கு முன், ஊமை விழிகளுக்குப் பின் எனப் பகுப்பதே மிகப் பொருத்தமாக
இருக்கும்.
நம் படுகிடையான இரட்டைக் கண்களுக்கு உண்மையான பிரம்மாண்டமான அகன்ற காட்சிகள்
காணக் கிடைத்தது ஆபாவாணனால்தான். வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட
சினிமாஸ்கோப் காட்சிகள் பார்ப்போரைச் சிலிர்ப்பூட்டின. சினிமாஸ்கோப்பில் வெளியான
அகல்திரைக் காட்சிகள் பார்வையாளனைத் தம் நிகழ்த்துவெளிக்குள் உறிஞ்சி இழுத்து
நிறுத்தி அதீத அனுபவத்தைத் தரும் புதிய திரை வகைமையைத் தோற்றுவித்தன. அந்தக்
காலங்களில் ‘திருட்டு வீடியோ கேசட்’ என்ற துன்பத்தில் உழன்ற திரைத்துறையை அகல்திரைப்படங்களே மீட்டன. சதுரக்
காட்சித்திரையுள்ள தொலைக்காட்சிப் பெட்டி இயல்பாகவே மற்ற திரைப்படங்களைக்
காட்டியதுபோல் அகல்திரைப் படங்களைக் காட்ட முடியாமல் பாதித்திரையளவுக்கே காட்டி
நின்றது. அது மக்களைக் கவரவில்லையாதலால் மீண்டும் திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.
1985-இல் வெளியான ஊமை விழிகளைக் கண்டதும் உடனே திரையுலகம் சினிமாஸ்கோப் என்னும்
அகல்திரைத் தொழில்நுட்பத்திற்குப் பாய்ந்து மாறிவிடவில்லை. ஏனென்றால், அதுவரை சதுரச் சட்டகத்துக்குள்ளாக சிந்தித்துக்கொண்டிருந்த
சீனியர் இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் செவ்வகச் சட்டகத்துக்குக்
காட்சியமைக்கும் தகுதியும் நாட்டமும் கொஞ்சமும் இல்லாதவர்களே. அவர்களால்
சினிமாஸ்கோப்பில் சிந்திக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. சினிமாஸ்கோப்
வருகையால்தான் பாக்யராஜ் என்னும் துலக்கமான திரைக்கதைக் கலைஞர் தம் சந்தை
மதிப்பிழந்தார் என்பது என் அசைக்க முடியாத கணிப்பு. மௌன ராகம், நாயகன், அக்னி
நட்சத்திரம் ஆகியவற்றில் பெற்ற புகழைக் காட்டிலும் ரோஜா, பம்பாய் போன்ற படங்களால் பெற்று, மணிரத்னம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதற்கும்
சினிமாஸ்கோப்பே காரணம்.
ஊமைவிழிகளுக்குப் பின்பும்கூட, முடிந்தவரை பெரிய நிறுவனங்களின் படங்களும் பெரிய நட்சத்திரங்களின் படங்களும்
சதுரச் சட்டகத்திற்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தன. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின்
படங்கள் கூட 1992-இல் வெளியான தர்மதுரை வரை சதுரப்படங்களாகவே வந்தன. தளபதி
என்ற படத்திலிருந்துதான் ரஜினிகாந்தின் தமிழ்ப்படங்கள் அகல்திரைப் படங்களாகின்றன
(அதற்கும் முன்பாக நாட்டுக்கொரு நல்லவன் என்ற பெயரில் மொழிமாற்றமான கன்னடப்படம்
மற்றும் சில இந்திப் படங்கள்).
அதேவேளையில்,
பாலுமகேந்திரா போன்ற மரபான திரைக்கலை மன்னர்கள் சதுரச்
சட்டகத்தின்மீதே அளப்பரிய விருப்பம் கொண்டிருந்தனர். சினிமாவிற்குரிய உச்ச பட்சக்
கலாரூபமான காட்சிச் சட்டகம் என்பது சதுரவடிவச் சட்டகமே, அதில் கருப்பு வெள்ளைக் காட்சிகளே இன்னும் வலிமையானவை – இதுவே பாலுமகேந்திராவின் இலக்கணம். அவர் அகன்ற திரைப்
படங்களே இயல்பாகிப் போன காலத்திலும் ‘ஜூலி கணபதி’
என்ற சதுரப் படத்தை எடுத்தார். பிறகுதான் தம் ஒரே
சினிமாஸ்கோப் படமான ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தை உருவாக்கினார். பாலுமகேந்திராவோடு நான் இது குறித்து
உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ‘நானும் முடிஞ்ச வரைக்கும் இழுத்துப் பார்த்தேன்
மகுடேசுவரன். அப்புறம் நானும் விட்டுவிட வேண்டியாதாப் போச்சு’.
திரைக்கலையில் நகைச்சுவை, சமூகச்
சித்தரிப்பு,
குடும்ப நிகழ்வுகள், என எதையும் வலிமையோடு காட்சிப்படுத்த முடியும் என்றாலும் இன்னும் நெருக்கமான
மிகத் தோதான வகைமை திரில்லர் எனப்படும் மிரட்சிப் படங்களே. அதற்கு அடுத்த இடம்
காதல் வகைமைப் படங்களுக்கு.
ஆபாவாணன் தம் முதல் படத்தை திரில்லர் வகையில் ஆக்கியதே அவரது தெளிவுக்குச்
சான்று. பிறகு தமிழ்த் திரையரங்குகள் எத்தகைய படங்களுக்காக மக்கள் திரளால் நிரம்பி
வழிகிறது என்பதைத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திரையரங்கு
உரிமையாளர்களைச் சந்தித்து ஆய்வு செய்து தெளிவு பெற்றதாகச் சொல்கிறார். அவர்
திரைத்துறையில் நுழைந்த காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் டி. ராஜேந்தரின் படங்கள்
எல்லாப் பிரிவு அரங்குகளிலும் கூட்ட நெரிசலால் திணறுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.
அதைத்தவிர எம்.ஜி.ஆரின் திரைப்பட மறுவெளியீடுகளுக்கு அப்போதும் பெரும் வரவேற்பு
இருந்ததாம். ஆகவே,
தம் பிற்காலத்திய படங்களை ரஜினிகாந்த, டி. ராஜேந்தர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்கள் கொண்டிருந்த உள்ளடக்கங்களோடு உருவாக்கினார்.
அப்படி அவர் செய்த படம்தான் உழவன் மகன். வெற்றி பெறவேண்டும் என்று தம் முனைப்பைச்
செலுத்தியதால் அவர் அதைப் பெறமுடியாத திசையில் பிறழ்ந்து சென்று விட்டார் எனக்
கருத இடமுண்டு.
ஆபாவாணன் வருகையால் நிகழ்ந்த இன்னொரு நிரூபணம் மிக முக்கியமானது. எண்பதுகளில்
ஒருவர் திரைத்துறையில் கர்த்தாவாக விரும்பினால் ஒன்று அவர் திரைப்புள்ளி எவருடைய
நண்பராகவோ உறவாக இருந்தால்தான் நுழையவே முடியும். எத்தனை இலட்சங்களைக்
கொட்டியிறைக்கக் கூடியவராக இருந்தாலும் அத்தொழிலை அடிமுதல் முடிவரை கற்றுத்தர
ஒருவரும் முன்வரமாட்டார்கள். நாடகத்திலிருந்தவர்கள் வந்தாலும் சிலரைத் தவிர
மற்றவர்கள் தெப்புத் தேறி திரைப்படத்துறையோடு தாக்குப் பிடிக்கமுடியாமல்
திணறினார்கள். அப்படியில்லாதவர்கள் திரைத்துறையில் நுழைய ஒரே வழிதான் இருந்தது.
அது காலை முதல் மாலை அந்தத் திரைப்புள்ளியின் வீட்டு வாசலிலோ அலுவலக வாசலிலோ
பரிதாபமாகத் தவங்கிடப்பது. அப்படி மாதக் கணக்கில், ஏன் வருடக் கணக்கில் காத்திருந்தால் மட்டுமே அந்த மகானுபவரின் கருணைப் பார்வை
படும். பிறகு அவர் போனால் போகிறது என்று தம் கடைப்பொடியாளாகச் சேர்த்துக்
கொள்வார். அதற்கும் மேல் ஒருவர் கெட்டிக்காரர் என்றால்தான் தம் குருவின் அத்தனை
கீழ்மைகளோடும் அனுசரித்துப் போய் திரைக்கலை விவகாரங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு எந்த நாகரீகத்திற்கும் உட்பட்டிராத ஒரு குருகுலப் படிப்பாகவே திரையுலக
நுழைவு இருந்தது. திரைப்படக் கலையைக் கற்றுத் தரும் கல்லூரி இருப்பதுவும்
அங்கிருந்து திறமையானவர்கள் உருவாக இயல்வதும் எட்டாக்கனியாக இருந்தது. அந்தச்
சூழலில் திரைக்கலையைப் பயின்று, முயன்று வெல்லவும்
முடியும் என்று ஊர் அதிரும்படி முழங்கி நிறுவியது ஆபாவாணன் குழுவினரின் நுழைவு.
அந்தத் தொடக்கமே இன்று ஊர்தோறும் படப்பயிற்சி நிலையங்கள் முளைத்துப்
பெருகியதற்கும் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டத்தோடு தொலைக்காட்சி உருவாக்கங்களில்
இளையவர்கள் புகுந்து விளையாடுவதற்கும் மூல ஊற்று. திரைத்துறை என்னும் இரும்புக்
கோட்டையைத் தகர்த்து அதன் ஆக்கவினைகள் யாருக்கும் உரியவையே என்று ஆபாவாணன்
நிறுவினார்.
என் ஊர் திரைப்படத்தைத் தவிர்த்து எந்த வெளிப்போக்குக்கும் வழியில்லாத
ஊராகையால் நான் நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவன். நான்
பார்த்தவரையில் ஆபாவாணனின் ‘இணைந்த கைகள்’ என்ற திரைப்படம் வெளியானபோது திரண்ட ஜனக்கூட்டத்தைப் போல்
இன்னொரு கூட்டத்தை நான் இன்றுவரை காணவில்லை. கோயம்புத்தூரில் அந்தத்
திரைப்படத்திற்காகத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவமும்
நிகழ்ந்தது.
ஆபாவாணன் தாம் தோல்வி முகத்தில் இருந்தபோது இறுதியாக உருவாக்கிய திரைப்படம் ‘கறுப்பு ரோஜா’. தமிழ்த்திரையரங்குகள் இன்று டிடிஎஸ் என்னும் ஒலிப்புரட்சியால் அலறுகின்றனவே, அந்தத் தொழில்நுட்பத்தை முதலில் தம் படமான கறுப்பு ரோஜாவின்
மூலமாகக் கொணர்ந்தவரும் அவரே.
இதுவரை இக்கட்டுரையின் பொருளுக்கு வெளியே அதிகம் பகர்ந்து சென்றுவிட்டேன்
என்றாலும் அவை ஆபாவாணனின் சாதனைப் பட்டியலாக எங்கும் பதிவு செய்யப்படாதிருந்ததால்
முக்கியத்துவம் கருதிச் சொல்லவேண்டியதாயிற்று. ஒரு பாடலாசியராகவும் ஆபாவாணன்
மிகவும் மதிக்கத்தக்கவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஊமை விழிகளில் அவர் எழுதிய
அத்தனை பாடல்களும் தேர்ந்த பாடலாசியரால் மட்டுமே இயற்ற வல்ல தரத்தோடு இடம்பெற்றன.
அவர் தயாரித்த படங்கள் அனைத்திலும் (செந்தூரப்பூவே தவிர்த்து) அவர் எல்லாப்
பாடல்களையும் எழுதினார். எந்தப் பாடலும் தகுதிப்பாடான தரத்திற்கு வெளியில் இல்லை.
அவர் கண்டுபிடித்த இசையமைப்பாளர்கள் மனோஜ்-கியான் இசையில் அவர் எழுதிய எல்லாப்
பாடல்களையும் இன்றும் விரும்பிக் கேட்கலாம்.
‘மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா ? பூமரத்து நிழலெடுத்துப் போர்வையாக்கி மூடவா ?...’என்னும் சுகமான வரிகளைத் தமிழால் ஊறிக் கவிதையுணர்வால் பித்தடைந்து முதிர்ந்த
கவிஞர் ஒருவரைத் தமக்குள் மறைத்து வைத்திருப்பவர்தான் எழுதமுடியும். ‘இதயத்தில் தோன்றும் காதல் நிலவே... உதயத்தை நீயேன்
மறுத்துவிட்டாய் ?’
என்று கேள்வி எழுப்பவும் முடியும். ‘நிலைமாறும் உலகில்... நிலைக்கும் என்ற கனவில்...’ என்று எவ்வளவோ உயரத்தில் இருந்து ஒரு பாடலின் முதல் வரியைத்
துவக்க முடியும். ’அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த் தாலாட்டு’ என்று உள்ளத்தின் பசிக்கு மட்டுமே உணவாகக் கூடிய
சொற்றொடர்களை அமைக்க முடியும். ஒரு தயாரிப்பாளராக, ஒரு திரைவர்த்தகத் தொடரோட்டத்தில் வென்றவராக, யாருக்கும் தம் முகத்தைக் கூடக் காட்டியிராத எளியவராக இருந்த ஆபாவாணன் இயற்றிய
இப்பாடல்கள் எனக்குப் பெருத்த ஆச்சரியத்தையும் அவர்மீது அளப்பரிய மரியாதையையும்
தோற்றுவிக்கின்றன.
தோல்வியில் இழப்பில் கையறுநிலையில் கலங்கும் மனித மனத்தை ஆறுதல்படுத்தி
ஆற்றுப் படுத்தும் வல்லமை நிச்சயம் இசைப்பாடலுக்கு உண்டு. இந்த வகைமைப் பாடல்களில்
கண்ணதாசன் இயற்றிய ‘மயக்கமா கலக்கமா ?’ என்னும் பாடலுக்கே முதலிடம் என்றாலும் அது ஆன்மீகத் தத்துவச் சகதியில் கொஞ்சம்
அதிகமாகவே அழுந்தியிருக்கும். ஆனால் அந்தக்
குழப்பம் எதுவுமில்லாமல் அதற்கு இணையான் இன்னொரு பாடல் உண்டென்றால் அது ஆபாவாணன்
இயற்றிய ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?’ என்னும் பாடல்தான். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்
பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் மந்திரக் குரல் வேந்தர் என்பது அரிய சிறப்பு.
தமிழ்த் திரைப்படப் பாடல் வரலாற்றில் ‘வெற்றி’
என்ற வார்த்தையில் துவங்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில்
இருக்கின்றன. ஆனால்,
தோல்வி என்ற சொல்லில் துவங்கும் பாடல் இதுவொன்றாகத்தான்
இருக்க முடியும். தோல்வியிலிருந்து எழுந்து நகரும் இடம்தான் வெற்றி என்பது
அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்தச் சொல்லில் தம் பாடலைத்
துவக்குவதில் அவருக்குத் துளியும் தயக்கம் இருந்திருக்கவில்லை.
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?
உடமையை இழந்தோம்
உரிமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா ?
உணர்வைக் கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?
விடியலுக்கில்லை தூரம்
விடியும் ! மனதில் இன்னும் ஏன் பாரம் ?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ?
யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா ?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?
வாழ்வை சுமையென நினைத்துத்
தாயின் கனவை மிதிக்கலாமா ?
இந்தப் பாடலுக்குப் பொழிப்புரை எதுவும் தேவையிருக்காது. இதன் சொற்கள்
ஒவ்வொன்றும் உங்களுக்குள் புதுப்புதுத் திறப்புகளைத் தோற்றுவிக்கட்டும்.
No comments:
Post a Comment