“பத்மாவதி
சரித்திரத்தின் முதற்பாகத்தைப் படித்து
வந்தோம். கதாசாரத்தையும் அதிலடங்கிய விஷயங்களையும் ஆராயுங்கால் நூலாசிரியரின் கல்வித்திறம் புகழத்தக்கதென நன்கு
புலப்படும். அவரது நடை வெகு தெளிவாகவும் சரளமாகவு
மிருப்பினும் சிற்சில இடங்களில் ஆங்கிலேய பாஷையின்
போக்கை யனுசரித்திருக்கின்றது. இலக்கண விதிக்கு மாறான சில முடிவுகளும்
காண்கிறோம். கதைப்போக்கின் தன்மையைப் பார்க்குங்கால் அவர் அதன்பொருட்டு
நடந்தவை களை நடந்தவாறே எழுதினாற் போலுமிருக்கிறது. நம்மவர் இடையிடையே
பெண்கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்யப் புகும் விதமானது நம்மனதிற்கு ஒவ்வாததாக விருக்கின்றது.
படிப்போர்க்குப் புகட்டக் கருதும்
பலவித நீதிகளும் அறங்களும் எள்ளுக்குள் எண்ணெய் போலச் சம்பாஷணையிலிருந்து
திரட்டிக் கொள்ளும் படியாக விருத்தலேயியல்பு” (விவேக சிந்தாமணி:ஜுன்:1898)
“இதுகாலை நமது தமிழ்நாட்டில் வெளிவந்து உலாவும் நாவல்கள் எண்ணிலாதன.
நாவல்கள் பல்கி வருவதைப் போல் நாவலாசிரியர்களும் ஆயிரக் கணக்காகப்
பெருகி வருகின்றார்கள். நாவல்களை விரும்பிப்
படிப்போரும் லக்ஷக்கணக்காக இருக் கின்றார்கள். இவர் பெண்டிர், மாணவர், அனை வரும்
நாவல் வெள்ளத்தில் திளைக்க நனி விரும்பு கிறார்கள்.
புத்தகக் கடைகளிலும் நாவல் வெள்ளம் பெருகிக்கொண்டேயிருக்கின்றது.
அவ்வெள்ளம் புகாத வீடுகள் அரிதாகவே இருக்கின்றன.
ஆகவே நாவல் வெள்ளம் மக்கள் பலரைக் கொள்ளைகொண்டு வருதல் இனிது புலப்படும்.
இவ்வெள்ளம் இவ்வாறு பெருகி வருதன் காரணம் என்ன? கதைகளெல்லாம் பெண்மக்கள் வடிவநலன்களைப் பெரிதும் அளவு கடந்து
வருணித்துக் காமக் கிளர்ச்சியை எழுப்புவனவாக இருத்தலே முதற்பெருங்காரண
மாகும். இரண்டாவது காரணம் கல்விப் பெருக்க மின்மையாகும்”. (கட்டுரை:
நாவல்வெள்ளம்: வாசீக பக்தன்: குமரன்: சங்கை:2: தை: 1923:24)
தமிழில் புதிதாக
உருவான நாவல் வடிவம் குறித்த இரண்டு பதிவுகளை மேலே வாசித்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் உருவான
இவ் வடிவத்தைச் சமகாலத்தில் எதிர்கொண்ட வாசகர், போதனைகளை ‘எள்ளுள்
எண்ணெய்’ போல் நாவலில் செயல்படவேண்டும் என்கிறார். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தமிழில் அச்சு ஊடகம் வணிகமாக வடிவம்
பெற்றது. 1850-1950 நூறு ஆண்டுகளில் அச்சு ஊடகத்தின் பரவல், நிலைபேறு
ஆகியவை, அவற்றில் காணப்படும் வணிக
விளம்பரங்கள் மூலமே சாத்தியப் பட்டன என்று கூறமுடியும். காலனிய
வருகையால், இறக்குமதியான பல புதிய பொருட்கள் புதிய தன்மைகள் ஆகியவற்றை விளம்பரம்
செய்வதற்கு ஏற்ற சாதனமாக அச்சு ஊடகமே அன்று இருந்தது. (இன்று தொலைக்
காட்சி தமிழ்நாட்டில் தேர்தல் விளம்பரச் சாதனமாக
இருப்பது போல்) பொருட்களை விற்பனை செய்யும் பட்டியலை
அனுப்பி, அதன்மூலம், பொருட்களை
விற்பனை செய்வர். அவ்விதம் செய்யும்
முகவர்கள் மேற்குறித்த காலங்களில் உருவாயினர். அவ்விதமான முகவர்களில்
ஒருவரே ‘ஆனந்தவிகடன்’ அதிபர் வாசு.
பொருட்களின் பட்டியலை வெளியிடுவதற்குத்தான் அவர்
ஆனந்த விகடனை வாங்கினார். அது பின்னர் எவ் வகைப் பரிமாணம்
பெற்று இன்றுவரை தொடர்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே, அச்சு ஊடகத்திற்கும் விளம்பரத்திற்குமான உறவு மிகவும்
நெருக்கமானது. இவ்விதம் உருவான அச்சு ஊடகத்தில் வெளியான
எழுத்துக்களை வாசிப்போர் எண்ணிக்கை பெருகியது.
நாவலே பெரிதும் வாசிக்கப்பட்டதாக அறிகிறோம். அவ்வித வாசிப்பு குறித்த
பதிவை, மேலே நாம் எடுத்தாண்டுள்ள
இரண்டாவது மேற்கோள் உறுதிப்படுத் துகின்றது.
மேற்குறித்த பின்புலத்தில் உருவான தமிழ் அச்சு ஊடகத்தில், நாவல்
என்னும் வடிவம் உருவான வரலாற்றை நமது புரிதல்
அடிப்படையில் பின் கண்டவாறு தொகுத்துக் காணலாம்.
வேதநாயகம்
பிள்ளை, குருசாமி சர்மா, சித்திலெப்பை
மரைக்காயர், நடேச சாஸ்திரி, ராஜம் அய்யர், மாதவய்யா, தி.ம.பொன்னு
சாமிப் பிள்ளை, பண்டித விசாலாட்சி
அம்மாள் ஆகியோரை உள்ளடக்கிய காலம்.
-
ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்க ராஜு.
டி.பி.ராஜலட்சுமி, வடுவூர் துரைசாமி
அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், மேலைச்
சிவபுரி பனையப்பச் செட்டியார் ஆகியோரை உள்ளடக்கிய காலம்.
-
வ.ரா., நாரண.துரைக்கண்ணன், பி.எம்.
கண்ணன், கல்கி, சங்கரராம், ஆர்.சண்முக சுந்தரம், க.நா.சுப்பிரமணியம், அகிலன், தி.ஜானகிராமன், மு.வ., ஆர்.வி., ஜெக சிற்பியன், கு.ராஜவேலு, ராஜம்
கிருஷ்ணன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கிருத்திகா, எம்.வி.வெங்கட்ராம், நீல.பத்மநாபன், ரா.சு.நல்லபெருமாள், டி.கே.சீனிவாசன்
மற்றும் பலர்.
மேலே மூன்று
கட்டமாகத் தொகுத்துத் தந்துள்ள நாவலாசிரியர்களின் நாவல் எழுதுமுறை, வாசிப்பு
முறை, விவாதிக்க எடுத்துக்கொண்ட
பாடுபொருள், நாவலின் வெளிப்பாட்டு மொழி ஆகியவை தம்முள் மூன்று கட்டங்களாக
அமைந்திருப்பதைக் காணமுடியும்.
1875-1975 என்ற நூறு
ஆண்டுகளுக்குள், மேற்குறித்த போக்கில் தமிழ்
நாவல் உருப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இவை இவ்வகை காலகட்டமாகப் பெரும்பான்மைப் போக்கில் அமைந்திருப்பது குறித்த
விரிவான உரையாடலை நாம் மேற்கொள்ள முடியும். அவை, அடிப்படையில்
காலனியப் பண்பாட்டுத் தாக்கம், நமது பாரம்பரியக்
கதைமரபு, அச்சுஊடகம் என்னும் கருவி
பரவலாக்கப்பட்ட மற்றும் வணிக மாக்கப்பட்ட முறைமை, தமிழக எழுத்தறிவு
மற்றும் வாசிப்புப் பழக்கம், தமிழக இதழியல் செயல்பாடுகள்
ஆகிய பல்பரிமாணங்களில் மேற்குறித்த காலகட்டத்தை நாம்
புரிந்துகொள்ள இயலும். அது குறித்த விரிவான உரையாடலை நிகழ்த்தும் தேவை நமக்குண்டு. இங்கு செ.கணேசலிங்கன் என்ற
படைப்பாளி மேற்குறித்த தமிழ்நாவல் வரலாற்றுக்
காலகட்டங்களில், அவரது முதல் மூன்று நாவல்
சார்ந்து எவ்விதம் செயல்பட்டிருக் கிறார் என்பதற்கான உரையாடல்
முதன்மைப்படுத்தப் படுகிறது.
தமிழ் நாவல் 1950களில் எதார்த்த மொழியைத் தமக்குள் வளமாக உள்வாங்கியது என்று
கூறமுடியும். இதழியல் வாசிப்பு சார்ந்த விறுவிறுப்பான
மொழியில் நாவல் எல்லாக் காலங்களிலும் செயல்பட்டு
வந்துள்ளது. வாசிப்புச் சுவை என்பதே அதன் முதன்மையான தன்மையதாக அமைந்திருக்கும். வடுவூர் துரைசாமி அய்யங்கார், கல்கி, சுஜாதா என்று தமிழின் மூன்று காலகட்டங்களில் மூன்று வகையான
வாசிப்புச் சுவைக்கு நாவல் எழுதியவர்களைச்
சொல்லலாம். இவர்களது ஆக்கங்கள் பெரும்பாலானவை, தமிழ் இதழியல் சார்ந்த வாசிப்புப் பழக்கத்தை நோக்கி
உருவானவை. இவர்களது எழுதும் பயிற்சி
(ஷிளீவீறீறீ) என்பது, இதழியல் உருவாக்கிய தேவையால் உருப்பெற்றதாகும். வடுவூர். துரைசாமி அய்யங்கார்
நாவலை வெளியிட்ட நிறுவனத்திற்குப் பெயர் ‘நாவல் டெப்போ’ என்பதாகும்.
ஆகவே, வாசிப்பாளர் நோக்கிய இதழியல் வணிகத்தின் கச்சாப் பொருளாக அமையும்
எழுதுமுறை வழி உருப் பெறும் நுகர்பொருளாக ‘நாவல்’ என்ற
உற்பத்தி எதிர்நிலையாகவே தமிழில் உருப்பெற்றதாகக்
கருத இடமுண்டு.
1917இல் நாவல் எழுதத் தொடங்கினாலும் 1940களில்
மிகுதியான நாவல்களை எழுதிய வ.ரா., மற்றும் நாரண. துரைக்கண்ணன், இவர்களைத்
தொடர்ந்து ஆர்.சண்முகசுந்தரம், க.நா.சு., ஆகிய பலர்
எதார்த்த மொழியில் நாவல் எழுதினார்கள். இவ்வகை எதார்த்தம்
பின்னர் தி.ஜானகிராமன், அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வ. ஆகிய பலரால் மேலும் முன்னெடுக்கப்பட்டது. இவ்வகையான
எதார்த்த மொழியில் இரண்டு அடிப்படைப்படையான
தன்மை களைக் காணமுடியும். மிகைக்கற்பனைசார் எதார்த்தம் (Romantic
Realism) விமர்சன எதார்த்தம் (Critical Realism) என அவற்றை நமது வசதிகருதிப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் தேசியம், விடுதலைப்
போராட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட இந்திய தேசீயம், இவை இரண்டின்
கலப்பு ஆகிய போக்குகளில் தமிழில் உருவான மிகைக் கற்பனைசார்
எதார்த்த நாவல்களையும் விமர்சன எதார்த்த முறை
நாவல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் முறையே
அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வ.ஆகிய
நாவலாசிரியர்களை நாம் காணமுடியும். இவ்வகையில்
எதார்த்த மொழிசார் நாவல் உருவாக்கம் நடைபெற்ற சூழலில்தான், மார்க்சியத்
தத்துவம் சார்ந்த உரையாடல்களும் தமிழ்ச்சூழலில் நடைபெற்றன.
1930களில் உருவான தொழிற்சங்க அரசியல், 1940களில் உருவான
விவசாயி களின் போராட்டம் ஆகியவை இந்தியச்
சூழலில் மார்க்சிய உரையாடலை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. சோவியத்
மற்றும் சீன ஆக்க இலக்கியங்கள், தமிழில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. தொ.மு.சி., நெசவுத்
தொழிலாளர் போராட்டத்தை முதன்மைப் படுத்தி ‘பஞ்சும் பசியும்’ (1953) என்ற விமர்சன
எதார்த்த நாவலை இக்காலச் சூழலில்தான் எழுதினார்.
டி.செல்வ ராசு, கு.சின்னப்பாரதி ஆகியோர்
விமரிசன எதார்த்த நாவல்களை உருவாக்கினர். ஜெயகாந்தன் சிறுகதைகள் இவ்வகை
நோக்கில் எழுதப்பட்டன. காந்திய கருத்து நிலைசார் மிகை
எதார்த்தக் கற்பனையில் நா.பார்த்தசாரதி எழுதத் தொடங்கினார்.
அகிலன், காந்தியம்சார் கருத்து நிலையில், எதார்த்த
மொழியில் எழுதிக்கொண்டிருந்தார். அவரது ‘எங்கே போகிறோம்?’ என்ற நாவல்
இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. மிக எளிமையான எதார்த்த
மொழியில் மு.வ. நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இவை அனைத்தும் 1950-1970 காலச்சூழலில்
நிகழ்ந்தன என்று கூறமுடியும். இந்தப் பின்புலத்தில்தான்
செ.கணேச லிங்கம் என்ற நாவலாசிரியர் உருவாகிறார். செ.க., மு.வ.வின்
மாணவர் என்பதும், அவர் வீட்டில் தங்கி, தமது முதல்
நாவலை அச்சிட்டார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
செ.க., எழுதுகிறார்.
“இப்புதிய பதிப்பு வெளிவரும் இவ் வேளை, இடைக்காலத்தில்
நான் இழந்த மூன்று நண்பர்களை இன்று நினைவு
கூர்கிறேன். டாக்டர் மு.வ.வீட்டில் அவரது விருந்தினராகத் தங்கியிருந்தே
அன்னாரின் ஆதரவுடன் இந்நாவலைப் ‘புரூப்’ பார்த்து அச்சேற்றினேன்...” (செவ்வானம்: 1994:முகவுரை.)
அகிலன் மீது செ.க.
அவர்களுக்குள்ள ஈடுபாடுதான், இவரது முதல் நாவலான ‘நீண்ட பயணத்தி’ற்கு அகிலன்
முன்னுரை எழுதச் செய்தது என்றும் கருத முடியும். இவ்வகையில், யாழ்ப்பாணத்தில்
வாழ்ந்த செ.க., தமிழ்நாட்டில் உருவான ரகுநாதன், மு.வ., அகிலன்
ஆகியோர் மரபுகளைத் தம்முள் உள்வாங்கி, தனக்கெனத் தனியான மரபு உருவாக்கிக் கொண்டமையை அவரது முதல்
மூன்று நாவல்களும் உறுதிப்படுத்துகின்றன என்று கருதமுடியும்.
செ.க.வின் முதல் மூன்று
நாவல்கள்: ‘நீண்ட பயணம்’(1965), ‘சடங்கு’(1966), ‘செவ்வானம்’(1967) ஆகியவை
மேற்குறித்த பின்புலத்தில் உருவானவை. இவ்வுருவாக்கத்தில்
தொழிற்பட்டிருக்கும் தன்மைகள், செ.க. அவர்களின் தனித்தன்மைகளாக அமைந்து, தமிழ் நாவல்
உருவாக்க வரலாற்றில், அவருக்குரிய இடத்தை எவ்வகையில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்
என்ற உரையாடல் நமக்கு இன்று தேவையாக இருக்கின்றது. 1940களின் இறுதி
தொடங்கி, சிறுகதை, நாவல், கடித முறை
எழுத்துக்கள், ஆய்வுகள், இதழாசிரியராகச்
செயல் பட்டமை எனப் பலபரிமாணங்களில் இன்னும் மும்முரமாகச் செயல்படும்
செ.க.அவர்களின் தொடக்க கால நாவல் உருவாக்க முறைமை, இன்று அவரைப்
புரிந்துகொள்ள உதவும். காலம் என்னும்
நதியில் மிதந்து வரும் ஆக்கங்களின் தொடர்ச்சியை, சமகாலப்
புரிதல் வழி அணுகும்போது, அதன் வீரியம்
புரிபடும்.
மேல் விவரித்த
பின்புலத்தில் செ.க.வின் முதல் மூன்று நாவல்களைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் அடிப்படைகளை ஆதாரமாகக்கொண்டு விவாதிக்க
இயலும்.
-
விமரிசன எதார்த்த நோக்கில் யாழ்ப்பாணச் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக அமையும் ‘நீண்ட பயணம்’ நாவல் சம
காலத்தில் உருவான தமிழ் நாவல்களிலிருந்து வேறுபடும்
புள்ளிகள்.
-
தமது முதல் நாவலை எழுதுவதற்கு அவர் தெரிவு செய்துகொண்ட மொழியின்
முக்கியத்துவம்.
-
ஈழத்தின் சமகாலப் போராட்டங்களின் பதிவாக ‘நீண்ட பயணம்’ உருப்பெற்றிருக்கும்
முறை.
1960களில் நிலவுடைமைச் சமூகம்சார் நிகழ்வுகளை நாவலில் பதிவு
செய்தவர்களில் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க
இடமுண்டு. 1942இல் அவரது முதல் நாவலை
எழுதினாலும் அவரது பிற நாவல்கள் அனைத்தையும் 1960-70காலங்களில்தான்
எழுதியிருக்கிறார். நிலம்சார் வாழ்முறையை அடிப் படையாகக்கொண்டு
அவரது பதிவுகள் அமைந்தன. 1942இல் தொடங்கிய பதிவு என்பது 1960களில் ‘அறுவடை’, ‘சட்டி
சுட்டது’, ‘அழியாக்கோலம்’, ‘கானாச் சுனை’, ‘மாயத்தாகம்’, என்ற
பெயர்களில் நாவல்களாக வெளிவந்தன. இவரது கிராமம் என்பது, எவ்வகையான
விமர்சனப் பார்வையும் இன்றிச் சித்திரிக்கப்படும் கிராமமாக அமைகிறது.
இவ்வகையான சித்திரிப்பு, வாசகர்களின் புரிதலில்
முருகியல்சார் புனைவு (Romantic) உலகத்தை
உருவாக்கும் வகையில் அமைந்தது. பிற்காலங்களில் பாரதிராஜா
சினிமாக்களில் காணும் கிராமங்களாக ஒருவகையில் அமைந்தது என்று கூறமுடியும்.
இவ்வகையான விவரணம்சார் விவரிப்பின் ஊடாக, படைப்பாளி வெளிப்படுத்தும் அழகியல் தன்மைகள், வாசகத்
தளத்தில், முருகியல்சார் புனைவாக அமைவதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார் என்று
கூறமுடியாது. படைப்பாளியின் எழுதுமுறைசார்
வாசிப்புக் கவர்ச்சி உருவாக வாய்ப்புண்டு.
வாசிப்பவனின் உள்மனம்சார் உரையாடலுக்கு, படைப்பாளி
எவ்வகையில் பங்களிப்பு செய்கிறார் என்பதும்
முக்கிய மாகிறது. இத்தன்மை படைப்பாளியின் தத்துவம்சார் புரிதலை நோக்கிய சார்புத் தன்மையோடு தொடர்புடைய தாகும்.
இவ்வகைச்சார்பு அற்ற காத்திரமான படைப்பு, அதன்
உருவாக்கத்தில் திறன் மிக்கதாக அமையும் அதே வேளையில், அதன்
பரிமாணங்கள்; சமூகம், வரலாறு, தத்துவம்
சார்ந்த உரையாடல்களுக்கு எடுத்துச் செல்லுமா? என்பது
அய்யத்திற்குரியது. வாசிப்பாளனின் தவறான
புரிதலுக்கும் வழிவகுக்கக்கூடியது. ஆர். சண்முகசுந்தரம்
புலப்படுத்தும் கிராமங்கள் சார்ந்து மேற்குறித்த பின்புலத்தில்
நாம் உரையாட முடியும். அது சார்பற்ற விவரணத் தொகுப்பாக அமைவதன்
மூலம், முதல்நிலையில் வெற்றிபெற்றாலும்
அதன் பரிமாணங் களின் எல்லை, குறுகியதாகவே அமையும்.
ஆர்.சண்முகசுந்தரம் வெளிப்படுத்திய அதே நிலவுடைமைச் சமூக அமைப்பை, செ.க. தமது ‘நீண்ட பயண’த்தில் விவாதிக்கும் முறை, தமிழ்நாவல்
உலகில் புதிய வடிவமாகவே அமைகிறது. நிலவுடைமைக்
கொடுமையின் சாதியம் மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய தன்மைகள், இயல்பாக, குறிப்பிட்ட
மக்களின் பண்பாட்டு மொழியில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக்
காண்கிறோம். நாவலில் இடம்பெறும் விவரணங்கள் என்பவை முருகியல்சார்
கற்பனைப் புனைவாக அமையாது, அதற்கு அடுத்த கட்டத்தைச் சார்ந்து அமைவதைக் காண்கிறோம்.
“ஆயிரக்கணக்கான வருஷமாக மனிதன் அடிமைத் தனத்திலை இருந்து போராடிக்
கொண்டிருக்கிறான். நல்லானைப் போல லட்சக்கணக்கான பேரைப் பலி
குடுத்துத்தான் அடிமை இனம் வளர்ந்து
வந்திருக் கிறது. இந்த நீண்ட பயணத்திலை இந்த எலெக்ஷன் ஒரு மைல்கல்.
இதோடை நாங்கள் ஓயப்போவ தில்லை. இந்த மனித சாதியின் அடிமைத்தனத்தை எண்டைக்கோ ஒழிக்கத்தான் போறம்” (நீண்ட பயணம்:1994:219)
செ.க.வெளிப்படுத்தும் மேற்குறித்த பதிவுகள், கிராமங்களைப்
பற்றி, நிலவுடைமைச் சமூகத்தைப் பற்றி நாவல் எழுதியவர்கள் இதுவரை செய்யாத பதிவாகும். எனவே, சாதிய
ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை ஆகியவை
குறித்த படைப்பாளியின் புரிதல், அவரது ஆக்கத்தில்
வெளிப்படுகிறது. இங்கு விமர்சன எதார்த்த முறைமை பதிவாகிறது. இவ்வகைப்
பதிவைத் தமிழ் நாவலில், இக்காலங்களில் செய்தமை என்ற
நிலையில் செ.க.முன்னோடியாகவே அமைகிறார் என்று கருத முடியும்.
இத்தன்மை அவரது சமகால நாவல் உரு வாக்கத்தில், அவரது தனித்த
தன்மையாகவும் அன்றைய நாவல் உருவாக்க வரலாற்றில் வேறுபடும்
புள்ளியாகவும் அமைவதாகக் கருதமுடிகிறது.
“இது ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்நாவல். யாழ்ப் பாணத்துப்
பனை வடலி, வள்ளிக்கிழங்கு, அதன் காற்று, மண்வளம்
இவ்வளவும் இதில் நிறைந் திருக்கின்றன. அதன்
தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் பெருமைகள், சிறுமைகள், ஆசைகள், நிராசைகள்.
துன்பங்கள், போராட்டங்கள், சாதிக்
கட்டுப்பாடுகள் இவற்றோடு இதில் உலவு கிறார்கள். அவர்கள்
யாழ்ப்பாணத்து மக்களாக இருப்பதால், யாழ்ப்பாணத்துத்
தமிழிலேயே இயற்கையாகப் பேசுகிறார்கள். இதைப் படிக்கும் போது நம்மை
இதன் ஆசிரியர் யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச் சென்று அதன் குடிசைகள்
நிறைந்த பகுதிகளில் விட்டுவிடுகிறார்.
தமிழ்நாட்டு வாசகர் களாகிய நமக்கு இந்த நாவலை வேகமாகப் படித்துக்
கொண்டு போய்விட முடியாது. ஆனால், அதேசமயம்
பொருள்விளங்காத பல சொற்கள் உள்ளன என்றும் சொல்வதற்கில்லை.
இதில் யாழ்ப்பாணத்தின் தனித்தன்மை, அந்தத் தமிழின் தனித்தன்மை, மக்களின்
தனித்தன்மை, ஆசிரியரின் தனித்தன்மை
இவ்வளவும் இருக்கின்றன. இங்கி லாந்தில் உள்ளவர் எழுதும் ஆங்கில
நாவல், அமெரிக்கரின் ஆங்கில நாவலைப் போல இராது. இந்த வேறுபாட்டைக் கண்டு
இன்புற முடியும். அவ்வாறே தமிழ்நாட்டார் தங்களது உடன் பிறந்தவர்களான
யாழ்ப்பாணத்து மக்களின் ஒரு பகுதியினரை, அவர்களது
சூழ்நிலையில் காண இது துணை செய்கிறது. இந்தத் தனித்தன்மை
யோடு யாழ்ப்பாணத்திலிருந்து இன்னும் பல நாவல்கள் வருவதற்கு இது வழிகாட்டியாகும்”. (நீண்டபயணம்: 1965: முன்னுரை)
அகிலனின் இந்த
முன்னுரை செ.க.வின் நீண்ட பயணம் குறித்த புரிதலுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது. இதில், செ.க.வின்
மொழித்தேர்வு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றிய பதிவாக அமையும் இந்நாவல், அவர்களது
மொழியைப் பதிவு செய்கிறது. வெறும் பேச்சு மொழியை மட்டும் பதிவு செய்யவில்லை, அவர் களது
உடல்மொழி, பல்வேறு சித்திரிப்புகள் மூலம்
விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பாத்திரம்
குறித்த விவரணங்கள் என்பவை, அந்த மக்கள்
சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகளாக அமையும் மொழி நடையை இந்நாவல்
கொண்டிருக்கிறது. செ.க.பின்னர் எழுதிய நாவல்கள் எதிலும் இவ்வகையான மொழியைப் பின்பற்றவில்லை என்பதின் மூலம், இந்நாவலில், இவர்
மொழிநடைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள
முடிகிறது. தெரிவு செய்யும் பாடு பொருளும் அதற்கேற்ப தெரிவு செய்யும்
வெளிப்பாட்டு மொழியும் இவ்வகையில் இந்நாவலில்
இடம்பெற்றிருக்கும் முறைமை விதந்து பேசத்தக்கதாக உள்ளது.
பிரித்தானிய வல்லரசு ஆசிய நாடுகளில் செலுத்திய அதிகாரம், 1950களில்
முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு நாடும்
தமக்கான அடையாளத் தேடல்களில் ஈடுபடத் தொடங்கின. இலங்கையைப் பொறுத்தவரையில், 1956 முதல்
தமிழர்கள் தங்களது சுயஉரிமைக்கான போராட்டங்களில்
ஈடுபடத்தொடங்கினர். இதில் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் உருப்பெறத்
தொடங்கிய சூழல் ஒரு பக்கம். தமிழ்ச்சமூகத்தில் இருந்த பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கான போராட்டம் இன்னொரு பக்கம்.
இதில் இரண்டாவதாகக் கூறிய போராட்டங்களில்
இடதுசாரிகள் ஈடுபட்டார்கள். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கோயில்
நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். சாதிய ஒடுக்குமுறை அடையாளங்களை மறுத்தனர். ஈழத்தின் 1956-1970 காலங்களில்
நடைபெற்ற இவ்வகையான போராட்டத்தின் வரலாற்றுப்
பதிவுகளை, நீண்ட பயணத்தில் காண முடிகிறது. இவ்வகையில், ஈழத்தின் சமகால
வரலாற்று நாவலாகவும் இந்நாவல் அமைந்திருக்கிறது.
தமிழ்நாவல் வரலாற்றை, குறிப்பாகத்
தமிழ் நாட்டு நாவல் வரலாற்றைக் குறித்த புரிதல்களோடு, செ.க.வின்
நீண்ட பயணத்தை அணுகும்போது, அதுமேல் விவரித்த வகையில், தனித்த
இடத்தைப் பெறுவதை நம்மால் உணரமுடிகிறது. இவ்வகையில் தமிழ்நாவல்
வரலாற்றில், 1960களில் செ.க.வுக்கு ஒரு தனித்த
இடம் இருப்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
செ.க.வின் இரண்டாவது
நாவலான ‘சடங்கு’ சாதிய
படிநிலைச் சமூகத்தில் நிலவுடைமையாளர்களாக வாழும்
ஆதிக்கச் சாதிகளின் வாழ்முறையைச் சொல் வதாக அமைந்துள்ளது. ‘தேச வள(ழ)மைச் சட்டம்’ போன்ற
நடைமுறைகள் இருந்துவரும் சமூகத்தில், ஆதிக்க சாதியான வெள்ளாளச் சாதியினர் கொண்டிருந்த பல்வேறு
போலியான நம்பிக்கைகள், அவர்களது வாழ்க்கையில் எவ்விதம்
இடம்பெறுகின்றன என்ற உரை யாடல் சுவையானது. சாதாரண
ஒடுக்கப்பட்ட மக்கள் கண்ணோட்டத்தில் உருவான நீண்ட பயணத்தை அடுத்து எழுதப்பட்ட ‘சடங்கு’ நாவலைப்
புரிந்து கொள்ள கீழ்க்காணும் வகையில் அணுகலாம்.
-
நிலவுடைமைச் சமூகத்தின் அடிப்படையான பண்பு ‘குடும்பம்’ என்ற
நிறுவனத்தைப் பேணுதல். அது எவ்வகையில்
அவர்களிடம் போலியாகச் செயல்படுகிறது என்ற உரை யாடல்.
-
நிலவுடைமைச் சமூகம் பெண் என்ற உயிரியை நடத்தும் முறைமைகள்.
-
‘சடங்கு’ என்ற திருமணமே அனைத்திற்கும்
அடிப்படையாக அமையும் முறைமை.
“முதலாளித்துவ சமுதாய அமைப்பிலே திருமணம் என்பது ஓர் ஆணும்
பெண்ணுமாகச் சேர்ந்து தாமே பேசிக்
குடும்பமாக வாழத் தீர்மானிப்பது. ஆனால் முதலாளித்துவத்திற்கு எத்தனையோ
ஆண்டுகள் பின்தங்கிய பிரபுத்துவ சமுதாய அமைப்புள்ள கிராமங்களில் இரு குடும்பத்தார் ஒன்று சேர்வதை முன்வைத்தே
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் திருமணம்
முற்றாக்கப் படுகிறது. கிராமங்களில் இம்முறையை எதிர்த்து வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல. அப்படி வென்றாலும் அது
மற்றக் குடும்பத்தார் யாவரையும் பாதிக்கவல்லது” (சடங்கு: 2001: 161)
யாழ்ப்பாணத்தில், நிகழும்
திருமணம் என்ற சடங்கின் தன்மையைச் செ.க. மேலே கண்டவாறு சித்திரிக்க
மேற்கொண்ட முயற்சியாகவே ‘சடங்கு’ நாவல்
அமைந்திருக்கிறது. யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘சடங்கு’ என்ற
சொல்லுக்குத் திருமணம் என்று பேச்சு வழக்கில்
பொருள் கொண்டிருப்பது, அச்சமூகம் அந் நிகழ்வைக்
கட்டியமைத்த முறையைப் புரிந்துகொள்ள உதவும்.
இந்நாவலில் காட்டப்படும் இரு குடும்பங்களும் தம்முள் கொள்ளும்
உறவு, திருமணத்தை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கிறது. தேச வழமைச்
சட்டத்தால், சீதனம் என்னும் முறைமை, எவ்விதம்
செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த செ.க. இந்நாவலைப் பயன் படுத்தியுள்ளார்.
சமூக வளர்ச்சியில், ஒருகட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் தலைவியாகப் பெண் கருதப்பட்டார். பெண்ணுக்குள்ள
மறுஉற்பத்தி சார்ந்து, மனிதக்
கூட்டம், பெண்ணைக் கட்டமைத்த முறை அது.
ஆனால், கால வளர்ச்சியில், பெண்ணுக்குரிய
இத் தன்மை, பெண்ணையே அடிமைப்படுத்தும்
வடிவமாக சமூகத்தில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.
இத்தன்மையை நாவல் பல பரிமாணங்களோடு
வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.
குடும்பம் என்ற
அமைப்பில் பெண்-ஆண் உறவுகள் என்பவை இவ்வகையான சீதனத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்படுகின்றன என்ற தன்மை, கால
வளர்ச்சியில் அதுவே அச்சமூகத்தின் மிகப்பெரும்
நோயாகவும் வடிவம் பெற்றுவிடுகிறது.
நிலவுடைமைச் சமூகத்தில் கட்டமைக்கப்படும் குடும்பத்தில் ஆண்
மற்றும் பெண் என்ற இரு உயிரி களில், பெண்ணைப்
பலிகடாவாக்குவது ஏன்? என்ற விவாதத்தை முன்னெடுக்கச் சடங்கு நாவல் உதவுகிறது. பெண் பற்றிய பிம்பங்கள்
எவ்வகையில் கட்டப்படு கின்றன என்ற விவாதத்தைச்
செ.க.நாவலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். சாதிய ஒடுக்குமுறைக்கும்
பெண் ஒடுக்குமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை ‘சடங்கு’ நாவல்
துல்லியமாகப் பதிவு செய்ய முயன்றுள்ளது.
சடங்கு நாவலில்
வரும்’பத்மா’ என்ற பெண்
உயிரி, தொடக்கத்தில் சீதனம் என்ற
திருமணம் சார் முறைமையால், தமது காதலை
இழக்க நேரிடுகிறது. அக்காதலில் ஈடுபட்ட ஆணும் வேறு திருமண
உறவில் ஈடுபாடு இன்றி மனரீதியாகப் பாதிக்கப்படுவதும் அப்பின்புலத்தில்
அவரது செயல்பாடுகளை உளவியல் அடிப்படையில் செ.க.கட்டமைக்க முயன்றுள்ளார்.
எனவே இயல்பான ஆண் - பெண் உறவைத் திருமணத்தில் இடம்பெறும் சீதனம் என்ற
முறைமை எப்படிச் சிக்கலுக்கு ஆளாக்குகிறது என்ற விரிவான விவரணமாக
நாவல் அமைந்திருக்கிறது. இறுதியில் பெண் தற்கொலை நோக்கியே தன்முடிவை
அமைத்துக் கொள்கிறார். அந்நாவலில் அமைந்திருக்கும் அனைத்துப் பெண்களும்
தங்களது அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் வாழும் அவலத்தை நாவல் முழுவதும் செ.க.விரிவாகப் பதிவுசெய்துள்ளார். பெண்
பாத்திரங்கள், தங்களது சாதாரண
விருப்பங்களைக்கூட வெளிப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் சமூகச் சடங்குமுறைகளால், எவ்வளவு
கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் அதனை உணராமல் இயல்பாக
ஏற்று எப்படி வாழ்கிறார்கள்? ஆகிய தன்மைகளைச் செ.க.பதிவு செய்துள்ளார்.
செ.க.வின் சடங்கு நாவல்
உருவான காலச்சூழலில் வ.ரா.வின் நாவல்களிலும் விந்தன் நாவல்களிலும்
சித்திரிக்கப்பட்ட பெண்கள், சமூகத்தில் நிலவிய சடங்கு களால் பாதிக்கப்பட்டு, அவற்றுக்கு
எதிராகக் குரல் கொடுப் பதைக் காண்கிறோம். ஆனால் அவ்வெளிப்பாடுகள்
எதார்த்த நிகழ்வுகளாக அமைவதில்லை. படைப்பாளியின் குரலாகவே
அமைந்துவிடுகிறது. ஆனால், செ.க.சித்திரிக்கும் பெண்கள், யாழ்ப்பாணச்
சமூகத்தின் வளமைச் சடங்கு களால் பெண்ணுக்குச் சமூக மரியாதை இருப்பதுபோல்
பேசப்படுவது எவ்வளவு போலியானது? எதார்த்தத்தில் அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்ற முரணை
தமிழில் விரிவாகப் பதிவு செய்தவர்களில் செ.க. அவர்
களுக்குத் தனித்த இடமிருப்பதாகக் கருதமுடியும். நீல.பத்மநாபன், தனது ‘பள்ளிகொண்டபுரம்’, ‘தலைமுறைகள்’ ஆகிய
நாவல்களில் புலப்படுத்தும் பெண்கள், குறிப்பிட்ட
சமூகத்தின் நம்பிக்கைகள் சார்ந்து அதனை
எவ்விதம் ஏற்று வாழ்கிறார்கள் என்பதைக் காணமுடியும். செ.க.வின் பெண்கள் சித்திரிப்பின் தொடர்ச்சியாகவே நீல.பத்மநாபன்
சித்திரிக்கும் பெண்களைக் காணமுடிகிறது.
தான் வாழும் சமூகத்தில், தான் உணர்ந்த
கொடுமைகளை, தமது அரசியல் புரிதல் மூலம் படைப்பாக்கியிருப்பதைக் காண்கிறோம். இந்நாவலில்
இறுதியில், செ.க.பதிவு செய்யும் சாதியத்திற்கும் சடங்கிற்குமான உறவு பற்றிய
செய்தி பெரிதும் குறிப்பிடத்தக்கது.
“என்னடா
சாதிப் புத்தியைக் காட்டிறாய்”
“எங்கடை சாதிப் புத்தி எங்களுக்குத் தெரியா தெண்டு நினைக்க வேண்டாம். கலியாணத்துக்குப் பந்தல் போட்டு மூன்று
வருஷமாகவில்லை. செத்த வீட்டுக்குப் பந்தல்
போடச்சொல்லி வாரியள், சாதிக்கை சாதியும், சீதனமும்
சாத்திரமும் பார்த்துக்கொண்டே உப்பிடிக் கிழட்டுக் குமருகளை
வைச்சுப் பிடிக்காத மாத்துச் சம்பந்தங் களை ஊருக்கு
வீம்புகாட்டச் செய்து, பாடை கட்டி விளையாட்டுக் காட்டிற வெள்ளாளப் புத்தியெல்லாம்
எங்கடை பள்ளச் சாதீக்கை யென்ன பறைச் சாதீக்கையுமில்லை”. (சடங்கு: 2001:223)
இவ்வகையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்
ஒடுக்குமுறையிலிருந்து ஆதிக்கச் சாதிப் பெண்
ஒடுக்குமுறை வேறுபட்டிருக்கும் புள்ளியையும் செ.க. பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணச் சமூகத்தை 1960களில் பதிவு செய்தவர்களில் செ.க.வின் இடம் தனித்து இருப்பதாகவே கருதமுடியும்.
தமிழகத்தில் தொ.மு.சி. ரகுநாதன் மார்க்சியக்
கருத்துநிலை சார்ந்த படைப்பு முயற்சியை 1950களில் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 1960களில்
செ.க.செயல்பட்டிருக் கிறார் என்று
கருதமுடியும்.
செ.க.வின் ‘செவ்வானம்’, சமகால
அரசியல் நிகழ்வு என்ற பின்புலத்தில் மனித உணர்வுகளில் முதன்மையான
காதல் குறித்த உரையாடலை முதன்மைப் படுத்துகிறது. 1960களில் பேசப்பட்ட தமிழ் நாவல்களில், காதல்
உணர்வுகள் மிகை எதார்த்தக் கற்பனையாகவே பெரிதும்
சித்திரிக்கப்பட்டன. மனித வாழ்முறைக்கும் காதலுக்கும் உள்ள உறவுநிலைகள்
மிகையாகவே சித்திரிக்கப்பட்ட சூழலில், காதல்
உணர்வுக்கும் வர்க்க உணர்வுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த
விவாதத்தை செவ்வானம் மூலம் செ.க.
செய்கிறார்.
சமகால வரலாற்றை வெளிக்கொணருவதில் ‘செவ்வானம்’ நாவலுக்கு
முக்கிய இடமுண்டு. ரகுநாதன், அகிலன் ஆகியோர் இவ்வகையில், தமிழகச்
சமகால வரலாற்றை நாவலில் எழுதிப் பார்க்க
முயன்றனர். செ.க.வின் செவ்வானம் முற்று முழுதுமாகச் சமகால வரலாற்றைப்
பதிவு செய்யும் முயற்சியாகவே உருப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணச் சமூகத்தின்
சாதிய ஒடுக்குமுறை, சடங்குசார் ஒடுக்குமுறை
ஆகியவற்றைத் தமது புரிதலில் வெளிப்படுத்திய செ.க., அச்சமூகம், சிங்கள
சமூகத்தோடு சேர்ந்து வாழும் இலங்கை என்ற நாட்டின்
சமகால அரசியலைப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம்
- கொழும்பு என்ற இருவேறுபட்ட வாழ்முறை ஈழத்தமிழர்களுக்கு வாய்த்திருக்கிறது.
சிங்களத் தேசிய இனம் பெரும்பான்மையாக வாழும் ஓரிடத்தில், சிறுபான்மையாக
வாழும் தமிழ்த் தேசிய இனம், காலனிய
அதிகாரத்திலிருந்து விடுபட்ட பின்னர், தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசியல் புரிதல் குறித்த போராட்டம்
இன்றுவரை தொடர்கிறது. இதற்குள் படைப்பாளியாக இருந்து, இவ்வரலாற்றைப்
பதிவு செய்யும் பணியைச் செ.க.செய்துள்ளார். இதில் இவரது
சமூகம் சார்ந்த புரிதல் முதன்மையாக அமைகிறது.
இலங்கையின் வர்க்க அமைப்பிற்கும் அதற்குள் நடக்கும் போராட்டங்களுக்கும்
உள்ள உறவை முதன்மைப்படுத்துவது நாவலின் நோக்கமாக அமைகிறது.
இவ்வகையில் இந்நாவலின் களம் தனித்தே இருப்பதாகக் கருதலாம்.
பின்காலனிய சூழலில் மூன்றாம் உலகநாடுகளில், முதலாளித்துவம்
புதிய முகங்களோடு உருவாகத் தொடங்கியது.
உள்ளூர் சிறுமுதலாளிகள், எவ்வகையில், நவீன
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமது தொழிலை
அபிவிருத்தி செய்யத் திட்டமிடுகின்றனர்? உள்ளூரில்
கிடைக்கும் மனித வளத்தை எப்படிச் சுரண்டத் திட்டமிடுகின்றனர்? இவ்வகையான
முதலாளிமார்களே இணைந்து, பின்காலனிய காலத்தில் தேசிய
அரசாங்கத்தை எப்படிக் கட்டமைக்கின்றனர்? தேசிய
முதலாளிகளாகவும் அரசு எந்திரத்தைக் கையிலெடுத்து
மறைமுக ஆட்சியாளர்களாகவும் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள்? ஆகிய பிற
அடிப்படைகளைச் செவ்வானம் மூலம் செ.க.தெளிவுபடுத்துகின்றார். 1960களின்
இறுதியில், இலங்கையில் நடைபெற்ற அரசியல்
போராட்டங்கள், படிப்படியாக இன்று பல்வேறு
பரிமாணங்களில் வளர்ச்சியுற்று, பல புதிய தன்மைகளை
உள்வாங்கியுள்ளது. செ.க. செவ்வானத்தில் வெளிப்படுத்தும் பாராளுமன்ற
அரசியல் குறித்த அவரது பார்வையை, பிற்கால வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு ஒப்பிட்டுக் காணும் தேவை
நமக்குண்டு. இவ்வகையான ஒப்பீட்டின் மூலம் செ.க.
அவர்களின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நாவலில் உழைக்கும் வர்க்கத்தின் காதல் உணர்வோடு முதலாளிவர்க்கத்தின்
காதல் பற்றிய பல்வேறு மனநிலைகளை ஒப்பீட்டு நோக்கில்
செ.க. பதிவு செய்கிறார். முதலாளித்துவச் சமூகத்தில்
உறவுகள் அனைத்தும் உடைமைசார் உறவுகளே என்பதில் செ.க. உறுதியாக இருக்கிறார். பணக்கார மனிதர்கள், தங்களது
உறவுகளை, தங்களின் சொத்துக்கள் மூல மாகவே அடையாளப்படுத்திக் கொள்வதாக இந்நாவல்
பல்வேறு விவரணங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் காதல், எதிர்பார்ப்புகள் இன்றிச் செயல்படுவது குறித்தும், நாவல்
பாத்திரங்கள் மூலம் நாம் அறியமுடிகிறது. காதல் உணர்வு, செ.க. அவர்
களின் தீவிர விசாரணைக்கு இந்நாவலில் உட்படுத்தப்
படுகிறது.
வர்க்கம் சார்ந்த
காதல் உணர்வு மீது செ.க. கொள்ளும் நம்பிக்கைகள் முழுவதும் ஏற்றுக்கொள்ள
முடியுமா? என்ற வினா, நாவலை
வாசிக்கும் வாசிப் பாளனுக்கு உருவாகும்
வகையில் அமைந்திருக்கிறது. கோட்பாடு சார்ந்த பார்வை மூலம் உணர்வுகள்
சார்ந்த நிகழ்வுகளை மதிப்பிட இயலுமா? அது
ஒருவகையில் எந்திரமயமான அணுகுமுறையா? என்ற
உரையாடல் களுக்கு இடமளிக்கும் வகையில் செவ்வானம் அமைந் திருப்பதைக்
காணமுடிகிறது. மிகைக் கற்பனை சார்ந்தே காதல் உணர்வுகளைப் பதிவு செய்த சூழலில், அதனைக்
கேள்விக்குட் படுத்திய உரையாடலுக்கு செ.க. வழி கண்டுள்ளார்.
இப்பின்புலத்தில் இந்நாவல் தனக்கெனத் தனித்த தன்மைகளைக் கொண்டதாக
அமைகிறது.
1960-70காலங்களில் செ.க. எழுதியுள்ள இம்மூன்று நாவல்களுக்குள் பயணம்
செய்யும் வாசகன், கீழ்க்காணும் மனப் பதிவுக்கட்கு
ஆட்பட இயலும் என்று கருத இயலும்.
-
பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்திலிருந்து மூன்றாம் உலக நாடுகள், அந்தந்த நாடுகளின் தேசிய முதலாளிகளின் ஆட்சி அதிகாரத்திற்கு
உட்பட்டது. இக்காலச் சூழலில் இந்நாடு களில்
மார்க்சியம் குறித்த உரையாடல் உருப்பெற்றது. சோவியத் மற்றும் சீன
நாடு களிலிருந்து இடதுசாரி இயக்கச் செல்வாக்கு இந்நாடுகளில் ஏற்பட்டது.
செ.க.வின் நீண்டபயணம் அவ்வகையில் மாவோவின் சொற்றொடரை நினைவுபடுத்துகிறது.
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆக்க இலக்கியமாக நீண்ட
பயணத்தை உருவாக்கி யுள்ளார் என்று கருத முடியும். இவ்வகையான ஆக்கம், தமிழில்
தொடக்க முயற்சியாக அமைகிறது. இதன்மூலம் புதிய பாதையைச் செ.க. திறந்து
வைத்துள்ளார்.
-
யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்நிலையை, ஓர்
இடதுசாரியாக நின்று செ.க. அணுகியுள்ளார்.
பண்பாட்டுத் தளத்தில் நிகழும் நிகழ்வுகளை நாவல்கள் பதிவு செய்யும்போது, அதன்
பரிமாணங்கள் பல்வகையில் அமையும். இப்பின்புலத்தில் சடங்கு
யாழ்ப்பாணச் சமூக ஆவணமாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
-
பின்காலனிய - மூன்றாம் உலக நாடுகளின் புதிய போக்குகளை, புனைகதைகள்
பதிவு செய்வது அவசியம். இப்பின்புலத்தில் செவ்வானம் இலங்கை
என்ற நாட்டின் பின்காலனிய அரசியல் நிகழ்வுகளை விரிவாகப் பதிவு
செய்துள்ளது. புனைவுகள் சமகால வரலாறாக வடிவம்
பெறுவதற்குச் செவ்வானம் நல்ல சான்றாக அமைந்துள்ளது.
செ.கணேசலிங்கன் என்ற ஆக்க இலக்கியக்காரரின் முதல் மூன்று ஆக்கங்கள், சுமார்
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு மீள்பார்வையாகப்
பார்க்கும்போது, அவர் காலத்தில் வெளிப்படுத்திய கருத்து, இன்றும்
பெரிது விதந்தும் பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
செ.க.வின் தொலைநோக்குப் பார்வை, அரசியல் சார்பு, எளிய அணுகுமுறை, ஆழ்ந்த
மனிதநேயம் ஆகிய பல கூறுகளின் இணைவாக அவரது மூன்று நாவல்களும்
அமைந்துள்ளன.
No comments:
Post a Comment