தூத்துக்குடி பட்டினத்தில் பிறந்து, பட்டிதொட்டிகளில் பட்டிமன்றத்தால் பிரபலமானவர். வழக்கொழிந்து வந்த வழக்காடு
மன்றத்திற்கு புத்துயிர் ஊட்டியவர். பேராசிரியை, ஆன்மிக சொற்பொழிவாளர்,
இலக்கியவாதி என பன்முகங்களை கொண்டவர் இளம்பிறை மணிமாறன்.
அவரது நாவில் இலக்கியங்கள் விளையாடும். கீதை கதை பேசும். அவரது உருவில் கம்பர்
வந்து பேசுவார். இதுவரை 3 ஆயிரம் மேடைகள் கண்ட நாவுக்கரசி, தினமலர் பொங்கல் மலருக்காக இங்கே பேசுகிறார்...
''நான் கல்லூரியில் படித்தபோது, பிறர் பேசுவதை
கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. இதை அறிந்த தந்தை பால்வண்ணதாசன், அந்த கலையை வளர்க்க வேண்டும் என எண்ணம் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் மணிமாறன் ஊக்கம் அளித்தார். கல்லூரிகளுக்கு இடையேயான
பேச்சு போட்டிகளில் பங்கேற்றேன். பிறகு பொது மேடையில் பேசும் தைரியத்தை என் தந்தை
ஏற்படுத்தினார். ம.பொ.சி.,
திருக்குறளார் முனுசாமி போன்றோரின் பேச்சை கேட்கும்போது, எனக்குள் பேசும் ஆர்வம் ஏற்பட்டது.
வாரியார் எங்கு பேசினாலும் தேடி போய் கேட்பேன்.
முதல் மேடை...
நெல்லையில் தனித்தமிழ் இலக்கிய கழகம் சார்பில் நடந்த பாரதி விழாவில்
பேராசிரியர் வளனரசு,
என்னை முதன்முதலாக பேச வைத்தார். மேடைக்கு வந்திருக்காவிட்டால்
எண்ணற்ற புத்தகங்களை படித்திருக்க முடியாது. ஒரு மேடையில் பேசியதை மற்றொரு
மேடையில் பேச முடியாது. இலக்கிய தலைப்புகளில்தான் பேசுவேன். குன்றக்குடி அடிகள்
தலைமையில் எண்ணற்ற பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன்.
மறக்க முடியாத பட்டிமன்றம்?
மதுரையில் ஒருமுறை இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பட்டிமன்றம் நடந்தது. தமிழ்
ஈழம் வேண்டுமா,
வேண்டாமா என்ற தலைப்பில் அடிகளார் தலைமையில் நடந்த
அந்நிகழ்ச்சிக்கு,
மக்களைவிட போலீசார்தான் அதிகம் இருந்தனர். அதை மறக்க
முடியாது. அடிகளாரின் பட்டிமன்றத்தில் பேசுபவர்கள், கண்டதை பேச முடியாது. விஷயத்துடன் பேச தயாராகி வரவேண்டும். சப்ஜெக்ட்டில்
இருந்து மாறினால்,
மணி அடித்து உட்கார வைத்து விடுவார் பட்டிமன்றத்திற்கு
மரியாதை ஏற்படுத்தியவர். அவரது காலம் பட்டிமன்றத்தின் பொற்காலம்.
பின்,
திருக்குறளார் முனுசாமி தலைமையில் வழக்காடு மன்றங்களில் பேச
ஆரம்பித்தேன். 1983ல் முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது பாரதி நூற்றாண்டு விழா வழக்காடு மன்றம் நடந்தது. இதில் இன்றைய
முதல்வர் ஜெயலலிதாவும்,
நானும் பெண் விடுதலை குறித்து வழக்காடினோம். பிறகு பேசிய
எம்.ஜி.ஆர்.,
'பெண்களுக்கு விடுதலை கிடைத்ததால்தான் இங்கே மேடையில்
பேசுகின்றனர். ஆண்களுக்குதான் விடுதலை தேவை' என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
நீங்கள் ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர். மேடையில் எப்படி ஆங்கில மொழி கலப்பின்றி
பேச முடிகிறது?
பயிற்சிதான் காரணம். தமிழ் மொழியின் சிறப்பு அது. எனது ஆங்கில பேராசிரியர்
சீனிவாசராகவன் சிறந்த தமிழ் பேச்சாளர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது
பேச்சை கேட்டு,
என்னாலும் பேச முடியும் என தைரியம் ஏற்பட்டது.
இன்றைய பட்டிமன்றங்கள்...
பலர் பொழுதுபோக்கிற்காக நடத்துகிறார்கள். கொஞ்ச நேரம் மக்கள் சிரித்துவிட்டு
செல்லட்டும் என கருதுகிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு பட்டி மன்றத்தில் நிலையான
இடம் கிடைக்காது. தலைப்புகளும் பயனுள்ளதாக இருப்பதில்லை.
காரைக்குடி கம்பன் விழாதான் பட்டிமன்றத்திற்கு பெயர் பெற்றது. மேடையில்
சிவப்பு விளக்கு இருக்கும். பேசுபவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் அந்த
விளக்கு எரிந்து எச்சரிக்கும். பல நூறு பேர் கேட்கும்போது பொறுப்புடன் பேச
வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவர்.
தலைப்புக்காக சொற்பொழிவா?
ஒவ்வொரு மேடையிலும் தலைப்புகள் மாறும். இலக்கிய கடலில் அவ்வளவு விஷயங்கள்
உள்ளன. நான் பேசுவது அதில் இருந்து கொஞ்சம்தான். ஒரு தலைப்பை முடிவு செய்தவுடன்
அதனோடுதான் வாழ்வேன். பல நாட்கள் அதுகுறித்து ஆய்வு செய்து படிப்பேன். என்னால்
சிறப்பாக பேச முடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் மேடை ஏறுவேன். சில அமைப்புகள்
குறிப்பிட்ட தலைப்புகளில் பேச சொல்வர். இப்படி அதிகம் கேட்ட தலைப்புகள் 'பாரதத்தில் கேசவன் கேட்ட யாசகம்', 'தர்ம நியாயங்கள்'.
இலக்கிய சொற்பொழிவுகளில் இன்றைய தலைமுறையினருக்கு ஆர்வம் இருக்கிறதா?
நிச்சயமாக. எனது பேச்சை கேட்க வருபவர்களில் அதிகம்பேர் அவர்கள்தான். அவர்களை
மையமாக வைத்துதான் பேசுவேன். நாம் சரியாக பேசவில்லை என்றால் 10 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் திறன் அவர்களுக்கு உண்டு.
இன்று பல இளைஞர்கள் மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இன்னும்
பலர் இலக்கிய உலகிற்கு வரவேண்டும் என்பது எனது விருப்பம்.
தொடர்புக்கு: manimarannila@gmail.com
இளம்பிறையின் மறுபக்கம்!
தூத்துக்குடி ஏ.பி.சி.,
மகாலட்சுமி பெண்கள் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு
பெற்றவர். சொற்பொழிவு குறித்து 250 'சிடி'க்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை கம்பன் குறித்து 5 நூல்களும், திருவள்ளுவர் குறித்து 2 நூல்களும்
எழுதியுள்ளார். தற்போது 'உலக அரங்கில் திருவள்ளுவர்' என்ற நூலின் மூன்றாம் தொகுதியை எழுதி வருகிறார்.
ராம்ஸ்
No comments:
Post a Comment