உலகச் செம்மொழிகள் யாவற்றிலும் தொகை மரபு
தொடர்ந்து இயங்கிவரக் கூடியதே. அவற்றுள்ளும் தமிழின் தொகை மரபிற்கோ நீண்ட
நெடும் பாரம்பரியத் தொடர்ச்சியும், வளமையும் உண்டு. மட்டுமல்லாமல் ஒவ்வொரு
தொகுப்பின் பின் புலத்திலும் அது கட்டமைக்க முயலும் அரசியல் உட்கிடை
என்பதும் அமைந்து கிடக்கக் காணலாம்.
“இரண்டாயிரம்
ஆண்டுத் தொடர்ச்சியில் சங்கத் தொகை நூல்களைத் தொடர்ந்து பல தொகுப்புகள்,
வழிபாட்டுப் பாடல்கள், சமய நெறி முறைகள், மொழியில் உள்ள சொற்கள்,
பொருண்மைகள் ஆகிய அனைத்தும் தொகுக்கப் பட்டுள்ளன. திருமுறைகள்,
பிரபந்தங்கள், சாத்திரங்கள், தனிப்பாடல்கள் எனப் பல் வகையிலும் நம்
தொகுப்பு மரபு செயல் பட்டிருப்பதைக் காண்கிறோம். கணக்கு முறை, பிரபந்தம்,
நிகண்டு, திரட்டு, கோவை ஆகிய பல சொற்கள் நமது தொகுப்பு மரபைக்
குறிக்கப்பயன்படுத்தப்பட்டுள்ளன” - வீ.அரசு1
இது பற்றி இன்னொரு கோணத்தில் அணுகும் பார்வையும் இத்துடன் ஒரு சேர நோக்கத்தக்கது. அது தொகையறிவுடன் தொல் மனமும் பற்றிய தாகும்.
“தமிழ்த்
தொகையறிவு என்பதும் தமிழ்த் தொல்மனம் என்பதும் சேகரமானது. அது ஒன்று
கிடையாது. பன்மையால் ஆனது... தமிழ் மனம் என்பதும் தமிழ் அறிவு என்பதும்
எல்லா ஊடாட்டங்களின் ஊடாகவும், கட்டமைக்கப்பட்ட ஒரு பன்மையான அறிவு; பல
திசையறிவு, ஒரு கலப்பறிவு” - ரமேஷ் பிரேதன்2
தொல்மனத்தின்
மூலப்படிமத் தேட்டத்தை வலியுறுத்துமுகமாகவும் தொன்மையின் சிறப் பென்பது
தொடர்ச்சியில் தான் உள்ளதென்பதைப் பேசுமுகமாகவுமே ரமேஷ் இவ்வாறு குறிப்பிடு
கின்றார். தொகை மரபின் தொகுப்பாக்க ஊடிழை யாகத் தொழிற்படும் சிறப்பம்சம்
யாதெனில் ஏதேனும் ஒரு வகையில் அது குறிப்பிட்ட செல்நெறி, சிந்தனைப் பள்ளி,
இலக்கிய வகைமை, நுவல் பொருள், யாப் பமைதி என வாங்குப் பொருந்துமாப்
போன்றும்; மறுபக்கம் அவற்றுக்கூடே விதந்தோதிக் காண வேண்டிய
சிறப்பியல்பானவாகவும் பன்முகமாக வும் அமைந்தியலக்கூடியனவாகும். இவற்றைத்
தம் உட் கிடைக்கேற்பக் கட்டமைப்பதில் தொகுப் பாளரின் அரசியல் ஊடாடியே
கிடக்கும் என் பதும் இதே மூச்சில் மனங்கொள்ளத் தக்கதே யாகும்.
பிற்காலத்தில்
அபிதான சிந்தாமணி, ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிறப்புப் பெயரகராதி,
வீராச்சாமி செட்டியாரின் விநோதரசமஞ்சரி, தனிப்பாடல் திரட்டு எனத் தொடரும்
தொகை மரபிலும் பண்மையிலான பண்பு மேலோங்கி யிருக்கக் காணலாம்.
‘விநோதரசமஞ்சரி’ எனும் பெயரே தொகுப்பின் வித்தியாசத்தையும் பன்முக
ரசனையையும் உணர்த்தி நிற்பதொன்றே. இந்த வகையில் நகுலனின் ‘குருஷேத்திரம்’,
பால்ராஜ் கென்னடியின் ‘வீடு’ மீராவின் ‘சுயம்வரம்’ பாவைச் சந்திரனின்
‘திரட்டு’, என் ‘பறை - 1990’ முதலான வரவுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
பல்லவர்
கால எழுச்சிக்கு முந்தைய சங்க மருவிய காலம் எனவும் களப்பிரர் காலம் எனவும்
குறிப்பிடப்படும் முந்தைய இடைக்கால (Early Medieval) காலக்கட்டச்
சூழலென்பது இந்திய அளவில் சமய சமூக நிலைமைகளில் அகில இந்தியப் பொதுக்
கருத்தாக்கச் சூழல் (Pan Indian Conceptual) உருவான காலக்கட்டமென்பர். இக்
காலப் பகுதி அவைதிகக் கல்வியாளர்களிடையே பனுவல்சார் பணிகள்
முனைப்புற்றதாகும். இருண்ட காலமன்று, இது இருட்டடிக்கப்பட்ட காலப்பகுதி
எனல் வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சிரமணரெனப்படும் அவைதிக
மரபுகள் தலையோங்கிய காலக்கட்டம். இக்காலச் சூழல் பற்றிய பதிவுகளைத்
தொகுத்துக் காண்போம்.
“களப்பிரர்க்கும்
உள்நாட்டு மன்னர்க்கும் இடையே நிலவிய போரும் பூசலும் தமிழிலக் கியம், கலை,
பண்பாடு, நாகரிகம் ஆகிய வற்றில் பெரும் சிதைவையும் இழப்பையும்
ஏற்படுத்தின. இந்நிலையில் தேனும், ஊனு மாக - தேறலும் களியாட்டமுமாக இருந்த
சங்க காலத்து இன்ப வாழ்க்கை மாறி, சமண பௌத்த மதங்களின் செல்வாக்கால் பல்
வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப் பட்டது. தமிழ் மொழியும் ஆதரிக்கப் படாமல்
தாழ்த்தப்பட்டு வளர்ச்சி குன்றி, போற்றுவாரற்று விளங்கியதால் தமிழ்
இலக்கிய வரலாற்றில் பெருந்தேக்கமும், மாற்றமும் ஏற்பட்டன. எனவே இக்
களப்பிரர் ஆட்சிக் காலத்தைக் கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும்
இருண்ட காலம் என்பர்.”3
“பல்வேறு
அறநூல்கள் தோன்றிய இக் காலக் கட்டத்தை இருண்ட காலம் என்பது, அறிவுரை வழங்கி
கட்டுப்பாட்டுடன் நடந்து நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியரை வெறுக்கும்
மாணவர்களின் மனநிலை போன்ற தாகும். எனவே களப்பிரர் காலத்தை இருண்ட காலம்
என்பது அர்த்தமற்றதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட
காலம் என்று சொல்வது வரலாற்று இருட்டடிப்பே எனத் துணிந்து கூறலாம். -
ந.எழிலரசன்4
இக்காலப் பகுதியின் பனுவல்சார் பணிகள் தொகுப்பு முயற்சிகள் எவ்வாறெல்லாம் மேற் கொள்ளப்படலாயின எனக் காண்போம்.
“ஏறத்தாழ
கி.பி.250 முதல் 580 வரை (அதாவது களப்பிரர் காலம்) சமண - பௌத்தங்களின்
கருத்தியல் மற்றும் அரசியல் பணிகள் விரிவாக்கம் பெற்றன. தொன்றுதொட்டுக்
குடிமக்களிடம் நிலவி வந்த அக புறப்பாடல்களைக் குறிப்பிட்ட நோக்கில்
தொகுத்தல், இலக்கணம் வகுத்தல், உரைவரைதல் முதலான பனுவல் சார்ந்த பணிகளில்
ஸ்ரமணக் கல்விமான்கள் ஈடுபட் டார்கள். இக்காலக்கட்டத்தில் இந்திய உப
கண்டத்தில் பரவி வந்த சாஸ்திரங்களுக்குத் தகவமைக்கும் விதங்களில் அந்தந்த
பிராந்தியங்களில் அறிவு திரட்டும் வேலைகள் முனைப்புடன் நடந்தன. தொகுத்தல்,
இலக்கணம் எழுதுதல், உரை எழுதுதல் என்பனவற்றோடு பிறமொழிச் சாத்திரங் களை,
இலக்கணங்களை, தமிழில் மொழி பெயர்க்கும் உன்னதமான அறிவுச்செயல் பாடும்
நிகழ்த்தப்பட்டது. அக, புறப் பாடல் களைத் தொகுத்தது போலவே, அறங்களைத்
தொகுத்துப் பனுவலாக்கும் முயற்சியும் அன்று முன்னிலை பெற்றது.
வைதிக
/ ஸ்ரமண அறிவாளிகள் இதில் போட்டியிட்டார்கள். அதன் விளைவுதான்
திருக்குறளைத் தலைமையாகக் கொண்ட பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகுப் பாகும்.
அறங்களைத் தொகுத்தவர்கள் தமிழ் மரபில் மொழியப்பட்ட அறம், பொருள், இன்பம்
என்னும் முப்பிரிவுகளை முன் மாதிரியாகக் கொண்டார்கள். “இவர்கள் தொகுத்து
வகுத்த அறங்களாக மட்டுமின்றி, வடமரபின் வைதீக / ஸ்ரமண சாத்திரங்களில்
வடித்தெடுத்த அறங்களாகவும் இருந்தன. இரு மரபுகளின் அறங்களை அவரவர் சார்பு
நிலைகளோடு தொகுத்துப் பனுவலாக் கினார்கள்.” ராஜ் கௌதமன்.5
தரும
சாத்திரங்கள் எவ்வாறு இயற்றப்பட்டன வோ அவ்வாறே தமிழின் பதினெண்
கீழ்க்கணக்கு நீதிநூல்களும் இயற்றப்பட்டன தொகுக்கப்பட்டன எனவும்; பாட்டும்
தொகையும் பதினெண் கீழ்க் கணக்கு இருவிதமான தொகுப்புகளிலும் அடங்கிய
பாடல்களின் காலங்களும் கருத்துகளும் வெவ் வேறாயினும் இரண்டிற்குமான
தொகுப்பு வாய்ப் பாடுகள் ஒத்தனவாகவே காணக்கிடக்கின எனவும் அவர்
எடுத்துரைக்கின்றார்.
“அறநெறிகள்
எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளன; அவை பெரும்பாலும் இலக் கியங்களில்
குறிப்பிடப்படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை அறக் கருத்துகள் பண்டைய
இலக்கியங்களில் ஆங்காங்கு காணப்படி னும் அதிக எண்ணிக்கையிலான அறநூல் கள்,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்படும் தொகுப்பினுள் காணப்படு
கின்றன.”
இவற்றில் 12 நூல்கள் அறம்
பற்றியே பேசு கின்றன. இவற்றுள் பழைய தமிழ்ச் சமூக அறங்கள் விழுமியங்களோடு
புதிய பல் சமயச் சூழல்களால் உருவான அறங்களும் விழுமியங்களும்
எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே இந்நூல்கள் பல்கியுள்ள காலத்தை நாம் அறநெறி
இலக்கியக் காலம் அல்லது அறநெறிக்காலம் எனக் கொள்ளலாம்.”
“அரசியல்
சூழலும் சமண பௌத்த பிராமணிய சமயங்கள் பல்கிப் பெருகிய சூழலும் முரண்களை
நீக்கிப் பொது அறங்களை வலியுறுத்தும் நோக்கில் நூல்கள் பல்கித் தோன்றக்
காரணமாயிருந் துள்ளன.” கோ. விசய வேணுகோபால்6
பொதுவாக
இந்நூல்களில் சமய அடிப்படை யிலான ஒழுக்கங்களும் விழுமியங்களுமே பெரிதும்
பேசப்பட்டாலும் இறையியல் முதுன்மை பெற வில்லையெனவும்; ஒன்றை மற்றொன்று
எதிர்க் கின்ற குரல்களும் இவற்றில் காணப்படவில்லை யெனவும் அவர் எழுதிச்
செல்கின்றார். இக்காலப் பகுதியைச் சேர்ந்தவரே காரைக்காலம்மையாரும். தமிழில்
முதன்முதலாக பண்தழுவிய பதிகம், வெண்பா, அந்தாதி எல்லாமும் பாடியவரும்
அம்மையே. இசைத்தமிழுக்கும், சைவ சித்தாந்தத்திற்கும் கூட அம்மையே முன்னோடி
ஆவார். மட்டுமல்லாமல் தமிழின் முதன்முதல் அருவருப்பின் அழகியலையும்
பாடிக்காட்டியவரும் அவரே. எழிலரசன் கல்விப் புலம் சார் இலக்கிய வரலாற்று
நூலை மேற் கோளாக எடுத்துக்காட்டி மறுத்துரைக்கின்றார். சைவ சமய நோக்கிலும்
சமண பௌத்த எழுச்சிக் காலம் என்பதால் இருண்ட காலம் என்பர்.
எனில்
காரைக்காலம்மையாரின் கொடைகளைக்கூட அத்தகைய சைவ சமய நோக்கினர் காணத் தவறி
யதை என்னென்பது? எவ்வாறு தருமசாத்திரங்கள் இயற்றப்பட்டு தொகுக்கப்பட்டனவோ
அவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றவும் தொகுக் கவும் பட்டன
எனவும் பாட்டும் தொகையும் தொகுப்புகளுக்கும் பதினெண்கீழ்க் கணக்கு
தொகுப்புகளுக்கும் தொகுப்பு வாய்ப்பாடு கள் ஒத்தனவே எனவும் ராஜ்கௌதமன்
குறிப்பிடு வன ஏற்புடைத்தன்று. இது குறித்து விரிவாகக் காண் போம்.
பாட்டும்
தொகையும் பதினெண்மேல் கணக்கெனப்பட்டன. பிந்தைய நீதிநூல்கள் பதினெண்
கீழ்க்கணக்கெனப்பட்டன. கணக் கென்ற சொல்லுக்கு நூலென்றும், கீழென்பது
பாடலின் குறுகிய அளவைக் குறிக்கின்றதென்றும் கூறும் மு.வை.அரவிந்தன்
‘வனப்பியல் தானே’ எனும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவில் பேராசிரியர்
கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடு கின்றார் என்பார்7
‘வனப்பியல்தானே’
எனும் சூத்திர முதற் குறிப்பைக்கொண்டு தேடப் புகுந்தால் பேராசிரி யம்
உட்பட எவ்வுரை நூலிலும், தொல்காப்பிய மூலம் மட்டுமே வெளியிடப்பட்ட நூலிலும்
சூத்திர முதற் குறிப்பகர நிரலில் அதனைக் காணவே இயலாது. பேராசிரியர் கொண்ட
பாட வேறுபாடே இதற்குக் காரணம். எனவே ‘சின்மென் மொழியால்’ என்னும் சூத்திர
முதற் குறிப்பையேகொண்டு இதனைத் தேட வேண்டும்.
“சின்மென் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அம்மை தானே அடிநிமிர் யின்றே”
- தொல். பொருள்- செய்யுளியல்: 227
“இச்சூத்திரத்திற்கு
முதலடியாக ‘வனப் பியல்தானே வகுக்குங்காலை’ என்னும் அடியைப் பேராசிரியர்
அமைத்துக் காட்டுவர்” - கா. நமச்சிவாய முதலியார்8
பாலசுந்தரனார்
ஆராய்ச்சிக் காண்டிகையுரை செய்யுளியல் நூற்பா முதற்குறிப்பு அகரநிரலில்
மட்டுமே ‘சின்மென்மொழி’ எனும் முதற்குறிப்பை அடுத்து (வனப்பு) எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.9
“முகம் மார்பு
வயிறு கை கால் முதலிய உறுப்புக்களால் அமைந்ததொரு வடிவம் ஆடை அணி
முதலியவற்றாற் புனையப் பெறின் அதன்கண் வெளிப்படும் பொலிவு பல்வேறு
திறம்படத் தோன்றுவதுபோல மாத்திரை முதலாகிய உறுப்புகள். அமைந்து பொலிவு
செய்தலின் இவ் எட்டனையும் பிரித்துக் கூறினார். இவற்றை வனப்பென வழங்குவர்
இடைக்காலத்தார்.
பேராசிரியர்
வனப்பென்பதை ஆசிரியர் அமைத்துக் கூறியதாகக் கருதி ‘வனப்பியல் தானே
வகுக்கங்காலை’ என ஓர்அடியைப் பாடமாகச் சேர்த்து உரை வரைந்துள்ளார்.
இளம்பூரணத்திலும் நச்சினார்க்கினியத்திலும் இத்தொடர் காணப்படவில்லை. தொகைச்
சூத்திரத்தின் கண்ணும், இவை பற்றிய இலக்கணச் சூத்திரங்களிடத்தும் ‘வனப்பு’
என்னும் சொல் காணப் பெறவில்லை. ஆதலின் பேராசிரியர் பாடம் ஆய்தற் குரியது”-
ச. பாலசுந்தரம்10
பாலசுந்தரனார்
பேராசிரியர் பாடம் ஆய்தற் குரியது என்றாரேனும் நமக்கு என்னவோ அவர் கொண்ட
பாடவேறுபாடுகளுக்கு ஊடே தான் கீழ்க்கணக்கு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்
கின்றன.
“வனப்பியல் தானே வகுக்குங் காலை
சின்மென் மொழியால் தாயபனுவ லோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே”
- தொல். பொருள். செய்: 235
“சிலவாய
மெல்லியவாய சொல்லொடும் இடையிட்டு வந்த பனுவலினக் கணத் தோடும் அடிநிமிர்
வில்லது அம்மையாம்... சிலவாகவென்பது, எண்ணுச் சுருங்குதல், மெல்லியவாதல்,
சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சில வெழுத்தினான் வருவது,
அடிநிமிரா தென்றது, அய்ந்தடியின் ஏறாதென்றவாறு.
தாய
பனுவலோடென்றது, அறம் பொருளின்ப மென்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுவ
(போன்று) வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் செல்வதென்றவாறு அஃதாவது பதி னெண்
கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள் இரண்டடியானும் ஒரே செய்யுள் வந்த வாறும், அவை
சிலவாய மெல்லிய சொற் களான் வந்தவாறும், அறம் பொருளின் பமென அவற்றிற்கு
இலக்கணங்கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் கார் நாற்பது, களவழி நாற்பது
முதலாயின வந்தவாறும் கண்டு கொள்க.” - பேராசிரியர் 11.
இதற்குப்
‘பொருள் கருவி’ எனவரும் குறளையும் (675) கூறி இலக்கணம் கூறியதாகலின்
பனுவலோடென்றன் எனவும்; ‘மலர்காணின்’ (112) என வரும் குறளைக் காட்டாக்கி
இலக்கிய மாகலால் ‘தாயபனுவல்’ எனப்பட்டதெனவும் உரைக்கும் பேராசிரியர் இவை
தனித்துவரினும் அவ்வனப்பெனப்படும், தாவுதலென்பது இடை யிடுதல் எனவும்
எடுத்துரைப்பார்.
“திருக்குறளைக் கடைக்கழகக் காலத்து அம்மை
வனப்பு நூலென்று கொள்வதே தக்கதாம்.”
-ஞா. தேவநேயப்பாவாணர்.12
இவற்றைத்
தவிர பன்னிருபாட்டியலின் இரு சூத்திரங்களை எடுத்துக்காட்டியும்
கீழ்க்கணக்கு மேல் கணக்கு வரையறை பற்றிச் சுட்டிச்செல்வார்
காசிப்பாண்டியனும்.
“அகவலும் கலிப்பாவும் பரிபாடலும்
பதிற்றைந்து ஆறு பதிற்றைம்பது ஈறாக
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்
வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்
எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே (346)
“அடிநிமிர்வு இல்லாத செய்யுள் தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி, அவ்வத்
திறம்பட வருவது கீழ்க்கணக்கு ஆகும்’ (348)
“இவற்றிலிருந்து
அடிநிமிர்வு இல்லாத வெண்பாக்களினால் அறம் பொருள் இன்பம் பற்றி அய்ம்பது
முதல் அய்ந்நூறு ஈறாகப் பாடப் பெறுவன கீழ்க்கணக்கு எனப் பெயர் பெறுதற்
குரியன என்பது பெறப்படும்” சாத்தூர்- காசிப் பாண்டியன்.13
இவ்விதியின்படியும்
திருக்குறள் தவிர ஏனைய பதினேழு நூல்களுக்கு மட்டுமே கீழ்க்கணக்கில் வரும்
தகுதியுள்ளது, அவையெல்லாமே அய்ம்பதுக்கு மேலும், அய்ந்நூற்றுக்குக்
குறைந்தும் பாடல்களைக் கொண்டுள்ளன, குறள் மட்டுமே 1330 பாடல்களைக்
கொண்டுள்ளது எனப் பாடல் எண்ணிக்கை அடிப்படை நோக்கில் குறள் பதினெண்
கீழ்க்கணக்கு நூல் வரிசையில் வாராதென்னும் காசிப்பாண்டியன் 1849ல்
இயற்றப்பட்ட ‘பிரபந்த தீபிகை’ என்னும் நூலிலிருந்து 18 நூல்களின் பெயரையும்
பாடல் தொகை எண்ணிக்கையையும் குறிப்பிடும் பாடலையும் எடுத்துக்
காட்டுகின்றார். அப்பாடல் கீழ் வருமாறு முடியும்.
வள்ளுவ / மாலை / ஈர் ஒன்பதாய்ச் சாற்று
பிரபந்தம் / வழுத்துவர்கள் புலவோர்கள்”
-வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பு பாரதியார்
“இப்பாடலிலிருந்து
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சேர்க்கப்பட்டது திருவள்ளுவ மாலையேயொழிய
திருக்குறள் அல்ல என்பது தெளிவாகிறது. பதினேழு நூல் களுக்கும் பாடல் எண்கள்
தந்து வள்ளுவ மாலைக்கு மட்டும் பாடல் எண்கள் குறிப் பிடாதது மிகவும்
கவனிக்கத்தக்கது. திருக் குறளை அது குறித்திருந்தால் 1330 என்று பாடல்
எண்கள் தந்திருப்பார் அன்றோ? திருவள்ளுவ மாலைப் பாடல் எண்கள் காலந்தோறும்
வளர்ந்துகொண்டே இருக்கு மாதலால் அதற்கு மட்டும் பாடல் எண்கள்
குறிப்பிடவில்லை. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை விட காலத்தால்
முந்தியது.” சாத்தூர்- காசிப்பாண்டியன்.14
பதினெண்
கீழ்க்கணக்கு நூல் வரிசையில் திருக்குறள் பட்டயங்காதெனப் பன்னிரு
பாட்டியல் சூத்திரங்களின் கீழ்க்கணக்கு வரையறை; மற்றும் பிரபந்தத் தீபிகை
பாடலில் வரும் பாடல் தொகை எண்ணிக்கை இவற்றை ஆதாரமாகக் கொண்டு அதில்
அடங்குவது திருவள்ளுவ மாலையேயன்றிக் குறளின்றென மறுத்துரைக்கின்றார் காசிப்
பாண்டியன். இத்தொடர்வில் நோக்கத்தக்க வெவ்வேறு பதிவுகளையும் ஒருசேரத்
தொகுத்துக் காண்போம்.
திருவள்ளுவர்
கழகப்புலவரன்னமையானும், அவர் நூல் கழகத்திலுள்ள பிராமணப் புலவரால்
ஒப்புக்கொள்ளப் பெறாமையால் அரங்கேறாதிருந்ததினாலும், அது கழக நூலும் கழக
மருவிய நூலுமல்லாது தனியாகவேயிருந்து வந்தது. பிற்காலத்தில் கடைக்கழகங்
கலைக்கப்பட்ட பின், அதை தமிழ்க்கழகத்தைச் சேர்ந்த அறநூலாசிரியர் சிலர் தம்
நூல்கட்குக் கடைக்கழக நூல் நிலைமையூட்டல் வேண்டி, கழகக் காலத் தனவும்
பிற்காலத்தனவுமான பதினெண் நூல் களை ஒரு தொகுதியாக்கி, அவற்றைப் பதினெண்
கீழ்க்கணக்கென்றும்; பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் பதினெண்
மேற்கணக்கென்றும் வழங்கின தாகத் தெரிகின்றது.
திருக்குறள்
கழக நூலன்மையாலும், அதற்கு நால் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கார் நாற்பது,
களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கே கழகக்
காலத்தன வாதலாலும், ஏனையவெல்லாம் வச்ரநந்தி 5 ஆம் நூற்றாண்டில் மதுரையில்
சமணத் தமிழ்க்கழகம் நிறுவிய பின்னரே எழுந்தவை யாதலாலும் அவற்றுள் ஆசாரக்
கோவை திருக்குறட்கு நேர்மாறாக வட சொல்லும் ஆரியக் கொள்கையும்
மிகுந்திருப்பதுடன், இழிதகு நிலையில் தமிழரைப் பிராமண ருக்கு
அடிமைப்படுத்தியிருப்பதாலும், பதினெண் கீழ்க்கணக்கு, என்னும் தொகுதி முறை
மிகத் தவறானதென்றும்; திருக் குறளை அதிற் சேர்த்தது மிகத்தவறானது என்றும்
அறிந்து கொள்க”- பாவாணர்15
“முழுநூலாக
ஒரே ஆசிரியரால் இயற்றப் பட்டவற்றுள் மிகவும் பழைமையானவை ‘தொல்காப்பியமும்
திருக்குறளும் ஆகும். திருக்குறளைப் பிற்காலத்தவர் கீழ்க்கணக்கில்
சேர்த்துத் தொகுத்து விட்டாலும்கூட திருக் குறள் தொல்காப்பியத்தின்
சமகாலத்த தாகும்” - க. நெடுஞ்செழியன்16
“நாலடியார்
போற்றும் வாழ்க்கை மறுப்புக் கொள்கையும் (Principle of Negation பெண்மை
பற்றிய இழிநிலைக் கருத்துகளும், துறவுக் கோட்பாடுகளும், சிதைந்த அறச்செய்தி
களும், சமணக் கொள்கைகளும், திருக்குறள் அடிப்படைக் கருத்துகளுக்கு
முற்றும் மாறானவை. ஆனால் மேலோட்டமாக நோக்குமிடத்து இரண்டும் ஒன்று போல்
காணப்படும். பொதுவாகக் குறள் தவிர மற்ற கீழ்க்கணக்கு நூல்கள் கூறும் ‘அறம்’
வட மொழிச் சரித்திரத் தாக்கம், சமயப்பிறழ்ச்சி ஆகியவை காரணமாகத் தாழ்வைப்
பெறு கிறது; வள்ளுவம் வெறுத்த கருத்துகள் பல மற்ற நூல்களில் அறம் எனப்
போற்றப்படு கின்றன. மூட நம்பிக்கைகளும், வேற்றுலகக் கண்ணோட்டமும்
பிந்தையவற்றில் பதிக்கப் படுகின்றன”- கு. ச. ஆனந்தன்17
“தமிழிலும்
அறநூல்களுக்குக் கீழ்க்கணக்கு என்று பெயரிட்டதும், மணிப்பிரவாள நடையைப்
புகுத்தியதும், தமிழ்மொழி அழிய வேண்டி ஆரியர்கள் எடுத்த முயற்சிகள் என்றே
எண்ண வேண்டியுள்ளது” - சாத்தூர் காசிப்பாண்டியன்18
அறம்,
தர்மம், நீதி, ஆசாரம் என்பன எவ்வா றெல்லாம் வரையறுக்கப்படலாகின்றன? அறம்
என்ற சொல் தோன்றுமுன்னர் அதனைக் குறிப்பிட எவ்வாறு எல்லாம் கையாண்டனர்?
இத்தகு வகைமைப்பாட்டில் குறளின் சிறப்பிடம் யாது? பிற்கால மன்னர்களாலும்
ஊரவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை யாவை? இத்தகைய வினாக்களுக்கு விடை காண
முயல்வோம்.
“அறம் என்ற சொல் தோன்றும்
முன்னர் இச்சொல்லைக் குறிக்க பழமொழி, முது மொழி, மூதுரை, வாயுறை வாழ்த்து,
நன்றி, நன்று, நன்மை, நல்லது, முறை, முறைமை, நயன், நன்னெறி, நெறி,
ஒழுக்கம், கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் ஆகியவை வழங்கி வந்தன.
வழங்கி வருகின்றன. பிற்காலத்தில் வடமொழிக் கலப்பால் ‘நீதி’ என்ற சொல்லும்
வேரூன்றிவிட்டது. இவற்றைவிட அறம் என்ற சொல்லுக்கு `எதிக்ஸ்’ எனப்படும்
ஆங்கிலச் சொல்லுக்குத் தரப்படும் விளக்கம் பொருத்த மானதாக உள்ளது. எதோஸ்
(Eltos) எனப்படும் கிரேக்க வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது எதிக்ஸ்
(Ethics) இச்சொல்லுக் குப் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்றும்
பொருளுணர்த்தி நாளடைவில் ‘எதிக்ஸ்’ என்பது ‘ஒழுக்கத்தைப் பற்றிய அறிவியல்
கலை’ என்று போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது. எனவே தனிமனிதன், சமூகம்,
சமயம், அரசு ஆகியவற்றிற்கான ஒழுக்கம்தான் ‘அறம்’ என்பது புலனாகிறது”- ம.
இளங்கோவன் 19
“நீதி என்பது
அச்சுறுத்திப் பணிய வைப்பது. அதிகாரம்தான் நீதியை வழங்கும். அறம் என்பது
மனித மனத்தை உருவாக்குவது. ஜஸ்டிஸ் (Justice), எத்திக்ஸ் (Ethics) என்ற
இருவேறுபட்ட பொருள் உள்ள சொற்களை ஒரே பொருளில் தமிழில் மொழிபெயர்த்துக்
குழப்பியதால் வந்த பிழை இது. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வேந்தர்களாலும்
ஊர்ச்சபை களாலும் நீதி நூல்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டவை மநுநீதி, நாரத நீதி
போன்ற நூல்களே. திருக்குறள் போன்றவை அல்ல. பதினெண் கீழ்க்கணக்கு நீதி
நூல்கள் என்றது கூடச் சதியே” - பொ. வேல்சாமி. 20
“நீதி
இலக்கியங்கள் எனப் பொதுப்படக் குறிப்பிடும் வழக்கம் இருக்கின்ற போதிலும்
‘நீதி’ என்ற வட மொழிச்சொல் தமிழ் வழக்கில் வந்து இடம் பெற்றதே கி.பி. ஆறாம்
நூற்றாண்டுக்குப் பிறகுதான் என்பதாலும், நீதி என்பது எழுதப்பட்ட சட்ட
நெறிமுறை யையும், நீதி நியாயம் என்பதையும் குறிப்ப தாலும் அறம் என்னும்
எழுதப்படாத இயற்கை ஒழுங்கியல்பு நெறியைப் பாடும் இலக்கியங்களை அற
இலக்கியங்கள் எனக் குறிப்பதே பொருத்தமானதாகும். இந்த இடத்தில் ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்வது தேவையானதாக உள்ளது. அது என்னவெனில் அற
இலக்கியங்கள் எனக் குறிப்பிடப்படும் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள
11 நூல்களில் சிலவற்றில் அறம் மட்டுமன்றி நீதியும் இடம் பெற்று உள்ளது
என்பதுதான் அது”- சு. மாதவன்21
“நீதி
இருவகை ஒன்று ஏற்றத்தாழ்வை (Hierarchy) ஏற்கும் நீதி, இது மநுநீதி. மற்றது
ஏற்றத்தாழ்வை ஏற்காத சமநீதி, சமத்துவம், ஒரே உயர்ந்த நீதி. இதற்கு மாற்றுச்
சிந்தனையே இல்லை என்பது தமிழ்மரபு. ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொண்டால் அந்த
ஊற்றிலிருந்து எல்லா விஷ ஆறுகளும் தோன்றும்” - இரா. குப்புசாமி22
“தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம’ என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குல ஒழுக்கத்தையும் குறிக்கும்”- பாவாணர்23
“வள்ளுவர்
காலத்தில் அறம் என்பது நல் வினை என்பதைச் சுட்டும் கலைச் சொல்லா கிறது.
அதுவே அறன் வலியுறுத்தல் அதி காரத்தில் விளக்கப்படுகிறது”- ராஜ் கௌதமன்24
“ஆரியதரும சாத்திரமுறைவேறு, தமிழற நூல் மரபு வேறு, வள்ளுவர் குறளோ தமிழ்
மரபு வழுவாமல் பொருட்பகுதிகளான அகப் புறத்துறை அறங்களை மக்கள் வாழ்க்கை
முறைக்கு ஆமாறு அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். எனவே குறள்
நூல் தமிழில் தோன்றிய தனிமுதல் அறநூல்” - ச. சோமசுந்தர பாரதியார்.25
“இந்தத்
தத்துவஇயல் வரலாற்றில் திரு வள்ளுவரின் நூல் தனிக்குரல். அறம் இவ்வளவு
தெளிவாக எடுத்துக் கூறப்பட்டதை உலகின் வேறு எந்த சமய, தத்துவ நூல்களிலும்
காணவில்லை” - ஆல்பர்ட் சுவைட்சர்26
இத்தகைய
அறம், நீதி, தர்மம் என்பவற்றிற் கான உரிய வரையறைகளை விதந்தோதி இனம்
காணாமல் ஒன்றன் இடத்தில் மற்றதைப் பிறழக் கையாள்வது நம்மிடையே
வழக்கமாகிவிட்டது. இத்தகைய புரிதல்களுடன் இனியேனும் அணுக முற்படுவதே
உண்மைகளை இனங்காண உறு துணை புரிவதாகும். இவற்றிற்கு அப்பால் ’ஆசாரம்’
என்பதன் பொருள் குறித்தும், அதனின்றும் ஆசாரக் கோவையின் ஆச்சாரம் எவ்வாறு
வேறுபடுகின்றதென்பது குறித்தும் அடுத்துக் காண்போம்.
ஆசாரக்
கோவையோ வர்ண தர்ம சாத்திரங் களின் வழி நூலாகும். அன்றாட ஆச்சார அனுட்டானக்
கையேடுமாகும். ‘அச்சமே கீழ் களது ஆசாரம்’ என வள்ளுவரும் ‘ஆசார சங்கற்ப
விகற்பங்கள்’ என வள்ளலாரும் பேசி நிற்கும் ஆசாரம் வேறு. ‘ஆசாரக் கோவை’ பேசி
நிற்கும் ‘ஆச்சாரம்’ வேறு. குறள் கூறும் ஆசாரம் ஒழுக்கம்- நடத்தை எனப்
பொருள்படும். மத முதலியவற்றை ஆன்மிக ஒழுக்கம் எனவும்; வர்ணதர்மம் போன்ற
வற்றை உலகியல் (லௌகீக) ஒழுக்கம் எனவும் விதந் தோதுவார் வள்ளலார். சங்கற்பம்
எனில் விடாப் பிடியான பற்றுறுதி. விகற்பங்கள் அந்நியமாதலைக் குறிக்கும்
என்பார் முத்துமோகன். கலாச்சாரம் என்பதுவும் கலை ஒழுக்கம் என்றே
பொருள்படும்.
இவையாவற்றிலும்
முற்றிலும் வேறுபடும் ‘ஆசாரக் கோவை’யின் ஆசாரம் ஒரேவழி வள்ளலார்
விதந்தோதும் ‘வர்ணதர்ம லௌகீக ஒழுக்கம்’ என்பதனோடு வேண்டுமானால் ஒரு புடை
ஒக்கும் எனலாம் - அது மடியான அவாளின் ஆச்சாரம். நாளாந்தர நடைமுறைப் பழக்க
வழக்கங்களையும் ‘தீட்டு’ முதலான கட்டுக்குள் கொண்டுவரும் உச்சபட்ச
ஆச்சாரங்களின் தொகுப்பே ஆசாரக் கோவையாகும். என் வாசிப்பில் ஆறுமுகநாவலரின்
சைவ- வினா விடை ஆசாரக்கோவை வாசிப்பையே நினைவூட்டியது. புறந்தூய்மை நீரான்
அமைவதை விதவிதமாக இரு நூல்களும் பேசி நிற்பனவாம். ஆசாரக்கோவை குறித்த
பதிவுகளைத் தொகுத்துக் காண்போம்.
“ஆசாரவித்து
எனத் தொடங்கி ‘ஆசாரம் வீடுபெற்றார்’ என முடியும் 100 செய்யுட் களில்
பொதுவகையான சில ஒழுக்கங்கள் தவிர, அன்றாடக் கடமைகள், அகப்புறத் தூய்மை
பேணும் ஒழுக்கங்கள், பார்ப்பனர் களைப் பற்றிய மிக உயர்ந்த கருத்துகள்,
அவர்களைத் தொழ வேண்டிய இன்றியமை யாமை ஆகியவை பற்றியும் பேசப்படு கின்றன.
அதன் சிறப்புப் பாயிரச் செய்யுளே. அந்நூல் வடமொழி ஸ்மிருதிகளைப் பின்பற்றி
எழுதப்பட்டதாகவும் கூறுகிறது.” - கு.ச. ஆனந்தன்27
“ஆசாரக் கோவை விதிவிலக்கான வைதிக ஆசார விதிகளின் தமிழ் ஆக்கம்”- ராஜ் கௌதமன்28
“ஆசாரக்கோவை
பிராமணவயமாக்கம், சமஸ்கிருத வயமாக்கம் ஆகியவற்றிற்கான ஒரு பனுவலாக
உருவாக்கம் பெற்றது. பிராமணர்களை மையமிட்ட குருகுலத்தில் பயில
வந்தவர்களுக்கும் கற்புக்கும் பாட முறைசார்ந்த பனுவலாகவும் அமைந்தது என
ஊகிக்கலாம்”
“இது தவ்மியருக்கு
வியாசரால் உபதேசிக்கப் பட்டது என்ற ஒரு கருத்துமுண்டு. இந்நூல் கௌதம
சூத்திரம், போதாயின தர்ம சூத்திரம் ஆகிய நூல்களைத் தழுவி எழுதப் பட்டது
என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. எனினும் ஆரிடம் எனப்படும் வட மொழி நூலே மூல
நூல் எனக் கருதப்படுகிறது.”
“பெரியோரை
விட தெய்வமும் அரசனும் உயர்ந்தவர்கள் என்ற முடியாட்சி மரபில் விண்ணுலகில்
தெய்வமும் மண்ணுலகில் மன்னனும் தெய்வங்களாகும். ஆசாரக் கோவையானது
முடியாட்சி மரபுக்கான வாழ்வியல் நெறியை, குறிப்பாக மன்னனை மையமிட்ட
வாழ்வியல் நெறியை முன் வைக்கிறது”.
“பிராமண
வாதத்தின் அகக்குரல்கள் (Ontic discourses) அச்சமூகத்தின் தனி அடையாளங்
களைப் பேசி வந்துள்ளன. தனித்தன்மை களைக் கூறி வந்துள்ளன. ஒவ்வொரு பிரி
வினருக்குமான ஆசாரங்களை அவரவர் அகக்குரல்கள் ஒலித்து வந்துள்ளன. ஆனால்
அவர்களின் புறக்குரல்கள் (epistemic discourses) பிற சமூகத்தாரைத் தன்
பக்கம் கவனிக்கச் செய்யும் குரலாக ஒலித்து வந்துள்ளன. அத்தகைய ஒரு குரலாக
ஆசாரக்கோவை அது தோன்றிய காலம் முதல் செயல்பட்டு வந்துள்ளது எனலாம்”-
பத்கவத்சல பாரதி29
செய்யத் தகுவன,
தகாதன (do’s & dont’s) எனவாங்கு ஆசாரக் கோவை வலியுறுத்தும் வாழ்வியல்
நெறிகளென முறையே பாடல் எண் சுட்டி காலைக்கடன் (9) தொடங்கி, மனைவியுடன்
சேருங்காலமும் சேராக்காலமும்’ (42, 43) வரை 65 விதிகளைப் பட்டியலிடுகின்ற
பக்தவத்சல பாரதி அது அன்றாடம் கடைபிடிக்கவேண்டிய புற ஒழுக்கங்களையே
விரிவாகப் பேசுகின்றது எனவும்; குறிப்பாக, பழக்கவழக்கங்களையே பெரிதும் முன்
வைக்கின்றதென்பார். பெருமாள் முருகன் அவர் விட்ட இடத்தில் தொடர்ந்து
எத்தகைய இடத்தில் வசிக்கலாம்? யார் யாருடன் தனித்திருக்கலாகாது?
என்பனவற்றையும் எடுத்துரைக்கின்றார்.அத்துடன் எச்சிலுடன் தீண்டத்தகாதவை (5)
எச்சிலுடன் காணக்கூடாதவை (6) எச்சில்கள் (7) என பக்தவத்சல பாரதி
சுட்டிச்சென்ற மூன்று விதிகள் குறித்தும் மூலத்துடன் விளக்குவதோடு
எச்சிலின் வகைகள் குறித்தும் விதந்தோதி ‘இடக்கர் அடக்கல்’ ஆக்கப்பட்டு
அடக்கி வாசிக்கப்பட்ட இடத்தில் புதுவெளிச்சம் பாய்ச்சி உட்கிடையை வெளிக்
கொணர்கின்றார்.
“பன்னிரண்டு நீதி
நூல்களில் ஒன்றாக ஆசாரக் கோவையையும் சேர்க்கிறார்கள். ஆனால் நீதி சொல்லும்
நூலல்ல இது. ஆசாரம் என்னும் சொல்லுக்குப் பல பொருள்களை அகராதிகள்
தருகின்றன. தமிழ் லெக்சிகன் தரும் பொருள்களுள் சில சாஸ்திர முறைப்படி
ஒழுகுகை, நன்னடை, வழக்கம் தூய்மை ஆகியன.
இன்றைய
வழக்கிலும் ஆசாரம் பயன்படு கிறது. ‘அவிங்க ரொம்ப ஆசாரமானவிங்க’ என்றும்
‘அது ஆசாரமான குடும்பம்’ என்றும் சொல்லும் வழக்கம் இருக்கிறது. பழைமைப்
பிடிப்பு அல்லது பழைய முறை களைக் கடைபிடிப்பவர்கள் என்னும் அர்த்தம் இங்கு
வருகிறது. நம் அன்றாட நடவடிக்கை களை சாஸ்திர முறைப்படி அமைத்துக் கொள்
வதற்குப் பெயரே ஆசாரம்.”
“எச்சில் பலவும் உளமற்று அவற்றுள்
இயக்கம் இரண்டு இணைவிழைச்சு வாயில்
விழைச்சிவை எச்சில் இந்நான்கு”
- ‘ஆசாரக்கோவை: 7’
`இயக்கம்
இரண்டு என்று குறிப்பிடுவது மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் ஆகிய வற்றை
ஆகும்... மலம் கழித்தபின் நீராடச் சொல்வதேனும் சரி. சிறுநீர் கழித்த பின்
நீராட வேண்டும் என்றால் எத்தனை முறை தினம் நீராடுவது? இணை விழைச்சு என்பது
புணர்ச்சி”
“விழைச்சு என்பதற்கே
புணர்ச்சி என்று பொருள் இருக்கிறது. அப்படியானால் இணை விழைச்சு, வாயில்
விழைச்சு ஆகியவை விழைச்சின் வகைகள் என்று கொள்வது தான் பொருத்தம். - வாயில்
விழைச்சு என்பது வாய்வழிப் புணர்ச்சி”
“வாயில்
விழைச்சு முடிந்ததும் நீராடி விட்டால் தீட்டு கழிந்து விடும். முதன்மைத்
தீட்டுக்களில் ஒன்றாக வாயில் விழைச்சு கருதப்பட்டுள்ளது என்றால் அவ்வழக்கம்
பரவலாக இருந்துள்ளது என்றே பொருள்” - பெருமாள் முருகன்30
இணை
விழைச்சென்பதைப் போன்றே வாயில் விழைச்சு என்பதையும் ஒரு சொன்னீர்மைத்தாகக்
கருதவேண்டும் என்னும் அவர் இதுவரை யாருங் கண்டுணர்த்தாத வகையில்
ஆசாரக்கோவையை மதனநூலாகவும் அடையாளப்படுத்துகிறார். மட்டு மல்லாமல் முறையற்ற
உறவுகளையே மூலதன மாக்கி எழுதப்படும் இணையக் காமக்கதை களுக்கும்,
நூல்களுக்கும் வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு, அதற்கான பழஞ்சான்றுதான் ஆசாரக்
கோவை என்கின்றார். சாஸ்திரம் என்பதனைக் குறிப்பிட்ட விஷயம் பற்றிய
விதிமுறைகளைத் தரும் நூலெனவே கொள்கின்றார்.
“சாஸ்திரம்
என்றால் எது? சமஸ்கிருதத்தில் பலவகை சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று
அறிகிறோம். தமிழிலும் ‘சைவசித்தாந்த சாஸ்திரங்கள்’ உள்ளன. சாஸ்திரம் என்பது
குறிப்பிட்ட விஷயம் பற்றிய விதிமுறை களைத் தரும் நூல். தினசரி வாழ்வில்
உடலைத் தூய்மையாக வைத்திருப்பது தொடங்கி பல்வேறு ஒழுங்கு முறைகளின்
தொகுப்புக்கு ஆசாரம் என்று பெயர்”- பெருமாள் முருகன்31
இது
ஒரு பகுதி உண்மை மட்டுந்தான். தமிழில் ‘நூல்’ ‘இயல்’ என்பனவும்,
வடமொழியில் ‘சாஸ்திரம்’ என்பதும்; கல்விப்புலத்தில் ‘துறை’ என்பதும்
‘குறிப்பிட்ட பொருள் குறித்த’ எனும் பொருட்படுவனவே. தமிழில் ‘பொருள் நூல்’
எனில் வடமொழியின் ‘அர்த்தசாஸ்திரம்’. ஆசாரக் கோவையைப் பொறுத்தவரை தமிழ்
லெக்சிகன் தரும் ‘சாஸ்திர முறைப்படி ஒழுகுகை’ என்பதற்கு ‘தருமசாத்திர
விதிமுறைப்படி வழுவாமல் ஒழுகுதல்’ என்பதே சாலப் பொருந்தக் கூடியதாகும்.
ஆனால் இடக்கர் அடக்கலாய் முந்தைய உரையாசிரியன் மார் அடக்கி வாசிக்க முயன்ற
காம சாத்திரத்தின் பேசாப் பொருளை எல்லாம் பேசத்துணிந்த பெருமாள் முருகனாரே
‘தருமசாத்திர முறைப்படி’ எனவரும் அரசியல் சாத்திரப் பொருளை மட்டும் இங்கே
அடக்கி வாசிக்க முற்படுவதேன்? மாறுபட்ட தரப்புகளைக் காண்போம்.
“இந்நூலிற்கூறிய
ஆசாரங்கள் பெரும்பான் மையாய் வடமொழியிலுள்ள சுக்ரஸ்மிருதி யிலிருந்து
தொகுத்தவை என வடநூற் புலவர் கூறுகின்றார்” - தி. செல்வக் கேசவராய முதலியார்
“பேராசிரியர்
எஸ். வையாபுரிப் பிள்ளை தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் இலக்கிய
வரலாற்றில், ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயன
தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட
தர்மசூத்திரம், மனுஸ் மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகுஹாரித
ஸ்மிருதி ஆகியவை எல்லாம் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளது என்கிறார்”
(பதினெண் கீழ்க்கணக்கு மர்ரே பதிப்பு: ஆசாரக்கோவை முன்னுரை: இரண்டாம்
பதிப்பு: 1981).
ஏலவே இது பற்றிச்
சுட்டிச் செல்லும் பக்த வத்சல பாரதியின் ஆரிடம் எனப்படும் வடமொழி நூலின்
வழிநூல் எனக் கருதப்படுகின்றது என் பதனையும் கண்டோம். மேற்கண்ட செல்வக்
கேசவராயர், வையாபுரியார் கருத்துகளை ஓரிரு வரிகளில் சுட்டி அவற்றைப்பற்றி
விரிவான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெறவில்லை எனச்சுட்டிச் செல்கின்றார்
பெருமாள் முருகன். மாறாக ஆசாரம் என்பதற்கு ‘சாஸ்திர முறைப்படி ஒழுகை’ எனத்
தமிழ் லெக்சிகன் கூறுவதனையும் செல்வக் கேசவராயர் மற்றும் மர்ரே பதிப்பு
ஆசாரக்கோவை முன்னுரைப் பகுதிகளையும் முழுமையாக மேற்கோள் காட்டித்
தொடர்கின்றார் வீ. அரசு:
“மேற்குறித்த
செய்திகள் ஆசாரம் என்பது முற்றுமுழுதான மநுநீதியை அடிப்படை யாகக் கொண்டது
என்பதை அறிய முடி கிறது. தமிழில் உருவான செந்நெறி மரபில் அமைந்த, சமயச்
சார்பற்ற இயற்கை நெறிக்கு முற்றிலும் வேறானது ஆசாரம் என்பதைப்
புரிந்துகொள்ளமுடிகிறது. இம் மரபே பின்னர் இந்துமத ஆசாரங்களாகக் கருதப்
படுகின்றன. இவை அடிப்படையில் வருணா சிரம தர்மத்தை நியாயப்படுத்துபவை சாதி
நியாயங்களைப் பேசுபவை, பெண்ணை அடிமைகளாகக் கட்டமைப்பவை. - வீ.அரசு32
இத்தகைய
ஆசாரங்களுக்கு எதிரான குரலாக அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனாரின் (1800-
1897) ‘இந்துமத ஆபாச தரிசினி’ (1882) எனும் ஆக்கம் அமைகின்றதெனவும்;
அந்நூலே தமிழ்ச் சூழலில் உருவான சுயமரியாதை இயக்க மரபுக்கு முன்னோடியாக
அமைகின்றதென்றும் எடுத்துரைப் பாரவர். குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படை
யிலேயே ஆசாரக்கோவையை அணுகமுயலும் இருவரது நோக்கும், போக்கும் வெவ்வேறாக
அமைந்தியலக் காணலாம். அவ்வேறுபாடுகள், அவரவர் வாசிப்பின் அரசியலாய்
வாய்த்தனவே. இன்னொரு கோணத்தில் குறளதிகாரத் தலைப்பு களையே அடிபிறழாமல்
எடுத்தாண்ட வண்ணமே குறளறத்தையே குறுக்கித் தரித்தும், திரித்தும்
வெற்றாச்சாரங்களாகவும் ஏறுக்குமாறாகவும் சிதைக்கும் ஆசாரக் கோவையின்
முறைகேடுகள் பற்றிய பதிவையும் இத்துடன் காண்போம்.
“முதல்
நூலுக்குப் பின்னர் வந்த நூல்கள் அவற்றின் பொருள் காலச்சூழல்,
கருத்தியல்பு, பயன்படுத்தும் வகை, இடம், விளக்கநிலை, ஆகியவற்றிற்கு ஏற்ப
முதல் நூலின் நுவல் பொருளின் திரிபும், பொருள் மாற்றமும் கருத்துக் கோவைப்
பிறழ்ச்சியும் ஏற்பட்டு விட்டன.”
“சான்றாக
பதினெண் கீழ்க்கணக்கு நூல் களில் ஒன்றான கோவை சாற்றும் ‘ஆசாரங் களுக்கும்’
திருக்குறள் நிலைப்படுத்தும் ‘அறத்திற்கும்’ ஏதாவது தொடர்புண்டா? முப்பால்
மொழியும் மூலஅறங்களைத் திரித்து அடிப்படையை மாற்றி, உதிரி ஆசாரங்களாக
ஆசாரக்கோவை (1, 3, 37, 38, 48, 52, 92, 98) வெண்பாக்களில் எடுத்தாண்டு
முதல் நூலைச் சிதைத்துள்ளது”- கு.ச. ஆனந்தன்33
எவ்வாறெல்லாம்
கோவை குறளறத்தைத் திரித்துரைக்கின்றதென அவர் விரிவாக எடுத்து
ரைக்கின்றார். கீழ்க்கணக்கு நூல்களுள் காலத் தாலும், அறத்திறத்தாலும்,
அரியகுறள் வெண்பா யாப்பாலும், மெய்யியலாலும், மதநீக்கத்தாலும் (Secular)
மற்றவற்றினின்றும் ஒருதனியாக வீற்றிருக்கும் திருக்குறளின் சிறப்பும்;
தர்மசாத்திர வழி நூலாகவும், திருக்குறட் பொருண்மையைத் திரிப்பதாகவும்,
ஆச்சார அனுட்டான ஆரியக் கோவையாகவும் சம்பந்தா சம்பந்தமில்லாமல்
ஒட்டவைக்கப்பட் டுள்ள ஆசாரக் கோவையின் அவலமும் தொகுப் பாளரின் தொகுப்பு
நியாயங்களைக் கேள்விக் குள்ளாக்கி உட்கிடையான அரசியலையும் இனம்
காட்டிவிடுகின்றன.
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் மட்டுமே குறள் வெண்பா யாப்பாலும் ஏனைய
பதினேழு நூல்களும் வெண்பா யாப்பாலும் அமைந்தியல்வன. ஆசாரக் கோவைப் பாடல்கள்
குறள், சிந்தியல், இன்னிசை, நேரிசை, பஃதொடை வெண்பாக்களான் இயல்வன.
குறளும்
அதனை அடியொற்றிய நாலடியாரும் அறம் பொருள் இன்ப முப்பாற் பகுப்பாய்
அமைந்தவை. கார் நாற்பது, திணை மொழி அய்ம்பது, திணைமாலை நூற்றைம்பது,
கைந்நிலை, அய்ந்திணை அய்ம்பது, அய்ந்திணை எழுபது ஆகிய ஆறும் அகப்பொருள்
நூல்கள். களவழி நாற்பது மட்டுமே புறப்பொருள் நூல்.
நான்மணிக்கடிகை,
இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், பழமொழி நானூறு,
சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய எட்டும் அறமும் நீதியும்
விதந்தோதி இனங்காணப்பட வேண்டியன.
ஏறத்தாழ
கடைச்சங்க காலம், சங்க மருவிய களப்பிரர் காலம், பல்லவர் எழுச்சிக்காலம்
(கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு) வரையிலான வெவ்வேறு
காலப்பகுதிகளைச் சார்ந்தனவே பதினெண் நூல்களுமாம்.
இவ்வாறு
காலத்தாலும், கருத்தாலும், நுவல் பொருளாலும் வெவ்வேறான ஒரு தனிமுதல் அற
நூலையும், ஒரு புறநூலையும், ஆறு அகநூல் களையும், அறத்தையும் நீதியையும்
விதந்தோதி இனங்காணப்படவேண்டிய ஒன்பது நூல்களையும், ஒரு தரும சாத்திர ஆச்சார
அனுட்டான வழி நூலையும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்களென ஒரே தொகுப்பில்
அடைக்க முயல்வதன் அரசியல் உட்கிடை என்பது தெள்ளத்தெளிவாக திருக்குறளின்
ஒரு தனியாக வீற்றிருக்கும் அறச் சிறப்பைத் திரித்து நீர்த்துப் போகச்
செய்யப்பட்ட திட்டமிட்ட சதியேயாகும்.
அடிக்குறிப்புகள்
1. ‘காலக் கண்ணாடி’- திலகவதி படைப்புகள்- முன்னுரை- வீ. அரசு.
2.
‘நவீன இலக்கியங்களில் செவ்விலக்கியத் தாக்கம் - மார்ச் 2013 முதன்மைப்
பதிப் பாசிரியர்: ம. மதியழகன்- மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை-
‘தமிழ்க் கவிதை களுள் செயல்படும் தொல் மனம்’ - ரமேஷ் பிரேதன்- ப. 180-181.
3.4. ‘உங்கள் நூலகம்’- டிசம்பர் 2013- ‘களப்பிரர் காலம் இருட்டடிப்புக்காலம்’- ந. எழிலரசன்
5. ‘தமிழினி’- செப். 2010- ‘பாட்டும் தொகையிலுமிருந்து முப்பால் மாறுபடும் இடங்கள்’- ராஜ்கௌதமன்
6. ‘மணற்கேணி: 12- மே- சூன் 2012- ‘அறநெறி இலக்கியங்களுள் திருக்குறள் காட்டும் தமிழகச் சமுதாயம்’- கோ. விசய வேணுகோபால்.
7. ‘உரையாசிரியர்கள்’ - மு. வை. அரவிந்தன்- ப. 343
8. ‘தொல்காப்பியம்’- ‘பொருளதிகாரம்’- ‘மூலம்’- கா. நமச்சிவாய முதலியார்- ஸி. குமாரசாமி நாயுடு சன்ஸ்- சென்னை- 1924.
9.10.
‘தொல்காப்பியம்’ - ‘பொருளதிகாரம்’- ‘ஆராய்ச்சிக் காண்டிகையுரை’-
செய்யுளியல் & மரபியல்- ச. பாலசுந்தரம்- முதற்பதிப்பு: சூன் 1991-
தாமரை வெளியீட்டகம்- தஞ்சாவூர் -9- ப. 268- 177.
11. ‘தொல்காப்பியம்’- ‘பொருளாதிகாரம்’- ‘மெய்ப்பாட்டியல்’- செப், 1975- பேராசிரியம்- கழகப்பதிப்பு- சென்னை-1- ப. 427.
12.
‘திருக்குறள் தமிழ் மரபுரை’ - ப-ர்: மு.பெரி. மு. இராமசாமி- செம்பதிப்பு:
20-12-2007- ஞா. தேவநேயப் பாவாணர்- ஸ்ரீ இந்து பப்ளி கேஷன்ஸ்- சென்னை- 17-
ப. 48.
13. ‘திருவள்ளுவர் எழுதியது முப்பாலா?’- முதற்பதிப்பு: நவ. 1998- சாத்தூர் காசிப் பாண்டியன்- மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 6- ப. 71.
14. மேலது- ப. 72- 73.
15. ‘முற்சுட்டியநூல்’- ஞா.தேவநேயப்பாவாணர் - ப. 47- 48
16. ‘ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்’- முதற்பதிப்பு: 19.12.02 க. நெடுஞ்செழியன்- ப. 220- மனிதம் பதிப்பகம்- திருச்சி- 21
17. ‘வடிவிழந்த வள்ளுவம்’- முதற்பதிப்பு: சன. 82 - கு.ச. ஆனந்தன்- சிவலிங்க நூற்பதிப்புக் கழகம்- ஈரோடு-1. - ப. 148
18. ‘முற்சுட்டியநூல்’- காசிப்பாண்டியன்- ப. 47.
19. ‘உங்கள் நூலகம்’- டிசம்பர் 2011- ‘தமிழ்ச் சமூக உருவாக்கமும் அறக்கருத்தாக்கமும்’ - ம.இளங்கோவன்
20. ‘புதுப்புனல்’- ஜுன் 2011- பொதிகைச் சித்தர்- மேற்கோள்.
21. ‘உங்கள் நூலகம்’- சனவரி 2014- ‘ந.மு.வே. நாட்டாரின் அற இலக்கிய உரைத்திறன்’- சு. மாதவன்
22. ‘தமிழினி’- பிப். 2009- ‘அருள்நெறி’- இரா. குப்புசாமி
23. ‘முற்சுட்டியநூல்’- பாவாணர் - ப. 22
24. ‘தமிழினி’ - செப். 2010
25. திருவள்ளுவர்- ச. சோமசுந்தரபாரதியார்- ப. 14
26. ‘தமிழினி’- நவ. 2009- இரா. குப்புசாமி- மேற்கோள்.
27. ‘முற்சுட்டியநூல்’- கு.ச. ஆனந்தன்- ப. 136- 137
28. ‘தமிழினி’- செப். 2010- ராஜ்கௌதமன்
29.
‘சமூக விஞ்ஞானம்’- ‘செம்மொழிச் சிறப் பிதழ்’- ஏப்ரல் மே சூன் 2010-
‘ஆசாரக் கோவையை முன்வைத்துப் பிராமணர்களின் தேச வழமைகளும் குடி வழமைகளும்’-
பக்தவத்சல பாரதி
30.31. ‘மணல்வீடு’: 21- சனவரி 2014- ‘வாயில் விழைச்சு’- பெருமாள் முருகன்.
32. ‘உங்கள் நூலகம்’- டிசம்பர் 2013- ஆசாரம்- ஆபாசம் - இந்துமதம் - வீ. அரசு
33. முற்சுட்டியநூல் - கு.ச. ஆனந்தன் - ப. 143-144
No comments:
Post a Comment